Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ03 – செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  03_1

 

“ரொம்ப அழகா இருக்கு கௌரவ்…” என்றாள் எதிரே தெரிந்த தாஜ்மஹாலை பார்த்துக்கொண்டே..

“எனக்கும் பணம் கிடைக்கட்டும்… நாம வாழும்  போதே உனக்கு இப்படி ஒரு மாளிகை கட்டுறேன்..” என்றான் அவளைப் பார்த்துக் கொண்டே..



Advertisement

அவனை முறைக்க முயன்று தோற்றுச் சிரித்தாள், கோமல்.

 

 

Advertisement

“குளிருது கௌரவ்…”, மணாலி மலைச் சரிவில் அமர்ந்து கொண்டு பல் நடுங்க உரைத்தாள்.

Advertisement

பலமாய் சிரித்தவன், “இது உனக்கு குளிருதா? பனி பாதியும் கரைஞ்சே போச்சு… இதுவே குளிருச்சுனா.. அப்போ குளிர் காலத்தில வந்தா?”

“வந்தா?” ‘ஏன் என்ன ஆகும்?’ என்பது போல் அவள் பார்க்க..

சிரித்தவன், “வந்தா.. நான் உனக்கு குளுராம பார்த்துக்கிறேன்..”, என்றான் கண்களில் ஆசை சொட்ட..

Advertisement

“கௌரவ்!”, அவனை முறைக்க முயன்று தோற்று சிரித்தாள். 

 

 

“எதுக்கு எல்லா ராஜாவும் இத்தனை பெரிய மாளிகை கட்டியிருக்காங்களோ..? இதோட பாதி அழகையாவது அவங்க பார்த்திருப்பாங்களா?”

ஜெய்பூர் சீஷ் மஹால் முன் கண் விரித்து வாய் பிளந்து கேட்டாள்.

அவள் மாளிகையை ரசிக்க அவன் அவளை ரசனையாய் பார்க்க…

“என்ன பார்வை?” என்று அவள் புருவம் உயர்த்த

“உன்ன மாதிரி ஒருத்தி கூட இருந்தா… இத யாருமே பாக்க மாட்டாங்க”

“கௌரவ்!” என்றாள் சிரித்துக் கொண்டே…

“நீ தான் ஃப்ரெண்டுனு சொன்ன.. நான் இல்ல… பார்க்கவாது விடேன்”, என்றான் சலுகையாய்.

[the_ad id=”6605″]

 

ஊரெல்லாம் பொறுமையாய் சுற்றிக் காட்டினான்.

“எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு கோமல்…”, மனதை மறையாது கூறினான்.

“பிடிச்சதுனால தானே கல்யாணம் பண்ணின?”

புன்னகைத்தான்.

“நீயே சொல்லு கோமல்.. உன் விருப்பம் தான். உனக்குப் பம்பாய் போகப் பிடிக்குமா.. கல்கத்தா பிடிக்குமா? நீ சொல்ற இடத்துக்குத் தான் அடுத்து!” என்றான்.

“எதுக்கு எப்படி ஊர் சுத்திகிட்டு?”

“என்னை நம்பி வந்திருக்க… இது கூட செய்யாட்டி எப்படி?”, என்றான் கண்சிமிட்டி.

“என்னவோ போ… இருக்கப் பணம் எல்லாம் இப்படியே காலி பண்ணினா.. அடுத்த செலவெல்லாம் எப்படிப் பார்ப்போம்..?”

“நீ கவல படாத கோமல். உன்ன மகாராணி மாதிரி வச்சுக்க வேண்டியது என் பொறுப்பு!” என்றுவிட்டான்.

“பாம்பே போகலாம்…. பக்கத்தில தானே உங்க ஊரும் இருக்கு? போய் உங்க சொந்தகாரங்கள எல்லாம் முதல்ல பார்க்கலாம்.. அப்புறம் பாம்பே போகலாம்..”

“பாம்பே… நல்ல சாய்ஸ் கோமல்!”

“ம்ம்… அங்கேயே அடுத்த வருஷம் நானும் காலேஜ் சேர்ந்துப்பேன். அதுவரைக்கும் உங்க கூட நம்ம புக் ஸ்டோர பாரத்துப்பேன்.” குதூகலம் ததும்ப உரைத்தாள்.

 

 

நேரே பேருந்து எடுத்து பயணப்படாமல் கிடைத்த வாகனத்தை எல்லாம் பிடிக்க..

 

மாட்டு வண்டியில் அமர்ந்துக்கொண்டு, “என்ன கௌரவ் நீ… நேரா பஸ் ஏதாவது பிடிச்சு வரலாம் இல்ல… எனக்கு தலையை வலிக்குது. ஜெய்பூர்ல இருந்து மஹாராஷ்ட்ரா வர பஸ்.. லாரி.. குதிரை வண்டி… ஒட்டகம்.. இப்போ மாட்டு வண்டி..! ஏன் ஒழுங்கா வந்தா என்ன?”

 

“எதுக்கு..? உங்க வீட்டில இருந்து நேரா இங்க வந்து நிக்கவா?”

 

“வந்தா என்ன? நமக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சே… அப்புறம் என்ன?”

 

“வந்தா என்னைத் தூக்கி நேரா கம்பி எண்ண கூட்டிட்டு போய்டுவாங்க! உனக்கு இன்னும் பதினேழு தான்! அதுக்கு தான்!”

 

“ஓ.. நீ தான் அவங்க என்னைத் தேட மாட்டாங்கனு சொன்னியே.. அப்பா தேடுவாரோ? சொல்லிட்டு வந்திருக்கணும் கௌரவ்..” மனம் பரபரத்தது. “ரொம்ப தப்பு பண்ணிட்டேன். அப்பா பாவம்.. என்னால மனசு கஷ்டம் அப்பாக்கு…”, அவள் புலம்ப..

[the_ad id=”6605″]

“அச்சோ… தேட மாட்டாங்க! போதுமா? இது என்னோடைய பாதுகாப்புக்கு அவ்வளவு தான்! வந்தாச்சு. இனி ஒண்ணும் செய்யறதுக்கு இல்ல!”

 

“அப்படியே உன் மேல இருக்க அக்கறையில உன் அப்பா உன்ன தேடிட்டா..லும்!” அவன் வாய்க்குள் முணுமுணுக்க..

 

“உனக்கு என் அப்பா பத்தி ஒண்ணுமே தெரியாது கௌரவ். அவரை பத்தி பேசற  அளவுக்கு… வீட்டை விட்டு என்னை கூட்டிட்டு வந்த உனக்கும் தகுதி இல்ல… வீட்டை விட்டு வந்த எனக்கும் தகுதி இல்ல. இனி மேல் அப்பா பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசாத!”, குரலை உயர்த்தாமல் ‘வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு’ என்பது போல் கூறினாள். அதற்கு மேல் அவனும் வாய் திறந்தானில்லை. 

 

வீட்டைப் பார்த்தவள் அப்படியே நின்று விட்டாள். வீடு எங்கே? நான்கு களிமண் சுவரும் தகரக் கதவும்.. களிமண் திண்ணையும் கொண்ட இந்த அழுக்கு கூரை.. வீடு என்ற வகையினத்தில் சேருமா? அவர்கள் மாட்டுக் கொட்டகைக் கூட இதை விட நான்கு மடங்கு பெரியது. அதை தாத்தா இதை விட நேர்த்தியாக வைத்திருந்ததாக நினைவு!

 

“என்ன கௌரவ்?” என்றாள் அதிர்ச்சி குறையாமல்.

 

“ஒரு மூணே மூணு நாள் பொறுத்துக்கோ… நல்ல வீடா போய்டலாம். நான் நம்பி வந்த முதலாளி ஊரில இல்ல போல.. அவர் வந்ததும் நம்ம நிலைமையே மாறிடும் கவல படாத!”

 

வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த மாற்றுத் துணியோடு கொண்டுவந்திருந்த பன்னிரெண்டாவது மதிப்பெண் தாளையும் எடுத்து பத்திரப்படுத்தி வைத்தாள்.

 

நடந்தது எல்லாம் எப்படியோ.. இந்த பதிமூன்று நாட்களாக அவளை அன்போடு பார்த்துக் கொள்கிறான், அவள் எடுத்து வந்த பணம் கொண்டும், அவன் சேமிப்பு கொண்டும்.

 

அந்த பாழடைந்த பூமியிலும்.. அந்த தகர வீட்டிலும் அவள் இளவரசியாகத் தான் இருந்தாள். இல்லை… அவன் கூறியது போல் மகாராணியாக தான் உணரவைத்தான். தரமான உணவு. சுத்தமான நீர். உடலுக்கு மணக்கும் சோப்பு… கூந்தலுக்கு ஷாம்பு என்று அவளுக்கு எந்த குறையும் இல்லை. எங்கிருந்து அவனுக்கு இதெல்லாம் கிடைத்தது? அவனுக்குத் தான் வெளிச்சம்.

 

அவன் காதல் வார்த்தையில் வாழ்வை நிம்மதியாய் தோன்ற வைத்துவிட்டான். காதல் வார்த்தை மட்டும் தான். காதல் புரியவில்லை. அவளுக்கு ஏனோ உடல் இணைவதில் இன்னும் பிடித்தமில்லை. அவன் அருகில் வந்தால் முகம் தன்னால் ஒரு கோணத்திற்குச் சென்றது. உள்ளுக்குள் அவனுக்கு எரிச்சல் மூண்டாலும் காட்டிக் கொள்ளவில்லை.

 

“நீயே சரின்னு சொன்னா கூட உன்ன ஒண்ணும் பண்ண மாட்டேன்… ரொம்ப பண்ணாத.” என்றான் அவளை இடையோடு கட்டிக் கொண்டு.

 

“இப்போதைக்கு இது கூட வேண்டாம் கௌரவ். இருக்க வீடு கூட இல்ல. வாழ்க்கையில முன்னேறுற வழியைப் பார்ப்போம்.. அப்புறம் இந்த நெருக்கத்தை பத்தி யோசிப்போம்.” அவள் விலக.. அவனுக்கு எப்படியோ போல் ஆனது.

 

“சும்மா கூட தொட விட மாட்டியே…”, அலுத்துக் கொண்டாலும், அவனும் கையில் பணம் வரும்வரை காத்திருக்க முடிவு செய்தான். அவளை அந்த விதத்தில் தொந்தரவு செய்யவில்லை. செல்ல சீண்டல்களும் கொஞ்சல்கள் மட்டுமே. அதற்குமே அவள் நெளியத் தான் செய்தாள்.

[the_ad id=”6605″]

திரைப்படத்தில் பார்த்திருக்கிறாள், கதாநாயகனும் நாயகியும் நேர் எதிரில் இருப்பர். இருவர் முகமும் அருகில் வரும்.. நடுவே பெரிய மலர் ஒன்று ஆடும். பின் நாயகன் உதட்டைத் துடைத்துவிட்டு அதை கடித்துக்கொண்டே நாயகியைப் பார்ப்பான்.. அவள் கூச்சம் தாங்காமல் தலையை சிலிர்த்துக்கொண்டு தன் இரு கைகளால் முகத்தை மூடிக்கொண்டு ஓடிவிடுவாள்.

 

இது தான் அவளுக்குத் தெரிந்த ‘காதல் புரிதல்’. அது பிடித்தது. ஆனால் அவன் இதழ் ஒற்றல் ஒன்றும் பிடிக்கவில்லை. கூச்சம் இல்லை. ஏதோ பிடிக்காத உணர்வு. அவனிடம் அதைக் காட்டவில்லை என்றாலும் முகம் காட்டிக் கொடுத்தது. அவள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து அவனும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை.

 

“ஒரு நாளில்ல ஒரு நாள் உன் பேச்சை நான் கேக்க மாட்டேன். அன்னைக்கு இருக்கு.. அதுவரைக்கும் பொழைச்சு போ..” என்றான் சிரித்துக் கொண்டே.

 

தொடுகையில் நாட்டமில்லை என்றாலும் அவன் அன்பு பேச்சு பிடித்தது. காதல் வார்த்தைகள் இனித்தது. அவன் கரிசனையாய் பார்த்துக்கொண்டது யாருமில்லை தனக்கு என்ற எண்ணத்தைத் துடைத்துப் போட்டது. ஏதோ இளவரசியைக் காப்பது போல் காத்து வந்தான். அவள் தேவைகளில் குறை வைக்கவில்லை. அவளுக்குப் பிடித்த புத்தகங்கள் கூட வாங்கி அடுக்கினான்.

 

கௌரவை கணவனாய் இன்று ஏற்றுக்கொள்ள தயக்கமென்றாலும்.. என்றானாலும் அவன் தான் அவள் கணவன். இருண்ட அவள் வானில் நிலாவாய் தெரிந்தான். நெஞ்சம் முழுவதும் நன்றிக்கடன் மண்டிக் கிடக்க.. அவனுக்காக உயிரையும் கொடுக்கும் நிலை.

 

இதன் விளைவோ என்னவோ, மூன்று நாட்களாய் ஒற்றை அறையும்.. தகரக் கதவும்.. ஏழ்மை நிலையும் அவளைப் பாதிக்கவில்லை. கூடிய சீக்கிரம் மும்பை சென்று விடலாம் என்று கூறியிருந்தான். நல்ல வேலை.. வசதியான இடம் காத்திருப்பதாய் கூறினான்.

 

அங்குச் சென்றபின் கல்லூரியில் சேர்ந்துவிடும் கனவில் அவள் மிதக்க… அந்த ஊர் பெரிய மனிதரிடம் மும்பை வேலை விஷயமாக அவன் சென்றிருக்க.. அவன் சென்ற சில மணி நேரத்திற்கெல்லாம் வந்து நிற்கிறான் சிறுவன் மூச்சுவாங்க!

 

மராட்டியில் அவன் பேச இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. கௌரவோடு அரைகுறை ஹிந்தியில் பேசிக்கொள்ள.. மராட்டி புரியவில்லை. சொல்லப்பட்ட விஷயம் இது தான், ‘கௌரவ் விபத்தில் காயப்பட்டு அரசு மருத்துவமனையில், உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கிறான்’ என்பதே.

 

அவன் எப்படி எல்லாமோ செய்து காட்ட விபரம் புரிந்தது. ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் திக்குமுக்காடி போனாள். நிமிடத்தில் அவள் உலகம் தலை கீழ் ஆனது.

[the_ad id=”6605″]

மருத்துவமனை எங்குள்ளது? தெரியவில்லை.

எங்கு இருக்கிறாள்? தெரியவில்லை.

இங்கிருந்து எப்படி வெளி உலகிற்கு செல்லவேண்டும்? தெரியவில்லை.

அடுத்து என்ன செய்ய வேண்டும்? தெரியவில்லை.

இவர்கள் பேசும் பாஷை? அதுவும் புரியவில்லை.

கொண்டுவந்திருந்த பணம்? கௌரவ் அதை கொண்டு தான் செலவைச் செய்திருந்தான்.

அவன் சேமிப்பு என்று சொன்னது? அப்படி ஒன்று இந்த ஓட்டை தகர வீட்டில் இல்லை. அதையும் காலி செய்து விட்டான் என்று தான் தோன்றியது.

மருத்துவச் செலவை எப்படி எதிர்நோக்க? அதுவும் தெரியவில்லை.

பணம் புரட்ட வேறு வழி? காதில் இருக்கும் கம்மல் தவிர எல்லாம் கௌரவிடம் கொடுத்தாயிற்று…

ஆக… அடுத்த நொடியைத் தனியே எதிர்நோக்க தெரியவும் இல்லை. தைரியமும் இல்லை! பயம் கழுத்தைக் கவ்விப் பிடித்தது.

 

 

“தாத்தா… ஏன் என்னை விட்டுட்டு போனீங்க..” வேறு யாரைக் கூப்பிட என்று கூட தெரியவில்லை.

 

அழுகை முட்டிக் கொண்டு வர வாசலில் சிலையாய் நின்றுவிட்டாள். ஏனோ இன்னும் கண்ணீர் வரவில்லை. வாழ்க்கை வெறுத்தே போனது.

 

‘ஏன் இப்படி அடுக்கடுக்காய்..? கடவுளுக்கு என்னைப் பிடிக்காதோ?’ மனம் துவண்டு போனது. அவளுக்கென்று இருந்த.. இருக்கிற ஒரே ஜீவன், இந்த கௌரவ் மட்டும் தான்!

 

கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த கருப்பு மணியை பிடித்துக்கொண்டே வாசலில் அமர்ந்துவிட்டாள்.

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!