Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maruvak Kaathal Kondaen

மருவக் காதல் கொண்டேன்-14

கிருஷ்ணா அலுவலக தொலைபேசியில் அழைத்து, தனது அறைக்கு வர சொல்லியதும் அந்த மேனேஜருக்கு கொஞ்சம் உதறல் தான்.

“கேள்வி கேட்டால் கூட எதையாவது சொல்லி சமாளிக்கலாம், ஆனா அந்த புண்ணியவான் பார்க்கிற பார்வையிலே, நமக்கு தான் உள்ளே எல்லாம் கடகடனு ஆட ஆரம்பிச்சிடும், நமக்கே இப்படினா பாவம் இந்த புது பொண்ணு, என்ன பண்ணுமோ” என மனதிற்குள் அங்கலாய்த்து கொண்டார்.

கிருஷ்ணாவிடம் பேசி விட்டு, இல்லை, இல்லை அவன் பேசியதற்கு எல்லாம், “சரிங்க சார், சரிங்க சார்” என்று மண்டையை பலமாக உருட்டியவர், தனக்கு எதிரில் நின்றிருந்த உமையாளை பார்த்து,

“எம்.டி வர சொல்றாறு, வாங்க போகலாம், புதுசா இப்போ தான் ஜாயின் பண்ணி இருக்கீங்க, ஒரு சின்ன விஷயத்தை பற்றி இவ்ளோ பேசி, இப்போ பாருங்க சார் வரைக்கும் போயாச்சு, சரி வாங்க, எதுக்கும் பயப்படாதிங்க, நீங்க வந்து அங்க அமைதியா மட்டும் நில்லுங்க, நான் பார்த்துக்குறேன்” என்றார்.



Advertisement

“இப்போ நாம பேசுன விஷயம் எம்.டி காது வரைக்கும் போக கூடாது, நீ அவர் கிட்ட ஏதும் சொல்லலைனா, உனக்கு ஒரு பிரச்சனையும் வராது” என்று அவர் சொல்லியதின் மறைபொருளும் புரிய, உமையாள் பதில் ஏதும் சொல்லாமல் அவருடன் சென்றாள்.

உமையாளை பார்த்து கொள்வாதாக சொன்ன அந்த ஜீவனுக்கு தான் உமையாள் யார் என்று தெரிந்திருக்கவில்லை.

அதுப்போக அந்த மேனேஜர், உமையாள் அலுவலகத்தில் சேர்ந்த அன்று காலை அரைநாள் விடுப்பு எடுத்துவிட்டு, மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு தான் அலுவலகமே வந்து இருந்தார்.

Advertisement

அதனால் அவருக்கு பாலாவும், வசீகரனும் வந்தது, தொழிற்சாலையை சுற்றி காட்டியது என எதுமே தெரியவில்லை.

Advertisement

மதியமும் உமையாள் தனியாக வந்ததால், அவரை பொறுத்தவரை உமையாள் புதிதாக பணியில் சேர்ந்து இருக்கும் பெண், அவ்வளவு தான்.

அவர்கள் இருவரும், கிருஷ்ணாவின் அறையில் நுழைய, கிருஷ்ணாவுடன் அமர்ந்திருந்த வசீகரனை பார்த்த அவர், அவனை எதிர்பார்க்காததால் கொஞ்சம் திகைத்துவிட்டு, பின் இருவருக்கும், தனி, தனியே வணக்கம் வைத்தார்.

உமையாளோ வசீகரனை, “நான் இங்கு உன்னை எதிர்பார்த்தேன்” எனும் பார்வை பார்க்க, அவனோ, “உன்னை பார்த்து கொள்வதை விட எனக்கு வேறு என்ன வேலை” எனும் விதமாக பார்த்து வைத்தான்.

Advertisement

உமையாளோ மனதிற்குள், “என்ன, இன்னும் ஒரு அவதார் குட்டி மிஸ் ஆகுது” என நினைத்து முடிப்பதற்குள், அவசர, அவசரமாக உள்ளே வந்தான் பாலா.

 

[the_ad id=”6605″]

 

 

 

அந்த மேனஜரோ, “என்னடா இது, ஒரு சாதாரண ஆர்கியுமெண்ட், அதுவும் புது ஜாயினி கூட, அதுக்கு இங்க வர சொன்னதே அதிகம், அதுல இன்னும் என்ன பிரச்சனைனு கூட சொல்லல, அதுக்குள்ள மூனு பேரும் ரவுண்ட் கட்டி உட்கார்ந்து இருக்காங்க, என்னவா இருக்கும்” என்று கொஞ்சம் மிரண்டு போய் விட்டார் மனிதர்.

அந்த மிரட்சியுடனே திரும்பி உமையாளை பார்க்க, அவளோ வெகு சாதாரணமாக, கொஞ்சம் கூட பதட்டமோ, பயமோ இல்லாமல் நின்றதோடு மட்டும் இல்லாமல், உள்ளே நுழைந்த பாலாவை பார்த்து சிரித்து கொண்டு இருந்தாள்.

பாலாவை திரும்பி ஒரு பார்வை பார்த்த கிருஷ்ணா, திரும்பி அந்த மேனேஜரிடம்,

“என்ன பிரச்சனை ராஜ்” என வழக்கமான கனமான குரலில் கேட்க, ராஜ் என்று அழைக்கப்பட்ட மேனேஜரோ,

“ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை சார், புதுசு இல்லையா சார், அதான் புரியாம கேட்குறாங்க, நானே சொல்லி அவங்களுக்கு கிளியர் பண்றேன் சார்” என விஷயம் என்னவென்று சொல்லாமலே மழுப்ப, கிருஷ்ணா அவனின் பார்வையில் கூர்மையை கூட்டினான்.

அவனின் பார்வையில், அவருக்கு அந்த ஏ. சி அறையிலும் வேர்க்க ஆரம்பிக்க,

“அது வந்து சார்” என மறுபடியும் இழுக்க, அவரை நோக்கி, “நிறுத்துங்கள்” எனும் விதமாக கையை காட்டியவன், உமையாளை நோக்கி தன் பார்வையை திருப்பி,

“நீங்க சொல்லுங்க” என அவளை கேட்க, அவளோ மேனேஜரை திரும்பி கூட பார்க்காமல், தயக்கம் என்பதே இல்லாமல்,

“நம்ப ஸ்டாக் எல்லாம் ஸ்டார் பண்ணி வச்சி இருக்கோம் இல்ல, அதுல தான் ஒரு சின்ன பிரச்சனை சார்” என்று நிறுத்தி அவனின் முகத்தை பார்த்தாள்.

தான் அவளின் பெயர் தரும் இதத்தில் தன்னை தொலைக்க விரும்பாமல், அவளை எட்டிநிறுத்தும் விதமாக, கவனமாக அவளின் பெயரை தவிர்த்து, அழைத்த போது தெரியாத ஒன்று, அவள் “சார்” என்ற விளித்து அவனை தள்ளி நிறுத்தும் போது வலித்தது.

“வலிகள் பழகி போன ஒன்று தானே” என்று தோன்ற, எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல்,”மேலே சொல்”, எனும் விதமாக அவளை பார்க்க, அவனின் பார்வையை புரிந்து கொண்ட உமையாளும்,

“குறைஞ்சது ரெண்டு நாளைக்கு ஒரு தடவையாவது, புதுசா மூலப்பொருட்கள் வந்துகிட்டே தான் இருக்கு, நம்ப கியு.சி டிபார்ட்மெண்ட், அதுல ரேண்டமா சாம்பிள் எடுத்து டெஸ்ட் பண்ணி, இதை நாம யூஸ் பண்ணலாம்னு சொல்லி, அதுல ஸ்டிக்கர் ஒட்டனதுக்கு அப்புறம் தான் நாம அதை மெடிசன் செய்ய பிராசஸ்கு எடுக்குறோம் சரியா” என கேட்க, மூவரும் “ஆமாம்” எனும் விதமாக தலையசைக்க, உமையாள் தொடர்ந்து,

“கியு.சி எல்லா மூட்டையிலும் ஸ்டிக்கர் ஓட்டுறது இல்லை, கொஞ்ச மூட்டைக்கு தான் ஒட்டுறாங்க, ஒரு நாளைக்கு ஒரு ஐம்பது மூட்டை வருமா, அதுல எல்லாத்துலையும் ஒட்ட முடிலனு வச்சிப்போம், அட்லீஸ்ட் புதுசா வர மூட்டைகளையாவது தனியா வைக்கணும், ரெண்டுமே பண்றது இல்ல, எல்லாமே மொத்தமா வச்சி இருக்காங்க, எது குவாலிட்டி செக் பண்ணி, நாம உபயோக படுத்தலாம்னு கியு.சி அப்ரூவ் பண்ணது, எது இன்னும் குவாலிட்டி செக் பண்ணாததுனு ஒன்னுமே புரியமாட்டுது சார்”
என்று நீண்ட விளக்கம் கொடுத்தாள்.

 

[the_ad id=”6605″]

 

 

இப்போது பாலா, உமையாளை பார்த்து,
“நமக்கு வர மூலப்பொருட்கள் எல்லாமே நல்ல தரமானது தான்” என பொதுவாக சொல்ல, அவன் சொல்ல வருவதன் அர்த்தம் புரிந்த உமையாள், அவனை பார்த்து,

“எல்லாமே தரமானது தான், டெஸ்ட் பண்ணாததை யூஸ் பண்ணாலும் ஒன்னும் பிரச்சினை இல்லைனு நீங்க நினைச்சா, அப்புறம் எதுக்கு கியு.சி செக் பண்ணனும், வேஸ்ட் ஆப் டைம் தானே, அதுக்கு எல்லாத்தையும் அப்படியே டெஸ்ட் பண்ணாமலே யூஸ் பண்ணிட்டு போய்டலாம் இல்ல” என தன் தரப்பை சொல்ல, ஒரு இரண்டு நிமிடம் அங்கு பேரமைதி.

இப்போது மீண்டும் கிருஷ்ணாவே, உமையாளை பார்த்து,

“இதுக்கு என்ன சொலுஷன் வச்சி இருக்கீங்க” என கேட்க, இப்போதும் அவளிடம் தயக்கமே இல்லை, தெளிவுடனே,

“ஒன்னும் பெருசா பண்ண வேண்டாம் சார், ஸ்டாக்ஸ் அஹ ரெண்டா பிரிப்போம், ஒரு பகுதியில் டெஸ்ட் பண்ணி, யூஸ் பண்ணலாம்னு அப்ரூவ் பண்ணதை வைப்போம், புதுசா வருவதை தனியா வைக்கலாம், கியு.சி டெஸ்ட் பண்ணதுக்கு அப்புறம், ஸ்டிக்கர் ஓட்டுறதுக்கு பதிலா, ஆளுங்களை வச்சி மொத்தமா அதை அப்ரூவ் பிளேஸ்க்கு மூவ் பண்ண சொல்லிடலாம், சிம்பிள்” என்று முடித்தாள்.

கிருஷ்ணா அவனின் வழக்கம் போல, அவளை மனதிற்குள் சிலாகித்தாலும், வெளியில் எந்த உணர்வும் காட்டாமல் பார்த்து வைக்க, மற்ற இருவரோ வழக்கம் போல வெளிப்படையாகவே பாராட்டி இருந்தனர்.

நண்பர்கள் மூவரும், தொழிற்சாலையும், அலுவலகத்தையும், மிக உன்னிப்பாக கவனித்து யோசித்து, ஒவ்வொன்றாக பார்த்து, பார்த்து செய்திருந்த போதிலும், அன்றாடம் வேலை செய்பர்களாக இருந்து பார்க்கும் போது தான், இந்த மாதிரி சில விசயங்கள் தவறவிடப்பட்டு இருப்பது புரிந்தது.

அந்த அப்பாவி மேனேஜரோ, கண் முன்னே நடப்பதை எல்லாம் கிரகித்து கொள்ள முயன்றவாறே பார்த்து கொண்டிருந்தார்.

“ராஜ்” என அவரை அழைத்து கிருஷ்ணா, அவரிடம்,”இவங்களை ஒவ்வொரு வீக்கும், ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்ல போடுங்க” என உத்தரவிட்டான்.

இந்த மாதிரி தாங்கள் கவனிக்க தவறியவற்றை, கவனித்து சரி செய்யவே கிருஷ்ணா அவ்வாறு சொல்கிறான் என புரிய, நண்பர்களும், புரிந்தது எனும் விதமாக தங்களுக்கு தாங்களே தலை அசைத்து கொண்டனர்.

உமையாளும், மேனேஜரும் நண்பர்களிடம் விடைபெற்று தங்கள் வேலைகளை பார்க்க சென்றனர்.

உமையாளை திரும்பி பார்ப்பது, பின் ஏதோ யோசிப்பது என தீவிர சிந்தனையுடனே வந்தார் அவளின் மேனஜர்.

முதலாளிகளுடன் தைரியமாக மட்டும் இல்லாமல், சகஜமாகவும் அவள் உரையாடிய விதம், அவள் ஒரு வேளை அவர்களுக்கு வேண்டிய பெண்ணாக இருக்கலாம் என்ற எண்ணத்தை அவருக்கு தோற்றுவித்தது.

அதன் பிறகான நாட்களில், அவர் உமையாளை ஒரு போதும், ஒரு கேள்விகூட கேட்கவில்லை. அவள் சொல்லிய எதற்கும் ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

உமையாளும் அவளின் கண்ணில் பட்டது எல்லாம், தவறு என சுட்டிக்காட்ட ஒரு போதும் தயங்கவில்லை.

அதேநேரம் எல்லாருடனும் வெகு சகஜமாக பேசி பழகினாள். தானும் அவர்களில் ஒருத்தி தான் என அவர்கள் நினைத்து, ஏற்கும் வண்ணம் தான் இருந்தது அவளின் நடவடிக்கை எல்லாம்.

ஒரு நாள் பார்த்தால், தொழிற்சாலையில் இருக்கும் பெண்களை எல்லாம் ஒன்றாக திரட்டி, தலையில் அணியும் அந்த தொப்பியை எப்படி சரியாக அணியவேண்டும், அதன் அவசியம் என்ன என்று வகுப்பு எடுத்துக்கொண்டு இருப்பாள்.

இன்னொரு நாள் பார்த்தால், பெண்களின் கழிவறைகள் சுத்தமாக இல்லை, போதிய சுகாதாரம் இல்லை என்று நண்பர்களிடம் முறையிட்டு கொண்டு இருப்பாள்.

இப்படியாக நாட்கள் செல்ல, ஒரு நாள் இரவு, உமையாள் வெகு ரசனையுடனும், ஒரு லயிப்புடனும், பென்சிலை கைகளில் ஏந்திக்கொண்டு, கண்மூடி எதையோ நினைவுகூறுபவள் போல, ஏதோ எண்ணங்களில் திளைத்து இருந்தாள்.

தன் அழகிய விழிகளை திறந்தவள், இன்னும் மிச்சம் இருந்த அதே ரசனை பாவனையுடன், அவளின் கைகளில் இருந்த வரையும் புத்தகத்தில், எதையோ வரைய ஆரம்பித்தாள்.

 

[the_ad id=”6605″]

 

 

 

தன் காதல் கள்வனை, தன் கைகளில் இருந்த காகிதத்தில் அப்படியே ஒரு ஓவியமாக தீட்டி இருந்தவள், எப்போதும் போல, இப்பொழுதும் அவனின் நயனங்களையே இமைசிமிட்டாமல் பார்த்திருந்தாள்.

இப்போது அவள் தீட்டி இருந்தது, அன்று மாலில் உணவருந்தும் போது, அவள் இமைக்காமல் ரசித்திருந்த அவளவனின் தோற்றத்தை தான்.

அப்படியே அந்த வரையும் புத்தகத்தில் இருந்த மற்ற ஓவியங்களை பார்வையிட்டு கொண்டே வந்தவளின் விழிகள் ஓர் இடத்தில் இளைப்பாற, மனமோ வாயுவேகத்தில் அந்த நாட்களுக்கு சென்றது.

அன்றைய நாளை அவளால் மறக்கவே முடியாது. முதல் முதலில், அவனுக்கான அவளின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டது அன்றைக்கு தான்.

அப்போது வசீகரன் கல்லூரியில் இறுதி ஆண்டில் படித்துக்கொண்டு இருந்த நேரம். உமையாள் இங்கு தன் அத்தையின் வீட்டிற்கு வந்து இருந்தாள்.

அன்று இருவரும் வெளியே செல்வதாக திட்டம் தீட்டி இருக்க, அந்நேரம் வசீகரனுக்கு ஏதோ அவனின் ப்ரொஜெக்ட் சம்பந்தமாக அழைப்பு வர, அவசரம் என்று உடனே கிளம்பி சென்றுவிட்டான்.

இவளோ அவனின் மீது கோவத்தில் இருக்க, அந்த வேலையை முடித்தவன், உமையாளுக்கு அழைத்து, தான் இருக்கும் மாலின் பெயரை சொல்லி அவளை அங்கு வர சொன்னான்.

கோபம் இருந்தாலும், வசீகரனுக்காக, அவள் கிளப்பி, அவன் அவளுக்காக காத்திருக்கிறேன் என்று சொன்ன மாலிற்கு, காரில் சென்று அவன் இருக்கும் இடம் விசாரித்து அங்கு சென்றாள்.

இவள் இரு பெண்களை கடக்கும் சமயம், அவர்களில் ஒரு பெண், “அங்க பாரேன், அந்த பையன் எவ்ளோ ஸ்மார்ட் அஹ, ஹண்ட்ஸமா இருக்கான்” என்று பேசியது தெளிவாக இவளின் காதுகளில் விழுந்தது.

அப்பெண்ணின் ஏக்கப் பெருமூச்சில் இருந்த உஷ்ணம் இவளையும் சுட, சற்றே கவரப்பட்ட உமையாள், “அப்படி யாரு அந்த மன்மதன்” என்று திரும்பி, அந்த பெண்கள் பார்த்த திசையில், மேலோட்டமாக பார்க்க, அந்தோ பரிதாபம், அவள் கண்களுக்கு அப்படி அழகாக ஒருவரும் தெரியவில்லை.

உமையாளை போல அப்பெண்ணின் தோழிக்கும் அப்படி ஒருவரும் தெரியவில்லை போலும், அந்த பெண்ணின் தோழி, ஆர்வத்துடன்,

“யாரைடி சொல்ற” என கேட்க, உமையாளையும் அறியாமல்,அவன் யார் என்று அறியும் ஆர்வத்தில், அவளின் நடை சற்று தேங்க, அந்த பெண்ணோ மீண்டும் அவனின் உடையின் நிறத்தை குறிப்பிட்டு, கண் இப்படி, மூக்கு அப்படி என வர்ணிக்க ஆரம்பித்தாள்.

உமையாளும் அப்பெண் குறிப்பிட்டு கூறிய இடத்தில், அவள் கூறிய நிற உடை அணிந்து இருந்தவனை கண்டுபிடித்ததும், அவளின் கண்கள் ஆச்சர்யத்தில் அகல விரிந்தது.

அவளுக்கு மிக பரிச்சயமான ஒருவரை, மூன்றாம் மனிதர் வர்ணிக்க கேட்ட உமையாள், “அவ்வளவு அழகனாகவா இருக்கிறான்” என அவனின் தோற்றத்தை ஆராய்ச்சி செய்த பார்வை, எப்போது ரசனை பார்வையாக மாறியது என அறியாமல், அவனை அவளே அறியாமல் ரசித்து கொண்டிருந்தாள்.

அப்போது அவளை முதலில் ஈர்த்தது, அவள் வசீயின் கண்கள் தான். அந்த கண்களில் இருந்த பாவம் அவளை அப்படியே கட்டிபோட்டது.

அந்த பெண் அவ்வளவு தெளிவாக சொல்லியும், அந்த பெண்ணின் தோழி, அவள் குறிப்பிட்ட நபரை விடுத்து, வேறு ஒருவனை பார்த்திருக்க வேண்டும், இப்போது முதலில் பேசிய பெண்,

“நான் சொன்னது அந்த பிளைன் வைட் இல்ல, வைட்ல ப்ளூ செக்ட் ஷர்ட் போட்டு இருக்கான் பாரு, அவனை” என அந்த குரலில், இவ்வளவு நேரம் சஞ்சரித்த, தன்னை பிணைத்திருந்த, அந்த மாய உணர்வில் இருந்து ஒரு திடுக்கிடலுடன் தரை இறங்கினாள் உமையாள்.

இதுவரை உணராத அந்த புதுவிதமான உணர்வு அவளை இம்சிக்க, உடல் முழுதும் பனியென உறைந்து போய் இருக்க, உள்ளமோ தீயென தகித்தது.

அப்புதுவிதமான உணர்வில் உடல் எல்லாம் நடக்குவது போன்ற பிரம்மை ஏற்பட, இந்நிலையில் வசீகரனை பார்த்து, சாதாரணமாக பேச முடியும் என்று அவளுக்கு தோன்றவேயில்லை.

அப்பெண் குறிப்பிட்ட இடத்தில் வெள்ளை நிறத்தில், நீல நிற கட்டம் போட்ட சட்டை போட்டு, தனக்காக காத்திருந்த வசீகரனை பார்க்காமலே கிளம்பினாள் உமையாள்.

 

[the_ad id=”6605″]

 

 

அன்று அவனை பார்க்காமல் வந்ததற்கு பல காரணங்களை சொல்லி சமாளித்தது தனி கதை. முதலில் இது வெறும் ஈர்ப்பு, என்று நினைத்து தன்னை தானே தேற்றிக்கொண்டு, தன் உணர்வுகளை கவனமாக வெளிக்காட்டாமல், வசீகரனோடு சகஜமாக பேசி, விடுமுறையை கழித்துவிட்டு அவளின் வீட்டிற்கு திரும்பினாள்.

அதன் பின்னர் வசீகரன் மேற்படிப்பு, தொழிற்சாலை என மூழ்கிவிட, இடையில் ஒன்று அல்லது இரண்டு முறை உமையாளும் அவளின் வசீயை பார்த்தாலும், அப்போதும் அவனின் கண்களில் மூழ்கினாலே தவிர இக்காரிகை தன் காதலை உணரவேயில்லை.

அதன் பின்னர், பலமுறை அந்த கண்கள் அவளை தூக்கத்தில் கூட தொல்லை செய்ய ஆரம்பிக்க, என்ன செய்வது என்று புரியாமல், தன்னை வசீகரித்த வசீயின் கண்களை ஓவியங்களாக வரைய ஆரம்பித்தாள்.

முதலில் தான் அவனின் கண்களில் பார்த்த பாவங்களை மட்டும் வரைந்தவள், நாட்போக்கில் அந்த கண்களில் அவள் காண விரும்பிய எல்லா பாவத்தையும் ஓவியங்களாக வரைய ஆரம்பித்தாள்.

அப்படி ஒரு நாள், வசீயின் கண்களில் காதல் பாவத்தை வரையும் போது, அவளின் மனம், “இந்த கண்கள் இப்படி காதலோடு தன்னை பார்த்தால் எப்படி இருக்கும்” என யோசிக்க திடுக்கிட்டு தான் போய்விட்டாள் உமையாள்.

“அவனின் கண்களில், எனக்கான காதலை பார்க்க நான் ஏங்குகிறேன் என்றால் என்ன அர்த்தம், நான் அவனை காதலிக்கிறேனா” என தனக்குள், திரும்ப, திரும்ப கேட்டுக் கொண்டவள் கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள்.

பின்பு கண்களை மூடி, அவனை முதலில் தான் ரசித்த தினத்தை நினைவு அடுக்கில் தேட முயல, அதற்கு எந்த விதமான அவசியமும் இல்லாமல், நீரில் அழுத்தி வைத்திருந்த பந்தென, இவள் நினைப்பதற்காகவே காத்திருந்ததை போல, அந்நாள் அவளின் கண்களில் அப்படியே விரிந்தது.

அவனின் தலை முதல் கால் வரை, அவன் நின்ற தோற்றம் முதற்கொண்டு அவளின் மனதில் அழியா சித்திரம் என இருக்க வியந்து போனாள் அக்காரிகை.

“அப்பொழுதே அவன் என் மீது இத்தகைய தாக்கம் கொண்டிருந்தானா????” என யோசிக்க அவனின் மீதான தன் காதலை தெளிவாக உணர்ந்த கொண்டால் உமையாள். தன் காதலின் முதல் நொடியை சித்திரமாக தீட்டவும் தவறவில்லை அவள்.

தான் காதலை உணர்ந்த நொடிகளை இனிமையாக அசைபோட்டவளுக்கு, அப்போது தான் ஒன்று உரைத்தது, நாளை தான், அவள் அவளின் வசீயை முதன் முதலில் காதல் பார்வை பார்த்த தினம் என்று.

“நாளை எதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம்” என்று யோசித்தவாறே உறங்கியும் போனால் உமையாள்.

காலை எழுந்து வழக்கம் போல கிளம்பினாலும், உள்ளே மகிழ்ச்சி ஊற்றாக பெருக்கெடுக்க, தனக்கு மிக பிடித்த பாட்டை முனுமுனுத்தவாறே கிளம்பி அறையை விட்டு வெளியே வந்தாள், ஏதோ அவசர வேலையாக வசீகரன், இன்று அதிகாலையிலே அலுவலகம் சென்றுவிட்டதாக தகவல் தான் கிடைத்தது.

அப்புறம் அலுவலகம் சென்றவளை, வேலைகள் சூழ்ந்து கொள்ள, மதிய உணவு இடைவேளை பொழுது தான் அவள் சற்று ஆசுவாசமானாள்.

வழக்கம் போல, கிருஷ்ணாவின் அறையில் நால்வரும் உணவை முடிக்க, சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.

கிளம்பும் நேரம், வசீகரனையும், பாலாவையும் அவசரமாக தடுத்த, உமையாள், தன் கைப்பையில் இருந்து இரண்டு பெரிய சாக்லெட்டை எடுத்தவள், இருவருக்கும் ஆளுக்கு ஒன்று, என்று கொடுத்தாள்.

அவனுக்கு மிகவும் பிடித்தமான அந்த சாக்லேட்டை ஆசையுடன் வாங்கிக்கொண்ட வசீகரன், உமையாளை பார்த்து,

“தேங்க்ஸ்டா பாப்பு, ஆமா என்ன விசேஷம், சாக்லேட் எல்லாம் கொடுக்குற” என கேட்க, பாலாவும், அதே கேள்வியை தாங்கி அவளை பார்க்க, உமையாளோ,

“சும்மா” என்று விட்டு தோள்களை குலுக்க, அவளின் பாவனையில் சிரித்துகொண்டே பாலா வெளியே செல்ல, யோசனையுடன் வெளியே சென்றான் வசீகரன்.

வசீகரனை தொடர்ந்து வெளியே செல்லப்போன உமையாளை, கிருஷ்ணா, “உமையாள்” என்று அழைக்க, நின்று அவனை ஏறிட்டால் உமையாள்.

 

[the_ad id=”6605″]

 

 

மற்ற இருவருக்கும் இனிப்பு கொடுத்துவிட்டு, அவள் தனக்கு மட்டும் கொடுக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் அவளை அழைத்திருந்த கிருஷ்ணா, அவனின் மூளை வேண்டாம் என்று சொல்லும் முன்,

“எனக்கு சாக்லேட் கிடையாதா உமையாள்”, என்று அடுத்த கேள்வியையும் அவளை பார்த்து கேட்டு இருந்தான். அவனின் கேள்வியில் அவனை ஆச்சர்யமாக பார்த்த உமையாள்,

“இல்ல, நீங்க சாக்லேட் எல்லாம் சாப்பிடுங்கனு எனக்கு தெரியாது, அதான் நான் அவங்க ரெண்டு பேருக்கும் மட்டும்…..” என முடிக்காமல் இழுக்க, அவளின் பதிலில் என்ன முயன்றும் முடியாமல், கிருஷ்ணாவின் முகம் வாட,

“எனக்குனு வாங்குனது இருக்கு, இதை எடுத்துக்கோங்க கிருஷ்ணா, பிளீஸ்” என கொஞ்சம் கெஞ்சலோடு அவனிடம் எடுத்து கொடுக்க, அவனோ,”வேண்டாம்” என மறுக்க,

“இது கொஞ்சம் கசப்பா இருக்கும், அதனால் தான் நீங்க எனக்குனு கேட்கும் போது கொடுக்கலாமா, வேண்டாமாணு யோசிச்சேன், இப்போ உங்களுக்கு வேற வழியே இல்லை, நீங்க சாப்பிட்டு தான் ஆகணும்” என அவனின் கைகளில் திணித்தவள், மறுக்க வாய்ப்பே அளிக்காமல் அடுத்த நிமிடம் வெளியேறி இருந்தாள்.

பத்து வயதில் இருந்து,”அடுத்தவங்களை பேச விட்டு நாம அளந்து தான் பேசனும், நம்ப மூளையும், வாயும் எப்போதும் நேர்கோட்டில் தான் இயங்கனும்” என்று பாடம் சொல்லி வளர்க்கப்பட்ட அவன், அவளிடம் மூளை சொல்லியதை கேட்காமல், மனதில் தோன்றியதை பேசி இருக்கிறான்.

அவளை பார்க்காத நேரம், அவளை விட்டு விலகி இருக்க சொல்லும் அதே மனம், அவளை நேரில் பார்க்கையில், அவள் தன்னுடன் தயக்கங்கள் இன்றி இயல்பாக பேச வேண்டும் என எதிர்பார்க்க, இந்த இருவேறு மனநிலைகளில் சிக்கி தவித்து தான், அவளிடம் “தனக்கு” என கேட்டு இருந்தான்.

அனுதினமும் மனதளவில் நடக்கும் போராட்டம் அவனை களைப்படைய செய்ய, “இந்த காதலும், இப்பெண்ணும் என்னை என்ன செய்து வைத்திருக்கிறார்கள்” என மனம் ஆதங்கபட, கைகளோ, அவள் கொடுத்த சாக்லேட்டை இறுக்கி பிடித்திருக்க, அந்த சாக்லேட்டை வெறித்த வண்ணம் இருந்தான் கிருஷ்ணா.

காதல் கொள்வோம்………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!