அ03 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..
கொல்லை துளசி எல்லை கடந்தால் – 3
வேளச்சேரி பேருந்து நிலயத்திலிருந்து ஐந்து நிமிட பயண தூரத்திலிருந்த வீட்டின் முன் ஆட்டோ நிற்க அதிலிருந்து இறங்கிய அலர்விழியையும், தியாகுவையும் வரவேற்க மாதவனும் வசந்தியும் வந்துவிட.. பின்னோடு பாக்கிய லக்ஷ்மியும் வைத்திய நாதனும் வந்துவிட்டனர்.
Advertisement
“ஏய்.. அலர்… வா வா.. வாங்க சித்தப்பா”, வசந்தி முதல் ஆளாய் முன் வர,
Advertisement
“வாங்க சித்தப்பா… ஹே அலர்.. எப்பிடி இருக்க?”, விசாரித்தவாறே பெட்டி இரண்டையும் எடுத்துக் கொண்டான் மாதவன்.
Advertisement
“என்ன…. நல்லா இருக்கீங்களா? வாங்க”, இருவருக்கும் பொதுவான விசாரிப்பும் அழைப்பும் பெரியவரிடமிருந்து.
Advertisement
ஒவ்வொருத்தருக்காய் பதில் அளித்து முடிக்கும் முன் பாக்கியம் ஹாலுக்கு வந்திருந்தார்.
“வா வா வாடிமா..”, அவரின் பார்வை மேல் இருந்து கீழ் வரை பெண்ணை அளவெடுத்துக் கொண்டது. கண்ணில் எதை வைத்திருப்பாரோ தெரியாது.. அவர் கண்கள் விரிய எதையேனும் பாராட்டினாலோ பெருமூச்சு விட்டாலோ.. அது தொலைந்தது! அவரிடம் பாராட்டு வாங்காமல் இருப்பதே மேல்! – இது அலரின் கண்டுபிடிப்பு.
“ஒரே படிப்பா… கேவலமா இளச்சு போயிட்ட.”
‘ஹப்பா.. தப்பிச்சேன்!’ என்ற உணர்வு எழுந்தாலும், ‘கேவலம்’ என்றுவிட்ட பின் என்ன கூற? வாயில் ஏதேதோ வரத்தான் செய்தது. நினைப்பதெல்லாம் கூறிவிட முடியுமா என்ன?
“சாப்பிட வீட்டுல ஒண்ணும் குடுக்கறது இல்லியாக்கும்? இல்ல ஸ்டைலுக்கு பட்டினியா? நீங்க எல்லாம் நினைச்சதும் எப்பிடி தான் சினிமா காரிங்க மாதிரி வத்தலும் தொத்தலுமாறிங்களோ…? ஹூம்! இங்க பாரு வசுவ. கொழுமொழுன்னு..”
என்ன தான் சொல்ல வருகிறார்? இதற்காவது பதில் கூற வேண்டுமே.. இளித்து வைத்தாள். வீட்டுப் பெரியவர்களிடம் வாய் துடுக்கு காட்டினால் அப்பாவிற்குப் பிடிக்காது. அதனால் பெரியவர்களிடம் சட்டென்று பதில் பேச வராது. அதுவும் அப்பா முன்? வரவே வராது..
தியாகுவிடம் அவர் கவனம் போகவும், “வாரும் வாரும். எப்படி இருக்கீர்? அவாளும் வரலியா? வருவான்னு இல்ல நினைச்சிண்டு இருந்தேன்.”, தெரிந்தே கேட்டார்!
தமிழ் நாட்டில் முப்பத்து எட்டு மாவட்டங்கள் இருந்தாலும் அவரின் பேச்சு வழக்கு மட்டும் அந்த 38-டிலும் சேராது. மொத்தத்தில்.. பாக்கியம் ஒரு டைப்பான ஆள் தான்!
இருவர் சம்பளமும் போக, இருவருக்குமே மத்திய அரசு நியமித்த வேலையைச் சரிவன செய்ய தனியாகப் பெட்டி வரும் என்பதால்.. வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே ஐந்து படுக்கை அறை கொண்ட சலக வசதியும் நிறைந்த தனி வீடு.
மாடியில் இரண்டு போர்ஷன் வாடைக்கு விட்டிருந்தனர். எல்லாம் இருந்தும் பெரியம்மா அழுது வடிவார். எவரும் கடன் கொடு.. உதவி செய் என்று கேட்டுவிடக் கூடாது என்பதற்காக இருக்கலாம்!
“என்னவோ போ.. உங்க வசதிக்கு ஏத்த மாதிரி படிக்கிற. நாளைக்கு ஒரு பி.ஏ. இல்ல ஒரு பி.எஸ்.சி. மாப்பிள்ளைய பார்த்தா போதும். அவனுக்கும் அப்படி ஒண்ணும் கொட்டி கொடுக்க வேணாம். இப்போவே அம்மா அப்பாக்காக என்னமா யோசிக்கிற! உன் அம்மா கொடுத்து வச்சவ.. ரெண்டு அழகான பொண்ணுங்க.. எவனாவது ஓசியில கூட்டிட்டு போயுடுவான்! உங்க வருமானத்துக்கு அப்படி போனதான் உண்டு.
எனக்கு அப்படியா? பையனை பெத்து வச்சிருக்கேன்.. அவன் இப்போ தான் 13லட்சம் குடுத்து கார் வாங்கினான்… அவனுக்கு இந்த வீட குடுக்கணும்.. பொண்ணுக்கு இஞ்சினியர் மாப்பிளை பாக்கணும்.. வெறும் நூத்தி அம்பது பவன் தான் சேத்து வச்சிருக்கேன்… மேடவாக்கத்துல வாங்கி போட்டிருக்கிற ஃப்லேட்-ல வெறும் பதினைஞ்சாயிரம் தாம் வாடகை வருது. அது அவளுக்கு போதாதே… அவளுக்கு ஒரு ஃப்ளாட் வாங்கணும்..” இத வாங்கணும்.. அத வாங்கணும்.. வசதி பத்தல… வயசாகிடுச்சு… பாடி தீர்த்தார் சிறுமியிடம்!
அலருக்கு புரிந்தது. செலவுக்கு என்னிடம் வந்து நிற்காதே என்கிறார் என்று. அடுக்களையில் வசதியாக மாட்டிக் கொண்டவள், அமைதியாகக் காய்களை நறுக்கிக் கொண்டிருந்தாள்.
வந்ததும் நேராகவே கூறிவிட்டார்.. “என் சமையல்ல உப்பு சப்பே இல்லன்னு மாதவன் ஒரே குறை படிக்கிறான்.. இன்னைக்கு தான் நீ இருக்கியே. சௌந்தரி நீ ரொம்ப நல்லா சமைப்ப.. அதுவும் அம்பது பேருக்கு கூட சட்டுன்னு செஞ்சுடுவியாமே… சொன்னா. இன்னைக்கு நீ செய் பாப்போம்”, என்று அடுப்பங்கரையில் நிறுத்திவிட்டார்.
‘இந்த வீட்டுப் பக்கமே வரக்கூடாது டா சாமி’ என்று வந்த 2மணி நேரத்தில் பெண் முடிவெடுத்துவிட்டாள். அப்படி நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்?
அவரை போன்ற குணமுள்ளவர்கள் மத்தியில் வாழத் தெரியவேண்டும் என்பதற்காகத் தான் அம்மா கூறினார் போலும், “சுயமா வாழப் பழகிக்கோ பாப்பா. எப்பவும் சொந்தகாரங்க மேல் ஈஷிக்கவும் கூடாது, தேவை இல்லாம பகைச்சுக்கவும் கூடாது. உன் பெரியம்மா மாதிரி ஆட்கள் கிட்ட எல்லாம் தாமரை இல மாதிரி ஒட்டியும் ஒட்டாமலும் இருக்க கத்துக்கோ.” என்று!
அலர்விழி எதைக் கேட்டாளோ இல்லையோ.. இதை இறுகப் பற்றிக்கொண்டாள். அதனாலேயே அடுத்த மூன்று வருடங்களும் இன்னல்கள் இல்லாமல் சென்றது எனலாம்.
பிள்ளைகள் இருவரும் தப்பிப் பிறந்திருக்க.. கள்ளம் கபடமற்ற உண்மையான அன்பை பார்க்கலாம் அவர்களிடம்.
வசந்தி, “இங்கேயே தங்கிப் படிக்கலாமே அலர்.. உனக்கு தனி ரூம் கூட இருக்கு. உனக்கு வேணுங்கற வசதி அப்பா செஞ்சு தருவாங்க.”, ஆசையாய் கைபிடித்துக் கேட்டாள்.
“காலேஜ் கிட்டேயே ஹாஸ்டல் வசு.. அது தான் போய் வர வசதி”, என்றாள் அலர்.
“மாதவன் கூடப் போய் வரலாமே.. அவனும் பக்கத்தில தானே படிக்கிறான்..”
“ஒரு நாள் ரெண்டு நாள்னா பரவால… தினமும் ப்ராக்டிக்கலா சரி வராது வசு!.. அண்ணாவும் ஃப்ரெண்ட்ஸோட எல்லாம் சுத்துவான்.. சரி வராது வசு”
அலர்விழியிடம் எடுபடவில்லை என்றதும் துணைக்கு அம்மாவை அழைத்தாள் சிறியவள். “அம்மா.. அலர் இங்கேய இருக்கலாம் இல்ல..?”
‘அச்சோ… வேற வினையே வேண்டாம்!’ பெண் விழித்தாள்.
ஒரு நாளுக்கே.. அதுவும் அப்பா இருக்கும் போதே பெரியம்மாவின் சோக கீதமும் இடக்கு முடக்கான பேச்சும் பொறுக்க முடியவில்லை. 3 வருடம் எல்லாம் தனியாக அவரோடு? கண்டிப்பாக முடியவே முடியாது. வீட்டு வேலை செய்ய வைத்தே போடும் சாப்பாட்டுக்குச் சரி கட்டிவிடுவார். அவரிடம் யார் மாடிக் கொள்வது?
நல்ல வேளையாகப் பாக்கியத்திற்கு அதில் விருப்பமில்லை.
“அவளுக்கு எல்லாம் இங்க வசதி பத்துமோ என்னமோ? அது தான் யோசிக்கிறா போல”
“இல்ல பெரியம்மா.. அதுனா வசதி!”
“என்ன வசதியோ… ஏசி அணச்சுட்டு படுத்தா உன் வீடு மாதிரி தான் இருக்கும். பீங்கான் தட்டு பழக்கம் இல்லேனா ஸ்டீல் தட்டுல சாப்பிடு… பொழுது போகாட்டி வீட்ட..” அவர் அடுக்கிக் கொண்டே போகவும் அலருக்கு கோபம் தலைக்கேற ஆரம்பித்தது. எத்தனை நேரம் தான் இவர் பேச்சைக் கேட்பது? கேட்டு கொண்டிருந்த மாதவனுக்கும் கோபம் வந்திருக்க வேண்டும்.. “மா..” என்றான் சத்தமாக.
சிறிய பிராயத்தில் அவன் பாட்டி தாத்தா இருந்த காலங்களில், வருடா வருடம் கடலூரில் தங்கும் ஒரு மாதமும் அவன் சித்தப்பா வீடே கதி என்று கிடப்பான். வசந்தி எதற்கும் அவனோடு சண்டை போட.. நகுநா வசந்தி பின்னோடு சுற்ற… இவனுக்குத் தோதாய் நிற்பவள் அலர் தான். பக்கத்து வீட்டுப் பப்பாளிப் பழம் திருடுவதிலிருந்து.. கில்லி விளையாடுவது வரை அவனுக்கு இணையாய் நிற்பவள் அலர். ஏரியாவில் ஒரு வார்த்தை ஒருவரும் அவனைக் கடிய முடியாது.. ‘என்னைத் தாண்டி என் நண்பனிடம் செல்’ என்பது போல் சண்டைக்கு நிற்பாள். அவள் கராத்தே பயின்று கொண்டிருந்த காலகட்டம் அது. ஒற்றை கொய்யா அவனுக்கு கிடைத்தாலும், முதல் கடி அலருக்கு தான்! அது அவர்களின் கனாக் காலம்.
வருடங்கள் கடந்திருந்தாலும் உள்ளிருக்கும் பாசம் குறையாதில்லையா… அவர்களதும் அப்படி தான்!
அம்மாவின் பேச்சு அவனுக்குச் சகிக்கவில்லை. ‘நிம்மதியா?’ என்ற பார்வையை வசந்தியிடம் செலுத்தியவன், இடைப்புகுந்தான்..
“மா… வெளியில போகணும் சாப்பாடு போடறீங்களா? இல்ல வெளியில போய் சாப்பிடவா?”
“சாப்பிட்டு போடா மாது.. உனக்கு பிடிச்சதா செஞ்சிருக்கு நீ பாட்டுக்குக் கிளம்பிடாத.” அவர் எழும்பவும், “வசு அப்பாவையும் சித்தப்பாவையும் சாப்பிடக் கூப்பிடு. நீ வா அலர்”, கையோடு அழைத்து சென்றான்.
சாப்பாட்டு மேசையிலும் அவர் வாய் நீளத்தான் செய்தது. ஒன்றும் செய்வதற்கில்லை என்பதால் பிள்ளைகள் பேசிக்கொண்டே உண்டு முடித்தனர்.
அன்றைய பொழுது நன்றாகவே போனது. பாக்கியிடமும் வைதியிடமும் விடைபெற்றுக் கொண்டு விடுதிக்குக் கிளம்பவும் பெரியப்பா வாய் திறந்தார்.
“வெள்ளி கிழமை காலேஜ் முடிஞ்சதும் மாதவன் கூட வந்திடு. திங்கள் இங்க இருந்து அவன் கூடவே போயிடலாம்.”
பெண் முகம் பார்த்த பெற்றவருக்குத் தெரியாதா.. அவள் என்ன பதில் உரைப்பாள் என்று? அலர் ஏதேனும் சொல்லிவிடுவாளோ? அண்ணன் பேச்சை தட்டாத தம்பி முந்திக்கொண்டார்!
“அவ வந்துடுவா ண்ணா..”
அதன் பின் அலர் அங்கு பேச ஒன்றுமே இல்லை. ‘அப்பா!!!!!’ என்று உள்ளுக்குள் குமையத் தான் முடிந்தது.
மாதவன், ஹாண்டா சிட்டியோடு வர, “நானும் நானும்” என்று மூவரோடும் வசந்தியும் ஒட்டிக் கொள்ள.. நன்றாகத் தான் இருந்தது பயணம்.
மாதவன் இருவரையும் விடுதிக்கு அழைத்துச் செல்லும் முன் மால் ஒன்றிற்கு அழைத்துச் சென்றான். வசந்தி, இது பழக்கம் தான் என்பது போல் நேரே அந்த ‘மிக பிரபல’மான பனிக்கூழ் கடையை நோக்கி அலரோடு ஓட, இருவரும் கண்ணைக் கவரும் பனிக்கூழ் வகைகளில் பார்வையைச் செலுத்த ஆரம்பித்தனர்.
“எனக்கு இது எல்லாம் வேண்டாம் டா மாதவா..”, என்று தியாகு ஒரு இருக்கையில் அமர்ந்துக் கொள்ள..
இது தான் அலர்விழிக்கு இப்படி பட்ட கடைகளில் முதல் முறை. ஒற்றை பனிக்கூழ் கோப்பைக்கு ஒரு நல்ல புத்தகம் வாங்க முடியும் என்பது அவளுக்குத் தெரியாது.
விலையை விசாரித்தவள் கண்கள் தானாய் விரிந்தது.
வசந்தி வாங்கிய ஒற்றை கோனே எழுநூறு! அவள் விரும்பி பார்த்தது ஆயிரத்தைத் தொட.. பனிக்கூழ் சாப்பிடும் ஆசை எல்லாம் எங்குப் போனதோ?
“இப்போ தானே ண்ணா வீட்டில காபி குடிச்சோம் எனக்கும் எதுவும் வேண்டாண்ணா..”, நாசுக்காக அவள் ஒதுங்க..
“நீ என் குட்டி அலராவே இரு. பெரிய மனுஷி ஆக வேண்டாம். பிடிச்சத சொல்லு.”, என்றான் காட்டமாக.
“இல்ல ண்ணா. ஆயிரம்.. ஆயிரத்து ஐந்நூறு எல்லாம் குடுத்து ஒரு கப் ஐஸ்-க்ரீம் சாப்பிடணும்னா அது நான் சம்பாரிச்சு வாங்கினதா இருக்கணும். ஓசில கிடைக்குதுன்னு வாங்கினா அது என் தொண்டைக்கு அடியில போகாது. வேண்டாண்ணா..”
எதையும் மறைக்காமல் மனதை உரைத்தாள். சிலர் அப்படி தான்! நேர்மை விரும்பிகள். பிறர் பொருளின் மேல் ஈர்ப்போ.. ஆசையோ கொள்வதில்லை. மற்றவர் உயரம் கண்டு வயிற்றெரிச்சல் கொள்வதில்லை. தனக்கு வேண்டும் என்றால் தான் தான் முன்னேற வேண்டும் என்ற கொள்கை கொண்டிருப்பர். அவளும் அப்படி தான்! நேர்மை விரும்பி! தனக்கென்று சில கனவுகளும்.. கொள்கைகளும்.. வரம்புகளும்!
பெண்ணின் நேர்மையை வியக்காமல் இருக்க முடியவில்லை அவனால். புன்னகைத்தான்.
“ரொம்ப வளர்ந்துட்ட அலர். நீ என் குட்டி தங்க இல்ல.. பெரிய மனுஷி ஆகிட்ட.”
“உன் தங்கத் தான் ண்ணா.. என்னைக்கும்”, புன்னகைத்தாள்.
அவன் ஃப்ரூட் ப்ளாஸம் ஒன்று சொல்ல, பல வண்ண நிறத்தில் பனிக்கூழ் வேஃபர் பேஸ்கெட்டில் வர.. “இவ்வளவு எல்லாம் என்னால சாப்பிட முடியாது. என் தங்கயா.. உன் சட்டம் பேசாம, அண்ணாங்கர உரிமையில.. என் கூட ஷேர் பண்ணு.”, என்று கெஞ்சாத குறையாக அவள் தொண்டையில் இறக்கினான்.
கல்லூரி நுங்கம்பாக்கத்திலிருக்க விடுதி நுங்கம்பாக்கத்திற்கும் ராயபேட்டைக்கும் இடையே இருந்தது. சில கிலோமீட்டர் தொலைவு. நடந்து செல்லும் தூரம் தான் என்றாலும், சென்னை வெயில், நடைபாதையற்ற சாலை, ஜன நெருக்கடி என்ற பல இன்னல்கள் மத்தியில்.. பொங்கி வழிந்து சரிந்து செல்லும் ‘பேருந்தே வசதி’ என்ற சிந்தனை தன்னால் வந்துவிடும்.
பணம் படைத்தவர் வாழும் பகுதி அது. இரண்டு அடுக்கு மாடி வீட்டின் முன் மாதவன் மகிழுந்தை நிறுத்த..
“என்ன டா மாதவா? ஹாஸ்டல் தானே சொன்ன? வீடு மாதிரி இருக்கு?”, தியாகு பயந்து போனார். யாரோ ஒருவர் வீட்டில் பிள்ளையை எப்படி விடுவார்?
“ஹாஸ்டல் தான் சித்தப்பா. வெளில போர்ட் இல்ல. ஆனா உள்ள சின்னதா இருக்கும்.
ஜானகின்னு ஒரு ஆண்டி வீடு தான் இது. அவங்களுக்குன்னு யாரும் இல்ல… சோ வீட மாடிஃபை பண்ணி ஹாஸ்டல் ஆக்கிட்டாங்க. வெறும் 28 பேர் தான் அலோ பண்றாங்க. இப்போதைக்கு அலரையும் சேர்த்து 25 பேர் தான். ரூமுக்கு மூணு பேர் தான். ஒரு பொண்ணு நாளைக்கு வருதாம்.. அலர் காலேஜ் தான். வேற ஒரு பொண்ணும் இருக்கு இவ காலேஜ்ல இருந்து. இங்க எல்லாருக்கும் தங்க இடம் கிடைக்காது. தெரிஞ்சவங்க மூலமா மட்டும் தான் வர முடியும். என் ஃப்ரெண்டோ ஃபேமிலி ஃப்ரெண்ட் தான் இவங்க. அதுனால தான் நமக்கு கிடைச்சுது சித்தப்பா.
இந்த ஏரியாவும் சேஃப்.. இந்த ஹாஸ்டலும் ரொம்ப சேஃப் சித்தப்பா.
வீட்டு சாப்பாடு! வீடு மாதிரியே அட்மாஸ்ஃபியர் இருக்கும். அலரும் நிம்மதியா இருப்பா. நம்பி விடலாம் சித்தப்பா..”
உள்ளே சென்று பார்த்து பேசியபின் தியாகுவின் முகம் தெளிந்தது. விட்டுச் சென்றுவிட்டனர் வீட்டினர். இடம் புதிது. ஆட்கள் புதிது. சட்டென்று ஒட்டத் தெரியவில்லை. இரவு தூக்கமின்றி கழிந்தது.
அடுத்த நாள் காலை அப்பா பஸ் பிடித்து வந்து நின்றார் மகளைக் கல்லூரிக்கு அழைத்துச் செல்ல. அன்று மட்டுமல்ல தொடர்ந்து மூன்று நாட்கள் வந்து சென்றார் மகளைக் கொண்டு விட்டுக் கூட்டி வர.
கல்லூரி வளாகம் பெரிதாக இருந்தது. வெயில் தெரியாத வண்ணம் நூற்றுக் கணக்கான பெரிய பெரிய மரங்கள். தென்றல் வருட. குருவிகள் கூவ.. இதமாக உணர வைத்தது அந்த புது இடம்.
கண்கள் விரிய ஏதோ கனவோடு தேங்கி நின்ற புது வரவுகள்… பூத்துக் குலுங்கிய சீனியர் இளவட்டங்கள்.. சுமாரிலிருந்து சூப்பர் ஃபிகர் வரை சுற்றித் திரிந்தது. முதல் வருட தொளதொள சல்வாரிலிருந்து இதை எல்லாம் கூட கல்லூரிக்கு உடுத்துவார்களா என்று ரகசியமாக சைட் அடிக்க வைத்த சீனியர் அழகிகளும் அங்கு அடக்கம்.
“காஷ்மீர் ரோஜா தோட்டம்
கேட்வாக் இங்கே காட்டும்
என்னாளும் பேஷன் ஷோ
கல்லூரி சாலை…” என்று பாடலாம்.
மூன்று நாட்கள் அப்பா சென்னையிலேயே தங்கியிருந்தார் மகளைக் கல்லூரிக்கும், சுற்று வட்டார இடத்திற்கும் பழக்கப்படுத்த. ‘வேண்டாம் பா… நான் பாத்துக்குறேன்’ என்ற அவள் கூற்றை அவர் காதில் வாங்கினால் தானே.
“என்ன சித்தப்பா… அவ என்ன எல்.கே.ஜி.-க்கா போறா? அவ குழந்த இல்ல சித்தப்பா..”, என்று மாதவன் கூட சிரித்தான்.
“உனக்கு ஒரு மக பிறக்கும் போது புரியும் மாதவா..” என்றார்.
அவனுக்கு எப்படிப் புரியும் ஒவ்வொரு அப்பாவிற்கு அவர் மகள் என்றுமே குழந்தை தான் என்று. மிகவும் பாசமாக.. அரவணைப்பில் வளர்த்த மகளை அவரால் விட்டுச் செல்ல முடியவில்லை.
அதிகம் கொஞ்சவெல்லாம் வாராது. தோளில் ஏந்தி, கை பிடித்து நடத்தி, மார்பில் போட்டுத் தூங்க வைத்த காலங்களோடு தொடுதல் கூட நின்று போனது. இரண்டடி தள்ளி நின்று பேசினாலும் மனிதன் மனம் முழுவதும் அவர் இரண்டு பெண்களும் தான்.
அப்படி எல்லாம் வசதி இல்லை என்றாலும் ஏழ்மை என்ற ஒன்றை பிள்ளைகள் கண்டதில்லை. பிள்ளைகள் குறை என்று உணர்ந்ததே இல்லை. அவளைப் பார்த்தால் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று சட்டென்று சொல்லிவிட முடியாது. இன்று மட்டும் இல்லை.. வசதி மிகவும் குறைவாக இருந்த நாட்களில் ஆசைப் பட்ட ஹீரோ பேனா இரண்டு என்றுமே கேமலின் ஜாமென்ட்ரி பாக்ஸில் இருந்ததுண்டு. பெண்களிடம் அப்பா கணக்கு பார்த்ததே இல்லை எனலாம்.
பிள்ளைகளையும் ஒரு விடயத்தில் குறை சொல்ல முடியாது. தேவை இல்லாத செலவை இழுத்து வைத்தது இல்லை. அளவிற்கு அதிகமாக எதிலும் ஆசைப் பட்டதில்லை. எங்கும் எதிலும் பெற்றவர்களுக்கு ஏற்ற பிள்ளைகள்.
மூன்றாம் நாள் விடுதியில் கண்கள் பனிக்க, “பத்திரமா இரு”, என்று தலை தடவி உச்சி முகர்ந்து அப்பா செல்ல… தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. ஒட்டிய கன்னமும்.. பாதி நரைத்த தலை முடியும், நெற்றியிலிருந்த சுருக்கமும் கதை கூறும் அவர் உழைப்பையும் பாசத்தையும்.
ஒரு துண்டு மீன் இருந்தாலும் அதை இரண்டாய் பிட்டு பிள்ளைகள் தட்டில் வைக்கும் அப்பா… இப்படி ஒரு அப்பா அம்மா கிடைப்பதெல்லாம் வரம்!
‘மூன்று வருடப் படிப்பு! நன்றாகப் படிக்க வேண்டும். நல்ல வேலையில் அமர்ந்து அம்மா அப்பாவிற்கு ஓய்வு தரவேண்டும்.’ கன்னம் நனைய எண்ணிக் கொண்டாள்.
அழுதே கரைய, அன்று இரவு உண்ணச் செல்லவில்லை. அப்பாவோடு வீடு சென்று விட வேண்டும் என்ற ஏக்கம் ஒட்டிக்கொண்டது. அங்கேயே ஏதாவது கல்லூரியில் படித்திருக்க வேண்டுமோ? மனம் கனத்தது. நகுநாவும் இவளில்லாமல் ஒழுங்காகச் சாப்பிடாமல் ஏங்கிப் போய் கிடக்கிறாளாம்.. அம்மா கூறியிருந்தார் கைப்பேசி மூலம்.
ஜானகி ஆண்டிக்கு பிள்ளைகள் இல்லை. துணையாய் நிற்பது அவர் வீட்டில் வேலை செய்த வள்ளியின் மகள் ராஜாத்தி. இருபதில் கணவனை இழந்து கைக்குழந்தையோடு ஜானகியிடம் தான் வேலைக்கு வந்து நின்றாள். தனிமையில் பிடிப்பில்லாத ஜானகிக்குப் பிடிப்பாய் நின்றது சௌமியா, ராஜாத்தியின் மகள். சௌமியின் மூன்று வயதில் வீடு விடுதியாக மாற ராஜாத்தி, சமையல்.. விடுதியின் மேல் வேலை என்று சில பொறுப்புகளை எடுத்துக் கொண்டாள்.
அழுது வடிந்து கொண்டிருந்தவள் அறைக்கு பதிமூன்று வயது சௌமியா வந்தாள்.
“ஒரு வாய் சாப்பிடு கா… நீ சாப்பிடாட்டி உனக்காக சம்பாரிக்கிற உன் அப்பா மனசு வருந்தாதா? வா கா”, சிறுமி டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றாள், அலர்விழியை.
உணவு எடுப்பதோடு சரி.. ஒருவரும் அங்கு அமர்ந்ததெல்லாம் சாப்பிடவில்லை. சிலர் அறைக்குக் கொண்டு சென்றனர். சிலர் டி.வி. முன் அமர்ந்துகொண்டனர்.
“முதல் தடவ குடும்பத்தை விட்டு இருக்கனால கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். ரொம்ப அதையே நினைக்காத. எல்லார்கிட்டயும் பேசி பழகு.. சரியாகிடும்.”, என்று ஜானகி ஆண்டி ஆறுதல் படுத்தினார். மிகவும் அன்பான மனுஷி.
மாதவன் கூறியது போலவே அது விடுதி போல் இல்லை. பெரிய குடும்பம் போல் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பாய் அரவணைப்பாய் இருந்தனர்.
நகுநா போல் சௌமியும் அலரை பிடித்துக் கொள்ள இரு தினங்களில் பெண் தேறிக் கொண்டாள். காலை வேளைகளில் கல்லூரி, மாலைப் பொழுதில்.. சௌமி பள்ளி சென்று வந்ததும் சற்று தொலைவில் இருந்த விளையாட்டு மைதானத்திற்கு இருவரும் சென்று விருவார்கள்.
கல்லூரி, விடுதி, விளையாட்டு மைதானம், பெரியப்பா வீடு.. இது மட்டுமே வாழ்க்கை என்று மூன்று மாதம் சென்றது.
வானிலை என்றும் ஒரு போல் இருப்பதில்லையே… வானிலை மாற ஆரம்பித்தது.
