Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ04_1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்…

கொல்லை துளசி எல்லை கடந்தால் – 4_1

 

நீளமான சாலையின் இருபுறமும் மரங்களின் நிழல்.. நிழலில் மெட்டாலிக் க்ரே டொயோடா கேம்ரி.

 



Advertisement

கேம்ரி-யின் மினுமினுத்த உடலில் ஒட்டி உரசிக்கொண்டு சாய்ந்து நின்றிருப்பது அதன் சொந்தக்காரன். வெள்ளிக் கிழமை என்பதால் ‘கேஷ்வல் ஃப்ரைடே’ ஜீன்ஸ்; சந்தனம் மற்றும் பிஸ்தா நிற கட்டம் போட்ட முழுக்கை லினன் சட்டை.. முழங்கை வரை இழுத்துவிட்டிருந்தான்.

 

வாய் எதையோ மென்மையாக மெல்ல.. கருப்பு கண்ணாடி பின்னிருந்த கண்கள் கையிலிருந்த கைப்பேசி திரையில் மூழ்கியிருந்தது.

Advertisement

 

Advertisement

அதே மரத்தடியில் சற்று தள்ளி, இருவர். ஒருவன் நீல சட்டை, மற்றவன் ப்ரொன் டி-ஷர்ட்.

 

அவர்கள் நின்ற மரம் இருந்ததோ.. நுங்கம்பாக்கத்தில், உண்ட பின்னும் நாவில் நர்த்தனமாடும் ருசிக்குப் பெயர் போன உணவகம் முன்.

Advertisement

 

நீல சட்டை: அது தான் மூக்கு முட்ட டீம் லன்ச் ஆச்சே.. இன்னும் எதுக்கு டா வாசல்ல வாச்மேன் வேலை பார்த்துக்கிட்டு?

 

ப்ரொன் டி-ஷர்ட்: வாசு ரெஸ்ட் டூம் போயிருக்கார். வரட்டும் அவரும் நம்ம கூட தான் வராராம்.

 

நீல சட்டை: நல்ல சாப்பாடு இல்ல?

 

ப்ரொன் டி-ஷர்ட்: எல்லாம் நம்ம எபி புண்ணியத்துல!

 

தலையை திருப்பி தனியே நின்று கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம்.. “தல உன் ஹோட்டல் செலக்ஷன் சூப்பர் டா!”, என்றுவிட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான்.

 

கைப்பேசியிலிருந்து தலை உயரவில்லை என்றாலும்… ‘ம்ம்’ என்று தலையை ஆட்டி வைத்தான். முகம் முழுவதும் தெரியவில்லை. ‘என்ன ஷாம்பூவாயிருக்கும்?’ யோசிக்க வைக்கும் அலை அலையான அடர் கேசம்.

 

நீல சட்டை: இப்போ.. அந்த ஏசி ரூம்ல போய் உக்காந்தா அப்படி ஒரு தூக்கம் வரும் பாரு.. இதுல க்ளையண்ட் மீட்டிங் வேற இருக்கு.. அவனுங்க பேசரது ஒன்னும் புரியாது பாத்துக்கோ… தாலாட்டு மாதிரி அப்பிடி இதமா இருக்கும்..

 

பேசிக் கொண்டிருந்தவர்கள் கவனத்தைக் கவர்ந்தது எதிரில் தெரிந்த காட்சி!

 

ஓல்லி குச்சி உடம்பு காரி, அத்தனை அழகாய் உடுத்தியிருந்த புடவையைக் கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு உயிர் காக்கும் வேகத்தில் ஓடி வர…

 

ப்ரொன் டி-ஷர்ட்: டேய்… பி.டி. உஷா டா. செம்மையா இருக்கா..

 

பின்னோடு ஒருத்தி துரத்திக் கொண்டு வந்தாள்.

 

நீல சட்டை: ஒன்னு இல்ல மச்சான் ரெண்டு லட்டுங்க..

 

இவர்களோடு வேறு சில கண்களும் இவர்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்த பெண்கள் மேல் விழுந்தது.

 

துரத்திக் கொண்டு தான் வந்து கொண்டிருக்கிறாள் என்பது திண்ணம்! இவள் தான் திரும்பித் திரும்பிப் பார்த்து கொண்டே ஓடுகிறாளே.

 

நீல சட்டை: டேய் பின்னாடி வரக் காட்டுமிராண்டி ஜாதி பூவ தொரத்தரா டா. காப்பாத்துவோமா..

 

ப்ரொன் டி-ஷர்ட்: அடங்கு என்னன்னு பார்ப்போம். போற வரைக்கும் நல்ல டைம் பாஸ்.

 

ஒரு கட்டத்தில் காட்டுமிராண்டி, ஜாதி பூவை நெருங்கியிருக்க… ‘படார்’ என்ற சத்தம் நின்றிருந்தவர்கள் செவிப்பறையில் விழ.. ‘அம்மோவ்’ என்ற அலறலும் செவிப்பறையில் விழுந்தது.

 

நீல சட்டை: டேய்… அடிச்சுட்டா டா?

 

ப்ரொன் டி-ஷர்ட்: ராட்சசி!

 

இது எதிலுமே கவனம் செலுத்தாமல் கர்மமே கண்ணாக நினைத்து கைப்பேசியில் மூழ்கியிருந்தவன் கவனம் சிதைந்தது, காட்டுமிராண்டி என்ற ராட்சசி ஏற்படுத்திய சத்தத்தாலும், ஜாதி பூவின் அலறாலும்.

 

நீல சட்டை: மாடர்ன் ராட்சசி!

 

இடக்கை கொண்டு அவள் அடித்த அடியில் புடவை சுருட்டிக் கொண்டு விழப் போக.. மற்ற கைக் கொண்டு அவள் விழாமல் பிடித்திருந்தாள், ராட்சசி.

 

நீல சட்டை: டேய் பி.டி.உஷா இல்ல டா… சரியான பூலான் தேவி!

 

ப்ரொன் டி-ஷர்ட்: அடிக்கிற கை தான் டா அணைக்கும்! அடிச்சுட்டு விழாம பிடிச்சா பாரு அங்க தான் டா அவ நிக்குறா! இருந்தாலும் நாம ஹீரோயின் பத்தி பேசாம எதுக்கு டா அரக்கி பத்தி பேசறோம்?

 

புடவை பெண் இடுப்பிலிருந்து எதையோ எடுக்க.. சட்டென்று மடிப்பு நிமிர்ந்து மின்னியது சிறு கத்தி.

 

ப்ரொன் டி-ஷர்ட்: மச்சான் என்ன டா நடக்குது? இதுல யார் டா ஹீரோயின்? நாம யார காப்பாத்தணும்.

 

இருபதடி தூரத்தில் நடப்பதை வெறும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கருப்பு கண்ணாடி சுதாரித்தான். தலையை ஆட்டிக் கொண்டான்.. ‘பொண்ணுங்களும் ரௌடிங்க மாதிரி நடு ரோட்டுல சண்டைக்கு இறங்கிட்டாங்களா?’ என்பது தான் அவன் சந்தேகம்.

 

கைப்பேசியை பேன்டில் திணித்துவிட்டு, அவன் இரண்டடி எடுத்து வைக்கும் முன்… புடவை பெண்ணின் கையிலிருந்த கத்தி அவள் கழுத்தில். 

 

நின்றுவிட்டான். கண்களில் சுவாரசியம் கூடியது.

 

நீல சட்டை: என்ன டா நடந்துது? இவ எப்படி டா அவட்ட மாட்டினா? அவ எப்பிடி டா இவ கைய மடக்கி இவ கழுத்திலேயே வச்சா?

 

ப்ரொன் டி-ஷர்ட்: அவ லேடி ஜாக்கி சான் டா. என்னவோ சாகசம் எல்லாம் செய்யறா!

 

என்ன பேசினார்களோ? பின்னிருந்தவள் பிடி தளர.. இவள் கழுத்தை நீவிக் கொண்டே கத்தியை மடித்து இடுப்பில் சொருகி.. ரவிகைக்குள்ளிருந்து ஒரு பர்சை நீட்ட… அவள் மீண்டும் ‘படார்’ என்று ஒன்றை வைத்துவிட்டு பர்சை வாங்கி சரி பார்க்க… புடவை தலையைச் சொறிந்து கொண்டே இவர்களை கடந்தாள்.

 

அழகு ஜாதி-பூ வாங்கிய அறையில் வதங்கிவிட்டது.

 

‘ஆ’வென்று இருவரும் வாய் பிளந்து நிக்க..

 

பக்கா டீசென்டான ஜாதி பூ: ஐயே… இன்னாத்த லுக்கு விடுற? மூஞ்சியும் ஆளையும் பாரு! நீ இன்னா அக்கா தங்கச்சி கூட எல்லாம் பொறக்கல?

 

நீல சட்டையை பார்த்து தோளில் நாடி இடித்துச் சென்றாள்.

 

நீல சட்டை: அது தான் ஹீரோயின் டா… இது பிக் பாக்கெட் டா! என்னை பாத்து என்ன கேட்டுட்டா டா மச்சான்!

 

ப்ரொன் டி-ஷர்ட்: பக்கத்துல இருக்க டீ கடை முன்னால வச்சிருக்க அர பக்கெட் தண்ணில முங்கி உயிர விட்டு நீ மானஸ்தன்னு ப்ரூவ் பண்ணுடா!

 

நீல சட்டை: நீ மூடு! நான் ஒரு ஆணியும் கழட்டறதா இல்ல!

 

முதுகில் இருந்த பையைச் சரி செய்தவள், முழங்கை வரை இருந்த சட்டையை கீழே இழுத்துவிட்டு மீண்டும் ஒழுங்காக மடித்துக் கொண்டே இவர்களை நோக்கி நடக்கவும்…

 

நீல சட்டை: டேய் இந்த பக்கம் வரா டா..

 

ப்ரொன் டி-ஷர்ட்: அழகு ராட்சசி..

 

ஜொள்ளினான். மற்றவன் கேசத்தை வருடி விட்டுக் கொள்ள..

 

நடந்து வந்து கொண்டிருந்தவள் பின்னால் திரும்பி பேருந்து வருவதை பாத்ததும் ஓட்டம் பிடித்தாள்.

 

நீல சட்டை: எதுக்கு டா திரும்பவும் ஓடறா? நம்மள அடிச்சு… நம்ம பர்ஸ்ச புடுங்குவாளோ?

 

இவன் கேட்கவும்.. அவள் இவர்களைக் கடக்கவும் சரியாக இருக்க… ஓடிக் கொண்டிருந்தவள் வேகம் குறைந்து.. முகம் தன் போல் திரும்பியது கூறியவனைப் பார்க்க. பார்த்ததென்னவோ… வாட்டம் சாட்டமாக நின்றிருந்த கருப்பு கண்ணாடியைத் தான்.

 

மென்றுக் கொண்டிருந்தான், சுவையில்லாத சவ்வு மிட்டாயை. வரைந்து செதுக்கி வைத்தார் போன்ற முகமும் உடல் கட்டும். முற்றாத இளம் முகம்… மிஞ்சி போனால் 22…23 இருக்கும். காற்றில் பறந்து கொண்டிருந்த அடர் கேசத்தை ஒரு கை பின் தள்ள.. மற்றது கண்ணாடியைக் கழட்டிக் கொண்டிருந்தது.

 

ஓடிக் கொண்டிருந்தவள் விழி அவனைப் பார்க்க… அவனை ஈர்த்ததோ, அந்த நீளமான நயனங்கள்.. அத்தனை அழகு. இமை மூடி திறக்க.. இமை மேல் ஆகாய நீலமும்.. மரகதப் பச்சையும்!

 

இதழில் சம்மந்தமே இல்லாமல் அடர் பர்புள் சாயம். நிஜ வடிவமா இல்லை வரைந்து வடிவமைக்கப் பெற்றதா? காதில் பெரிய சைஸ் வெள்ளி ஜிமிக்கி.. அவள் போட்டிருந்த இதழ் சாயத்திற்கும் கண் இமைக்கும் தோதாய் இரு நிற முத்துகளை ஏந்திக் கொண்டு!

 

ஸ்ப்ரிங் முடியைத் தூக்கி கொண்டை போட்டிருக்க… அவளைப் போலவே அடங்க மறுத்த அடங்கா பிடாரி முடி கற்றைகள் இங்கும் அங்கும் சுருண்டு தொங்கிக் கொண்டிருந்தது.. திராட்சை கொத்துகளாய்!

 

ஜீன்ஸ் மற்றும் முழு கை கட்டம் போட்ட சட்டை முழங்கை வரை இழுத்து விட்டிருந்தாள். ஒற்றை கையில் மட்டும் ஜிமிக்கியை ஒத்த நிறத்தில் டஸன் வளையல்கள்.

 

சம்மந்தமே இல்லாத உடையும்… அலங்காரமும்.. அணிகலங்களும்.. கவனிக்க வைத்தது. நீள நயனங்கள்.. அவனை இழுத்துப் பிடித்தது.

 

நீல சட்டை: பொண்ணு ஒரு டைப்பா நல்லா தான் இருக்கா இல்ல?

 

ப்ரொன் டி-ஷர்ட்: ஈஸ்ட் மீட்ஸ் வெஸ்ட்.. ஃப்யூஷன் டா மச்சான்.

 

நீல சட்டை:  கருப்பும் இல்ல சிகப்பும் இல்ல… என்ன கல்லர் டா இவ?

 

ப்ரொன் டி-ஷர்ட்: தேனு மாதிரி மினுக்கறா.

 

ஒரு வழியாய் கருப்பு கண்ணாடி வாய் திறந்தான்.

 

“போதும் நிறித்துங்கடா..”

 

நல்ல ஆழமான அழுத்தமான சத்தம்.

 

அவள் காதில் இதெல்லாம் விழச் சாத்தியம் இல்லை. அவள் பின்னால் வந்துக் கொண்டிருந்த பேருந்து அவளைக் கடக்க… தாவி ஏறிச் சென்றிருந்தாள்!

 

வாசுவும் வந்துவிட… கருப்பு கண்ணாடி கால் சட்டையிலிருந்து கார் சாவி எடுக்க..

 

நீல சட்டை: ஹப்பா… வந்துட்டான் டா நம்ம வாசு! எபி கார் எடுடா.. போலாம்!

 

மகிழுந்து, சென்னையின் நெரிசலான சாலையில் நுழைந்தது. கண்ணாடியின் பின் ஒளிந்திருந்த கண்கள் முன்னே சென்றுக் கொண்டிருக்கும் பேருந்தின் பெயர்ப் பலகையை நோட்டமிட்டுக் கொண்டிருக்க.. வாய் சவ்வு மிட்டாயை சவைக்க… மகிழுந்தில் கசிந்து கொண்டிருந்த பாடலுக்கு நீள விரல்கள் ஸ்டியரிங்கில் தாளம் போட்டுக் கொண்டிருந்தது.

 

“பாவி நெஞ்சே… பத்தவெச்ச பஞ்சே..

பஞ்சில் சாம்பல் மிஞ்சாதே..”

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!