Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

MKMK Episode 2.2

அவள் வரவும் அவர்கள் பில் கவுண்டர் அடையவும் சரியாக இருக்க சாதனா தன்  பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்சை எடுத்து அதில் இருந்த அவளது கிரெடிட் கார்டு மூலம் பணத்தை செலுத்தி விட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு  காருக்கு வந்தாள்.

காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்த பிறகும்

‘இன்னொரு தடவை உள்ளே சென்று தேடி விட்டு வரலாமா?’ என்று  யோசித்தாள்.

 



Advertisement

அதேநேரம் ஜோதி “அம்மா பசிக்குது.” என்று விஜயாவிடம் சொல்லும் குரல் கேட்க அதற்கு மேல் அங்கு இருக்க மனமில்லாமல் அவர்களை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

 

அன்று இரவு  உணவை முடித்துவிட்டு விருந்தினர்கள் சென்றுவிட அவரவர் அவர்களது அறைக்கு சென்றனர்.

Advertisement

 

Advertisement

தன் அறைக்கு வந்த சாதனா அவளுடைய  அறையில் இருந்த அந்த பெரிய கம்ப்யூட்டரை உயிர்ப்பித்தார்.

 

தன் வேலையை முடித்த பிறகு அதனை அணைத்துவிட்டு அதே அறையில் இருந்த தொலைக்காட்சி பெட்டியை உயிர்ப்பித்தாள். நெட்பிளிக்ஸ்ல் ஓடிக்கொண்டிருந்த ஒரு ஆங்கில படத்தை சிறிது நேரம் பார்த்தாள். அதற்கு பிறகு அதில் மனம் செலுத்த முடியாமல் அதனை நிறுத்திவிட்டு கண்ணாடி ஜன்னல் திரையை விலக்கி பார்வையை வெளியே வீசினாள்.

Advertisement

 

சாதாரணமாகவே அமைதியாக இருக்கும் அந்த தெரு அந்த இரவு பதினொன்று மணிக்கு இன்னும் மயான அமைதியுடன் இருந்தது. காய்ந்த இலை சருகுகள்  வேகமாக அடித்துக்கொண்டிருந்த காற்றில் அங்குமிங்கும் பறந்து கொண்டிருப்பது தெரு விளக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது. அவளது மனமும் அந்த காய்ந்த  இலைகளை போலவே  அலைபாய்ந்து கொண்டிருந்தது. வால்மார்ட்டில் அவள் காதில் விழுந்த அந்தப் பெயர் “சுகந்தா சுகந்தா” என்று மீண்டும் மீண்டும் அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

 

‘உண்மையாவே யாராவது கூப்பிட்டாங்களா இல்லை எனக்கு அப்படி கேட்டதா? இவ்வளவு நாள் இல்லாமல் இப்ப ஏன் திடீர்னு இப்படி கேட்கணும்?’ என்று தனக்குத் தானே கேள்விகளைக் கேட்டுக் கொண்டு விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

 

மணி 12 ஐ தொட்டிருந்தது. எனினும் தூக்கம் வர மறுத்தது. அவள் நேரத்திற்கு நிம்மதியாக தூங்கி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இரவில் தினமும் அலுவலக வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள்.

 

பொதுவாக அவள் அலுவலகத்தில் வேலை செய்யும் எவரும் அப்படி செய்வது கிடையாது. அப்படி செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது. அவர்வர் அவர் வேலைகளை அலுவலக நேரத்திலேயே முடித்து விடுவர். அதற்கு பிறகு மற்ற நேரங்களில் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் தங்கள் நேரத்தை செலவிடுவர். ஆனால் இவளுக்கு தூக்கம் வராத காரணத்தினால் அலுவலக வேலையை இரவில் செய்வது உண்டு. இதனால்  அவள் அலுவலகத்தில் தனித்து தெரிவதும் உண்டு. இப்போதும் அவளுக்கு தூக்கம் வர மறுத்தது. வராத தூக்கத்தை வரவழைக்க கண்களை மூடிக்கொண்டு போர்வையை பொத்திக்கொண்டு படுத்தாள்.

 

அவளது உடல்  டெக்ஸாஸில் இருக்க அவள் மனம் பாஸ்போர்ட், விசா பிலைட்  இல்லாமல் காற்றில் பறந்து  சென்னைக்கு வந்தது. அதுவும் டைம் மிஷினில் ஏறி இரண்டரை வருடங்களுக்கு முன்பு சென்றது.

 

“அப்பா எனக்கு சுகந்தா தான் வேண்டும். வேறு யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். அது யாராக இருந்தாலும் சரி. இந்த நாடு இல்லை, எந்த நாட்டுக்கு ராஜாவாக இருந்தாலும் சரி.” என்றாள் சாதனா தன் தந்தை கார்த்திகேயனிடம்.

 

“சாது நான் சொல்றதை கேளு.   அவனைப் பற்றி விசாரித்து பார்த்ததில் அவன் பெயரில் நிறைய கடன் இருக்கு. நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவன் கூட சேர்ந்து நீயும் கஷ்டப்படணும். சொந்தமா ஒரு பைக்கை தவிர வேறு எதுவும் இல்லை. அவங்க அப்பா ஏதோ சின்ன கவர்மெண்ட் வேலையில் இருந்து ரிடையர்டு ஆகிட்டார். எந்த சேமிப்பும் இல்லை. அம்மா ஹவுஸ் வைஃப். இந்த மெட்ராஸ்ல ஒரு வாடகை வீட்ல இருக்காங்க. அந்த குடும்பம், அப்புறம் அந்த கடன் ரெண்டுமே இவனோட சம்பளத்தை நம்பி தான் இருக்கு. அவனோட தங்கையை ஏதோ பெரிய இடத்துல கொடுத்துட்டு அந்த கல்யாணத்துக்கு நிறைய செலவு பண்ணிட்டு அதனால வந்த கடனை  கொஞ்சம் கொஞ்சமா அடைத்துக் கொண்டு இருக்கான். அவன் உனக்கு செட் ஆக மாட்டான்.”

 

நாம பெரிய கோடீஸ்வரர்கள் இல்லை என்றாலும் சொந்தமா ஒரு  வீடு, பேங்க்ல உங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கு தேவையான நகை, பணம் எல்லாமே சேமிப்பா இருக்கு. உங்க ரெண்டு பேருக்கும் தனித்தனியா கார் வாங்கி கொடுத்து இருக்கிறேன்.”

 

“அப்பா நீங்க சொல்ற எல்லாமே எனக்கு நல்லாவே தெரியும். இதையெல்லாம் என்கிட்ட சுகந்தன் சொல்லிட்டான் . எல்லாத்தையும் தெரிஞ்சு தான் நான் அவனை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன். நீங்க சொல்ற மாதிரி கொஞ்சம் காலம் நாங்க கஷ்டப்படுவோம். அதுக்கப்புறம் கடன் எல்லாத்தையும்  அடைத்துவிட்டு  நாங்க உங்க கண்ணு முன்னாடி சந்தோஷமா வாழ்ந்து காட்டுவோம்.” என்றாள் உறுதியாக.

 

“சாது நான் சொல்றது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது? என்னோட ரெண்டு பொண்ணுங்களுக்கும் அமெரிக்காவில் மாப்பிள்ளை ஒரே நேரத்துல அமைந்திருக்கிறது என்னோட பாக்கியமாக நினைக்கிறேன். உங்க ரெண்டு பேரோட அதிர்ஷ்டம்தான் உங்களுக்கு இந்த மாதிரி இடம் கிடைச்சிருக்கு. ஆனால் நீ இந்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்திக்கொள்ள மாட்டேங்கிற.”

 

“அப்பா  சஞ்சனாவுக்கு  நீங்க ஆசைப்பட்ட மாதிரி கல்யாணம் பண்ணி வைங்க. ஆனால் என்னை கொஞ்ச நாள் விட்டுடுங்க. ப்ளீஸ்.”

 

“என்ன சொல்ற சாது? அக்காவை விட்டுட்டு தங்கைக்கு கல்யாணம் பண்ணுவாங்களா? இதுக்கு உன் தங்கை ஒத்துக்க மாட்டா. அப்புறம் எப்படி இந்த கல்யாணம் நடக்கும்?”

 

“அப்பா நீங்க என்னை எப்படி கேட்டாலும் சரி. என்னால அந்த அமெரிக்கா மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க முடியாது.” என்றாள் திட்டவட்டமாக தந்தையை நேருக்கு நேராக பார்த்து.

 

இவர்கள் இருவரையும் கவனித்துக்கொண்டிருந்த கலைவாணி

“ஏங்க நான் சொல்றதை கேளுங்க. இவள் நம்ம பேச்சை என்னிக்கி கேட்டு இருக்கா? அவள் இஷ்டத்துக்கு தான் இருப்பா.  இவளை அவள் இஷ்டப்படி அவனுக்கு கல்யாணம் பண்ணி வைங்க. சஞ்சனாவுக்கு வந்திருக்க  மாப்பிள்ளையை அவளுக்கு கல்யாணம் பண்ணி வைப்போம்.”

 

“என்ன கலைவாணி இப்படி பேசுற? என்னோட மாப்பிள்ளை என்னை விட ஒரு படி ஆவது மேல இருக்கணும்னு ஆசைப்படறேன். இது தப்பா? அப்பதானே  என் பொண்ணுங்க என்கிட்ட இருந்ததை விட சந்தோஷமா இருப்பாங்க.” என்று ஒரு பாசமான தந்தையாக பேசினார் கார்த்திகேயன்.

 

அவரைப் பார்த்த சாதனாவுக்கு மனம் கலங்கியது. இருப்பினும் அவரிடம் காட்டிக்கொள்ளாமல்

“அப்பா என்னோட சந்தோஷம் சுகந்தன் கூடத்தான். ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.” என்றாள்.

 

“அவளோட பிடிவாதம் தான் நமக்கு தெரியுமே. விடுங்க.”  என்றார் கலைவாணி.

 

சிறிது நேரம் அங்கு  ஒரு அமைதி நிலவியது.

யோசித்து ஒரு முடிவுக்கு வந்த கார்த்திகேயன்

“சரி  சாது. நீ சொல்ற மாதிரி நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கறேன். ஆனால் உனக்கு கல்யாணம் பண்ணாம சஞ்சனாவுக்கு கல்யாணம் பண்ண முடியாது.”

 

“அப்பா இப்போ  அவனோட  குடும்பம் இருக்கிற சூழ்நிலையில்  கல்யாணமா?” என்று இழுத்தாள் சாதனா.

 

“சாதனா எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு, அவன், அவன் குடும்பம்nu மட்டும் தான் யோசிக்கிற. நம்ம குடும்பத்தை பற்றியும் யோசி. உனக்கு கல்யாணம் பண்ணினால் தான் சஞ்சனாவுக்கு கல்யாணம் பண்ண முடியும். இந்த வரன் சஞ்சனாவுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும். இதை மிஸ் பண்ண முடியாது. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது. அவன் கிட்ட  பேசு. இன்னும் மூணு மாசத்துல என்னோட ரெண்டு பொண்ணுங்களோட கல்யாணத்தையும் ஒரே மேடையில் வச்சு பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். அவ்வளவுதான்.” என்றார்.

 

“சாது அப்பா இந்த அளவுக்கு இறங்கி வந்ததே பெரிய விஷயம். நீ அவன் கிட்ட பேசி இப்பவே இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க சொல்லு. அவ்வளவுதான்.” என்று விட்டு அவரும் முடித்துவிட்டு கணவனுடன்  அந்த அறையை விட்டு சென்றுவிட்டார்.

 

“என்ன சாது சொல்ற? எனக்கும் உனக்கும் மூணு மாசத்தில் கல்யாணமா? என் தங்கை கல்யாணத்துக்கு வாங்கின கடனை இன்னும் நான்  அடைக்கல. அதுக்குள்ள அடுத்த கல்யாணமா? முதல்ல நான் இந்த கடனை அடைக்கணும். அதுக்கப்புறம்  தான் நம்ம கல்யாணம். அதுக்கு ஒரு ரெண்டு, மூணு வருஷம் ஆகும். எனக்காக நீ வெயிட் பண்ண மாட்டியா?”

 

“நான் வெயிட் பண்ண ரெடியா தான் இருக்கேன். ஆனால் என்னோட தங்கை வாழ்க்கை இதனால்  பாதிக்கப்படுவதில் எனக்கு இஷ்டமில்லை. அதனால ப்ளீஸ்  சுகந்தா, நாம இப்போ கல்யாணம் பண்ணிக்கிறதை தவிர வேற வழி இல்ல.”

 

“எனக்கு இப்போ 24 வயசு தான் ஆகுது. அதுக்குள்ள நான் எப்படி வீட்ல போயி கல்யாணத்தைப் பத்தி பேசறது?” என்று அவளையே கேட்டான்.

 

“நீ பேசி தான் ஆகணும். இல்லைனா நாம ரெண்டு பேரும் எப்பவுமே கல்யாணம் பண்ணிக்க முடியாது. எவ்வளவோ காதலர்கள் லவ் பண்ணிட்டு கல்யாணம் பண்ணிக்க முடியாமல் பிரிந்து போயிடுறாங்க. அந்த மாதிரி நாம பிரியாமல் கல்யாணம் பண்ணிக்கணும்னா இதுதான்   நேரம். ப்ளீஸ்.” என்றாள் கண்கலங்கியபடி.

இவ்வளவு கஷ்டப்பட்டு அவனை திருமணம் செய்து கொண்டாள் அவள். ஆனால் அவனோ!? என்று நினைத்து  வருந்திய மனதை கட்டுப்படுத்திக்கொண்டுஉறங்கி போனாள்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!