Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ08_1 – செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  08_1

 

 

5, 10, 20  பைசா நாணயங்கள் அதிக புழக்கத்தில் இருந்த காலகட்டம் அது(1980கள்).



Advertisement

5 பைசா கொண்டு 5 தேன்மிட்டாய் வாங்கலாம்.. கையிலும் கழுத்திலும் போட்டுக் கொள்ளும் வண்ண மிட்டாய் அணிகலன் வாங்கலாம்.. இப்படி இன்னும் நிறைய.

கமர்கட், இலந்தை வடை, தேன்மிட்டாய், ஜவ்வு மிட்டாய், ஆரெஜ் மிட்டாய், சீரக மிட்டாய் இவை எல்லாம் அன்றைய தலைமுறையினரின் ஜக் ஃபுட் ?

 

Advertisement

 

Advertisement

சத்தயனுக்கு ‘அங்கு’ நடக்கும் கொடுமைகள் ஓரளவிற்குத் தெரியும். ஒரே துறையில் இருப்பதினால் இதைப் பற்றி ப்ரேமிடம் அதிகம் பேசியதுண்டு. இந்த கூட்டத்தை ஒழிக்கக் காலம் பார்த்து நிற்கிறான். ஆனால் இப்பொழுது அவனால் நினைக்க மட்டும் தான் முடியும் என்ற நிலை. கையில் அதிகாரமில்லை. இரண்டு வருடமேனும் வேண்டும் இவன் பதவி உயர்வுக்கு. அவர்களுக்குள் நம்பிக்கையான ஆட்களை ஊடுருவ செய்து..  ஆணி வேரை பிடுங்கி இந்த குழந்தை வியாபாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். கடினமான வேலை தான். முடிந்த வரை முயற்சிக்கும் நோக்கம்.

 

கேள்விப்பட்டிருக்கிறான் கௌஷியை பற்றி. கௌஷியின் கோட்டைக்குள் சென்றுவிட்டால் மீட்பது சுலபமல்ல! முதலாவது இவ்வளவு அழகானப் பெண்ணை இவர்கள் கண்ணில் எல்லாம் காட்டக் கூட மாட்டாள். அப்படி ஒருத்தி இல்லை என்றுவிட்டால் எங்கிருந்து மீட்பது?

Advertisement

 

“இப்போ வரைக்கும் அங்க போகலைனா காப்பாத்திடலாம் மூர்த்தி!” அவன் குரலும் கரகரத்தது.

 

எப்படியும் அவளை மீட்டே தீருவேன் என்றவன் முகத்தில் ரௌத்திரமா? கவலையா? தவிப்பா? அவளை மீட்கும் வரை மூர்த்தி ஓயப்போவதில்லை. மூர்த்திக்கு  நிம்மதியில்லாமல் சத்யனுக்கு நிம்மதி இல்லை.

 

இரவோடு இரவாக எல்லா விபரமும் சேகரிக்க ஆரம்பித்தான். கௌஷியின் கோட்டை இருந்த தெருவில் நான்கு போலீஸ் சாதாரண உடையில் நிறுத்தப்பட்டனர். கௌஷியிடம் இன்னும் அனுப்பப்படவில்லை என்றால் வழியிலேயே காப்பாற்றிவிடலாம்.

 

மித்ரன் க்ளீனிக் அருகில் இரண்டு காவல் அதிகாரிகள், மஃப்டியில். எப்படி இருந்தாலும் அவன் இரத்த பரிசோதனை முடிவை வாங்க இங்கு தான் வரவேண்டும்.

 

அனைத்துமே அவசர ரீதியாக பதிவிடப்படாத நடவடிக்கைகள்.

 

மூர்த்தி, “என்ன நடக்குது இங்க? என்னது இதெல்லாம்? யாரு டா இவங்க எல்லாம்?”

 

“இருபது.. இருபத்தி ரெண்டு வயசு வரைக்கும் இருக்கப் பெண் பிள்ளைகளை வச்சு காசு பாக்கிற இடம் தான் இது. கொழுத்தப் பணம். அதனால ஏகப்பட்ட கடத்தல்.

 

நம்பிக்கையா பழகி… ஏமாத்தி கூட்டிட்டு வந்து அந்த பிள்ளைகள ரொம்ப கொடுமைப் படுத்தி இதுக்கு உடன்பட வைப்பாங்க. உடன் படலனாலும் அதுக்கு எல்லாம் அவங்க கவலையும் பட மாட்டாங்க. அங்க இருந்து தப்பிக்கிறது கஷ்டம். ஒரு சிலரே தப்பிச்சிருக்காங்க. அவங்க மூலமா தெரிஞ்ச தகவல் இதெல்லாம்.

 

இந்த கௌஷி மாதிரி இன்னும் ரெண்டு பேரு. அசைக்க முடியாது. நாங்க நினைச்சா கூட சிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம். அவங்க லிங்க் அப்படி. இதுங்களுக்கு குழந்தைகள கடத்தியோ.. ஏமாத்தியோ… ஆசைக் காட்டியோ… அவங்க வறுமையைக் காரணமா வச்சு பெத்தவங்கட்டையே காசு கொடுத்து வேலைக்கு கூட்டிட்டு போறதா சொல்லி கூட்டிட்டு வரது தான் இந்த கௌரவ் மாதிரி ஆட்களோட வேலை. இவனுங்க எத்தனை பேர்.. யார் யார் எல்லாம்ன்னு இன்னும் தெரியல.

 

இந்த மூனு பெரிய புள்ளிங்களையும் அதுங்களுக்கு சப்ளை பண்ற நாய்களையும் வேரோட பிடுங்கிட்டா… கொஞ்சம் வருஷத்துல… இப்படி பிள்ளைகளை இதுக்காக கடத்தறத நிறுத்த முடியலைனாலும்.. இந்த இடத்தில, குறைச்சிடலாம். ஆனா இது எதுவுமே லீகலா செய்ய முடியாது.

 

நாட்டுக்கு பிடிச்ச நிரந்தர நோய் கிருமிங்க. பரவ விட்டா நம்ம வீட்டு பிள்ளைங்க மேலையும் கை வச்சிடுவானுங்க! இந்த விஷ கிருமிகளை அழிக்கணும் மூர்த்தி!

 

களை பிடுங்க ஆரம்பிச்சா.. அட்லீஸ்ட் இருபது தலையாது தேறும்னு தோணுது.. இப்போ எனக்கு இருக்க அதிகாரம் வச்சு ஒண்ணும் பண்ண முடியாது. கொஞ்சம் உயரணும்! என்னைக்குனாலும் இதுக்கு எதிர்த்து ஒரு புல்லையாவது பிடுங்கணும் டா!”

 

இருட்டிக் கொண்டே போனதே ஒழிய கௌரவின் இருப்பிடம் கண்டு பிடிக்க முடியவில்லை. நிலையான பெயரோ இருப்பிடமோ இவர்களைப் போன்றவர்கள்  வைத்துக் கொள்வதில்லை. இத்தனைப் பெரிய மும்பையில் எங்குப் போய் தேட..? கையில் புகைப்படம் போன்று எந்த பிடிப்பும் இல்லை. காலையில் பார்த்த முகம் கொண்டு வரையப்பட்ட படம் மட்டும் கையில்!

 

கிடைத்த தகவலைக் கொண்டு ஆறு மணி நேரம் சுற்றித் திரிந்தாயிற்று. எந்த பலனும் இல்லை. சத்யன் வீட்டு வாசல் முன் அம்பாசிடரில் கண்மூடி அமர்ந்திருந்தவன் உள்ளம் உலைக்களமாயிருந்தாலும் அமைதியாகத் தான் தெரிந்தான்.

 

“மூர்த்தி…” கேட்டவனும் கண்மூடி ஓட்டுநர் இருக்கையில் சாய்ந்தே இருந்தான்.

 

“ம்ம்?” கண் திறந்தானில்லை.

 

“நீ தேடற பொண்ணும் இங்க காலையில பார்த்த பொண்ணும் ஒருத்தர் தானா?”

 

“…”

 

“பேரு கோமல்ன்னு அந்த பொண்ணே மித்ரன் கிட்ட சொல்லி இருக்கா. நீ தேடறது துளசி தானே?”

 

“அவ துளசி! அவ பேரு கோமல். கோம்ஸ்-ன்னு சுந்தரி கூப்பிடுவா. மத்த எல்லாரும் கோமு-ன்னு கூப்பிடுவாங்க”

 

“ஆங்? டேய்.. சாயங்காலத்தில இருந்து ஒரு நாய தேடி தல கிறங்கி உக்காந்து இருக்கேன்.. பேசுறத ஒழுங்கா பேசு. வாய்ல நல்லதா வாத்தை வந்திடும் சொல்லிட்டேன்!”

 

“நீ யூனிஃபார்ம்ல அவசரமா போயிட்டு இருக்கும் போது… தெருவில ஒரு வாத்து வருத்தமா சுத்தினா.. உனக்கு அது புரியுமா? அதுக்கு உதவ, இருக்க வேலையை விட்டுட்டு அது கண்ணீர் துடைக்க போவியா? முதல்ல அது தவிப்பா நடக்குதுன்னு உனக்கு கண்டுபிடிக்கத் தெரியுமா? அவளுக்குத் தெரியும். ஒரு சின்ன உயிருக்குச் சின்ன வருத்தம் இருந்தா கூட அவளால அத உணர முடியும். அதுக்கு உதவினா.. ஸ்கூலுக்கு லேட் ஆகும். ஸ்கூல் கிரவுண்ட சுத்தி அந்த வெயில்ல பத்து தரம் ஓடணும்னாலும்.. அத பத்தி கொஞ்சம் கூட கவலை படாம… அவ துணி அழுக்கானாலும்.. அவ அழுக்கானாலும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காம சாக்கடைக்குள்ள கையை விட்டு அந்த வாத்து குஞ்ச எடுத்து அது அம்மாட்ட குடுப்பா…”

 

“அடுத்தவங்க வலிய அவ வலியா பார்ப்பா… அப்போ எனக்கு அவ பேரு தெரியாது.. துளசி.. துளசி தான் அவளுக்கு சரியா இருந்துது”

 

“அவ சோல்(soul).. அவ ஹார்ட்.. அது பவித்திரமானது.. களங்கமில்லாதது. துளசி மாடத்தில இருந்தாலும் தெருவில இருந்தாலும் அது துளசி தான். அதோட தன்மை எங்க இருந்தாலும் மாறாது. அவளும் அப்படி தான்.”

 

“சொன்னா புரியாது. உணரணும்… நான் உணர்ந்தேன்..”

 

கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. பெண் சாக்கடைக்குள் கைவிட்டுக் குட்டி வாத்தை காப்பாற்றியுள்ளாள்.. அதைப் பார்த்தவன் சித்தம் பேதலித்து சின்ன பெண் பின்னால் சுற்றி திரிந்திருக்கிறான்!

 

“அப்போ கோமல் தான் துளசி..! நிஜமாவே சாக்கடைக்குள்ளையா கைவிட்டா?”

 

‘வாத்தோட தவிப்பெல்லாம் தெரிஞ்சுதே துளசி உனக்கு.. என் தவிப்பு தெரியுதா? எங்க துளசி இருக்க…  எங்க இருக்கேன்னு ஓரே ஒரு  சின்ன க்ளூ குடு துளசி.. அடுத்த நிமிஷம் உன் முன்னாடி நிப்பேன்…’ மனம் அடித்துக் கொண்டது.

 

கண் திறந்தானில்லை. கண் மூடி அவளைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான். பள்ளி உடுப்பில் குட்டி பொம்மை போல் இருந்த வெண்பனி எந்த முகசுளிப்பும் இல்லாமல் சாக்கடைக்குள்ளிருந்து எடுத்த குட்டி வாத்தைக் கழுவி அதன் அம்மாவிடம் விட்டதும் அவள் முகத்தில் தெரிந்த அந்த நிம்மதியும் ஜொலிப்பும்… எப்பொழுதும் போல் அன்றும் மெய்மறந்து அவளைப் பார்த்து அமர்ந்திருந்தான், தெருவோரம் அவன் அம்பாசிடர் டயரை மாற்றிக் கொண்டு. 

 

என்றும் மாலை நேரம் பரட்டையாய் சுற்றித் திரிபவள் அன்று காலை பள்ளிக்கு சென்றுகொண்டிருக்க.. எண்ணை வைத்து வழித்து இரட்டை ஜடை போட்டு.. முன்னால் கத்தரித்து தொங்கிக் கொண்டிருந்த முடி கற்றைகளை பத்து ஹேர்பின் உதவியால் படியவைத்திருக்கவே அவனுக்கு அடையாளம் தெரியவில்லை.

 

“ஏய் சுந்தரி..” என்ற அவள் அழைப்பில் தான் அவளைக் கண்டு கொண்டான். கேட்டதும் தன்னால் முகம் மலர்ந்தது. ‘இன்று என்னவோ?’ என்று தான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 

 

சுந்தரி, “ஏன் டீ.. உன் சமுக சேவைக்கு அளவே இல்லையா? இப்போ நானும் உன் கூட தண்டனையை அனுபவிக்கணும்! இன்னைக்கு வீட்டுக்கு வந்ததும் என் வீட்டுப் பாடத்தை எல்லாம் நீ தான் முடிக்கணும் சொல்லிட்டேன்..”

 

“ம்ம் சரி. பாவம் டீ… கவனிக்காம போயிருந்தா அந்த குட்டி அங்கேயே அந்த சாக்கடையில மாட்டிச்  செத்துப் போயிருக்கும். அது அம்மா தவிச்சுப் போயிருக்கும். ‘ஒரு ஜீவன் கஷ்ட படும் போது பார்த்துட்டு அதுக்கு உதவாம போறதும்.. நாமே அத துன்பத்தில தள்ளுறதும் ஒண்ணு தான்’னு தாத்தா சொன்னாங்க சுந்தரி!

 

பத்து தரம் தானே ஓடணும்.. பார்த்துக்கலாம் வா. என்ட்ட பத்து காசு இருக்கு உனக்குச் சாயங்காலம் இலந்தை வடையும்.. தேன் மிட்டாயும்.. ஜவ்வு மிட்டாய் கைக்கடிகாரம் வாங்கி தரேன். வெள்ளிகிழமை ஸ்கூல் கிட்ட ராட்டினம் வரும் இல்ல… உனக்கு ரெண்டு ரௌண்ட் இந்த தரம்.”

 

சுந்தரி குளிர்ந்து போனாள். “வாச்சு வேணாம்.. டாலர் வச்ச செயின் தான் வேணும்.. இன்னைக்கு குருவி ரொட்டி கொண்டு வந்தியா..”

 

“இல்ல டீ..”

 

ஏதோ நினைவு வந்தவளாய் சுந்தரி, “அடியேய் இன்னைக்கு முதல் வகுப்பு கணக்கு டீ..” என்றாள் கலக்கமான முகபாவத்துடன்.

 

அதை அவள் சொன்னதும் துளசி முகம் விழுந்தே போனது. குரலில் நடுக்கம்.

 

“வீட்டுக்கு போயிடலாமா? அந்த ஆள் கிள்ளுறத என்னால தாங்கவே முடியாது.”

 

சுந்தரிக்கும் பயம் தான். “அம்மா விளக்கு மாத்தாலேயே சாத்தும்.”

 

“அது கூட பரவால… அந்த ஆள் கன்னத்தைக் கிள்ளி வைப்பான். வலி உயிர் போகும்.. அதுவும் கைகடியில அவன் திருவினா ரெண்டு நாளைக்கு கைய தூக்கக் கூட முடியாது.”

 

“உன்ன எவன் டீ இப்படி சிவப்பா பொறக்க சொன்னா… உன் கன்னத்த கிள்ளினதும் அது அப்படி ரெட் ஆகிடுது… அது தான் உன்ன கிள்ள கிடைக்கிற வாய்ப்ப அந்த ஆள் வீணாகிறதே இல்ல.. அதுவும் நீ முகம் சிவக்க அழறத பாக்க அந்த பிசாசுக்கு ஏன்தான் அப்படி பிடிக்குதோ..? நீ அழகா இருக்கனால அதுக்கு உன்ன பிடிக்கவே இல்ல டீ. ஒரு மணி நேரம் என்னை வெளியில முட்டிப் போடச் சொல்லும்? என் கம்மல கழட்டணும்… இல்ல கையோட பிச்சு எடுத்திடும் பேய்.”

 

“சரியான சேடிஸ்ட்டா இருப்பான் போல? இத எல்லாம் கேட்டுட்டு சும்மாவா டா நீ நின்னுட்டு இருந்த?”

 

கனவில் திடீரென்று கேட்ட சத்யன் குரலுக்கு கண் திறந்து பார்க்க.. அவன் ஆர்வமாய் இவன் முகம் பார்த்து அமர்ந்திருந்தான்.

 

“என்ன? என்ன கேட்ட..?”

 

“பிள்ளைங்கள அந்த ஆள் பாடா படுத்துவான் போல.. அத தெரிஞ்ச பிறகும் சும்மா தான் இருந்தியான்னு கேட்டேன்”

 

எப்போதிலிருந்து இவனிடம் கதை கூற ஆரம்பித்தான்? தெரியவில்லை! “சாக்கடைக்குள்ளயா கை விட்டா?” என்று அவன் கேட்க.. துளசி நினைவில் லயித்திருந்தவன் உணராமலே அவள் புராணத்தைக் கூற ஆரம்பித்திருக்க வேண்டும்.

 

“டேய்? அந்த ஆள சும்மா விட்டுட்டியா? வயசு பொண்ணுங்க மேல கை வைகிறது என்ன பழக்கம்? தப்பாச்சே..” – சத்யன்

 

சத்யன் முகம் பார்த்தவன் கண் மின்ன.. உதடு மென்மையான புன்னகையை சிந்த அவன் மீசையை ஆட்காட்டி விரல் வருட.. சத்யன்  சிரித்தான்.

 

‘நீ என்ன நினைக்கிற?’ என்ற முகபாவம் அது.

 

“அது தானே பார்த்தேன்… நீயாது சும்மா போறதாவது…? யாருக்கோ அநியாயம் நடந்தாலே பொங்கி எழுவ… அதுவும் உன் ஆளுக்கே… கேட்கணுமா” அவன் இடியெனச் சிரிக்க இவனையும் சிரிப்பு தொற்றிக்கொண்டது.

 

“அப்போ நான் அவள அப்படி எல்லாம் நினைக்கக் கூட இல்ல டா. பதினாறு.. பதினேழு வயசு பொண்ணு.. எண்ணம் அப்போ.. அந்த நிமிஷம், அப்படி எல்லாம் போகல. ஆனா ரொம்ப ஈர்த்தா… என்னை அறியாமலே உள்ள போயிருந்தா… எனக்கு அப்போ தெரியல. ஆர்வமா பார்க்கிறதா நினைச்சு தான் பார்த்தேன். அவ சேட்டை எல்லாம் ரொம்ப ரசிக்க வைக்கும். நல்ல குறும்பு.. ஆனா யாரையும் அந்த குறும்பு காயப்படுத்தாது. அன்னைக்கு பயந்து போன ரெண்டு குட்டி பொண்ணுங்க மட்டும் தான் பார்த்தேன்.

 

படிப்பு சொல்லித் தர ஆசிரியருக்கும் ஒரு கடமை இருக்கு… படிப்போட சேர்த்து பிள்ளைங்களுக்கு நல்லது சொல்லித்தரணும். நல்லது செஞ்சா கூப்பிட்டு பாராட்டணும். இப்படி காரணமே இல்லாம பசங்களை பனிஷ் பண்றது தப்பு!

 

அவர் மேல மரியாதை தான் வரணும் பயம் இல்ல. மரியாதை அதுவா வராது. அது அவங்க அவங்க நடத்தையை பொறுத்தது. ஏதோ அவருக்குத் தான் எல்லா அதிகாரமும் இருக்க மாதிரி.. கேட்க ஆள் இல்லங்கிற மிதப்பில நினைச்சதெல்லாம் பனிஷ்மென்ட்டுன்னு செய்யக் கூடாது. எல்லாருக்குமே ஒரு வரம்பு இருக்கு. அந்த ஆள் அதை மீறிட்டான். அவன் மருந்த அவனுக்கே ஊத்திக் கொடுக்க தோணிச்சு அவ்வளவு தான்!”

 

அன்று பெண்கள் இருவரும் பள்ளி சேரும் முன் ஏதோ மாயம் நடந்திருந்தது. அன்றிலிருந்து பிள்ளைகளை வாய் வார்த்தையால் கண்டிப்பதோடு நிறுத்திக் கொண்டார், கணக்கு வாத்தியார். அவர் இஷ்டப்பட்ட இடத்தில் கிள்ளுவதை மறந்தே போனார். அதுவும் பெண் பிள்ளைகளை கிள்ளுவதோ.. அடிப்பதோ.. திருகுவதோ.. இல்லை என்பது தனிக் கதை!

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!