Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ10_2 – செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  10_2

 

முரடனைப் பார்த்தவள் கை தன்னால் கன்னத்தைப் பிடிக்க, வீங்கியிருந்த கன்னம் இவனால் தான் என்பது மூர்த்திக்கு உரைக்கப்படாமலே விளங்கிற்று.

 



Advertisement

“இவன் தான் உன்னை அடிச்சதா?”

 

“ம்ம்..” என்று தலையை மேலும் கீழும் ஆட்டியவள் எதிரில் நின்றிருந்தவனை பார்த்துக்கொண்டே, “இன்னைக்கு மட்டும் இல்ல.. எப்பொவும் இவன் என்னை ரொம்ப அடிப்பான். வலிக்க வலிக்க அடிச்சுட்டே இருப்பான். வேண்டாம் சொன்னா கூட அடிப்பான்..” கோபமாய் புகார் வாசித்தாள்.

Advertisement

 

Advertisement

‘இவனையும் அடியேன்’ என்ற பார்வை.

 

வாங்கியதை வட்டியும் முதலுமாய் திருப்பிக் கொடுக்க ஆசை. அவளால் முடியாவிட்டால் என்ன? மூர்த்தி செய்வான் என்ற நம்பிக்கை.

Advertisement

 

அவள் எதிர்பார்த்ததை விட மூர்த்தி பலசாலியாக இருந்தான். மூர்த்தி நல்ல உயரம்.. உயரத்திற்கேற்ற முறுக்கேற்றியே உடல். வந்து நின்றவன் பீம்பாய். என்னத்தை தின்பானோ? தின்று தின்றே உடலை காண்டாமிருகம் போல் நன்கு வளர்த்து வைத்திருந்தான்.

 

கடினமான நிமிடங்கள் இருவருக்கும். நல்ல தரமான சண்டை. அவன் இடையில் கத்தி இருக்கும் என்று இவள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதெல்லாம் மூர்த்தியை நிறுத்தவில்லை.

 

பின் வாசல் தாண்டி இருவரும் சென்றுவிட, அவள் அரியணையில் காலை கட்டிக்கொண்டு அமர்ந்துகொண்டாள். அவனுக்கு பலம் இருந்தது. ஆனால் சண்டையிடும் நாசுக்கு தெரியவில்லை. மூர்த்திக்கு எங்கு எப்படித் தட்டவேண்டும் என்ற வித்தை தெரிந்திருந்தது. இல்லையென்றால் அவ்வளவு பெரிய பயில்வானை எல்லாம் வீழ்த்த முடியுமா? அவன் வாங்குவதை அமைதியாய் பார்த்தாள். எத்தனை மூர்க்கமாய் அவளை அடித்திருப்பான். அவள் ரத்தத்தையே விழுங்க வைத்தவனாயிற்றே..

 

தன்னை காக்க ஓடினாள் என்ற குற்றத்திற்காக அவள் பாதத்தை அடித்தே கிழித்தானே… கண் குளமாகப் பார்த்தே அமர்ந்திருந்தாள். ‘வாங்கு… வாங்கு… அப்படியே அடிவாங்கியே செத்து போ..’ மனம் குமுறியது.

 

கையளவு வாத்து குஞ்சுக்காய் பரிதவித்தவளா இவள்? மென்மை மனம் எங்குப் போனதோ? அனிச்சம் மலர் அதன் தன்மையை இழந்திருந்தது. கோமல் என்றால் மென்மை என்று அர்த்தமாம். ஆனால் இனி அவளுக்கும் அந்த பெயருக்கும் சம்பந்தம் இல்லை போலும்.

 

 

[the_ad id=”6605″]

 

‘இப்படி தானே உன்னிடம் அடி வாங்கிய எங்களுக்கும் வலித்திருக்கும்! வலி என்றால் என்ன என்பதை நீயும் ருசி பார்.’ மனம் கொக்கரித்தது.

 

அவன் இரத்தம்.. அவன் ஓலம்… அவன் கண்ணீர்.. அவன் கெஞ்சல் எதுவுமே அவளை அசைக்கவில்லை. கண் கொட்டாமல் பார்த்து அமர்ந்திருந்தாள்.

 

இனி இவன் ஒரு குழந்தையையும் அடிக்கவே கூடாது. அது மட்டும் தான் அவள் மனம் முழுவதும்.

 

இரண்டு மூன்று முறை மூர்த்தி இவளைத் திரும்பிப் பார்த்துவிட்டான்.. நிறுத்த சொல்லுவாளென்று. நிற்க முடியாமல் கீழே கிடப்பவனை எத்தனை முறை தான் தூக்கி நிறுத்தி அடிப்பது? அவள் கண் கொட்டாமல் அடி வாங்குபவனைப் பார்த்து அமர்ந்திருந்தாள்.

 

உயிர் மட்டும் இருக்க.. மூர்த்தியின் பாதம் அவன் நெஞ்சில் மோத.. அவன், துளசியின் காலில் வந்து விழுந்தான். சாகும் வரை இனி பிறர் கை பார்த்து வாழ வேண்டியது தான் அவனுக்கு விதிக்கப்பட்டது.

 

அவள் முகத்தில் கொஞ்சம் கூட கலக்கமில்லை. கீழே கிடந்தவனை எந்த உணர்வுமின்றி பார்த்து நின்றாள். இவள், மூர்த்திக்கு புதிது!

 

வியர்வை வழிய.. மூச்சு வாங்க… துளசி அருகில் வந்தவன், “கோபம் போச்சா?” என்றான். கத்தி மூர்த்தியை ஆங்காங்கே கிழித்திருந்தது. காயம் ஆழமில்லை என்றாலும் வெள்ளை சட்டை ஆங்காங்கே கிழிந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அவளுக்காகவா இது? ‘அவன் துளசிக்காக’ உயிரையும் கொடுப்பானே.. இது எம்மாத்திரம்!

 

கிழிந்த மார்பில் இரத்தம் கசிய, அவள் கண்ணும் கையும் அங்கு தான் சென்றது.

 

“ரத்தம்..” என்றாள், குரல் பிசிறியது.

 

கலங்கி நின்றிருந்தவள் கையை சட்டை ஓரத்தில் துடைத்து விட்டவனுக்கு அது ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. கவனம் முழுவதும் அவள் மேல் தான். அவள் உள்காயம் புரிந்தபின் அது தான் அவனுக்கு முதன்மையாய் போனது.

 

“காயம் ஆழமில்ல… நீ சொல்லு, உன் கோபம் போச்சா?” என்று அவள் பதிலுக்காகக் காத்து நின்றான்.

 

உள்ளே கிடப்பவன் இவளுக்காகச் சிந்திய கண்ணீர் நினைவில் வந்தது. எப்படி எல்லாம் தேனாய் பேசினான். இவனைப் போல் தன் மேல் பாசம் காட்ட ஒருவராலும் முடியது என்று நினைக்கவைத்தானே… இவள் மனம் வருந்தி நின்ற வேளை கண்ணீர் எல்லாம் சிந்தினானே..?

 

“என்ன அவனுக்கு குடுத்தது போதாதா?” மூர்த்தி அவள் முகம் பார்க்க..

 

ஏனோ இருவரும் இத்தனை அடி வாங்கிய பின்னும் அவள் மனம் அமைதியடையவே இல்லை. அவள் வேதனையின் ஆழம் அதிகம் என்பதாலா? பத்து வயது சிறுமியைக் கதற கதற எவனோ ஒருவன் தூக்கிச் சென்றது நினைவு வந்ததாலா? எட்டு வயதுக் குழந்தை இந்த நிமிடம் யாருடனோ போராடுமே அதை நினைத்தா…

 

இது எல்லாம் முடிந்த கதை! இனி மேலும் இவனை விட்டால் இது தொடர் கதையாய் போகும் என்பது மட்டும் தான் அவள் மனதில். முடிந்ததிற்காய் மூர்த்தி அடித்து விட்டான் தான். இருந்தும் கோபம் அடங்கவில்லையே..

 

‘இல்லை’ என்பது போல் தலை அசைத்தாள்.

 

“என்ன பண்ணினா உன் கோபம் போகும்? நீயே பண்ணு. உன் வெறி தீர… கோபம் தீர.. எரிச்சல் தீர.. என்ன வேணும்னாலும் பண்ணு. நான் இருக்கேன்… பார்த்துக்கறேன். இங்க இருந்து போன பிறகு இந்த இடத்த பத்தி நீ யோசிக்கவே கூடாது. அதுக்கு என்ன வேணும்னாலும் பண்ணு. இவனுங்கள இங்கேயே உயிரோட புதைக்கணுமா சொல்லு… புதைச்சிடலாம்!”

 

தடியனிடம் உணர்வில்லை. இனி ஆயுசுக்கும் நடமாட மாட்டன் என்பது உறுதி!

 

உள்ளே கிடப்பவன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறான். அவன் வாழத் தகுதியானவன் தானா? என்பது போல் யோசித்து நின்றாள்.

 

 

[the_ad id=”6605″]

 

முயன்று அவள் அரியணையைத் தூக்கினாள். பார்த்து நின்றவன் முகத்தில் ஆச்சரியமும்.. பெருமையும்! அத்தனை பெரிய பாறையைத் தூக்கியே விட்டாள் பெண். அடி மேல் அடி எடுத்து இருபது அடி நடந்தும் விட்டாள்.

 

மூர்த்தி நடப்பதை பார்த்துக்கொண்டே கால் மேல் கால் போட்டு அமர்ந்துக் கொண்டான். என்ன வேண்டுமானாலும் செய் என்று விட்டுவிட்டான். கொன்றாலும் பழியை ஏற்றுக் கொள்ள அவன் தயார் தான்.

 

“டேய்.. மூர்த்தி… உனக்கு வேண்டியது துளசி. கூட்டிட்டு கிளம்பு. நீ போனதும் எங்காளுங்க நடக்க வேண்டியதை பார்த்துப்பாங்க! உன் கோபம் அடங்க இந்த நாய மிதி. ஆனா உயிர மட்டும் எடுத்திடாத. எனக்கு விசாரிக்க அவன் வேணும். இப்போ லீவ்ல இருக்கேன். நீ பாட்டுக்கு கோவத்தில கொன்னுடாத.. கேஸ் ஆகிட்டா பிரச்சினை. உயிர மட்டும் விட்டு வை… வேணுங்கிற விஷயத்த வாங்கிட்டு நானே ரெண்டு வாரம் கழிச்சு இவன கவனிச்சுக்கிறேன்.. கல்யாண மாப்பிள்ளை டா.. தாலி கட்ட நான் இருக்கணும். செத்தவன் கேச மூடி மறைக்கச் சுத்த விட்டுடாத!” சத்யன் சொல்லி தான் அனுப்பினான். ஆனால் துளசி? அவள் உணர்வு? அவள் வலியில் வடிகாலை அவன் அடைக்க விரும்பவில்லை. ஆவது ஆகட்டும் என்று அமர்ந்திருந்தான். அவள் நிம்மதிக்காக அவன் ஆயுசையும் சிறைசாலையில் கழிக்கத் தயார் தான்!

 

கீழே கிடந்த கௌரவிடம் வந்தவள், காலால் அவனைத் தட்டி எழுப்பினாள்.

 

“கௌரவ்..” என்றாள்

 

பெரும் பாடுபட்டு கண் விழித்துப் பார்த்தான்.. அசைய முடியவில்லை அவனால்.

 

செத்த பாம்பை அவனுக்கு மட்டும் தான் அடிக்க தெரியுமா என்ன? “நான் ரொம்ப துடிச்சேன் கௌரவ். ஒவ்வொரு தரமும் நெருப்பில குளிச்சேன்.. எல்லாம் உன்னால. உன் பேராசைக்காக! உனக்கு உயிரோட உணர்வு புரியல! நீ வாழ தகுதியானவனே இல்ல கௌரவ். உன்னை சாக சொன்னேன் இல்ல… என் மனசை மாத்திட்டேன் கௌரவ்.” என்றாள்.

 

ஒரே மிதி… அப்படியே மிதித்து அவனைத் தரையோடு புதைத்துவிடும் ரௌத்திரம், அமர்ந்திருந்தவனுக்கு. ‘அவன் தலையில போடாமல் என்ன பேச்சு வேண்டியிருக்கு.. இவ்வளவு நேரம் பாறையை தூக்கி நின்னா இவளுக்கு கை வலிக்காதா?’

 

கீழே கிடந்தவனுக்கு என்ன நடக்கிறது என்று புரியும் முன்னே.. ‘சத்க்’ என்று இறங்கியது அந்த பாறை அவன் இடுப்பில்.

 

அவன் அலறல் சத்தம் அவளுக்குச் சங்கீதமாய் ஒலிக்க.. நிதானமாய் அவள் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த கருப்பு மணி மாலை சிதற அதைப் பிடுங்கி அவன் முகத்தில் விட்டெறிந்தவள் “எப்டி… இது உங்க அம்மாதா? பாக்கும் போது, உன் அம்மாட்ட நீயே குடுத்துடு!”

 

 

[the_ad id=”6605″]

 

“ஆனா இப்போதைக்கு நீ சாகமாட்ட… அதே சமயம் உன்னால நிம்மதியா வாழவும் முடியாது. உன்னால நாசமான கடைசி பொண்ணு நான் தாங்கிற நிம்மதியோட போறேன்.

 

வலிக்குதா கௌரவ்? எனக்கும் வலிச்சுது. ஒரு ஒரு முறையும் துடிச்சேன். என்னை மாதிரி எத்தன பேர டா துடிக்க வச்ச? உன் பேராசை உன்ன எங்க கொண்டு வந்திருக்கு பார்த்தியா? நீ சம்பாரிச்ச பணம்..? அத வைத்திய செலவுக்கு வச்சிக்கோ! அப்புறம்… உல்லாசம்? அதை இனி மேல் நினைச்சு நினைச்சு செத்துப் போ.. நல்லவன் வேஷம் ரொம்ப நாள் போட முடியாது.  அதையும் மறந்திடாத!

 

ஆங்.. உன் வலிக்கு நடுவில என்னை மறந்திடாத. நீ அழிச்சதா நினைச்ச என் வாழ்க்கையை நான் அனுபவிச்சு வாழ தான் போறேன்.

 

என்ன..? உன்னால அத பாக்க வர தான் முடியாது. செத்து போயிடாத.. நிறைய நாள் நீ அவஸ்தையோட வாழணும். நீ செஞ்ச தப்ப நினைச்சு வருந்திற வரைக்கும் நீ சாகவே கூடாது.

 

என்னைப் பொறுத்த வரை இன்னையோட நீ செத்துட்ட. என் வாழ்க்கையில நீ இல்லவே இல்ல!

 

பழிவாங்கறேன்னு சொல்லிக்கிட்டு இந்த ஜென்மத்தில நொண்டிகிட்டே என்னைத் தேடி மட்டும் வந்திடவே வந்திடாத! சத்தியமா குத்தி கிழிச்சு கொன்னுடுவேன்!”

 

திரும்பிப் பார்க்காமல் ஒரு மாற்றுத் துணியும் மதிப்பெண் தாளும் அடங்கிய அவள் பையை எடுத்துக்கொண்டு அந்த வீட்டு வாசலை மூர்த்தியோடு தாண்டினாள்.

 

 

 

பெண்ணை பூவென்றான்

புயலென்றான், களங்கமில்லா நிலவென்றான்

ஏற்றிவைத்தான் உச்சாணிக் கொம்பில்

சம உரிமை என்றான்

ஆணில் சரி பாதி பெண் என்றான்.

எல்லாம் ஏட்டில் எழுத்தாய் நிறுத்திக்கொண்டான்.

 

ஓடும் பேருந்தில் மலரைக் கூட்டாளியோடு கசக்கினான்

ஓடி விளையாடிய மலராத மொட்டை –

கடத்தி சென்று விருப்பம் போல் கூட்டமாய் சீரழித்தான்

பறிக்கப் பட்ட மலர்கள் கேட்பாரில்லாமல் வதங்கி மாண்டு போனது.

 

நேற்று தானே அடுக்களை விட்டு வெளி வந்தோம்?

மீண்டும் அடுக்களையில் போட்டு பூட்ட மோகம் கொண்டாயோ..

விட்டு விடு எங்களை!

பாரதியின் புதுமை பெண்ணாய் மாற ஆசை இல்லை

அப்பாவின் செல்ல மகளாய் – தெருவில் விளையாட ஆசை

அண்ணனின் தங்கையாய் – கல்லூரி செல்ல ஆசை

கணவனுக்குத்  துணையாய் – குடும்ப பாரத்தைச் சுமக்க ஆசை

கூண்டில் அடைபடாத கிளியாய் பறக்க ஆசை

 

இதற்குக் கூட வழி இல்லாமல்

உன் சிற்றின்பத்திற்காக எங்களை மீண்டும் அடுக்களையில் புதைத்துவிடாதே!

-இப்படிக்குப் பல கோமல்கள்.

 

பின் குறிப்பு:

பெண்ணை மதிக்கும் உருவம் தெரியாத அண்ணனுக்கு..

என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு புதரில் என் கதறல் கேட்டால்.. வந்து எட்டி பார். என்னைக் காப்பாற்ற முயற்சி செய். கண்ணைக் கட்டிக்கொண்டு காது கேளாதவன் போல் போகாதே… யாருக்குத் தெரியும் நான் உன் உடன் பிறப்பாகக் கூட இருக்கலாம்.

 

….

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!