Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ13 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..

கொல்லை துளசி எல்லை கடந்தால் 13

 

 

“கடைக்கு போயிட்டு வா மிட்டாய் தரேன்” என்று காரியம் சாதித்த காலம் மாறி “சொன்னத செய் இல்ல செல் ஃபோன் கிடையாது” என்றாகிவிட்ட தலைமுறை இது.



Advertisement

 

பல்லில்லா குழந்தை முதல் பல் போன கிழம் வரையிலுமே காலையில் கண் விழிப்பது கைப்பேசியில் தான். அதில் அப்படி என்ன தான் இருக்குமோ?

 

Advertisement

மற்றவருக்கு எப்படியோ… அவள் கண் விழிப்பது கைப்பேசியில் சிரித்துக் கொண்டிருக்கும் அவன் பிம்பத்தில் தான்.

Advertisement

 

இன்று நேற்று இல்லை, அவன் கைப்பேசி எண்ணை அவள் கைப்பேசியில் பதிந்த அன்றிலிருந்தே இது தான் அலர்விழியின் வழமை. காலை மாலை இரவு என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனைப் பார்த்துவிட வேண்டும் பெண்ணிற்கு.

 

Advertisement

ஒற்றை ஸ்மைலி மட்டுமே இதுவரை பகிரப்பட்டிருந்தது, அவள் திறந்து வைத்திருந்த வாட்ஸஆப் திரையில்.

 

வாட்ஸ்ஆப் சுய-விவர திரைக்குள் போக அங்கு எபி நண்பர்களோடு சிரித்துக் கொண்டிருந்தான்.

 

எண்ணி பத்தே நாட்கள் தான் அவன் இங்கிருப்பான். அதன் பின்? நீண்ட மூச்சுக் காற்று வெளிவந்தது அலர்விழியிடமிருந்து.

 

இன்று அவனிடம் பேச வேண்டும் போல் இருக்க.. ‘மனோ..’ என்று எழுத ஆரம்பித்து பின் அதை அழித்து, ‘ஹாய்’ என்று எழுதி பின் அதையும் அழித்துவிட்டு மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்து, அழித்து, என்று தவிப்பும் தயக்கமுமாக பத்து நிமிடங்கள் ஓடிப் போனது.

 

அதே கணினி மையத்தில் நான்கு பேரோடு காரசாரமாகப் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தவனுக்குக் கிடைத்தது பத்து நிமிட இடைவெளி.

 

ஏனோ அவனுக்கும் காலையிலிருந்தே விழி தான் அவன் எண்ணம் முழுவதும். இன்று எஸ்தர் மையம் வரமுடியாமல் போகவே, இதோ காபி அருந்தும் இவர்களைப் பார்த்தே ஆகவேண்டும் என்பதால் இங்கு வந்திருக்கிறான் வெகு நாட்களுக்குப் பிறகு.

 

அலர்விழி கணினி மையத்திற்குள் நுழையும் முன்னே அவளை பார்த்துவிட்டான் மாடி ஜன்னல் வழியே. ஒரே ஒரு ‘ஹாய்’ கூறலாம் என்றால் தடியன்கள் விட்டால் தானே.

 

கைப்பேசியை எடுத்தவன், வாட்ஸ்ஆப் மூலம் அலர்விழிக்கு ஒரு ‘ஹாய்’ தட்டி விடும் எண்ணத்தில் அவள் திரையைத் திறக்க, ‘விழி டைப்பிங்’ என்றது! தரையிலிருந்து ஒரு அடி மேலே பறக்கும் உணர்வு.

 

மீண்டும் பேச்சு வார்த்தை ஆரம்பமாகியது. அவ்வப்போது இவனும் திரையைப் பார்ப்பதும் அவர்களோடு பேசுவதுமாக சென்றது.

 

‘விழி டைப்பிங்…’ ‘விழி ஆன்லைன்’ இதுவே கடந்த பத்து நிமிடங்களாக மாறி மாறி அவன் கண்களில் விழுந்து கொண்டிருந்ததே தவிர.. ஒரு தகவலும் வந்தபாடில்லை!

 

‘ஒரு மெசேஜ் சைப் பண்ண இவ்வளவு நேரமா உனக்கு?’ அலுத்துக் கொண்டவன் பொறுமையும் ஒரு கட்டத்தில் கரைந்து போயிருந்தது.

 

‘ஒரு மெசேஜ் அடிக்க துப்பில்ல உனக்கு எல்லாம் எதுக்கு லவ்? போடி..’ என்ற அலுப்பு அலர்விழிக்கு எழ, கைப்பேசியை அணைக்க முற்படவும் பொறுமை இழந்தவனிடத்திலிருந்து அழைப்பு வந்தது.

 

‘ஐயையோ… கால் பண்ணிடேனா..’ என்று தான் முதலில் நினைத்தாள்.

 

அவள் அழைப்பை எடுக்கவும், அவன் பேச்சும் அப்படி தான் இருந்தது.

 

“சொல்லு விழி”, என்றான் எடுத்ததும்.

 

என்னவென்று சொல்லுவாள்?

 

‘உங்கள ரொம்ப மிஸ் பண்றேன்’ என்று ஆரம்பித்து, கொட்ட நிரம்ப உண்டு தான். ஆனால் முடியாது! நிறைய இருந்தும் ஒன்றுமில்லாத நிலை!

 

“விழி?” – கேள்வியாய் அவன்

 

“ம்ம்” – பதிலாய் அவள்

 

“என்ன விழி?” – ஆர்வமாய் அவன்

 

“என்ன மனோ?” – ஊமையாய் அவள்

 

அதன் பின் இரண்டு நிமிட மிக நீளமான மௌனம்.

 

அவன் தான், “படிப்பு எப்டி போகுது?” என்று சில பொதுவான கேள்விகள் மூலம் மௌனம் களைந்தான்.

 

“விழி..”

 

“சொல்லுங்க மனோ..”

 

“உனக்கு கோர்ஸ் முடியற டைம் இல்ல..?”

 

“ம்ம்”

 

“அம்மா உன் ஃப்ரெண்டு தானே… அம்மாட்ட பேசு. இங்க ரியல் டைம் டெவல்மென்ட் இருக்கு. அம்மாட்ட உனக்கு இங்க பார்ட் டைம் வேலை வேணும்ன்னு கேளு. உன் சாமர்த்தியத்துக்கு வேலை கிடைக்கும். சேலரி, அலொவன்ஸ் பத்தி எல்லாம் யோசிக்காத. என்ன கொடுத்தாலும் போதும் சொல்லிடு! எக்ஸ்பீரியன்ஸ் கெயின் பண்ணிக்கோ. அப்போ தான் நெக்ஸ்ட் இயர் படிப்பு முடியவும் சென்டர்ல இருந்து உன்ன ப்ளேஸ் பண்ணும் போது நல்ல கம்பனில ஈசியா கிடைக்கும்.”

 

“ம்ம்..”

 

“என்ன ம்ம்ம்…? அம்மாட்ட பேசு.”

 

“பேசறேன் மனோ”

 

“ம்ம்..”

 

“மனோ..”

 

“சொல்லு விழி..”

 

“இன்னைக்கு ஃப்ரியா..”, கேட்டு முடிக்கும் முன் தொண்டை வரை வறண்டு போனது.

 

அன்றைய திடீர் சந்திப்பிற்கு பின் இருமுறை கணினி மையத்திற்கு வந்தவன் அவளைத் தேடி வந்து பார்த்தான். எண்ணி எண்ணிப் பேசுவான். ஆனால் இதயத்தை நிறைத்துவிடுவான். வெட்டிப் பேச்சு பேசத் தெரியாதா இல்லை கூடாது என்ற திடமா தெரியவில்லை.. இதுவரை இப்படி அர்த்தமான பேச்சுகள் மட்டும் தான் அவனிடமிருந்து.

 

அலர்விழிக்கு என்னவெல்லாமோ பேசவேண்டும். இவள் இடை வரை துள்ளிக் குதிக்கும் ஜான்சன் பற்றி… அவள் எம்பிக் குதித்து தொடர்ந்து ஆறு முறை கூடைக்குள் போட்ட பந்தைப் பற்றி.. இதழ் விரிந்து மணம் பரப்பும் வெள்ளை நிற மல்லி பற்றி… என்றும் வாடாமல் மல்லி பெயர் கொண்டு வாசமில்லாமல் பூத்து நிற்கும் அழகிய வாடாமல்லி பற்றி… நேற்று இரவு படித்த புத்தகம் பற்றி… இப்படி அலர்விழிக்கு  சுவைத்தது, கண்டு களித்தது, தொட்டு உணர்ந்தது,  மனதை வருடியது என்று எல்லாவற்றையும் பற்றிப் பேசவேண்டும் மனோ கைப்பிடித்து… தோள் சாய்ந்து!

 

ஆனால் இது எதுவுமே மனதில் இல்லாதது போல் எட்ட நின்று.. ‘நீ நலமா நண்பா? நான் நலமே!’ என்று பேசவேண்டும்!

 

மனம் முழுவதும் காதலை ஏந்திக் கொண்டு ஒன்றுமில்லாதது போல் பேசுவது எவ்வளவு பெரிய கொடுமை என்று அலர்விழியைக் கேட்டால் தெரியும். ஏன் அவனுக்கு அப்படி ஒன்றும் இல்லையா? இல்லை.. அவன் கனவின் மீதான மோகம் அதையும் தாண்டியதா? இருக்கலாம். அலர்விழியிடம் பதில் இல்லை. அவனிடம் அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நிலைமை இல்லை.

 

“உனக்கு லேப் இருக்குமே விழி”

 

இன்று இல்லை என்றாலும் வார தினங்களில் வருவாள் என்று அவனுக்குத் தெரியுமே… இருந்தும் இந்த கேள்வி தேவையா?

 

செக்கு மாடு ஊர் போய்ச் சேராது என்ற உண்மை தெரிந்ததால் தள்ளி நிற்கிறான் போலும். அவனை ஏன் படுத்திக்கொண்டு? விரக்தியான மனநிலை. “வைக்கிறேன் மனோ..”, பதில் எதிர்பார்க்காமல் வைத்துவிட்டாள்.

 

கரைசேரா தோணியில் பயணிப்பவளுக்கு எதற்கு இந்த வீண் ஆசைகள் என்று அவளுக்கே தெரியவில்லை.

 

உள்ளங்கைகளில் முகம் புதைத்து மேசை மேல் முழங்கை ஊன்றி அமர்ந்திருந்தவளுக்கு வாழ்க்கை மேல் வெறுப்பு வர ஆரம்பித்தது. இந்த காதல் எல்லாம் ஒன்று சேர தகுதி இல்லாதவர்களுக்கு ஏன் வரவேண்டும்? கடுப்பாய் வந்தது.

 

மீண்டுமாக எபியின் பிம்பத்தைப் பார்த்தாள். மெல்ல அவன் முகம் வருட கை நடுங்கியது. இப்படி தன்னை தள்ளி நிறுத்தும் ஒருவன் மேல் பைத்தியமாய் திரிவது சரியா தவறா என்று பகுத்தறிய முடியவில்லை.

 

‘உனக்கு என்னைப் பிடிக்கும் தானே மனோ..’ மனம் பாறாங்கல்லாய் கனத்தது. ‘வேண்டாம் அலர்.. அவனுக்கு விருப்பம் இல்லை. விட்டு விடு..’. விடச் சொல்லும் அறிவு அது எப்படி என்று மட்டும் கூறவில்லை. அதனால் மனம் அவனை அசை போடுவதை நிறுத்தவில்லை.

 

யாரிடமும் பகிரவும் முடியாமல் உள்ளுக்குள் புதைக்கவும் முடியாமல் அவள் தவிக்க… இரண்டாவது நிமிடம் பிம்பத்தின் அசல் அவள் முன் வந்து நின்றது.

 

“விழி..”

 

சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்க மனோ நின்றிருந்தான். அவன் இங்கிருப்பது அவளுக்குத் தெரியாதே… கீழ் தளத்திலிருந்து படி வழியே தாவி ஓடி ஐந்தாம் தளம் வந்திருந்தான். அதனால் மூச்சு வாங்கியது.

 

பிடிக்காமலா ஒருவன் விழிந்தடித்து ஓடி வருவான்? அவனுக்கும் அவள் மேல் கொள்ளை பிரியம் என்ற எண்ணம் வலுத்தது.

 

அதற்குள் இவன் எப்படி இங்கே? அவள் கைப்பேசியைப் பார்த்திருப்பானா? அவள், அவன் முகத்தை வருடிக் கொண்டிருந்ததை? உள்ளுக்குள் படபடப்பு.

 

அவன் முகத்தைப் பார்த்துக் கண்டுபிடிக்க முடிந்தால் எதை எதையோ கண்டு பிடித்திருப்பாளே. அவனாக உணர்த்தினால் உண்டு! இன்று அவன் கண்டுகொண்டானா இல்லையா என்று அவள் சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டியது தான்!

 

சுழல்கதிரை ஒன்றை இழுத்து போட்டு அவள் அருகில் அமர்ந்தான்.

 

“சொல்லு விழி.. என்னாச்சு?”

 

என்ன சொல்ல? விழித்தாள்.

 

“ஏதாவது சந்தேகமா? சொல்லித்தரணுமா?”

 

‘உன் ஆர்வத்திற்கு அளவில்லையா?’ இல்லை என்பது போல் தலையசைத்தாள்.

 

அவனுக்கு அவள் ஏக்கம் புரிந்திருக்குமோ? அவளும் கல் போல் தான் முகத்தை வைக்க நினைக்கிறாள். ஆனால் கண்ணாடி முன் நின்றால் அது சொல்லும் நீ நினைத்ததைச் சாதிக்கவில்லை என்று!

 

“உன்னால லேப் வர்க்க அப்புறம் பண்ண முடியும்னா ஒரு மணிக்கா சாப்பிட போலாமா? நான் ஆன்சைட் போறதுக்கு ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் ட்ரீட் கொடுத்தாச்சு. நீ தான் பாக்கி… என்ன சொல்ற?”

 

அவனையே பார்க்க… “மௌனம் சம்மதம். எனக்கு இப்போ அவசரமா ஒரு வெளி வேலை இருக்கு. ஒரு மணி நேரத்தில எங்க மீட் பண்றதுன்னு மெசேஜ் பண்றேன். வந்திடு!”

 

அவன் கிளம்பவும், “மனோ..”, அவள் அழைக்க அவன் நின்றான்.

 

“என்ன விழி?”, அவளோடு அமர்ந்து பேச ஆசை தான். இன்று ஏனோ அவனுக்கும் அவள் கை பிடித்து, ‘நாலு மாசம் தானே வந்திடுவேன்…’ என்று கூற ஆசை எழுந்தது. ஆனால் வருவானா? வரமுடியுமா? தெரியாதே! ஆன்-சைட் வேலை, என்று சொன்ன நேரத்தில் முடிந்தது? பொய்யான நம்பிக்கை கொடுக்க மனம் வரவில்லை.

 

அதனால், ‘என்ன விழி’யோடு நிறுத்திக் கொண்டான்.

 

“நீங்க வேலையை பாருங்க மனோ. அது தான் பத்து நாள் இருக்கே. நீங்க ஃப்ரீயா இருக்கும் போது சாவகாசமா பேசலாம்”, என்றாள் அவன் அலைச்சல் பாக்க சகிக்காதவளாய்.

 

“நாளைக்கு பேங்ளூர் ஆஃபீஸ் போகணும் விழி. ஒரு வாரம் அங்க தான். அப்புறம் பேக்கிங் அது இதுன்னு லாஸ்ட் மினிட் ஜாப் வந்து நிக்கும்! சோ இன்னைக்கு தான் முடியும்!”

 

“ஓ..” இவனோடு எந்த சந்தில் நுழைய நினைத்தாலும் அது முட்டுச் சந்தாகத்தான் இருக்கும் போலும்!

 

“பரவால மனோ.. நீங்க உங்க வேலையை பாருங்க! டைம் கிடைக்கும் போது ஃபோன் போடுங்க போதும்.”

 

புன்னகைத்தவன், “மெசேஜ் பண்றேன்… ஏமாத்திடாம வந்து சேரு! தனியா தொங்கல்ல என்னை விட்டுடாத”, கூறிவிட்டு பறந்தான்.

 

நீளமான பெருமூச்சோடு, விட்ட வேலையைத் தொடர்ந்தாள். எது எப்படியோ படிப்பு கெட்டுப் போகாமல் பார்த்து கொண்டாள்.

 

அதுவும் அவனுக்கு..? அவள் மேல் இருக்கும் அக்கறையா இல்லை படிப்பின் மீது இருக்கும் மோகமா தெரியவில்லை.. அவளிடம் பேசினாலே ‘படிப்பு எப்டி போகுது?’ என்ற கேள்வியோடு நிற்காமல் அதில் அவள் நிலைப்பாடு எந்த அளவில் உள்ளது என்பது வரை தெரிந்த பின்னே விடுவான். சந்தேகங்கள் கேட்க ஊக்குவிக்கும் ஒரே ஜீவன் இவனாகத் தான் இருக்கும். ‘சந்தேகம் இருந்தா தயங்காம கேளு விழி’ என்று கேட்டு கேட்டுப் பாடத்தை விளக்கும் இவன் ஒரு தனி ரகம் தான் போலும்!

 

இவன் இடத்தில் வேறொருவன் இருந்திருந்தால், இவள் பார்க்கும் பார்வைக்கே இவளை, அவன் அம்மாவிற்கு மருமகள் ஆக்கியிருப்பான். இவனோ எதிர்காலம்.. கனவு.. என்று ஏதோ பிதற்றிக் கொண்டு, அவனும் கனவின் பின் ஓடி, அவளையும் புத்தகம் பின்னால் புதைத்துக் கொண்டிருக்கிறான்!

 

இவனிடம் மானம் போகாமல் இருக்கவேண்டும் என்றால் இவள் படித்தே ஆகவேண்டிய சூழல்! கணினிக்குள் புதைந்தாள்.

 

சரியாக ஒரு மணி நேரம் ஆகவும் அவள் கைப்பேசி சிணுங்கி அதில் தகவல் வந்துள்ளதை அறிவித்தது.

 

எங்கு எப்பொழுது வரவேண்டும் என்று தகவல் இருந்தது.

 

குழப்பங்களை ஒதுக்கி வைத்தவள், ரெஸ்ட் ரூம் சென்று கலைந்த கூந்தலைச் சரி செய்து, ஒப்பனையை மெருகேற்றி, என்றுமில்லா திருநாளாய் அணிந்திருந்த, கஞ்சி போட்டு விரைப்பாய் நின்றிருந்த, துப்பட்டாவை கொஞ்சம் கசக்கி இரு தோள்களிலுமாக போட்டு கிளம்பினாள்.

 

அவனை காண இன்னும் 45நிமிடங்கள் இருக்க, ஆட்டோ பிடித்தவள் நேரே சென்று இறங்கியது ஒரு நூலகத்தில்.

 

‘ஹோட்டல் கிட்ட வந்ததும் கால் போடுங்க’ என்று கூற நினைத்து எபி எண்ணிற்கு அழைத்தாள்.

 

அழைப்பு சென்று கொண்டிருந்தது. அவன் தான் எடுத்தபாடில்லை. எடுக்கும் நிலையைக் கடந்திருந்தான். அவன் வந்து கொண்டிருந்த சாலையில் அவ்வளவு நெரிசலில்லை. அவனும் மிதமான வேகத்தில் தான் வந்து கொண்டிருந்தான். ‘விழி காலிங்’ என்றதும் அவன் பார்வை ஒரு நொடி தான் சாலையை விட்டு நகர்ந்தது. அதற்குள் ‘க்ரீச்… க்ரீச்…’ என்று அவன் முன் பல வாகனங்கள் சட்டென்று வீதியில் நின்றுவிட, ஷண நேரத்தில் சுதாரித்தவன் சட்டென்று வாகனத்தை நிறுத்தியிருந்தான். ஆனால் பின்னால் வந்து கொண்டிருந்த பல்சர் இதை கவனிக்கவில்லை!

 

பல்சர் கேம்ரியை இடித்து சரிந்தது. ஒரு வருடமாகச் சின்ன சிராய்ப்பு கூட விழாமல் பொத்தி வைத்திருந்தவன் வண்டியின் பின் எதோ உடைந்து விழும் சத்தம்!

 

‘டெயில் லைட்ட போட்டுடானா?’ கண்ணு மண்ணு தெரியாத கோபம் என்பாரே அப்படி ஒரு கோபம் எபிக்கு. அவனை பொருத்தவரை அவன் வாகனத்திற்கு வலிக்கும் என்பது போல் தான் அதைப் பாவிப்பான்!

 

எபியின் கோபம் எல்லாம் நின்றிருந்தவனின் கையில் வழிந்த குருதியைக் காணும் வரை தான்.

 

இவனை பார்த்ததுமே… வலியில் நின்றிருந்தவன், “சாரி சார் ரொம்ப சாரி சார். என் மேல தான் தப்பு. கவனிக்கல. உடைஞ்சத நானே ஃபிக்ஸ் பண்ணி தரேன். சாரி சாரி”, இடது கையை வலக்கைக் கொண்டு பிடித்துக் கொண்டே கூற.

 

“அத இன்சூரன்ஸ் பாத்துக்கும்.. உங்க கைய பார்ப்போம்..”, என்று இரு வண்டிகளையும் அவனே ஓரம் கட்டி.. கை காயத்தைக் கழுவி முதலுதவி பெட்டியிலிருந்து மருந்திட்டான்.

 

“என்னை உங்களுக்குத் தெரியுமா?”, என்று இவன் தான் ஆரம்பித்தான். எங்கோ பார்த்த முகம். சட்டென்று நினைவில் வரவில்லை.

 

“இல்ல சார்”

 

“சார் வேண்டாம்… எபி-ன்னு ஃப்ரெண்ட்ஸ் கூப்பிடுவாங்க!”

 

சிலரை பார்த்ததும் பிடித்துவிடும். எபியும் அந்த ரகத்தைச் சேர்ந்தவன்.

 

“மாதவன்..” வலக் கையை நீட்டிய மாதவனுக்கு எபியை பிடித்துப் போனதில் அதிசயமில்லையே!

 

மாதவன் முகம் முழுவதும் வலியின் சாயல். விட்டுச் செல்ல மனமில்லை. நேரம் பார்த்தான், “வாங்க பக்கத்தில தானே ஹாஸ்பிட்டல் இருக்கு. கைய பார்த்துடுவோம்..” என்று வம்படியாக அழைத்துச் சென்றான்.

 

“வண்டி?” – எபி

 

“என் ஃப்ரெண்டுட்ட சொன்னா வந்திடுவான். பக்கத்தில தான் அவன் லேப் இருக்கு”, என்றவன் விஷ்வாவிற்கு அழைத்தான்.

 

ஒரே வயதென்பதால் பேசக் காரியங்கள் இருக்க.. சட்டென்று ஒரு பிடித்தம் தோழமையாக உருமாறிக் கொண்டிருந்தது.

 

வலிக்கு ஒரு ஊசியும், கையை சுற்றிக் கட்டும் போட்டுக் கொண்டு நெடுநாள் நண்பர்கள் போல் இருவரும் சிரித்துக் கொண்டே வெளி வரவும் விஷ்வா வந்திருந்தான்.

 

“டேய் மாது….” என்று விஷ்வா அழைத்துக் கொண்டே வரவும் தான் ‘மாதுண்ணா..’ பொரி தட்டியது எபிக்கு. விழியின் அண்ணன் இவன்! கணினி மையத்தில் ஓரிரு முறை பார்த்திருக்கிறான்! தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை!

 

கட்டிடத்தின் ஒரு பகுதியிலிருந்த  மருந்துக் கடைக்குள் அவர்கள் நுழையவும் எபி இருவரிடமும்  சொல்லிக் கொண்டு கிளம்ப, அவன் பார்வையில் விழுந்தாள் அலர்விழி.

 

சாலையின் நேர் எதிரே இருந்த நூலகம் முன் அவள் கை பிசைந்துக் கொண்டிருக்க.. அருகே ஒரு நெடியவன்.

 

நெடியவன் – டாக்டர் பிரவீன் குமார்! அருகிலிருந்த ஆஸ்பத்திரியிலிருந்து பத்து நிமிடம் முன் வெளியே வந்தவன் பார்வையில் சிக்கினாள் அலர்விழி!

 

“இல்ல ப்ளீஸ் நான் போய்கிறேன்.”, என்று அவள் நகரப் பாக்க, பிரவீன், “பசிக்கலன்னு சொல்லிட்ட. போகட்டும்.. வா நான் ஹாஸ்டல்ல ட்ராப் பண்றேன்..”, என்று அவள் கரம் பிடித்து இழுக்காத குறையாக அவள் முன் நின்றிருக்க.. ஏதேதோ கூறி ஓட தயாரானாள்.

 

‘இங்க என்ன பண்றா இவ? இவன் யாரு?’ என்ற நினைத்த எபி அறக்கப்பறக்க, வேகமாகச் செல்லும் வாகனங்களை கடந்து ஓடிவர அலர்விழியை அங்குக் காணவில்லை. பிரவீன் கைப்பேசியில் யாருடனோ பேச ஆரம்பிக்கவும்.. “எனக்கு டைம் ஆச்சு..”, என்று ஓடியே விட்டிருந்தாள்.

 

ஒரு சாலையை கடக்கும் நிமிட நேரத்தில் எங்குச் சென்றிருக்க முடியும்? இவன் யோசிக்க அருகிலிருந்த நூல் நிலையத்தின் மேல் பார்வை நிலைத்தது. எபி உள்ளே நுழையவும் நெடியவனும் அதனுள் நுழைந்து கொண்டிருந்தான்.

 

உள்ளிருந்து சத்தமில்லாமல் வெளியே வந்துக் கொண்டிருந்தவள் பிரவீனைப் பார்த்ததும் மீண்டும் உள்ளுக்குள் பதுங்கிக் கொண்டாள். ‘சாகடிக்கிறானே… நேரம் ஆச்சு.. போய் தொலையேன் டா. இருந்திருந்து இன்றைக்குத் தான் இவன் கண்ணுல பட்டு தொலையணுமா? போன்னு சொன்னா புரிஞ்சுக்காத மரஜென்மம்!’ மனதிற்குள் திட்டி தீர்த்தாள்.

 

உள்ளுக்குள் புலம்பிக் கொண்டே பதுங்கிக் கொண்டிருந்தவளின் துப்பட்டா ஏதோ ஆணியில் மாட்டி இழுபட, ‘மாட்டினியா?’ நினைத்துக் கொண்டே திரும்ப, ‘மனோ..?’ கண்கள் விரிய, ‘ஹப்பாடா’ என்ற முகபாவம் அவளிடம்.

 

“யாரவன்? எதுக்கு அவன பார்த்து ஒளியற?”

 

“ஷ்ஷ்ஷ் சத்தம் போடாதீங்க. வந்திட போறார்.. எப்படி என்னை கண்டுபிடிச்சீங்க?”, கிசுகிசுத்தாள்.

 

துப்பட்டாவை ஆணியிலிருந்து விடுவித்தவன்.. “இது தான் ‘நான் இங்க இருக்கேன்’ன்னு பறந்துகிட்டே நீ இருக்க இடத்தைக் காட்டுதே..”, எனவும் அதை வாரிச் சுருட்டி பைக்குள் திணித்துக் கொண்டவள், “மெதுவா பேசுங்க” என்றாள் அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில்.

 

கச்சிதமாய் அளவெடுத்துத் தைத்துப் போட்டிருந்த கமிசீல், கண்ணைப் பறித்து சித்தத்தைக் கலைக்கும், சிற்பமாய் தெரிந்தவளை ரசிக்கும் அவகாசம் கூட அவனுக்கு இல்லை.

 

“யாரவன்?”, இவனும் குனிந்து அவள் காதுக்குள் கிசுகிசுக்க..

 

“ஹலோ.. கொஞ்சம் தள்றீங்களா?”

 

எபி முதுகு பின்னாலிருந்து வந்த சத்தம் பிரவீனுடையதே!

 

பெண் வெலவெலத்துப் போனாள். இவன் நகர்ந்தால் அவன் இவளை கண்டுகொள்வானே.. யார் அவனிடம் மாட்டி கொள்வது? போதாக் குறைக்குத் துப்பட்டாவும் இல்லை. ‘இவன் வேற இம்சை காட்டேறி! செத்த அலர் நீ!’

 

உயரமான இரு நூல் அடுக்கங்களுக்கு இடையே ஒருவர் நகர்ந்தால் மற்றவர் நுழையும் இடம் தான் இருக்க, எபி நகர்ந்து இடம் தரவேண்டும் பிரவீன் நகர்ந்து போக!

 

எபியின் மார்புக்குள் தன்னை குறுக்கி மறைத்துக் கொண்டவள் காதில் மீண்டும் பிரவீன் சத்தம் நாராசமாய்.

 

“சார் உங்கள தான்.. தள்றீங்களா?”

 

நகர்ந்து விடக் கூடாதே.. எபியின் சட்டையைப் பொத்தானோடு இழுத்துப் பிடித்துக் கொண்டாள். எபியின் தலை தன்போல் அவளை நோக்கிச் சாய்ந்தது.

 

“ஹலோ.. சார்”, அவன் மூன்றாம் முறை கூப்பிட, பயத்தில் இவள் இடது கை சட்டையோடு எபியை தன் பக்கம் இழுக்க… வல கை விரல்கள் விலாவிற்கு பின்னிருந்த சட்டை பகுதியை இறுக்கிக் கொண்டிருந்தது. அவன் பரந்த மார்புக்குள் ஒடுங்கி நின்று கொண்டிருந்தவள் எபி நகர்ந்து விடாமல் பிடித்துக் கொண்டாள்.

 

பின்னால் இருந்து பார்ப்பவனுக்கு இருவர் சந்தில் நின்று கொண்டு வேண்டாத வேலை பார்ப்பது போன்ற பிம்பம்.

 

எபி, “என்ன விழி பண்ற?”, மீண்டும் கிசுகிசுக்க..

 

அவள் கைகள் இரண்டும் இறுக.. கசங்கியது சட்டை.. கூடவே.. “ம்ம்ம் ச்சு..” என்றவள், “அவன் தான்” என்று வாய் அசைத்தாள்.

 

காதில் விழுந்த ‘ம்ம்ம்’மிற்கு அவனே ஒரு அர்த்தம் கொடுத்தான். பிரவீன் மூளை எப்படி எல்லாமோ வேலை செய்ய, “ச்ச… ஒரு ப்பளிக் ப்ளேஸ்ல கூட டீசென்சி மெயின்டெய்ன் பண்றது இல்ல… இத எல்லாம் வேற எங்கேயாவது பண்ண வேண்டியது தானே…”, எரிச்சலில் புகையவும் தான் எபிக்கு புரிந்தது அவன் என்ன நினைத்துப் புலம்பிக் கொண்டிருக்கிறான் என்று.

 

அலர்விழியை பார்க்க… அவளோ ஏகபோக உரிமையோடு சட்டையை பிடித்துக்கொண்டு கோழிகுஞ்சுப் போல் ஒட்டி நின்றுக் கொண்டிருந்தாள். அவன் முகத்தைப் பார்த்து நின்றிருந்தவள் முகத்திலோ மனோ பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை!

 

பொத்தானில் இருந்த அவள் கையை விலக்கியவன், வெறும் தலையை மட்டும் திருப்பி, “அது தான் என்ன நடக்குதுன்னு தெரியுதில்ல. போவியா.. அத விட்டுட்டு நகரு நகருன்னு வந்து நிக்கிற? என்ன ஃப்ரீ ஷோ வேணுமா?”, எனவும் அவன் முறைக்க.. இவன் ‘போடா அந்தபக்கம்!’ லுக் விட அவன் வந்த வழியே திட்டிக்கொண்டே சென்றுவிட்டான்.

 

அவன் தலை மறையவும் இருவரும் வாய் பொத்தி சிரித்துக் கொள்ள.. “போடி உன்னால என் பேரு கெட்டுது”, செல்லமாய் அவள் பின்னந்தலையில் தட்டி கசங்கிய சட்டையை இழுத்து விட்டுக் கொண்டான்.

 

சிலரை பார்த்ததும் ஏன் என்றே தெரியாமல் பிடிக்காமல் போய் விடும். எபிக்கும் பிரவீனுக்கும் அப்படி தான் ஆகிப்போனது.

 

ஒரே நாளில் ஒருவன் பார்வைக்கு நல்லவனாகவும் மற்றவன் பார்வைக்கு பொல்லாதவனாகவும் ஆகிப் போனான் மனோவா எபிநேசர்.

 

யாருக்கு எப்படியோ அன்று விழியும் மனோவாவும் நன்றாக உறங்கினர், இன்ப கனவுகளோடு!

 

 

 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!