Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ16_1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 16_1

 

தினமும் ஒரே நேரத்தில் மது அருந்துபவனுக்கு, அந்த குறிப்பிட்ட நேரம் வந்தால் கை கால் உதறுமாம். குடித்தே ஆகவேண்டும் என்ற வெறி எழும்புமாம். இது மதுவென்றில்லை ஒரு காரியத்தைத் தினமும் விரும்பி ஒரே நேரத்தில் செய்யும் வழமை வைத்திருந்தால் நாம் அனைவரும் அந்த நேரத்திற்காகக் காத்திருப்பது இயல்பு தானே..

 



Advertisement

அலர்விழிக்கும் அதே நிலை தான். பெண்ணின் கவனம் முழுவதும் கடிகாரத்தில். ‘எப்போ அங்க விடியும்?’ மனம் நச்சரித்தது.

 

அவள் கைப்பேசியில் எடுத்த படங்களோடு மாதவன், அர்ச்சனா கைப்பேசியிலும் எடுத்த புகைப்படங்கள் அலர்விழியின் கேலரியை நிரப்பியிருக்க.. எதிலெல்லாம் அவள் இருந்தாளோ அனைத்தையும் மனோவிற்கு அனுப்பியவள் அவனோடு பேசக் காத்திருந்தாள்.

Advertisement

 

Advertisement

அவளின் சொந்தபந்தங்கள் பற்றி கூறவேண்டும்.. படத்தில் அவர்களைக் காட்ட வேண்டும்.. நிச்சயதார்த்த நிகழ்வைப் பற்றிக் கதை அளக்க வேண்டும். புது தலை அலங்காரம் பற்றிக் கேட்க வேண்டும்.. இன்னும் இன்னும் பல ஆசைகள்.

 

அவளைச் சுற்றி ஆட்கள் இருந்தனர் இருந்தும் மனம் மனோவை அதிகமாய் தேடியது. ஒவ்வொரு உறவு முறைக்கும் ஒரு பெயர் இருந்தது. ஒவ்வொரு உறவோடும் தனிப்பட்ட உரிமையும், எல்லையும் இருந்தது.

Advertisement

 

மனோவோடு அவள் நிலை என்ன? அவர்கள் உறவின் பெயர் தான் என்ன? அவர்களுக்கிடையே இருக்கும் உரிமையும்.. எல்லையும் தான் என்ன?

 

எல்லை இல்லா வானம் போல் மனோவோடு எல்லை இல்லாத உறவு வேண்டும் என்றது மனது. அவனிடம் எல்லா உரிமையும் அவளுக்கு மட்டுமே என்ற பேராசை தலைவிரித்தாடியது.

 

இருவருக்கும் இடையே அவன் பின்னியிருக்கும் மாய வலையை இன்றே அறுத்தெறிந்தால் என்ன என்று தோன்றவும், நேரம் காலம் யோசிக்காமல் கைப்பேசியைத் தேட.. தேடிய பொக்கிஷம் எங்குச் சென்றதோ? கண்ணில் சிக்கவில்லை.

 

நினைவு வந்தவளாய், “அச்சு ஃப்போன குடேன்..”, அர்ச்சனா முன் நிற்க.. அவளோ தன்னுடைய கைப்பேசியைக் கொடுக்க.. “இதுல சார்ஜ் இல்லன்னு தானே என்னுத வாங்கின? என்னுத குடு ஒரு கால் போடணும்..”, என்றவளை பார்த்து ஒரு நிமிடம் விழித்தவள்,  “உன் அண்ணாட்ட கேளு. மாது ஃபோட்டவ அவன் ஃபோனுக்கு ஃபார்வர்ட் பண்ணிக்க வாங்கினான். உன்ட்ட சொல்லிட்டு தானே குடுத்தேன்..”

 

‘பச்! அண்ணனைத் தேடவேண்டுமா?’

 

மீண்டும் கடிகாரத்தைப் பார்த்தாள்.

 

“அண்ணாட்ட இருக்கோ?! சரி அண்ணாட்ட தானே… அப்புறம் வாங்கிக்கிறேன். நடுவுல கால் வந்தா அண்ணாவே கொண்டு வந்து கொடுத்துடுவாங்க!”

 

விட்ட வேலையை இருவரும் தொடர்ந்தனர். அதாவது நன்றாய் இருந்த கேசத்தை விழாவிற்காகக் கண்ட ‘ஹேர் ஸ்ப்ரே’ போட்டு குருவி கூடு போல் மாற்றியிருந்ததை மீண்டும் அதன் வனப்பிற்குக் கொண்டு வரும் முயற்சியில் இரு பெண்களும்.

 

சென்னை, மாலை நேரத்தை தொட்டு கொண்டிருக்க, பூகோள உருண்டையின் மறுபக்கத்திற்கு இன்னும் வெளிச்சம் சென்று சேரவில்லை. ஆனால் விடியும் முன் மனோ எழுந்துவிட்டிருந்தான். தூக்கம் பிடிக்கவில்லை. பதின்ம வயது சிறுவன் போல் அந்த இளையவன் மெத்தையில் புரண்டான். நேரம் பார்த்தான். விழா முடிந்திருக்கும். அழைத்தால் என்ன என்று தோன்றியது. சுற்றி ஆட்கள் இருக்கக் கூடும் அவளை காணொளியில் காண இயலாது!

 

கைப்பேசியை எடுத்தவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. விழி அவன் வாட்ஸ்-ஆப்பை நிறைத்திருந்தாள். முதல் பத்து நிமிடங்கள் அவள் மட்டும் தான் அவன் கண்களைப் பறித்தாள். அதன் பின் பெண்ணை சுற்றியிருந்தவர்களின் மேல் கவனம் செலுத்தினான். விழியைத் தவிர இருவரைத் தெரிந்தது. வாட்டம் சாட்டமாக இருந்த மாதவனோடு பெண் சிரித்த முகமாய் நின்றிருக்க மனோ இதழ்களிலும் அதே புன்னகை. 

 

தெரிந்த மற்றொருவன் மனோவின் முகத்தை யோசனையில் ஆழ்த்தினான். அன்று நூலகத்தில் பார்த்த அதே மருத்துவன். இன்று அலர்விழி அவனைப் கண்டு ஓடி ஒளிந்திருக்கவில்லை. இருவரும் புன்னகை முகமாய் இருந்தனர்.

 

‘அவன் பார்வையும் அவனும்!’ மனோவிற்கு அவனைப் பிடிக்கவில்லை. காரணங்கள் இரண்டு. ஒன்று அவசியமே இல்லாமல் ஃபோட்டோவிற்கு போஸ் கொடுக்கும் சாக்கில் அலர்விழியை உரசிக் கொண்டு நிற்பது! மற்றொன்று –  அவள் தள்ளி இருந்த புகைப்படங்களில்.. அவன் பார்வை! தன் இரையை மட்டுமே பார்க்கும் கழுகு பார்வை! 

 

சுற்றி இருந்தவர்களை மறந்து விழியை மட்டுமே பார்த்தான். பெண்ணை காணக் காண ஆசை அதிகமேயனது. யோசிக்கவில்லை. அழைத்துவிட்டான். திரையில் விழி அவள் தங்கையோடும் வேறு இரு பெண்களோடு நின்றிருந்தாள். காலையில் தான் சுய-விவர படத்தை மாற்றியிருப்பாள் போலும்.

 

புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே காத்திருந்தவன் அழைப்பு எடுக்கப்படவும், “விழி..”, என்றான் காதல் சொட்ட.. ‘விழி’யில் இருந்த மென்மையை.. காதலை.. அலர்விழி கேட்டிருக்க வேண்டும். பெண் பனியாய் உருகிக் கரைந்திருப்பாள். ஒற்றை வார்த்தையில்.. அடிமனதில் காதலைக் கடத்தும் முடிவோடு அவன் விழி என்று அழைக்க..

 

“ஹலோ?” ஆண் குரல்! நாராசமாய் அவனை தாக்கியது!

 

காதில் விழுந்த சத்தம் புதிது.

ஒரு கைப்பேசியில் ஸ்பைவேர்(spyware) நிமிடத்தில் புகுத்திவிடலாம் என்பதால் தெரியாதவர்களிடம் அலர்விழி கைப்பேசியைக் கொடுக்க மாட்டாள். அது இவனுக்கு நன்கு தெரியும்! ‘யார் இவன்?’ நொடி தேக்கம் எபியிடம். எண்ணை பார்த்தான்.. விழி தான் திரையில்! தவறான எண்ணிற்கு அழைக்கவில்லை. விழாவிற்கு வந்த சொந்தக்காரனாக இருக்கும்!

 

ஆதரவு கொடுத்த அலைப்பேசியைப் பற்றி மறந்து போயிருந்தவன் யோசனையோடு தான் அழைப்பை எடுத்தான். கைப்பேசியின் சொந்தக்காரன் அழைத்தால், தன்னிடம் இருப்பதைக் கூறி வாங்கிக்கொள்ளச் சொல்லும் நோக்கத்தோடு தான் அழைப்பை எடுத்தான். ஆனால் அழைப்போ கைப்பேசியின் சொந்தக்காரனுக்கு!

 

விழி என்பவர் தான் அலைப்பேசியின் சொந்தக்காரரோ? தன் சொந்தத்தில் யார் விழி? தெரியவில்லையே? “யாருங்க?” என்றான் பிரவீன்.

 

“விழி.. சாரி அலர்விழி இருக்காங்களா?”, மரியாதையாகத் தான் கேட்டான்.

 

அலர்விழி! அவனுக்குச் சொந்தமான அலர்விழி இவனுக்கு ‘விழி’யா? அவளை அலர் என்று தானே அனைவரும் அழைப்பர்? இவனுக்கு மட்டும் அலர்விழி ஏன் விழியாகி போனாள்?

 

விழி என்ற அழைப்பு கைப்பேசியை வைத்திருந்தவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அத்தனை குழைவாய்.. செல்லம் கொஞ்சிக்கொண்டே அழைக்கும் தோழனா? நெருங்கிய தோழனோ? எதுவோ.. பிடிக்கவில்லை!

 

முட்டிக் கொண்டது!

 

யாரிவன்? மீண்டும் கைப்பேசி திரையை பார்த்தான். ‘மனோ’ வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான். திரையில் குழந்தைகள் இரண்டு ஒரு வயதானவரோடு பனி-மனிதன்(snowman) முகத்தில் கேரட்டை சொருகிக் கொண்டிருந்தனர்!

 

‘விழி என்று எப்படி அழைக்கலாம்?’ மருத்துவனின் உரிமையில் வேறொருவன் தலையிடுவது போல் தோன்ற.. பிரவீனின் “யாரு நீ?”-யில் அப்பட்டமாக எரிச்சல் கொட்டிக்கிடந்தது.

 

‘நீ-யா?’ இவனுக்கும் சட்டென்று ஒரு கோபம். மறுமுனையில் இருப்பது விழியின் சொந்தமாக இருக்கலாம். சிறியவன் நிதானித்தான்.

 

“அவங்க ஃப்ரெண்ட் பேசறேன். இருக்காங்களா? கொஞ்சம் பேசணும்”, குரல் உயர்த்தவில்லை, அவன் மரியாதையை தக்கவைத்துக் கொண்டான்!

 

“ஃப்ரெண்டுனா?”

 

‘எவன் டா இவன்.. ஒரு ஃபோன கைல வச்சுகிட்டு உயிர வாங்கறான்! இது அவ அண்ணன் சத்தமில்ல… அப்பாவ இருக்க வாய்பே இல்ல! யார்றா நீ? இம்சை!’

 

“ப்ரெண்டுனா ஃப்ரெண்டு தான் பாஸ். அவங்கட்ட ஃபோன கொடுங்களேன்..”

 

“எதுக்கு?”

 

எதோ பைத்தியத்திடம் பேச்சு வார்த்தை நடத்துவது போல் தோன்றியது.

 

“அத உங்கட்ட சொல்ற அளவுக்கு இன்னும் நாம பழகலியே! காலைலியே என் மூட கெடுத்துக்க விரும்பல! நைஸ் டாக்கிங் வித் யூ. அப்புறம் பேசிக்கிறேன்.”. அலைப்பேசியை வைக்கப்போனவனை, “ஒரு நிமிஷம்..”

 

என்று வம்படியாக இழுத்து பிடித்தான் மருத்துவன்.

 

‘இப்போ என்னவாம்?’ “என்ன பாஸ் ஃபோன விழிட்ட கொடுக்க முடிவு பண்ணிட்டீங்களா?”, சிரித்துக் கொண்டே கேட்க.. அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

 

எபியின் விழி என்ற அழைப்பு மட்டுமா பிடிக்கவில்லை! அவன் வசீகர சிரிப்பும், அவன் ஆண்மை ததும்பும் குரலும் கூட பிரவீனுக்கு பிடிக்கவில்லை. உள்ளுக்குள் எரிந்தது!

 

“இல்ல! ஒரு விஷயத்த க்ளியர் பண்ணிக்க தான்!”

 

“ஓ..? ஓகே! சொல்லுங்க”

 

“நீ அவட்ட ரொம்ப க்ளோஸா ஃபீல் பண்றியோ?”

 

எபியின் பல் அரைபட்டது. அடக்கிக் கொண்டவன் மீண்டும் நக்கல் சிரிப்போடே, “நான் சொன்ன அதே பதில் தான் பாஸ். என் ஃபீல்க்ஸ்ச உங்கட்ட ஷேர் பண்ற அளவுக்கு நாம இன்னும் பழகலியே..”

 

அவனுக்கு பதில் வேண்டாம் போலும்.. சொல்ல வேண்டிய விடயத்தில் மட்டுமே குறியாயிருந்தான். “அவ பேரு அலர்விழி! அப்பியே கூப்பிடு!”

 

பேசிக்கொண்டிருக்கும் அறிவு ஜீவியின் பெயரைத் தெரிந்து கொண்டால் பிற்காலத்தில் துஷ்டனைத் தூர நிறுத்தலாமே.. “அட.. அலர்விழியா அவங்க பேரு? இது எனக்கு தெரியாம போச்சே… அவங்கள நான் கூப்பிடுறது இருக்கட்டும். நீங்க யாரு சார்? உங்களுக்கும் ஒரு பேரு இருக்குமே.. சொன்னீங்கன்னா கூப்பிட வசதியா இருக்கும் பாருங்க!”

 

இவ்வளவு சொல்லியும் நக்கலா? அவனுக்கு சம்பந்தமே இல்லாத கேள்வியைக் கேட்டான். “அவள லவ் பண்றியோ?”

 

‘அவ்வளவு அப்படமாகவா தெரிகிறது? வாய்ப்பில்லை இருட்டில் அம்பை விட்டுப் பார்க்கிறான்!’ கூற வேண்டியவளிடமே இன்னும் கூறவில்லை… இவன் யாரோ அதைக் கேட்க? எபியின் பொறுமை போனது.

 

“யோவ் யாருயா நீ? காலங்காத்தால..! லூசு மாதிரி நீயா தனியா பேசிட்டே போற! நீ ஒரு மண்ணும் க்ளியர் பண்ண வேண்டாம்… நான் அப்புறம் அவட்ட பேசிக்கிறேன்!”

“அவ ஃபோன் என் கையில… அவ என் பக்கத்தில தான் இருக்கா. நான் யாரா இருக்கும்?”

 

“ம்ம்ம்? யாரா இருக்கும்?” நக்கல் நீண்டது.. “அவளுக்கு தெரியாம ஃபோன ஆட்டைய போட்டவனா இருக்கும்! இல்ல எங்க இருந்தோ தப்பிச்சு வந்த ஜந்துவா இருக்கும்!”, நக்கல் தொனியைக் கைவிட்டவன், “உங்கிட்ட பேச என்னால முடியாது! நான் அப்புறம் பேசிக்கிறேன்..” அழைப்பைத் துண்டிக்கப் போக.. “நான் யார்ன்னு தெரியுணுமா?”-வில் தாமதித்தான்.

 

“அவ கூடிய சீக்கிரம் உனக்கு கல்யாண பத்திரைக்க வைப்பா! அதுல என் பேரு கிட்ட இருக்கும் அவ பேர்! இனிமேல் அவள கூப்பிடாத! இன்னைக்கு வரை நீ அவளுக்கு நீ என்னவா வேணும்னாலும் இருந்திருக்கலாம்! ஆனா இன்னையோட இந்த ஃப்ரெண்ஷிப்ப முடிச்சுக்கோ. உன் ஃபீலிங்க்ஸ் எதுவா இருந்தாலும் அதை  உனக்குள்ளேயே வச்சுக்கோ! எங்க வீட்டுல வாழ போற பொண்ணுக்கூட இந்த ஃப்ரெண்ட்ஷிப் சரிவராது. எனக்கு பிடிக்கல! அவ வாழ்க்கைக்கு இது நல்லது இல்ல! உன்னால கண்டிப்பா அவள் காண்டக்ட் பண்ண முடியும்.. பேச முடியும்! ஆனா செய்யாத! மீறி அவள தொந்தரவு பண்ணி உடனே எங்க கல்யாணத்தை முடிக்க வச்சிடாத! உன்னால அவ படிப்பு போனதா இருக்கக் கூடாது பாரு! புரியுதா? நல்ல குடும்பத்துல பிறந்திருந்தா நான் சொல்றது என்னன்னு புரியும்ன்னு நினைக்கிறேன்!”, கூறியவன் பதிலுக்குக் காத்திருக்காமல் அழைப்பை துண்டித்திருந்தான்.

 

அழைப்பு துண்டிக்கப் பட்டபின்னும் கைப்பேசியை வெறித்திருந்தவனுக்குப் புரிந்ததா புரியவில்லையா என்றே புரியவில்லை.

 

முகம் தெரியாதவன் கூறுவதைத் தலைக்குள் ஏற்றிக் கொள்ளவில்லை. அதனால் கேட்டதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எபி. ‘எவன் டா இவன்’ என்று தான் நினைத்தான்.

 

மீண்டும் இரவு அழைத்தான். எடுப்பாரற்று அலைப்பேசி கதறி முடித்தது. உறவுக்காரன் பேச வாங்கியிருந்தால் கண்டிப்பாக இந்நேரம் கைப்பேசி அலர்விழியிடம் சென்றிருக்க வேண்டும்! ஆனால் இல்லை.

 

இவன் அழைக்காமல் போனால் அவள் அழைத்திருப்பாளே! ஏன் அழைக்கவில்லை? ஏன் அழைப்பு ஏற்கபடவில்லை?

 

கைப்பேசிக்காக திருடப்படவில்லை என்பது அடுத்தடுத்து இவன் அழைத்ததில் தெரிந்து கொண்டான். திருடனாயிருந்தால் சிம் கார்டை தான் முதலில் நீக்கியிருப்பான். ஆனால் கைப்பேசி உயிர்ப்போடே இருந்தது. முழு அழைப்பும் சென்ற பின் நின்றது.

 

விழியோடு பேச முடியாமல் போகும் என்று கனவிலும் நினைக்கவில்லையே! இன்று, காணாத கொடுங்கனவு நிஜமானது. விழியின் குரல் கேட்காமல் பைத்தியம் பிடிக்கும் போல் இருக்க மீண்டும் மீண்டும் அழைத்தான்! ஓய்ந்துபோகும் மட்டும் அழைத்தான்.

 

இரண்டே இரண்டு நாட்கள் கூட அவளிடம் பேசாமல் நகர்த்த முடியவில்லை. அவனே எதிர்பார்க்காத தவிப்பு இது.

 

நாட்கள் வாரங்களாய் மாறியது விழியிடமிருந்து இவனுக்கு அழைப்பு வரவில்லை. கைப்பேசி திருட்டுப் போனால் என்ன… பேச வேண்டும் என்றால் பேச அவளுக்கு வழியா இல்லை? ஏன் பேசவில்லை? உடல் நலக் குறைவா? இவன் வாடிப்போனான். தெரிந்து தவிப்பது ஒரு வகை… தெரியாமலே இதுவோ.. அதுவோ என்று பயந்து சாவது நரக வேதனை!

 

அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவளுக்கும் அவன் நிலை தான் என்று. பேச வாய்ப்பில்லை. வீட்டிற்கு என்று தனி தொலைப்பேசியில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு அலைப்பேசியும் அப்பாவிடம் இருக்கும் அலைப்பேசியும் ஆதிகாலத்துக் கைப்பேசிகள்.

 

ஒரு நாள் பொது தொலைப்பேசி செல்ல… அன்றே அப்பொழுதே விடயம் அம்மா காதிற்குச் சென்றுவிட.. சௌந்தரியா மகளைக் கொன்று புதைக்கவில்லை அவ்வளவு தான்.. மற்ற படி கொடுக்க வேண்டிய  அர்ச்சனைகளைச் சரி வரக் கொடுத்து முடித்தார்! அன்றோடு அதுவும் போனது! இது அவனுக்குத் தெரிய ஞாயமில்லை!

 

99 விழுக்காடு அலர்விழிக்கு உடல் நலக் குறையாக இருக்கும்… இல்லை வீட்டினருக்கு ஏதேனும் பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்தாலும் அந்த விட்டுப்போன 1% உள்ளத்திற்குள் கீலி பரப்பியது!

 

அன்று கைப்பேசியில் அவன் கூறியது உண்மையாக இருந்தால்? உண்மை என்றாலும் அதில் அலர்விழியை தவறு சொல்லவே முடியாதே! விழி தனகில்லையா? ‘என்ன செய்து வைத்துள்ளேன்.’ நோந்து கொண்டான். காதலைக் கூற வேண்டிய வேளையில் கூறாமல் போனதற்கு இது பெரிய தண்டனையாகத் தோன்றியது.

 

வாழ்க்கையில் ஆசைப்பட்ட எதுவுமே எபிக்கு கிடைக்காமல் போனதில்லை. படிப்பு விளையாட்டு என்று அனைத்திலுமே ‘ஆல் ரௌண்டர்’ என்பதால் ஏமாற்றம் கூட கண்டதில்லை. வலி என்றால் என்ன என்றே தெரியாதவன் முதல் முறை வலியை அனுபவித்தான். அது எவ்வளவு கொடுமை என்பது வார்த்தைகளால் விரிக்க முடியது என்பதையும் தெரிந்து கொண்டான்.

 

யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை. யாருடனாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது.

 

தனிமை தேடிய அதே மனதிற்குச் சுற்றி ஆட்கள் இருந்தால் தேவலாம் போல் தோன்றியது.

 

ஒன்றும் புரியவில்லை… கனத்த தலையும்.. அடைத்த மூச்சு குழாயும்.. பிழிந்து வலித்த நெஞ்சும் அவனால் முடியவே இல்லை. ‘விழி’ என்ற பனித்துளி உள்ளுக்குள் சென்று அவனை நெருப்பாய் சுட்டது.

 

காதல் கொடுக்கும் வலியைத் தாங்க தெரியவில்லை. ஆதரவாய் தலை வருடத் தாயும் இல்லை. தோள் தட்டி காரியம் பேசத் தகப்பனும் இல்லை. தனித்துப் போனான். விழி என்பவளோடு அவன் நிம்மதி போகும் என்று நினைத்து பார்க்கவில்லை.

 

விழி என்பவள் என்ன ஆனாள் என்று தெரியவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தான்.. ஒரு கட்டத்தில் அழைப்பதை நிறுத்தினான்! ஹைக்கிங் சென்ற இடத்தில் அவன் அழைக்க.. அழைப்பை அவள் ஏற்காத விரக்தியில் அவன் கோபத்தை கைப்பேசியில் காட்ட அது பாறையில் இடித்து.. சிறதி.. பாகங்கள் அவன் கண்முன்னே அதலபாதாளத்திற்கு பறந்தது.

 

உள்ளுக்குள் வெறுமை சூழ்ந்தது. அமெரிக்க மண்ணில் கால் மிதித்த அன்றிலிருந்து கடைசியாக அவளிடம் பேசியது வரை, அவன் விழித்ததும் பார்ப்பது அவள் முகத்தைத் தான். படுக்கும் முன் பார்க்கும் முகமும் அவளுடையதே.

 

விழியின் ஹாயில் கண் விழித்து குட் நைட்டில் கண் மூட மனம் ஏங்கியது.

 

ப்ராஜெக்ட், ஆகஸ்ட் இருபது அன்று ப்ரொடக்ஷ்ன் செல்வதாய் முடிவாகி இருக்க.. இருபத்தி ஐந்தாம் தேதி அலுவலகத்தில் இவனது கடைசி நாள் என்பது ஏற்கனவே முடிவாகியிருந்தது. இதற்கிடையே கேம்பிரிட்ஜ்(மசாசூசட்ஸ் அருகே உள்ள சிட்டி) சென்று தங்குவதற்கு வசதி செய்ய வேண்டும். வாகனம் வாங்க வேண்டும்.. மகிழுந்து ஓட்ட உரிமம் (லைசென்ஸ்) வாங்க வேண்டும்.. இப்படி நிறைய வேலைகள்! இருக்கும் மனநிலையில் என்னத்தை எல்லாம் செய்வான்?  

 

செப்டம்பர் 1 கல்லூரியின் முதல் நாள்! நடுவே அவன் ஊருக்குச் செல்ல வாய்ப்பே இல்லை! என்ன செய்வது குழம்பித் தவித்து போனான்.

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!