Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ16_2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..

கொல்லை துளசி எல்லை கடந்தால் 16_2

 

கல்லூரி திறந்து மாதம் இரண்டாகிய பின்னும் அலர்விழியால் இயல்புக்குத் திரும்ப முடியவில்லை. கல்லூரி ஜூன் இரண்டாம் வாரம் தான் திறந்ததென்றாலும், ஜூன் ஆரம்பிக்கவுமே விடுதி வந்து சேர்ந்தாள் அலர்விழி. கணினி மையத்தில் வேலையில் இருக்கவே, வந்துவிட்டாள்.

 



Advertisement

பெண் முகம் பொலிவிழந்து போயிருந்தது. இதே நாள் நான்கு மாதம் முன்பு மனோவோடு பேசியது! அவர்களுக்குள் எல்லாம் முடிந்து போனது என்று தோன்றியது. ஏன் என்று தான் தெரியவில்லை!

 

‘ஏன் தன் அழைப்பை எடுப்பதில்லை’ என்ற கேள்வி இவளிடம். எண்ணை மாற்றிவிட்டான் என்று தோன்றியது. கைப்பேசி இவள் கையில் கிடைத்து மாதம் ஒன்றாகிறது. நிச்சயதார்த்த விழாவின் போது எப்படியோ தவறுதலாய் மாதவனின் உடைமைகளோடு கலந்து அர்ச்சனா வீட்டிலிருந்துவிட்டது போலும். அம்பிகா பார்த்து மாதவனிடம் கொடுத்திருப்பார் போலும். பாவம் அவருக்குமே தவறு எவ்வாறு நடந்தது என்று பிடிபடவில்லை. அண்ணன் தான் தங்கையிடம் ஆயிரம் ‘சாரி’ கேட்டு கொடுத்துவிட்டுச் சென்றான்.

Advertisement

 

Advertisement

மனோவிடமிருந்து ஏகப்பட்ட ‘மிஸ்ட் கால்ஸ்!’ இரண்டு மாதங்கள் முன்பு அழைப்பு நின்று போயிருந்தது. யார் செய்த புண்ணியமோ ஒரு மாதம் முன்பு இவள் கைப்பேசி கிடைத்தது. அன்றிலிருந்தே அழைக்கிறாள் ஆனால் அழைப்பு எபியை சென்றடையவில்லை.

 

காதல் பறவைகள் இரண்டும் இருட்டில் துழாவிக் கொண்டிருக்க, இவர்கள் கண்களைக் கட்டிவிட்டவனோ அந்த நிமிடம் கடலூரில் தியாகுவோடு பேசிக் கொண்டிருந்தான்.

Advertisement

 

அங்கிருந்த புகழ்பெற்ற மருத்துவமனைக்கு.. புகழ்பெற்ற ஒருவரின் மகனின் அறுவைசிகிச்சைக்காகச் சென்றவன், என்றுமில்லா திரு நாளாய் மாமா, அத்தையைக் காணச் சென்றிருந்தான்.

 

வீட்டில் வாழையிலையில் தடல்புடல் விருந்தும் வரவேற்பும் தான். விருந்தோம்பலில் பிரவீன், மாமியார் கைபக்குவத்திற்கு அடிமையாகிப் போனான்.. அப்படி தான் கூறினான்!

 

என்ன மாயம் செய்தானோ சௌந்தர்யாவிற்கு மருமகனைப் பிடித்துப் போனது. அவன் தலை மறைந்ததும் தியாகுவிடம் மனம் திறந்தார்.

 

“அவருக்கு நம்ம பாப்பாவ பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்.. அன்னைக்கே அவர் சித்தி ‘அலர்க்கு  எதுவும் வரன் பாக்கறீங்களா? நம்ம பிரவீனுக்கும் பொண்ணு பார்த்துட்டு இருக்கோம்.. சொந்தத்துல இருந்தா நல்லா இருக்கும்ன்னு யோசனை. நீங்க, பெரியவளுக்கு பாக்கிறதா இருந்தா பிரவீன் நல்ல சாய்ஸ். நான் வளர்த்த பையன். இப்போவே நல்ல பொசிஷன்ல இருக்கான். நம்ம பொண்ண கண்கலங்காம பாத்துப்பான். நானும் போற வர வீடு.. என் கண்பார்வையில இருப்பா! அவ இஷ்டம் போல படிக்கலாம்.. வேலைக்கு போகலாம். படிச்ச அருமையான பையன்.. சந்தோஷமா இருப்பாங்க. அண்ணாட்டையும் அலர்விழிட்டையும் பேசி பாருங்க’ன்னு சொன்னாங்க! நீங்க என்ன நினைக்குறீங்க? இன்னும் ஒரு வருஷம் தானே படிப்பு. பேசுவோமா? அடுத்த செமஸ்டர் முடியவும் நிச்சயம் பண்ணிடா.. மூனுல இருந்து ஆறு மாசத்தில கல்யாணம் முடிச்சிடலாம். நல்ல இடம். பையன் தங்கமானவனா தெரியறான். ஒரு கெட்ட பழக்கமும் இல்லையாம். என்ன சொல்றீங்க?”, சௌந்தரியா மகளில் நல்வாழ்வு நினைத்துப் பூரித்து போயிருந்தார்.

 

ஆனால் அவர் மாமியாருக்கு அப்படி எல்லாம் இல்லை! உலகம் அறிந்த பெண்மணி கூறியதோ வேறு! “இப்போ என்ன அவசரம் தியாகு.? படிச்சுட்டு  ரெண்டு மூனு வருஷம் வேலைக்கு போகட்டுமே. அவளும் சுதந்தரமா இந்த உலகத்தை பாக்கட்டுமே. இப்போவே கல்யாணம்.. குடும்பம்ன்னு ஏன் அவள அடைக்க பாக்கிற?”

 

‘இந்த மாமியார என்ன செய்யலாம்?’ என்பது போல் சௌந்தரியா பார்க்க.. “நல்ல இடம் மா… யோசிப்போமே..”, என்றார் தியாகு, மனைவியின் விருப்பத்திற்கு இசைந்து கொடுத்து.

 

“எனக்கு பையன ஏனோ அவ்வளவு பிடிக்கல தம்பி. ரொம்ப விறைப்பா இருக்கான். நம்ம பாப்பாக்கு பொருத்தமில்ல. அப்படியே அவன் நல்லவனாவே இருக்கட்டும்.. ஆனா பையன் நல்லவனா இருந்தா போதுமா? அவன் அம்மா ஒரு கோவக்காரி! பணத்தாசை, வெட்டி பந்தா எல்லாம் அவட்ட அதிகம்! நம்ம பாக்கியாவ விட ரெண்டு மடங்கு எல்லா விஷயத்திலேயும்! நம்ம பிள்ளைய மதிக்கவும் மாட்டா உங்களையும் மதிக்க மாட்டா! அவன் அப்பா எப்போ எப்பிடி நடந்துப்பான்னே தெரியாது. ஒரு அர லூசு! இந்த சம்பந்தம் வேண்டாம் டா..”, சகுந்தலா பாட்டி சௌந்தர்யாவின் அவசரத்திற்குத் தடை போட்டார்.

 

ஆனால் மகள் விடயத்தில் அம்மா தீர்மானமாயிருந்தார். “மாமியார்ன்னா முன்னப் பின்னத் தான் இருப்பாங்க.. அது எல்லாம் அவ சாமர்த்தியம். போகும் போதே மாமியார் நாத்தனார் எல்லாரும் நமக்குத் தோதா இருக்கணும்ன்னு நினைக்க முடியுமா?”  

 

குடும்பமே மாமியார் நாத்தனார் பற்றிய வாதத்தில் இறங்கியிருக்க… வீட்டின் ஒரு மூலையில் புத்தகத்தோடு அமர்ந்திருந்த நகுநாவின் மனமோ அவள் மாமியாரையும் நாத்தனாரையும் அசைபோட்டது. ‘அவங்க எல்லாம் நல்லவங்களாமே..’ தானாய் சிரித்துக் கொண்டாள், பதினெட்டைக் கூட எட்டாத சிறுமி!

வினோவோடு அன்று பேசியது தான்! அதன் பின் அவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை. இவளும் கைப்பேசி வாங்கியாயிற்று ஆனால் அழைத்தாளில்லை. எல்லாம் பகல் கனவு மட்டுமே!

 

ஒருத்தி பகல் கனவில் பல்லை காட்டிக்கொண்டு மெத்தையில் உருள மற்றொருத்தி தெருவில் எதிரில் வரும் வாகனம் கூட தெரியாமல் இன்பம்  துரந்த துறவி போல் சென்று கொண்டிருந்தாள்.

 

“அலர்…”, அருகில் நின்ற மகிழுந்திலிருந்து எஸ்தர் வர, “ஆண்டி..” என்று அவரை நெருங்கினாள்.

 

“இப்படி தான் கவனமே இல்லாம நடு தெருவில போவியா?”, செல்லமாய் ஒரு அதட்டல்.

 

“சாரி ஆண்டி கவனிக்க… ஏதோ யோசன”

 

“என்ன இந்த பக்கம்?”

 

“இந்த ஸ்ருதி பொண்ணு நொச்சு பண்ணி வா வெளில போலாம்ன்னு சொன்னாளேன்னு கிளம்பி வந்தா… லாஸ்ட் மினிட் ப்ளான் சேன்ஞ்… வரமுடியலன்னு சொல்லிட்டா.. அது தான் அப்பிடியே.. வெட்டியா… ஏதோ யோசனைல..”

 

“கார்ல இடிச்சுக்கலான்ற முடிவுல நடக்க ஆரம்பிச்சியாக்கும்..”, சிரித்தார்.

 

“போங்க ஆன்டி..” அவளும் சிரிக்க…

 

“இன்னைக்கு என்னோட வெட்டிங் ஆனிவர்சரி. யாருமில்ல… வீட்டுல நான் மட்டும் தான்! வரியா? என் ஆனிவர்சரிய நம்ம ரெண்டு பேரும் கொண்டாடுவோம்?”

 

 அவரின் திருமண நாளுக்கான வாழ்த்துகள் முடிய..

 

“தொவைக்க துணி இருக்கு..”, அவள் தயங்க

 

“அது தான் வாரம் பூர இருக்கே அதுக்கு என்ன பண்றது? நாம போய் துணிய எடுத்து வந்திடுவோம். நம்ம வீட்டு மஷின்ல போட்டுக்கலாம் சரியா?”

 

“ஹ ஹ ஹா.. அது எல்லாம் ஒன்னும் வேண்டாம் ஆண்டி. நான் ஹாஸ்டல் போறேன்..”

 

“நீ நடு ரோட்டுல போற ரேஞ்சுக்கு ஹாஸ்டல் போய் சேர்ற மாதிரி தெரியலியே? ஹாஸ்பிட்டல் போற அறிகுறி தான் இருக்கு! ஹாஸ்பிட்டல் போகணும்னு முடிவு பண்ணிட்ட.. ரோட்டுல அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு போனா என்ன என் சமையல சாப்பிட்டு போனா என்ன? வா வா.. ஆண்டி பாவமில்ல.. நல்ல நாள் அதுவுமா உன் ஆண்டி தனியா.. உப்புமா சாப்பிட்டுக்கிட்டு.. யோசி… பாவமில்ல உன் ஆண்டி”

 

அவர் கெஞ்ச… கொஞ்ச.. “ம்ம்கும்… அனுதாப வோட்டுலயே வாழுங்க! சரி வரேன். ஆனா நான் தான் சமையல். ஹாஸ்பிட்டல் போற ஐடியா இல்ல! சூப்பரா செஞ்சு ரெண்டு பேரும் சூப்பரா சாப்பிடுவோம். யமுனா அக்கா என்ன ஆனாங்க?”

 

“இந்நேரம் பார்த்து இவளும் அவ ஊர்ல கோவில் கொடை.. கெடா வெட்டன்னு கிளம்பிட்டா”

 

“உங்க சமையலுக்குப் பயந்து மாமா எஸ் ஆகிட்டாங்களா?”

 

“நீயுமா? இரு இரு இன்னைக்கு நானும் உன் கூடவே நின்னு என் திறமையை காட்டறேன்..”

 

“ஏதுல? சாப்பிடுறதுலையா?”

 

“அடி வாலு!”, இருவரும் சிரித்து கொண்டே.. “என்ன வாங்கலாம்? பிரியாணி பண்ணுவோமா…?”, என்று கறிக் கடையை முற்றுகை இட்டு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு கிளம்பினர்.

 

“நாளைக்கு நானே கூட்டிட்டு வரேன் ஜானு.. உன்ன விட நல்லா பாத்துப்பேன்”, என்று இடையே அவரே ஜானகியை அழைத்து அலர்விழி தன்னோடிருப்பதை தெரித்துவிட்டார்.

 

சின்னவளை எஸ்தருக்கு மிகவும் பிடிக்கும். அது அவளுக்குமே தெரியும். அவர் மகனைப் பற்றி அவரிடம் வாய் திறக்க மாட்டாள். இவர்கள் உலகம் கணினி மையம், வீட்டைச் சுற்றி இருக்கும் பூ… செடி.. கொடி.. நாவல் மரம்.. புடவை.. நகை.. அலர்விழியின் வீடு.. படிப்பு.. சொந்தங்கள் பற்றிய புரளி.. இவ்வளவு தான். அதில் மனோ அடக்கமில்லை!

 

அவளைப் பொருத்தவரை மனோ அவள் வாழ்வில் வந்தாலும் சரி இல்லாமல் போனாலும் சரி.. அது வேறு இது வேறு! எப்படியும் அவனால் வந்த நட்பில்லை அவர்களது!

 

வீட்டிற்கு வந்ததுமே அவள் களத்தில் குதித்துவிட்டாள். “ரெண்டு பேருக்கு எதுக்கு ஆண்டி இவ்வளவு செய்யணும்?”

 

“நம்ம ட்ரைவர் பாலாவோட பசங்களுக்கு பிரியாணினா ரொம்ப பிடிக்கும். செய்யும் போது ரெண்டு கைப்பிடி எக்ஸ்ட்றா செஞ்சா குழந்தைகளுக்கும் கொடுத்தனுப்பலாமே..”

 

எஸ்தர் எடுபிடி வேலை செய்ய மதிய உணவு தயாரிப்பு முடிந்தது. உணவு மேசையை அலங்கரித்தது அலர்விழியின் கைபக்குவத்தில் உருவான உணவு வகைகள்.

 

“இந்த பாலாக்கு எடுத்து வச்சுடுறேன். நாமா சாப்பிடுவோமா?”

 

“பத்து நிமிஷம் ஆண்டி… தோட்டத்தை பாத்துட்டு முகம் கழுவீட்டு வரேன்.”

 

வீட்டில் உள்ள ஒருவருக்கும் தோட்டத்தில் அதிக நாட்டமொன்றுமில்லை என்றாலும் யமுனா நித்தியமல்லி பந்தல் போட்டிருந்தார். இவள் பங்கிற்குக் கற்றாழையும் ஓமவல்லியும் வெற்றிலையும் நட்டுவிட்டிருந்தாள்.

 

இன்று  கனகாம்பரம் ஆரஜ், பிங்க், மஞ்சள் என்று பல நிறங்களில் பூத்துக் குலுங்கியது.

 

“என்ன டா பார்த்துட்டு நிற்கிற? யமுனா வாங்கி வச்சிருக்கா. நல்லா பூக்குது. இததான் தினமும் கட்டி வச்சுப்பா.. கனகாம்பரம்”

 

“கனாகாம்பர கலர் பாட்டிக்கு ரொம்ப பிடிக்கும் ஆண்டி. ரொம்ப வருஷம் முன்ன இருந்துது எங்க வீட்டுல. ஆனா இப்போ இல்ல.”

 

“இத பாத்து இருக்கியா? பச்ச கனகாம்பரம்.. நீல கனகாம்பரம்?”

 

“இது ரெண்டும் பாக்க அப்படி இருந்தாலும் அது கனகாம்பரம் இல்ல ஆண்டி. நீலாம்பரி!”

 

“ஓ! என்னவோ போ… என்ன விட உனக்கு நிறைய விஷயம் தெரியுது. உன் அம்மா உன்ன ரொம்ப அழகா வளர்த்திருக்காங்க”

 

“அம்மா இல்ல ஆண்டி. என் பாட்டி. அம்மா வேலைக்கு போயிடுவாங்க. பாட்டி தான் எங்க ரெண்டு பேருக்குமே எல்லாம். ரொம்ப செல்லமும், கொஞ்சம் கண்டிப்பும். அம்மா தனியா கஷ்ட படுறது சகிக்காம பாட்டி தான் கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் சொல்லி தந்தாங்க! இருந்தும் நானும் நகுவும் அப்பிடியே ரெண்டு துருவம்”

 

 “கண்டிப்பா ஒரு நாள் உன் பாட்டிய பாக்கணும். இப்போ சாப்பிடலாமா?”

 

“ம்ம்.. எனக்கும் பசி கொல்லுது. சிக்கன் 65 வாசம் இழுக்குது.. போலாம் ஆண்டி”

 

வீட்டிற்கு வெளியே இருந்த குழாயில் அலர்விழி முகம் கழுவ…

 

“நான் பாத்ரூம் போறேன். நீ கொடியில இருக்க டவல் எடுத்துக்கோ..”, அவர் சென்று விட, கழுவிய முகத்தைத் துடைத்துக் கொண்டே ஹாலை ஒட்டியிருந்த உணவு அறைக்கு வந்தவள் உரைந்து நின்றுவிட்டாள். இதயம் அதன் அறையை விட்டு வெளியே குதித்துத் துடிக்க.. அது அடித்துக் கொள்ளும் சத்தம் மட்டுமே அந்த அறையில் கேட்டது. நான்கு மாதங்களுக்கு மேலாகிறது அவள் இதயம் துடித்து… இன்று எகிறி குதித்தது!

 

அவள் அரவம் கேட்டு தட்டோடு அமர்ந்திருந்தவனும் தலை நிமிர்த்த.. அவன் மூச்சுக்காற்று நுரையீரலை எட்டியதா தெரியவில்லை. அவனும் உரைந்து போனான். ‘விழி’ மனம் எகிறிக் குதித்தது. கண்ணோடு மனமும் அவள் பிம்பத்தை உள்வாங்கியது.

 

இருவருமே இந்த சந்திப்பை எதிர்பார்க்கவில்லை. இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டிய தருணம்.. வெறும் அதிர்ச்சியாகப் போனது!

 

‘மனோ..’ விழி நீர் முட்டிக் கொண்டு வந்தது. கட்டிக் கொள்ளும் வேகம் எழ ஒரு அடி முன் வைத்திருப்பாள்..

 

“என்ன டா வந்துட்ட? ஊர் சுத்த போறேன்… நடு ராத்திரி தான் வருவேன்னு சொன்ன?”, கேட்டுக்கொண்டே எஸ்தர் உள்ளே வரவும் தான் சுயம் உணர்ந்தனர்.

 

“உனக்கு தெரியுமில்ல மா.. என் மகன் எபி! செஞ்சிட்டு இருந்த வேலைய விட்டுட்டு போன மாசம் தான் அமெரிக்கால இருந்து வந்தான். நாளைக்கு விடிய காலையில கிளம்பறான். சொன்னேனே அவனுக்கு எம்.ஐ.டி.-ல சீட் கிடைச்சிருக்குன்னு. அதுக்கு தான் போறான்!”

 

‘ஒரு மாசமா இங்க தான் இருக்காரா?’ ஏமாற்றத்தைத் தாங்க முடியவில்லை. அழு துடித்த மனதை இழுத்துப் பிடிக்க முடியவில்லை. ‘ஏன் மனோ..? ஏன்?’ சட்டையைப் பிடித்து உலுக்க வேண்டும் போல் இருந்தது. கன்னம் பழுக்க அறையத் தோன்றியது. ‘நட்பு கூட நமக்குள் வேண்டாம் என்று கூறி விட்டுப் பிரிந்திருக்கலாமே..’ அழுகையை உள்ளுக்குள் புதைக்கவே தொண்டை அழுத்தி வலித்தது.

 

அவள் அவனையே பார்க்க.. அவன் நொடி நேரம் பார்த்திருப்பான்.. பின் எந்த உணர்வும் இல்லாதவன் போல், “ஹாய் அலர்விழி”, என்றவன் அம்மாவைப் பார்த்தான்.

 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!