அ16_3 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..
கொல்லை துளசி எல்லை கடந்தால் 16_3
“என்ன டா கேட்டா பதில் சொல்ல மாட்டியா?”
Advertisement
“என்ன மா?”
“என்ன காத்து இந்த பக்கம் வீசுதுன்னு கேட்டேன்?”
Advertisement
Advertisement
“உங்க ஆனிவர்சரிக்கு வெளியில லன்ச் கூட்டிட்டி போகலாம்ன்னு வந்தேன்..”, ஏதோ ரோபோ போல் பதில் உரைத்தான்.
“ஐயோடா.. என் மகனுக்கு இப்போ தான் என் நினைப்பு வருது! அப்புறன் நான் செஞ்ச மட்டன் பிரியாணி.. பிரியாணி கத்திரிக்கா, சிக்கன் 65, பைனாப்பிள் கேசரி… எல்லாம் பாத்ததும் உக்காந்துட்டியாக்கும்?”
Advertisement
அவர் கூறிக் கொண்டே பரிமாற.. அவன் பார்த்த பார்வையில், “அது தான் தெரியுதில்ல.. அப்புறம் என்ன பார்வை? சைலன்ட்டா சாப்பிட்டு அவளுக்கே த்தாங்கஸ் சொல்லிட்டு கிளம்பு!”
அவள் நின்ற இடத்தில் சிலையாய் நின்றிருக்க.. “நீ ஏன் மா இன்னும் அங்கேயே நின்னுட்டு? வா… பசி வயத்தை கிள்ளுது!”
“இந்தா எபி.. உனக்கு பிடிச்ச ரைத்தா.. அம்மாவே செஞ்சது சாப்பிடு சாப்பிடு. இந்த தண்ணியும் நான் தான் கொண்டுவந்தேன்.. குடிஈஈஈ..”, அவர் பெருமையை அளந்துவிட அதை ரசிக்கும் நிலையில் இருவருமே இல்லை.
அவர் மட்டுமே பேச.. மற்ற இருவரும் தட்டில் வைத்ததை அவஸ்தையோடே உள்ளிறக்கினர். ருசியான உணவு ருசி அறியாமலே உள்சென்றது.
“நல்லா சமைக்கிற அலர். யமுனாக்கு சொல்லி குடுமா. இன்னைக்கு வரைக்கும் அது தான் ருசின்னு ஏமாந்துட்டேன்! நல்லா இருக்கில்ல எபி?”
“ம்ம்..”
“யமுனாத விட நல்லா இருக்கில்ல?”
“ம்ம்”
“எனக்கும் ஒன்னும் தெரியல… இந்த யமுனாக்கும் ஒன்னும் தெரியல.. வர போற மருமகளுக்காது தெரியுமோ என்னவோ..”
“..”
“பொண்னு ஃபோட்டோ.. அப்பா அனுப்பினாரே.. பாத்தியா டா? பிடிச்சிருக்கா?”
தட்டிலிருந்து எழுந்த அவன் கை அந்தரத்தில் நின்றுவிட, அவளுக்கோ முள்ளின் மேல் இருப்பது போல் வலித்தது.
‘திருமணமா? மனோவிற்கா?’ எத்தனை முறை இதே வீட்டை தன் வீடாய் நினைத்தாள். இன்று?
“என்ன டா? பார்த்தியா இல்லியா?”
“இல்ல”
“ஏன் டா.. சட்டுன்னு பாரு. நைட் அப்பா வந்தும் அத தான் கேப்பார். இல்லன்னு சொல்லிட்டு நிக்காத! நீ சரின்னு சொல்லவே தான் மனுஷன் நல்ல நாள் அதுவுமா வீட்டுல இருக்காம கிளம்பி போயிருக்கார்.”
“..”
“கிளம்பரதுக்குள்ள ஒரு நல்ல முடிவா சொல்லீடு”
“போதும்மா..” அவன் எழுந்து கொள்ள
“சரி சரி நான் பேசல.. கொஞ்சம் கூட போட்டுக்கோ. சாப்பிடு டா! நாளையில இருந்து என்னத்த சாப்பிடுவியோ?”
“பிடிச்சது கிடைக்காட்டா.. பட்டினியாவா கிடக்கறாங்க எல்லாரும்? கிடைச்சத பிடிச்சதா ஆக்கிகறது இல்லியா? எப்பவும் எல்லாரும் பிடிச்சதையே நினைச்சுட்டு இருக்கதில்லியே.. உலகம் மாறும் போதும் நாமளும் மாறணும் இல்லியா? அது தான் நானும் எனக்கு கிடைச்சது போதும்ன்னு வாழ்ந்துடுவேன்”
அவன் கூறியது அவளுக்கென்று பாவம் அவளுக்குப் புரியவில்லை!
“என் பிள்ள தத்துவம் எல்லாம் பேசுது போ… இத.. இந்த பொன்னான எழுத்த தங்க தட்டுல பொரிக்கணும்! பொண்ணுக்கும் இதயே பதிலா எடுத்துக்கவா?”. அந்த அமானுஷ அமைதியை அவர் ஒருவரின் பேச்சு மட்டுமே போக்கிக்கொண்டிருந்தது.
அவன் கை கழுவச் சென்றுவிட…
“நீ ஏன் மா கண்ணீர் விடுற? காரம் தாங்கலையா? அப்போவே சொன்னேன் ரெண்டு மிளகாவ குறைன்னு. கேட்டியா? ரொம்ப காரமா டா..? வெறும் தயிர் வச்சுக்கிறியா?” அவர் தலையைத் தடவிக் கொடுக்க..
“இல்ல ஆண்டி… நாக்கை கடிச்சுகிட்டேன்.. காயத்துல காரம் பட்டுடுச்சு.” கண்களை துடைத்து கொண்டவளுக்கு உணவு உள்ளே இறங்குவேனா என்று தொண்டையில் மாட்டித் தவித்தது.
எபி வெளியே கிளம்ப எஸ்தருக்கு அப்படி ஒரு கோபம்.
“உன் மனசில என்ன தான் இருக்கோ தெரியல! ஒரு நிமிஷம் வீட்டுல அடங்காம எங்க தான் சுத்துவியோ தெரியல. இதுக்கு நீ அங்கேயே இருந்திருக்கலாம். அவசர அவசரமா எதுக்கு வேலைய விட்டுட்டு வந்தானே தெரியல! மனுஷாள் முகத்த கூட பாக்க நேரம் இல்ல உனக்கு!”
அவர் பேச்சைக் கேட்க அவன் அங்கு இல்லை.
“முன்ன எல்லாம் என் மகன் பாக்க நல்லா தான் இருந்தான். இப்போ தான் இப்பிடி எதையோ தின்ன எதுவோ மாதிரி சுத்திட்டு இருக்கான். நடு ராத்திரி கிளம்பணுமே பெட்டிய அடுக்கினானா பாரு! எப்போ வருவானோ தெரியல. எல்லாம் இந்த அமெரிக்கா சகவாசம் சரி இல்லன்னு நினைக்கிறேன்! ஒரு பொண்ணோட தங்கி இருக்கான். அவ பாய் ஃப்ரெண்ட் எப்போவாது தான் வருவான் போல.. சார் தான் அவளுக்கு எடுபிடி! இப்படி நான் அவன் ஃப்ரெண்ட சொன்னேன்னு தெரிஞ்சுது.. கோவிச்சுப்பான்!
அந்த ஃப்ரெண்ட்ஷிப் உன் மாமாக்கு ஆபத்தா தோணவே இப்போ பொண்ணு பாக்கறேன்னு நிற்கிறார். இவன் மடியில கனமில்லையாம்.. யார வேணும்னாலும் பாருங்கன்னு சொல்லிட்டான். அவர் ஃப்ரெண்டு குடும்பம் இங்க விழுபுரத்துல இருக்க சொந்தக்காரங்க வீட்டு ஃபங்ஷனுக்கு வந்திருக்காங்க அது தான் அவர் ஃப்ரெண்ட பாக்க போனார். பொண்ண உன் மாமாக்கு பிடிச்சு போச்சு போல.. அவர் ஃப்ரெண்டுக்கு எபிய ஏற்கனவே பிடிக்கும். இந்த பையன் சரின்னு சொல்லிட்டா பொண்ணுட்ட கேட்டுடலாம்.. வாய் திறக்கிறானா பாரேன்.”. அவர் ஒரு பக்கம் புலம்ப… அவரை புலம்ப விட்டவனோ வீட்டிற்கு வெளியே நின்றிருந்த மகிழுந்தில் அமர்ந்திருந்தான்.
சில மாத வேதனையோடு முடிந்துவிட்டது என்று தான் நினைத்தான். சோகம் எஞ்சாது என்று தான் நினைத்தான். ஆனால் போன சோகம் போனதாயிருக்க புதிதாக மீண்டும் எங்கிருந்து தான் இப்படி மனம் வலிக்குமோ? இவளைக் கடந்து போகவே முடியாதா? சொல்லாத காதலுக்கு ஏன் இத்தனை வலி என்றே புரியவில்லை மனோவிற்கு!
அலர்விழியை குற்றம் சொல்ல முடியாது. அவள் காதல் பார்வை பார்க்க இவன் தானே தோழன் என்று கரம் நீட்டினான்! இன்று அவளுக்கு வேறு வாழ்க்கை முடிவாக இவன் மௌனம் தானே காரணம்! இருந்தாலும் ஒரு வார்த்தை தன்னிடம் கூறியிருக்கலாம் என்று தோன்றியது.
விழிக்கு என்னானதோ என்று பதறி எத்தனை பதட்டத்தோடு தனக்கான வேலையை நடுவிலே விட்டு வந்திருந்தான். எல்லாம் இவளை காணத்தானே. வந்த அன்றே அவளுக்கு அழைக்க.. “ஏய் அலர்.. அவனே தான் டி.. உன் பாஆஆய் ஃப்ரெண்ட் மனோ..”, என்று அலர்விழி தோழி நக்கலாய் சிரித்துக் கொண்டே இவளிடம் கைப்பேசியை நீட்ட.. “சொன்னா புரியாதா இவனுக்கு! உயிர எடுக்கிறான். இவனுக்குப் பயந்தே ஃபோன ஆஃப் பண்ணி வைக்க வேண்டி இருக்கு! எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லி அந்த கர்மத்த ஆஃப் பண்ணி தூர போடு!” என்று தோழியிடம் கூறியதிற்குப் பதில் இவனிடமே ‘நமக்குள் நட்பு கூட வேண்டாம்’ என்று கூறிவிட்டு முடித்திருக்கலாமே என்பது தான் அவனின் தீரா வலியாகிப் போனது.
கடைசியில் எவனோ பெயர் தெரியாதவன் கூறியது தான் உண்மை போலும்!
கண்கள் மூடி படுத்துக் கொண்டவனுக்கு எஸ்தரிடமிருந்து அழைப்பு வந்தது.
“என்ன மா?”
“பெட்டி அடுக்க வேண்டாமா? எப்போ வர?”
“எதையாது எடுத்து வைங்க! காலைல 3:30க்கு ப்ளைட். ஒரு மணிக்கு தான் வர முடியும்.”
போதும் இவளைப் பார்த்தது வரை போதும் என்று எண்ணிக் கொண்டான்! கண்காணத் தேசத்திற்கு நாளை போனால் இவள் சுவடு மனதிலிருந்து மறையும் வரை இந்த பக்கமே தலை வைத்துப் படுக்கக் கூடாதென்று முடிவெடுத்தான்!
சொல்லாத காதல் அவனை முற்றிலும் பொசுக்க, மூடிய கண்களுக்குள் தேங்கி நின்ற குளம் வெளிவராமலே வற்றிக் கொண்டிருந்தது.
காண்டா மிருக வண்டு என்று ஒரு வகை வண்டு, உயர்ந்து நிற்கும் தென்னை மரத்தின் விரியாத குருத்து, மலராத பாளை முதலியவற்றைக் கடித்து உண்டுவிடும்! தவறான புரிதலும் அப்படி தான்.. மௌனமான காதலை சுவடே இல்லாமல் வேரோடு அழித்துவிடும்!
