Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ19_1 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  19_1

 

“துளசி.. நம்ம பஸ் வந்திடுச்சு.. ஏறாம என்ன வேடிக்கை?” விஜயா கூற..

 



Advertisement

“தோ கா..” நாலா திசையும் பார்த்தவள் கண்ணில்.. தூரத்திலிருந்து வந்த அந்த சின்ன தலையசைப்பு படவும் நிம்மதியாய் ஏறினாள்.

 

“வரவேண்டாம்” என்று சொல்லிப் பார்த்தாள்.. “இன்னும் ரெண்டே ரெண்டு நாள்.. என் நிம்மதிக்காக” என்று கூறியிருந்தான் மூர்த்தி!

Advertisement

 

Advertisement

நேற்று இரவே முடிவு செய்திருந்தாள்.. இனி தேவை இல்லாமல் மூர்த்தியை தொந்தரவு செய்யக் கூடாதென்று. அவனுக்கு கொடுத்த மனகஷ்டம் வரைக்குமே போதும் என்று. எந்த காரணத்திற்காக அவனை விட்டு விலகினாளோ அந்த காரணம் மாறப்போவதில்லை. மீண்டும் அவனோடு ஒட்டிக்கொண்டால்.. அவன் மனதைச் சஞ்சல படுத்துவதோடு கல்லூரியிலும் பேராசிரியருக்கு அவப்பெயர் வந்துவிடாதா?

 

“ஓய்… உன்ன நான் என்ன சொன்னேன்?” விஜயா கேட்க..

Advertisement

 

“சாரி… சாரி… அக்கா இல்ல. விஜி!”

 

“ம்ம் அது! இந்த வருஷம் தான் பாஸ் அவுட்… என்னைப் போய் அக்கான்னு கூப்பிட்டு ஆண்டி ஃபீலிங் குடுக்காத!”

 

“ம்ம்”

 

“ஆமா… அது யாரு தினமும் உன்னையே சுத்தி சுத்தி வரார்..? சரியான நாட்டுக் கட்டை… உன் ஆளா? அட்டகாசமா இருக்கார்”

 

‘இது என்ன டா பேச்சு’ என்று பார்த்தாள்.  ‘ஆம், ஆள் அட்டகாசமாகத் தான் இருக்கார்’ உள்ளுக்குள்  மென்மையான  சில்லிட்ட தென்றலின் வருடல். மேனி சிலிர்த்தது.

 

“என்ன பதிலே காணோம்?”

 

இவள் பதில் கூற முடியாமல் விழிக்க…

 

“நீ எதுக்கு முழு முட்டையை முழுசா முழுங்கின மாதிரி முழிக்கிற? எனக்கு தெரியாதுன்னு நினைக்காத.. ரெண்டு தரம் அவர் ஹாஸ்டல் வந்திருந்த போது பார்த்தேன். அவர பார்த்ததும் அப்படி என்ன டென்ஷன்..? முகமெல்லாம் சிகப்பாகிடுது! அவர் கண்ணும் உன்ன விட்டு இப்படி அப்படி நகர மாட்டேங்குது?”

 

அவள் விடுதியின் ஆல் இந்தியா ரேடியோ. ‘ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாரயணசுவாமி’ எப்படி அன்றைய தினங்களில் பிரபலமோ… அதே போல் ‘விஜியின் செய்தி வாசிப்பும்’ அவர்கள் விடுதியில் பிரபலம்.

 

‘இன்னுமா ஸ்டாப் வரல?’ அவள் பார்வை வெளியே செல்ல

 

“சரி விடு! ரேகிங் எல்லாம் எப்படி போகுது?” பதில் எல்லாம் விஜயாவிற்கு தேவைப் படவில்லை. பேசிக்கொண்டே போனாள்..

 

“லைஃப்ல ஃப்ர்ஸ்ட் இயர் மாதிரி வராது தெரியுமா? முதல் நாள் நான் கூட ரொம்ப பயந்தேன். அருண் கேங்க் கிட்ட தான் மாட்டினேன்.. படா படுத்தி எடுத்தாங்க. ரெண்டு வாரம் யார் கிட்ட மாட்டி முழிக்க போறேன்னு கை கால் எல்லாம் உதறும்! அப்புறம் யார் எல்லாம் நம்மள ரேகிங் பண்ணி கொடுமை பண்ணினாங்களோ அவங்க எல்லாரும் ‘பிரெஷர்ஸ் டே’வோட நம்ம ஃப்ரெண்ட்ஸ் ஆகிடுவாங்க. சீனியர மட்டும் பகச்சுக்கவே கூடாது. என்ன..? பாடு.. ஆடு.. இத சொல்லு.. அத சொல்லுன்னு காமெடி பண்ணுவாங்க. அவங்க சொல்லறத இந்த ரெண்டு வாரம் செஞ்சுடு.. அவங்க உனக்காக எப்போவும் சப்போர்ட் பண்ணுவாங்க! ரெண்டு வாரம் நான் அருண் கிட்ட அடங்கிப் போகவே.. இப்போ பார் வாழ்க்கை முழுசா அவர் எனக்கு அடங்க ரெடி ஆகிட்டார்..” அவள் சிரிக்க… இவள் “ம்ம்…” என்று தலையை நாலா பக்கமும் ஆட்டி வைத்தாள்.

 

“வாய திறந்து பேசு துளசி… இவ்வளவு அப்பாவியா இருந்த.. மெட்ராஸ் பசங்க உன்ன முழுசா முழுங்கிடுவாங்க.. பாக்க வேற அல்வா துண்டு மாதிரி இருக்க.. இல்ல இல்ல வெண்ணையால குளிப்பாட்டின பால் கோவா மாதிரி வழுவழுன்னு இருக்க… அப்படியே முழுங்கிடுவானுங்க. பத்திரம்!”

 

துளசியின் சுயரூபம் தெரியாமல் அவள் பேசிக் கொண்டே போக.. மீண்டும் இவள் விழிக்க..

 

“உன் ஸ்டாப் வந்திடுச்சு! பாய்!” என்று வழியனுப்பி வைத்தாள்.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

நேற்று காபியை வாங்கி தந்தவனும் இதையே தான் அவள் காது தீய்ந்து போகும் மட்டும் சொற்பொழிவாய் ஆற்றினான். ‘ஒரு சின்ன கேப் கிடைச்சுட கூடாது மனுஷன் லெக்சரர்-ன்னு நிரூபிச்சுடுவார். ஒத்த ப்லேட் சாம்பார் இட்டிலிக்கு ஆசைப் பட்டு இப்படி எலி போறியில நேரா போய் தலையை விடுவியா துளசி?’ என்று எண்ணி முடிக்கும் முன் அவர்கள் ஒப்பந்தத்தை நினைவு படுத்தி அவள் நினைத்ததை வாங்கிக் கொண்டான்.

 

‘இவர் முன்னாடி இனிமேல் எதையுமே யோசிக்கக் கூடாது’ நேற்று எடுத்த சபதம்!

 

கல்லூரியின் நுழைவாயிலைப் பிரமாண்டமாக அலங்கரித்திருந்த பெரிய வளைவைத் தாண்டி வளாகத்திற்குள் நுழைந்தவள் கண் தானாய் ‘நேற்றைய மரத்தடியை’ நோக்கியது. அவளை ஏமாற்றாமல் நின்றிருந்தான் ராட்னி. குச்சி பெண் ஒருத்தி ‘சல்யூட்’ அடித்துக் கொண்டிருந்தாள் சுருட்டையைப் பார்த்து. புன்னகை மன்னன் புன்னகையை வாரி வழங்கிக் கொண்டிருந்தான். நேற்று கேலி பார்வை பார்த்த மற்ற இருவரும் இல்லை. துளசி எதையும் யோசிக்கவில்லை.. நேரே ராட்னி முன் போய் நின்றாள். அதுவரை அவன் உதடு செய்து கொண்டிருந்த வேலையைக் கண்ணும் எடுத்து கொண்டது.

 

அப்பொழுது தான் கவனித்தாள். அந்த கண்ணில்.. அவன் பார்வையில் ஆர்வமும் குறும்பும் மட்டுமே கொப்பளிப்பதை.

 

சுருட்டையைப் பார்த்தாள். “மேடத்துக்கு சல்யூட் போடு” என்று பாடிக்கொண்டிருந்த குச்சி பெண்ணிடம் அவன் அதிகாரத்தைக் காட்ட.. அவளும் சமத்துப் பெண்ணாய் ஆர்மி சிப்பாய் ரேஞ்சிற்கு “குட் மார்னிங் சீனியர் மேடம்” என்று பெரிய சல்யூட் ஒன்றை வைத்தாள். துளசி உதட்டில் புன்னகை, ராட்னி விண்ணில் பறந்தான்.

 

சுருட்டை, “இங்கிலீஷ்ல கங்காரு எப்படி சொல்லணும்? சொல்லிட்டு போ” என்றான் அந்த பெண்ணிடம்.

 

அவள் பாவம் போல் துளசியைப் பார்க்க… அவளோ ராட்னியின் வேலையை செய்து கொண்டிருந்தாள்.

 

தவறாய் சொல்லி யார் நூறு முறை அதை எழுதுவது? “தெரியால ண்ணா..” என்றாள் சுருட்டையைப் பார்த்து.

 

“ஏய்… என்ன கொழுப்பா… சார் சொல்லு. அண்ணாவாம் அண்ணா..” எகிறினான் சுருட்டை.

 

மற்றவனை பார்த்தாள். “கேங்கரூ..” என்றான் ராட்னி.

 

“அது மாதிரி குதிச்சுகிட்டே க்ளாஸ் வரைக்கும் போ. குதிக்கிறதை நிறுத்தின… ஜாக்கறத! நாளைக்கு அத பத்தின எல்லா விஷயமும் சொல்லணும் புரியுதா..? குதிச்சுகிட்டே ஓடு.” என்று துரத்திவிட்டான். ஐந்தரையடி உயரம். பொங்கி வழிந்த இடை சதை.  டார்க் சாக்கலேட் நிறம். ஸ்ப்ரிங் போல் தலையை நிறைத்த அடர் கேசம்.  எவ்வளவு தான் டெரர் பீஸ் என்று நிரூபிக்க நினைத்தாலும் காமெடி பீஸ் தான் என்றது அவன் தோரணை.

 

மார்புக்குக் குறுக்காய் புத்தகத்தை அணைத்தவாறு கரங்கள் கட்டியிருக்க… சுருட்டையைப் பார்த்து நின்றவளிடம்.. “சாரி சிஸ்டர். நான் நேத்து வேணும்னு செய்யல. தெரியாம செஞ்சாலும் தப்பு தப்பு தான்! மேத்ஸ் லெக்சரர் வார்ன் பண்ணினார். ரொம்ப சாரி! மாட்டி விடாததுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்றான் ஜக் (ஜகன்), கையை கட்டிக் கொண்டு.

 

அந்த பெண் இன்னும் குதித்துக் கொண்டே செல்ல… துளசியால் விரிந்த உதட்டை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவே முடியவில்லை. வாய் விட்டுச் சிரித்தாள். இவ்வளவு தானே… எவ்வளவு சுலபமாக பெண் செய்துகொண்டிருக்கிறாள்!  ஒரு நன்றி உரைக்க நேற்று எத்தனை போராட்டம்.

 

கண் ராட்னியை நோக்க… “ஹாய் டுல்சி” என்றான்.

 

இருவரும் புன்னகைத்துக் கொள்ள.. “தாங்க்ஸ்..” என்றான் புன்னகை மாறாமல்.

 

“எதுக்கு..? நீங்க அழகா இருக்கீங்கனு நான் சொல்லவே இல்லியே..” என்றாள் நமுட்டு சிரிப்போடு.

 

இன்னும் அழகாய் சிரித்தான். “நீ சொல்லாம எனக்கு தெரியும். நானும் கண்ணாடி பார்க்கும்” என்றான்.

 

சத்தம் கூட்டி சிரித்தாள். எங்கிருந்தோ இரு கண்கள் நிம்மதியாய் அவள் சிரிப்பைப் பார்த்துச் சென்றது. தேறி விடுவாள் அவன் துளசி!

 

[the_ad id=”6605″]

 

 

 

“நான் தாங்க்ஸ் சொன்னேன். நீ ‘நாட் டூ மென்ஷன்’ சொல்” என்றான்.

 

“நீங்க திருந்த மாட்டீங்க.. நீங்க சொன்ன பிறகு நான் ‘நாட் டு மென்ஷன்’ சொல்லணுமா…? அப்போ நேத்து நான் தாங்க்ஸ் சொல்லி இருந்தாலும் இதைத் தானே சொல்லி இருப்பீங்க? சொல்லாதன்னு சொல்ல போற ஒண்ண சொல்லுன்னு என்னை எதுக்கு படுத்தினீங்க?” வேண்டுமென்றே வம்பு வளர்த்தாள்.

 

பாவம் அவனுக்குப் புரிந்தால் தானே பதில் உரைப்பான்? அர்த்தம் வேண்டி சுருட்டையைப் பார்க்க.. தனக்கும் இங்கு நடக்கும் சம்பாஷனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் குனிந்து பிடரியை தேய்த்துக் கொண்டிருந்தான்.

 

புன்னகை முகமாகப் பேசி நின்ற துளசி ராட்னியை முற்றிலுமாக ஈர்க்க.. “யூ ஆர் வெரி ஸ்வீட்” என்றான்

 

சற்று முன் விஜி கூறிய பால்கோவா நினைவில் வர சிரிப்பு நீண்டது. அதே மனநிலை மாறாமல், “நான் சாப்பிட்டு பார்த்துட்டு பதில் சொல்றேன்” என்று கூறிவிட்டுச் சென்றவள் மனது அமைதியை உணர்ந்தது.

 

“வளைஞ்சு கொடுக்க வேண்டிய இடத்தில வளைஞ்சு, விட்டுக் கொடுக்க வேண்டிய இடத்தில விட்டு கொடு. நான் பிடிச்ச முயலுக்கு மூனு கால் தான்னு அடம் பிடிக்காத. நான் படிக்கும் போது பொண்ணு பையன்னு நாங்க பெரிய கேங்க். லைஃப்ப ரொம்ப என்ஜாய் பண்ணினோம். வாழ்க்கையை அது போக்கில வாழ கத்துக்கோ. இழுத்துப் பிடிக்காத துளசி. எல்லார்கிட்டயும் எதிர்த்து போராட அவசியம் இல்ல துளசி மா..” அவள் மூர்த்தி தான்! வேறு யாரின் அறிவுரையையும் பொறுமையாக அவள் கேட்டதாகச் சரித்திரம் இல்லையே!

 

வாழ்வின் போக்கில் வாழ்ந்து தான் பார்ப்போமே.. என்ற எண்ணம் எட்டிப்பார்க்க… இன்றைய தினம் சுவாரசியமாக ஆரம்பித்தது. இந்த நிமிடம் வரை ரசித்தது. மூக்கை சீந்தி என்னத்தைக் காண? தனித்து நின்று.. வாழ்வின் மட்டத்தைக் கண்ட பொழுதே துவண்டு போகாதவள்.. இன்று ஊன்று கோல் இருக்கக் கேட்கவா வேண்டும்?

 

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியை தெரியாது.. வதங்கி நின்ற வேளை கை கொடுத்து எழுப்பி நிறுத்தி, இன்று முதுகெலும்பில் வலிமை கொடுக்கும் மூர்த்தியை தெரியும். மூர்த்தி இருக்க பயமேன் என்ற நம்பிக்கை வலுக்க.. ஒரு வித துள்ளலோடு வலம் வந்தாள். வகுப்பறைக்குள் நுழைந்ததும் முதலில் பார்வை வட்டத்தில் விழுந்தது குச்சி பெண், வெண்ணிலா தான். இவள் சிரிக்க.. அவள் முறைக்க.. அழகிய நட்பெனும் விதை இதயத்தில் விழுந்தது.

 

நாட்கள் அதன் போக்கில் சென்றது. மூர்த்தியும் துளசியும் ஒரே கல்லூரியென்றாலும் இருவரும் கல்லூரியில் பார்த்துக் கொள்வதே அரிதானது. அவளுக்கென்று தோழிகள் வட்டம். காலை நேரம் நிலா, ராட்னி, சுருட்டையோடு மாநாடு என்று சுகமான கல்லூரி வாழ்க்கை!

 

வாரத்திற்கு ஒரு முறை விடுதிக்கு சென்றுவிடுவான் அவளைப் பார்க்க. அன்று மனநல மருத்துவரிடம் சென்று வருவார்கள். முதலில் வாரம் ஒருமுறை மருத்துவரைப் பார்த்து வந்தவர்கள் இப்பொழுதெல்லாம் மாதத்திற்கு ஒரு முறை சென்றனர். நல்ல முன்னேற்றம் அவளிடம்.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

மூன்று மாசம் எந்த அலட்டலும் இல்லாமல் சென்றது. அன்று மாலை ஐந்து மணியளவில் மூர்த்தி கல்லூரி முடிந்து வீட்டிற்குச் செல்லும் வேளை, துளசியைப் பார்த்தான்.. தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் கண் விரிய.. பெண் முகம் மலர்ந்தது.

 

“என்ன துளசி தனியா வாக்கிங் போறியா?” இரண்டு மணி நேரம் முன்பே அவளுக்கு வகுப்பு நேரம் முடிந்திருக்க, அவளைத் தெருவில் அவன் எதிர்பார்க்கவில்லை.

 

“இல்ல மூர்த்தி சார்.. அசைன்மென்ட் முடிக்க பேப்பர் இல்ல.. வாங்க போயிட்டு இருகேன்..” என்றாள். அந்த வார இறுதியில் அவளின் உபயோகத்திற்கென்று ஒரு சைக்கிள் வாங்கி கொடுத்தான்.

 

“காலேஜ் வரது போறது உன் ஃப்ரெண்ட்ஸ் கூடனாலும்… தனியா கடைக்குப் போகும் போது யூஸ் பண்ணிக்கோ. வெயில்ல அலையாத.” என்றான்.

 

இது வேண்டும்! இது தேவை.. இது எனக்கு ஆசை! இப்படி எதுவும் அவள் உதிர்க்க வேண்டாம். தானாய் வந்துவிடும். வேண்டாம் என்று சொல்லி அவனுக்குப் புரியவைக்கவும் முடியாது. காது ஜவ்வு கிழியும் வரை லெக்சர் கேட்பதற்கு வாங்கி தருவதை வைத்துக் கொள்ளலாம் என்பது அவள் பட்டபின் அறிந்தது.

 

பாதி வருடம் முடியவும் வெண்ணிலா அவள் தங்கியிருந்த பெரியம்மா வீட்டிலிருந்து துளசி இருந்த விடுதிக்கு இடம் பெயர்ந்தாள். தனியறையிலிருந்த துளசி, நட்பின் நிமித்தம் அவள் அறையை பங்குபோட்டுக் கொண்டாள் வெண்ணிலாவோடு. அதன் பின் மெல்ல அவிழ ஆரம்பித்தது துளசியின் வால்.

 

துளசி, விஜயா, வெண்ணிலா மூன்று பேரும் ஒரே ரகம் என்பதாலோ என்னவோ..  விடுதி வாழ்க்கை மூவருக்கும் ருசிக்க ஆரம்பித்தது. வார்டனுக்கு தலை வலியும் ஆரம்பமானது.

 

 

 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!