Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ20_2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..

கொல்லை துளசி எல்லை கடந்தால் – 20_2

 

ஒரே நிலவு தான். அவரவர் மனநிலைக்கு ஏற்ப சிலருக்கு சுடுகிறது, சிலருக்கு குளிர்கிறது!

 



Advertisement

அந்த ஏகாந்த இரவில், வெள்ளியை உருக்கி ஆடையாய் உடுத்திக்கொண்டிருந்த கடல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. பார்க்க மிகவும் பிடித்த காட்சி மாதவனுக்கு. பௌர்ணமி அன்று வந்துவிடுவான், நிலவு மங்கை கடலோடு உருகிக் களிப்பதைப் பார்க்க.

 

ஈ.சி.ஆர். கிளை சாலை, கடற்கரை மணலோடு முடிந்திருக்க.. மனித நடமாட்டமில்லாத அந்த இரவின் தனிமையில் தன் ஹாண்டா சிட்டி மேல், தலைக்கடியில் கைகோர்த்து ஒற்றை கால் முட்டி மடித்துப் படுத்துகொண்டு நட்சத்திரங்களை எண்ண முயன்று தோற்று கொண்டிருந்தான் மாதவன்.

Advertisement

 

Advertisement

இம்முறை பௌர்ணமிக்கு இருதினம் முன்பே வந்துவிட்டான் நிலவு மங்கையைத் தேடி. ஆனால் அந்த வெள்ளி நிலவாலோ.. முகத்தைத் தீண்டி உடலைச் சிலிர்க்கச் செய்த உப்பு காற்றாலோ.. அவன் மனதில் அடித்து கொண்டிருக்கும் சூறாவளியை அமைதிப்படுத்த முடியவில்லை. மனம் கனத்தது.

 

வாழும் காலம் சொற்பமே.. நாம் சென்றபின்னும் எதையும் எடுத்துச் செல்வதில்லை. சேர்த்து வைத்த வெட்டி கௌரவம்.. கர்வம்.. பகட்டு..? இதெல்லாம் என்ன? உருவமற்ற இதற்காக உயிரோடு இருக்கும் ஜீவனின் நிம்மதியை கெடுக்க எவ்வளவு ஆர்வம் தான் நமக்கு!

Advertisement

 

நாளை தினத்திற்கான பொலிவோ துள்ளலோ அவனிடம் இல்லை. வீட்டில் அவன் விருப்பத்திற்கு இணங்கியிருந்தால் அவனும் இந்த நாளை கேலியும் கிண்டலுமாக நண்பர்களோடும் உறவுகளோடும் கழித்திருப்பான்.

 

“உனக்கு என்ன முதுகு முறிஞ்சா போச்சு மாதவா..? உன்னால ஒன்ன பெத்துக்க முடியாதா? ஏண்டா ஏற்கனவே ஒன்ன பெத்து வச்சிருக்கவள கட்டிக்க போறேன்னு நிக்கற?”

 

“உனக்கு ஏதாவது பிரச்சனையாடா? சொன்னா வைத்தியம் பாத்துக்கலாம் மாதவா! மெடிசின் ரொம்ப முன்னேறிடுச்சு மாதவா! எதுனாலும் வைத்தியம் பாத்துகலாம் டா.. அதுக்காக பாழும் கிணத்துல குதிப்பன்னு அடம் பண்ணுவியா?”

 

“என்ன குலமோ.. என்ன கோத்திரமோ? நம்ம ஆள் கூட இல்ல அவ! உனக்கு என்ன தல எழுத்தா?”.

 

இரண்டு மாதமாக தினம் தினம் கேட்டு மாதவனால் சகிக்க முடியவில்லை. இன்று பாக்கியம் அவரின் கடைசி அஸ்திரத்தை எடுத்தார்.. இவன் இங்கு வந்து படுத்துக் கிடக்கிறான்!

 

“நீ எல்லாம் என்ன அண்ணன்? வயசு தங்கச்சிய வச்சுகிட்டு குலம் கோத்திரம் இல்லாத அனாதைய கூட்டீட்டு வருவேன்னு நிக்கிற? என்னத்த காட்டி மயக்கினா உன்ன? அப்பிடி உனக்கு அவசரம்னா கல்யாணம் பண்ணி வைன்னு எங்கட்ட கேக்க வேண்டியது தானே… உன் அவசரத்துக்கு, கூட பிறந்தவள பலி கொடுக்குற? நாளைக்கு இவளுக்கு நல்ல மாப்பிளை கிடைப்பானா? அப்பிடி அவளதான் கட்டுவேன்னு நின்னா.. என் பொணத்த தாண்டி தான் நடக்கும்!”, என்றவர் அவர் படுக்கையறைக்குள் சென்று பூட்டிக் கொள்ளவும் அவன் கிளம்பி வெளியே வந்துவிட்டான்.

 

என்னா ஆனாலும் அபியில் கழுத்தில் தாலி கட்டியே தீர்வேன் என்ற பிடிவாதத்தோடு படுத்துக் கிடக்கிறான்.

 

அவன், அவளுக்கு இங்கு வைத்துத் தானே நம்பிக்கை வார்த்தை கூறினான்.. அவளையும் மகளையும் விட முடியாது! அன்று இதே மணலில் அபிகேலிடம் பேசியது நினைவை நனைத்துச் சென்றது. கூடவே பொக்கை வாய் அவனைப் பார்த்துச் சிரிக்க.. மித்து பாப்பா நினைவில் முகம் புன்னகையைப் பூசிக் கொண்டது. அந்த குட்டி தேவதை முகம் பார்த்தபின்னும் அம்மாவால் எப்படி பேச முடிந்தது? இழுத்து மூச்சை விட்டுக் கொண்டான். அந்த பால் நிலா முகங்களுக்காக முள்ளிலும் நடக்கலாம் என்றது அவன் மனது.

 

இரண்டு மாதங்கள் முன் நடந்ததெல்லாம் கண்முன் வந்து சென்றது. காரணமே இல்லாமல் என்னவெல்லாம் பேசிவிட்டார் பாக்கியா அவளை! சபை நடுவே… எப்படி அம்மாவால் முடிந்தது? பத்தாயிரம் முறை கேட்ட பின்னும் பதிலில்லை அவனிடம். அந்த பட்டு முகம் வாடியது ஏனோ அன்று இவனுக்கு வலித்தது.

 

எல்லாம் அர்ச்சனா வீட்டு விருந்தில் ஆரம்பித்தது. மணமகன் வீட்டுச் சொந்தங்கள் எல்லாம் சென்ற பிற்பாடு என்ன நடந்ததென்று அவனுக்கு முழுவதுமாக தெரியாது. மாப்பிள்ளை – பெண்ணை தேனிலவிற்காக விமான நிலையத்தில் இறக்கிவிட்டு, அத்தை வீட்டிற்குள் நுழைந்த வேளை உள்ளே அரங்கேறிக் கொண்டிருந்த எதுவும் உவப்பாயிருக்கவில்லை.

 

உணவு உண்ண பாக்கியமும் அமராவதியும் மாடியில் காத்திருக்க.. இது தெரியாது அம்பிகா, தலை வலியில் இருந்த தியாகுவை உணவு உண்ண அழைத்துச் சென்றதில் ஏற்பட்ட மனத்தாங்கல் சற்று நேரத்தில் காயப்படுத்தும் வார்த்தைகளாய் வெடித்துச் சிதறியது.

 

“வாங்க அண்ணா ரெண்டு வாய் சாப்பிடுங்க. மாத்திரை தரேன் போட்டுட்டு கொஞ்ச நேரம் படுங்க. இங்க இருந்தே ஸ்டேஷன் போறனால டைம் இருக்கு… வாங்க அண்ணா. நீங்களும் வாங்க அண்ணி..”, என்று அம்பிகா தலைவலியில் அமர்ந்திருந்த தியாகுவோடு சௌந்தர்யாவையும் அழைத்துச் செல்ல.. மாடியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த அம்பிகா கணவனும் அவர் பங்கிற்கு.. “வாங்க சப்பிடுங்க” என்று அப்பொழுது காலியான இரு இருக்கையில் அமர வைத்து.. இவர்களுக்கு அவரே பந்தி பரிமாற.. ஆரம்பித்தது வினை!

 

அமராவதி, பாக்கியா இருவருக்கும் காதிலும் மூக்கிலும் புகை வரவில்லை.. அவ்வளவே! சும்மா பேசிக் கொண்டிருந்த அவர்கள் கணவன் மார்களையும் உசுப்பேற்றி விட்டனர். 

 

‘அது எப்படி தங்களை விட இவர்கள் எதில் உயர்ந்துவிட்டனர்’ என்ற கர்வம் தலைதூக்கியது. கௌரவ பேய் பிடித்த அமராவதி, “அம்பிக்கு யார எங்க வைக்கணும்னே தெரியாது! கூட பிறந்த என்னையும் அவளுக்கு தெரியல.. புருஷன் கூட பிறந்த உங்களையும் கண்ணு தெரியல! அன்னக்காவடிங்கள தலையில வச்சுட்டு சுத்தறா! நான் ஒன்னும் கேக்க முடியாது! நீங்க அவ அண்ணி தானே… பேச உரிமை இருக்கவங்க தட்டி கேக்காட்டா எப்பிடி? சொந்த அண்ணன் வீட்டுல உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதையா?”, எரிந்துக் கொண்டிருந்த பாக்கியாவின் வயிற்றில் எண்ணை ஊற்றிவிட்டார்.

 

அம்பிகாவும் சரி அவர் வீட்டில் மற்றவர்களும் சரி.. மனிதர்களை அவர்கள் குணம் கொண்டு பழகுவார்களே தவிற அவர்கள் குறைகளை அதிகம் கண்டு கொள்வதில்லை. பணம்.. பகட்டு.. இனம்.. மதம் எல்லாம் அவர்களுக்குப் பொருட்டல்ல. அவருக்கு தியாகு குடும்பமும் ஒன்று தான் வைத்தியநாதன் குடும்பமும் ஒன்று தான்!

 

அப்படி அவர் இரு குடும்பங்களையும் சமமாக நடத்தியது பாக்கியத்திற்குச் சற்றும் பிடிக்கவில்லை. அமராவதி வாயை மூடியிருந்தால் கூட பாக்கியம் மலை ஏறியிருக்க மாட்டார்.. ஆனால் விதி யாரை விட்டது?

 

இங்கு புகைந்து கொண்டிருப்பது தெரியாமல், விமான நிலையம் கிளம்பிக் கொண்டிருந்த மாதவன், வினோவை சீண்ட எண்ணி, “மச்சான்.. மாமாவோட ஃப்ரெண்டு பையனுங்களுக்கு ஒரே வீட்டு அக்கா தங்கை பாக்குறாங்களாம். தியாகு சித்தப்பாட்ட பேசிட்டு இருந்தாங்க.. என்ன ஆச்சுன்னு தெரியுமா?”, என்று அவன் இரத்த கொதிப்பை ஏற்றி விட்டுச் சென்றான்.

 

வினோத் பதறுவான்.. இவனிடமே வந்து நிற்பான் என்று மாதவன் நினைத்து விமான நிலையம் சென்றுவிட… அவன் வீட்டிற்குத் திரும்பும் முன் வினோத் அவன் பெற்றவர்களிடம் அவன் விருப்பத்தை உரைத்து… இப்பொழுதே நகுநாவை தனக்கு உறுதிபடுத்த கேட்டு நின்றான்!

 

“மானத்த வாங்காத வினோ.. இப்போ தான் அர்ச்சனா விஷேசம் முடிஞ்சுது. அதுக்குள்ள பேச முடியாது. ஒரு நல்ல நாள் பாத்து அவங்க வீட்டுக்குப் போய் ரெண்டு பொண்ணுங்களையும் முறையா கேக்கறோம்.”, என்றுவிட்டார்.

 

இருதினங்களில் அவன் வேலையைப் பார்க்கச் சென்றால் மீண்டும் எப்பொழுது வருவானோ? அவன் வேகத்திற்கு அம்மாவும் அப்பாவும் சரி வரவில்லை.

 

ஜாடை மாடையாக மாமாவிடம் கூறி வைப்போம் என்று அவர்களைத் தேடி போக, அறையில் அலர்விழி வீட்டின் மூன்று தலை முறைப் பெண்களும் அமர்ந்திருந்தனர்.

 

சகுந்தலா பாட்டி அமர்ந்திருக்க இவனும் பாட்டியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

 

உள்ளறையில் அபிகேல் பிள்ளை வயிற்றை நிரப்பிக்கொண்டிருக்க, வெளியே இருந்த சௌந்தரியா ஆதங்கம் தாளாமல் அலர்விழியிடம் அபிகேயில் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார். பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தவன் கவனம் சிதறியது.

 

“ரொம்ப சின்ன பொண்ணா இருக்காளே பாப்பா.. வீட்டுக்காரர் எப்பிடி இறந்தாராம்?”

 

‘இறந்தாரா? இது என்ன புது கதை?’ கணவன் இல்லை என்றதின் பலனாய் வந்த கேள்வி!

 

“பாப்பா வயித்துல இருக்கும் போது ஒரு ஆக்ஸிடென்ட் போல.. அப்போ போயிட்டார்..”, என்று அலர்விழி பூசி மொழுகி வைத்தாள்.

 

அந்த பிஞ்சு தகப்பனில்லாமல் வளர்வதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

 

“இப்போ இல்லேனாலும் கொஞ்ச வருஷத்துல வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லு பாப்பா. காலம் பூரா தனியா வாழறது கஷ்டம். கைக்குழந்தைய வச்சுட்டு பாவம் பொண்ணு தனியா அல்லாடுது.”

 

“அவங்களுக்கு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க எல்லாம் யாரும் இல்ல ம்மா. யாராவது விரும்பி கல்யாணம் பண்ணினா உண்டு!”

 

“அப்போ அங்கேயும் யாரும் துணைக்கு இல்லியா பாப்பா?”, சௌந்தர்யாவிற்கு தாங்க முடியவில்லை. மாமியார் மாமனார் இருந்தே வேலைக்குச் சென்று, பிள்ளைகளை வளர்க்க அத்தனை பாடுபட்டார்! இதில் யாருமில்லாமல் எப்படி இந்த சிறுப்பென் காலம் தள்ளுவாளோ என்ற பதைபதைப்பு! பெண் பிள்ளைகளை பெற்ற தாய்மார்களுக்கு சொந்தமான பதைபதைப்பு!

 

“அவங்க ஃப்ரெண்டு எபெனேசர் இருக்கார். அவரு பாத்துக்கிறார்.”

 

“அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சாமா?”

 

“இல்ல மா.. அவருக்கு இவங்க வயசு தான்! மாஸ்டர்ஸ் படிச்சுட்டு இருக்கார்.”

 

“ஐயோ அவ்வளவு சின்ன பொண்ணா டி இவ? படிக்கிற வயசு பிள்ளை தனியா நிக்குதே! அந்த பையன் எப்பிடி? நல்ல குணமாமா?”

 

“ம்ம்.. நல்லவரா இருக்கவே தானேமா பாத்துக்குறார்!”

 

“ரொம்ப நல்லது! ரெண்டு பேரும் ஒரே ஆட்கள் தான் போல! ரெண்டு பேருக்கும் பிடித்தம்ன்னா… வருஷங்கள தள்ளி போடாம குழந்த சின்னதா இருக்கும் போதே கல்யாணம் பண்ணிக்க சொல்லு பாப்பா. இவர் தான் அப்பான்னு இப்போவே குழந்த மனசுல பதிச்சுட்டா நல்லது பாரு அதுக்கு தான்!”

 

கேட்டுக் கொண்டிருந்தவளுக்குத் தான் ஐயோ என்றிருந்தது. ஆண் பெண்ணுக்குள் தோழமை இருக்கவே கூடாதா? அனைவருக்கும் அவள் மனோ தான் கிடைத்தானா அபிக்கு ஜோடியாய்? ஏனோ யாரோடும் மனோவை சேர்த்து யோசிக்கக் கூட பிடிப்பதில்லை… இதில் ஆளாளுக்கு எரிச்சலைக் கிளப்பிக் கொண்டு!

 

“அம்மா! ஏம் மா? அவங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் மா. தப்பு தப்பா பேசாதீங்க! அவங்க ரெண்டு பேருக்கும் அந்த மாதிரி நினைப்பில்ல. ஃப்ரெண்டு கஷ்ட படுறாளேன்னு உதவறார் அவ்வளவு தான்!”

 

“இந்த காலத்துல இப்படி ஒரு பையனா? என்னவோ ஒரு ஆதங்கம்! சின்ன பொண்ணு கைக்குழந்தையோட தனியா நிக்கவும் மனசு பதறுது. காலா காலத்துல இவளுக்கு ஒரு நல்லது நடக்கணும் சாமி.”

 

“அலர்க்கு எப்போ அத்த?”, அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் வாய் திறந்தான்.

 

“ஏன் த்தான்? நான் நல்லா இருக்கது காண சாகிக்கலியோ?”

 

அவன் சிரிக்க… “கேளு வினோ. எல்லா விதத்துலேயும் ஒத்துவர மாதிரி வரன் இருக்கு. பிடி கொடுக்க மாட்டேங்கறா!”

 

“அலர்க்கு மாப்பிளை ரெடியா? சொல்லவே இல்ல அத்த?”, வினோ கண் ஆச்சரியத்தில் விரிந்தது.

 

“இவ பாருங்கன்னு ஒரு வார்த்த சொன்னா.. மேற் கொண்டு பேசலாம்! இவ சம்மதம் இல்லாம நாம எங்க இருந்து வாய் திறக்க?”

 

“இப்போ என்ன அவசரம் சௌந்தர்யா?” – பாட்டி

 

“நல்ல பையன் அத்த! நல்ல வாழ்க்கை அமையும் போதே ஏற்படுத்தி கொடுத்துடணும். படிக்க வைக்கிறேன்.. வேலைக்கு அனுப்பறேன்.. எல்லாம் அவ விருப்பம் தான்.. கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கிறேன்னு சொல்லிட்டு, நம்ம ஆட்கள்ல இவ்வளவு நல்ல பையன் ஒருத்தன் கிடைக்கிறது எல்லாம் ஈசியா போச்சா உங்க ரெண்டு பேருக்கும்?”

 

“நீயாச்சு.. உன் பொண்ணாச்சு! பெத்தவளுக்கு இல்லாத அக்கறையா? எதனாலும் பிள்ளைங்க விருப்பம் கேட்டு செய்! வாழ போறது அவங்க.”

 

“நான் சொன்னது சொன்னது தான். அந்தாளுக்கு பொண்ணே கிடைக்கலியா? ஒரு வருஷமா அவனையே கட்டிக்கிட்டு அழறீங்க! எனக்கு என்னை மாதிரியே கம்யூட்டர் கூட பொழப்ப நடந்தரவர் தான் வேணும் சொல்லிடேன்” – அலர்

 

“என்ன மாதிரி மாப்பிளை அத்த பாக்கறீங்க?”

 

“ரெண்டு பிள்ளைகளையும் ஆசை ஆசையா உயிர குடுத்து வளத்திருக்கோம் வினோ. அவங்க சந்தோஷம் மட்டுமே எங்களுக்கு நிம்மதி. இன்னைக்கு வரைக்கும் குறையில்லாம பாத்துகிட்டோம். திட்டுவேன் நான்… என் பிளைங்க யார் கிட்டயும் பேச்சு வாங்கிட கூடாதேன்னு! போற வீட்டுல மாப்பிள கைல வச்சு தாங்கணும்ன்னு எல்லாம் இல்ல… பிள்ளைங்க உணர்வுக்கு மதிப்பு குடுக்கிறவரா.. அவங்கள எதுக்கும் கண்ண கசக்க விடாம இருந்தாலே போதும்!

பெரியவ உஷார். சின்னதுக்கு விவரம் போதாது. கொஞ்சம் சத்தம் போட்டாலே சுருண்டுடுவா. அவ கைய ஒரு ஊனமா நாங்க நினைக்கல. போற குடும்பத்துல அவள அதுக்காக நோகடிச்சிடக் கூடாது. அவ்வளவு தான். வேற பெரிய ஆசை எல்லாம் இல்ல!

ரெண்டு பேரும் குடும்பமா நல்லா இருக்கணும்.. நிறைஞ்ச வாழ்க்கை வாழணும்”

 

“என்ன அலர்… அத்த சரியா தான் யோசிக்கிறாங்க. அப்போ.. பாத்திருக்கிறவரும் உனக்கு ஏத்த மாதிரி தானே இருப்பார்.. படிப்பு தான் முடியப் போகுதே..”

 

“அத்தான்! கொஞ்ச நேரம் சும்மா இருங்களேன். உங்க ரூட்டுக்கு சத்தியமா குறுக்க வர மாட்டேன்.. என்னை கோர்த்து விடாதீங்க!”

 

அவள் பதிலில் அவன் முகம் ஆச்சரியம் காட்ட.. ‘எல்லாம் தெரியும்’ என்ற முகபாவனை அவளிடம்.

 

‘ஓட்ட வாய் உளறிட்டாளா?’ நகுநாவை கண்கள் தேட, அவளோ.. அவள் மாமியாரோடு!

 

அடுக்களை பக்கம் சென்றவளை அம்பிகா பிடித்துக் கொண்டார்.

 

“இந்த கலர் உனக்கு ரொம்ப அழகா இருக்கு டா..”, எனவும் பெண் பல்லைக் காட்டிக் கொண்டு நின்றுவிட்டாள்.

 

“அக்கா வேலைக்கு போறா இல்ல.. அவ சம்பளம் வச்சு வாங்கி குடுத்தா அத்த. நல்லா இருக்கில்ல!”, அக்காவின் பெருமை கீதம் பாடினாள் தங்கை.

 

“உனக்கு தெரியுமா வினோக்கு இந்த கலர் ரொம்ப பிடிக்கும்.”, என்றார்.

 

பெண் விழித்தாள்.

 

“நான் கட்டியிருக்கதும் அவன் தான் செலக்ட் செஞ்சான். அவன் செலக்ஷன் எனக்கு என்னைக்குமே பிடிக்கும்”, என்றார்.

 

‘என்ன சொல்ல வருகிறார்?’ பெண் எச்சில் விழுங்கினாள்.

 

அருகில் வந்தவர் அவள் கன்னம் வருடி, “அவனுக்கு உன்ன பிடிச்சிருக்காம்.. உனக்கு அவன பிடிக்கும்னா அண்ணா அண்ணிட்ட கூடிய சீக்கிரம் இத பத்தி பேசறேன். என்ன சொல்ற?”

 

“அத்த?” ‘கூறிவிட்டானா? தைரியம் தான்!’

 

“கட்டாய படுத்தல டா. உன் விருப்பம் தான் இங்க. உனக்கு வினோவ பிடிச்சிருக்கா? அண்ணிட்ட பேசவா?”

 

தலை வருடி அவள் விருப்பம் கேட்டுக்கொண்டிருக்க… அடுக்களைக்குள் நுழைந்த பாக்கியம் நின்றுவிட்டார்.

 

அம்பிகா, பாக்கியா, சௌந்தர்யா, இவர்கள் குடும்பங்கள் மட்டுமே இருந்தது. அபிகேயில் பிள்ளை வயிற்றை நிறப்பிவிட்டால்.. அம்பிகாவின் ஒன்றுவிட்ட அக்காவும் அபியோடு கிளம்பிவிடுவார்.

 

ஏற்கனவே பந்தியில் இவர்களுக்கு முன் தியாகுவை அமர வைத்ததே பிடிக்கவில்லை இதில் அண்ணன் மகனை நகுநாவிற்கா முடிக்கப் பார்க்கிறார்! உரிமை பட்டவள் அவர் மகளல்லவா?

 

“அண்ணி?”, அவர் இட்ட கூச்சல் வெளி வராண்டா வரை கேட்டது.

 

“என் பொண்ணு முறையா வர வேண்டிய வீடு இது! நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க?”, முகம் சிவக்க கத்தினார். பெண் பயந்து போனாள்.

 

அம்பிகா இதை எதிர்பார்த்தார் தான். ஆனால் கண்டிப்பாக இன்று இல்லை.. அதுவும் இந்த சின்ன பெண் முன்னால் இல்லை!

 

“பிள்ளைங்க விருப்பம் முக்கியம் இல்லியா அண்ணி..”, இவர் தன்மையாய் கூற,

 

“அது தான்.. அதே தான்! என் பொண்ணு? அவ விருப்பம்?”

 

கூறியவர் முகம் சிவக்க அண்ணனைத் தேடிப் போக.. வினோ குரல் கேட்ட அறைக்கு வெளியே நின்றவர் கண்ட காட்சி அவரை உரைய வைத்தது.

 

“என்ன பத்தி என்ன நினைக்குறீங்க பாட்டி?”, அவன் கேட்டுக் கொண்டிருக்க..

 

“நினைக்க என்ன இருக்கு? உன்ன தான் பிறந்ததுல இருந்தே பாக்குறேனே. உன் அம்மாவோடே அதே குணம். உன் அப்பா மாதிரி ராசா கணக்கா இருக்க..”

 

“ஏன் பாட்டி என்னை மாதிரி ஒருத்தன உங்க பேத்திக்கு கட்டி வைப்பீங்களா? உங்க பேத்திய நல்லா பாத்துப்பேன் பாட்டி. என்னை சின்ன மாப்பிளையாக்கிக்க அத்த மாமாட்ட ரெக்கமண்ட் பண்ணுங்க”, பாட்டி கைபிடித்து பேரன் அவன் விருப்பம் கூறிக் கொண்டிருந்தான்.

 

‘அட பாவி’ அலர்விழி சிரித்துக் கொண்டிருந்தாள்.

 

அனைவர் முகத்திலும் மகிழ்ச்சியின் சாயல். அவர் அவிந்துக் கொண்டிருக்க.. அனைவரும் மகிழ்வதா? பாக்கியத்திற்குக் கோபம் கண்ணை மறைத்தது.

 

“உனக்கு என்ன வினோத் குறைச்சல்… வேற பொண்ணே கிடைக்கலையா? அம்மாக்கும் பையனுக்கும் போயும் போயும் கை விளங்காத இவ தான் கிடைச்சாளா?”

 

நாக்கில் சிலருக்கு விஷம் இருக்கும். மற்றவர் கயப்பட வேண்டும் என்று நினைப்பார்களா இல்லை அவர்கள் யோசியாமல் கூறும் சொற்கள் விஷமாய் இறங்குமா தெரியாது! ஆனால் அவர்கள் சொற்கள், தாக்கிய நபரை காயப்படுத்தியே தீரும்.

 

கேட்ட அனைவருமே காயப்பட்டுப் போனர்.

 

சுள்ளென்று கோபம் வர, வெளியே வந்தவன் கண்டது நீர் நிறைந்த விழியாளை.

 

‘கேட்டுவிட்டாளா..?’ மனம் பிசைந்தது அவனுக்கு. அவள் கண்ணீர் பிடிக்கவில்லை. பெயருக்கேற்றார் போல் அவள் சிரித்த முகம் கொண்டவள். இன்று தான் முதல் முறை கண்களில் குளம்!

 

இப்படிப் பட்ட பேச்சுக்கள் கேட்டு வருடங்கள் ஆகிறது. அதுவும் வீட்டார் நகு காது கேட்க இப்படி எல்லாம் பேசியதே இல்லை! அதனால் ஏற்பட்ட கண்ணீர் குளம் அது!அவள் ஊனம் ஒன்றும் அவள் விரும்பி வாங்கிய வரம் இல்லையே. இன்று வரை அழுத்தாத பாரம் உள்ளுக்குள் அழுத்தியது. எதிர்பாராததால் வலி அதிகம். அத்தானுக்குத் தான் பொருத்தமில்லையோ? மனம் வெடித்துவிடும் போல் இருக்க.. கண்கள் நீரைக் கொட்ட ஆரம்பித்தது.

 

“பெரியம்மா..”, அலர் சத்தம் வைக்கவும்,

 

“என்ன இல்லாததையா சொல்லிட்டேன்..”, அவர் மீண்டும் ஆரம்பித்தார்.

 

“அண்ணி… இது என்ன பேச்சு? அப்படி எல்லாம் நம்ம வீட்டு குழந்தைங்கள பேசாதீங்க!”, அம்பிகா குரல் உயர்த்தினார்.

 

முகம் சிவக்க.. இதழ் துடிக்க நின்றிருந்தவளையே பார்த்து நின்றவனுக்கு அவளை எப்படி ஆறுதல் படுத்தவென்றே தெரியவில்லை.

 

“சொல்லுங்க அத்த.. இப்போ உங்க பிரச்சன தான் என்ன?”, என்றான் இழுத்துப் பிடித்த பொறுமையோடே..

 

“என் பொண்ணுக்கு ஒரு வழிய சொல்லு. அவ தான் முறை. நீ முறை தெரியாம போய் கண்டவங்களோட சம்பந்தம் பேசுவ நான் பார்த்திட்டு இருப்பேனா? எங்க குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இல்ல? எங்க என் அண்ணன்? அவர்ட்ட கேக்கறேன் நியாயத்த!”, என்றார் கோபம் கொஞ்சமும் குறையாமல்.

 

“வசந்தி!” வினோ கோபத்தின் உச்சியை அடைந்திருந்தான். அவன் அழைக்கவும் வந்தவளிடம், “என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?”, என்றான் எடுத்த எடுப்பிலேயே..

 

நகுநாவிடமிருந்து ஒரு கேவல் வர… பல்லைக் கடித்து கண்களை மூடி திறந்தவன், “சொல்லு வசு… கல்யாணம் பண்ணிக்கிறியா?”, என்றான்.

 

இவர்கள் விஷயம் தெரிந்தவள் ஆயிற்றே! “என்ன வினோ? எனக்கு நீ வேற மாதவன் வேற இல்ல! உன்ன போய் எப்பிடி? நினைக்கவே முடியல வினோ..”, என்று அவள் இழுக்க…

 

பாக்கியாவை பார்த்தான்! ‘பார்த்தாயா..’ என்ற பார்வை அவனிடம்!

 

பாக்கியாவிற்கு முகத்தை எங்கு வைப்பதென்றே தெரியவில்லை. உறவுகளின் முன் மானக் கேடாய் போக.. கோபம் இன்னும் அதிகமாகியது.

 

அங்கிருந்த அனைவர் முகமும் பாக்கியாவின் பேச்சு பிடிக்கவில்லை என்பதைக் காட்டியது.

 

அதற்கு வெளியே அமர்ந்திருந்த வீட்டு ஆண்களும் உள்ளே வந்துவிட, வினோத் நேரே சென்றது நகுநா முன் தான்.

 

“இப்போ எதுக்கு அழற? முதல்ல தலைய தொங்க விடாத. என்னை பாரு..”

 

முயன்று தலையைத் தூக்கியவளிடம்..

 

“உடம்புல ஊனம் இருக்கறது பிரச்சினை இல்ல. மனசுல தான் இருக்கக் கூடாது. உன் மனசு உள்ள இருக்கே ஒரு குழந்த.. அது மனசு மாதிரி! நாளைக்கே இங்க இருக்க யாருக்கு வேணா… ஒரு ஆக்ஸிடென்ட் ஆகலாம்… ஒரு கையோ ஒரு காலோ போகலாம்! உடனே அவங்க குறையுள்ள மனுஷங்களா மாறிடுவாங்களா? என் கண்ணுக்கு நீ நிறைவா இருக்க! அத நீயும் நம்பு!”, அவன் கூற,

 

உள்ளே நுழைந்த மகளைப் பெற்ற தியாகுவிற்கும், மகனைப் பெற்ற திருநாவுக்கரசிற்கும் ஒன்றும் புரியவில்லை.

 

மகளை யாரேனும் ஏதேனும் கூறிவிட்டார்களா?’ தவிப்போடே தியாகு  அருகில் வரவும்,

“மாமா.. எனக்கு நகுவ பிடிச்சுருக்கு மாமா. அவ கூட என்னோட மீதி வாழ்க்கைய கழிக்கணும்ன்னு ஆசைப்படறேன். அம்மா அப்பாட்ட என் விருப்பத்த சொல்லிட்டேன். உங்கட்டயும் சொல்லிட்டேன். பெரியவங்க பேசி நல்ல முடிவெடுங்க.”, என்று அவன் நகர்ந்துவிட.. அம்பிகா சென்று நகுநா கையை பிடித்துக் கொண்டார். 

 

“வா தண்ணி குடி.. மனசைப் போட்டு குழப்பிக்காத!”, என்றவர், நடப்பதை எதையும் நம்பாத பார்வை பார்த்து நின்ற சௌந்தர்யாவிடம், “என் மகளா.. எந்த குறையும் இல்லாம பாத்துப்பேன் அண்ணி. வினோ பத்தி நான் சொல்லி நீங்க தெரிய வேண்டியதில்ல. முடியாதுன்னு சொல்லிடாதீங்க…”, என்று கூற, சௌந்தர்யாவிற்குப் பதில் பேச முடியவில்லை.

 

“எல்லாம் நல்ல விஷயம் தான். இப்போவே பேசணுமா..? பொறுமையா ஒரு நல்ல நாள் பார்த்து பேச்ச ஆரம்பிப்போம்.”, என்றார் குடும்பத்திற்கு மூத்தவராய், சகுந்தலா பாட்டி.

 

சபை கலைய ஆரம்பிக்க, உள்ளிருந்து குழந்தையோடு வெளியே வந்த அபிகேல் பாக்கியா கண்களை ஏன் உறுத்தினாள் என்பது தான் அன்றைய கேள்வி!

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!