Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ20_3 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..

கொல்லை துளசி எல்லை கடந்தால் – 20_3

 

அம்பிகாவை எதற்கேனும் கடிந்தே ஆகவேண்டும் என்று பாக்கியலக்ஷ்மி நினைத்திருப்பார் போலும்! மற்றவர் மனதைப் புண்ணாக்க அவருக்குச் சொல்லித்தர ஆசான் தேவையில்லை என்பதால் அவர் விஷ அம்புகளை நிர்க்கதியாக நின்ற பெண் மீது வீச ஆரம்பித்தார்.

 



Advertisement

“ஒரு நல்லது நடக்கிற வீட்டுல இப்பிடி தான் தாலிய அறுத்துட்டு வந்தவள கூப்பிட்டு நடு கூடத்தில நிக்க வைப்பீங்களா அண்ணி? இவ முகத்த பார்த்துட்டு வாழ்க்கைய தொடங்கினா.. அதுங்க பொழைக்குமா? அண்ணன் உங்கள ஒன்னும் கேக்கிறது இல்லன்னு எல்லாம் உங்க விருப்பம் தான் இல்ல! எதையும் குடும்பத்துல இருக்க யார்கிட்டையும் கேக்கறது இல்ல!

இவள எல்லாம் நல்லது நடக்கிற இடத்துக்கு யாராவது வெத்தல பாக்கு வச்சு அழைப்பாங்களா? வந்து நிக்கிறா பாரு.. அப்பன் ஆத்தாவ முழுங்கீட்டு.. கட்டினவனையும் முழுங்கீட்டு… அடுத்து கையில ஒன்ன எப்போ பறி..” அவர் மேலும் பேசியிருப்பார், “பெரியம்மா என்ன பேசறீங்க..”, என்ற அலர்விழியின் அதிர்ந்த ஒலி கேட்காமலிருந்திருந்தால்.

 

Advertisement

உலகம் காலுக்கடியில் நழுவிக் கொண்டிருந்தது அபிகேலுக்கு. இங்கு வந்த நாள் முதலே விதவை.. அனாதை எல்லாம் இவள் பின்னால் பேசுவதைக் கேட்டவள் தான்! ஆனால் இன்று? காயப்பட்டு போனது பெண் மனம்.

Advertisement

 

கண்முன்னே மனைவியையும் மகளையும் தனியே விட்டுச் செல்கிறேனே என்ற வலியோடு அப்பா இறக்காமல் போயிருந்தால்.. மெலிந்து கூடாய் போன அம்மாவின் இதயம் அதன் துடிப்பை நிறுத்தாமல் இருந்திருந்தால்.. யாருமில்லாமல் இருந்தவளுக்குத் தோள் சாய்க்க இடம் கொடுத்தவன் தனக்கு உண்மையுள்ளவனாக இருந்திருந்தால்.. இந்த பழி எல்லாம் தன் மேல் வந்திருக்காதோ? மகளைப் பற்றி ஏதோ கூற வந்தாரே..! நினைக்கும் போதே இதயம் வலித்தது. கால் நிலையில்லாமல் நடுங்கியது. இத்தனை வலியில், ‘தனக்கென ஒருத்தர் இல்லையே.. தோள் சாய தனக்கென்று ஒரு உறவில்லையே..’ என்பது அவளை வெகுவாக பாதித்தது. கண்ணீர் பார்வையை மறைத்தது. நீர் சிந்திவிடாமல் இருக்கப் பெரும்பாடாய் போனது.

 

Advertisement

“ஏன் அண்ணி இப்பிடி?”, உடைந்து போனார் அம்பிகா. பெண்ணின் முகம் பார்க்க முடியவில்லை.

 

சௌந்தரியா மெல்ல அபியின் முதுகை தவடி கொடுத்தார். ‘இது என்ன பேச்சு?’ என்ற பார்வை அவரிடம்.

 

வீடு மயான அமைதியைத் தத்தெடுக்க.. வெளியே சென்று கொண்டிருந்த ஆண்கள் கால்களும் ஸ்தம்பித்து நின்றிருந்தது. பாக்கியாவின் குணம் அறிந்தவர்கள் தான். ஆனால் இன்று அளவை மீறி இருந்தார் பாக்கியா!

 

அபியின் பெரியம்மா, “யோசிக்காம வந்துட்டேன் அம்பிகா! ரொம்ப சாரி”, என்றுவிட அவர் முகம் விழுந்துவிட்டது. “இல்ல.. கா.. அப்பிடி எல்லாம் இல்லக்கா..”, அவரால் பேசவும் முடியவில்லை. அபியின் முகத்தைப் பார்க்கவும் முடியவில்லை. அழைத்து அவமானப் படுத்துவதென்பது எவ்வளவு பெரிய தலையிறக்கம்!

 

“வா டா அபி. பெரியம்மாவ மன்னிச்சுடும்மா. வா நாம போலாம்..”, நிற்க முடியாமல் நின்றிருந்தவளிடமிருந்து குழந்தையைப் பெரியம்மா வாங்க மகள் நேரம் காலம் தெரியாமல் வீறிட்டாள்.

 

வீட்டின் அமைதி பாக்கியாவை ஏதோ செய்ய.. “நான் ஏதோ இல்லாதத சொன்ன மாதிரியில்ல என்னை பாக்குறீங்க? உள்ளத தானே சொன்னேன். அவ பொல்லாத நேரம் சுத்தி இருக்கவங்கள முழுங்குது… நம்ம வீட்டு பொண்ணுக்கும்..”, அவர் முடிக்கும் முன்.. “அம்மா..” என்ற மாதவன் சத்தம் அவர் வாயடைத்தது.

 

இப்பொழுது தான் வீட்டிற்கு வெளியே கோபம் தீரப் புகைத்துக் கொண்டிருந்த வினோவிடம் நகுநாவை பாக்கியா பேசியதைக் கேட்டுச் சகிக்க முடியாமல் வந்தவனுக்கு நிலைமை உவப்பாயில்லை!

 

“போதுமே மா.. வீட்டு பொண்ணுங்க மேல உங்க கரிசனை. ஒருத்தி மனச  குத்தி கிழுச்சு தான் உங்க கரிசனைய காட்ட முடியும்ன்னா.. அந்த கரிசனைய உங்களுக்குள்ளே வச்சுக்கோங்க. கேக்க ஆளில்லன்னா பேசிட்டே போவிங்காளா? வேண்டிக்கோங்க நீங்க கும்பிடுற சாமிய… நீங்க சேத்து வைக்கிற புண்ணியம் எல்லாம் உங்க பிள்ளைங்கள முழுங்காம இருக்கணும்ன்னு!”

 

“டேய் மாதவா..”

 

“போதும்ன்னு சொன்னேன் மா… வீட்டுக்கு கிளம்புங்க.”, கூறியவன் அமைதியாக அவளருகில் சென்று பிள்ளையை வாங்கி தோளில் போட்டுக் கொண்டு, அபியை பார்க்க.. அவள் அழுகையை விழுங்கி கொண்டிருப்பது தெரிந்தது.

 

அந்த நொடி அவன் உணர்வுகளை எழுத்தில் வடிக்க முடியாது. எந்த உறவும் இல்லாத அபிகேலை அணைத்து ஆறுதல் படுத்த துடித்த நொடி. ‘நான் இருக்க நீ எப்படி அனாதை’ என்று நாவு வரை வந்த நொடி!

 

“நம்பி உன் கைய குடுத்தா… வாழ் நாள் பூர விடவே மாட்டேன்.”, என்று கை நீட்டி நின்றான்.

 

அவளுக்குப் புரிந்ததா தெரியவில்லை. பாக்கியாவிற்குச் சகலமும் புரிந்தது. தலை கிறங்கியது.

 

“டேய் மாதவா..”, செத்துப் போனது பாக்கியாவின் முகம். எத்தனை பெரிய தலை குனிவு அனைவர் முன்னும்! அவர் கடிந்து நிமிடம் முடியவில்லை. தாலியறுத்த அனாதை என்று கூறி அதனால் அந்த பெண் விட்ட கண்ணீர் காயவில்லை! அதற்குள் அதே பெண் தன் வீட்டின் குத்துவிளக்கை ஏற்ற ஏற்பாடு நடக்கிறதா? எங்குக் கொண்டு முகத்தை வைப்பார்? அவமானத்தின் உச்சத்தை அடைந்தது போல் உணர்ந்தார்.

 

முகம் சிவக்க.. கத்த ஆரம்பித்தார். ஆனால் கேட்பார் இல்லாமல் போனது. அப்படி ஒருவர் இருப்பது ஒருவர் கண்ணுக்கும் தெரியவில்லை. பார்வை முழுவதும் மாதவன் மீது. மற்ற நேரம் என்றால் ‘பாக்கியத்திற்கு இதுவும் வேண்டும்.. இன்னும் வேண்டும்’ என்று எண்ணியிருப்பர். ஆனால் இருந்த மனநிலையில் ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. வெறும் பார்வையாளர்களாய் மாறி போனர்.

 

“டேய்.. அந்த ராசியில்லாதவ வேண்டாம். அந்த குழந்தைய குடுத்துட்டு வா. போலாம்! என்னங்க பார்த்துட்டே நிக்கறீங்க..”, ஏகத்திற்கும் சத்தம் போட்டார்.

 

அவன் காதில் விழுந்ததற்கான அறிகுறி இல்லை. கை நீட்டி அவள் கண் பார்த்து நின்றான்.

 

இன்னும் அங்கு நடப்பது எதுவும் அபிகேலுக்கு உரைக்கவில்லை. கலங்கிய கண்களை மறைந்த நீரின் இடையே மங்கலாய் தெரிந்த உருவம் மகளை அணைத்து நின்றதோடு தன்னையும் தாங்க தயாராக நிற்பது தெரிந்தது. அதில் அவள் அப்பா.. அம்மா.. எபி.. என்று பல உருவம் புதைந்திருந்தது.

 

“நம்பி வா அபி. ரெண்டு பேரையும் விடமாட்டேன்.”. தீர்மானமாய் ஒலித்த குரலில் பிசிர் இல்லை. நீட்டிய கையையும் இறங்கவில்லை.

 

பிடித்தம்.. பிடித்தமில்லை என்பதை விட.. இந்த கூட்டத்தின் நடுவே அவனுக்கு தலை குனிவைத் தர மனமில்லை. பெண்ணின் கை அவன் கையை தொடவும்… கைக்குள் பொக்கிஷமாய் பொத்திக் கொண்டான். அந்த வினாடி தேங்கி நின்ற ஊற்றிலிருந்து ஒரு துளி நீர் உருண்டு கன்னம் தொட்டது. அவன் கையின் அழுத்தம் கூட.. பாரமெல்லாம் கண்ணீராய் நிற்காமல் வழிய ஆரம்பித்தது.

 

கை பிடித்து அழைத்துச் செல்ல, பார்த்து கொண்டிருந்த பாக்கியத்திற்குக் கோபம் பீரிட்டது. ஒருவரும் ஒரு வார்த்தை பேசவில்லை. அவனைத் தடுக்கக் கூட ஒருவரும் முன்வரவில்லை. வாய் திறந்தால் தங்கை குடும்பம் முன் இருக்கும் மரியாதையும் போய்விடும் என்பதால் வைத்தியநாதனும் பல்லைக் கடித்து நின்றார்.

 

குலம் கோத்திரம் பார்க்கும் சௌந்தர்யாவிற்கு ஏனோ மாதவன் முடிவில் மனத்தாங்கல் இல்லை. மகளை நோகடித்தவர் நொந்து நிற்பது பார்க்க நன்றாகத்தான் இருந்தது.

 

“மாதவா அம்மா சொல்றேன்.. அவ கைய விட்டுட்டு வா போலாம். யாரு டி நீ என் மகன…”, மீண்டும் பாக்கியா வாய் திறக்க, அவர் அருகில் சென்று, “ரொம்ப பேசிட்டீங்கம்மா.. போதுமே! நிர்க்கதியா நிக்கிற ஒரு ஜீவனுக்கு ஆறுதலா இருக்க வேண்டாம்.. ஆனா ஒதுங்கி நிக்கலாமே. காயப்படுத்தி அந்த வலியில துடிக்கிறதைப் பாக்க அவ்வளவு ஆசையா? அபி அழறா. குழந்த அழறா. எனக்கு வலிக்குது மா! சத்தியமா ரொம்ப வலிக்குது. இதுனால என்ன சுகம் கிடச்சுது உங்களுக்கு? பச்! போங்க மா.. நீங்க அபிய பத்தி பேசி இருக்கவே கூடாது!”, என்று வெளியே சென்றுவிட்டான்.

 

ஒன்றும் விளங்கவில்லை பாக்கியாவிற்கு. அவர் பெருமை.. அவர் கர்வம்.. அவர் கௌரவம்.. எல்லாம் நடு கூடத்தில் தான் பெற்ற மகனாலேயே சுக்குநூறாக உடைந்து சிதறியது! முதல் முறை பார்க்கியலஷ்மியின் உலகம் காலுக்கடியில் வழுக்கிச் சென்றது. ஒருவர் முகமும் பார்க்க பிடிக்காதவராய் வெளியே சென்றுவிட்டார்.

 

குழம்பித் தவித்த மனம் தெளிவானது, மாதவனுக்கு. பிடித்த கையை இறுக்கிக் கொண்டான். யாருக்காகவும் விடுவதில்லை என்ற தீர்மானம் வலுத்தது.

 

அபியின் பெரியம்மாவை மட்டும் அவர் வீட்டின் முன் இறக்கியவன் அபியையும் மகளையும் அழைத்து வந்தது இந்த கடற்கரைக்குத் தான். அன்றும் இப்படி தான் வெறிச்சோடி காணப்பட்டது கடற்கரை.

 

அருகே அமர்ந்தவனிடம் அவளுக்குத் தமிழ் பேசவரவில்லை. “எனக்கு டிக்கெட் எடுத்து தர முடியுமா? சொத்து எதுவும் வேண்டாம்.. என் மக போதும். நான் வீட்டுக்கு போறேன்..”, என்று அவள் தேம்ப, உண்மையிலுமே வலித்தது இவனுக்கு.

 

காதல், பிடித்தம், ஆசை, மயக்கம், சலனம் இப்படியான எந்த வார்த்தையிலுமே அவன் உணர்வை அடக்க முடியவில்லை. மித்துவிடம் அவனுக்கு தாய்மை உணர்வு பொங்கி வழிந்தது! இவளிடம்? புரியாத புதிர் தான்!

 

“உனக்கு வாழ்க்கைத் துணையா இருக்க விருப்பப்படுறேன் அபி. மித்துவ என் பாசம் பூரா கொட்டி.. என் மகளா வளக்கணும்ன்னு ஆசை. உன்ன பத்தி எனக்கு தெரிஞ்ச அளவு கூட உனக்கு என்னைப் பத்தி தெரியாது. டைம் எடுத்துக்கோ… யோசிச்சு பதில் சொல்லு! இப்போ காதல் இல்லன்னா என்ன? காலம் இருக்கு அதுக்கு! கல்யாணம் பண்ணிகிட்டு பொறுமையா வாழ்நாள் பூரா காதலிப்போம்.

என் உயிர் இருக்க வரைக்கும் உனக்கும், இவளுக்கும் உண்மையா இருப்பேன். கண்டிப்பா என்னை நீ நம்பலாம்.”

 

மாதவன் கன்னத்தைக் கடித்தும் எச்சில் படுத்தியும் விளையாடிக் கொண்டிருந்த மகளையே பார்த்துக் கொண்டிருந்தவள் கண்கள் தன் இலக்கை மாற்றியது.

 

“நான் விடோ இல்ல..”, என்றாள்.

 

“தெரியும்.”, என்றான்.

 

“உன் பழைய வாழ்க்கை எனக்கு வேண்டாம். புதுசா ஆரம்பிப்போம்.. நமக்கான புது வாழ்க்கைய… புது பாதையில.” என்றான்.

 

மாதவன் கண்களிலிருந்த நேர்மை அவனை நம்பலாம் என்றது. தனக்கே தனக்கென்று ஒருவனா? மகளுக்குத் தகப்பனா? உரிமையாய் இருவரும் தோள் சாய்ந்துக் கொள்ளலாம்! கண்கள் பனித்தது.

 

வாழ்க்கையின் ஆணி வேர் அவளுக்கு நம்பிக்கை தான்! தோழனிடம் மட்டுமே பார்த்திருக்கிறாள் அதை! இன்று, அவள் மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் இவன் மேல் நம்பிக்கை துளிர்த்திருக்க வேண்டும், அது கிடைக்கப் பிடித்துக் கொண்டாள் கூடவே அவன் பிடித்திருந்த கையை இறுக்கிக் கொண்டாள்.

 

கைபிடிக்கச் சரி என்றவளை நினைத்து மகிழும் முன், மகள் வாழ்வைக் காரணம் காட்டி விஷத்தைக் கையில் எடுப்பேன் என்று நிற்கும் அம்மா இடையே!

 

“அவ கழுத்துல தாலி கட்ட நினைச்ச.. என் பிணத்த தாண்டி தான்!” என்றவரிடம்..

 

“நீங்க உயிரோட இருந்தா நாளைக்கு கல்யாணம். இல்லன்னா காரியம் முடிஞ்சதும் கல்யாணம்! இந்த எமோஷ்னல் பிளாக்மெயில் வேலை என்ட்ட வேண்டாம் மா! நீங்க வழிவிட்டா, விட்ட வழியில நடப்பேன். வழிய அடைக்க நினைச்சா… புது வழிய நானே உருவாக்குவேன். நீங்க முடிவு பண்ணிக்கோங்க.”, என்றுவிட்டு வந்தவன் தான் விண்ணை வெறித்துக் கொண்டு படுத்திருக்கிறான்.

 

கைப்பேசி அழைக்க நினைவலைகளிலிருந்து மீண்டு வந்தான். திரையில் அபியும் மித்துவும் சிரித்தனர்.

 

“உங்க மக உங்கள பாக்கணுமாம்.”. அழைத்தற்குக் காரணம் சொன்னாள்.

 

“ஏன் உனக்கு பாக்க வேண்டாமா?”, உரிமையாய் கேட்டான்.

 

“நானும் தான்..”, மென்மையாய் புன்னகைத்தாள்.

 

அன்று எபியை கண்டு துள்ளியது போல் இன்று மாதவனைக் கண்டு மகள் துள்ளினாள். ‘ஆ ஊ’ என்று கதை பேசினாள்.  ஏகாந்த இரவு செய்யத் திணறியதைப் பொக்கை வாய் சிரிப்பு செய்தது! அந்த சிரிப்பில்.. மழலையின் பூரிப்பில்.. மாதவன் மனம் லேசானது.

 

பேசி முடித்தவன், முகத்தைத் தீண்டி உடலைச் சிலிர்க்கச் செய்த உப்பு காற்றை உள்ளிழுத்துக்கொண்டான். நிம்மதியாக உணர்ந்தான். நாளையிலிருந்து கணவன்.. தகப்பன் என்ற புது பொறுப்புகள்! மிகவும் இனிமையாக உணர்ந்தான்!

 

நிலவைப் பார்த்தான்.. அழகாய் தோன்றியது.

 

ஆர்ப்பரிக்கும் கடலை பார்த்தான்.. நிலவு கடலோடு உருகிக் கொஞ்சிக் குலாவிகொண்டிருந்தது.

 

‘அபி..’ மெல்லச் சிரித்துக் கொண்டான். 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!