அ27_2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்
கொல்லை துளசி எல்லை கடந்தால் 27_2
“மனோ..?”
Advertisement
“சொல்லு விழி.. என்ன இந்நேரம்? சாப்டாச்சா?”
வாரத்தின் இரண்டாம் நாளே ‘மிஸ் யூ’ கூற அலர்விழி தன்னை கைப்பேசியில் அழைத்திருக்க மாட்டாள் என்று தெரியும். இருந்தும் மதிய வேளையில் அழைக்க வேண்டுமென்றால் விஷயம் இருக்கவேண்டுமே..
Advertisement
Advertisement
“மனோ..” மீண்டும் இழுத்தாள். அவள் தயங்கக் காரணம் இருந்தது. அவள் கூற இருக்கும் விடயத்தைக் கூறியபின் இவன் தொனி இப்படி இருக்காதே!
“என்ன டீ இவ்வளவு தயக்கம்? என்னத்த இழுத்து வச்சிருக்க இந்த தரம்? ஷிவானியோட திரும்பவும் சண்டையா?”
Advertisement
“ம்ம்கூம். இது வேற! நீங்க இப்போ ஃப்ரீயா?”, முன்பே கேட்டுக் கொள்வது அவசியம்! இல்லை அதற்கும் வாங்கி கட்டிக்கொள்ள வேண்டுமே!
மடிக்கணினியை மூடிவிட்டு அலுவலத்திலிருந்து வெளியே காற்றோட்டமான இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டே, “உனக்கு இல்லாத நேரமா? சொல்லு டீ பட்டு”, என்றான் கொஞ்சலாய்.
பட்டெல்லாம் பட்டென்று பறந்து போகுமே இப்பொழுது!
“வந்து.. டாக்டர் காள் பண்ணியிருந்தார் மனோ..”
அழுத்தி தலை கோதி கோபத்தை மட்டுப்படுத்தி, “பச்! எனக்கு வேலை இருக்கு விழி. சட்டுன்னு சொல்லிட்டு வை”, அடக்கிக் கொண்டாலும் எரிச்சல் எட்டிப் பார்த்தது. ஏனோ அவன் பேச்சை அலர்விழி எடுத்தாலே இவனுக்கு எள்ளும் கொள்ளும் வெடிக்கும்!
“என்ன மனோ?”, எதிர்பார்த்த பதிலே தான். இருந்தும் குரல் விழுந்து போனது.
“சரி சரி… சொல்லு. அவனுக்கு என்னவாம் இந்த தரம்?”
“இந்த சனிக்கிழம அவர் ஃப்ரீயாம்… நயாகரா ஃபால்ஸ் போலாமான்னு கேக்கறார்?”
“ஓ..”
“என்ன மனோ… ஓ-ன்னு சொன்னா என்ன அர்த்தம்?”
“ஒரு அர்த்தமும் இல்ல. நீ மேல சொல்லு”, பல்லைக் கடித்து வார்த்தைகளைத் துப்பினான்.
“சனிக்கிழம காலைலயே கிளம்பிட்டு அன்னைக்குச் சாயங்காலமே வந்திடலாம்ன்னு சொல்றார்”
“ஓஹோ..”
“பஸ்லயான்னு கேட்டேன். அவர், கார்ல போயிட்டு வந்திடலாம்ன்னு சொல்றார்”
“லூசா டி நீ? அவன் கேட்டான்னு வந்து என்ட்ட கேக்கிற பாரு! அங்க இருந்து நயாகரா ஏழெட்டு மணி நேரம் ஆகும்! உனக்கு சிட்டிக்குள்ள அரை மணி நேரம் ஓட்டி தான் பழக்கம். ஃப்ரீ-வே ட்ரைவிங் எல்லாம் சரி வராது. வேண்டாம்”
“அவர்ட்ட இன்டர்நேஷனல் லைசன்ஸ் இருக்காம். மாத்தி மாத்தி ஓட்டலாம்ன்னு சொன்னார்!”
“..”
“என்ன மனோ?”
“என்ன மனோவா? மண்ணாங்கட்டி மனோ! ஆஃபீஸ்ல இருந்து லேட்டா வர அன்னைக்கு யார் கையையும் எதிர்பாக்க கூடாதுன்னு தானே கார் வாங்கினோம்? இவன கூட்டிட்டு தினம் ஒரு இடத்துக்கு ஊர்வலம் போக இல்லியே?”
“என்ன பேச்சிது? சொந்தக்காரங்க ஊர்ல இருந்து வந்தா எல்லாரும் செய்யறது தானே? அவருக்கு யார் இருக்கா இங்க? ஏதோ சொந்தக்கார பொண்ணுன்ற உரிமையில தானே கேக்கறார். ஏன்தான் அவர் பேர கேட்டாலே உங்களுக்கு எரியுதோ?”
“முடிச்சாச்சா… ஃபோன வைக்கவா?”
“என்ன மனோ.. எதுவும் சொல்லாம வச்சா என்ன அர்த்தம்? என்னால ட்ரைவ் பண்ண முடியும் மனோ..”
“உன்னால என்ன தான் முடியாது? எல்லாம் தான் முடியும்! ஆனா என்னால உயிர இங்க வச்சுக்கிட்டு இருக்க முடியாதே! உனக்கு கார் ஓட்ட சொல்லி கொடுத்து கார் வாங்கி கொடுத்தது தப்போன்னு ஃபீல் பண்ண வைக்கிற!”
“அதுக்கு தான் நீங்களும் வாங்கன்னு..?”
“நீ அவன் கூட இப்பிடி அடிக்கடி வெளியில போறதே எனக்கு பிடிக்கல. அதுவும் நீ போகணும்ன்னு என் கிட்ட ஆசையா கேட்ட இடத்துக்கு அவன் கூட போறது எனக்குச் சுத்தமா பிடிக்கல! சும்மா வார நாட்கள்ல ரெண்டு மூணு மணி நேரம் ஃப்ரெண்ட்சோட சேந்து அவன் கூட போன.. இப்போ வார கடைசியில! அதுவும் முழு நாள்? என்ன டீ?”
“அவரே வாய் திறந்து கேக்கறார் மனோ. என்ன பண்ணட்டும்? அப்புறம் அடிக்கடி எங்க போனோம்? ஒரு தரம் சிக்ஸ் ஃப்ளேக்ஸ்-ல(six flags adventure) ரைட்ஸ்.. அதுவும் ஆஃபீஸ் ஃப்ரெண்சோட போனோம். அடுத்த தரம் பம்ப்கின் பேச்(pumpkin patch), ஆப்பிள் பிக்கிங்(apple picking) பாயல் கூடப் போய் பூசனிக்காயும், ஆப்பிளும் கொண்டு வந்தோம். அதுல செஞ்ச ஆப்பிள் பை, பம்ப்கின் கீர் எல்லாம் நல்லா தானே சாப்டீங்க! அப்போ ஒன்னும் சொல்ல காணம். இப்போ வந்துட்டார் சண்டைக்கு! என்னமோ தினமும் அவரோட சுத்தற மாதிரி சொல்றீங்க?”
“..”
“ஃபேமிலி மனோ… நல்ல மனுஷன். தேவ இல்லாம ரெண்டு வார்த்தை அதிகம் பேச மாட்டார். எவ்வளவு பெரிய டாக்டர் தெரியுமா? கொஞ்சம் கூட பந்தா இல்ல. பழகறதுக்கும் அவ்வளவு இயல்பா..”
அவள் பேசிக்கொண்டே போக… இந்த பேச்சு போகும் திசையும் பிடிக்கவில்லை. அவனைப் பற்றிய பேச்சும் பிடிக்கவில்லை.
“சரி சரி… அவன் புராணம் அப்புறம் பேசலாம். எனக்கு வேல இருக்கு. கார் வேண்டாம். ஃப்ளைட் புக் பண்றேன். பஃபலோ ஏர்போட்ல(Buffalo Airport) இருந்து போகிறதுக்கு கார் ரென்டல்(car rental) பாத்து வைக்கிறேன்.. எடுத்துட்டு போ. திரும்பி வரும் போது அங்கேயே கார ரிட்டர்ன் பண்ணிடு.”
“நீங்க வரலியா மனோ?”
“நான் ஏதாவது சொல்றதுக்கு முன்னாடி பேசாம ஃபோன வச்சிடு விழி..”
“நீங்களும் வாங்க மனோ… அந்த தண்ணி கொட்டும் போது அத உங்க கூட நின்னு ரசிக்கணும் மனோ. வாங்க மனோ.. ப்ளீஸ்.”
“பாய் விழி.”
அவனுக்கு அப்படி என்னதான் மருத்துவன் மேல் கோபமோ.. அலர்விழிக்கு புரியவே இல்லை. மருத்துவன் கொடுத்த அழகிய மலர்க்கொத்தை பதப்படுத்தி கண்ணாடி கூண்டிற்குள் பாயல் வைத்துக் கொடுக்க.. அதைப் பார்த்த அன்றே சத்தம் போட்டான். அதுவும் அந்த டெரரியம் படுக்கையறையில் தொங்க விட்டிருக்க மனோவிற்கு பற்றிக் கொண்டு வந்தது. ஏனாம்? அவனுக்குத் தான் தெரியும்!
மருத்துவனை பற்றிப் பேசினாலே.. “அவனும் அவன் பார்வையும். எனக்குச் சுத்தமா பிடிக்கல.” என்பான், மனோ. இத்தனைக்கும் கைப்பேசியிலிருந்த புகைப்படங்கள் மட்டும் தான் பார்த்திருக்கிறான். நேரில் பார்த்ததில்லை!
“அவர் பார்வைக்கு ஒரு கேடும் இல்ல. உங்களுக்குத் தான் அவர பிடிக்கல. ஏன் தெரியுமா? அன்னைக்கு லைப்ரரில அவர் உங்கள தப்பா பார்த்தனால!” என்பாள்.
“இருக்கலாம்!” என்றாலும் மனுவிற்குத் தான் ஏதோ ஒரு நெருடல்! இத்தனைக்கும் ஆண் பெண் நட்பு தவறென்று நினைப்பவன் இல்லை. ஏன் அவனுக்கே பெண் நண்பர்கள் அதிகமாயிற்றே!
சனிக் கிழமை மனோ அவர்களோடு வருவான் என்று எதிர்பார்த்தாள். மின்னஞ்சலில் விமான பயணச் சீட்டு மட்டும் வந்தது. “ரிட்டர்ன் டிக்கெட் இல்லியே மனோ? அனுப்ப மறந்துட்டீங்களா? இல்ல நான் எடுக்கவா?”, கைப்பேசியில் பேசி நின்றவளுக்குப் போக மனமே இல்லை. திருமணம் முடியவும் சில இடங்களுக்கு மனோவோடு செல்லவேண்டும் என்பது அவளின் ஆசை! நயாகரா நீர்வீழ்ச்சியும் அதில் அடக்கம்! கொட்டும் பேரருவிச் சாரலை மனோ கைபிடித்து ரசிக்க ஆசை! இன்று அவன் இல்லாமல், மருத்துவனோடு போக மனமில்லை.
‘அந்த லூசு டாக்டருக்கும் மண்டையில சொன்னா ஏற மாட்டேங்குது… என் ஆச வருங்கால புருஷனுக்கும் என் மனசு புரிய மாட்டேங்குது’ என்பது இருதலைக் கொள்ளியின் புலம்பலாய் போனது.
“போக டிக்கெட் அனுப்பின எனக்கு ரிட்டர்ன் டிக்கெட் போடத் தெரியாதா? நீ கிளம்பு டீல் பாத்து வாங்கி அனுப்பறேன். பாஸ்போர்ட் எடுத்து வச்சுக்கோ. என் கூட முன்ன வீடு ஷேர் பண்ணின இலக்கியா தெரியுமில்ல… அவ ஏர்போர்ட்ல உன்ன மீட் பண்ணுவா. அவளும் கூட வருவா..”, என்று முடித்துக்கொண்டான்.
விமானம் ஏறியதுமே இவள் உறங்கிவிட, விமானம் தரையிறங்கிய பின்தான் கண்விழித்தாள். எபி கூறியது போலவே இலக்கியா வந்திருந்தாள். அதனால் அவளே அவர்களை அழைத்துக் கொண்டு சுற்றிக் காட்டினாள்.
அலர்விழி எதிர்பார்த்ததை விட நீர்வீழ்ச்சி மனதைக் கொள்ளைக் கொண்டது. மூவரும் சுற்றித் திரிந்தனர். இலக்கியாவிற்கு மருத்துவனிடம் பேச அதிகம் இருந்தது. தற்போது நடந்துகொண்டிருக்கும் அறுவை சிகிச்சை பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்ட, அவனும் சலிக்காமல் பதில் கொடுத்தான்.
“அக்காவும் சர்ஜன் தான். வீட்டுல அம்மா அப்பா அண்ணா எல்லாருமே டாக்டர்ஸ். எனக்கும் இஷ்டம் தான்… ஆனா எல்லாரும் விழுந்த அதே குட்டை வேண்டாமேன்னு வேற குட்டைய தேடி வந்துட்டேன்”, இனிமையாய் பேசி சிரித்தவளோடு பேச நன்றாகவே இருக்க அவனும் விரும்பியே பேசினான்.
பேசிக் கொண்டிருந்தவன் கண்கள் மட்டும் அலர்விழியை வட்டமடித்துக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் பேசிக்கொள்ள இவள் எப்பொழுதும் போல் நிகழ்வுகளைக் கைப்பேசிக்குள் அடக்கிக் கொண்டிருந்தாள்.
நீர் வீழ்ச்சிக்கடியில் படகு பயணம், பாஸ்டனில் மனோவோடு இருந்ததை நினைவூட்ட, தன்னை தனித்து விட்டவன் மேல் காரணமே இல்லாமல் கோபம் வந்தது.
‘வந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்!’ மனதின் ஓரத்தில் சின்னதாக வெறுமை வந்தமர்ந்தது.
நீர்வீழ்ச்சியின் அடியில் கட்டி விட்டிருந்த மேடையில் நின்று சாரலில் நனைய ஆரம்பித்தவளை கண்ணெடுக்காமல் கைப்பேசி மூலம் பார்த்துக் கொண்டே நிகழ்வுகளைப் படம் பிடித்தான் மருத்துவன்.
“அங்க நில்லு… இப்பிடி நில்லு.. போதுமா.. இந்த போட்டோ பிடிச்சிருக்கா”, என்று இருவர் ஆசையும் தீரும் வரை புகைப்படம் எடுத்தான்.
அடுத்திருந்த மெழுகு அருங்காட்சியகம் உள்ளே செல்லுமுன்னே, “என்னால சத்தியமா முடியாது. அஞ்சாவது தடவ இத பார்க்கிற அளவு இதுல ஒரு மண்ணும் இல்ல… நீங்க ரெண்டு பேரும் போங்க. நான் வெளியில இருக்கேன். நீங்க முடிச்சதும் கிளம்பலாம்”, என்று கழண்டுக் கொண்டாள் இலக்கியா.
வெளிநாட்டில் இருந்தால்.. புதிதாய் வரும் தோழர்களோடும், சொந்தங்களோடும் மீண்டும் மீண்டும் அதே இடத்தை சுற்றுவது ஒரு இம்சை தான் போலும் என்று நினைத்தாலும், அலர்விழி வாய் திறக்கவில்லை.
கடைசியாக பிரவீன் எதிர்பார்த்த தனிமை கிடைத்தது. அவளுக்கு எப்படியோ.. அவளோடிருந்த ஒவ்வொரு நிமிடங்களையும் முழு மனதோடு அவன் ரசித்து அனுபவித்தான்.
“டிக்கெட்டுக்கு நிறையச் செலவாகி இருக்குமே அலர்விழி.. நானே புக் பண்ணி இருப்பேன் நீ கேக்கல. உனக்கு வேற செலவுக்கு இடிக்குமே.. எவ்வளவுன்னு சொன்னன்னா..”
“பச் டாக்! போன ரெண்டு தரமும் நீங்க தான் செலவு பண்ணினீங்க. நான் ஏதாவது சொன்னேனா? பேசாம வாங்க”, என்றாள். அவள் செலவை எல்லாம் மனோவே பார்க்க, கத்தரிக்காய் விலை கூட அவள் அறியவில்லையே..!
அவள் உரிமையாய் கடிந்து கொண்டது கூட பிரவீனுக்குப் பிடித்தது. அவள் சிரிப்பும், பேச்சும், உரிமை திட்டல்களும் அவள் நேசமென்றே எண்ணிக் கொண்டான் பெண் தோழிகள் இல்லாத மருத்துவன். அலர்விழி அவன் ஆழ் மனதில் பதிந்து போனாள். இனி அவளை அவனை விட்டுப் பிரிப்பதெல்லாம் கூடாத காரியம் என்றே தோன்றியது அவனுக்கு. பிரிக்க வேண்டி வரும் என்று நினைத்தானில்லை, அவளை மட்டுமே தன் நெஞ்சம் முழுவதும் ஏந்தி நின்றவன்.
“இலக்கியாக்கு உங்கள முன்னமே தெரியுமாம். நீங்க பெரிய டாக்டர் இல்லையா.. அது தான்! அவங்க வீட்டுல உங்க பேச்சு அடிப்படும் போல. நேர்ல பாக்கவும் அவங்களுக்கு தலையும் புரியல காலும் புரியல.. ஏதோ சூப்பர் ஹீரோவ பாக்குற மாதிரி உங்கள பாக்கறாங்க!”
அலட்டலே இல்லாமல் புன்னகைத்தான். “சரி நீ சொல்லு, நீ என்னை பத்தி என்ன நினைக்கிற அலர்விழி?”
“உங்களால மட்டும் தான் என் முழு பேரும் எனக்கு மறக்காம இருக்குன்னு நினைக்கிறேன் மருத்துவரே..”, என்ற புன்முறுவலில் மயங்கித்தான் போனான்.
“அளவா பேசினாலும் அறிவா பேசறீங்க.. உங்க கூட இருந்தா ஒரு அறிவாளி கூடவே சுத்தற எஃபெக்ட்.”, என்று அவனைப் பற்றிய தன் எண்ணத்தைக் கூறினாள்.
“அவ்வளவு தானா?”
“ஹ ஹ ஹா… பொழுது போகலியா? இந்த மெழுகு ஆட்கள பாக்காம என் வாய கிளறிகிட்டு?”
“உன் கூட பேசிட்டே இருந்தா பொழுது பத்த மாட்டேங்குது அலர்விழி..”, அவளை பற்றிப் புகழும் பொழுதாவது கொஞ்சம் மயக்கம் கலந்த குரலில் பேசக் கூடாதா? பேசினான் இல்லை. அதே நட்பின் குரல் தான்!
“பார்ரா… என் அறுவைய கூட ரசிக்க ஒரு ஆள்! நகுக்கு அப்புறம் நீங்க தான் என் பேச்ச ரசிக்கிற ஜீவன். நகுனதும் நினைவுக்கு வருது.. அப்பாவும் நீங்க கேட்ட இதே கேள்விய அச்சு பிசகாம கேட்டாங்க”
“ஓ.. வீட்டுல பேசினாங்களா? என்ன சொன்னாங்க?”, திருமணம் பற்றி ஏதேனும் பேசினார்களா என்ற ஆவல்.
“என்ன சொன்னங்க…! எப்பவும் போல வேலைய மாத்திகிட்டு ஊர் பக்கம் வர சொன்னாங்க.”
“எப்போ அங்க வர அலர்விழி?”
“வரேன்.. கூடிய சீக்கிரம் வந்து தானே ஆகணும்..”, அவள் புன்னகைக்க…
“கல்யாணம் அப்புறம்… என்ன முடிவெடுத்திருக்க?”
“புருஷன் எங்கேயோ அங்க தான்”. அந்த பதிலில் உச்சி குளிர்ந்து போனான். இந்த நிமிடமேனும் அவன் பிடித்தம் கூறி இருக்கலாம். இல்லை.. இந்த தனிமையில் அவன் பேச்சின் மூலமோ செயலின் மூலமோ அவன் மனதை உணர்த்தியிருக்கலாம். ‘மகள் மனம் அறியும் முன், அபிராமி வந்து பேசும் முன்..’ அலர்விழியிடம் இதைப் பற்றிப் பேசி விட வேண்டாம் என்ற அவள் பெற்றவர்கள் பேச்சைக் கொஞ்சம் மீறியிருக்கலாம்.
பலரின் வேதனைகளைத் தவிர்த்திருக்கலாம்!
