Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ27_3 – Shoba Kumaran’s – கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 27_2(cont..)

 

இலக்கியாவின் இருப்பிடம் வந்து அக்கடா என்று கால் நீட்டி அமர, பயணச் சீட்டு வந்ததற்கான அறிகுறி வந்தது கைப்பேசியில்.

 



Advertisement

பிரவீனுக்கு மட்டுமே பயணச் சீட்டிருந்தது. “நீ இலக்கியாவோட இருந்துட்டு நாளைக்கு வா.” என்ற செய்தி இவளுக்கானது. எபிக்கு அழைப்பு விடுக்க அவன் எடுத்தானில்லை.

 

இலக்கியாவிடம் பேசி வந்தவள், பிரவீன் கைப்பேசிக்குப் பயணச் சீட்டை அனுப்பி, “நீங்க நியூ ஜெர்ஸிக்கு வந்துட்டு போக வேண்டாம் டாக்.. டிக்கெட் நியூயார்க்குக்கு கிடைச்சா எடுக்கச் சொல்லியிருந்தேன் என் ஃப்ரெண்டுட்ட… உங்களுக்கு கிடைச்சிடுச்சு. நான் இலக்கியா கூட இருந்துட்டு நாளைக்குச் சாயங்காலம் வரேன்”, என்று மழுப்பினாள். பின் அவனிடம் எப்படிக் கூற.. எபி செய்த வேலை இது என்று!

Advertisement

 

Advertisement

அவன் புன்னகைத்தான். ஆனால் முகம் காட்டிக் கொடுத்தது அவன் மனம் அடிவாங்கிப் போனதென்று.

 

“ஏன் த்தான்?”, ஒன்றாக வந்துவிட்டு தனியே ‘போ’வென்று கூறுவது அவளுக்குமே அசௌகரியம் தான்.

Advertisement

 

“ரொம்ப படுத்தறேனா அலர்விழி?”, என்றவன் தொனியில் பெண் அடிவாங்கிப் போனாள். உண்மையிலுமே அவனோடான நேரம் கசக்கவில்லையே. நல்ல தோழன் உணர்வைக் கொடுத்தவனாயிற்றே!

 

“அச்சோ.. ஏன் இப்பிடி நினைக்கிறீங்க? நல்ல புக் கூட இருக்க ஃப்ல் உங்கட்ட மட்டும் தான். ஒரு நல்ல ஃப்ரெண்டோட யாருக்காவது இருக்கக் கசக்குமா? ப்ளீஸ் தப்பா நினைக்காதீங்க.”

 

“கார்ல வரலம்ன்னு நீங்கச் சொல்லும் போதே ஒரு நாள் கூட இருப்போம் சொன்னதுக்கு நீங்க தான் சண்டே வேல இருக்குன்னு சொன்னீங்க. அது தான் எதுக்கு உங்களுக்கு தேவை இல்லாத அலைச்சல்ன்னு நினைச்சேன்.

 

இலக்கியா அளவுக்கு ஒரே இடத்த திரும்பத் திரும்ப பாக்கிறப் பொறுமை எல்லாம் எனகில்ல.. சோ நைட் லைட் ஷோ பார்த்துட்டு, இந்த இடத்துக்கு முழுக்கு போட்டுட்டு நாளைக்கு ஊர் போய் சேர்றேன்.” என்று எதை எதையோ கூறி மழுப்ப அவமானமாய் தோன்றினாலும் கச்சிதமாய் செய்து முடித்தாள்.

 

நல்ல நண்பனாய், நல்ல புத்தகத்தோடு தன்னை ஒப்பிட்டதெல்லாம் அவனை வானில் பறக்கச் செய்தது. அவளில்லாமல் செல்ல அவனுக்கு மனமில்லை என்றாலும் அவனால் இருக்க முடியாது. கடமை தவற முடியாது!

 

“நீ ரெஸ்ட் எடு.. நான் கேப்ல போறேன்.. அப்புறம் ஃப்ரியா இருக்கும் போது பாப்போம்”, என்று அவன் கிளம்பிவிட, “ஏன் மனோ? அவரோட வந்தா என்னை தின்னுடுவாரா?”, என்று தன்னவனிடம் சண்டையிடும் அளவு அலர்விழிக்கு கோபம். கைப்பேசி அவன் எடுக்காமல் போகவே உள்ளுக்குள் கோபம் புதைந்தது போனது. என்று எரிமலை சீறுமோ?

 

“வா அலர்.. நைட் லைட் எல்லாம் போட்டு நயாகரா ரொம்ப அழகா இருக்கும். போவோம். எபி கூட்டிட்டு போக சொன்னார்.”

 

“ம்ம்ம்..” என்றவள் மனமோ… ‘ஏன் என்ட்ட ஒரு வார்த்தை கேக்க முடியாதா? நான் என்ன பாக்கணும், யார் கூட பாக்கணும்.. எல்லாம் இவர் தான் டிசைட் பண்ணுவாரா?’ என்ற கோபம் மட்டும் குறையவே இல்லை.

 

கோபம் தான் மனோ மேல். அதைக் காட்டிலும் கோபம் தன் மேல். அவளோடு செல்லவேண்டித் தானே மனோவும் காத்திருந்தான். இருவர் ஆசையும் அவளால் தானே நிறைவேறாமல் போனது. பாய்ந்து வந்து கொண்டிருந்த கடலளவு நீர் அருகில் மக்கள் செல்லாமல் இருக்கத் தடையாய் நின்ற இடுப்பளவு கம்பியில் சாய்ந்து நின்றவள் மனமோ அங்கில்லை.

 

மனோ இருந்திருக்கலாம்… இந்த நேரம் வேறு விதமாய் இருந்திருக்கும்! பொக்கிஷமாக மனதில் புதைய வேண்டிய தருணம்.. பச்! நீண்ட பெருமூச்சோடு இருட்ட ஆரம்பித்த இடத்தை வெறித்து நின்றாள். முதல் முறை தனிமையை உணர்ந்தாள். மனோ வேண்டும் என்றது மனம் சண்டித்தனம் செய்தது.

 

தோளை அணைத்து கன்னத்தில் இதழ் பதித்து “மிஸ் மீ?”, என்றவனைப் பார்த்தவளுக்கு எப்படி உணரவேண்டுமென்று தெரியவில்லை.

 

கண்களை கசக்கிப் பார்க்க.. அவனே தான். பிரமை எல்லாம் இல்லை. சவ்வு மிட்டாயை மென்று கொண்டே கண் சிமிட்டி சிரித்தான்.

 

சிரிப்பு வரவில்லை. “போடா.. உன்ன பாக்க யார் ஏங்கினா? எதுக்கு வந்தீங்க.. போங்க”, என்றவளுக்கு உதடு துடித்து, கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

 

“சரி போ.. போய் நீயே கெனடா பக்கமிருந்து அருவி மேல அடிக்கிற கலர் கலர் லைட்ட தனியா பாரு”, என்று பாலம் கடந்தால் அருகே இருந்த கனடா தேசத்திற்குள் நுழைய வாங்கி வைத்திருந்த அங்கீகார பத்திரங்களை (ETA) நீட்டினான்.

 

பெண்ணவள் கண்கள் விரிய, நீர் வழிந்து.. இதழ் விரிந்தது. “நீங்க.. உங்கள.. போங்க மனோ..”, என்றாள், பட்டென்ற ஒற்றை அடியோடு.

 

“அடிப்பாவி.. இவ்வளவு தானா? இதுக்குத் தான் எனக்கு இந்த பாடா..?”, அவன் செல்லமாய் அலுத்துக்கொள்ள.

 

“வேற என்ன வேணுமாம்..?”, மந்தகாச புன்னகை பூத்தவளுக்குக் கோபம் என்ற ஒன்று இருந்தது மறந்தே போனது. 

 

புஜத்தை சுற்றி வளைத்துக் கொண்டவள் கண்கள் எதிரில் தெரிந்த அருவியை வாஞ்சையாய் கண்டு களித்தது. காலையில் வெறும் நீராய் தெரிந்த அருவி மனோவோடு பார்க்க அதிக பிரம்மாண்டமாய் தோன்றியது.

 

இலக்கியா வந்து இருவரிடமும் விடைபெற்றுச் செல்லவும், மெல்ல ரெயின்போ பாலத்தில் (Rainbow bridge) நடக்க ஆரம்பித்தனர்.

 

“மனோ..”

 

“ம்ம்..”

 

“ரொம்ப அழகா இருக்கில்ல?”

 

“காலைலயே ஃபுள்லா சுத்தி பாத்திருப்பியே..”

 

“ம்ம்ம்… அப்போ இவ்வளவு அழகா இல்லியே..”, மெல்ல புஜத்தில் இதழ் பதித்து, “தாங்கஸ் மனோ..” என்றாள் தலை உயர்த்தி கண்கள் பார்த்து.

 

“போடி போடி…”, மெல்லச் சிரித்தவனுக்கும் அது இனிமையான தருணமே.

 

“மனோ..”

 

“ம்ம்ம்?”

 

“நாம போக நினைச்ச இடத்துக்கு எல்லாம் இப்போவே போயிடலாமா?”

 

“அலாஸ்காவுக்குமா?”, அவன் நமுட்டு சிரிப்பு சிரிக்க…

 

“ம்ம்கும்..”, “எனக்கு என்னவோ அங்க போனாலும் நீங்க வானத்தைத் தான் பாப்பீங்கன்னு தோணுது. சோ ஓவர் பிள்ட்-அப் எதுக்கு ராசா?”, அவள் சிரித்த சிரிப்பில், “உன் சிரிப்ப கதறக் கதற அடக்குறேன் டீ”, என்று சூளுரைத்துச் சிரிக்க.. “கதறக் கதற வா இல்ல கதறிக் கதறியா?”, என்றவள் சிரிப்பும் கலந்தது.

 

உரசி சென்ற தென்றல் காற்றும், முகத்தில் வீசிய சாரலும் இதமாய் இருவருக்குள்ளும் இறங்கி நிமிடங்களை ரம்மியமாக்கியது. மனோவோடு ஒட்டி நின்று கொண்டிருந்தவளுக்கு உள்ளுக்குள் ஏகாந்தம். அவனின் ஒவ்வொரு அசைவிலும்.. மூச்சுக் காற்றிலும் அவள் தானே! நாட்களைக் கடத்தாமல் அவனோடு ஒரே வீட்டில் வாழ்கையை ஆரம்பிக்க உள்ளுக்குள் பேராவல் எழுந்தது.

 

“எப்பவும் என்னை பத்தி தான் யோசிப்பீங்களா மனோ?”

 

“ஹ ஹா… இது என்ன டீ கேள்வி?”

 

“லவ் யூ மனோ..”

 

அவனையே பார்த்து நின்றவள் விழிகளை அவன் இதழ் ஆசையாய் தொட்டு மீண்டது.

 

“மனோ.. இந்த ஊர் பிடிச்சிருக்கா? நம்ம ஊர் பிடிச்சிருக்கா?”

 

“என்ன தீடீர்ன்னு?”

 

“பழைய போட்டோஸ் எல்லாம் பார்த்துட்டு இருந்தேன். பாப்பு குட்டி அம்மா கூட விளையாடிட்டு இருந்த ஃபோடோஸ் விடியோ எல்லாம் பார்த்ததும், ஏதேதோ எண்ணம். எதுக்கு இங்க தனியா பாடுபட்டுகிட்டு? நமக்குன்னு குடும்பமா இல்ல? எது பின்னாடி ஓடிட்டு இருக்கோம்? வாரம் பூர ஆஃபீஸ். வார கடைசி பூரா வீட்டு வேலை. நடுவில கிடைக்கிற கொஞ்ச நேரம் எங்கேயாது போறோம். இப்போ பரவால.. நமக்குன்னு ஒரு குழந்த வந்த பிறகும் இதே ஓட்டம்.. அதப் பாத்துக்க முடியாம டே-கேர்-ன்னு யார் பொறுப்புலயோ குழந்த வளரும்!

 

ரெண்டு தாத்தா பாட்டி… அவங்க பாசத்தை அனுபவிச்சு… அவங்க சீராட்டல்ல வளரணும் நம்ம பிள்ளைங்க. பண நெருக்கடி இல்ல… அதனாலயோ என்னவோ எனக்கும் வேலைக்கு போகணும்ன்னு ஆசை குறைஞ்சு போச்சு மனோ. புது வருஷம் ஆரம்பிக்க போகுது.. நாமளும் புது வாழ்க்கைய ஆரம்பிப்போமே..”

 

“இரு.. ரெண்டு பேரும் வேலைய விடலாம்ன்னு சொல்றீயா?”, அவன் முகம் பூரித்து போனது. அவளுக்காக.. அவள் கனவிற்காக தானே இங்கு சுற்றித் திரிகிறான்.

 

“ம்ம்.. இது எதுவும் வேண்டாம் மனோ. உங்க விருப்பப்படியே ஊருக்குப் போவோம். போனதும் சண்ட போட்டாவது கல்யாணம் முடிப்போம். உங்க படிப்புக்கும் திறமைக்கும் எங்க போனாலும் ஹெஃப்ட்டி பே செக்-கோட அழைச்சுப்பான். இப்போதைக்கு, முன்ன மாதிரியே நம்ம சென்டர்க்கு போறேன். நமக்கு பாப்பா வந்த பிறகு கொஞ்ச நாள் வேலை வேண்டாம்ன்னு யோசிக்கிறேன். அப்பறம் கதைய அப்பறம் பாப்போம்… என்ன சொல்றீங்க?”

 

“ப்ளான் எல்லாம் நல்லா தான் இருக்கு. எனக்கு இங்க இருந்து போறதுல முழு சம்மதம்! இங்க இருந்து வர சொல்லிடுவாங்கன்னு வீட்டுலயும் நம்ம விஷயத்த சொல்லாம தள்ளிப் போட்ட நீயா பேசறன்னு இருக்கு. சரி வீட்டுல ஒரு வார்த்தை சொல்லிட்டு பேப்பர் போடு. எனக்கு ரெண்டு மாசம் நோட்டீஸ் பீரியட். கிளம்புவோம்!”

 

“சட்டுன்னு சரி சொல்லீட்டீங்க?”

 

“நீ சொன்னது எல்லாமே உண்ம தான. அது மட்டுமில்லாம எனக்கும் மனசில பல யோசனை ஓடுது. நம்ம சென்டர பெருசாக்கணும் விழி. சென்டர்-ல இருந்து சாப்ட்வேர் டெவல்ப்மென்ட் யூனிட்ட தனியா பிரிக்கணும். பண வசதி இல்லாத பிள்ளைங்களுக்கும் படிக்க வசதி பண்ணனும். எப்பவும் போல அத அம்மா பாத்துபாங்க.

 

இப்போ இருக்க சாப்ட்வேர்  டெவலப்மென்ட் யூனிட்ட இன்னும் பெருசாக்கணும்.. அத நீ தான் எடுத்து நடத்தணும் விழி.”

 

“நானா? என்னால் எப்பிடி? விளையாடுறீங்களா? போங்க மனோ..”

 

“முடியும் உன்னால. கூட உனக்குத் துணையா எப்பவும் நான் இருப்பேன். நான் இல்லாட்டாலும் சாதிக்கிற திறன் உனக்கிருக்கு. அம்மா கூட இருந்து கம்பனி எப்பிடி ரன் பண்றதுன்னு ட்ரெயினிங் எடுத்துக்கோ. உன்னால முடியும்ன்னு தோணும் போது அத உனதாக்கிக்கோ. இது உனக்கான என் கனவு. எனக்காக… உன்ன கஷ்டப்பட்டுப் படிக்க வச்ச உன் பெத்தவங்களுக்காக நீ செய்யணும். செய்வியா?”, கேட்டு நின்றவன் காதலில் விழுந்து மூழ்கிப் போனாள் மங்கை. மனம் நெகிழ்ந்து போனதால் வார்த்தைகள் மறந்து போனது அலர்விழிக்கு.

 

எதிரேக் கொட்டிக் கொண்டிருந்த பேரருவியில் பலவர்ண விளக்கொளி வீசப்பட்டது. பேரருவி பல வண்ணமாய் ஜொலித்தது.

 

பேரருவியாய் விழி, ஒளியாய் மனோ! ஒன்று சேர்ந்தால் அழகு தான்!

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!