Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ27_2 Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  27_2

 

அம்மாவின் கையின் குட்டி கோமல்.. புகைப்படம் கண்ணை கலங்கச் செய்யவில்லை. அதன் அருகில் பிரிக்கப்படாத கடிதங்கள் கண்ணைக் கரித்தது. மூர்த்தியிடமிருந்து ஆறு கடிதங்கள்.. சுந்தரியிடமிருந்து பத்து.. எழில் சித்தி… மூர்த்தியின் தகப்பன்.. என்று கட்டாய் கடிதங்கள். மாதுரி அவள் வாழ்க்கையை சூறையாடியது தெரிந்தது. மூர்த்தியின் ஒரே ஒரு கடிதம் கிடைத்திருந்தால் கூட இன்று அவள் நிலையே வேறல்லவா? கடிதம் பிரிக்கப் படவில்லை. மறைக்கக் காரணம்? அது கொடுக்கும் சிறு நிம்மதி அவள் பெற்றுவிடக் கூடாதென்று மறைக்கப்பட்டதா? அந்த அளவு கூட பாசம் இல்லாதவர் இன்று அன்பே உருவாகப் பேச காரணம்? பல ஆயிரங்கள் செலவில் துணிமணிகளும் நகைகளும் வாங்க காரணம்? ஏதோ… எங்கோ இடறியது! ‘இங்கிருந்து கிளம்பு துளசி..’ என்றது உள்ளுணர்வு.

 



Advertisement

துளசிக்கு இருப்புக் கொள்ளவில்லை. இருந்தும் ஏதாவது கூறி காலை முதல் மாலை வரை ஓய்வில்லாமல் இருக்கும்படி ஏதாவது முன்வந்து நின்றது. எப்படி துளசிக்கென்று தனக்காக நேரம் ஒதுக்க முடியாமல் போனதோ..  அதற்கு இணையாய் இருந்தது மூர்த்தியின் நாட்கள். காலை முழுவதும் கல்லூரியில்.. மாலை வந்ததும் கழுத்தைக் கட்டிக் கொள்வாள் தங்கம். மாமா மாமாவென்று அவனையே சுற்றும் சிட்டுக்குருவி அவனோடிருந்ததால் அவனுக்கு நேரம் இறக்கை கட்டி பறந்தது.

 

அவளை பைக்கில் ஊர்வலம் கூட்டிச் செல்லவதும்.. உணவு ஊட்டுவதென்று மணி நேரம் நிமிடமாய் சென்றுவிடும்.

Advertisement

 

Advertisement

தங்கம் உறங்கும் வரை காத்திருந்தான். இன்று அக்காவிடம் பேசியே ஆக வேண்டும் என்ற தீர்மானத்துடன் அமர்ந்திருந்தான். பானு அவன் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர். பெற்றவர்கள் ஆசீர்வாதம் இல்லாமல் செய்யும் காரியம் விளங்காது என்பது அவன் கருத்து. பானு வேறு முத்து வேறில்லை அவனுக்கு. இப்பொழுது தான் துளசி பக்கம் எல்லாம் சரியானது.. அடுத்து குடும்பமா? துளசி மனதிலும் ஆசை வளர்த்து அவன் மனம் முழுவதிலும் அவளைக் குடிகொள்ள வைத்தபின் இதை அவன் எதிர்பார்க்கவில்லை. அதுவும் அவன் அக்காவிடமிருந்து!! இத்தனைக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கு அவள் பழைய நிலை தெரியாது.. தெரிந்திருக்குமோ? தெரிந்தால் என்ன? ஏதோ ஒரு எரிச்சல் வந்து ஒட்டிக்கொண்டது. யாரோ விளையாடிய விளையாட்டில் வெட்டுப்பட்ட காய்களாக மாறிப்போனது அவர்கள் இருவரின் வாழ்க்கை.

 

“துளசிய நான் மனசார விரும்பறேன்னு சொன்ன பிறகும் நீ வேண்டாம்ன்னு சொல்றனா.. கண்டிப்பா அதுல காரணம் இருக்கும். எனக்கு காரணம் தெரிய கூட வேண்டாம். நீ வேண்டாம் சொன்ன பிறகு நான் எந்த விஷயமும் செய்ய மாட்டேன். ஆனா.. இது? உனக்கு புரியலக்கா… ஏன்னா நீ என் கிட்ட எதுவுமே கேட்டுக்கவே இல்ல. கேக்காம என் வாழ்க்கைக்கு நீயே முடிவெடுத்துட்ட! நான் கண்டிப்பா மீற மாட்டேன் உன் பேச்ச.

Advertisement

 

ஆனா, எனக்கும் அவளுக்குமான உறவு.. ஒரு கணவன் மனைவிக்கானது. மாத்த முடியாது. துளசி என் வாழ்க்கையில இல்லன்னா.. நான் உயிரோட இருந்தாலும்.. இல்லன்னு மட்டும் நீ தெரிஞ்சுக்கோ..

 

[the_ad id=”6605″]

 

 

 

நீ மட்டும் தான் அத்தான் நினைப்பில வாழ்ந்து முடிப்பேன்னு இல்ல…”

 

கூற வேண்டியதை கூறிவிட்டான். இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பது போல்.. “கதவை அடச்சுக்கோ” என்றவன், என்றும் போல், பாயும் தலகானியுமாக மொட்டை மாடிக்குச் சென்றுவிட்டான்.

 

அடுத்து வந்த நாட்கள் துளசிக்கு உவப்பாய் இல்லை. வீடு விழாக் கோலம் பூண்டது. அன்று நடந்த பூஜை கண்டிப்பாக இந்த விழாவிற்கான பூஜை என்று புரிந்தது. மெட்ராஸ் செல்ல விருப்பம் தெரிவிக்க… விசேஷம் முடியட்டும் என்றாள் மாதுரி. ‘என்ன விசேஷம்?’ என்றதற்கு மதுவின் திருமணம் என்றாள். ‘என்னது திருமணமா?’ விஷயம் கேள்விபட்டதும் கேள்விகள் பல எழுந்தாலும்.. அவளைப் பொறுத்த வரை இது வெறும் இரண்டு நாள் கூத்து. பதில் தேடவில்லை. அவரவர் வாழ்வு அவரவர் முடிவு!

 

ஒவ்வொரு நாளும் வீடு ஒவ்வொரு விழாக் கோலம் பூண்டது. அன்று மாலை ஆரம்பித்த பாடலும் ஆடலும் இரவு வரை நீடித்தது. ராஜனின் இரு பெண்களும் ஜொலித்தனர். இளவரசர்கள் போல் தம்பிகள் மட்டும் அல்ல.. ரிஷியும் அப்படி தான் சுற்றி திரிந்தான்.

 

ரிஷி தான் மதுவின் மாப்பிள்ளையா? ஆனால் அவன் பார்வை ஏன் தன் மேல்? அதற்குத் தான் மது முறைத்து கொண்டு திரிகிறாளோ? இருக்கலாம்!

 

வீட்டிற்கு வெளியே போடப் பட்டிருந்த பெரிய பந்தலில் அக்காவைத் தனித்து விடாமல் ஆடல் பாடலில் பங்கேற்க வைத்தான் அமர். அக்காவும் தம்பியும் ஆடல் என்ற பெயரில் கும்மாளம் போட.. அமரை அனுப்பிவிட்டு அவள் இடையைப் பிடித்த ரிஷியின் கன்னம் பழுக்கவில்லை அவ்வளவு தான்.

 

“என் அப்பாவுக்கு பிடிச்ச மருமகன் நீ.. அதனால என் செருப்பு இன்னும் என் கால்ல இருக்கு. நீ கட்டிக்க போறவ கிட்ட வச்சுக்கோ உன் மன்மத வேலையை. உன் பார்வையோ.. கையோ அத்து மீறினா சேதாரத்துக்கு நான் பொறுப்பில்ல..”

 

கூறிக்கொண்டிருந்தவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன்  முகத்தில் ஏளன புன்னகை. ‘சேதாரம் யாருக்கு? பாக்க தானே போற!’ என்ற ஏளன புன்னகை அது!

 

அவனை பிடிக்கவில்லை.. இருந்தும் வீட்டு மாப்பிள்ளை.. அங்கிருந்து சென்றுவிட்டாள்.

 

அடுத்த நாள் மெஹந்தி இடும் விழா. சொந்த பந்தகள் வீட்டை நிறைக்க.. கூச்சலும் கும்மாளமுமாக நேரம் சென்றது. துளசிக்கு இரண்டு கையின் முழு நீளத்திற்கும்.. முழங்கால் ஆரம்பித்து நகம் வரை மருதாணியைத் தீட்ட.. பெண் தூங்கி விழ ஆரம்பித்தாள். வேண்டாம் என்று தொண்டை தண்ணீர் வற்ற கூறியவள் பேச்சு எடுபடவே இல்லை. மது திருமணத்திற்கு இவள் ஏன் மெனக்கெட வேண்டும் என்றே புரியவில்லை பெண்ணிற்கு.

 

தினமும் இப்படியே இரவு வரை பிடித்துக்கொள்ள.. வந்த வேலை மட்டும் நடக்கவே இல்லை. இன்றாவது அப்பாவை பார்த்துப் பேச வேண்டும். ஊருக்கு டிக்கெட் எடுக்கச் சொல்ல வேண்டும்! இந்த கேலிக் கூத்தெல்லாம் ஆரம்பித்ததிலிருந்து தகப்பனைப் ஒழுங்காக பார்க்க முடிவதில்லை. இவள் வேலை எல்லாம் முடிந்த பின் அவரை காணச் சென்றால் அவர் தூங்கியிருந்தார். அப்படி தான் மாதுரி கூறினாள்.

 

இரவானது கொண்டாட்டம் முடிய. அவள் கையிலிருந்த மருதாணி களைந்து.. தனித்து விடப்பட்டாள்.

 

“படுக்கலியாக்கா..?” வந்து அக்கோவோடு அமர்ந்தான் அமர்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“ஒரு கல்யாணத்துக்கு எதுக்கு டா இப்படி படுத்தி எடுக்கறாங்க? முடியல டா தம்பி!!! தினமும் அடிச்சு போட்ட மாதிரி தூங்கறேன்! நீ தூங்கலியா?”

 

இருவருக்கும் பேச்சு நீண்டது. “இந்த மது ஏன்டா அமர் என்னைப் பார்த்து முறைச்சுட்டே சுத்துறா?”

 

“நீ சின்னதில இருந்தே அம்மா அப்பா இல்லாம தனியா இருந்தியாம். உன் வாழ்கையில நீ சந்தோஷமாவே இருந்தது இல்லியாம். போன தரம் நீ வந்த போதே அம்மா உன்ன ஒழுங்கா பாத்துக்காம ஹாஸ்டல்ல விட்டுடாங்களாம். அதனால் தான் அப்பாவும் படுத்த படுக்கை ஆகிட்டாங்களாம். அதனால் உன்ன அம்மாவும் அப்பாவும் ஆசையா பாத்துக்கறாங்க இல்ல.. அந்த கோபமா இருக்கும். அப்புறம் அவ கல்யாணத்துக்கு அவளுது மாதிரிய உனக்கும் எல்லாம் செய்யறாங்கல அது தான் முறைச்சுட்டே சுத்தறான்னு நினைக்குறேன்”

 

இது என்னடா புது கதை என்று தான் பார்த்தாள். “டேய் என்னைப் பார்த்தா சந்தோஷமா தெரியலியா.. ஏன்டா..?” அவள் சேட்டைகள் எல்லாம் அவிழ்த்துவிட.. வாய் பிளந்து கேட்டான். அக்காவின் தீவிர விசிறியாகிப் போனான். அக்கா போல் சுவர் ஏறி ஒருநாளாவது குதிக்கவேண்டும் என்பது அவனின் இன்றைய வாழ்நாள் குறிக்கோள்ளாகி போனதில் அதிசயமில்லை.

 

அப்பா தூங்கும் முன் அவரை காண வேண்டுமே… அப்பா முன் நின்றாள். அவளுக்காகவே காத்திருந்திருப்பார் போலும்.

 

“இன்னைக்கு தூக்கம் வரலியா கண்ணம்மா…” தினமும் காத்திருந்திருப்பார் போலும்..

 

அப்பாவோடு கதை பேசினாள். கையும் காலும் காட்டினாள். அவர் கண் பனித்துப் போனது.

 

“உனக்கும் ஒரு நல்லது பண்ணிட்டேன்னா… நிம்மதியா கண்ணை மூடிடுவேன் கண்ணமா..” மனம் கனக்க மூச்சு திணறியது.

 

அவர் திணறல் பார்த்தவளுக்கு இதயம் இளகியது.

 

“உங்க பொண்ணு தனியா எல்லாம் இல்லப்பா. எனக்குன்னு ஒருத்தர் இருக்கார் பா. தாத்தா பார்த்து முடிவு பண்ணினவர நான் விரும்பறேன். அவர் தான் என்னை ஹாஸ்ட்டல்ல தங்க வச்சு.. படிக்கவும் வைக்கிறார். இன்னும் ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம்ன்னு சொல்லியிருக்கார். எனக்கு கல்யாணம்ன்னு ஒண்ணு நடந்தா அவர் கூட மட்டும் தான் பா. என் மேல் உயிரா இருக்கார். நீங்க எனக்காக வருத்தபடாதீங்க.. நான் நல்லா இருக்கேன்”

 

மகளின் திடம் கண்டு மனிதனுக்கு மூச்சு சீரானது. ராஜனுக்கும் மகிழ்ச்சி தான். ஆனால் மாதுரியைத் தெரிந்தவர் ஆகிற்றே.

 

“எங்க இருந்தாலும் நல்லா இருமா..” என்றவர்.. மகளுக்கான சொத்து பத்திரங்கள் எல்லாம் அவள் கையில் கொடுத்துவிட்டார். “சுத்தி இருக்கவங்க உன்கிட்ட சிரிச்சு பேசறாங்கன்னு யாரையும் நம்பாதா கோமல்.. இது உன் அப்பாவும், தாத்தாவும் உழைச்சு சம்பாரிச்சது. உனக்கானது. யார் கிட்டையும் குடுத்து ஏமாந்திடாத! என் மக போற வீட்டுலயாவது மதிப்பும் மரியாதையுமா இருக்கணும் கண்ணமா.. வேண்டாம் சொல்லிடாத.”

 

அங்கு அலமாரியிலிருந்த நகை டப்பாவை எடுக்கச் சொல்லி அதையும் அவளிடம் வைத்துக் கொள்ளச் சொன்னவர், “இதுல உன் அம்மாதும் பாட்டிதும் இருக்கு. உனக்கு மட்டுமேயனது. இப்போ உனக்காக வாங்கினதும் இருக்கு. என் மகளுக்கு சேர வேண்டிய என் உழைப்பு. போகும் போது கையோட கொண்டு போயிடு. மாப்பிளைய ஒரு தரம் கூட்டிட்டு வா.. உன் மனசுக்கு பிடிச்சவரோட நீ சந்தோஷமா வாழணும்.” மாதுரி அறை பக்கம் வந்திருக்கவில்லை. மகளோடு மணிக் கணக்காகப் பேசினார். இனி இது போல் மகளுடன் ஒரு வாய்ப்பு கிடைக்குமா தெரியாது. கிடைத்த வாய்ப்பை விட மனமில்லை.  

 

நாளை மறுநாள் திருமணம். அடுத்த நாளே கிளம்பி விட வேண்டும்.    மெத்தையில் விழுந்தவளுக்கு உடல் முழுவதும் வலித்தது. எப்போடா இங்கிருந்து ஓடுவது என்ற நிலைக்கு வந்துவிட்டாள். உடலோடு மனமும் களைத்துப் போனது. கண்ணை மூடவும் வந்து விட்டான் அவன்..

 

மூர்த்தியை நினைத்த மாத்திரத்தில் அவன் கைக்குள் அடங்க மனம் துடித்தது. தனித்து போராடப் பிடிக்கவில்லை. ‘மூர்த்தி சார்..’ மனம் தன் மன்னவனையே சுற்றி திரிந்தது. திருமண வைபவம் செய்த மாயமா… இல்லை மூர்த்தியின் பிரிவு செய்த மாயையா தெரியவில்லை. மனம் அதிகமாக இன்று மூர்த்தியை தேடியது. இதற்கு மேல் தனிமையில் வாட அவசியம் என்ன?

 

[the_ad id=”6605″]

 

 

 

“மூர்த்தி சார்… வீட்டுக்கு வர நான் ரெடி… வரட்டா?” அவன் கைக்குட்டையோடு கதை பேசினாள். “இன்னும் ஒரு வருஷம் எல்லாம் காத்திருக்க முடியாது. இப்போவே கூட வரேன்.. கூப்பிட்டுபீங்களா?”. போனதும் தயக்கம் களைந்து கேட்டுவிட வேண்டும்.

 

மடியில் வைத்துப் பேசிய வார்த்தைகள் காதுக்குள் ஒலிக்க.. உள்ளுக்குள் ஒரு வித சிலிர்ப்பு.. காதலை  உணர்வது கூட அழகு தான்.  எரித்த நிலா இந்த நிமிடம் குளிர்ந்தது. அடைத்த மனம் துள்ளிக் குதித்து இறக்கை இல்லாமல் மூர்த்தியை நோக்கிப் பறந்தது.

 

மணி பன்னிரண்டை தொட்டிருக்க.. களைப்பு மிகுதியில் இன்று தூக்கம் பொட்டும் இல்லை. விளக்கில்லா மெத்தையில் எத்தனை மணி நேரம் தான் புரளுவது? அவள் படுத்திய பாட்டில் ஒலி நாட இசைக்க மறுத்தது. நிலவு வானை அலங்கரித்திருக்க வெளியே சென்று கூடை நாற்காலியில் சுருண்டு அமர்ந்துக் கொண்டாள்.

 

அவள் மூர்த்தியோடு ஜோடி போட்டுச் சுற்றிக்கொண்டிருக்கக் கீழே இருந்த தோட்டத்தில் இரண்டு உருவம் ஏதோ பேசிக்கொண்டிருந்தது. முதலில் திடுக்கிட்டாலும் வந்த சத்தம் வீட்டினருக்குச் சொந்தமானது என்பதால் பயம் சுவடில்லாமல் மறைந்தது.

 

அது ரிஷியின் பேச்சு குரல் தானே?! அவன் அப்பொழுதே சென்றுவிட்டானே.. இந்நேரம் இங்கு என்ன வேலை? அவள் ஹிந்தியும் சரளமாகி இருக்க.. அச்சு பிசகாமல் கேட்ட ஒவ்வொரு வார்த்தையும் புரிந்தது.. அவள் யோசனை தடைப்பட்டது. கவனித்தாள். அவளைப் பற்றித் தான் என்பது புரியவே நேரம் எடுத்தது.

 

“… முதல்ல ஒருத்தன் கூட ஓடிப்போனா.. இப்போ வேற எவனையோ நினைச்சு கண்ண கசக்குறா.. நாளைக்கு எவன் பின்னாடி போவாளோ? இவ கால உடச்சு அடுப்பில வைக்காம.. நீயும் உன் புருஷனும் நடுவீட்டில வச்சு கொஞ்சீட்டு இருக்கீங்களா? அந்த நாய் எவன் கூடவாவது போகட்டும்.. இந்த அல்ப சொத்துக்கு.. இந்த நடத்த கெட்டவளை என் மனைவியாக்கிக்க முடியாது.

 

என்னைப் பார்த்து செருப்பு பிஞ்சிடும்ன்னு சொன்னதுக்காகவாது அவள ஒரு வழி ஆக்காம விட கூடாது நினைச்சேன்… அதுக்காக ஊர கூட்டி எதுக்கு மனைவியாக்கணும்? மதுவ கட்டி வைங்க எனக்கு.. இவ வேண்டாம்.”

 

அவன் முடிக்க கூட இல்லை. மாதுரி குரல் கேட்டது. “டேய் நிறுத்து டா.. உளறிட்டே இருக்காத! கதவ தட்ற மகாலக்ஷ்மிய வேண்டாம் சொல்ற? அறிவு கெட்டவனே..

 

உன் மாமாக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு பொண்ணு இருந்துது. உன்ன மாதிரி நான் யோசிச்சு இருந்தா இந்நேரம் ஐஞ்சுக்கும் பத்துக்கும் கணக்கு பாக்கிற எவனாவது கைய எதிர்பாத்து வாழ்ந்திருக்கணும். இப்பிடி காரு பங்களான்னு வாழ்ந்திருக்க முடியாது.  இன்னைக்கு உன் குடும்பமும் இந்த நிலைமையில இருக்கது என் புருஷன் தயவில தான் நினைவில இருக்கட்டும்!

 

மனுஷன் இருக்க சொத்த பிரிச்சு உயில் எழுதிட்டார். அந்த பொண்ணுக்கு நேரு ப்லேஸ்-ல இருக்கப் பெரிய பில்டிங்க எழுதி வச்சிருக்கார். அதுல எவ்வளவு வருமானம் வருது தெரியுமா? அது மதிப்பு தெரியுமா உனக்கு? அவ தாத்தாவும் அந்த ஊர்ல இருக்க வீடு.. தோட்டம் துரவு.. நிலம் எல்லாம் அவளுக்கு மட்டும் தான்னு எழுதி வச்சிருக்கார்.

 

மத்த பசங்களுக்கு வேணும்னா, கோர்ட்டு கேசுன்னு போகணும். தீர்ப்பு அப்பவும் நமக்கு சாதகமா வருமா.. தெரியாது! நீ அவள கட்டிக்கோ…  அவள அடிப்பியோ.. கொஞ்சுவியோ…  எல்லா சொத்தையும் உன் பேருக்கு எழுதி வாங்கிட்டு கழுதையை துரத்திடு. இத இதுக்கும் மேல உனக்கு விளக்க முடியாது.

 

இது எல்லாம் யோசிச்சு தானே முடிவு எடுத்தோம். இப்போ ஏன் டா கடைசி நேரம் படுத்தற? சொத்து கைல வந்தப்பறம் உனக்கு மதுவ நான் கட்டி வைக்கிறேன். என் வீட்டு மருமகன் நீ தான்.”

 

‘ஒரே கல்லுல ரெண்டு மாங்கா?’ கசக்கவில்லை அவனுக்கு! “சொதப்பாதே?” சந்தேகமாக கேட்டவனிடம்

 

“அத நான் பார்த்துக்குறேன்… மணவறை வர நேரம் மது இருக்க மாட்டா… நான் விஷ பாட்டுல கைல எடுத்தா.. உன் மாமா அவ கால்ல தன்னால விழுவார். உன் கிட்ட அவளே வந்து உக்காருவா பாரு… பச்! அது எல்லாம் நான் பார்த்துக்கிறேன்… உனக்கு எதுக்கு கவல?”

 

கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது. ‘அது தானே பார்த்தேன்… இவன் கை என்னடா நீளல..? இந்தம்மா என் கிட்ட கொஞ்சுதேன்னு பார்த்தா.. இது தான் கதையா!! இந்த சொத்துக்காக தானே என்னை என் அப்பா கிட்ட இருந்து பிரிச்ச.. எனக்கானத கண்டிப்பா உனக்குத் தர மாட்டேன்!’

‘நாளையே கிளம்ப வேண்டும் இந்த கும்பலிலிருந்து.’ எண்ணிக் கொண்டாள்.

எப்படியாம்? மாதுரிக்கு சிறு சந்தேகம் வந்தால் கூட துளசிக்கு, சூனியக்காரி கையில் மாட்டிய ராப்பன்சல் நிலை தான்!

 

இங்கு இப்படி இருக்க… அங்கு?

 

“லீவ் போடு.. லீவ் கிடைக்காட்டா வேலையை முழுக்கு போட்டுட்டு வீட்டுக்கு வா மூர்த்தி. இதுக்கு மேல நீ எதுவும் பேச கூடாது. நான் சொல்றத மட்டும் கேளு!” கூறிய பானு இரயில் ஏறியிருக்க.. மூன்று மணி நேரமாகியும் நடைபாதை மேடையில் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தே இருந்தான் மூர்த்தி!

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!