Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ27 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 

கடித போக்குவரத்து பெரும்பான்மை வகித்த காலம் அது.. அதாவது வெவ்வேறு ஊரில் இருக்கும் உறவுகளும் நண்பர்களும் தகவலைக் கடிதம் மூலம் பரிமாறிக்கொள்வர். கடிதம் சென்றடைய நாட்கள் பல ஆகலாம்.

நல்லதோ கெட்டதோ.. எல்லா வித அவசர தகவல்களுக்கும் தந்தி  (டெலெக்ராம்) என்னும் சேவை இருந்தது. மணி நேரத்தில் தகவல் தக்க நபரைச் சென்றடைந்துவிடும். “தந்தி வந்திருக்கு” என்று தந்திக்காரர் வந்துவிட்டாலே.. மனம் பரபரக்காதவர் இருந்திருக்க மாட்டார். 1854 துவங்கப் பட்ட இந்த சேவை, 163 ஆண்டுகளுக்குப் பின் கைப்பேசி போன்ற நவீன வரத்தால், கத்தியின்றி இரத்தமின்றி தந்தி-தபால் இலாகா அதன் முடிவைக் கண்டது.

கைப்பேசி இல்லை என்றாலும் நாளடைவில் தொலைப்பேசி பொது உபயோகத்திற்கு வந்தது. அனைவர் வீட்டிலும் தொலைப்பேசி வசதி இருக்காது. சுற்று வட்டாரத்தில் யாரேனும் ஒருவர் வீட்டில் இருக்கும். அவர்கள் தொலைப்பேசி எண்ணை அவசரத்திற்குப் பயன் படுத்திக் கொள்வர்.

பொது தொலைப்பேசி சாவடி (பப்ளிக் டெலிபோன் பூத்), மற்றும் கடைகளில் இருக்கும் தொலைப்பேசி மூலம் தகவல் பரிமாறிக் கொள்ளலாம். அலுவலங்களிலும் மேசைக்கு ஒன்று இருக்காது.



Advertisement

தேவைகளுக்கு மட்டுமே பயன் படுத்த பட்ட கருவி.

கைப்பேசி இல்லாத காரணத்தாலோ என்னவோ.. எதிரில் இருப்பவர்கள் முகம் பார்த்துப் பேசும் வழக்கம் இருந்தது. அதனால் ஒருவரை பற்றி மற்றவர் அறிந்திருந்தனர்.

 

Advertisement

 

Advertisement

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 27

 

“..தாமரை ஓடை இன்ப வாடை

Advertisement

ஆ ஆ….. தாமரை ஓடை இன்ப வாடை வீசுதே வா – பொன்னிதழ் ஓரம் இந்த நேரம் இன்பச் சாறும் ஊருதே

ஆளானதால் வந்த தொல்லை

காதல் முல்லை கண்ணோடு தூக்கம் இல்லை

 

யாரது

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

தாளாத பெண்மை வாடுமே – வாடுமே

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது”

சங்கர் கணேஷ் அவர்களின் இசையில் 1980களில் வாணி ஜெயராம் அவர்கள் பாடிய பாடல் இது. கண்ணை மூடிக்கொண்டு கேட்டால்.. உலகை மறக்கலாம்.. அப்படி ஒரு இனிமை அந்த குரலிலும் இசையிலும்.

 

ஒரு முறையோடு நிறுத்த முடியாது போனது துளசிக்கு. அவளும் அதில் லயித்துத் தான் போனாள். ராஜனின் அறையில் இருந்த அத்தனை தமிழ் பாடல் நாடாக்களும் அவள் அறையில்… அவள் கட்டில் மீது பரப்பிக் கிடந்து.

 

வீட்டில் உண்பது உறங்குவது தவிர அப்பாவோடு பேசி சிரிப்பாள்.. ஆம் சிரிப்பாள். தம்பியோடு நேரம் கழிப்பாள், அறைக்கு வந்ததும் பாடல்களில் தன்னை மறப்பாள். நேரம் இப்படி தான்.. நன்றாகவே சென்றது.

 

இன்று ராஜன் மகளோடு மனம் திறந்து பேசினார். திக்கித் திணறித் தான் என்றாலும் ஒவ்வொரு வார்த்தையில் மகள் மேல் வைத்திருந்த அலாதி பிரியம் தெரிந்தது. எப்படியோ உடல் மண்ணில் மக்கிப் போகும் முன் மகளிடம் தன் மனதைத் திறந்தார்.

 

மூர்த்திக்கு பட்டுக்கொண்டிருக்கும் கடன் தான் ஏறிக்கொண்டே போனது. அப்பாவைத் தெரிந்து கொண்டதில் பெண்ணுக்கு மகிழ்ச்சியே. இப்படி ஒருவரை அவள் எதிர்ப்பாக்கவில்லை. ராஜன் மனம் அத்தனை மென்மை. அந்த மென்மை தான் அவரை மகளிடமிருந்து பிரித்தது. அமிர்தமே என்றாலும் அளவை மீறும் போது அதுவும் நஞ்சாகி விடுவதில்லையா? அவள் அம்மாவைப் பற்றி இப்பொழுது தான் கேட்கிறாள், அப்பாவின் காதல் மனைவி. அவளிடம் அம்மாவின் குணம் அதிகம் கண்டாள். அப்பாவிடமிருந்து வாங்கி வந்த மென்மையை மட்டும் வழியில் தவறவிட்டிருந்தது தெரிந்தது. அந்த புண்ணியமும் அவரையே சேரும்!

 

மனைவி தவறியதும் பெற்றோரிடம் செல்லாததைக் குறித்து இப்பொழுது வருந்தி என்ன பயன்? மகளைத் தனித்து விட்டதிற்காக மகள் கையை பிடித்து கண்ணீர் விட்டார். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்தால் என்ன.. செய்யாமல் போனால் என்ன? மகளின் ஐந்து மாத வாழ்வு பற்றித் தெரிந்தால் இதோ…. இந்த மூச்சுக் காற்று தான் அவர் விடும் கடைசி மூச்சுக் காற்றாயிருக்கும்.

 

“நான் நல்லா தான் பா இருக்கேன். ஒரு குறையும் இல்ல எனக்கு”,  என்று மனிதனுக்கு நிம்மதி தந்தாள். விடுதியில் மகள் தனித்திருப்பது அவருக்குள் வேதனையைக் கிளப்ப தன்னோடு இருக்கக் கேட்டார்.

 

“தனியா இருந்தாலும் நிம்மதியா தான் பா இருக்கேன். அதுவே நல்லா தான் இருக்கு. படிப்பு முடிய இன்னும் ஒரு வருஷம் இருக்கு பா.” என்றுவிட்டாள். மூர்த்தியைப் பற்றி வாய் திறந்தாளில்லை. இன்னும் அத்தனை நெருக்கம் ஏற்படவில்லை.

 

[the_ad id=”6605″]

 

 

அவருக்கு கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தாலும்.. முடிந்ததை பற்றிப் பேசாமல்.. நிகழ் காலம் பற்றி பேசினார். மகள் தனித்திருப்பது மனதை பிசைந்தது.

 

“துடுப்பு இல்லாத படகு.. அலை அடிக்கிற திசை எல்லாம் போகும். வாழ்க்கைக்கு ஒரு துணை இல்லேனா… வாழ்க்கையும் அப்படி தான் ஆகிடும். நிலை இல்லாத படகில பிரயாணம் போக முடியாது. இப்போ நீ சின்ன பொண்ணு.. யாரும் வேண்டாம்.. தனியா இருந்திடலாம்ன்னு கூட தோணலாம். ஆனா ரத்தம் சுண்டி, தோல் சுருங்க ஆரம்பிக்கவும்.. நமக்குன்னு ஒரு துணை கேக்கும். ஒரு காச்சல் வந்தா பாசமா கஞ்சி வச்சு குடுக்க ஆள் இருக்காதான்னு மனம் ஏங்கும். அம்மான்னு கழுத்த கட்டிக்க ஒரு குழந்தை வேணும்ன்னு ஆசையா இருக்கும். அந்த வயசுல யாரும் இல்லாத தனிமை ரொம்ப கொடுமை. நீ அந்த மாதிரி தனி ஆகிட கூடாது கோமல்.  உன்ன மாதிரி சின்ன பிள்ளைங்களுக்கு இந்த உலகம் பொல்லாதது கோமல். நிம்மதியா வாழ விடாது. உன்ன நேசிச்சு உனக்கு வாழ்க்கைத் துணையா வர ஒருத்தன் வேணும். நான் கண்ண மூடுறதுக்குள்ள ஒரு கல்யாணம் பண்ணிக்கணும் நீ..” அவர் பேச, கேட்டு கொண்டிருந்தவளுக்கு மனம் கவர்ந்த மூர்த்தி தான் கண்முன் வந்தான். அதன் பின் அவர் கூறியது செவிப்பறையைத் தீண்டவில்லை.

 

வந்த நான்கு நாட்களாய் மூர்த்தியின் எண்ணம் அவளைச் சூழ்ந்து கொண்டாலும் கணவன் என்ற கனவு கண்டாளில்லை. அதற்கான காரணம் அப்படியே இருக்க, கூடவே இன்னும் திருமணத்திற்கு ஒரு வருடம் இருக்க.. கணவன் என்ற நிலையில் மூத்தியை நிறுத்தினாலும் கனவு வரை செல்லவில்லை. ஏனோ இன்று காற்று திசை மாற ஆரம்பித்தது.

 

மணி நள்ளிரவு 12:30 என்று கடிகாரம் காட்டியது. ஆனால் கண் மூட மறுத்தது. அறையை ஒட்டிய மேல்மாடத்தில் இருந்த கூடை நாற்காலியில் சுருண்டு அமர்ந்திருந்தவள் காதில் தென்றலோடு தவழ்ந்து வந்த பாடல் ஊடுருவ.. அவள் மனமும் அதே நிலையைப் பிரதிபலிக்க மூர்த்தியின் பிரிவு வெகுவாய் வாட்டியது.

 

‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது’ அதுமட்டுமா ஒலித்தது? அதுவரை அவள் கேட்டிருந்த அத்தனை காதல் பாடல்களும் அவளுக்காகவே இசை அமைத்து பாடியது போன்ற பிரமை.. ஏதோ உல்லாசம்.. மூர்த்தியோடு கை கோர்த்து வெண்ணிலவில் உலாவினாள்.

 

இருக்கும் வேளை அருமை தெரிவதில்லை. இல்லாததை நினைத்து உருகத் தான் மனதிற்குப் பிடிக்கும் போலும். நினைத்த நேரம் பேசக் கூட முடியவில்லை என்ற ஏக்கம் நிரம்பி வழிந்தது. வந்த அன்று பேசியது. அதுவும் ஐந்தே நிமிடம். மறு நாளிலிருந்து இன்று மாலை வரை அவளும் முயன்று விட்டாள்.. ம்கூம்! அவன் பாக்கமிருந்து அரவமில்லை.

 

பேசமுடியவில்லை என்றதாலோ என்னவோ..  மனதை நிறைத்தவனால் இன்ப ஊற்று ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு வகை மெல்லிய வலி ஒரு பக்கம் இருந்து கொண்டே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகக் கணவன் உருவில் வர ஆரம்பித்தவன் முழுவதுமாக அவளை ஆக்கிரமித்தான். அவன் மனைவியாகக் காலம் முழுவதும்… அந்த உணர்வே மிகவும் பிடித்திருந்தது.

 

அவன் துணைவியாக மூர்த்தியின் ‘துளசி மா..’வை கேட்டுக்கொண்டு.. அவனையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டு.. ஆஹா.. கனவு நன்றாகத் தான் இருந்தது. சின்னதாக ஒரே ஒரு இடறல் மட்டும்! இரவில் சில மணி நேரம் மாட்டும் பல்லைக் கடித்துக் கொண்டு கழித்துவிட்டால்… எல்லாம் சுகமே! 

 

தூக்கமில்லாமல் நிலவைத் துளசி மட்டுமா வெறித்திருந்தாள்? மூர்த்தியும்  தான். மொட்டை மாடியில் பாய் விரித்துப் படித்திருந்தான். புறங்கை நெற்றியில் குடிகொண்டிருக்க.. யோசனையில் நிலவை வெறித்திருந்தவன் கண் மூட மறுத்தது. ‘துளசியை வேண்டாம்’ என்று பானு கூற காரணம்? அவன் கேட்டானில்லை. காரணம் என்னவாக வேண்டும் என்றாலும் இருக்கட்டும்.. அவனால் துளசியைக் கடந்து தான் போக முடியுமா? இருவருக்குமான பந்தம் முடிவானது, அதில் மாற்றமில்லை. அதனால் அவன் கேட்டானில்லை.

 

“மாமா..” அருகில் படுத்திருந்த தங்கம் சிணுங்க… போர்வையை இழுத்து மூடிவிட்டவன்.. மெல்லத் தட்டி கொடுக்க மீண்டும் உறங்கிப் போனாள். தனியே மாடியில் படுக்க வந்தவன்.. பாயை விரித்துப் படுக்கும் முன்னே… “மாமா.. நானும்..” என்று அவனைக் கட்டிக் கொண்ட சிட்டுக்குருவியை என்ன செய்ய? ஊர்க் கதை எல்லாம் பேசி சற்று முன் தான் கண்ணயர்ந்தாள். 

 

ரயில் நிலையத்தில் இவனைப் பார்த்த நொடி.. “மாமா” என்று வாஞ்சையாய் கட்டிக் கொண்டவள் தான்.. அவனை விட்டாளில்லை. ஏனோ இரண்டு பெண்களுக்குமே அவன் இன்றியமையாதவன் ஆகிப்போனான். இதில் ஒருத்திக்கு அவன் கணவனும் இல்லை… மற்றவளுக்குத் தகப்பனும் இல்லை. இல்லை என்றாலும் அது தான் அவர்கள் உறவு. அந்த உறவை அக்காவே கூறினாலும் விட முடியுமா? பேசினால் அக்கா புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கையோடு கண் மூட முயன்று கொண்டிருக்கிறான்.

 

[the_ad id=”6605″]

 

 

விடியற்காலை தான் கண்ணயர்ந்தாலும் சூரிய கதிர்கள் ஜன்னல் தொடவும் விழித்துக்கொண்டாள். காலை உணவு முடிந்ததும் மாமி வீட்டிற்கு அழைத்தாள். இன்றும் மாமி இல்லை போலும். மீண்டும் மீண்டும் முயன்றாள். கிணற்றடியில் தங்கம் குளிக்கத் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தவனுக்குக் கேட்டது. துளசி தேடுவாளே… அரக்கப் பறக்கக் கல்லூரிக்குக் கிளம்பியவன் அருகிலிருந்த எஸ்.டி.டி(S.T.D) சாவடிக்கு விரைந்தான்.

 

இவன் அழைப்பான் என்று தொலைப்பேசி அருகிலேயே அமர்ந்திருந்தவளுக்கு வீட்டில் வந்து சென்று கொண்டிருந்த கூட்டம் கண்ணில் பட்டது. ‘என்ன’ என்று கேட்டதற்கு.. ‘விசேஷம்’ என்றனர். விசேஷத்திற்குப் பெயர் இல்லையா? பூஜை என்றனர். அவர்கள் என்னவாவது செய்யட்டும்… மூர்த்தி ஏன் பேசவில்லை? அது தான் அவளின் வருத்தம்.

 

தொலை தூர அழைப்பிற்கான பிரத்தியேக ரிங்… முதல் அழைப்பிலேயே எடுத்துவிட்டாள்.

 

“மூர்த்தி சார்..?” ‘ஹலோ.. யார்..’ எதுவும் இல்லை. மூர்த்தியாகத் தான் இருக்கும் என்ற எண்ணம். இருக்க வேண்டும் என்ற வேண்டுதல்.

 

‘அவர் தான்… அவரே தான்.’ “துளசி மா…” என்றான்.

 

அவன் சத்தம் வந்த பின் அவளிடம் சத்தமில்லை. “பேசு துளசி..”

 

“மூர்த்தி சார்…” ஏக்கம் எல்லாம் தொலைப்பேசி கடத்திச் சென்றது.

 

அவன் பேசியிருப்பான்… பானு பற்றி.. தங்கம் பற்றி! பானு கூறிய வார்த்தை கூர் வாளாய் தொண்டையில் சிக்கிக் கொண்டிருக்காமலிருந்தால், மனம் மகிழப் பேசியிருப்பான்.

 

“எங்கிட்ட வந்திடு துளசி மா..” என்றான். அக்கா? அவர் வார்த்தை? தெரியவில்லை. துளசி வேண்டும் என்றது மனம். அவனைப் பிடித்த பிஞ்சு கை வேண்டும் போல் இருந்தது… முகம் புதைத்துக் கொள்ள!

 

“அப்பாட்ட சொல்றேன் மூர்த்தி சார் டிக்கெட் எடுக்க… ஆனா அப்பா இருக்க சொல்லுவாங்க. அப்பா பாவம்.. படுத்த படுக்கையா இருக்காங்க மூர்த்தி சார்.”

 

ஒரே இரைச்சல்… “என்ன துளசி.. வீட்டுல ஒரே சத்தமா இருக்கு? நீ பேசறதே கேக்கல?”

 

“ஏதோ பங்ஷன்… வீடு பூரா ஃப்ளவர் டெக்கரேஷன். யாரெல்லாமோ வந்து போறாங்க.. கேட்டா ஏதோ பூஜையாம்!”

 

“மாமாக்கு உடம்பு சரி ஆகறதுக்கா? எல்லாரும் வருத்தமா இருக்காங்களா?”

 

“எதுக்குன்னு தெரியலியே.. அப்பா நல்லா இருக்காங்க மூர்த்தி சார். இப்போ பரவல கொஞ்சம் திக்கித் திக்கி பேசராங்க. எல்லாருமே ரொம்ப ஹாப்பியா இருக்காங்க.”

 

அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே மாதுரி அழைத்தார். பேச்சு தடைப் பட்டது. பதட்டம் ஒட்டிக்கொண்டது.. இன்றும் அவ்வளவு தானா?

 

“மூர்த்தி சார்..?”

 

அவள் குரல் உடைந்திருக்க… “என்ன துளசி மா?”

 

“நான் எப்படி இருக்கேன்னு கேக்கவே இல்ல நீங்க..”

 

அவனுக்குத் தெரியாதா? இருந்தும் கேட்டான். “எப்படி இருக்க துளசி?”

 

“நீங்க இல்லாம நான் நல்லாவே இல்ல மூர்த்தி சார்..” இருபுறமும் மௌனம். மௌனம் கலையும் முன் மாதுரி வந்திருந்தாள்.

 

“அப்புறம் பேசு கோமல்… பூஜைக்கு நேரம் ஆச்சு. போ போய் அலங்காரம் பண்ணிக்கோ..”

 

மாதுரி அவள் முன் வந்து நின்று கொள்ள என்ன பேசுவது? ‘நீ இல்லாம நானுமே நல்லாவே இல்ல துளசி.’ சொல்லப்படாமலே போனது.

 

புது உடை.. புது நகை.. அலங்காரம்.. பூஜை… விருந்து.. விருந்தினர்.. என்று நேரம் கரைந்தது. நெருங்கிய உறவு என்று சிலர் அங்கேயே தங்கிக் கொண்டனர். காலை முதலே நின்று நின்று கால் வலியும் அசதியும் சேர்ந்துகொண்டது. கணுக்காலுக்கு மருந்தைத் தடவி விட்டுப் படுத்தது தான் தெரியும்.. சூரிய கதிர்கள் முகத்தை வருடவும் தான் கண் திறந்தாள்.

 

இன்றும் வீடு பரபரத்தது. மீண்டும் ஒரு பூஜை எல்லாம் தாங்காதே. யோசித்துக் கொண்டே தொலைப்பேசி அருகில் செல்லவும் மாதுரிக்கு மூக்கு வியர்த்துவிட்டது. அப்பா வீட்டுச் சொத்தை மகள் பேசியே கரைத்துவிடுவாள் என்று பயந்துவிட்டாளோ? இருக்கும்.. இருக்கும்!

 

“சீக்கிரம் சாப்பிட்டுக் கிளம்பி வா. துணி செலக்ட் பண்ணனும்” என்று அவசரப் படுத்தினாள்.

 

ஏனாம்?

 

[the_ad id=”6605″]

 

 

மாதுரிக்கு நின்று பேசக் கூட நேரமில்லை. இதில் புது துணி எதற்காம்? யாரிடம் கேட்க? மாதுரி மிகவும் சாமர்த்தியசாலி. இதோ நடுக்கூடத்தில் விரித்துப் போடப் பட்டிருந்த துணிகளைப் பார்க்க அமர்த்திவிட்டாள். விலையைப் பார்த்தவளுக்கு கண்ணைக் கட்ட.. “என் கிட்டக் காசில்ல. தேவையும் இல்ல. தேவையில்லாத ஒண்ண காசில்லாம கடன் பட்டு வாங்க என்ன அவசியம்? எனக்கு வேண்டாம்” என்று சொல்லிப்பார்த்தாள்.

 

“இது உன் அப்பா வீடு. அவர் சம்பாதிச்சது உனக்கும் தான். கணக்கு பாக்காத” என்றாள் வள்ளலாய். பட்டுப் புடவைகள், வேலைப் பாடு நிறைந்த சிகப்பு நிற பாவாடை தாவணி? எதற்காம்? “நான் தாவாணி எல்லாம் போட மாட்டேன்..” என்றாள். “அது தாவணி இல்ல… எங்க பாரம்பரிய ட்ரெஸ்.. ஃபங்ஷனுக்கு போட்டுக்க தேவைப் படும்!” என்பது பதிலாய் வந்தது.

 

இவளுக்கு மட்டுமல்ல.. இவள் உடன் பிறப்பிற்கும் இதே போல் வேறு நிறத்தில் வாங்கி குவிக்க அத்தனை பேர் நடுவிலும் என்ன சொல்ல முடியும்? வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்தாள். ரிஷியும் வந்திருந்தான்.. இவளைப் போலவே ‘யாருக்கு வந்த விருந்தோ’ என்ற முக பாவம். ஆனாலும் அவ்வப்போது இவளை அளவெடுத்துக்கொண்டே தான் அமர்ந்திருந்தான்.

 

வீட்டில் வந்து இறங்கிய துணிக் கடையும் நகைக் கடையும் பாதி காலியன பின்னரே ‘போதும்’ என்ற நிறைவு வந்தது கூட்டத்திற்கு. அடுத்து உடல் அளவெடுக்க என்று மீண்டும் அடுத்த படலம் ஆரம்பித்தது. ஒரு வழியாய் வீடு அடங்கிய வேளை இரவு உணவும் தயாரானது.

 

தங்கை மதுமிதா.. இன்னும் முறைத்துக் கொண்டு தான் சுற்றினாள். தம்பிகள் ஆதி, அமர் இருவரும் ஒட்டிக் கொண்டனர். அதிலும் சிறுவன் பள்ளி பருவம் தான்.. கள்ளம் கபடம் இல்லை. அமர் அப்படியே அப்பாவின் குணமும் உருவமும் கொண்டிருந்தவன், வீட்டில் துளசியோடு பழகத் தடை இல்லை என்றதும் ஒட்டிக்கொண்டான்.

 

பந்து விளையாடுவதிலிருந்து இரவு தெருவில் சைக்கிள் ஓட்டுவது என்று எதிலும் அவனுக்கு இணையாய் விளையாடிய அக்காவை பிடித்துப்போனது. அக்காவோடு தடையில்லாமல் சுற்றித் திரிந்தான்.

 

“தமிழ் புக் ஏதாவது இங்க கிடைக்குமா அமர்.. நைட் கொஞ்ச நேரம் படிப்பேன்..” அவனிடம் கேட்க.. பழைய சாமான் அறைக்குக் கூட்டிச் சென்றான்.

 

“அப்பாவோட புக்ஸ் எல்லாம் இங்க தான் இருக்கு… ரொம்ப டஸ்ட் இருக்கும் பார்த்து க்கா..” என்றுவிட்டு சென்றான்.

 

தேடி எடுத்தாள் பல பொன்னான புத்தங்களை. தூசு படிந்து கிடந்தது புத்தம் மட்டும் அல்ல.. பல அதிர்ச்சிகளும்.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!