Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ29_2-1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

 கொல்லை துளசி எல்லை கடந்தால் 29_2

 

கேலியும் கும்மாளமும் போதவில்லை என்று பாயலின் பக்கத்து வீட்டு வாண்டுகள் மூன்று வந்திருக்க, பிள்ளைகளோடு பிள்ளைகளாக மாறி ஆட்ரேயும் எபியும் விளையாட, குட்டிகளில் சத்தம் காதை அடைத்தது.

 



Advertisement

பிள்ளைகள் படுக்கையறைக்குள் ஒளிந்து விளையாட ஆரம்பிக்கவும், எபி விளையாட்டை முடித்துக்கொண்டான். அறைக்குள் அமர்ந்திருந்த பிரவீனுக்கு இம்சையான மனநிலை. உள்ளே எழுந்த கூச்சலில் அமர முடியாமல், வெளியே வந்துவிட்டான்.

 

விளையாட்டு வாக்கில் ஒரு குட்டிப்பெண், கதவை உள்பக்கம் பூட்டிக் கொள்ள, பயத்தில் உள்ளிருந்து குழந்தை அழ ஆரம்பித்தாள். அங்கு, (பெரும்பான்மை) கதவுகளில் தாழ்ப்பாள் இருக்காது என்பது ஒரு ஆறுதல்.

Advertisement

 

Advertisement

சத்தம் கேட்டு வந்த மனோ, கதவின் நிலைக்கால் மேலிருந்து குட்டி ஆணி போன்ற எதையோ எடுத்து, குமிழுக்குள் இருக்கும் துவாரத்தில் விட்டுத் திருக, பூட்டு திறக்கவும் கதவு திறந்து கொண்டது.

 

“இது ஒரு வசதி இந்த ஊர்ல. தனித் தனி பூட்டும் இல்ல.. அதுக்கு தனியா சாவியும் இல்ல.. எல்லா கதவுக்கும் ஓரே சாவி!” என்று கூறிக்கொண்டே சிறுமியைத் தூக்கியவள், அழுகை நின்றதும், “பாயல் மூணையும்  கொண்டு விட்டுட்டு வா.. நாம சாப்பிட உக்காருவோம்” என்று பிள்ளைகளை அனுப்பி வைத்தாள்.

Advertisement

 

உணவு வகைகள் மேசையை நிரப்ப, அனைவரும் தங்களுக்கு வேண்டியதைத் தட்டில் எடுத்துக் கொண்டு மேசையைச் சுற்றி அமர்ந்தனர்.

 

பிரவீன் மட்டும் எதையும் போட்டுக் கொள்ளாமலிருக்க, “சாப்பிடுங்க டாக்..” என்றவள், எப்பொழுதும் போல் மனோ அருகில் அமர்ந்துகொள்ள, பிரவீனுக்கு பிடிக்கவில்லை. ஆனால் உணர்வுகளைக் காட்ட நினைத்தால் மட்டுமே காட்டக்கூடிய நல்லவன் முகத்தில் என்றும் போல் எந்த உணர்வுமே இல்லை.

 

“எனக்கு நானே போட்டுகிற பழக்கமில்ல. நீ போடு அலர்விழி” என்றவன், மற்றவர் கண்களுக்கு வித்தியாசமாகத்தான் தெரிந்தான்.

 

அமர்ந்தவள் எழப்போக, “நீ உக்கார் நான் வைக்கிறேன்” கூறிக்கொண்டே எபி பிரவீனுக்குக்கு பரிமாற ஆரம்பித்தான். ‘இது வைக்கவா… போதுமா… இன்னும் வைக்கவா’ என்று ஒவ்வொரு வகையா பரிமாறும் போதும் அருகில் இருதவளை வஞ்சனையே இல்லாமல் உரச, பிரவீனுக்கு ஏன் தான் கேட்டோமோ என்றாகிப் போனது. அலர்விழியை பார்த்தான். ஒருவன் தன்னை உரசி நிற்பதைக் கூட உணராமல் தட்டில் மூழ்கியிருந்தாள்.

 

மனோவின் இடது பக்கம் முன்னாள் அறை-தோழி இலக்கியா அமர்ந்திருக்க, “அத எடு இலக்கி… குழம்ப ஊத்தேன்… இது நல்லா வந்திருக்கு, இத சாப்பிட்டு பாத்தியா” என்று அவளை உரிமையோடு வேலை வாங்கிக் கொண்டும்(?), அவன் விருப்பத்தைத் திணித்துக் கொண்டும்(?) இருப்பதாக தோன்றிய பிரவீன் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

 

வழக்கம் போல் மார்க், மௌனமாக அலர்விழியின் சமையலை ரசித்து உள்ளே தள்ளிக் கொண்டிருக்க, இவனோ, “ஆட்ரே நீ போன தரம் கேட்டியே எங்க ஊரு மீட் பால்ஸ், உனக்காகவே பண்ணினா, ட்ரை பண்ணு” என்று ஒரு இருக்கை தள்ளியிருந்த ஆட்ரேக்கு அலர்விழியை இடித்துக்கொண்டு இவனே மட்டன் கோப்தாவை வைக்க, பார்த்த பிரவீனிற்கு பற்றிக் கொண்டு வந்தது.

 

‘ஒருத்தன் வேணும்னே மேல தேச்சுட்டே நிக்கிறான், சொரணையே இல்லாம எப்பிடி பல்ல காமிச்சுட்டு அசையாம உக்காந்து இருக்கா?’ பிரவீன் வாய்க்குள் இறங்கிய உணவு பற்களுக்கிட்டையே அரைந்து… கூழாகி… மையாகிக் கொண்டிருந்தது. மூளை கொதிக்க, முகமோ தியானிக்கும் புத்தனைக் காட்டிலும் அமைதியாக இருந்தது.

 

ஓரே வயதை ஒத்த நண்பர்கள் கூட்டம், நீ…நான் என்ற எந்த பாகுபாடுமில்லாது  ஒவ்வொருவருக்குள்ளும் ஒட்டுதல் அதிகம் என்பதால் கலகலப்பான குடும்பச் சூழல் அங்கு. அமர்ந்திருந்த அனைவரும் ஒவ்வொரு நொடியையும், எதிரில் இருந்த உணவையும் முழுமையாக அனுபவிக்க, மருத்துவனால் மட்டும் அவர்களோடு ஒட்ட முடியவில்லை. காரணம்? காரணம் என்று எதுவும் இல்லை. அவன் அப்படி தான்! தாமரை இலை போல வாழ்ந்து பழகியவன்! அலர்விழி இல்லை என்றால் இப்படிப்பட்ட மக்களோடு அவனாவது… பழகுவதாவது!

 

எப்பொழுதும் இதுபோன்ற சிறிய விடயங்கள் எல்லாம் அவனைத் தாக்காது. கண்டுகொள்ளாமல் கடந்துவிடுவான். ஆனால் இம்முறை அவனால் அவனாக இருக்க முடியவில்லை. காரணம்… அலர்விழி! ஏனோ அவனைக் கவனிக்க வேண்டிய அவன் அத்தை மகள் கூட அவள் தட்டில் தான் கவனமாக இருந்தாள். அவனுக்குப் பார்த்துப் பார்த்து பரிமாறவேண்டாமா? அவள் கவனம் அவன் மேல் சுத்தமாக இல்லை. வாய் திறந்து ஏதேனும் கேட்டால், அவளை இடித்துக் கொண்டு எபெனேசர்!

 

“இது செம டேஸ்ட் மார்க். எனக்கு ரெசிப்பி வேணும்.” என்று ஸ்பெகட்டி மேல் ஊற்றியிருந்த மரினாரா சாஸ்சை நக்கி கொண்டே அலர்விழி கேட்க,

 

‘இவள் கொஞ்சமேனும் பெண்ணை போல் அமைதியாக இருக்கூடாதா? அது என்ன மற்ற ஆண்களோடு அமர்ந்து உண்ணுவது? பண்பாடுகளை மறந்து இவள் வழிதவற காரணம் என்ன? இவளை எப்படித் திருத்தி குடும்ப பெண்ணாக மாற்றுவது?’ பிரவீன் மனம் யோசனையில் இறங்கியது.

 

மார்க்கை முந்திக்கொண்டு, “நான் சொல்லி தரட்டா..?” கேட்டவன் பார்த்த பார்வையில் ‘அடுக்களை பாடங்கள்’ எல்லாம் இவளுக்கும் நினைவில் வர ‘போடா வெக்கம் கெட்டவனே’ என்று அவனுக்கு மட்டுமே புரியும்படி வாய் அசைத்தாள்.

 

கள்ள புன்னகை புரிந்தவளின் தோள் இடித்து, “இப்போ சாப்பிடு. அப்புறம் தனியா இருக்கும் போது சைட் அடி” எபி சிரிக்க…

 

“ஐயோடா… இந்த மூஞ்சியை தனியா வேற பாத்து சைட் அடிக்கணுமாமே…” அவன் சிரிப்பில் அவள் கலந்துகொள்ள,

 

‘அவன் உண்டு அவன் வேலை உண்டு’ என்ற தோற்றத்தோடு அமர்ந்திருந்தவனால் ஒரு கட்டத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை!

 

“அலர்விழி!” என்றான் மருத்துவன், சற்று சத்தமாய். அனைவர் பேச்சும் நின்றுபோக அனைவர் பார்வையும் அவன் பக்கம் தான்.

 

“என்ன ஆச்சு? ஏதாவது வேணுமா?” அவள் கேட்டு முடிக்கும் முன், “அவர் சாப்பிடுறதே வெறும் மூணு, நாலு ஐட்டம் தான்! அது தான் அவர் முன்னாடி இருக்கே எடுத்துப்பார். நீ எனக்கு அந்த சிக்கன் டிக்கா எடு!” என்று எபி ஆரம்பிக்க மீண்டும் பேச்சு ஆரம்பமானது.

 

‘வாய மூடிட்டு சாப்பிட மாட்டியாடா?’ என்று தோன்றியதைக் கேட்கவும் முடியாமல், பாறாங்கல்லாய் கனத்த உணவை விழுங்கவும் முடியாமல், இரண்டையும் சேர்த்தே மென்றான் மருத்துவன்.

 

“விழி.. அந்த பாஸ்தா சாஸ்சையே நக்கிட்டு இருக்காம, எனக்கு அதை எடு!”

 

‘விழி?’ இவனாக இருக்குமோ? அர்ச்சனா நிச்சயம் போது கேட்டானே ‘விழி!’ என்ற அழைப்பை?! பிரவீன் சந்தேகித்து முடிக்கும் முன், “எது மனோ?” என்று அவன் சந்தேகத்தை அலர்விழி தீர்த்து வைத்தாள். ‘இன்னுமா இவர்களுக்குள் நட்பு தொடர்கிறது? எப்படி?’ என்ற கேள்விகள் எழ, மருத்துவனுக்கு ரத்த நாளங்கள் வெடித்து தெறித்துவிடும் போல் தோன்றியது.

 

“எதையாது சாப்பிடேன் விழி! சும்மா சாஸ்ச நக்கிட்டு?” எபி தட்டிற்கு வந்த சிக்கன் டிக்காவில் ஒன்றை அலர்விழி தட்டிற்கு மாற்ற, அதைச் சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாதவனாய் மருத்துவன், “எபெனேசர், அவளுக்கு வேணும்ன்னா அவ எடுத்து வச்சுப்பா.. நீங்க எதுக்கு உங்க எச்சில அவ தட்டில வைக்கறீங்க?” என்று கடுகடுக்க, ‘ஐயோ இந்த ஆள் இவர் வாய பிடுங்காம இருக்க மாட்டாரா?’ அலர்விழிக்கு உடல் நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது.

 

அவர்கள் இருவருக்குமிடையே யாரேனும் புகுந்தால் எபி கொஞ்சம் கூட பொறுத்துப் போகமாட்டான் என்பதால் அலர்விழி உடலில் நடுக்கம். மேசைக்கடியிலிருந்த எபியின் கையை, ‘எதுவும் கூறிவிடாதே’ என்ற வேண்டுதலோடு இறுகப் பிடித்துக் கொண்டாள்.

 

‘இவன் ஒருத்தன்’ என்ற பார்வையோடு தட்டிலிருந்த மற்றொரு துண்டையும் அவள் தட்டிற்கு இடம்பெயர்த்து, “கைய விட்டுட்டு சாப்பிடு விழி” என்றவன், “என்ன டாக்டர்.. உங்களுக்கு கொடுக்கலன்னு வருத்தமா? நீங்க தான் சுத்த சைவமாச்சே.. அது தான் கொடுக்கல.” என்றவன் அருகிலிருந்த பச்சை சட்டினியில் முக்கி எடுத்த கோழியின் தொடையை வாய்க்குள் திணித்துக் கொண்டு இலக்கியாவிடம் விட்ட கதையை தொடர்ந்தான்.

 

பதில் கொடுக்க பிரவீன் வாய் திறக்க, “எங்களுக்குள்ள இதெல்லாம் சகஜம். இத பெருசு படுத்தாம நீங்க சாப்பிடுங்க அத்தான்.” என்று முற்றுப்புள்ளி வைத்தாள்.

 

இப்படியாக ஆரம்பித்த ‘டாம் அண்ட் ஜெரி’ யுத்தம் இருவருக்குள்ளும் தொடர்ந்துக் கொண்டே போக, அலர்விழிக்கு தான் போதும் போதும் என்றாகிவிட்டது.

 

மதிய உணவு முடிந்து ஒரு மணி நேரம் சென்றிருக்கும், பாயலும் ஆட்ரேயும் “படுத்துட்டு டீ டைம்க்கு வரோம்” என்று கிளம்பிவிட, தூங்கவென அலர்விழி அறைக்குள் இலக்கியா புகுந்துகொண்டாள்.

 

வெளியே கிளம்பவிருந்த மார்க்கை நிறுத்தி, “நைட் பீட்ஸா-க்கு சீஸ் பத்தாது. டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க… நானும் வரேன் மார்க்”, என்று அலர்விழி உடைமாற்ற அறைக்குள் செல்ல,

 

மார்க் எழுந்ததும் சோஃப்பாவில் கால் நீட்டி எபி படுத்துக்கொள்ளவும், பிரவீனும், தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த படுக்கையறைக்குள் புகுந்து கொண்டான்.

 

உள்ளே அலர்விழி செல்ல, வெளியே இலக்கியா வந்தாள் மார்க்கோடு செல்ல. தனித்திருந்த எபி அலர்விழி இருந்த அறைக்குள் புகுந்தான்.

 

“என்ன டி.. நீ போகல?”

 

“அவளுக்கு ஏதோ வாங்கணுமாம். நான் போகவான்னு கேட்டா! புண்ணியமா போகும்ன்னு அனுப்பி வச்சுட்டேன்”

 

“என்ன ஆச்சு? படுத்துட்ட? மதியம் தூங்க மாட்டியே”

 

“நேத்து பூரா வேலை! இன்னைக்கும், காலையில இருந்து நின்னு நின்னு காலு ரெண்டும் வலி பின்னுது மனோ. கூடவே இந்த முதுகு வேற!”

 

“குப்புற படு, முதுகை பிடிச்சு விட்டுட்டு கால பிடிச்சு விடுறேன்”

 

“வேண்டாம் மனோ..” என்றாள் கதவைப் பார்த்துக் கொண்டே,

 

“அவன் தூங்க போயிட்டான். அவங்க கிளம்பிட்டாங்க. அப்பிடியே அவங்க வந்தாலும் நான் வெளியில இல்லன்னதும் உள்ள வரமாட்டாங்க டி. அவ்வளவு கூட மேனர்ஸ் இல்லாதவங்க இல்ல” கூறிக் கொண்டே கதவை அடைத்து வந்தான்.

 

“அவன் ஒருத்தனுக்கு மட்டுமே நாலு சவுத்-இண்டியன் வெரைட்டி பூட்! எல்லாரும் ஒத்து போர இடத்தில எதுலயையுமே சேராம… தனியா நிக்கிறான். ரெண்டு வயசு பிள்ளையைக் கவனிக்கிற மாதிரி அவனைத் தனியா கவனிக்க வேண்டி இருக்கு. அவனால உனக்கு ரெஸ்டே இல்ல! எங்க இருந்து டி இவனை பிடிச்ச?”

 

“மனோ… ப்ளீஸ். மத்தவங்கட்ட நல்லதை மட்டுமே பாக்கிற நீங்க, ஏன்தான் இவர்ட்ட மட்டும் என்ன சரியில்லன்னு கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்தி பாக்கறீங்களோ?”

 

முதுகை அமுக்கி விட.. ‘அம்மா… ஆ’ என்று வலியில் முனகிப் படுத்துக்கிடந்தவள், கால் பாதங்களை பிடித்து, விரல்களை இழுத்து விடவும், “அவர் வம்புக்கு ஏன் போறீங்க நீங்க?” என்று வாய் திறந்தாள்.

 

“நானா? அவன் தான் என் வாய கிளர்றான்!”

 

“போயிட்டு போகுதுன்னு விடறீங்களா? மல்லுக்கு நிக்கறீங்க! அவருக்கு இது எல்லாம் பழக்கமில்ல பா! அவர் சொல்ல சொல்ல வேணும்னே பாதி சாப்பிட்ட சிக்கன் துண்ட என் தட்டுல வைக்கிறீங்க… பெரிய தை பீஸா கடிச்சு அவர வெறுப்பேத்துறீங்க!”

 

“என் எச்சில உன் தட்டுல வைக்காதன்னு இவன் எனக்கு ஆடர் போடுவானாமா?”

 

“ஹ ஹ ஹா…”

 

“என்ன டி சிரிப்பு?”

 

“எச்சில் பட்டு ஏதாவது நோய் வந்துடும்ன்னு பாவம் டாக்டர் பயந்துட்டார்! அது ஒரு குத்தமா..?”

 

“என் எச்சில் பட்டா உனக்கு நோய் வருமோ..? எங்க பாப்போம்” அவன் பெண்ணை நெருங்க..

 

முகத்தில் அரும்பிய புன்னகையோடு, “அய்ய… ரொம்ப ஆசை தான்…” அவனைத் தள்ள, ‘நீ தள்ளி நான் போவேனா’ என்று அவன் நெருங்க, “வீடு பூரா ஆட்கள் இருக்கும் போது தான் இவருக்குக் கொஞ்ச மூட் வரும்! போங்க அந்த பக்கம்” இருவருக்குமான இடைவெளியை அதிகப்படுத்தினாள்.

 

மெத்தையில் வைத்திருந்த மாற்று உடையும், தலையணைகளும் இருவர் முகம் நோக்கி மாற்றி மாற்றிப் பறக்க, இருவருக்குமிடையே விளையாட்டு ஆரம்பமானது.

 

அவன் விடுவதாகத் தெரியவில்லை என்றதும் சிணுங்கிக் கொண்டே உருண்டு புரண்டு, எழுந்து கட்டிலைச் சுற்றி ஓட… இவனும், “உன்ன இன்னைக்கு என்ன பண்றேன் பாரு… நோய் வருமாமே…” சிரித்துக் கொண்டே துரத்த… அங்குப் பொங்கி வழியும் சிரிப்பு சத்தம் மட்டுமே.

 

கையை பிடித்தவனை தள்ளிவிட்டு மீண்டும் அவள் ஓட்டம் பிடிக்க, “ஓ மேடம் அவ்வளவு ஸ்ட்ராங்கோ. இருடி இன்னைக்கு நீயா நானா பார்க்கிறேன்…” அவள் மேல் பாய… அப்படி எல்லாம் அவளை நெருங்க முடியவில்லை.

 

“சண்டைக்காரி வாடி வாடி, உன்ன அடக்கி ஆளுறேன்

குட்டி போட்ட பூனை போல, வட்டம் அடிக்க ஏங்குறேன்” அவன் பாட,

 

“ஹ ஹ ஹா… முடிஞ்சா பிடி. அப்புறம் அடக்கி ஆளலாம்..” அவள் சிரிக்க,

 

“எட்டு வெச்சு நீயும்…  போனா சொக்குதடி

எட்டுபட்டி ராசா, பேச்சும் திக்குதடி

ஒட்டியிருக்க ஒத்துக்கடி”

 

அவன் கையில் பெண் சிக்கியதும், சிணுங்கிக் கொண்டே, “ஒட்டியிருக்க நேரங்காலம் இல்ல? விடு டா.. டேய்… விடு டா..” என்று செல்ல அடிகளோடு சத்தம் போட…

 

“விடத் தான் பிடிச்சேனாக்கும்… போடி” என்றதோடு நின்றுபோனது இருவர் சத்தமும்.

 

‘மனோ’ என்று முனக நினைத்தாலும், தன்னை மறந்து சுவரோடு சுவராய் அவள்! சுவரோடு ஒட்டியிருந்த சித்திரத்திற்கு நிறமாய் மாறிக்கொண்டு அவன்! நேற்று தாகத்தை இன்று தணிக்க, அவசர அவசரமாக தாகம் தணிக்கும் முயர்சியில், எந்த நோய் பற்றியும் கவலை இல்லாமல் இரு ஜீவன்கள்!

 

நடுக்கூடத்தில் விட்டுச்சென்ற கைப்பேசியை எடுக்க வந்தவன் காதில் ‘காதல் கீதம்’, அபலை பெண்ணின் ஓலமாய் கேட்டிருக்க வேண்டும், எதையும் சிந்தியாமல், கட்டளை கால் மேல் வைத்திருந்த ஆணிக் கொண்டு கதவைத் திறந்தான் மருத்துவன்.

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!