Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ30 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  30

 

மழை சரல், திறந்திருந்த இரயில் பெட்டி கதவின் வழி துளசி முகத்தை வருடியதாலோ.. இல்லை அருகில் நிற்பவன் மீது ஏற்பட்ட இனம் புரியா மயக்கத்தோலோ.. சாரல் இதயம் தாண்டி உயிர் வரை தீண்டியது.

 



Advertisement

இரயில் ஏறியதிலிருந்து மூர்த்தியும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான், அவள் முகத்தில் குடிகொண்டிருக்கும் பிரகாசத்தையும் அவ்வப்போது எழுந்து அடங்கிய புன்முறுவலையும்.

 

துளசிக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு அமைதி அவளிடம். ஏனோ எதுவும் பேசத்தோன்றவில்லை.. அதனால் உதடு எந்த மொழியும் பேசவில்லை. மௌனமானாள். உதட்டுக்கும் சேர்த்து அந்த பார்வை ஆயிரம் கதை பேசியது அவனிடம்.

Advertisement

 

Advertisement

மனதை நிறைத்தவன் அருகிலேயே இருக்க வார்த்தைக்கு அவசியம் இல்லாது போனது.

 

இதோ.. இப்படி தனிமை கிடக்கும் போதெல்லாம் மூர்த்தியிம் விரலோடு விரலைக் கோர்த்துக்கொள்ள மனம் துடித்தது. அவள் நிலை அவனுக்கு புரிந்ததா? தெரியவில்லை..! ஆனால் அவள் மனமும், அதில் அவனுக்கான விருப்பமும்  தெரிய அவனே அவள் விரலோடு விரல் கோர்த்துக்கொண்டான்.

Advertisement

 

அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை. அவளைப் பிடித்த விரலை இறுக்கிக் கொண்டாள். எதிரில் நிற்கப் போனவனையும் அருகில் நிறுத்திக் கொண்டதும் அவள் தான்.

 

காற்றோடு வந்த சாரல் அவளையும் தாண்டி அவன் முகம் தீண்ட.. “சாரல் ரொம்ப அடிக்குது துளசி.. உள்ள போகலாமா?”

 

விரலை இறுக்கிப் பிடித்தவள், ‘இன்னும் கொஞ்சம் நேரம்’ என்று பார்வையாலேயே ‘பீளீஸ்’ வைத்து.. மீண்டும் வெளியே வெறிக்க.. அவன் அவளை.. அவள் முகபாவத்தை ரசித்து நின்றான்.  அடிக்கும் காற்றுக்கு புடவையைப் பிடிப்பதா? பறக்கும் கூந்தலைச் சரி செய்வதா.. என்று விழித்தாலும், மூர்த்தியோடு பிணைத்திருந்த கையை மட்டும் விடுவித்துகொள்ள மனமில்லாமல் திணறிக்கொண்டிருப்பவளைப் பார்க்கப் பார்க்கப்  பரவசம் தான் அவனுக்கு.  அவனை வருடிய அவள் கூந்தலையும்.. புடவையையும் ஒதுக்கிவிட ஏனோ அவனுக்கும் மனமில்லை. சாரலோடு சாரலாய் அதுவும் அவனை ஈர்க்கத்தான் செய்தது.

 

துளசியோடு வரவிருப்பதை ரயில் ஏறும் முன் வீட்டிற்கு அறிவித்திருந்தான். ‘என்ன நடக்க போகுதோ?’ இது மட்டும் தான் அவன் எண்ணம். 

 

காலை பொழுது விடியுமுன் ரயில் அவர்களுக்கான நடை மேடையில் நிற்க.. இருவர் மனதிலும் ஒரு சுமை ஏறிக்கொண்டது.

 

துளசி, மூர்த்தியை மிரண்ட பார்வை பார்க்க.. “எல்லாம் நல்ல படியா நடக்கும் துளசி. நீ நீயா இரு. இது உன் வீடு. என் வீட்டு ஆட்கள் எல்லாம் உன் சொந்தம். தயங்காம இரு. நம்ம வீட்டில எல்லோருமே ரொம்ப பாசமானவங்க துளசி மா. உன்ன ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. அக்கா எல்லாத்தையும் பாத்துப்பாங்க. என்னை யாராவது பேசினா.. அத எல்லாம் நீ கண்டுகாத..” தெம்பை ஊட்டினான்.

 

வீட்டு நபர்களின் பெயர்களை உள்ளுக்குள் அசை போட்டுக்கொண்டாள். ‘முத்துமங்கை – செல்வமணி அம்மா அப்பா, மூத்தது, சுவாமி அண்ணன் – சுவர்ணம், இரண்டாவது பானு அக்கா, மூனாவது சின்ன அண்ணன் தங்கதுரை – முல்லை, நாலாவது இவர், கடைக்குட்டி செல்வன். சுவாமி.. அவங்களுக்கு எத்தன பசங்க…?’ வரிசையை ஒரு முறை சொல்லி முடிக்கவில்லை.. யாரோ ஒருவர், இவர்களைக் கண்டதும் முகம் மலர்ந்தார்.

 

“மூர்த்தி..” அழைத்தது, என்றும் போல் மூத்த அண்ணன், சுவாமி நாதன். வெள்ளை அம்பாசிடரோடு காத்துக் கொண்டிருந்தார். எப்பொழுதும் போல் அதே கேள்வி, “ப்ராயணம் எல்லாம் சுகமா?” என்று. ஆனால் கேட்டதோ துளசியிடம்.

 

“வலியண்ணா.. இவ தான் துளசி. துளசி, எங்க பெரிய அண்ணன்” அவன் அறிமுகம் அவருக்குத் தேவை இருக்கவில்லை..

 

“ராஜன் உடம்பு எப்படி இருக்கு?” என்று ஆரம்பித்து எழில் சித்தி வரை நலம் விசாரித்தார்.

 

ஆக, துளசியின் பூர்வீகம்.. அவள் யார் என்ன என்பது வரை வீட்டிலிருப்பவர்களுக்குத் தெரிந்துவிட்டது!  எப்படி என்று மூர்த்திக்குப் பிடிபடவில்லை. ‘துளசி’யோடு வருவதாகத் தானே கூறினான்!

 

[the_ad id=”6605″]

 

 

 

இவர்கள் கோமலில் ஜாதகத்தையே.. எப்படி கையில் எடுத்தனர்? இது மட்டும் தான் தெரியுமா? இல்லை இடையே அவள் வாழ்வைப் புரட்டிப் போட்ட விபத்தும் தெரியுமா? அது தெரிந்ததால் தான் ‘அவ உனக்கு வேண்டாம் மூர்த்தி’ என்று அக்கா கூறினாரோ? அதைக் கூறத்தான் மெட்ராஸ் வந்தாரோ?

 

சகஜ நிலை மூர்த்தியிடம் பறி போனது. மனபாரம் அதிகமே ஆனது. ஆயிரம் லட்சம் கேள்விகள் உள்ளுக்குள். விஷயம் தெரிந்து, அவளிடம் ஏதேனும் கேட்டுவிட்டால்? அவள் தாங்கமாட்டாள். மீண்டும் குழி நோண்டி உள்ளே புதைந்து போவாளே? இதைக் காரணம் காட்டி அவளை வெறுத்து ஒதுக்கி.. வேண்டாம் என்றுவிட்டால்? மூர்த்திக்கு சகலமும் ஆட்டம் கண்டது.

 

“மூர்த்தி…” 

 

அவன் பெயர் கேட்டு சுயம் பெற, அவன் கண்ட காட்சியோ வேறு கதை கூறியது. தேநீர் கோப்பையோடு நின்றிருந்த அண்ணன் துளசியோடு பேச.. துளசி அத்தனை அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள்.

 

“இல்ல பெரியத்தான்..”

 

“ஆமா பெரியத்தான்..”

 

வார்த்தைக்கு வார்த்தை அத்தான் வந்து விழுந்தது. எப்படி அவரை கூப்பிட என்று அவள் விழிக்க.. அவரே அவளுக்கு உறவையும் விளக்கி, வார்த்தையும் சொல்லிக் கொடுத்தார்.

 

“மூர்த்தி… இந்தா..” இவனிடம் ஒரு கண்ணாடி கோப்பை நீட்டப்பட, தேநீரை வாங்கிக் கொண்டான்.

 

கையிலிருந்த தேநீரை ஆற்றி… “இதுக்கும் மேல ஆத்தினா நல்லா இருக்காது… ஊதி குடி” என்று சுவாமி கையிருந்ததை துளசியிடம் கொடுத்தவர், அவருக்கானதை வாங்கி அருந்த ஆரம்பித்தார்.

 

“தாங்க்ஸ் பெரியத்தான்..” அடுத்த பெரியத்தான்.. மூர்த்தியின் முகமும் புன்னகையைப் பூசிக் கொண்டது. அண்ணனுக்கு ராஜனைப் பற்றித் தெரிந்திருக்க… அவரை கொண்டு தான் பேச்சு அவர்களுக்குள் ஆரம்பமாகி அழகாய் சென்று கொண்டிருந்தது. தாத்தாவின் பேச்சு ஆரம்பிக்கவும் பெண் முகம் மலர்ந்து போனது. அண்ணன் இவ்வளவு பேசுவாரா? வாய் திறந்து சிரிப்பாரா? மூர்த்திக்கு ஆச்சரியமே.

 

சுவாமிக்கு அவளை மிகவும் பிடித்துப் போக, வழிநெடுக அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே வர.. மூர்த்தி வாய் மூடி.. கண் மூடி அந்த நிமிடத்தை ரசிக்க ஆரம்பித்தான். மூர்த்தியின் உள்ளே அடித்து கொண்டிருந்த அலை அடங்கியது.

 

அம்பாசிடர் அவர்கள் வீட்டையும் தாண்டி செல்ல.. “வலியண்ணா.. வீடு தாண்டிடுச்சு?!”

 

“ஆமா மூர்த்தி, முறைப்படி தான் கூட்டிட்டு வரணுமாம்.. அம்மா சொன்னாங்க. இப்போ தோட்டத்து வீட்டில பானு கூட இருக்கட்டும்”

 

‘முறை படி’ என்றால்? தெரியவில்லையே.. துளசி முன் எப்படி கேட்பது? வாய் மூடிக் கொண்டான். அவனுக்கு பேச ஏதாவது உண்டா? இல்லை அனைத்தும் முடிவாகி விட்டதா? மனதில், வரையறுக்க முடியாத உணர்வு எழுந்து அடங்கியது.

 

முத்து மங்கையும், சுவர்ணமும் தான் வாசலில் நின்றிருந்தனர். இரண்டு நாள் பிரயாண களைப்பில் நலுங்கி போயிருந்த துளசியை பாரத்தே கண்ணோடு வாயையும் விரித்தார், முத்து.

 

துளசியின் பள்ளிப்பருவ காலத்தில்.. பத்தாவது தேர்வின் சமயம் எடுத்த கருப்பு வெள்ளை கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அளவு புகைப்படம் தான் இவர்கள் பார்த்தது. மூர்த்தி, துளசியின் புறம் குனிந்து ஏதோ கூற, அவளும் அவனுக்கு வாகாய் தலை சாய்த்து, சிரித்த முகமாய் தலை ஆட்டிக்கொண்டே மூர்த்தி பின்னோடு பதுமையாய் நடந்து வர.. கண்ணைக் கொள்ளை கொண்டது அவர்கள் ஜோடி பொருத்தம்.

 

பச்சை பசேல் பூமியின், சலசலக்கும் நீர் நிலையை ஒட்டி, பூந்தோட்டத்தின் நடுவில் அழகான கூடு போன்ற சின்ன ஓட்டு வீடு. வீட்டின் முன் புறம் முழுவதும் ஏதேதோ வண்ண இலைகளை ஏந்தி நின்ற அரியவகை க்ரோட்டன்ஸ். பல வண்ணத்தில் தண்டு முழுவதையும் நிறைத்த பால்சம் மலர்கள். கண்ணை கவரும் அழகிய ஒற்றை அடுக்கு வெள்ளை, இளம் சிகப்பு நிற ரோஜா கொடி பந்தலாய் வரவேற்றது.

 

வீட்டை சுற்றி அதன் முழு நீளத்திற்கும் இரண்டடி அகலத் திண்ணை. வாழச் சொன்னால் இங்கேயே ஆயுசுக்கும் வாழ்ந்துவிடலாம்..  துளசி கண்ணுக்கு அந்த தோட்ட வீடு சொர்க பூமியாய் தோன்றியது. வீட்டை நெருங்க நெருங்க ஒரு வித மணம் மனதை நிரப்பி மயக்கியது.

 

[the_ad id=”6605″]

 

முத்துவும் துளசியிடம் முகம் கோணவில்லை, சிரித்த முகமாய் மருமகளை நலம் விசாரித்தார். சுவர்ணமும் நல்ல விதமாகவே பேசி உள்ளே அழைத்துவர, மூர்த்திக்குப் புரிந்தது அனைத்தும் பானுவின் வேலை தான் என்று. இப்படி அவன் தேவைகளையும் ஆசைகளையும் தனதாக்கி அதைச் செயல் படுத்துவது பானுவுக்கு ஒன்றும் புதிதல்ல.    

 

வீட்டிற்குள் சென்றவன் சுற்றும் முற்றும் பார்க்க அக்கா கண்ணில் தென்படவே இல்லை.

 

“ம்மா.. அக்கா எங்க?” என்றவனிடம்

 

“மொட்ட கழுத்தோட வாழ வந்த பொண்ணு முன்ன நிக்க வேண்டாம்ன்னு பின்னாடி இருக்கா பாரு..” எனவும்.. கேட்டுக் கொண்டிருந்த இருவருக்குமே எப்படியோ போல் ஆனது.

 

துளசியின் அப்பா, ராஜன் உடல் நிலை பற்றி முத்து நலம் விசாரிக்க, மூர்த்தி பானுவைத் தேடிச் சென்றான்.

 

பின் வாசல் அருகே ‘பக் பக் பக்..’ என்று பானு ஏதோ சத்தம் எழுப்ப… கோழியும் சேவலும் கூட்டமாக ஓடிவர.. தீவனம் தூவிக் கொண்டிருந்தார்.

 

பின்னோடு சென்றவன் அவரை தோளோடு அணைத்து உச்சந்தலையில் கன்னம் பதித்து நின்றான். இருவருமே ஒன்றும் பேசவில்லை. பானுவிற்கு விக்கிக் கொண்டு வந்தது. ராட்னியுடம் துளசி பேசியது ஏதேட்சையாக ஒலிநாடாவில் பதிவாக, அதைக் கேட்டுவிட்டு வந்தவர் நந்தினியிடம் நிலமையை எடுத்து கூறி.. பேசி புரியவைக்க முயன்று தோற்றுப் போனார்.

 

இருதினம் முன் துளசியோடு மூர்த்தி வரவிருக்கும் செய்தி கிடைத்ததும் மகளோடு போராடி.. முடியாமல் போகவே, அவள் செய்த அதே வேலையைத் தான் செய்யப் போவதாக மிரட்டி வழிக்கு கொண்டுவந்தார். இன்னுமே மகள் தெளியவில்லை. துளசியை மூர்த்தியோடு பார்த்தால் நந்தினி என்னாவாளோ.. பெற்ற மனம் பதைபதைத்தது.

 

அவருக்குமே புரியவில்லை நந்தினியின் நினைப்பு. பானுவைத் தாயாய் பார்ப்பவன், தங்கத்தை மகளாய் பார்ப்பவன் நந்தினியோடு வாழ்வை பகிர்வானா? அத்தனை குழப்பத்திற்கும் காரணமான முத்துவோ சிறு பெண்ணின் மனதில் ஏற்படுத்திய சலனம் உணராது, மூர்த்திக்கு நல்லபடி திருமணம் நடந்தால் போதும் என்ற எண்ணத்தோடு சுற்றி வருகிறார்.

 

“இங்க என்ன பண்ற அக்கா? உள்ள வாக்கா..”

 

“இருக்கட்டும் மூர்த்தி… நம்ம வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு.. வந்ததும் என் முகத்துல விழிக்கணுமா?”

 

அக்கா பேசியது அவனுக்குப் பிடிக்கவில்லை.. “அக்கா? என்ன பேசற? வா உள்ள… உன் முகத்த தான் அவ முதல்ல பாக்கணும் வா”, இழுக்காத குறையாய் அக்காவைக் கூப்பிட,

 

“டேய் விடுடா..”

 

“நீ வரியா? இல்ல உன்ன தூக்கிட்டு உள்ள போகவா?”

 

“நான் என்ன.. உன் துளசியா? தூக்கிட்டே சுத்த?” அவர் சிரிக்க, அவன் அதிர்ந்து போனான். இது அவர்கள் இருவருக்குமேயான விஷயம்.. அக்கா வரை எப்படிச் சென்றது? மாமி கூட பார்த்திருக்க வாய்பில்லையே.. மூர்த்தியின் முகத்தில் வெட்க சாயல்.

 

“சொல்லு.. சொல்லு… உனக்கு எப்படி எல்லாம் தெரியுது?” சிரித்துக் கொண்டே இரு தோள்களிலும் கை கொடுத்து வீட்டுப் பக்கம் தள்ளிக் கொண்டே வர.. வாசலில், இருவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றாள் துளசி.

 

அவள் நினைத்ததிற்கு நேர்மாறாய் இருந்தார் பானு. மூர்த்தி ஒற்றைக் கையில் தூக்கி விடுவான் அந்த ஐந்தடி சிறிய தேகம் கொண்டவரை. இந்த காலை வேளையிலும் எண்ணை வைத்து தலை வாரி கொண்டையிட்டிருந்தார். முத்துவைப் போல் இவரும் லுங்கி உடுத்தி.. ரவிக்கை மேல் மாராப்பாக ஒரு பழைய வெள்ளை துண்டு. சிரித்த முகம்.. முகத்தில் தாய்மை இழைந்தோடியது.

 

திரும்பியவர் கண்ணில் பட்டாள் துளசி.

 

“என் பேத்திட்ட இல்லதா அழகா..? இவள விட அவனுக்கு பொருத்தமான பேரழகிய கண்டுட்டானாமா? நந்தினிக்கு என்ன கேடாம்? இவ குணம் எவளுக்காது வருமா?” துளசியைப் பற்றி பானு வாய் திறந்ததும் முதலில் இது தான் முத்துவின் வாயிலிருந்து வந்து விழுந்த வரிகள்.

 

“அண்ணி… ரொம்ப தாங்க்ஸ் அண்ணி..” என்று அவர் கைபிடித்து நிற்பவளை கண்ணெடுக்காமல் பார்த்தார்.

 

‘கண்டு தான் விட்டான்.’ நினைத்துக் கொண்டார். 

 

அன்றைய நாள் அழகாக விடிந்தது. நேரம் ஆக ஆக வீட்டிலிருந்து ஒவ்வொருத்தராக வந்து பார்த்து, பேசி சென்றனர். கூட்டம் அதிகம் என்பதால் ஒவ்வொருத்தர் பெயரும் உறவு முறையும் மனதில் பதிய வைத்துக் கொள்ள கடினமாய் போனது. இவள் சார்பாகப் பேச ஒருவரும் இல்லை என்பதால் இவளிடம் ஒருவரும் திருமணம் பற்றி பேசவில்லை. ஆனால் அவர்கள் உறவு முறை வைத்துப் பேசவுமே புரிந்தது, திருமணம் வெகு விரைவில் என்று.

 

காலை உணவை முல்லை கொண்டுவர, பேசிக்கொண்டே முல்லையோடு பானுவும் துளசியும் உணவருந்தினாலும்.. பானுவிடம் எதுவோ சரி இல்லை என்று தோன்றியது. காரணம் தெரியவில்லை. மூர்த்திக்கே நந்தினி விடயம் தெரியாத போது இவளிடம் யார் அறிவிப்பது?

 

அவரவர் தினசரி வேலையில் மூழ்க.. வீட்டில் தனித்திருந்த துளசி, சுவரில் தொங்கிக்கொண்டிருந்த பழைய புகப்படங்களை எல்லாம் பார்வையிட்டாள். ஆசையோடு கண்கள் மூர்த்தியைத் தேடியது. கல்லூரி பருவ மூர்த்தி.. துருதுரு பார்வை.. அளவான சின்ன மீசை… உடலை இறுக்கிப் பிடித்திருந்த அரை கை காக்கி சட்டை.. பெல் பாட்டம் கால் சட்டை..  நான்கு பேரோடு நின்றிருந்தாலும் தனியே தெரிந்தான். கண்ணைப் பறித்தான்.  வெள்ளை வேட்டி சட்டையில் மட்டும் தான் பார்த்திருக்கிறாள். புது நிறம்.. புது தோற்றம்.. அதிலும் ஆண் அழகன் தான்.

 

ஒற்றை விரல் கொண்டு அவள் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற முற்பட்டாள். மீசையை மெல்ல வருட..

 

“ஃபோட்டோக்கு மட்டும் தானா?” என்றது ஒரு குரல்.

 

தூக்கி வாரிப் போட்டது. பெண் நடுநடுங்கி எகிறிக் குதித்தாள். அவன் தான்! பார்த்துவிட்டானே.. கூச்சம் பிடிங்கி தின்ன.. எங்கு கொண்டு முகத்தை வைப்பது?

 

சிரித்துக்கொண்டே.. “என்ன துளசி.. இவ்வளவு தான் உன் தைரியமா? சின்ன சத்தத்துக்கே துள்ளி குதிக்கிற?”

 

பெண் விழித்தாள். வாய் திறந்தாளில்லை. மிக அருகில் நெருங்கி நின்றவன்.. “என் கிட்ட ஒழுங்கா பேச மாட்டேங்கற. இங்க தான்.. உன் கிட்ட நிக்கறேன். நிஜத்த விட்டுட்டு நிழல பாரத்துட்டு இருக்க..”

 

[the_ad id=”6605″]

 

 

 

அவள் விரலை பிடிக்கவுமே, பல்லி போல் சுவரோடு சுவராய் ஒட்டிக்கொண்டவளைப் பார்க்க சுவாரசியமாக இருந்தது.

 

“என்ன ஆச்சு துளசி? இப்போ தான் முதல் முறையா என்னை பாக்கற மாதிரி அப்படி பாக்கற?”

 

“இல்ல… அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல.” எச்சில் விழுங்கினாள்.

 

“அப்படி இல்லனா.. வேற எப்படியாம்?”

 

பிடித்திருந்த கையை பெருவிரல் வருடவுமே… பெண் நெளிய ஆரம்பித்தாள்.

 

“நீங்க போங்க. யாராவது வந்திட போறாங்க!” கெஞ்சலாய் அவள் மொழிய.. அவனோ சுவாரசியம் சற்றும் குறையாமல்..

 

“ஆமா ஃபோட்டோல என்ன பண்ணிட்டு இருந்த?” குறும்பு பார்வை பார்க்க

 

“அது அது… தூ..தூசி துடைச்சேன்”

 

அண்ணாந்து பார்த்து நின்றவளுக்கும் மூர்த்திக்கும் இடையே இரண்டு அங்குல இடைவெளி. பிடித்திருந்த விரலைக் கொண்டு, அவன் கன்னம் வருடி… “வெயில்ல நடந்து வந்திருக்கேன்.. என் முகத்தில தூசி இருக்கான்னு பார்த்து சொல்லேன் துளசி..”, வாஞ்சையோடு கூறியவன் கண்கள் மின்ன..

 

கன்னகுழியில் மாட்டி நின்ற விரல் வழி ஜீவன் எல்லாம் வடிய… பெண்ணிற்கு மயக்கம் மட்டும் தான் வரவில்லை.. 

 

“மூர்த்தி சார்”, என்றாள், அவனுக்கு மட்டும் கேட்கும், உள்ளம் வருடும் மெல்லிய சத்தம்.

 

அந்த ஒற்றை அழைப்பின் அவனுக்கு என்ன கிடைக்குமோ தெரியாது. எல்லாமே கிடைத்த உணர்வு.

 

“சொல்லு துளசி மா” அவளை மயக்கி.. சுருட்டி எடுத்து அவன் கைக்குள் அடக்கி வைக்கும் அந்த அழைப்பு.

 

என்ன சொல்ல? ஒன்றும் சொல்லுவதற்கு இல்லையே.. பாஷை மறந்து போனதே.. எச்சில் விழுங்கி நின்றாள்.

 

“என்ன துளசி.. பேச மாட்டேன்ற! ஆசையா வந்தா தள்ளியே நிக்கிற! பிடிக்கலியா? கல்யாணத்துக்கு நாள் குறிக்க போறாங்க.. இப்போ நீ திரும்பவும் பழைய பல்லவிய பாட போறியா?”

 

கேட்டவன் குரலில் என்ன இருந்ததோ.. வேகமாய் தலை அசைத்தவள், “பிடிக்கும் மூர்த்தி சார். ரொம்ப பிடிக்குது. இது வேற. தள்ளி நில்லுங்களேன்.. யாராவது வந்திட போறாங்க.. யாராவது வந்தா அசிங்கமா போயிடும்..” படபடத்தாள்.

 

“சரி, நான் தள்ளி போறேன்… ஆனா அதுக்கு முன்னாடி, உனக்கு என்னை எவ்வளவு பிடிக்கும் காட்டு.. போறேன்..” அடமாய் நின்றுகொண்டான்.

 

இது என்ன புது விளையாட்டு? ஆவென்று அவனைப் பார்த்தாள். எப்படிக் காட்டவேண்டுமாம்? அவன் பார்வையும்.. அவன் நமுட்டு சிரிப்பும் ஏதோ உணர்த்த, துளசியின் முகத்தில் வியர்வை அரும்புகள்.

 

“ம்ம்ம்…. நேரம் ஆகுது. யாராவது வரதுக்குள்ள சீக்கிரம்..” அவன் சிரிப்பு நீள, அவள் கால் நடுங்க.. மயக்கம் வந்தால் தேவலாம் போல் தோன்றியது.

 

“எ..எ..ப்பிடி?” திக்கித் திணறியவளைக் காப்பாற்ற ஓடிவந்தாள் தங்கம்.

 

“மாஆஆ..மாஆஆ…” 

 

அவள் முகம் காட்டிய ‘ஹப்பாடா’வில் மூர்த்தி முகம் இன்னுமே புன்னகையை பூசிக்கொண்டது.

 

இடது கையில் தங்கத்தை ஏந்தியிருந்தாலும் வலது கை இன்னும் துளசியின் விரலோடு கோர்த்திருக்க… துளசி நின்ற இடத்தில் சிலை என நின்றிருந்தாள்.

 

தங்கம் அப்படியே தாயின் குட்டி உருவம். எத்தனை முறை மூர்த்தியைப் பார்த்தாலும் அது தான் முதல் முறை போல் ஒடி சென்று அவன் கழுத்தை கட்டிக்கொண்டு கதை அடிப்பதைப் பார்த்த துளசிக்குச் சிரிப்பு வந்தது. ‘எல்லாரையும் எப்படி மயக்கி வச்சிருக்கார்?’ எண்ணாமல் இருக்க முடியவில்லை.

 

“தங்கத்துக்கு மாமாவ பிடிக்குமா?”

 

“நிறைய நிறையப் பிடிக்கும் மாமா” என்றாள், அவன் குழந்தை.

 

“எவ்வளவு பிடிக்கும்?” கேட்ட கேள்வி தங்கத்திடம்… பார்வை துளசியிடம்.

 

கைகள் இரண்டையும் முதுகு வரை விரித்தவள்… “இவ்வளவு பிடிக்கும் மாமா..” என்று கூறி அவன் கழுத்தை இறுக்கி, கன்னத்தில் இதழ் மறையும் அளவு அழுத்தம் தந்து ஒரு முத்தம் பதித்தாள்.

 

துளசியை பிடித்திருந்த கையை விடுத்து, தங்கம் நெற்றியிலிருந்த வியர்வையைத் துடைத்தவன், மகளின் தலையை வருடி, “மாமாவுக்கும் தங்கத்த ரொம்ப பிடிக்கும்” என்று மகளை நெஞ்சோடு அணைத்து பிள்ளையின் உச்சந்தலையில் இதழை ஒற்றி எடுத்தான்.

 

அழகான கவிதை. கண்ணால் பார்த்து உள்ளத்தால் உணர்ந்து பார்ப்பவரால் எழுதப்படும் அழகிய தகப்பன்-மகளுக்கான அன்பு கவிதை. துளசியைக் காதல் வயப்படுத்தி, மூர்த்தி மேல் பித்தம் கொள்ள வைக்கும் கவிதை.

 

“கடவுள் இல்லை என்றேன் தாயைக் காணும் வரை

கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை

காதல் பொய் என்று சொன்னேன் உன்னைக் காணும் வரை

(1993 வெளி வந்த புதிய முகம் படப் பாடல். இந்த கதையின் காலகட்டத்தில் வெளிவரவில்லை)

 

தங்கத்திடம் ஏதோ கூறி இறக்கி விட.. அவள் வெளியே ஓடவும், ஒன்றும் கூறாமல் துளசியைப் பார்த்துப் புன்னகைத்தவன்… “மூர்த்திக்கு துளசிய எவ்வளவு பிடிக்கும்ன்னு கேளேன்..” என்றான்.

 

‘மீண்டுமா?’ பெண் முகத்தில் ஈ ஆடவில்லை.

 

அவன் நெருங்கவும்.. “மூர்த்தி சார்” வார்த்தை காற்றாய் வர.. கண்ணை இறுக்கி மூடிக்கொண்டாள்.

 

புன்னகை மாறாமல் இதழ் குவித்தவன், ஏற்படுத்திய மெல்லிய ஓசை.. அவள் விழியை விரியச் செய்ய.. பார்த்தது அவள் கருப்பனை. வளர்ந்திருந்தான். ஆனால் பார்த்ததும் கண்டுகொண்டாள்.

 

நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு, வாலை ஆட்டிக்கொண்டே வேகமாய் வீட்டினுள் வந்த கருப்பன் தயங்கியது ஒரு நொடியே. காலை உயர்த்தி துளசி நெஞ்சில் பதித்து.. ஓலம் எழுப்பியது. ‘எங்குச் சென்றாய் என்னை விட்டு’ என்ற ஓசை அது.

 

நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். கருப்பன் கேட்காமலே அவள் அன்பை அதன் முகம் முழுவதும் முத்தமாய் பதிக்க.. கண் உப்பு நீரைப் பஞ்சமில்லாமல் வெளி தள்ளியது.

 

மூர்த்தி சென்றிருந்தான். ஆயிரம் முத்தம் மூர்த்தி முகம் முழுவதும் பதிக்க ஆசை. கருப்பன் மட்டும் தான் ஓலம் எழுப்புமா? ‘மூர்த்தி சார்’ அவள் மனம் கூட எழுப்பும்.. அவள் பாசக்கார காதலனை நினைத்து.

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!