Skip to content
Post Views: 987
அத்தியாயம் – 6
இயற்கை
Advertisement
இயற்கை ….. ஆம் அது தான் அனைத்து வாழ்வாதாரங்களுக்கும் அடிப்படை .
நம் மனதில் எத்தனை பெரிய துயர் இருந்தாலும் அவற்றையெல்லாம் எளிதில் நீக்கக் கூடிய சர்வ வல்லமை படைத்தது இயற்கை . மனிதன் தனது உச்சக்கட்ட வளர்ச்சியாகக் கருதக்கூடிய அறிவியலின் மூலம் விளக்க முடியாத கேள்விகளுக்குக் கூறும் பதில்தான் இயற்கை .
உதாரணமாக , பறவைகள் ஏன் தங்களது இன்னிசையால் நம்மை மகிழ்விக்க வேண்டும் ? இவ்வுலகில் பல்வேறு உயிரினங்கள் ஏன் உயிர் வாழ வேண்டும் அவற்றால் நமக்கு எந்தப் பயனும் இல்லாத போது ? இவற்றுக்கெல்லாம் நம்மால் பதில் கூற இயலாது .
Advertisement
அதே சமயம் இயற்கை இல்லாமல் அறிவியலைக் கொண்டு நாம் வாழ முடியுமா ? முடியும் .
Advertisement
ஆனால் , அதிகாலை எழும் போது சரணம் , பல்லவி , மேளம் , தாளம் இவை எதுவும் இன்றி நமது காதில் தேனாகப் பாயும் பறவைகளின் குரல்கள் , அணிற்பிள்ளைகள் தங்களது பெற்றோருடன் ஓடும் காட்சிகள் , ஓர் ஓவியனின் மனதில் , ஒரு கலைஞனின் அறிவில் உண்டாகும் அந்த உருவமில்லா உணர்வுகளை எப்பேர்ப்பட்ட தொழில் நுட்பத்தாலும், அந்த மகிழ்வை மட்டும் கொடுக்கவே முடியாது .
ஆமாம் ? இத்தகு பெருமை கொண்ட அந்தப் பரம்பொருளைப் படைத்தது யார் ?
அழகான சோலைவனம் ……. அதனை மேலும் அழகுபடுத்த அங்கு பூத்துக் குலுங்கும் பல்வேறு மலர்கள் . வழக்கம்போல இம்முறையும் அந்த ஐயம் எழுந்தது . அந்த மலர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனவோ ? கால்கள் அனுமதியின்றி தானாகவே நடக்கத் தொடங்கின .
Advertisement
அருகில் நெருங்க நெருங்க அங்கு ஏழு சிலைகள் பிரம்மாண்டமாக எழுந்து நின்றன . அவற்றிற்கு பின்னால், ஒரு மலை கம்பீரமாக பரந்து விரிந்திருந்தது. அதற்குச் சிறிது முன்னர் ஒரு இளைஞனும் ஒரு பெண்ணும் கைகோர்த்தது நின்று இருந்தனர் .
அவர்களை எங்கோ பார்த்தது போல் ஞாபகம் வருகின்றதே … ஆம் … வந்துவிட்டது . இதற்கு முன்னர் அவர்கள் ஒரு கல் மேடையில் அமர்ந்து இருக்கும் போது பார்த்தது போல் தோன்றியது . ஆனால் , ஒரு வேறுபாடு மட்டுமே . அன்று இருவரும் தனியாக இருந்தனர் . இன்றோ , அவர்களைச் சுற்றிப் பல நபர்கள் அவர்களுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தனர் .
அந்தப் பெண் முகத்தில் வழிந்த வதனம் … அந்த யுவதியையே காதலாகப் பார்த்துக் கொண்டிருந்த அந்த இளைஞன் … அந்தக் காட்சியே ஒரு வர்ணனை மிகுந்த ஓவியமாகத் தென்பட்டது .
ஆனால்… அங்கே தூரத்தில், ஒரு கொடிய விலங்கு அவர்களையே கண்களில் தீராத வன்மத்தோடு பார்த்துக்கொண்டிருக்கின்றது . அதன் பார்வையில் தான் எத்தனை கொடூரம் . சிறிது சிறிதாக அதன் பார்வை தன்னை நோக்கித் திரும்புவது போல் ஒரு மாயை .
ஆனால் , உண்மையிலேயே அது தன்னை நோக்கித் தான் வருகின்றது . அதற்குள் , அங்கிருந்த மக்கள் அனைவரும் தங்களது பேச்சை நிறுத்தி இருந்தனர் . அந்த விலங்கு தன்னை நோக்கி வந்தாலும் , தன்னால் அந்த இடத்தை விட்டு நகர முடியாதபடி யாரோ கட்டி வைத்தார் போல இருந்தது .
வேகமாக அந்த விலங்கு தன்னை நோக்கி வர, அதனை விட வேகமாக அந்த ஜோடிகள் இருவரும் வந்தனர். இன்னும் ஒரு நொடி இருந்தாலும் தன்னை தாக்கி விடும் என்ற நிலையில், அவளுக்கும் அந்த விலங்குக்கும் இடையே அந்த ஆணும் பெண்ணும் வந்து நின்று, அவளைக் காப்பாற்றினர்.
அதற்குப்பிறகு, வெறும் இருட்டு.
அடிக்கடி வந்து பழக்கம் ஆகி விட்டதால் , பொறுமையாகத் துயில் கலைந்து எழுந்தாள் நந்தினி . குளிர்சாதனப் பெட்டியில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடித்ததும் உடல் நடுக்கம் குறைந்தது .
இனிமேல் தூக்கம் வராது எனத் தெரிந்ததும் , தான் கனவில் கண்ட காட்சியை ஒரு பெரிய ட்ராயிங் போர்டில் வரையத் தொடங்கினாள் .
இயல்பிலே பல திறமைகளைக் கொண்டிருந்தாலும் , நந்தினி அதனை அவ்வளவு எளிதில் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டாள் . இப்போது அவள் செய்து கொண்டிருக்கும் வேலைக்குக் காரணம் ஆரியன் தான் . நேற்று ஆரியனுடன் நடந்த உரையாடல், அவள் அனுமதியின்றி மனதில் ஓட ஆரம்பித்தது .
******
நேற்று …
குழம்பிப்போன ஆரியன் , “ இன்னக்கி அவளோட தெளிவா பேசி ஒரு முடிவு எடுத்தே ஆகணும் ” என நினைத்துக் கொண்டு ,
“ நந்து , நீ ஸ்கூல் படிக்கிறப்ப ஒருமுறை ரொம்ப வயலன்டா (violent) நடந்துகிட்ட, அது ஞாபகமிருக்கா ? ” என்று கேட்டான் .
“ ஹ்ம்ம் . இருக்கு ஆரி , அதுக்கப்புறம் தான் யோகா-லாம் பிராக்டிஸ் பண்ணி இப்ப நார்மலா இருக்கேனே . அதை எதுக்குடா இப்ப கேக்குற ? ” என்று கேட்டாள் நந்தினி .
“ நந்து, அப்பலாம் நீ ஒரு கனவு வருதுன்னு அடிக்கடி சொல்லுவல , அதுக்கப்புறம் கொஞ்ச நாள்ல நீ உன்னோட கனவுக்கும் நார்மல் லைஃபுக்கும் வித்தியாசம் தெரியாம உனக்குள்ளேயே குழப்பிக்கிட்டு , அது ஒரு டிப்ரஷனா ஒருநாள் வெடிச்சுச்சு . அதுக்கப்புறம் ஒரு நாள் என்னோட ப்ரொஃபஸர உன்னைய ஹோட்டல்ல மீட் பண்ண ஏற்பாடு செஞ்சோம் “ என்று கூறி இடைவெளி விட்டான் ஆரியன் .
‘ யானை வரும் பின்னே , மணியோசை வரும் முன்னே ’ என்பதுபோல ஆரியன் , ஏதோ பெரிய விஷயம் சொல்லப் போகிறான் என்று நந்தினியின் உள்ளுணர்வு அவளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது .
“ உன்ன ஹோட்டல்ல மீட் பண்ணி பேசுனதுக்கு ரெண்டு நாள் கழிச்சு அவர் என்ன கூப்பிட்டார் . உன்னைப் பத்தி அவர் , ‘ என்னோட முப்பத்தி அஞ்சு வருஷ சர்வீஸுல நான் இப்படி ஒரு பொண்ண பார்த்ததில்ல ஆரியன் . அவளோட தாட் ப்ராசஸஸ் (Thought Processes) ரொம்ப வேகமாவும் வித்தியாசமாவும் இருக்கு . அவளோட IQ -வை என்னால கண்டுபிடிக்கவே முடியல . ஒருவேளை நந்தினி ஒரு கிஃப்டட் சைல்டா ( Gifted Child ) இருப்பாளோனு யோசிச்சா, அவங்களால கூட நந்தினி மாதிரி இருக்க முடியாது . சாவன்டிஸம் (Savantism) மாதிரி ஏதாச்சும் இருக்கும்னு யோசிச்சா , அவங்களுக்கு எல்லாம் ஏதாச்சும் ஒரு கலையில் தான் பெரிய திறமை இருக்கும் . ஆனால் , நந்தினிகிட்ட ஏதோ ஒரு மர்மம் இருக்கு . என்னால அவள ஹிப்னடைஸ் கூட பண்ண முடியல. அந்த அளவுக்கு அவ மான்ட் பவர்ஃபுல்லா இருக்கு. அதுவும், அவ எமோஷனலா டிஸ்டர்ப் ஆகுறப்ப, அவளோட கண்ணுல இருக்குற கருவிழிகள் தங்க நிறமா மாறுதுனு நீங்க சொல்றது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. ஆனா, நந்தினி இந்த பிரச்சனையில இருந்து வெளிய வரதுக்கு நீதான் அவளுக்கு ஹெல்ப் பண்ணனும். அந்த பொண்ண நீ நார்மலா வச்சுக்குறதுல தான் உன் திறமை இருக்கு ’ – அப்படின்னு சொன்னார் .
நான் அவருகிட்ட , ‘ இதற்கு எந்த வழியும் இல்லையா ?’- னு கேட்டதுக்கு , அவர் உன்னோட சிந்தனைகள் ஒரு கன்ட்ரோலே இல்லாம இருக்குறது தான் பிரச்சனை-னும் , அத நீ ஒருமுகப்படுத்த கத்துக்கிட்டா , நீ நார்மல் லைஃப் லீட் (Lead) பண்ணலாம்-னும் சொன்னார் ” என்று விட்டு நந்தினியின் முகத்தைப் பார்த்தான் ஆரியன் .
நந்தினி திக்பிரம்மை பிடித்தது போல அமர்ந்திருந்தாள் . ஆரியன் கூறியதைக் கேட்க கேட்க அவளால் நம்ப முடியவில்லை ; நம்பாமலும் இருக்க முடியவில்லை .
அவள் இப்பொழுதும், ‘ எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ?’ என்று புலம்பவில்லை , இதற்கான காரணத்தைத் தான் தேடினாள் .
அவள் அமைதியாக இருக்க , ஆரியனே தொடர்ந்தான் .
“ இதையெல்லாம் இதுவரைக்கும் ஒரு பெரிய பிரச்சனையா நான் பார்க்கல , நந்து . ஆனா , நீ இப்பலாம் ஏதாச்சும் ஒரு யோசனைல மூழ்கும்போதுகூட , உன்னோட ஐரிஸ் (Iris) தங்க நிறமா மாறுது , அதுமட்டுமில்லாம ” என்று தயங்கிவிட்டு ,
“ மூமூவுக்கும் அதே நிற கண்கள் தான் . நீ மூமூகிட்ட இப்போ பேசிட்டு இருந்தப்ப கூட, நீ வாய திறந்து பேசல . அதுக்கு பதிலா, நீ மூமூவோட கண்ணையே உத்துபார்த்துகிட்டு இருந்த ” என்று தன்னுடைய சந்தேகத்தை வெளியிட்டான் ஆரியன் .
அனைத்தையும் கேட்ட நந்தினி , “ எனக்கு என்னமோ அப்படி தோணல ஆரி . ஏன்னா , மூமூ என்னோட செகன்ட் (Second) பர்த் டே-க்காக அம்மா எனக்கு கொடுத்த கிஃப்ட் . அதனால , இதுல மூமுக்கு சம்பந்தம் இருக்காது. ஆனா , என்னோட ஐரிஸ் கோல்டன் கலருக்கு மாறுதுனு சொல்றத என்னால நம்ப முடியல ” என்றாள் .
“ உனக்கு மறுபடியும் கனவு வர்றது தான் எனக்குப் பயமா இருக்கு , நந்து . ஒண்ணு செய். இனிமே உனக்கு கனவுல வர எல்லா விஷயத்தையும், நீ வரைந்துவிடு , நந்தினி . உனக்கும் மனசு அமைதியான மாதிரி இருக்கும் . அதுமட்டுமில்லாம , நீ வரையரதில் இருந்து எனக்கு ஏதாச்சும் தோணுதானு பார்க்குறேன் . நீ மனப்பூர்வமா வரைஞ்சா , அதுல எந்த அளவு உண்மை இருக்குதுனு கூட ஒரு சைக்கியாட்ரிஸ்டாக என்னால சொல்லமுடியும் , நந்து ” என்றான் ஆரியன் .
******
நிகழ் காலத்திற்குத் திரும்பியிருந்த நந்தினியின் நினைவுகள் , ஓவியத்தில் மூழ்கத் துவங்கின . கடமைக்காக வரைய ஆரம்பித்த நந்தினி , அந்த ஓவியத்தை வரைய வரைய மனப்பூர்வமாக அதனுடன் ஒன்றிப் போனாள் . தனது மனதில் இருந்த எண்ணங்களை எல்லாம் வண்ணங்களின் உதவியுடன் கொட்ட ஆரம்பித்தாள் . இதையெல்லாம் இரு கண்கள் உற்றுப் பார்த்து கொண்டிருந்தன ….
******
கிரகம் : கயா
இடம் : பெருங்கடல் சிறை
ப்ரொமேத்தியஸ் அந்தச் சிற்றரசர்கள் முன் நின்று , அவர்களைப் பரிகாசத்துடன் பார்த்தான் . அதைக் கண்ட சிற்றரசர்களுக்கு மனம் முழுவதும் கோபம் நிறைந்து இருந்தாலும் , அவர்களால் அதை வெளிப்படுத்த முடியாத நிலையில் இருந்தனர் .
ப்ரொமேத்தியஸோ , “ எனது பெருமைக்குரிய சிற்றரசர்களே ! இல்லை … இல்லை … முன்னாள் சிற்றரசர்களே ! உங்களைச் சந்தித்துத் தான் எத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டன . ஆனால் , உங்களைப் பார்த்தால் இந்தப் பெருங்கடல் சிறை உங்கள் மேல் இன்னும் தனது தாக்கத்தைக் காட்டவில்லை போல உள்ளதே ” என்று கேலியாகக் கூறினான் .
“ உன்னால் எங்களை ஒன்றும் செய்ய இயலாது , ப்ரொமேத்தியஸ் . ஏனென்றால் , எங்கள் சக்திகள் அனைத்தும் செலினாவால் எங்களுக்கு அளிக்கப்பட்டது , உனக்கு அளிக்கப்பட்டது போலவே ” என்றார் ஆர்கஸ் , பொறுக்க முடியாமல் .
“ அதையும் இந்த முறை பார்த்து விடலாமே . சென்ற முறையே உங்கள் செலினா என்னிடம் தோற்றுவிட்டார் . உங்களாலும் என்னை வெற்றி பெற முடியவில்லை . இந்த கன்வர்ஜென்ஸின் பொழுது அனைத்தும் முடிவுக்கு வரும் , சிற்றரசர்களே . இனிமேல் , நீங்கள் எனக்குத் தேவைப்பட மாட்டீர்கள் . கன்வர்ஜென்ஸ் முடிந்த பிறகு அனைத்து சக்திகளும் எனக்கு வந்து விடும் . அதன் பிறகு உங்களையும் , அந்த பொசய்டனையும் கவனித்துக் கொள்கிறேன் ” என்றான் ப்ரொமேத்தியஸ் .
“ ரொம்ப உற்சாகப்படாதே , ப்ரொமேத்தியஸ் . இந்த முறை நீ எவ்வளவு பெரிய படையுடன் வந்தாலும் , நாங்கள் தான் வெற்றி பெறுவோம் . எங்களது சக்திகளைப் பெருங்கடல் சிறையில் பயன்படுத்த முடியாது என்ற ஒரே காரணத்தால் தான் நீ இன்னும் உயிருடன் இருக்கிறாய் , ப்ரொமேத்தியஸ் ” என்றார் மெட்லடன் .
ப்ரொமேத்தியஸ் அவரது பேச்சைச் சிறிய புன்னகையுடன் அலட்சியப்படுத்தி விட்டு வல்கனிடம் சென்றான் .
அவரிடம் , “ எனது அண்ணனின் நெருங்கிய நண்பர் ! நகமும் சதையும் போல என்றும் ஒன்றாக இருந்தவர் தாங்கள் .. . எனவே நீங்கள் கூறுவதற்கு எதுவும் இல்லையா வல்கன் ? ” என்று கேட்டான் .
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த வல்கன் , “ உன்னை நம்ப வேண்டாமென்று எத்தனை முறை சீரஸிடம் கூறியிருக்கிறேன். ஆனால், என்னைக் கூட நம்பாது உன்மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தவனுக்கு நீ எவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்திருக்கிறாய் ? உன்மேல் கோபம் இருந்தாலும், உனது அறிவை நான் மதித்தேன். ஆனால் , அதை நீ தவறாகப் பயன்படுத்தி நமது கயா கிரகத்தின் அடித்தளத்தையே தகர்க்கப் பார்க்கிறாயே . நீ யாருடைய வாரிசாக வேண்டுமானாலும் இருந்துக்கொள். ஆனால், அவனையும் எங்கள் முன்னேர்கள் அழித்துள்ளார்கள் என்பதையும் நினைவில் வைத்துக்கொள் ” என்று கோபத்துடன் கூறினார் .
“ தாங்கள் அனைவரையும் கடைசியாக ஒருமுறை சந்தித்துப் பேச முடிவு செய்திருந்தேன் . அது இன்று நிறைவேறிற்று . இனி முழுவதும் வெற்றி பெற்றுவிட்டு வந்து உங்களைச் சந்திக்கிறேன் ” என்று கூறி விடை பெற கிளம்பியவன் ,
“ எனது புதிய சக்தியை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தாமல் விட்டு விட்டேனே . அதையும் ஒரு முறை பார்த்து விடுங்கள் ” என்று கூறிவிட்டு , காவலாளியிடம் ஏதோ கட்டளையிட்டான் .
அந்தக் கோட்டையின் வாயிலில் உயிரினங்களுள் ஒன்று நிறுத்தப்பட , தனது டோக்கை (Torc) வெளியில் தெரியுமாறு போட்டுக்கொண்டு , அந்த விலங்கின் மேல் கை வைத்தான் . அவன் கை பட்டவுடன் , அந்த விலங்கின் உடலில் மாற்றம் ஏற்பட தொடங்கியது . திடீரென்று அதன் உடம்பில் இறக்கைகள் முளைத்தன . அதன் கண்கள் சிவப்பு நிறமாக மாறத் தொடங்கின . ப்ரொமேத்தியஸ் கம்பீரமாக அதன் மீது அமர்ந்தான் . அவன் அந்த விலங்கின் மீது ஏறி அமர்ந்ததும் , அது பறக்கத் தொடங்கியது . அது மெல்ல மெல்ல நீர் மட்டத்தில் இருந்து உயர்ந்து , வானில் பறக்கத் தொடங்கியது .
இவற்றையெல்லாம் சிற்றரசர்களும் , காவலாளிகளும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் . ஆனால் , வல்கனின் முகத்தில் யோசனை ரேகைகள் படர்ந்தன . ப்ரொமேத்தியஸ் சென்றவுடன் அனைத்து சிற்றரசர்களும் தங்களுக்குள் பேச ஆரம்பித்தனர் .
அவர்களை அமைதிப்படுத்திய வல்கன் , “ எல்லோரும் சிறிது நேரம் அமைதியாக நான் சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள் . என்ன தான் பெரிய அறிவாளியாக இருந்தாலும் , அவர்களும் ஒரு இடத்தில் ஒரு சிறிய தவறு செய்வார்கள் . அப்படிச் செய்த சிறு தவறால் தான் அவர்கள் வீழ்த்தவும் பட்டுள்ளார்கள் . இப்பொழுது நாமும் அந்த வழியைப் பின்பற்றப் போகிறோம் ”
“ ப்ரொமேத்தியஸ் இவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தும் , நமக்கு முன்னர் அவன் இந்தச் சிறையில் தனது சக்தியைப் பயன்படுத்தியுள்ளான் . அப்படியென்றால் , இந்தச் சிறையில் நமது சக்தியை அழிக்கும் வேலைக்குத்தான் பயன்படுத்த முடியாது . ஆனால் , நாம் அதனை இங்கிருந்து தப்பிக்க ஒரு உபாயமாகப் பயன்படுத்தலாம் ” என்றார் வல்கன் .
வல்கன் கூறியதைக் கேட்ட சிற்றரசர்கள், ஒரு நொடி ஸ்தம்பித்து நின்று விட்டனர் . அவர் கூறியதைக் கேட்டவர்களுக்கு அப்பொழுது தான் ஞாபகம் வந்தது , செலினா, குற்றவாளிகள் இந்தச் சிறையை விட்டுத் தப்பக் கூடாது என்பதற்காக குற்றவாளிகளிடம் இருக்கும் அழிக்கும் சக்திகளைத் தான் செயல்படாமல் இருக்குமாறு இந்தச் சிறையை உருவாக்கினார் . அப்படியென்றால் சிறிது மதியூகத்துடன் செயல்பட்டால் , இந்தச் சிறையில் இருந்து விடுபடலாம் என்று தோன்ற அனைவரும் வல்கனுடன் கலந்துரையாடத் தொடங்கினர் …
******
இடம் : இன்டர்ஸ்டெல்லர்
நாம் சாதாரணமாகக் காணும் இருட்டை எல்லாம் விழுங்கும் வண்ணம் இருந்தது அந்த இடம் . அந்த இருட்டில் நாம் இருந்திருந்தால் , நம் மகிழ்ச்சி அனைத்தையும் அந்த இருள் உறிஞ்சிருக்கும் . சுற்றிலும் உள்ள நீர் இல்லாத அந்த கருப்பு நதியில் , ஆங்காங்கே சில கற்கள் இருக்க , அவற்றின் ஊடே ஒரு விண்வெளி வாகனம் புகுந்து சென்று கொண்டிருந்தது . அந்த வாகனம் வில்லில் இருந்து எய்த அம்பு போலத் தனது இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தது .
அதற்குள், கயா கிரக வாசிகள் அந்த விண்வெளி வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தனர் . மூவர் அதைச் செலுத்திக் கொண்டிருக்க , இருவர் இடையில் வரும் தடங்கல்களை அகற்றிக் கொண்டிருக்க , அந்த வாகனத்தின் தலைவர் மட்டும், தன் முன் இருந்த திரையில் ஹோலோகிராம் (Hologram) காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் .
மொத்தம் ஆறு கயா கிரக வாசிகளே விழித்திருக்க, அந்த வாகனத்தைச் செலுத்துவோரில் ஒருவன் வந்து கயா கிரக மொழியில் , “ கலபதி ! நாம் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் ? அந்த இடத்தின் கோ – ஆர்டினேட்ஸை கூறுங்கள் ” என்றான் .
அவர் திரையில் இருந்து டேட்டாக்களை அவனிடம் கொடுத்துவிட்டு , சிறிது யோசனையில் மூழ்கினார் . அதைக் கவனித்த ஒரு காப்பாளன் வந்து ,
“ கலபதி , என்ன தங்களது முகம் யோசனை ரேகைகளைக் காட்டுகிறது . ஏதாவது பிரச்சனையா ? நான் வேண்டுமானால் ஆயுதங்களைத் தயார்ப் படுத்த தொடங்கவா ? ” என்று கேட்டான் .
“ இல்லை … இல்லை … அந்த அளவு தேவை ஏற்படாது . இருப்பினும் , நாம் சிறிது கவனமாக இருக்க வேண்டும் ” என்றார் விண்கலத்தின் தலைவர் .
“ பிறகு ஏன் கவலைப் படுகிறீர்கள் ?” என்று கேட்டான் காப்பாளன் .
“ இந்தக் கிரகத்தில் உயிரினங்கள் வெறும் ஆறு அறிவு படைத்தவை தான் . அவர்களால் வெறும் மூன்று பரிமாணங்களில் மட்டுமே பார்க்க முடியும் . அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏதோ கொஞ்சம் வளர்ந்து இருக்கிறார்கள் . தங்களது கண்டுபிடிப்பான அணுக்குண்டு ( Atom Bomb ) தான் பெரிய சக்தி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் . மற்ற உயிரினங்களைப் போல அல்லாது , இவர்களுக்குள் பல்வேறு பிளவுகள் உள்ளன . ஆனால் என்ன , அவர்கள் நம் பிரிவைச் சேர்ந்தவர்கள் . அதனால் தான் அவர்களைப் பற்றி இந்த ஹாலோகிராமில் பார்த்துக்கொண்டிருக்கிறேன் . அவர்கள் கிரகத்தைப் பார்க்க அவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் ” என்றார் .
“ இவ்வளவுதானா, நான் கூட ஏதோ பெரிய கிரகத்துடன் மோதப் போகிறோம் என்று எண்ணினேன் . நம்முடைய விண்கலத்தின் ஒரு பாகம் மட்டுமே பல நூறு அணுக்குண்டுகளுக்குச் சமமானது . இதெல்லாம் சாதாரண கிரகம் தான் . நாம் வேலையைச் சுலபமாக முடித்து விட்டு , அந்தக் கிரகத்தை விட்டு விரைவாக கிளம்பி கயா கிரகம் சென்று சேர்ந்துவிடலாம் ” என்றான் .
“ ஆம் … இருப்பினும் , நாம் சிறிது ஜாக்கிரதையாகவே இந்த கிரகத்தைக் கையாள வேண்டும் . விண்கலத்தை வேகமாகச் செலுத்த தொடங்குங்கள் . நாம் இன்னும் சில நாட்களில் அந்த கிரகத்துக்குச் செல்ல வேண்டும் ” என்றார் கலபதி .
“ கேட்க மறந்துவிட்டேன் , அந்தக் கிரகத்தின் பெயரென்ன ?” என்று கேட்டான் காப்பாளன் .
கலபதியிடம் இருந்து வந்த பதில் , “ பூமி ”
error: Content is protected !!