Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ31_1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 31_1

 

உடன் வேலை செய்த மருத்துவரோடு காலை உணவிற்கு பிரவீன் சென்றிருக்க, அவனில்லாத அந்த திங்கட்கிழமை காலை மிகவும் ரம்மியமாகவே புலர்ந்தது அலர்விழிக்கு.

 



Advertisement

முன்தின முதுகு வலி மட்டும் அலர்விழியை விட்டு போகமாட்டேன் என்று ஒட்டிக் கொண்டிருக்க, வலியை அதிகப்படுத்த மருத்துவன் இல்லாதது பெருத்த ஆறுதல். உதவியோடு காலை செய்த வெண்பொங்கல், இட்டி, சட்டினி, வடை, சாம்பார் அமோக வரவேற்பைப் பெற, பாடில்லாமல் சென்றது காலை உணவு.

 

சிறிது நேரத்திற்கெல்லாம் இலக்கியா கிளம்பிவிடுவாள் என்றதுமே பெண்கள் முன்பே முடிவெடுத்தது போல் ஒரே நிறத்தில் உடுத்த, அலர்விழியை தவிர மற்ற பெண்கள் புடவையோடு பாயல் வீட்டை முற்றுகையிட்டனர்.,

Advertisement

 

Advertisement

கிளம்பி அறையை விட்டு வெளியே வந்த அலர்விழி, எபியை பார்த்ததும், ‘எப்பிடி?’ என வினவினாள், பார்வையால்… புருவம் உயர்த்தி.

 

மார்க் அருகில் இருக்கவும், ‘அள்ற டி’ என்றான் எபி, கண்கள் சுருக்கி வாய் அசைத்து, ரசனையாய்.

Advertisement

 

‘உள்ள வா..’ என்று அவன் வாயசைக்க…

 

‘இப்போவா?’ அவள் கண்கள் விரிக்க,

 

‘ம்ம்…’ என்றவன் முகத்தில் மயக்கம்.

 

‘டேய்…’ என்றவள் பார்வை மும்முரமாய் கைப்பேசியில் மூழ்கியிருந்த மார்க்கை நோக்கி மீண்டது.

 

‘வா டி’ அவன் கண்களை விரித்து மிரட்டிவிட்டுச் செல்ல, ‘முடியாது போடா’ என்று மார்க் அருகில் அமர்ந்துகொண்டாள்.

 

“மார்க் என் ஃபோன் அங்க இருக்கு, எடுத்துட்டு வாயேன்” மார்க்கால் நகர முடியாது என்று தெரிந்தே உள்ளிருந்து எபி குரல் கொடுத்தான்.

 

“டார்லிங், இத அவங்கிட்ட கொடுத்துடேன். நான் வேலையா இருக்கேன். நகர முடியாது.” என்று மார்க் அலர்விழியிடம் எபியின் கைப்பேசியைக் கொடுத்தனுப்பினான்.

 

அறைக்குள் நுழைந்ததுமே, பின்னோடு கட்டிக் கொண்டவனை வெட்டவா குத்தவா என்று சண்டைக்கு தயாரானாள்.

 

“மனசுல பெரிய காதல் ரோமியோன்னு நினைப்போ சாருக்கு”

 

“ஏன் டி என் ரொமான்ஸ்க்கு என்ன கேடு!”

 

“ஒரு கேடும் இல்ல… ரெண்டு நாளா சொந்த வீட்டிலேயே திருட்டுத்தனம் பண்ணிட்டு அலையறோம். உங்களுக்குத் தான் வெக்கம் இல்ல. எனக்கு நிறையவே இருக்கு. விடுங்கப்பா நான் வெளியில போகட்டும்”

 

“எனக்கும் அந்த வெக்கத்தை எப்பவாது காட்டேன் டி. பாக்க ஆசையா இருக்கு”

 

“மனோ…”

 

வேற்று கிரகத்திற்கு பெண்ணையும் கடத்தி கொண்டிருந்தவன், “ம்ம்ம்…” என்றான்.

 

“கூசுது மனோ… அங்க இருந்து முகத்த எடுங்கப்பா”

 

“ஜன்னல் கதவெல்லாம் வச்சு மனுஷனைப் பாடா படுத்துறடி நீ”

 

“நீங்க தான் புதுசா இப்பிடி இன்ஸ்டால்மென்ட்ல என்னை பாடா படுத்துறீங்க.”

 

“என்னமோ டி ரெண்டு நாளா உன்ன பார்த்தாலே மார்கமா இருக்கு! இன்னைக்கு இந்த புடவையும் அலங்காரமும்.. எனக்கு உன் மேல பைத்தியமே பிடிக்குது”

 

“போங்க மனோ… எனக்கே வெக்கம் வந்திடும் போல!”

 

“நியாயப்படி இதுக்கே வந்திருக்கணும். எனக்கு என்னமோ நீ வெக்க பட்டு, அதை பாக்கிற பாக்கியம் எனக்கு இல்லன்னு தோணுது! ஆனா அத பாக்காம உன்ன விடுறதாவும் இல்ல..”

 

“அட்டூழியம் பண்றீங்க மனோ. பொண்ணுங்க வர நேரம். நேத்து கேவலப்பட்டது பத்தலையா? விடுங்க மனோ”, அவனின் இன்ப இம்சையை ரசிக்காமல் இருக்கவும் முடியவில்லை… யாரேனும் வந்துவிடுவார்கள் என்ற படபடப்பைக் குறைக்கவும் முடியாமல் பெண் நெளிந்தாள்.

 

“எல்லாரும் போனபிறகு சாயங்காலம் ஓகேவா..”

 

“ப்ச்! என்னதிது புதுசா? வேண்டாம் மனோ…”

 

“ம்ம்ம்ம் சொல்றவரை விட மாட்டேன்…”

 

“கல்யாணம் ஆகட்டும் மனோ… அது வரைக்கும் என் பக்கமே வராதீங்க. நாலே நாலு மாசம் தான் மனோ.”

 

“இதுக்கெல்லாம் கல்யாணம் வரை முடியாது போடி! சொல்லு சாயங்காலம் ஓக்கேவா?”

 

“உங்க ப்ளான் என்ன ஆகிறது? நடுவில நம்மளை பிரிச்சுவிட நந்தி இருகாதே”

 

“ப்ளான எடுத்து உடப்புல போடு!”

 

“ஹ ஹ ஹா… ஆள பாரு ஆள. விடுங்க என்னை”

 

இடையோடு கட்டி கழுத்தில் முகம் புதைத்திருந்தவனைப் பாடாய் பட்டுப் பிரிக்க, அவனோ அவளைக் கண்ணாடி முன் நிறுத்தி, “சொல்லு. எப்பிடி இருக்கு” என்றான்.

 

மாதவன் திருமணத்திற்காக எபி வாங்கி தந்த புடவையில் அவனுக்குப் பிடித்தது போலவே அடர் பர்புள் நிற இதழ் சாயத்தொடு, அரைவேக்காடு நூடுல்ஸ் அங்கங்கு முகத்தில் தொங்க அவன் மனதை கொள்ளையடிக்க தான் செய்தாள்.

 

பெண்ணின் தோளில் நாடி வைத்து இடையோடு அணைத்த வாக்கில் அவளுக்குப் பின்னால் மனோ. இருவரின் ஜோடி பொருத்தத்திற்குச் சுற்றிப் போடலாம்!

 

“எப்பிடி இருக்குன்னா? அழகான ஜோடி, அன்யோன்யமான புருஷன் பொண்டாட்டி மாதிரி அம்சமா இருக்கோம்”

 

“என் பட்டு…” தோளில் இதழ் பதித்து,  “இப்போ… சொல்லு” என்றவன் அவள் கழுத்தில், இதய கம்பிக்கு இடையே வட்ட வைரம் மின்ன, மயிரிழை பிளாட்டின சங்கிலியை மாட்டிவிட்டான்.

 

“வாவ் மனோ… ஆஆஆஹ்… இதுக்கு தான் கூப்பிட்டீங்களா? சோ ஸ்வீட்” கழுத்தைக் கட்டிக் கொண்டு எம்பிக் குதித்து முத்தங்களை அள்ளி வீச, “என்ன மேடம் இப்போ யாரும் வர மாட்டாங்களா?” கேட்டவன் சத்தத்தில் குறும்பு கொப்பளித்தது.

 

“அவளுங்க கிடக்கிறாளுங்க! லவ் யூ மனோ” என்றவளின் மின்னல் வீசும் கண்களால் பொசுங்கித் தான் போனான்.

 

பெண்களும் வந்துவிட விதவிதமாக படங்கள் கைப்பேசியை நிறைத்தது.

 

அனைவரும் கூட்டமாக நின்றிருக்க, அலர்விழி நின்றிருந்த இடத்தில் இரண்டு டசன் தங்க நிற ஹீலியம் பலூன்கள் பறந்து உட்கூரையில் ஒட்டிக் கொள்ள, ‘என்ன டா இது?’ என்ற பாவத்தோடு அவள் திரும்ப, இரண்டு கைகளை நிறைத்த பெரிய பிங்க் நிற அழகான வட்ட வடிவ டப்பாவை எபி நீட்டி நின்றான்.

 

பெண்ணவள் முகம் முழுவதும் பூரிப்பும், ‘என்ன ஆச்சு இன்னைக்கு இவருக்கு?’ என்ற கேள்வியும்! ‘ம்ம்?’ பார்வையால் கேட்க, ‘உள்ள பார்’ பதில் பார்வை பார்த்தான்.

 

டப்பாவைத் திறக்க, உள்ளே சிகப்பு ரோஜாக்கள் மத்தியில் இதயவடிவில் குட்டி குட்டி ‘ரெட் வெல்வெட் கப் கேக்’ நிறைத்திருந்தது.

 

பெண்ணின் முகம் புன்னகையைப் பூசிக் கொள்ள,

கையிலிருந்த டப்பாவை வாங்கி மேசையில் வைத்தவன், அவளை அள்ளி வாரி உயர தூக்கி, “இன்னும் ஒரு பத்து.. பதினைஞ்சு கிலோ போட்டா கூட ஈசியா துக்கிடுவேன். அதுக்கு மேலன்னா கொஞ்சம் கஷ்டம்!” என்று கீழே இறக்கி, “என் ஆர்ம்ஸ் எப்பிடி?” என்றவனுக்கு அனைவர் முன்னும் என்ன பதில் கொடுக்க!

 

‘என்னது இது’ என்று அவள் சிரித்து முடிக்கும் முன்னமே பாட ஆரம்பித்தான்.

 

“சுவாச பையில் உந்தன் வாசம் பூட்டி வைத்தும்

நெஞ்ச ஏட்டில் இன்னும் உன் பேரை தீட்டி வைத்தும்

பாடல் தீர்ந்து போன பின்னும்

மௌனம் கூட தீர்ந்த பின்னும்

கோடி முத்தம் வைத்த பின்னும்

 

போதவில்லையே போதவில்லையே

உன்னைப்போல போதை ஏதும் இல்லையே”

 

தன்னை சுற்றிப் சுற்றி பாடியவன் முகபாவம் கண்டு பெண்ணின் முகத்தில் செம்மை பரவ, புன்முறுவலையும் அடக்க முடியாமல் போக, ‘என்ன செய்கிறான்’ என்று பார்க்க,

 

பலமான கைதட்டல் நிடுவே, “நல்லா பாடுறேனா?” என்ற கேள்வியோடு நின்றான்.

 

கண்கள் பார்த்து நின்றவனுக்கு… முகம் முழுவதும் அடக்கமுடியா புன்னகையோடு பதில் பேச மறந்தவளாய், வெட்கம் எட்டிப் பார்க்க, ‘ம்ம்’ என்ற வேகத் தலையசைப்பை பதிலாக கொடுத்தாள்.

 

“பாக்க ஹான்சம்மா இருக்கேனா?” என்று தலைக்கோதி நமட்டு சிரிப்பு சிரிக்க,

 

“என்ன மனோ… எல்லார் முன்னாலையும் என்ன விளையாட்டு” மெல்லச் சிணுங்கினாள்.

 

“சொல்லு சொல்லு… உன் கண்ணுக்கு ஸ்மார்ட்டா இருக்கானா உன் மனோ?” கேட்டவன் குரலில் துள்ளல். பார்த்திருந்த நான்கு ஜோடி கண்களிலும் எதிர்பார்ப்பும் ஆனந்தமும்.

 

“ம்ம்.. ரொம்ப” என்றவளுக்குப் புன்னகையை அடக்கத்தான் வழி தெரியவில்லை.

 

குட்டி கப்-கேக் ஒன்றை எடுத்து வாய்க்கு நேராய் நீட்டவும் வெட்கம் ஒரு பக்கம், ‘எதற்கு இந்த விளையாட்டு’ என்ற ஆர்வம் ஒரு பக்கம் இருந்தாலும் அதை வாய் திறந்து வாங்கிகொள்ள, “அந்த சிகப்பு கார்டினல் பறவ, அதோட குஞ்சு பறக்க ஆரம்பிச்சு, சீசன் முடிஞ்சதும் விட்டுட்டு போயிடுமாம். நான், கார்டினல் மாதிரி ஒரு சீசனுக்கு மட்டும் இல்லாம, ஒரு ஜென்மம் முழுசும் உன்னையும் நம்ம பிள்ளைங்களையும் உயிரா பாத்துப்பேன்” என்றான்.

 

வாயிலிருப்பதை விழுங்கவும் மறந்து.. மெய் மறந்து நின்றவளை,  இடையோடு தன் பக்கம் இழுத்து உதட்டைத் தீண்டி கண்கள் பார்த்தான். கூட்டத்தின் நடுவில் பெண் திக்குமுக்காடிப் போனாள்.

 

“ரொம்ப நல்ல பையன். யார்ன்னு தேடாத! நான் தான்! நீ பிறந்து வளந்த குடும்பம் மாதிரியே உன்ன தலை மேல தாங்குற பாசமான குடும்பம். நீ காண்ற கனவெல்லாம் நினைவாக்க துணையா வருவேன். காலம் பூரா கூடவே இருந்து காதலிப்பேன். உன்னையும் நம்ம பிள்ளைகளையும் குறையில்லாம பாத்துப்பேன். குழந்தைங்கள குளிப்பாட்டி, சாப்பாடு கொடுத்து, முகம் சுளிக்காம டயப்பர் வரைக்கும் மாத்துவேன். நம்ம பிள்ளைகளோடையது மட்டும் இல்ல… பேரப்பிள்ளைகளுதும்! என் கூடவே என் உயிரா… என்னோட பெட்டர் ஹாஃபா இருப்பியா விழி?” மோதிரத்தை நீட்டி நின்றவனைப் பார்த்தவள், பார்த்தபடியே நின்றாள்.

 

அது வெறும் அலங்கார மோதிரம் இல்லையே… தான், மனோவா எபெனேசருக்கு மட்டுமே சொந்தம்! மனோ தனக்கு மட்டுமே சொந்தம்! என்று மற்றவர்களுக்கு பறைசாற்றும் மோதிரமாயிற்றே!

 

பற்கள் கடித்திருந்த கீழ் உதடு துடித்துச் சிரிக்க… கன்னங்கள் துடிக்க, கண்கள் இரண்டும் நீர் சொறிய, இதயம் மனோ என்று கதற நின்றிருந்தவள் பதிலுக்காக, மனோவோடு சேர்ந்து அனைவரும் நகம் கடித்துக் காத்திருக்க, “என் உயிர் இருக்கவரை உங்க கூடவே இருப்பேன் மனோ” என்றாள்.

 

மோதிர விரலில் வைரம் மின்ன நின்றிருந்த பெண்ணிற்கும், கூட்டம் எல்லாம் தெரியாமலேப் போனது. கரகோஷத்திற்கு மத்தியில் மனோவின் நெஞ்சிற்கு உப்பு நீரோடு, ஊதா சாயத்தையும் கடத்தி நின்றாள் மனோவின் விழி!

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!