Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ31_2 Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  31_2

 

தென்றல் சென்று வாடை வீச… அது ஏற்படுத்திய குளிரோ… இல்லை அருகில் எங்கோ கூகை ஏற்படுத்திய ஒலியோ.. சட்டென்று முழிப்பு தட்டியது செல்வனுக்கு. கூடவே பறவைகளின் சலசலப்பும்!

 



Advertisement

எழுந்து அமர்ந்தவனுக்குக் கேட்ட சத்தம் எதையோ உணர்த்தியது. ஏதோ சரியில்லை என்ற எண்ணம். கொடிய மிருகம் வந்திருக்க வேண்டும். மீண்டும் கோட்டானின் சத்தம், உள்ளுக்குள் அபசகுண உணர்வை வலுவாய் கொடுத்தது.

 

“மைனி…” துளசியை எழுப்ப முடியவில்லை. புடவையை இழுத்து மூடி.. தலைக்கடியில் கைகொடுத்து சுருண்டு, நல்ல உறக்கம்.

Advertisement

 

Advertisement

வானில் விடிவெள்ளி வந்திருந்தது. கண்டிப்பாக மணி மூன்றைத் தொட்டிருக்கும். மனதில் எச்சரிக்கை மணி அடித்தது. நேரம் கடத்தினால் கண்டிப்பாக மாட்டிக் கொள்ளப்போவது நிச்சயம். தனியே வந்திருந்தாலோ… நட்பு வட்டத்தோடு வந்திருந்தாலோ.. இதற்காகக் கவலைப் படுபவன் இல்லை.

 

 “மைனி… எழுந்திரி. வீட்டுக்கு போகணும்.”

Advertisement

 

பெண் அசைந்தாளில்லை. பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினான்.

 

“என்ன நிலா… உயிர எடுக்காத..” எழுந்து அமர்ந்தாள்.

 

நீர் கொண்டுவந்து முகத்தில் லேசாகத் தெளித்தான். “செல்வன்?” முதலில் ஒன்றும் புரியவில்லை. நடந்துவந்த களைப்பு, ரம்மியமான இயற்கை, மூர்த்தியைப் பற்றிய பேச்சு.. எல்லாமாக சேரவும் இயற்கை அன்னை மடியில் உறங்கிவிட்டாள். தூக்கத்தின் நடுவின் எழுந்தவளுக்கு நேரம் பிடித்தது நடந்த விஷயங்களை முன்னுக்குக் கொண்டுவர. 

 

“போலாம்.. விடியபோகுது!” பரபரத்தான்.

 

தூக்கம் போன இடம் தெரியவில்லை. “தூங்கிட்டோமா? வா வா.. அவருக்கு தெரிஞ்சா தொலைஞ்சேன். சொல்லாம போனதுக்கு ரொம்ப கோவிச்சுப்பார்… காதில ரத்தம் வரும்… வா ஓடலாம்”

 

அவருக்கு மட்டும் தெரிந்தால் பரவாயில்லை. ஊருக்கே தெரிந்தால் தான் பிரச்சினையே… செல்வனுக்கு புரிந்தது அவளுக்கு அப்படி எல்லாம் யோசிக்க தெரியவில்லை. அவளை பொருத்தமட்டில் செல்வன், மூர்த்தியின் தம்பி… தனக்கும் தம்பி. அவ்வளவு தான்.

 

மலை ஏறும் போது ஏறிவிட்டாள்… இறங்க கடினமாக இருந்தது. ‘இப்படி புடவை எல்லாம் கட்டிக்கொண்டு.. இது தேவையா துளசி?’ பனி படிந்த பாறை வழுக்கியது.

 

நேரம் ஆக ஆகச் செல்வன் நிலை மோசமானது. “சீக்கிரம் மைனி… கைய குடு… வா..” அவசரபடுத்தினான்..

 

“நல்லா தூங்கிட்டு இப்போ என் உயிரை எடு!” அவளும் தானே தூங்கினாள்? அவன் எதையும் கேட்டும் நிலையிலில்லை.

 

[the_ad id=”6605″]

 

 

வெள்ளரி தோட்டம் ஆரம்பிக்கும் முன் அவன் பார்வையில் விழுந்தது அந்த கூட்டம். சிகரெட் புகை! டார்ச்சை அணைத்து விட்டான். நிதானித்தான்.

 

“என்ன செல்வா?

 

“ஷ்ஷ்! பேசாதா”

 

மூன்று பேர்.. பேச்சு சத்தம் கேட்டது. இவர்களுக்கு முதுகை காட்டி நின்றிருக்க, சத்தம் எழுப்பாமல் தான் ஓட நினைத்தனர்… கொலுசு காட்டிக் கொடுத்திருக்க வேண்டும். அவர்களிடையே சிறு அதிர்வு. ஒருவன் கையிலிருந்த டார்ச்சை கொண்டு சுற்றும் முற்றும் பார்க்க, இருவரும் சிறிய பாறை பின் தஞ்சம் அடைந்தார்கள்.

“கொலுச கழட்டு மைனி.. மாட்டியிருந்திருப்போம்..”

 

“தங்க கொலுசு செல்வா… ஒரு மணி தான் இருக்கு சத்தம் அவ்வளவா வராதே? இவங்க எல்லாம் யார் செல்வா? யாரும் இருக்க மாட்டாங்க… பிரச்சினை இருக்காதுன்னு சொன்ன?” கொலுசைக் கழட்டிக்கொண்டே கிசுகிசுத்தாள்.

 

“யாருனே தெரியல மைனி. கண்டிப்பா நம்ம ஆட்கள் இல்ல மைனி… ஏதோ அடியாள் மாதிரி இருக்கானுவ. ஹிந்தியா பேசரானுவா?”

 

இருவரும் அமைதி காக்கா.. துளசி முகம் பதற ஆரம்பித்தது.

 

“அது மாராட்டி செல்வா.”

 

எத்தனையோ முறை இவனும் இவன் நண்பர்களும் சுற்றிய இடம் தான் இது. இன்று வரை காணாத வெளியூர் ஆட்கள். யார்? எதற்கு இங்கே?

 

அந்த ஒருவன் மற்றவரிடம் ஏதோ கூற ஆளுக்கு ஒரு பக்கமாக நகர ஆரம்பித்தனர். செல்வனுக்கு மூச்சு முட்டியது. மூன்று பேரை அவனால் சமாளிக்க கண்டிப்பாக முடியாது. ஒவ்வொன்றும் காண்டாமிருகம் போல் இருக்க அவனால் முடியவே முடியாது…

 

“வா ஓடிடலாம் மைனி. தப்பா தெரியுது!”

 

“கோலுசு ஒண்ண கழட்ட வரல செல்வா..”

 

“இருக்கட்டும் வா போலாம் மைனி..”

 

ஒருவன் இவர்கள் பக்கம் வர.. மீண்டும் மலையை நோக்கி ஓட்டம் பிடித்தார்கள். செல்வனுக்கு பழக்கப்பட்ட இடம் என்பதால் அவளையும் இழுத்துக் கொண்டு வேகமாய் ஏறியவன்… பாறை பிளவுக்குள் நுழைந்து மறைந்தனர்.

 

செல்வனுக்கு இது போன்ற காட்சி எல்லாம் படத்தில் கூட பார்க்கப் பிடிக்காது. இன்று அவனோடு அவனை நம்பி வந்த அண்ணனுக்கு நிச்சயிக்கப் பட்டவளைக் காக்க வேண்டும் மூன்று அரக்கர்களிடமிருந்து. மாட்டினால்… நினைக்கவே முடியவில்லை.

 

முதல் முறை சற்று பயந்தான். துளசியை பார்த்தான். இளம் வயது. நிலா ஒளியில் வெண் தாமரையாய் கண்ணை கவர்ந்தாள். பார்த்துவிட்டு கடந்து போகும் அழகல்ல.. பார்த்த அன்றே அண்ணி என்ற எண்ணம் வந்ததால் மட்டுமே அவனை அவள் அழகு ஈர்க்கவில்லை.

 

என்ன தைரியத்தில் வீட்டை விட்டு அண்ணனுக்கு அறிவிக்காமல் இவளை வெளியே கூட்டி வந்தான்? ஏதாவது ஆகி போனால்?

 

செல்வன் தலையில் கைகொடுத்து அமர்ந்துகொண்டான். ‘யார் இவர்கள்?’ எத்தனை முறை நண்பர்களோடு இந்த ஊரை இரவில் சுற்றி திரிந்திருப்பான்…? ச்ச!!

 

“சாரி மைனி..” குரல் கரகரத்தது.

 

[the_ad id=”6605″]

 

 

 

“ஷ்… ஒண்ணும் இல்ல. அவங்களுக்கு இங்க வர முடியாது. நாம இங்க இருக்கது அவங்களுக்கு தெரியுமான்னு கூட தெரியல! பயப்படாத ஒண்ணும் ஆகாது. கொஞ்ச நேரத்தில எலும்பு இல்லன்னு ஓநாய் போய்டும்.” பயந்து நின்றவனுக்கு தைரியம் அளித்தாள்.

 

சுற்றும் முற்றும் துழாவினாள். கூரானா கற்களை எடுத்து வைத்துக் கொண்டாள். அவளை பார்க்க செல்வனுக்கு மலைப்பாய் இருந்தது.

 

“பயமா இல்லியா மைனி?” கிசுகிசுத்தான். அவனை விட இரண்டு வயது சிறியவள், அப்படி எல்லாம் பயந்து கூப்பாடு போடவில்லை.

 

“இல்ல செல்வா. மிருகம் இல்லாத இடமே இல்ல போல. இதுகள எல்லாம் பார்த்து எனக்கு பயம் வரல அருவருப்பு தான் வருது. எனக்கு உன் பாசமான அண்ணம் நினைச்சா தான் பயம் வருது. தப்பு பண்ணிட்டேன் செல்வா. அவர் கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கணும். அவரே கூட்டிட்டி வந்திருப்பார். நாமளும் பதறாம இருந்திருக்கலாம். நாம போக லேட் ஆச்சுன்னா.. வேற யார் மூலமாவாது அவருக்கும் தெரியும் போது மனசு வருத்தப்படுவார் செல்வா! அது தான் பயமா இருக்கு. நான் கேட்டு இது வரைக்கும் அவர் இல்லன்னு சொன்னதே இல்ல. ரொம்ப தப்பு பண்ணிட்டேன் தம்பி..”

 

பாறைக்கு பின் மூவர் சத்தமும் கேட்டது. இருவரும் அமைதி காத்தனர். கண்டிப்பாக மூவருக்கும் பிளவு தெரியாது. தெரிந்தாலும் வர இயலாது.. அதனால் அவள் பயம் துரந்தாள். இருப்பினும் கற்களோடு காத்திருந்தாள்.

 

பெரிய பாறை மேல் ஒற்றை மரம்… அதிலிருந்து கோட்டான் சத்தம். அபசகுணமே தான்… மிருகம் தான் வந்துவிட்டது அதன் ஓநாய் படையோடு!

 

சற்று நேரத்தில் பாட்டில் சிதறும் ஓசை. பேச்சு சத்தம் அடங்கியது.  சிகரெட் புகையும் அடங்கிவிட.. செல்வன் மட்டும் மெல்ல வெளியே வந்தான்.. ஒருவரும் இல்லை.. சுற்றும் முற்றும் பார்த்தான். அவர்கள் வந்த தடம் மட்டுமே இருக்க.. அவர்களைக் காணவில்லை.

 

உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருவரும் ஓட ஆரம்பித்தனர். கண் மண் தெரியாத ஓட்டம். வயலுக்கு வரவுமே சேவல் எங்கிருந்தோ கூவியது.

 

இருவர் முகமும் வெளுக்க…. “செல்வா.. செத்தோம்..”

 

வீட்டின் அனைவரிடமும் வாங்கியே சாகப் போகிறோம்… என்று அவன் நடுங்க.. அவளுக்கோ, மூர்த்தி கொடுக்கும் அறிவுரையில் காதில் ரத்தம் வந்துவிடுமே என்ற கவலை.

 

“இன்னும் இருட்டா தான் இருக்கு… இவ்வளவு சீக்கிரம் எல்லாருமே எழுந்திருக்க மாட்டாங்க.. அப்படியே யாரவது பார்த்தாலும் நம்ம முகம் தெரியாது… வா..”

 

வயல் முடியும் வேளை.. ஒரு பெரியவர் வந்துகொண்டிருந்தார்…

 

“என் கால் கீழ உக்காரு மைனி…” முட்டி வரை இருந்த கதிர்களின் உதவியோடு அவளை மாறைத்து நின்று கொண்டான்.

 

அவர், “யார் மாக்கா நீ? செல்வமணிக்க… செல்வனா?” தூரத்திலிருந்து டார்ச்சை அவன் முகம் நோக்கி அடித்துக் கொண்டே கேட்க…

 

“ஆமா மாமா..”

 

[the_ad id=”6605″]

 

 

“வெளிக்கு போக வந்தியா மோனே?”

 

“ம்ம்ம்.. ஆமா மாமா..”

 

அவர் துளசியைக் கவனிக்கவில்லை. கவனித்தால் சென்றிருக்க மாட்டார். அவர் சென்றுவிட… உயிரை கையில் பிடித்துக்கொண்டு மீண்டும் ஒரே ஓட்டம்.

 

வீட்டின் பின்புறம் வரவுமே, வீட்டின் முன் பேச்சு சத்தம்! சத்தம் அதிகம் தான்.

 

“செல்வா அண்ணி முழுச்சுட்டாங்க போல இருக்கு!”

 

“மைனி… நீயும் அக்காவும் ஒண்ணாவா தூங்குவீங்க?”

 

“இல்ல அவங்க ஹால்ல நான் உள்ள ரூம்ல. அவங்க காலைல எழுந்து, அங்க வீட்டுக்கு போயிடுவாங்க. நான் பொறுமையா தான் எழுந்துப்பேன்…”

 

அவனுக்கு மூச்சு வந்தது. “சரி நீ உள்ள போய் படு.. எங்க போனன்னு கேட்டா.. பாத்ரூம் போனதா சமாளி. உளறிடாத!”

 

“ம்ம்ம். என்ன செல்வா வெளியில சண்டை போடறாங்களா?”

 

“மணி வந்திருக்கான் போல..” என்றான் தகவலாக.

 

“யாரு? உங்க அக்கா மகனா?”

 

“ம்ம்.. அவன் வந்தாலே சண்டை போடாம போக மாட்டான். இங்க தான் தங்குவான்… இப்போ தான் வந்திருப்பான் போல… அவன் கிடக்கிறான். அக்கா பாத்துப்பாங்க. நீ உள்ள போய் படு.”

 

தப்பித்தோம் பிழைத்தோம் என்ற உணர்வு இருவருக்கும். மெத்தையில் படுத்தவள் நடந்ததை நினைத்து மெல்லச் சிரித்துக் கொண்டாள். இனி இப்படி எல்லாம் மூர்த்திக்கு தெரியாமல் வால் தனம் கூடாது என்று முடிவெடுத்தாள் பெரிய மனுஷியாக.

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!