Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்10

நந்தாவின் வீடு அதிகுதூகலமாய் இருந்தது.. காரணம் நந்தா சாரதாவிடம் இனி தான்எங்கும் செல்லமாட்டேன் எனச் சொல்லிவிட்டது தான்..

      “துரும்பா இளைச்சுட்ட ராஜா.. படிக்கறேன் படிக்கறேன்னு இந்த அப்பத்தாவைப் பாக்கக் கூட அதிகமா வரலையே கண்ணு” என நந்தாவின் வாயில் லட்டுவைத் திணித்தவாறே அவனைக் கொஞ்சிக் கொண்டிருக்க

       “அடியே கட்டுன புருஷன் தண்ணி கேட்டு எப்ப.. ஆனா நீ பேரனைக் கொஞ்சிகிட்டு இருக்க” நந்தாவின் தாத்தா இடைப் புக.. அவரை முறைத்த சாரதா.. மருமகளிடம் திரும்பி “ந்தா.. சகுந்தலா.. உங்க மாமாக்கு தண்ணி வேணுமாமா.. கொண்டு வா” அதோடு தன் கடமை முடிந்தது என பேரனிடம் ஐக்கியமாகிவிட.. அவர் நிலையை எண்ணி சிரிப்பு தான் வந்தது நந்தாவிற்கு.

    அதைக் கண்டவர் “நல்லாத்தான் சிரியேன்டா.. இல்லைன்னா அதுக்கும் உங்கப்பத்தா என்னைத் தான் பேசுவா.. நீ ஏன்டி சும்மா கொஞ்சி கஞ்சியில உழுகற.. நல்லாத் தொட்டில் கட்டி உம்பேரனை தாலாட்டித் தூங்க வை” என பாய “ஆமாமா.. உங்கம்மா என்னைப் பேசாத பேச்சுத்தான் நான் உங்களைப் பேசிப் போட்டனாக்கும்.. வாக்கூடையில இருந்து தாம்புக்கண்ணி வரை சகலமும் கொண்டு வந்தும் எனக்கு என்ன மரியாதி இந்த ஊட்டுல.. எனக்குத் தாலாட்டுப் பாட ஆசைன்னா.. எம்பேரன் குழந்தைக்குப் பாடிட்டுப் போறேன்.. நீங்க சித்த சும்மா இருங்க” என வில்லுப்பாட்டே பாட.. இதற்கு மேல் வாயைத் திறப்பாரா என்ன அவர்.



Advertisement

       “உங்கப்பாரு இப்படித்தான் வயசான காலத்துல சும்மா இல்லாம பேசிட்டுத் திரியறாரு.. நீ சொல்லு ராஜா.. உனக்கு நான் சீக்கிரமா பொண்ணுப் பாக்கட்டுமா.. இப்பத்தான் படிப்பு முடிஞ்சிருச்சே.. என் தம்பி வகையறால ஒரு புள்ளை இருக்கு” என ஆசையாக அவனிடம் கேட்கவும்..

     அவனுக்கு மனக்கண்ணில் மகிழின் ஊர்வலம் தான்.. அவளைப் பார்த்து ஒரு வருடம் ஆகிவிட்டது.. பெங்களூர் சென்ற பின்பு அவ்வப்போது வந்து சென்றாலும்.. அவளை அரிதாகத் தான் பார்க்க முடிந்தது.. இப்ப எப்படி இருக்கும் என் மயிலு என யோசிக்க..

[the_ad id=”6605″]

Advertisement

     சாரதா அப்பத்தா “என்ன ராஜா யோசிக்கிற” என்கவும் அப்பாரு வாய் சும்மா இருக்காமல் “உம்பட சரவடைன்னு யோசிக்கறான் போல” என்க.. தன் மனையாளின் ‘அட கூறுகெட்ட மனுசா’ என்ற பார்வையில் அமைதியானார்.

Advertisement

      இருவரின் சண்டையைப் பார்த்து சிரித்த நந்தா “அப்பத்தா.. என் படிப்பு முடிய இன்னும் மூனு மாசம் இருக்கு.. இப்பத்தான் தீசிஸ் சப்மிட் பண்ணியிருக்கேன்.. வைவா இருக்கு.. எனக்கு இருபத்து அஞ்சு தானே ஆகுது.. அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்.. இன்னும் ரெண்டு மூனு வருஷம் போகட்டும்” என அங்கிருந்து நழுவி தன்னை ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவை நெருங்கி.. அவரோடு பேசச் சென்றுவிட்டான்.

     அன்று மகிழுக்கு விடுமுறை தினமாக இருக்க.. ரகுவைப் பார்த்துவிட்டு அப்படியே தோட்டத்து வீட்டுக்கு சென்றாள்.. சைக்கிளை நிறுத்தியவளுக்கு நாய்க்குட்டியின் சத்தம் கேட்க.. எங்கே என சுற்றும் முற்றும் தேடினாள்.

       அது அருகில் இருந்த நந்தா வீட்டின் தோட்டத்தில் இருந்து வந்தது.. சண்டைக்குப் பின்பு.. அளந்து கம்பி வேலி போடப் பட்டிருக்க.. அங்கிருந்த மாமரத்தின் கீழ் சத்தம் வந்தது.. ஒரு குட்டி ஜெர்மன் ஷெப்பர்ட் இவளைப் பார்த்துக் கத்த.. கம்பி வேலிக்குள் மெதுவாகக் கை நீட்டி அதை எடுத்தாள்.

Advertisement

       அதுவும் இவள் காலைச் சுற்றிச் சுற்றி விளையாட.. மகிழும் நேரம் போவது தெரியாமல் அதனுடன் விளையாட ஆரம்பித்தாள்.. திடீரென “சீசர்” என நந்தாவின் குரல் கேட்க.. அது இவளை மறந்து வேலியை நோக்கி ஓட.. மகிழும் அதன் பின்னால் ஓடினாள்.. அவசரத்தில் வேலியைத் தாண்ட.. அதன் குட்டி கால் கம்பியில் இருந்த முடிச்சில் மாட்டிக் கொள்ள.. கத்த ஆரம்பித்தது..

      மகிழ் எப்படி மீட்பது என தெரியாமல் தவிக்க.. இவர்களை நெருங்கி வந்த நந்தா “அதை எடுத்து விடாம என்ன வேடிக்கை பாத்துட்டு நிக்கற” என அதட்ட.. அவனைக் கண்டு கொள்ளக் கூட முடியாமல் “நான் மாட்டேன்.. நான் எடுத்து அது காலைக் கிழிச்சுருச்சுன்னா.. எனக்கு பயமாயிருக்கு” என கலங்க.. மாமரக் கிளையில் கால் வைத்து மகிழின் புறம் குதித்தவன்.. மெதுவாக சீசரை விடுவித்தான்.

       சீசர் பயத்தில் அவன் கையை நகத்தில் கீறி விட.. அதை கீழே விட்டவன் கையை உதறினான்.. மகிழ் ஓடிச் சென்று தோட்டத்தின் மூளையில் இருந்த எருக்கங் குச்சியை ஒடித்து வந்து அவன் கைக் காயத்தில் அதன் பாலை வைத்து விட்டாள்.

       அவளின் செய்கையில் நந்தா இமைக்க மறந்து அவளையே பார்த்தவாறு நின்றான்.. தொலைதூரம் விலகிச் சென்றாலும் விடாமல் துரத்திய அவனது முந்தைய பொழுதுகள் இப்போது கண் முன்னே நிழலாடியது..

       அவள் மீது கொண்டது அன்பெனவும்.. பதிமூன்று வயதுப் பெண்ணிடம் தோன்றுவது பாசம் மட்டுமே என அவனை அவனே சமாதானம் செய்து கொள்ள.. ஆனால் அதை மறுத்து நேரங்களை அவள் ஆள்வதும்.. நினைவுகளில் அவள் நீள்வதும்.. வாடிக்கையாய்ப் போயின அவனுக்கு.. பெயரில்லாத உணர்வென அவன் ஒதுக்கி வைக்க முனைய.. உயிரென அவனுள் உறைந்து போனது நேசம்.

       எண்ணிப் பார்த்து ருசிக்க.. அவன் ஒன்றும் பெரிதாக சேர்த்து வைத்திருக்கவில்லை அவள் நினைவுகளை.. ஆனால்.. அவனுக்கு அவளென்பதே போதுமானதாய் இருக்க.. அவள் நினைவுகளோடு சடுகுடு ஆடியே அவன் இரவுகள் நகர்ந்தது.

சிறுவயதில் தூக்கிக் கொண்டு அலைந்திருந்தாலும்.. இத்தனை நாட்களுக்குப் பின் அவளை இத்தனை அருகாமையில் பார்ப்பது இதுவே முதல்முறை.. ஊருக்கு வரும் போதெல்லாம் தொலைவில் இருந்து தான் பார்த்திருக்கிறான்.

       இறுதியாக அவளைப் பார்த்த போது இரட்டைப் பின்னலும்.. பாவடை சட்டையுமாக இருந்தவள்.. இப்போதும் ஸ்கர்ட், டாப்ஸ் என இருக்க.. அவள் சிறு உருவத்திற்கு அது எடுப்பாகவே இருந்தது.

       அன்றைய இரட்டைப் பின்னல்.. இன்று தலையிலேயே க்ளிப்பிற்குள் அடங்கியிருக்க.. அதில் ஒன்றிரண்டு குழற்கற்றைகள் நெற்றியிலும் கழுத்திலும் விளையாடிபடி இருக்க.. அதுவும் ரசனையாகத் தான் அவனுக்கு.. முகம் மருந்திற்கும் முதிர்வில்லாமல் இருக்க.. பருவத்தின் வனப்பெல்லாம் தனக்குள் கொண்டு இளங்கொடியாய் நின்றவளின் மீது படிந்த அவன் பார்வையில் முழுதும் ரசிப்பு.. ரசிப்பு.. ரசிப்பு மட்டுமே.. அதுவும் அவள் வலது புருவத்தின் முடிவில் இருந்த மச்சத்தை விட்டு அவனால் கண்ணைத் திருப்பவே முடியவில்லை..

ஒருவழியாக தன்னை நிதானப்படுத்தியவன் “மயிலு.. நல்லாருக்கியா” என  அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் வினவ.. அதில் தன்னிலை உணர்ந்த மகிழ்.. அவன் கையை விடுத்து அவனை அதிர்வாகப் பார்த்தாள்.

     மணியண்ணா காலையிலேயே மரத்திற்கு எல்லாம் தண்ணீர் கட்டிவிட்டுப் போயிருக்க.. நல்லவேளை ஒருவரும் இல்லை.. என நிம்மதி அடைந்தவள்.. அவனிடம் “ஒரு டிடி போட்டுக்கோங்க” என உரைத்துவிட்டு.. விலகி தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றுவிட.. அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் நந்தா.

       மகிழைப் பார்த்த மகிழ்ச்சியுடனே இருந்த நந்தாவிடம் சாரதா அப்பத்தா படிப்பு நல்லபடியாக முடிய வேண்டுதல் வைத்திருப்பதாக கூற.. அவனும் அவர் ஆசையைக் கெடுக்க விரும்பாமல் அதே மகிழ்வுடனே கிளம்பினான்.

[the_ad id=”6605″]

       அதிகாலை அனைவரும் கிளம்ப.. அப்போது தான் மகிழ் தன் அவ்வாவை மனதில் திட்டியவாறே கோலம் என்ற பெயரில் அலங்கோலம் தீட்டிக் கொண்டிருக்க.. நந்தாவின் அப்பத்தா “வயசுப்புள்ளை குனிஞ்சு கோலம் போடோனும்.. இங்க அப்படியா” என அவள் காதில் விழுமாறு வம்பிழுக்க..

       நேற்றுப் பேசியதற்கே தனத்திடம் நன்றாக வாங்கிக் கட்டியிருந்ததால் மகிழ் ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றுவிட.. ரேவதி தான் “ஏம்மா.. அவளுக்கும் உனக்கும் தான் ஏழாம் பொருத்தமாச்சே.. சின்னப்பிள்ளை கூட என்னம்மா வம்பு” எனக் கேட்க

       “யார் அவ சின்னப்பிள்ளையா.. இந்த ஊரு கூறு என்ன விலைன்னு கேப்பா.. அப்பேர்ப்பட்டவ.. அவங்க அப்பத்தா மாதிரி” என்றவரின் இறுதி வரி சற்று ஏக்கமாகவே ஒலித்தது.

        தங்கள் கணவர்களைப் போல பிறந்தது முதற்கொண்டு பழகியிருக்கா விடினும்.. சாரதாவும் அமிர்துவும் அவ்வளவு நெருக்கம்.. பண்ணாதே சேட்டைகளே இல்லை.. வாய்க்காலில் நீச்சல் கற்கச் செல்வதும் அங்கு யாராவது கேட்டால் விருந்தாளி எனச் சொல்லித் தப்பித்து வருவதும்.. தத்தமது மாமியாரிடம் மாட்டி மாத்து வாங்குவதும் என அனைத்தூலும் ஒரு ஒற்றுமை.

      அந்தக் காலத்தில் ஊரே பேசுமாம்.. ஒரே வீட்டில் கட்டிக்கொண்டு வந்தால் கூட இப்படி இருக்க மாட்டார்கள் என.. ஆனால் ஒற்றை உயிர் தன்னோடு சேர்த்து அனைத்தையும் கொண்டு சென்றுவிட்டது.

[the_ad id=”6605″]

      மகள் வாழ்க்கை பாழானது அதிர்ச்சி தான்.. அவ்வளவு ஏன் இன்னும் சொல்லப் போனால் சில நேரங்களில் உறக்கம் கூட வருவதில்லை.. ஆனால் அதற்கு யாரை நொந்து என்ன செய்ய.. ரகு மேல் தான் கோவம்.. அதற்கு இவர்களை ஒதுக்கி.. பழி ஓரிடம்.. பாவம் ஓரிடம் என்றாகிவிட்டதே என பெரியவர்கள் இருவரும் புலம்பாத நாளில்லை.

     “போலாங்க அத்தை” என்ற மருமகளின் குரலில் சிந்தை தெளிந்த சாரதா.. அவரிடம் “ஏன் சகுந்தலா பூக்கட்டி வச்சேனே.. தலையில வைக்கலையா” என வினவ.. அவரோ “அச்சோ மறந்துட்டங்கத்தை.. வந்து சாமிக்கு எடுத்துப் போடறேன்” என்றபடியே வண்டியில் தான் கொண்டு வந்த பொருட்களை வைத்தார்.

      பின்னே வந்த தன் கணவனிடம் “நாம பாத்து கட்டினாக் கூட இப்படிப் புள்ளை அமையாது.. ரேவதி மனசு ஏங்கிப் போயிரும்னு.. இவளும் அவ கூட வந்தா பூ வைக்கறதில்லை” என கனத்த குரலில் பேச.. அதைக் கேட்ட நந்தாவுக்கும் மனம் பாரமானது.

     இத்தனை நேரம் இருந்த மகிழ்ச்சி போய்.. ரேவதி அவனை விட ஆறு வயது தான் பெரியவள்.. உறவில் அத்தை என்றாலும் உணர்வில் அவனுக்கு தமக்கை தான்.. அவள் வாழ்வு இப்படி இருக்கையில் தான் ரொம்பவும் சுயநலமாக யோசிக்கிறோமோ என தோன்ற ஆரம்பித்தது.. ரகு மேல் ஆத்திரமாக வந்தது..  ஆனால் அது சென்று அடங்கிய இடம் தான் தவறாய்ப் போனது..

நாயகன் வருவான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!