Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ34-1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 34-1

 

சுழலும் சூரியக் குடும்பத்தின் கோள்களுக்கும் சரி, மின்னும் தாரகைகளுக்கும் சரி, நாளும் கிழமையும் இல்லை. ஆனால் நமக்கு அப்படியில்லையே.  வெள்ளிக் கிழமை சூரியன் இந்தியாவில் அஸ்தமனமாயிருக்க, அமெரிக்காவில் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தது.



Advertisement

 

எபெனேசருக்கு இன்று இனிய நாள் போலும். “எல்லாம் சுபம் டா மச்சான்!” என்று ஹமியிடமிருந்து நேற்றிரவே தகவல் வந்திருக்க, நிம்மதியாக உறங்கியதின் விளைவாக விடியலில் எழுந்தவன் முகத்தில் ஒட்டவைத்த மலர்ச்சி. அலர்விழி பார்த்தால் கண்டிப்பாக ஆச்சரியப்படுவாள்.

Advertisement

Advertisement

 

“எனக்கு ஒரு சத்தியம் பண்ணுவியா?” என்று அலர்விழியிடம் சத்தியம் வாங்கியிருந்தான் இரண்டு நாட்கள் முன்பு. அதன் படி அவனும் நடந்து முடிந்ததை இனி நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் ஏற்பட்ட புன்னகையாகக் கூட இருக்கலாம்.

Advertisement

 

நேற்றே பல முடிவுகளை எடுத்தவனுக்கு விழி அலுவலகம் சென்றது தோதாகப் போக, நினைத்ததை எல்லாம் செய்து முடித்திருந்தான். அதனால் இன்றைய பொழுது அவனுக்கு இனிய பொழுதே.

 

வெள்ளிக் கிழமை என்றதால் அலர்விழியும் தலை குளித்து, ஈரத்தலையோடு அடுக்களை வர, காபி கலக்கிக்கொண்டிருந்தவன், “குட் மார்னிங்க டா பட்டு” என்று மின்னல் புன்னகையை வீசி, “இந்தா” என்று ஒரு கோப்பை காபியைக் கொடுத்தான்.

 

அடுக்களை ஜன்னல் வழியே புலர்ந்து வரும் காலை அழகை, அவன் அழகியை அணைத்துக்கொண்டே ரசிக்கப் பிடித்தது.  கோப்பை காலியானப் பின்னரும் இருவரும் அதே நிலையில் நின்றிருக்க, “பட்டு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தெரியுதா?” என்றான் உச்சந்தலையில் இதழ் பதித்து.

 

“தெரியுது. ஆனா ஏன்னு தான் தெரியல” என்றவளிடம்,

 

“உன் கூடவே இருக்க போறேன் இல்ல.. அது தான்! மதியத்துக்கு எதுவும் பண்ணாத. காலையில டிஃபனுக்கு ஒரு ஸ்வீட் பண்ணு டி” என்றவனை வித்தியாசமாகப் பார்த்தாலும், “சரி மனோ” என்றவள் அது போலவே காலை உணவை முடித்தாள்.

 

மூன்று நாட்களுக்குப் பின் நிதானமாக ரசித்து ருசித்து உணவருந்துபவனை வாய் பிளந்து பெண் பார்த்தாள். “என்ன டி சைட் அடிக்கிற?” என்று பிளந்த வாய்க்குள் சர்க்கரை பொங்கலைத் திணித்தவன், “ரொம்ப டேஸ்ட் டி பட்டு. வாழ்நாள் பூர உன் கையால சாப்பிடுற பாக்கியம் எனக்கே எனக்கு” என்று கவிதை பாடினான். அவனும் உண்டு அவள் கேட்காமலே அவளுக்கும் ஆசையாய் ஊட்டி முடித்தான். மகிழ்ந்த முகம் ஒரு தொற்று நோய் போல்! அதனால், அவன் துள்ளல் அவளையும் தொற்றிக் கொண்டது.

 

“என்ன சார் ஒரே குஷி மூடுல இருக்கீங்க போல?”

 

“ம்ம்… ம்ம்… ரொம்ப. உனக்கு ஒண்ண காட்டணும் வா” என்று அவன் படுக்கும் அறைக்குள் அழைத்துச் சென்றான்.

 

“பிடிச்சிருக்கா?” கேட்டு நின்றவன் முகத்தில் எதிர்பார்ப்பு. மனம் கவரும் பொருட்களை அலர்விழிக்கு வாங்கி கொடுப்பது இது முதல் முறையில்லை என்றாலும், நேற்று வாங்கி வந்த புடவையை அவள் கையில் கொடுத்தவன் முகத்தில் அப்படி ஒரு எதிர்பார்ப்பு.

 

கையில் பட்டதுமே வழுக்கியது. அதன் மென்மையும் வழுவழுப்புமே அதன் தரத்தை எடுத்துகாட்டியது. விரித்துப் பார்த்தாள். பிடிக்காமல் போகுமா? அவன் ரசனையே தனி தான். வழு வழு சந்தன நிற பட்டு முழுவதுமே அதே நிறத்தில் நுண்ணிய வேலைப்பாடு. அங்கும் இங்குமாக மென் சிகப்பும், தளிர் பச்சையும் தலை காட்டியிருந்தது.

 

பெண்ணின் கண்கள் விரிந்தது. “வாவ் மனோ… செம்ம கிளாசி-யா இருக்கு. பியூட்டிஃபுல் செலக்ஷன். அம்மாக்கு அனுப்பவா?”

 

“நீ தான் சொல்லேன்!” செல்லம் கொஞ்சியது அவன் குரல் மட்டுமா?

 

கொஞ்சும் விழிகளைக் கண்டவள் முகம் முழுவதும் புன்னகை பூசிக் கொள்ள, “எனக்கா? ஆஆஆ.. சூப்பர் சூப்பர். செம்ம கிராண்டா இருக்கு மனோ” எம்பிக் குதிக்காத குறையோடு, “எனக்கே எனக்கா? எதுக்கு மனோ? கிறிஸ்மசுக்கா?” கேட்டவள் பார்வையும் விரல்களும் நகர மறுத்து புடவையை வருடிக் கொடுத்துக்கொண்டே இருந்தது.

 

“கட்டிட்டு வா” என்றான் ஆசை மாறாமல்.

 

“எப்படி…? பிலௌஸ் இல்லாமலா?” அவள் நமுட்டு சிரிப்பு சிரிக்க,

 

அதே சிரிப்பை அவன் சிரித்தான். “எனக்கு ஓக்கே தான் டி. இருந்தாலும் இப்போதைக்கு இந்தா” மேசையிலிருந்த உறையிலிருந்து சந்தன நூல் வேலைப்பாட்டால் நிறைந்திருந்த மென் சிகப்பு ரவிக்கையைக் கொடுத்தான்.

 

கண்கள் விரிந்தது. “வாவ் மனோ. உங்களுக்கு இணை நீங்க தான் பா. சோ ரிச் அண்ட் கிளாஸி!”

 

“கட்டிட்டி வா டி”

 

இதைக் கட்ட கசக்குமா என்ன? “இப்போவா…? என்னதான் கேஷுவல் ஃப்ரைடேனாலும் ப்ரைடல் வேர் மாதிரி இவ்வளவு கிராண்ட் சாரி எல்லாம் கட்டிட்டு ஆஃபீஸ் போக முடியாதேப்பா”

 

“லீவ் போடு. இப்போ கட்டிட்டு வா. உன்ன கோவிலுக்கு கூட்டிட்டு போறேன்.”

 

பார்வை, புடவையை கடந்து மனோ முகத்தில் நிலைத்தது. அடக்க முடியா புன்னகை விரிந்தது. “என்ன விஷயம்? சொல்றது! நான் கேக்காமலே கோவில் எல்லாம் கூட்டிட்டி போறீங்க?” சலுகையாய் அவன் தோள் சாய்ந்தாள்.

 

“நோப்! சஸ்பன்ஸ்” கன்னம் தட்டி சிரித்தான்.

 

“ம்ம்கும்!”

 

“ப்லௌஸ் ரெடிமேட் தான். பத்துமில்ல…”

 

“தெரிஞ்சுகிட்டே தெரியாத மாதிரி கேக்கிறது. எதுக்கு புதுசு மனோ? எங்க போறோம்?”

 

“ஃபங்ஷன் டி பட்டு” என்றான், சிரிப்பு குறையாமல்.

 

“பெரிய இடமோ? ஆமா யார் வீட்டு ஃபங்ஷனுக்கு எனக்கு ஜாக்பாட்? கோவிலுக்கு போயிட்டு போறோமா?”

 

“கேள்வி மேல கேள்வி! போடி… போடி! போய் கட்டிட்டி வா. இப்பிடியே நின்னுட்டு இருந்தா நானே எனக்கு தெரிஞ்ச மாதிரி கட்டி விடுவேன்.”

 

“எப்போ வருவோம்? பாதி நாளுக்கு மட்டும் லீவ் போடவா?”

 

“நாலு நாள் லீவ் போடு விழி. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். மூணு நாள் எங்கேயாது போயிட்டு வருவோம்”

 

“இப்பிடி சும்மா சும்மா லீவ் போட்டா, ரிசைன் பண்ண வேண்டாம்! அவனே என்னை வேலையை விட்டுத் தூக்கிடுவான்!” முனகிக் கொண்டே உள் சென்றாள்.

 

நேரம் சென்றது. “கிளம்பியாச்சா? உள்ள வரவா?” கதவைத் தட்டிக் கொண்டு படுக்கையறை வாசலில் நின்றிருந்தவனும் புது உடையில் மிடுக்காகக் கிளம்பி நின்றிருந்தான்.

 

அவள் ‘ம்ம்ம்’மில் உள்ளே சென்றவன் கையில் மலர்ச் சரமும், நகை டப்பா ஒன்றும். “என்ன பா அசத்துறீங்க? உள்ள என்ன?” கேள்வியோடு வாங்கியவள் முகத்தில் அடங்கா பூரிப்பு!

 

“ஓ மை காட் மனோ…! வாவ். கண்ண பறிக்குதே மனோ…” நகைப் பெட்டியை ஓரம் வைத்து கழுத்தோடு கட்டி கன்னத்தில் இதழ் பதித்தவளுக்குப் பூரிப்பு அடங்க மறுத்தது.

 

“இவ்வளவு தானா டி?”

 

“இன்னும் நிரைய தரேன். அதுக்கு முன்ன, எதுக்கு இப்போ? சொல்லுங்க சொல்லுங்க!” இம்முறை அடக்க முடியாமல் எம்பிக் குதிக்க ஆரம்பித்தாள்.

 

“பிடிச்சிருக்கா சொல்லு?” அவன் கண்களிலும் அதே அடங்க மறுத்த பூரிப்பு.

 

அந்த பெரிய  பட்டை தீட்டப்பட்ட இளம் சிவப்பு செவ்வக மாணிக்க கம்மலை கையில் எடுத்து வெளிச்சத்தில் ஆட்டிப்பார்த்துக் கொண்டிருந்தவள் முகம்,  அதிலிருந்த வைரத்தைக் காட்டிலும் பளபளத்தது. “என்னைப் பார்த்தா எப்பிடி தோணுதாம்?” கொஞ்சலாய் மொழிந்தாள்.

 

“எப்படி எல்லாமோ தோணுது டி” குழைவாய் கூறி சிரித்தவன், “போட்டு விடவா?” என்று நகை டப்பாவை கையில் எடுத்தான்.

 

“ம்ம் ம்ம்ம்… ஏன் மனோ நாலு நாள் முன்ன தானே மோதிரம் செயின் எல்லாம் வாங்கினீங்க. இப்போ எதுக்கு இவ்வளவும்?”

 

“அழகா இருக்கா?”

 

கடல் இளம் பச்சை நிற சின்ன சின்ன மரகதப் பச்சை மணிகள் பூட்டிய கொத்து சரங்கள் நடுவே அழகிற்கு பஞ்சமில்லாத பெரிய செவ்வக இளம் சிவப்பு மாணிக்கத்தைச் சுற்றி வைரம் பதித்த முகப்பு! கழுத்து குழியில் விழுந்து இளைப்பாறும் அணிகலன் அவள் கண்களைப் பறிக்க, அவன் ஆசை பார்வை முழுவதும் அதை அணிந்திருந்தவள் மேல்.

 

“என்னோட அழகி டி நீ! என்ன போட்டாலும் உனக்கு அழகு” கன்னம் பற்றி நெற்றியில் முத்தமிட்டவன், “நேரமாச்கு சட்டுன்னு கிளம்புவோம். கம்மலைப் போட்டுக்கோ…” கூறிக் கொண்டே நின்றிருந்தவள் முன் ஒற்றை முழங்காலில் மண்டியிட்டு கொசுவ மடிப்பை அடுக்க ஆரம்பித்தான்.

 

நீ கேட்கக் காத்து கிடக்கும் செய்தியைச் சுமந்து வந்துள்ளேன் என்று கூறும் வண்ணம் ‘டிங்!’ என்று ஒலி எழுப்பியது அவன் கைப்பேசி. இருந்த வாக்கிலேயே கைப்பேசியை எடுத்து பார்த்தவன் இதழில் கீற்றாய் ஒரு புன்னகை. அவன் வலியைக் கடத்த முடியவில்லை என்றாலும், நிரந்தர வலியை ஒருவனுக்குக் கொடுத்த நிம்மதி.

 

‘என்ஜாய் தி எக்ஸ்பீரியன்ஸ்! நௌ அண்ட் ஃபார்-எவர்!! (Enjoy the experience! now and forever!!) – மனோ’ என்ற வாசக அட்டையைத் தாங்கியிருந்த மலர்க்கொத்து சென்னையிலிருந்த மருத்துவமனையில் அசைய முடியாமல் படுத்துகிடப்பவன் பார்வைக்குச் சென்று விட்டதால் ஏற்பட்ட மந்தகாச புன்னகை அது.

“மனோ… அப்பிடி என்ன சந்தோஷமான மெசேஜ்? சொன்னா நானும் சந்தோஷ படுவேனே”

 

சிரித்தவன், பெண்ணை இழுத்து மடித்திருந்த கால் தொடையில் அமரவைத்து இதழைக் கன்னத்தோடு உரசி, “இது லைப் டைம் மெம்மோரி! ஸ்மைல்” என்று கைப்பேசியில் அந்த இனிய தருணத்தை அடக்கிக் கொண்டான். அவன் துள்ளலெல்லாம் அவளுக்குள்ளும் கடந்து போக, இருவர் முகமும் மகிழ்ச்சியில் வசீகரித்தது உண்மை.

 

அவளுக்கு பிடித்த சிகப்பு ரோஜா-இதழ் மலர்ச் சரத்தை அவள் கூறிய வண்ணம் மனோ சூட்டிவிட, எதிரே இருந்த நிலைக்கண்ணாடியில் அவள் முகம் காட்டிய உணர்வைப் பார்த்தவன், “என்ன டி நெளியற?” என்று தன்புறம் பெண்ணை திருப்பினான்.

 

“உடம்பெல்லாம் ஹாட்டா ஃபீல் ஆகுது மனோ. கொஞ்ச நேரமாவே அடிவயிறு இழுத்து பிடிக்குது”

 

“டேட்டா? கோவில் போக முடியாதா டி?”

 

“இல்லப்பா! அதுக்கு இன்னும் பதினைஞ்சு நாள் இருக்கு”

 

“அப்போ சூடா இருக்கும். வெந்தயம், மோர் எடுத்திட்டு வரேன்! முழுங்கிட்டு பத்து நிமிஷம் கண்ண மூடி ரெஸ்ட் எடு”

 

“ம்ம்…”

 

பத்து நிமிடங்கள் நீண்டு அரை மணி நேரம் முடிய, ஒருவழியாகக் கிளம்பி மின்தூக்கியில் சென்று கொண்டிருந்தவள், “எங்க போறோம்? சொல்லுங்க சொல்லுங்க…” என மீண்டும் ஆரம்பித்தாள்.

 

“கண்ண மூடிட்டு கடல்ல குதின்னு சொல்ல கூட்டிட்டு போறேன்… குதிப்பியா?”

 

“இப்பிடி அலங்காரம் பண்ணிக்கிட்டா?” கிளுக்கி சிரிக்க,

 

“சொல்லு டி! குதின்னு சொல்ல போறேன். உன் பதில் என்ன?”

 

அவனையே பார்த்தாள். பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தே அவள் பதிலுக்காகக் காத்து நின்றான்.

 

“எப்போ? எந்த கடல்ல… மனோ…?” என்றவளை அணைத்துக் கொண்டவன், “லவ் யூ விழி” என்றான்.

 

காதல் என்றால் என்ன? காதலின் எல்லை தான் என்ன? இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில்! மனோவிற்கு விழியும்! விழிக்கு மனோவும்!

 

உலகத்தை பார்த்துவிடும் நோக்கத்தோடு சின்னஞ்சிறு தலையை நசுக்கி கால்களால் நீரை உந்தி தள்ளி, உடலை நெளித்து சின்ன துவரம் வழி பிரசவத்தில் வெளிவரத் துடிக்கும் குழந்தைக்கு, அது கடினமான வேலை என்றாலும், தாய்க்கு அதைவிடக் கடினம். உயிரோடு இருக்கையிலேயே, வலிக்க வலிக்கக் கிழிந்து போகும் சதையையும், செத்துப் போகலாம் என்று மரணத்தை ஏக்கத்தோடு அழைக்குமளவு இடுப்பு வேதனையையும் கொடுத்து வெளிவரும் குழந்தையை, சொட்டு வெறுப்பின்றி கண்ணீர் வழிய வாரி அணைக்கும் தாயின் இந்த நிமிட பேரன்பிற்கு எப்படி எல்லையைக் கொடுக்க முடிவதில்லையோ அப்படி தான் சிலர் காதலும்! எல்லையில்லாதது! உயிரையும் கொடுக்க துணிந்தது.

 

பிரச்சனை என்னவென்றால் அந்த காவிய காதல்கள் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை! அந்த காவிய காதலை ருசி பார்க்க லைலா-மஜுனு, அம்பிகாபதி-அமராவதி, ரோமியோ-ஜூலியட் என்று எவரும் உயிரோடு இருக்கவில்லை! கண்ணீரில் முடிந்தால் மட்டுமே அது காவிய காதல்!  காவியங்களில் கண்ணீர் விடவைக்கும் காதல், வீட்டிற்குள் நுழையும் வேளை வரவேற்கப்படுவதில்லை என்பது அப்பட்டமான உண்மை. அதற்கு மனோவும் விழியும் விதிவிலக்கில்லை என்பதை இருவருமே அறிந்திருப்பது வரமா? சாபமா?

 

கோவில் வளாகத்தில் இன்ஃபினிட்டி நின்றது. மார்க்-ஆட்ரே, மார்கரீட்டா, இலக்கியா, பாயல், லீ என்று ஒரு கூட்டமே இவர்களுக்காகக் காத்திருக்கப் பெண்ணின் புன்னகை நீண்டது. புரிந்தும் புரியாமலும்… உணர்ந்தும் உணராமலும் ஒரு செய்தி. அருகே நடப்பவன் உள்ளங்கைக்குள் கையை அடக்கிக் கொண்டாள், என் விருப்பும் வெறுப்பும் உன்னைத் தாண்டாது என்பது போல்.

 

அவன் திரும்பிப் பார்க்க, கண்கள் அவனுக்குச் சம்மதம் தெரிவித்ததா? இல்லை அதில் தன்னை தேடியதா தெரியவில்லை. ஆனால் மெலிதான நீர் படர்ந்து மறைந்தது.

 

“என்ன டி?”

 

“லவ் யூ மனோவா எபெனேசர்” என்றவள் உள்ளம் நெகிழ்ந்து போயிருந்தது.

 

அவர்களோடு அவர்கள் நண்பர்கள் பட்டாளும் அமைதியாய் நின்றிருக்க, கண்மூடி வேண்டி நின்றவள் கண் திறக்கும் வரை காத்திருந்தவன் இம்முறை சத்தியங்களை அவிழ்த்துவிடவில்லை.

 

“மூச்சு காத்து இருக்கவரை உனக்கு உண்மையா இருப்பேன். இதே காதலோட, கணவன் மனைவியா வாழ்க்கையை ஆரம்பிப்போமா?” என்று அலுங்காமல் குலுங்காமல் கேட்டு நிற்பவனை மூச்சடைக்கப் பார்த்து நின்றாள்.

 

ஏதோ ஒரு ஓரத்தில் சற்று முன் எதிர்பார்த்தாள் தான். இருந்தும்… இருந்தும் எங்கோ ஒரு ஓரம் இடித்தது. இருவருக்கும் குடும்பமா இல்லை. இவள் வீட்டில் மறுத்தாலும், எபி வீட்டு நிலையே வேறாயிற்றே. ஒற்றை மகன்! எஸ்தர்-பால்ராஜின் மூச்சே அவர்கள் மகன் தான். அவன் விருப்பு வெறுப்பிற்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்கும் பெற்றோர் ஆசீர்வாதம் கூட வேண்டாமா?

 

“அம்மா அப்பா… அத்தை மாமா?” சத்தம் வருவேனா என்று தொண்டைக் குழியில் மாட்டி நின்றது. சண்டையிட்டு… பிடிவாதம் பிடித்தாலாவது பெற்றோரின் ஆசியோடு திருமணம் செய்துகொள்ள வேண்டாமா?

 

சட்டைப் பையிலிருந்து தாலிக் கொடி எடுத்தான். “ஊர்ல போய் எல்லார் முன்னாலேயும் சட்டப்படி ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம். இப்போ கட்டவா. என் மனைவியா காலம் பூரா? உன் புருஷனா என்னை வாழ்நாள் பூரா சகிச்சுகிட்டு இருக்க ரெடியா?” கண்களில் உயிரைத் தேக்கி கண்பார்த்து நின்றிருந்தான். அவன் கேட்டு நிற்கவேண்டிய அவசியம் இல்லை. அவன் கட்டினாலும் வேண்டாமென்று அவள் கூறப்போவதில்லை இருந்தும் அவளின் ஒற்றை தலை அசைவிற்காக காத்திருந்தான், நல்ல ஆண்மகனாய்.

 

மனோவா ஒரு முழு கிறிஸ்தவன். இன்று வரை இருவருமே மதத்தை மாற்றிக் கொள்வது பற்றி எண்ணவில்லை என்றாலும், ஹிந்து கோவிலில் ஒரு திருமணத்தை அலர்விழி அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவள் விருப்பத்தை மட்டுமே மனதில் கொண்டு, அவனுடைய எல்லா நம்பிக்கையையும் புறம் தள்ளி, தாலியோடு கோவிலில் நிற்பவனிடம் அபசகுனமாக பேச மனமில்லை.

 

மெல்ல புன்னகைத்தாள். “உங்களுக்கு என்னை கட்டிகிட்டு வாழ்நாள் பூரா மாரடிக்க சம்மதம்ன்னா… நான் முழுசா உங்களுக்கு” என்றவள் தலையை அவனுக்கு வாக்காகச் சாய்க்க, “உன் அம்மா அப்பாட்ட ஒரு வார்த்த சொல்லணும்ன்னாலோ கேக்கணும்னாலோ கேட்டுடு விழி” என்றான்.

 

கேட்க முட்டி நின்ற ஆசையைப் புதைத்தாள். அபசகுன வார்த்தை யார் வாயிலிருந்து வந்தாலும் ஒன்று தான் என்று தோன்றியது. காரணமில்லாமல் மனோ அவசரப்பட அவசியம் இல்லையே. மூன்று நாள் முன் நடந்த விபத்து தான் காரணம் என்று சரியாக யோசித்தாள். இன்று தான் அவன் முகத்தில் நிம்மதியும் தெளிவும். கெடுக்க மனமில்லை. இரண்டு நாட்கள் முன் வீட்டில் பேசியபின், என்றானாலும் இது தான் அவர்கள் நிலை என்று அவளுக்கும் தெரியாதா?

 

“உங்க மனைவியா, பொறுமையா சொல்லிக்கலாம் மனோ” என்றவளின் நீள நயனத்தைப் பார்த்துக் கொண்டே அலர்விழி கழுத்தில் தங்க தாலிக்கொடியைப் பூட்டினான். இதோ இதே விழிகளில் தானே தன்னை முற்றிலும் தொலைத்தான். இன்றும் அதே கருவிழிகளுக்குள் அவன் தான் தெரிந்தான். அவன் மட்டும் தான்!

 

ஐயரில்லை, மந்திரமில்லை, கோவில் திருமணத்தை நடத்தவுமில்லை! போதகர் இல்லை, வசனங்கள் போதிக்கப்படவில்லை, திருச்சபை அவர்கள் திருமணத்தை அங்கீகரிக்கப் போவதும் இல்லை! மேளமில்லை. சொந்தமில்லை. அட்சதை இல்லை. பெற்று, உயிரைக் கொடுத்து ஆசையாய் வளர்த்த பெற்றவர்கள் இல்லை வாழ்த்த! இப்படி ஆயிரம் இல்லைகளுக்கு இடையே நடக்கும்   திருமணத்தை இருவருமே விரும்பவில்லை என்றாலும் மனதார விரும்பி முழு நிறைவோடே மணவாழ்க்கைக்குள் புகுந்தனர்.

 

கோவில் தான். நிச்சயம் அது திருமணம் தான். சுற்றி நின்று பார்த்தவர்கள் சாட்சிகள் தான்! ஆனால் இந்திய சட்டத்திற்கு அது போதாது! இருவருக்குமே தெரியும். இருந்தும் அதுவே போதுமானதாக இருந்தது இருவருக்கும்.

 

அலர்விழியின் வலது கைப்பிடித்து அவன் பெயர் பொரிக்கப்பெற்ற மோதிரத்தை அணிவித்தான். அவனுக்கு அணிவிக்க வேண்டியதை வாங்கினாள் கரத்தில். ‘விழி’ என்று வெளியே பொரித்திருக்க, உள்ளே ‘Till death do us part VM’ என்றிருந்தது. அடக்கமுடியா உணர்வுகள் மனதை ஏதோ செய்தது. பிடித்திருக்கும் விரலுக்கு சொந்தக்காரன் இனி காதலன் இல்லை! அவள் உயிர் கணவன். கணவனோடு முடிவில்லா பயணத்திற்குத் தயார் என்று இறுக பிடித்து கொண்டாள்.

 

“நான் தவமிருக்காமலே கிடைச்ச வரம் மனோ நீங்க. இங்க இருக்க சாமி சத்தியமா, உன் உயிர் இந்த உடம்பில இருக்க வரை நான் உங்களுக்கு உண்மையான மனைவியா இருப்பேன்” குரல் கரகரக்க நெகிழ்ச்சியோடே கூறிக்கொண்டே மோதிரத்தை அவனுக்கு அணிவித்தவள் உள்ளமும் நிறைந்தே இருந்தது.

 

சிலர், இப்படி தான் வாழவேண்டும் என்று சில கொள்கைகளை வைத்திருப்பார்கள். அப்படிப் பட்ட ஆட்கள் தான் மனோ, விழி. இன்று அவர்கள் கோட்பாடுகள் அவர்கள் காதலை முன்னிட்டு கரைந்திருந்தது.

 

வா வா கண்ணே, என் தேடலின் திசையே

நீ வா வா புது பயணம் செல்வோம்

என் இசை நீயே, உன் கவிதை நானே

இருவரும் இணைந்தே புது பாடல் செய்வோம்

என் இசை நீயே, உன் கவிதை நானே

முடிவில்லா முதற்காதல் செய்வோம் வருவாய் நீயே

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!