Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ34-2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 34-2

சென்னை:



Advertisement

பரபரப்பாக இயங்கும் மருத்துவமனையில் நேரத்திற்கு உண்ணக் கூட நேரம் கிடைக்காமல் கால்களில் சக்கரமின்றி பறப்பவன், அதே கால்களை அசைக்க வழியில்லாமல் படுத்து கிடப்பது கொடுமை. அந்த கொடுமையை அனுபவித்துக் கொண்டிருப்பது நரம்பியல் அறுவைச் சிகிச்சை மருத்துவன் பிரவீன்குமார்.

 

Advertisement

படுத்து கிடப்பது கொடுமை என்றால், அடிப்பட்ட இடம், அதற்கு வீட்டினரின் பரிதாப பார்வை, சிலரின் குற்ற பார்வை, பெண் மருத்துவர்களின் ஏளனப் பார்வை என்று ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை நினைத்து, முகத்தில் காட்டிய உணர்வு அவனை உயிரோடே கொன்றது.

Advertisement

 

அவனை பார்க்க வந்த அந்த இளம் பெண் மருத்துவரின் அடக்கமுடியாத சிரிப்பு? அதை மென்று விழுங்கி அவள் கனைத்துக் கொண்டே ‘ச்சு ச்சு!’ என்று உச்சுகொட்டியது? அவன் நேரில் நிற்க திராணியில்லாதவன் எல்லாம் அவனை மதிக்காத பார்வை பார்ப்பது? “கண்டிப்பா ட்ரீட்மென்ட் இருக்கும் டாக்டர்” என்ற சக ஆண் மருத்துவர்களின் ஆறுதல்…? அவனால் சத்தியமாக முடியவில்லை.

Advertisement

 

“என்ன பிரவீன்?” என்று வந்து போவோரின் பார்வை நேரே இடுப்புக்குச் செல்ல, போர்வைக்கு மேல் தான் என்றாலும், அவர்கள் முன் நிர்வாணமாய் கிடப்பது போன்ற அசிங்கமான உணர்வு. அவன் யார்? அவன் உயரம் என்ன? அவனைப் பார்க்கும் பார்வையா இது? வாழ்வில் இப்பிடி ஒரு அவமானத்தை அவன் அறிந்ததே இல்லை. இத்தனைக்கும் காட்டுத்தீயாய் விஷயம் பரவவில்லைதான்.

 

“எங்கேயோ போய் வாலாட்டியிருப்பார் போல நம்ம ஒழுக்க சிகாமணி…! ஆக்சிடென்டாம் சொல்லிக்கிறாங்க. உடம்பில சின்ன சிராய்ப்பு கூட இல்லாம அது என்ன ஆக்சிடென்டோ? செஞ்சவன் வச்சு செஞ்சிருக்கான் டி. என்ன காண்டோ அவனுக்கு, ‘அது’ சோலிய முடிச்சு அனுப்பிட்டான். பாவம் மனுஷனுக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல டி! இவர் எழுந்தாலும்… இனி அது… ஹ ஹ ஹா” மயக்கம் தெளியும் வேளை, அவன் கேட்ட முதல் வரியே இது தான். கூடவே ஒரு அடக்கமுடியா கேலி சிரிப்பும்!

 

ஒருவர் வேதனை எப்பொழுது மற்றவர் பார்வைக்கு ஏளனமாக மாறுகிறது? இந்த நிலைக்கு எப்படி வந்தான்? யோசித்தான் இல்லை.

 

புதன் நள்ளிரவு, ஓர் அறுவை சிகிச்சை முடித்து இவன் மருத்துவமனை விட்டு வெளியே வர, அந்த அரவமற்ற இரவில் எங்கிருந்து தான் இருசக்கர வாகனம் ஒன்று வந்ததோ தெரியவில்லை. சுதாரிக்கும் முன் இவன் காரின் முன்னால் கீழே விழுந்தவனை, காண மகிழுந்திலிருந்து இறங்கும் போது கூட இவனுக்காக வலை விரிக்கப்பட்டிருந்தது தெரியவில்லை.

 

ஹெல்மட் போட்டிருந்த மூவரில் ஒருவன் அடித்தது நேரே அடிவயிற்றுக்குக்  கீழே மட்டும் தான். ஒருவார்த்தை ஒருவனும் பேசவில்லை. எதை வைத்து அடித்தானோ? முதல் அடியிலேயே உயிர் கண்முன் வந்து போனது. அடுத்தடுத்த அடியை கைக்கொண்டு தடுக்கக் கூட விடவில்லை மற்ற இருவரும். எப்பொழுது மயங்கினானோ தெரியாது. மயக்கம் தெளிந்த பின்னும் இடுப்பை அசைக்க முடியவில்லை. அவன் வேலை செய்யும் மருத்துவமனை அருகில் விபத்து நடந்திருக்க, அனாதையாகக் கிடந்த அவனை இங்கு தான் தூக்கி வந்திருந்தனர்.

 

வெள்ளிக்கிழமை காலை தனியறைக்கு வந்தான். உயிர்ச் சேதமில்லை. உடலில் மற்ற இடங்களில் அடி படவில்லை. வலி நிவாரணியின் காரணமாக இடுப்பு மரத்திருந்தாலும், உயிர் வரை வலித்தது. போலீசிடம் போக மறுத்துவிட்டான். அவர்கள் கேட்கும் கேள்விகள் எந்த கோணத்தில் இருக்கும் என்று தெரியாதவனா என்ன?

 

 

அவனுக்கு தெரியவில்லை யாருக்கு அவன் மீது விரோதம் என்று? இதுவரை ஒருவருக்கும் சின்ன தீங்கு கூட நினைத்திராதவனுக்கு ஏன் இந்த தண்டனை புரியவில்லை. சென்னையில் அவன் மேல் யாருக்கு இவ்வளவு கோபம்? மூளையைக் கசக்கி பிழிந்தாயிற்று! ‘ஏன்? யாரால்?’ என்று தான் புரியவில்லை. தனியே படுத்திருந்தவன் அறைக்குள் அமிராமி நுழைந்தார்.

 

“முழுச்சிட்டியா குமாரு? கொஞ்சம் ஜூஸ் குடிக்கிறியா தம்பி?” அம்மா கேட்டார். மகன் எதிர்காலம் என்னாவது என்ற வலி அவர் முகத்தில். தங்கையை தவிர குடும்பத்தில் யாரிடமும் விடயம் பகிரப்படவில்லை.

 

“வேண்டாம்”

 

“போலீஸ்ட்ட போவோம் குமாரு. வேணும்ன்னே பண்ணி இருக்கானுங்க. ஏன், எதுக்கு, யாருன்னு தெரிய வேண்டாமா?”

 

“ஏன் உயிரை எடுக்கறீங்க. போங்க இங்க இருந்து!” எரிந்து விழுந்தான்.

 

“பெத்த வயிறு பத்தி எரியுது. உனக்கு புரியமாட்டேங்குதே. உயிர் போயிருந்தா?” அவர் மீண்டும் அவர் புலம்பலை ஆரம்பிக்க, நொந்துபோனான். காலையிலிருந்தே இதே புராணம் தான்!

 

“ஏன் குமாரு உன்ன போய்? யாருக்கும் ஒரு தீங்கு நினைக்க மாட்டியே தம்பி..”

 

“அம்மா… அவனுங்க ஆள் மாறி அடிச்சுட்டானுங்கன்னு சொல்றேன் இல்ல…”

 

“எதுக்கும் போலீஸ்ட்ட போவோம் டா..”

 

“அதோட ஏன் நிறுத்திகிட்டு? சோஷியல் மீடியால ஃபோட்டோவோட நியூஸ் கொடுத்திடுவோமே?”

 

“ஏன் டா எரிஞ்சு விழற? படக்கூடாத இடத்தில பட்டுட்டு வந்து கிடக்கிற? நான் பேரன் பேத்திக்கு எங்க டா போவேன்? நாளைக்குப் பின்ன அந்த அலர்விழி பொண்ணு கூட உன்ன வேணாம் சொன்னா?” அவர் ஒரு மூச்சுக்கு அழ,

 

“அம்மா, என்னை டென்ஷன் பண்ணாம இங்க இருந்து கிளம்புங்க” என்றுவிட்டான்.

 

‘அலர்விழி? வேண்டாம் என்று அவளால் கூறத் தான் முடியுமா? செவ்வாய் காலை விழித்ததும் அவள் நிலையைப் பார்த்தவள் தன்னை தேடியிருப்பாளோ? நிர்க்கதியாக்க நின்றவள் உணர்ந்திருப்பாளே அவளுக்கானவன் தான் தான் என்று! இனி அவளுக்குத் தன்னை விட்டால் போக்கிடம் ஏது? அந்த எபியிடம் அலர்விழி என்ன கூறி பிரிந்திருப்பாள்? கண்டிப்பாக அவள் கற்பு போனதைக் கூறியிருக்க மாட்டாள்! எதைக் கூறியிருந்தாலும், சண்டையிட்டுப் போனவன் அவள் வாழ்விலிருந்து ஒரேயடியாகப் போயிருப்பான்.’

 

உள்ளே வந்த செவிலி மருந்து கொடுத்தாள். “வலி எதுவும் இருக்கா டாக்டர். ஏதாவது வேணுமா?” என்று போர்வையில் கைவைக்க, “என்னைக் கொஞ்சம் தனியா விடுங்க” என்றவனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

 

இவன் மயங்கிக் கிடக்க, கூடவே வேலை செய்யும் எத்தனை கண்கள் அவனை அந்த நிலையில் நோக்கியதோ? ‘நிர்வாணம்’ என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் வலி தானே! அம்மா கூறியது போல் இனி அதன் நிலை அவ்வளவு தானா? தெரியவில்லை. குணமான பின் தெரியும். எழுந்து நடமாடும் வரை அவமானம்… அதன் பின்னும் இங்கு வேலையை தொடரமுடியுமா? முடியும் என்று தோன்றவில்லை! ஏன் நான்? தலை வலித்தது. யோசிக்கப் பிடிக்காமல் தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்ப்பித்தான்.

 

செந்தில் பரட்டை தலையோடு நின்றிருந்தார். அவர் அருகிலிருந்த திண்டில் கவுண்டமணி பெட்ரோமாஸ் விளக்கை துடைத்துக் கொண்டிருந்தார்.

 

அதி மேதாவியாகிய செந்திலுக்குச் சந்தேகம். “இந்த பெட்ரோமாஸ் லைட் எப்பிடி ண்ணே எரியுது?” என்று கவுண்டமணியிடம் கேட்டார்.

 

அறைக்குள் நுழைந்த அம்பிகா, “உனக்கு தான் டா” என்று மேசை மேல் பூ கொத்து கூடையை வைத்து அதிலிருந்த உறையை அவனிடம் கொடுத்தார். தொலைக்காட்சியை இடைநிறுத்தம் செய்தான்.

 

‘கெட் வெல் சூன்’ (Get well soon) என்ற வாசகத்தை எதிர்பார்த்து அவன் உறையிலிருந்து அட்டையை வெளியே எடுக்க, ‘என்ஜாய் தி எக்ஸ்பீரியன்ஸ்! நௌ அண்ட் ஃபார்-எவர்!! – மனோ’ என்றிருந்தது. பற்களை கடித்தவன் கோபமும் எரிச்சலும் அவன் கண்களை நீரால் நிறைத்தது.

 

 

எபியிடம் கூறும் அளவிற்கு இருவருக்கும் நெருக்கம் கூடிவிட்டதோ! எபியை தவறாக கணக்கு போட்டுவிட்டானோ? பொறிக்கிக்கு அலர்விழியின் கற்பு பெரிய விஷயமாகத் தெரியவில்லை போலும். அவளை விட மாட்டானா? அவன் என்ன விடுவது?

 

அன்று இவனிடம் ‘மனோ மட்டும் தான் தனக்கு’ என்று கூறாமல் இருந்திருந்தால், அரை மயக்கத்திலும் ‘மனோ’ என்ற பெயரை உச்சரிக்காமலிருந்திருந்தால், அவளிடம் நெருங்கியிருக்க மாட்டானே. அன்றும் தவறு அவள் மேல் இருக்க, இன்றும் தவறிழைத்தது அவள் தானே. தவறிழைத்தவளை சும்மா விட முடியாதே… அலர்விழி! பற்கள் நரநரத்தது.

 

 

தொலைக்காட்சி பெட்டியை அம்பிகா ஓடவிட்டார். பெட்டியில், ஆளின்னாள் அழகு ராஜா பதில் கொடுத்தார், செந்திலின் கேள்விக்கு. விளக்கைக் காட்டி விளக்கினார்.

 

 

“அடேய் கோமுட்டி தலையா… இது பேரு தான் கப்பு. இதுக்கு மேல கோழி முட்ட மாதரி இருக்குது பாரு மேண்டில். இதுல தான் பளீளீளீளீ…ர்ன்னு வெளிச்சம் வரது”

 

 

“இதுல எப்பிடி அண்ணே எரியும்? போங்கண்ணே…” என்று செந்தில் சட்டென்று அந்த அந்த வெள்ளை முட்டை வடிவத்தை ‘பசக்’ என்று நசுக்க, மேண்டில் பொடிந்து விழுந்தது.

 

மனோ இவன் ஃப்யூஸ்(fuse)-சை பசக் என்று நசுக்கிய உணர்வு!

 

“ஹ ஹ ஹா… செம்ம காமடி இல்ல…” என்று வாய்விட்டு அம்பிக்கா சிரிக்க, எல்லாம் விளங்கியவனுக்கோ சீற்றம் எல்லையைத் தொட, “சித்தி!” அவன் கோபம் அத்தனையும் சித்தி மேல் திரும்பியது.

 

“நீ போட்டிருந்த காமெடிக்கு தானே சிரிச்சேன். அதுக்கு போய் கோப படுறியே!”

 

“உங்க மகன ஒருத்தன் அடிச்சு போட்டிருக்கான் உங்களுக்கு எப்பிடி சித்தி சிரிக்க முடியுது? நீங்க சித்தி தானே அதனாலயா?”

 

“பிரவீன்!”

 

சித்தியை முறைத்தவன் கண்கள் குளம் கட்ட, தாயாய் அம்பிகா துடித்துப் போனார்.

 

“டேய் கண்ணா… ரொம்ப வலிக்குதா டா பிரவீன். சரியாகிடும். எவ்வளவு செலவானாலும் சரி பண்ணிடலாம் டா” வயிற்றோடு மகன் முகத்தை அணைத்துக்கொள்ள வயிற்றைத் தொட்ட ஈரம் அவர் ஈரக்கொலை வரை சென்றது.

 

“சித்தி..” அவன் கண்கள் கசிய, அவர் உள்ளம் உருகியது. பிறந்த அன்றிலிருந்தே அவர் நேரம் முழுவதும் அவனோடு தான். அவனுக்கும் அப்படி தான். சித்தி என்பது வெறும் அழைப்பு மட்டுமே ஒழிய அம்பிகா தான் அவன் தோழி, தாய், அவன் எல்லாம்.

 

அவன் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர் அவர் மட்டும் தான் என்றாலும், அவரிடம் கூட உண்மையை உரைக்க முடியவில்லை. அந்த இயலாமை அவனுக்கு வலித்திருக்க வேண்டும். தன் தவற்றைச் சுட்டி காட்டியிருக்க வேண்டும். ஆனால் அவன் ஆணவம் சீண்ட பாட்டிருக்க, அவன் ஆண்மை என்ற கர்வம் அசைக்கப்பட்டிருக்க, வன்மம் மட்டுமே தலை தூக்கியது. முன் எப்படியோ… இதற்குக் காரணமான எபியும், அலர்விழியும் இதற்குப் பதில் கூற வேண்டாமா?

 

“சொல்லுடாமா… டாக்டர கூப்பிடவா?” மகன் முகம் துடைத்து, தலை வருட, சரியான இடத்தில் சென்று நின்றான்.

 

“அலர்விழி வீட்டுல கல்யாணத்தை வேண்டாம் சொல்லிடுங்க சித்தி” என்றான்.

 

“அவசர படாத பிரவீன்… சரி ஆகிடும் டா!”

 

“சரி ஆனாலும்… அவங்க வீட்டுல இப்படி அடிபட்டதை மறைக்க முடியுமா? இத சொன்ன பிறகு அவங்களா கல்யாணத்தை நிறுத்திறதுக்கு முன்ன நாமளே நிறுத்தினா மானமாது மிஞ்சும் சித்தி!”

 

“அவ உன் மேல உயிரே வச்சிருக்காளே டா. நீ எப்படி அவளுக்கும் சேத்து முடிவு எடுப்ப? அவ இல்லாம கல்யாண வாழ்க்கையே இல்லன்னு சொன்ன உன்னால எப்பிடி பிரவீன் இப்பிடி யோசிக்க முடியுது?”

 

“அவ.. அவளுக்கு நான் வேண்டாம் சித்தி”, மகன் முகம் பார்த்தவர், அவனை எப்படியேனும் தேற்றிவிட முடியாதா என்று துடித்தார்.

 

“பிரவீன்… கண்ணா, மருத்துவ வளர்ச்சி தெரிஞ்ச நீயே இப்பிடி பேசலாமா? அங்க என்ன வெள்ளிக்கிழம தானே… அவளுக்கு விடிஞ்சிருக்குமே டா, பேசறியா?”

 

“ம்ம்ஹூம்”

 

“பேசு டா… நான் ஃபோன் போடவா?”

 

“அவ என்ட்ட பேச மாட்டா சித்தி”

 

“ஏன் டா… என்ன ஆச்சு?”

 

“அது.. அது வந்து..”

 

“சொல்லு மா…”

 

“அது, வந்து, அவள தப்பா நினைக்கக் கூடாது”

 

“இல்ல. நினைக்கல. என்ட்ட என்னடா தயக்கம்? சொல்லு!”

 

“அவ மேல தப்பில்ல சித்தி. எல்லாம் என்னால தான்!”

 

“ம்ம்ம் எல்லாம் உன்னால தான்! சொல்லு!” புன்னகைத்தார். மனைவியாக போகிறவளை எப்படி விட்டுக்கொடுக்காமல் பேசுகிறான் என்ற பெருமிதம் தாய் முகத்தில்.

 

“கிளம்புற அன்னைக்கு நானும் அவளும் வீட்டுல தனியா இருந்த போது, கொஞ்சமா டிரிங்க் பண்ணினேன். ரொம்ப எல்லாம் இல்ல… இருந்தும் பிரிய போறோமேன்னு வருத்தமும், எப்படியும் அவ வந்ததும் கல்யாணம் நடக்க போகுதேன்ற உரிமையும்…” அவன் எச்சில் விழுங்கி தரை பார்க்க, அம்பிகாவிற்கு மனம் படபடக்க ஆரம்பித்தது. 

 

‘கோடிட்ட இடத்தை நிரப்புக’ என்பது போல் முக்கியமான விஷயத்தை அவரை நிரப்பக் கூறி நிறுத்தியவனை நம்பாத பார்வை பார்த்தார். தன் மகனா? இல்லவே இல்லை என்றது மனம். வினோவை பற்றி இப்படி கூறினால் கூட நம்புவார். ஆனால் பிரவீன்? அவரின் செல்ல மகன்? ஒழுக்கத்தின் மறுபிறப்பு? வாய்ப்பே இல்லை!

 

“என்ன சொல்ல வரன்னு புரியற மாதிரி சொல்லு பிரவீன்! எனக்கு படபடன்னு வருது!”

 

“எங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுச்சு சித்தி.” தாயிடம் மென்று விழுங்கினான்.

 

“பிரவீன்?” அவருக்குப் பேச்சே வரவில்லை.

 

“அவளும் விரும்பம் காட்டவே தான்… முன்னேறினோம். சும்மா ஆரம்பிச்சது. மனைவி ஆக போரவன்ற உரிமையில எல்லைய கடந்திடுச்சு சித்தி”

 

“…”

 

“சித்தி… ப்ளீஸ். அது ப்ளான் பண்ணி செஞ்சது இல்ல. அந்த நிமிஷம், அடக்க தெரியலை! என் மேல சத்தியம்!”

 

“உன்ட்ட இத எதிர்பாக்கல பிரவீன்” அவருக்குக் கோபம் தான். இவன் இப்படிப் படுத்துக் கிடக்கவில்லை என்றால் கன்னம் பழுத்திருக்கும். இப்பொழுது அவன் இருக்கும் நிலையில், எல்லாம் அனுபவித்துவிட்டு இனி எதுவுமே இல்லை என்பது போல் படுத்து கிடப்பவன் மேல் பாவமாகத் தோன்றியது.

 

“அவளும் விரும்பி தான் நடந்ததுன்னா ஏன் டா உன்ட்ட பேச மாட்டா?”

 

“அவ வாய் திறந்து வேண்டாம்ன்னு ஒரு வார்த்த சொல்லி இருந்தா, நான் முன்னேறி இருக்கவே மாட்டேனே சித்தி! நான் குடிக்க வச்சிருந்ததை ட்ரிங்க்ஸ்ன்னு தெரியாம அவளும் கொஞ்சம் குடிச்சுட்டா! அதனால தான் நிதானம் போயிடுச்சுன்னு, அவளுக்கு என் மேல கோபம்! பேச மாட்டேன்றா! குடிக்காமல் இருந்திருந்தா நடந்திருக்காதுன்னு சொல்றா! இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்ன்னு நினைச்சாளாம், இதுனால இப்போ பண்ண வேண்டி வந்திடுமோன்னு கோபம்!”

 

“ஏன் கல்யாணம் இப்போ வேண்டாமாம்? வேலையை விட்டுட்டு கல்யாணத்துக்கு வரதா தானே பேச்சு!”

 

“அவளுக்குள்ள ஏதோ குழப்பம் சித்தி. அது தான்”

 

“என்ன குழப்பம்..?”

 

“அது.. அது வந்து..”

 

“என்ன டா திரும்பவும் இழுக்கிற?”

 

“முதல்ல இங்க ஒரு பையன் மேல அவளுக்கு ஒரு அபிப்பிராயம் இருந்திருக்கும் போல… ஆனா அது பாஸிங் க்ளோட் மாதிரி போயிடுச்சு. அப்புறம் தான் என்னோட பழக்கம். நான் அவட்ட பிடிச்சிருக்குன்னு சொன்ன போது அவளுக்கும் என்னை பிடிக்கப்போயி தானே, கிடைக்கிற நேரம் எல்லாம் நாங்க ஒண்ணா சுத்தினோம்? உங்களுக்கு தெரியுமில்ல…”

 

“ம்ம்ம் ம்ம்ம்”

 

“இப்போ அந்த பையனை அங்க பாத்திருக்கா… அவனுக்கும் இவ மேல ஒரு ஆசை வந்திடுச்சு போல…”

 

அம்பிகாவிற்கு தலை சுற்ற ஆரம்பித்தது. “எதுனாலும் சட்டுன்னு சொல்லு பிரவீன்”

 

“அவன எனக்கு தெரியும் சித்தி. சரியான பொம்பளை பொறுக்கி. நான் எப்போ அவன பாத்தாலும், எங்கன்னு இல்லாம எப்பவும் எவ மேலயாது உரசிட்டே இருப்பான். ச்ச.. அவன எல்லாம் எப்பிடி தான் பொண்ணுங்களுக்கு பிடிக்குதோ”

 

“டேய் விஷயத்தை சொல்லேன் டா…”

 

“அவனுக்கு அவள பிடிக்குதுன்னு சொல்றான் போல… அதனால அவ கொஞ்சம் குழப்பமா இருக்கா!”

 

“உன்ன விரும்பி உன் கூட படுத்து எழும்பிட்டு இப்போ குழப்பமா இருக்கா? என்ன டா பேசற?”

 

“இல்ல இல்ல. அவ குழப்பமா, யாரு வேணும்ன்னு முடிவு பண்றதுக்கு முன்ன இப்பிடி பண்ணிட்டேன்னு கோபம் அவளுக்கு. நீங்க அவள தப்பா நினைக்க மாட்டேன்னு சொன்னீங்க சித்தி” பெண்ணிற்கு பரிந்துகொண்டு வந்தால் அவருக்கு கோபம் கூடும் என்று தெரிந்தே பேச, அவன் எதிர்பாத்தது நடந்துக் கொண்டிருந்தது.

 

“ஒருத்தன் மனசில ஆசையை வளத்துட்டு, அவன் கூட ஊர் முழுக்க சுத்திட்டு, வேற ஒருத்தன் வந்து அவள விரும்பறதா சொன்னா, இவ குழம்விடுவாளா? என்ன பொண்ணு டா அவ? ச்ச! அவள நான் தப்பா நினைக்கக் கூடாதா? உன்ன விட ஒரு நல்லவன் அவளுக்கு எப்பிடி கிடைப்பான்? இந்த காலத்து பிள்ளைகளுக்கு மூளை ஏன் இப்பிடி போகுதோ?”

 

“அவளையே சொல்லாதீங்க சித்தி! அவ நிலை அப்பிடி. அந்த பையனுக்கு  மிஞ்சி போனா 25… 26 வயசிருக்கும். என்னைவிடச் சின்ன பையன். உடம்பை எல்லாம் ஏத்தி, ஆள் பாக்க என்னை விட ரொம்ப நல்லா இருப்பான் சித்தி. பணக்கார வீட்டு பையன். நம்ம வசதி எல்லாம் அவன் முன்ன ஒன்னுமே இல்ல! போதா குறைக்கு… நல்ல படிப்பு, நல்ல வேலை, கை நிறைய சம்பளம். இவள பாக்க வரதுக்கு மட்டுமே அங்க 50 லட்சத்துக்கு கார் வாங்கி வச்சிருக்கான். அவன் வசதிக்கு அவளுக்கு சும்மாவே வைரமா வாங்கி கொடுக்குறானா…. அது தான் குழம்பிட்டா. சின்ன பொண்ணு அவளுக்கு அவன் உள்நோக்கம் புரியல சித்தி!

 

இவ்வளவு வசிதியோட சினிமா ஹீரோ மாதிரி பையன்! அவன மாதிரி ஒரு நல்லவனே இல்லாத மாதிரி பொண்ண நம்ப வச்சிருக்கான். ஏற்கனவே அவன் மேல இவளுக்கு ஒரு கிரஷ், எல்லாம் சேத்து அவள குழப்பிடுச்சு!

 

இப்போ சொல்லுங்க, இப்பொ, என் நிலைமை தெரிஞ்ச பிறகு அவ என்ன முடிவெடுப்பா? அவன் தான் வேணும்ன்னு அவ எடுக்க போற முடிவுல, அவ மேல என்ன தப்பிருக்கு?

 

அவன் நல்லவன்னா கூட ஒதுங்கிடலாம். ஆனா அவன் ரொம்ப தப்பானவன் சித்தி, அவளுக்கு உண்மையா அவனால இருக்கவே முடியாது! அவன் கிட்ட நான் கல்யாணம் பண்ண போற பொண்ணு கிட்டயிருந்து தள்ளியே இருன்னு சொல்லவும் அவனுக்கும் என் மேல ஏகபட்ட எரிச்சல்! அத சொல்லவே தான் அவளுக்கு என் மேல இன்னும் கோபம்!

 

ஆனா என்ன எதுக்குப் படுக்க வைக்கணும்? அலர்விழிக்கு நல்லது தானே நினைச்சேன் சித்தி?”

 

“புரியல பிரவீன்.. உன்ன படுக்க வைச்சானா?”

 

“அவன் வழியில நான் குறுக்க வரக்கூடாதுன்னு அவன் தான் ஆள் வச்சு அடிச்சிருக்கான் சித்தி. நடுவில வந்து அவ மனசைக் கெடுக்கிறது போதலன்னு எங்க வாழ்க்கையவே கெடுத்துட்டான் சித்தி” கூறியவன் கண்கள் பனித்து, குரல் உடைந்திருந்தது.

 

“என்ன டா சொல்ற?”

 

மனோ அனுப்பியிருந்த வாசகம் தாங்கியிருந்த அட்டையை அம்பிகாவிடம் நீட்டினான். சிலையாய் அமர்ந்தவரால் கண்ணீர் வழிவதை நிறுத்தவே முடியவில்லை. எவனோ ஒருவனின் ஆசைக்கு தன் மகன் பலியாவதா? இப்படி ஒரு நச்சு பாம்பு, அலர்விழிக்கு தேவையா? பெண் மேல் கோபம் கோபமாக வந்தது.

 

அம்பிகாவால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. தன் மகனை அலர்விழி ஏமாற்ற நினைப்பதா? அதுவும் பாழுங்கிணற்றில் குதிப்பதற்கா?

 

இரவு உணவை முடித்து, மருந்து அருந்தியவன் மனபாரம் இறக்கியதால் கண்மூடி உறங்கிவிட, அம்பிகாவால் இருந்த இடத்தை விட்டு அசைய முடியவில்லை. பிரவீன் கைப்பேசி ஒலியெழுப்ப, மகன் தூக்கம் கலைந்துவிடக் கூடாதே என்று அதை அணைக்கப் போனவர் கண்களில் விழுந்தது அலர்விழியின் நிழற்படம்.

 

மகனுக்காக உள்ளம் உருகியது. கைப்பேசி அடக்கி வைத்திருந்த புகைப்படங்களைப் பார்வையிட அலர்விழி மட்டுமே கேலரியை நிறைத்திருந்தாள். அவளை முதல் முதல் அர்ச்சனாவின் விசேஷத்திற்குப் பார்த்த அன்றிலிதே புகைப்படங்களைச் சேகரிக்க ஆரம்பித்திருப்பான் போலும். கடந்த ஐந்து மாதங்களாக இருவரும் அதிக புகைப்படங்களில், பல இடங்களில், பல கோணங்களில் சிரித்திருந்தனர்.

 

மகன் பேசியதை எல்லாம் கேட்ட பின், புகைப்படம் பார்த்தவருக்கு, இருவரும் காதல் ஜோடியாகவே தெரிந்தனர். அவள் தனியே சிரித்து கொண்டு பல படங்கள் இருந்தது. அவளின் சுயவிவர படத்தை அவன் தரவிறக்கம் செய்து வைத்துள்ளான் என்று அறியாத தாயோ, அவள் அனுப்பாமல் இவனுக்குக் கிடைக்க வாய்ப்பில்லையே என்று நினைத்துவிட்டார்.

 

அவன் கூறியது போல் ஒரு படத்தில் அவள் காதிலும், கழுத்திலும், கையிலும் வைரம் மின்ன, கருப்பு நிற ஆடம்பர கார் முன் நின்றிருந்தாள்.

 

உண்மையிலுமே மகனை ஆடம்பர வாழ்விற்காக ஏமாற்றி விட்டாளா? மனம் அதிகமாக மகனுக்காக வருந்தியது. அப்படி எல்லாம் மகனை விட்டுவிட்டால் தாய்ப் பாசத்திற்கு அர்த்தமேது?

 

பிரவீனின் அப்பா இரவு துணைக்கு வந்துவிட, கைப்பேசியை அணைத்து வைத்தவர் ஒரு முடிவோடே வீட்டிற்கு கிளம்பினார்.

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!