Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ35_2 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  – 35_2

 

“இந்த மானிடக் காதலெல்லாம்

ஒரு மரணத்தில் மாறி விடும்



Advertisement

அந்த மலர்களின் வாசமெல்லாம்

ஒரு மாலைக்குள் வாடி விடும்

நம் காதலின் தீபம் மட்டும்

Advertisement

எந்த நாளிலும் கூட வரும்..”

Advertisement

 

நிலவு வானைத் தொடும் வரை துளசி ஒரு வித மிதப்பில் தான் இருந்தாள். வீட்டிலிருந்த சில்வண்டுகள் அவளையே சுற்றி வர, செல்வனிலிருந்து மாமனார் வரை அவளைத் தாங்கவும் பெண்ணை கையில் பிடிக்க முடியவில்லை. அதுவும் இன்று மூர்த்தியும் ஒரு வித குஷி மனநிலையில் இருக்கவே அவனின் மீசை வருடலும், கன்னக் குழியும் அளவுக்கு அதிகமாகவே இருக்க.. அவளால் அவன் மேலிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை. பல முறை, தூர நின்றவனை அவனுக்குத் தெரியாமல் பார்த்தாலும் தோழிகளிடம் மாட்டி அசடு வழியும் நிலை தான்.

 

Advertisement

எல்லாம் சரியாகத் தான் போனது இரவு ஒன்பது வரை! அதன் பின் தான் அவளுக்குச் சந்தேகம் அவள் உடல் நிலை மீது! ரத்த அழுத்தம் ஏறியதா.. இறங்கியதா என்று தெரியவில்லை. இதயம் அளவுக்கு அதிகமாக துடிக்கிறதா? இல்லை துடிக்கத்தான் செய்கிறதா? அதுவும் தெரியவில்லை.

 

மூக்கின் வழி மூச்சை இழுத்தாலும் அதை வெளி தள்ள வாயைத் திறந்தே ஆகவேண்டும் என்ற அவல நிலை! நாசி வழி உள்ளே சென்ற மல்லியின் மணம் வயிற்றை குடைந்தது.

 

‘முடியும்… என்னால் முடியும். சில மணி நேரம் தான். மூர்த்தி சாரை எனக்கு மிகவும் பிடிக்கும்..’ இப்படி தான் உள்ளுக்குள் ஏதேதோ கூறி அவளை அவளே சமாதானம் செய்து கொண்டிருந்தாள். ‘அவரை அணைக்க முடிந்ததே… எல்லாம் முடியும்!’ என்று நினைத்த அடுத்த நொடி கதவு திறக்கப்படும் ஓசை.

 

‘முடியும்’ என்று எண்ணிய அதே மனம் கேட்டது ‘முடியுமா?’ என்று. அவள் துளசி தான்! அவளுக்குமே சந்தேகமில்லை. இருந்தும் ‘கோமல்’ என்ற அந்த அழைப்பு மீண்டும் மீண்டும் ஒலித்தது. அந்த அழைப்புக்கு பின் அவளின் அலறல் சத்தம் அவள் காதுக்குள் எதிரொலித்தது. இதயத்தைப் பிழிந்த வலியோடு.. உடலில் பல கைகள் ஊர ஆரம்பிக்கவும்.. பெண் கால் தளர்ந்தது.

 

‘முடியாது’ என்றுவிட்டது மனமும் உணர்வும்!

 

சாளரம் வழி வெளியே வெறித்தாலும் முதுகு பின் பூட்டப்படும் கதவும் அந்த தாழ்ப்பாள் ஒலியும் காதை கிழித்தது. என்னன்னமோ சொல்லிக் கட்டுப் படுத்தியிருந்த மனது சாளரத்திற்கு வெளியே எகிறிக் குதித்து ஓடப்பார்த்தது. மூர்த்தியைத் தெரியும் தான்… அவன் மேல் விருப்பம் தான்… அதையும் தாண்டிய பயம். அவளை வதைத்த காமப்பேய்களின் தாக்கம். இந்த நேரம் அதெல்லாம் நினைவில் வந்து பெண்ணை படுத்த வேண்டுமா? அவள் அதை எல்லாம் தள்ளித்தான் நிறுத்த பார்க்கிறாள்..

 

ஆனால்… ஆனால்.. என்ன செய்ய? அவள் வாழ்வை உலுக்கிய சம்பவம் அல்லவா? அவள், வேண்டாம் என்று சொல்லியும் பல கைகள் அவளை பிராண்ட ஆரம்பித்தது. ஒதுக்கி வைத்திருந்த அசிங்கமான உணர்வு உயிர் பெற்றது.

 

பயம்.. அடி வயிற்றில் ஆரம்பித்து.. நெஞ்சாங்கூட்டை நிரப்பி.. தொண்டை வழி ஏறி குரல்வளையை நெரித்தது. மூளை வேறு அதன் பங்கிற்கு விண்ணென்று தெறித்துவிடும் அளவு வலிக்க ஆரம்பித்தது.

 

காலடியின் ஓசை.. மூர்த்தி நெருங்க நெருங்க சாளரத்தின் கம்பி அந்த பஞ்சு கையில் நசுங்கியது. கம்பி கொஞ்சம் விலகிக் கொடுத்தால்.. பிதுங்கியே வெளியே விழுந்திருப்பாள். அதற்கு அவள் பயம் புரியவில்லை.

 

சத்தம் நின்றது. கட்டிலில் அமர்ந்திருப்பான் போலும். திரும்பிப் பார்க்காமலே தெரிந்தது.

 

அவள் முதுகைப் பார்த்துக் கொண்டிருந்தவன் முகத்தில் எந்த வித சலனமும் இல்லை. இதைத் தான் எதிர்பார்த்திருப்பான் போலும்!

 

“என்ன துளசி இருட்டில என்ன தெரியுதுன்னு ரொம்ப நேரமா அங்கேயே பார்த்துட்டு இருக்க? கால் வலிக்க போகுது. வாயேன் பேசலாம்..” வாஞ்சையாய் அழைப்பவனிடம் என்ன சொல்ல? நின்ற வாக்கிலேயே திரும்பி நின்றாள். கை முதுகின் பின் ஜன்னல் கம்பியை இறுக்கிப் பிடித்திருந்தது. ஏனாம்? பயத்தை.. கை வழியே கம்பிக்கு அனுப்புவதாக நினைப்பு போலும்!

 

அப்பாடா… ஒரு சின்ன புன்னகை எட்டிப்பார்த்தது! அதற்கு இந்த பாடா துளசி? பயம் கலந்த சிரிப்பைப் பாடுபட்டுச் சிந்தினாள். உதடு லேசாகத் துடித்தது. ஐயோ சிரித்திருக்கக் கூடாதோ? எழுந்து, அவளருகில் வந்து நின்றான்.

 

மிதமான பல்ப் வெளிச்சம்.. அதிலும் பிரகாசமாகத் தெரிந்தான். கணவன்! அதிலும் உள்ளம் கவர்ந்த கணவன். இருந்தும் ஏன் இந்த பயம்? அவள் பார்வை அவன் மார்புக்கு இறங்கியது.

 

தென்றல் காற்று, சாளரம் வழி முதுகை வருடி முடியை வேறு முன் தள்ள வேண்டுமா? அவள் நிலை தெரியாமல்.. புடவை முந்தி முந்திக்கொண்டு முன்னால் பறக்க.. அதைப் பிடிப்பதா கம்பியைப் பிடிப்பதா? தனித் தனியே இருந்த முடியும் முன்னோக்கி வந்து முகத்தை வருட வேண்டுமா?! ஏன் எதற்கும் அவள் அவஸ்தை புரியவில்லை.

 

“நல்லா தானே காத்து வருது? ஏன் இப்படி வேர்க்குது உனக்கு?” கேட்டுக்கொண்டே நெற்றியை கைக் கொண்டு துடைத்தான்.

 

மிக அருகில் நிற்பவனை அண்ணாந்தால் மட்டுமே பார்க்க முடியும். அண்ணாந்தாள். கண்ணிடம் சொல்லிவிட்டாள்.. ‘தயவு செய்து அழுது தொலைக்காதே’ என்று. அது அவள் சொல்பேச்சு கேட்டு, வெளியே சிந்த இருந்த நீரை உள்ளுக்குள் தேக்கி வைத்துக் கொண்டது.

 

நடு விரலும் மோதிர விரலும் கொண்டு முகத்தில் விழுந்த கூந்தலை மூர்த்தி விலக்க.. பெண்ணுக்குள் மெலிதான் நடுக்கம். அவள் கை கம்பியை இன்னும் இறுக்கியது.

 

“துளசிக்கு என்னைப் பிடிக்கும் இல்ல?” மென்மையான சத்தம்..

 

“ம்ம்ம்..” என்றாள்… சொன்ன வேகத்தை விட தலை இன்னும் வேகமாய் மேலும் கீழும் ஆடியது.

 

“எவ்வளவு?”

 

எச்சில் விழுங்கினாள். தங்கம் சொல்லி கொடுத்தாளே… இப்பொழுது கழுத்தைக் கட்டிக் கொண்டு முத்தம் கொடுக்க வேண்டுமோ? நடுக்கத்தின் அளவு கூடியது.

 

“ரொம்…ரொம்ப…” என்றாள் விழிவிரித்து.

 

“எனக்கு இது போதாது துளசி. இன்னும் வேணும்” என்றான்.

 

தலை முடியை இன்னும் எவ்வளவு நேரம் தான் மனிதன் ஒதுக்குவாரோ? எத்தனை உணர்வுகளை தான் அவளும் சமாளிப்பாள்.

 

அவன் பதிலில், எச்சில் விழுங்கினாள்.

 

“பிடிக்குமான்னு கேட்டேன் துளசி?”

 

“பி..பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்” என்றாள் திக்கித் திணறி!

 

“அப்பிடியா?”

 

இந்த நிமிடம் எதிர்பார்த்தது தானே… எதிரில் இருப்பவனை ஆசையாய் தழுவியது நினைவில் இல்லையா? இருந்தது. அது வெறும் அரவணைப்போடே நின்றுவிடும். ஆனால் இன்று? அது கொடுத்த பயம்.. மூர்த்தியை நெருங்க முடியவில்லை.

 

“என்ன துளசி.. கண்ண திறந்துட்டே கனவு காண்ற?”

 

பட்டென்று.. அடுத்த நொடி கணவனை தழுவி இருந்தாள். அழுகை தொண்டையை அடைத்தது. ஏனோ இந்த நொடி பிடிக்கவில்லை. செத்தால் போதும் போல் தோன்ற ஆரம்பித்தது. உள்ளம் கவர்ந்தவனிடம் கூட இணைய முடியாதா? என்ன தவறு செய்தோம் இருவரும்.. இப்படி ஒரு தண்டனைக்கு? தண்டிக்கப் பட வேண்டிய அரக்க ஜென்மங்கள் எல்லாம் நித்தம் ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சூறை  ஆடிக்கொண்டிருக்க…. வாழ வேண்டிய பெண், கணவனிடம் கூட ஒன்ற முடியாமல் துடித்துக் கொண்டு! தவறு செய்பவருக்கு என்றாவது ஒரு முறையாவது இந்த வலியும் ஏக்கமும் புரியுமா?

 

அவளோடு மூர்த்தியின் ஆசையும் வெந்து போகும் என்பதற்கு தானே மூர்த்தியை வேண்டாம் என்றாள்.

 

‘என்ன ஆனது? ஏன் மணந்தேன்? இந்த திருமண பந்தத்திற்கு என்னால் நியாயம் செய்யவே முடியாதா?’ மனம் அடிபட்டு வலித்தது. அடுத்து நடக்கவிருப்பது கணவனோடு என்பது எல்லாம் உணராமலில்லை. எங்கே மூர்த்தி தொடும் வேளை ஓநாய்கள் நினைவில் வந்துவிடுமோ என்ற பயம் தான் அவளை நடுங்கச் செய்தது. மூர்த்தியை உயிருக்கும் மேலாகக் காதலித்து என்ன பலன்? அதை விட பயம் அல்லவா அவளை நிறைத்தது!

 

துளசியின் உடல் நடுக்கம் மூர்த்திக்கு தெரியாதா? தெரியும். அவனுக்கும் வலித்தது.

 

“லைட் வேண்டாமே..” இறைஞ்சலாய் மொழிந்தாள். அவள் கண்ணீரை மூர்த்தி காண வேண்டாம் என்று நினைத்தாளோ.. இல்லை நடக்கப் போவது அவள் ரசிக்கப் போவதில்லை என்பது மூர்த்திக்கு தெரியக்கூடாது என்று நினைத்தாளோ?

 

“ஏன்?”

 

“வேண்டாம் ப்ளீஸ்” கெஞ்சலாய் விழுந்தது.

 

அவளை விலக்கி பொறுமையாய் சட்டையை கழட்டி, விளக்கை அணைத்து வந்தவன், அவள் அருகில் நின்று சாளரம் வழி அவள் ஆரம்பித்ததைத் தொடர்ந்தான். அவனுக்குள் எழும் தவிப்பை யாரிடம் கூறுவான். துளசியின் நிலை அவனை நிலை குலையச் செய்தது. வழியில் இருக்கும் முட்களை எல்லாம் எப்படித் தாண்டி செல்வதென்று தெரியவில்லை. எதிரில் தெரிந்த இருட்டை வெறித்தான்.

 

மூர்த்தியைத் தெரியும். ஆனால் கணவனாய் தெரியாதே. கோபித்துக் கொண்டாரா? உள்ளம் பதை பதைத்தது. மெல்ல நகர்ந்து அவனைத் திருப்பி.. மீண்டும் அணைத்துக் கொண்டாள்.

 

மூச்சை இழுத்து நீண்ட பெருமூச்சு விட்டவன்.. நெஞ்சில் கன்னம் புதைத்திருந்தவள் தலையை வருடிக்கொண்டே இருக்க.. துளசியின் நடுக்கம் மெல்ல குறைய ஆரம்பித்தது. மூர்த்தி மட்டும் தான் அவள் நினைவில்.

 

எவ்வளவு நேரம் இப்படியே? “என்ன ஆச்சு?” வாய் திறந்தாள். “நான் தான் கட்டி பிடிச்சுட்டேனே?” மூர்த்தியின் விருப்பம் என்ன என்று தெரியாமலே அவன் விருப்பத்திற்குத் தயாராக நின்றாள்.

 

அவள் முகம் உயர்த்தி.. சாளரம் வழி வந்த நிலவு ஒளியில் முகம் பார்த்தவன்.. குனிந்து நெற்றி வகிட்டில் இதழ் பதித்து, “நீ ரொம்ப அழகா இருக்க துளசி. நான் பார்த்த அன்னைக்கு இருந்ததை விட நூறு மடங்கு அழகா இருக்க.” என்றான்.

 

புன்னகைத்தாள்.

 

“நான் கேட்டதும் கட்டி எல்லாம் பிடிச்சுட்ட? ஆனா துளசி… எனக்கு அது பத்தாது. எனக்கு இன்னும் வேணும்.” என்றான்.

 

புன்னகை மறையும் முன், முகத்தைக் கணவன் நெஞ்சுக்குள் புதைத்தவள், “அ.. அது தான் கட்டி பி..டிச்..சிட்டேனே? இதுக்கு மேல நான் என்ன.. நீங்க தான்…” இதற்கு மேல் எப்படி பச்சைக் கொடி காட்டுவதென்று தெரியவில்லை.

 

பெண் முகம் பார்க்க விழைந்து.. அவளை விலக்க.. அவன் ஒற்றை பார்வையில், கம்பிக்குள் புதைந்தவளால் அவனை எதிர்நோக்க முடியவில்லை.  ‘நான் அவ்வளவு கேவலமானவனா?’ என்ற பார்வை அது.

 

“இந்த அணைப்பு வேண்டாம் துளசி. நான் உன் எதிரல்ல இருக்கேன். நீ ஜன்னல் வழி பிதுங்கியே வெளியில போயிடுவ போல இருக்கு. எனக்கு இது வேண்டாம். நான் உன் எதிர்ல நிக்கும் போது.. ‘துளசி மா.. வேர்க்குது.. கொஞ்சம் விடு’ன்னு உன் கிட்ட கேக்கற அளவுக்கு நீ வேணும். நீ முழுசும் வேணும். உன் உடம்பு மட்டும் வேண்டாம். என் துளசி முழுசுமா வேணும்.

 

என் நிறைவா உன்ன நான் உணர்ற மாதிரி நீயும் என்னை உணரணும். நீயும் முழுசா என் நெருக்கத்த விரும்பணும். எனக்கு அவ்வளவு வேணும். இது கண்டிப்பா போதாது.

 

இப்போ முடியாதா இருக்கலாம். ஆனா முடியாமலே போகாது. முடியும். அந்த அளவு நெருக்கம் கண்டிப்பா வரும். அது வரும் போது அத உணரலாம். இப்போ எதையும் ஃபோர்ஸ் பண்ண வேண்டாம். சரியா?”

 

“ம்ம்…” என்று பலமாய் மண்டையை ஆட்ட,

 

“நான் என்னைக்கும் உன் மூர்த்தி சார் தான் துளசி. அதுல மாற்றம் இல்ல. நாம வாழ போற வாழ்க்கை கண்டிப்பா நமக்கு நிறைவா இருக்கும்.”

 

“ம்ம்..” மீண்டும் ஒரு மண்டை ஆட்டல்.

 

“எனக்கு எவ்வளவு பிடிக்கும்ன்னு காட்டவா?” வாஞ்சையோடு முகம் பார்க்க..

 

வேண்டாம் என்பது போல் தலை அசைத்து.. பின் என்ன நினைத்தாளோ.. சரி என்ற தலை அசைப்புக்கு மாற்றினாள்.

 

முதுகு பின் ஒரு கையும்.. கால் முட்டிக்கடியில் ஒரு கையும் கொடுத்துத் தூக்கி இருந்தான்.

 

“காலம் பூரா என் மனசில உன்ன ஏந்தற அளவுக்குப் பிடிக்கும்” என்று கூறிக்கொண்டே கட்டிலில் படுக்க வைத்தான்.

 

அருகில் படுத்தவனிடம் மீண்டும் ஒரு நீண்ட மூச்சு. கை இரண்டையும் தலைக்கு மேல் கோர்த்துக் கொண்டவன்.. “தூங்கு துளசி.. மனசைப் போட்டு குழப்பிக்காத!” என்று கண்களை மூடிக்கொள்ள.. அவன் புறம் திரும்பிப் படுத்திருந்தவள் சாளரம் வழி வந்த நிலவொளியில் தெரிந்த அவன் முகத்தையே பார்த்துப் படுத்திருந்தாள். அவளின் எதிர்காலம் அவள் கண் எதிரில்.

 

காதலுக்கு எல்லை உண்டா? காதலை அணைப்பிலும் முத்தத்திலும் மட்டும் தான் காட்ட முடியுமா? மூர்த்தி காட்டினான். அவன் காதலுக்கு எல்லை இல்லை என்று காட்டினான். அவன் அன்பைக் காட்ட அணைப்பும் முத்தமும் கூட தேவை இல்லை என்று காட்டினான்.

 

“மூர்த்தி சார்..” என்றாள். அறையில் அவன் நுழைந்த பின் இப்பொழுது தான் அவளின் முதல் மூர்த்தி சார் வருகிறது. கண்டுகொண்டான். காட்டிக்கொள்ளவில்லை.

 

“சொல்லு துளசி..” அசையவும் இல்லை. கண்ணைத் திறக்கவும் இல்லை.

 

“நான்.. நான் உங்கள கட்டி பிடிச்சுக்கவா?” ஏக்கம், வார்த்தையாய் வெளிவந்தது.

 

வேண்டும். மூர்த்தி வேண்டும் என்றது மனது. வலிக்கு நிவாரணி அவள் மூர்த்தி தானே… அவனிடமே சரணடைந்தாள்.

 

“நீ என்னை சார்-ன்னு கூப்பிடுறனால… நான் உன் வாத்தியார் இல்ல துளசி. எத்தன தரம் சொல்லணும்? நான் உன் புருஷன். இத எல்லாம் கேக்கக் கூடாது. வா..”

 

படுத்த வாக்கிலேயே இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். அணைத்துக் கொண்டவள் அவன் பனியனை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். இருவரிடமும் அசைவில்லை. வார்த்தை இல்லை. மனம் மட்டும் வேகமாய் அடித்துக் கொண்டது.

 

மனம் ஒன்றிய பின்னும் உடல் ஒன்ற துடித்த பின்னும் ஒன்றமுடியா நிலை. இயலாமையின் காரணம் எட்டி பார்த்தது. நாக்கில் சொட்டிய தேனை உள்ளிழுக்க முடியா வாழ்வை நினைத்து அசையாமல் படுத்திருந்தாள், மூர்த்தியின் நெஞ்சில்.

 

அவள் துடிப்பை உணர்த்த முயலவில்லை. ஆனாலும் உணர்வுகள் கடத்தப்பட்டது.

 

படுத்திருந்தவன் கண் ஓரத்தில் ஒரு சொட்டு நீர் எட்டிப் பார்த்தது. எத்தனை வலி இருந்தால் இப்படித் துடிப்பாள் என்ற தோன்றவே வந்த சொட்டு நீர் அது!

 

‘என்னை ஏன் இவருக்கு பிடிக்க வேண்டும்?’ அவளுக்கு அது விடை தெரியா கேள்வி! எதிர்பார்த்தது போலவே மூர்த்தியின் வாழ்வை கெடுத்துவிட்ட உணர்வு. அவள் இயலாமையின் மேல் வெறுப்பு. படுத்திருந்தவளிடமிருந்து ஒரு கேவல் வெடிக்க.. அசைந்தானில்லை. அழுது முடிக்க விட்டுவிட்டான். சில நேரங்களில் அழ விட்டு விட வேண்டும்.. இதயம் வெடிக்காமல் இருக்க.

 

ஆடையைத் தாண்டி.. தோலைத் தாண்டி.. தசையை தாண்டி அந்த கண்ணீர் அவன் மனதோடு கலந்தது. அணைத்திருந்த கை துளசியின் தோளில் ஒரு அழுத்தம் கொடுத்தது. ‘இதில் நீ தனியாக இல்லை. உன்னோடு நானும் பயணிப்பேன்’ என்றது அந்த அழுத்தம்.

 

ஒருவனை நம்பி படி தாண்டாமல் இருந்திருந்தால்… தாண்டும் சூழலில் பிள்ளைகளைத் தள்ளாமலிருந்தால்.. சிறுமிகளைக் கொள்ளையடிப்பதே  தொழிலாய் கொண்டிராமல் இருந்தால்… பெண்ணை மதிக்க ஆண் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்திருந்தால்.. சட்டம் அதன் கடமையைச் செய்திருந்தால்.. நாடு அதன் பிள்ளைகளைக் காத்திருந்தால்… இன்று இவளைப் போல் பல பெண்களின் கண்ணீரைத் தேசம் காண நேர்ந்திருக்காது.

 

காமுகனுக்குக் காம இச்சை.. அவன் சிற்றின்பத்திற்கு பலியாவது சிறு பிள்ளைகள். பிள்ளைகளை நரகத்திற்கு கொண்டு சேர்ப்பது பண பிசாசுகள். இதெல்லாம் என்று முடியும்? எப்படி முடியும்? முடியுமா? ஒருவரும் தட்டி கேட்க முடியாதா?

 

“போதும் துளசி மா… கண்டிப்பா சரி ஆகிடும்.”

 

“ம்ம்..” விசும்பல் மட்டுமே..

 

“பழத்தைச் சாப்பிட்டுத் தூக்கி போடற கொட்டையில இருந்து மரம் வரதில்லையா? மரத்தை மட்டுமே பாக்குற நமக்கு அந்த விதையோட போராட்டம் தெரியறது இல்ல. தன்னை சுத்தி இருக்க அழுக்க இடிச்சு தள்ளணும். புவி ஈர்ப்பு சக்திக்கு எதிரா தலையை தூக்கணும். இது எல்லாம் மரத்தோட சக்தி வச்சு இல்ல.. ஒரு தட்டு தட்டினா உடைஞ்சு போர தளிர வச்சு போராடணும். போராட்டம் ஒரு பக்கம் மட்டும் இல்ல. தளிர் மேல வர அதே நேரம் அந்த குட்டி வேர் பூமியை குடைஞ்சு உள்ள போகணும். தனக்குன்னு ஒரு பிடிப்பை ஏற்படுத்தி தனக்கு வேண்டியதை அதுவே  பூமியில இருந்து எடுத்துக்கணும்.

 

நான் சொல்ல வரது புரியுதா? போராட்டம் எல்லா ஜீவ ராசிக்கும் பொது துளசி. போராடாம போனா.. சிங்கத்துக்கு மான் அன்னைக்கு உணவா போகும். லட்சம் ஜீவ ராசிக்கு உபயோகமா இருக்க வேண்டிய மரம்.. வெளியில வரதுக்கு முன்னமே விதையாகவே மக்கி போயிடும்!

 

உன்ன சாய்க்க உன் பயம் போதும். உன்ன எழுப்ப உன் தன்னம்பிக்கை போதும். எழும்பறதும்.. யாரோ செஞ்ச தப்புக்கு, உனக்கு நீயே தண்டனை தந்து உன் சந்தோஷத்தை அழிச்சுக்கிறதும் உன் கிட்டத் தான் இருக்கு துளசி மா.

 

நீ ரொம்ப தைரியமான பொண்ணு. எத்தனையோ தடைய தன்னம்பிக்கையோட  தாண்டிட்ட, இதையும் தாண்டுவ! நீ வேணும்னா பாரேன்.. இதே கட்டில நீ என் மேல் படுத்து என்னை பாடா படுத்த தான் போற… நாம ஆசை தீர கொஞ்சிக்கத் தான் போறோம்”

 

“ம்ம்..”

 

அணைப்பிற்குள் இருந்தவள் தோளை வருடி கொண்டே இருக்க.. ஒருகட்டத்தில் கேவல் மறைந்தது.

 

‘நடக்குமா மூர்த்தி சார்?’ என்று கேட்கவில்லை. ‘நடக்கும்!’ என்று நம்பினாள் போலும்.. கணவன் மார்பில் கண்ணயர்ந்தாள்.

 

காமுகர்களின் காமக்கரங்கள் பெண்ணை சாய்த்திருக்கலாம். ஆனால் சாகடிக்கவில்லை. எழுவாள். துளசி என்ற கொடி பற்றிப் படர மூர்த்தி என்ற ஆலமரம் இருக்க, கண்டிப்பாக எழுவாள்.

 

பெண்கள் தேவதைகள் – உருமாறும் தேவதைகள்!

தகப்பனுக்கு மகளாய்

தலைவனுக்கு மனைவியாய்

மகனுக்குத் தாயாய் மட்டுமல்ல..

புழுக்களின் நடுவே புதைந்திருக்கும் விதைகளும் தேவதைகள் தான்.

அன்போடு உணர்வுகளை புரிந்து அரவணைக்க கரம் இருந்தால் மரமாய் உருமாறக் கூடிய தேவதைகள்.

 

உருமாறக் காத்திருக்கும் தேவதைகளுக்கு:-

ஒருவன் அடிக்க.. விழுந்து போகலாம். விழுந்தே கிடக்காமல் எழ வேண்டும். எழ எழ அடித்தாலும் எழுந்து நிற்க வேண்டும் பெண்ணே. இறந்து போகும் வரை போராட வேண்டாமா? உன்னை வீழ்த்துவதும் உன்னை உயர்த்துவதும் உன்னில் தான் இருக்கிறது. போராடு! போராட்டத்தில் விழுந்து மண்ணுக்குள் போனால் நீ விதை என்பதை உணர்ந்து கொள்.

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!