Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ38 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  – 38_1

 

துளசிக்கு இரண்டு வாரம் நிமிடத்தில் கரைந்திருக்க.. அவள் ஏற்படுத்திய தாக்கம், மூர்த்தியின் நாட்களை நகரவிடவில்லை. இத்தனை வருடத் தனிமை எல்லாம் ஒன்றுமே இல்லை என்று எண்ண வைத்தாள் பெண்.

 



Advertisement

எப்பொழுதும் போல் ரயில் வந்து சேர தாமதமாகும் என்றனர். தவிப்போடே காத்திருந்தான். ஏதோ காலம் காலமாய் பிரிந்தவளைப் பார்க்கப் போகும் தவிப்பு. நடைமேடையை நடந்தே அளந்தான்.. அவன் நீளக் கால்கள் இங்கும், அங்கும் என நிற்காமல் நடந்தது. ‘துளசி’ அடித்துக் கொண்டது இதயம். ஒருத்தியின் தரிசனத்திற்கு இப்படிக் காத்திருப்பான் என்று கனவு கூட கண்டதில்லை.

 

தாமதமாக வரும் ரயிலை மனதார சபித்தான். இதோ இதோ.. ரயில் நடைமேடையை நெருங்க.. உதட்டோரம் முறுவல். வந்துவிட்டாள் தன்னவள், தன்னிடம்.

Advertisement

 

Advertisement

அவள் பயணப்பட்டு வரும் பெட்டி அருகில் சென்றது தான் தாமதம். உள்ளிருந்து “மாமா…” “சின்னையா..” இரண்டு சிட்டுக்குருவிகள் ஓடிவந்து அவன் கையில் ஏறிக்கொள்ளவும்.. முதல் முறை அவன் முகம் ஏதோ ஒரு புது உணர்வைக் காட்டியது. அவன் செல்ல சிட்டுகள் தான்.. இருந்தும்.. ஏதோ.. உள்ளுக்குள் குடைந்தது. ஏமாற்றமா? இன்னும் காத்திருக்க வேண்டுமா? மணாளன் காத்திருப்பு சட்டென்று அடிவாங்கியது.

 

எல்லா உணர்வும் நிமிடம் தான். இரண்டு கன்னத்திலும் அன்பின் முத்திரை பதிக்கப்படவும் மனம் லேசானது. அணைத்துப் பிடித்துக் கொண்டான்.

Advertisement

 

“மாமாக்கு என்னைத் தான் பிடிக்கும்…” “இல்ல என்னைத் தான் பிடிக்கும்..” குட்டி சண்டையை ரசித்தான்.

 

“என் மாமா..” “இல்ல… சின்னையா எனக்கு..”

 

‘என் பொண்டாட்டியை தவிர எல்லாருக்கும் நான் வேணும்!’ அவனையும் அறியாமல் சின்ன பெருமூச்சு வந்து போனது.

 

ரயில் பெட்டியிலிருந்து இறங்கியவள் சிரித்துக் கொண்டே வந்தாள். ஹப்பா.. எதிர்பார்த்து காத்திருந்து கிடைத்த தரிசனம்.. உயிர் மீண்டது மூர்த்திக்கு.

 

பிள்ளைகள் இறங்கி செல்வன் அருகில் ஓடவும், கணவன் அருகில் வந்தாள். கண்ணை நிறைத்தான் கண்ணாளன்.

 

“பிள்ளைகளுக்கு ஸ்கூல் லீவ். போன வாரமே கூட வருவேன்னு ஒரே அடம். அது தான்.. ஒரு மூணு வாரம் நம்மளோட.. உங்களுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு சொல்லல” என்றாள், ஏதோ அவனுக்குப் பிடித்ததைச் செய்துவிட்ட பெருமை முகத்தில்.

 

“உனக்கு நாலு நாள்ல காலேஜ் திறக்குது..” என்றான், தகவலாய்.

 

“வாரத்தில ரெண்டு நாள் போயிட்டு வரேன். செல்வன் பார்த்துப்பான்.” என்றாள் குதூகலம் மாறாமல். ஆனால் அவள் எதிர்பார்த்த இன்ப அதிர்ச்சி அவனிடம் இல்லை.

 

பிள்ளைகளோடு எல்லாம் நன்றாகத் தான் போனது. கிடைக்க வேண்டிய தனிமை மட்டும் இருவருக்கும் கிடைக்கவில்லை. மூர்த்தி கல்லூரி செல்லும் சமயம் கிண்டி பூங்கா, பறவைகள் சரணாலயம் என்று செல்வனோடு மூவரும் சுற்றி திரிந்தனர். மூர்த்தி எதிலும் கலந்து கொள்ளவில்லை. அவனுக்கு அதற்கு நேரமும் இல்லை. என்றாவது மாலை கடற்கரை கூட்டிச் செல்வான்.

 

இரவானால், துளசியைக் கட்டிக்கொண்டு இரண்டு பக்கமும் இரண்டு பிள்ளைகள். கண் கொள்ளா காட்சி தான். இருந்தும் மூர்த்திக்குத் துணையாய் பெருமூச்சும் நிலவும் மட்டுமே இருக்க.. இரவும் தனிமையும் பிடிக்கவில்லை. கடந்த சென்ற இரண்டு வாரமே தேவலாம் என்று தோன்ற ஆரம்பித்தது.

 

காய்ந்த வயிற்றோடும், வறண்ட தொண்டையோடும் எத்தனை நாள் தான் தேன் சுரக்கும் சுனை முன் நிற்க வேண்டும்? நீண்ட உஷ்ணமான காற்று வெளிவந்தது. எப்பொழுதும் போல் அமைதி காத்தான்.

 

வந்த அன்றே கவனித்தாள், மூர்த்தி முகம் சரியில்லை. ஏதோ யோசனை அவனுக்குள். சத்யனைக் காண பாம்பே செல்ல வேண்டும். துளசியோடு பாம்பே போனால் சரி வருமா? தெரியவில்லை. அது தான் அவன் யோசனை.

 

பிள்ளைகள் செல்வனோடு முக்கு கடைக்குச் சென்றிருக்க, கணவனிடம் சமரசம் பேச வந்தாள். அவன் யோசனை முகத்தின் காரணம் தெரியாதே. பிள்ளைகளோடு வந்தது பிடிக்கவில்லையோ என்ற கேள்வி அவளுக்குள்.

 

“என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? பிள்ளைங்க ரொம்ப ஆசை பட்டனால தான் கூட்டிட்டு வந்தேன். நீங்க குஷியாவீங்கன்னு நினைச்சேன். மூணு வாரம் தான். செல்வன் மட்டுமா கூட்டிட்டி போக முடியாதில்லையா? பெரிய அத்தான் வந்து கூட்டிட்டு போவாங்க. நீங்க போக வேண்டி வராது.”

 

“‘மூன்று நீண்ட வாரம்’ எப்பொழுது ‘மூணு வாரம் தான்’னாக மாறியது?”  தோன்றினாலும்.. “ம்ம்..” என்றான்.

 

அமர்ந்திருந்தவன் எதிரில் நின்றிருந்தாள். அவன் தலையை மெல்ல வருடி.. “பிள்ளைகள கூட்டிட்டு வந்தது பிடிக்கலியா? கோவமா?” என்றாள்.

 

தலை நிமிர்த்தி மனைவி முகம் பார்த்தான். மெலிதான முறுவல்.

 

“என்ன கேள்வி இது? நம்ம பிள்ளைங்க நம்ம கூட இருக்கிறதில என்ன கோவம்?”

 

அடைத்திருந்த எதுவோ அது பட்டென்று நீங்கியது. ஹப்பா! தயக்கம் உடைய, “நீங்க முகத்தை எப்படி வச்சிருந்தா நான் என்னன்னு நினைக்க?” ஒய்யாரமாய் மடியில் அமர்ந்து கொண்டாள்.

 

“என்ன யோசனை மூர்த்தி சார்?” கன்னம் வருட, அவன் இறுக்கம் தளர்ந்தது.

 

“சத்யன் சாதனையைப் பாராட்டி டெல்லியில விருது கொடுக்கறாங்க துளசி. அங்க நாமா போக முடியாது. அதனால அடுத்த வாரம் நாலு நாள் பாம்பே போகணும். சனி ஞாயிற ஒட்டி ரெண்டு நாள் லீவ் போடறேன். ஃப்ளைட்-ல போயிட்டு வந்திடலாம். என்ன சொல்லுற?” முகம் பார்த்தான். என்ன சொல்ல போகிறாளோ..?

 

ஒரு நொடி எடுத்தாள் பதில் உரைக்க. “உங்க கூட எங்க வேணும்னாலும் வருவேன். இத கேக்க தான் இந்த யோசனையா? நான் கூட என்னமோ ஏதோன்னு நினைச்சேன்..” கால் ஆட்டிக்கொண்டே.. அவளுக்கு பிடித்தமான மீசையை முறுக்கி விட்டாள்.

 

“என்ன நினைச்ச துளசி?” குரலில் குறும்பு..

 

“போங்க மூர்த்தி சார்.. தெரிஞ்சே வம்பு பண்றீங்க..” எழுந்து ஓட எத்தனித்தவளை இழுத்து பிடித்து மீண்டும் மடியில் இருத்திக் கொண்டான்.

 

“என்ன நினைச்சேன்னு சொல்லிட்டு போ துளசிமா..” மீசை அவள் தோளைக் குறுகுறுக்க..

 

“ம்ம்.. சக்கர பொங்கல்ல ஏன் சக்கர இல்லன்னு நினைச்சேன். விடுங்க மூர்த்தி சார். பிள்ளைங்க வந்திட போறாங்க. ரொம்ப அட்டூழியம் பண்றீங்க நீங்க..” அவன் மணவாட்டி நெளிந்தாள்.

 

“இன்னும் ஒரு சில மாசம் போனா.. அனிவர்சரியே கொண்டாடிடலாம். அவனவன் முத அனிவர்சரிக்கே பிள்ளையோட நிக்கிறான். இங்க முத்தத்துக்கே வழி இல்ல! நான் அட்டூழியம் பண்றேனா.. இல்ல நீ பண்றீயா?”

 

“கணக்கு வாத்தியாருக்குக் கணக்கு பண்ண தெரியல. இதுல என்னைச் சொல்ல வந்துட்டார்.” கூறியவள் ஓட.. பிள்ளைகள் வீட்டினுள் நுழைந்து விட.. பேச்சோடு கொஞ்சலும் முற்றுப்பெற்றது.

 

‘இருக்கு உனக்கு’ என்று வாயசைக்க மட்டும் தான் அவனால் முடிந்தது.

 

பிள்ளைகள் புண்ணியத்தில் கல்லூரிக்கு வாரம் இரு தினங்கள் மட்டும் சென்றாள். வார இறுதியில் குடும்பமாக சத்யனை பார்க்க சென்றனர்.

 

சத்யனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. தகவல் கூறி இருந்தானே ஒழிய வர சொல்லவில்லை. ஆசை தான், தன் நண்பனோடு தன் வெற்றியை பகிர்ந்துகொள்ள. ஆனால் ‘வா மூர்த்தி’ என்று துளசியின் நிமித்தம் கேட்டானில்லை. இருந்தும் மூர்த்தி வருவான் என்று தெரியும். அவர்கள் புரிதல் அப்படி. மூர்த்தி மட்டும் தனியே எப்படி வருவானோ என்று எண்ணியவனுக்குப் பெரிய ஆச்சரியம்.. ஐந்து பேர் அடங்கிய படை வந்து இறங்கியது.

 

சத்யனுக்கு பேச்சு வரவில்லை. நண்பனை ஆரத்தழுவிக் கொண்டான். ஜனாதிபதி கையில் விருது வாங்கிய நேரம் கூட இப்படி உணர்ச்சி வசப்படவில்லை சத்யன்.

 

துளசிக்கும் சத்யன் குடும்பம் பழக்கம் தானே… இருந்துகொண்டாள். கதை பேசி.. உதவி என்று பெரியவர்களோடும், விளையாடி.. கதை கூறி என்று சிறுசுகளோடும் ஒன்றிக் கொண்டாள். சத்யனின் தமக்கை மகள் குட்டி நந்தினியும் லட்சுமணனும் அதில் அடக்கம்.

 

சத்யனின் ஒன்றரை வயது ஆகாஷ், அனுவை படுத்தி எடுக்க.. அவள் நிலை தான் பரிதாமக இருந்தது. சத்யன் அதிக நேரம் வீட்டில் இருப்பதில்லை போலும்.. பிள்ளை அம்மாவிடமோ, பாட்டி தாத்தாவிடமோ தஞ்சம் புகுந்தான்.

 

அவர்கள் சென்ற மறு நாளே அவசர வேலையாய் சென்று மணி நேரத்தில் வீட்டுக்கு வந்த சத்யன் முகம் சரியில்லை. ஏனோ அன்று இரவு அவனால் உண்ணவும் முடியவில்லை.

 

அதனால் குடியைக் கையில் எடுத்திருந்தான். புகைக்காத சத்யன் புகைத்து நின்றான். “ஏன் சத்யா?” கேட்டவன் சிகரட்டை பிடுங்கி நசுக்கி எறிந்தான். இரவு நிலவின் அடியில், மொட்டை மாடியில் நண்பர்களுக்கான நேரம் அது.

 

“சின்ன குழந்தையை வச்சுகிட்டு.. அனு மாசமா இருக்கா. அவள விட உனக்கு கஷ்டமா? என்ன பிரச்சினை? ‘உங்க ஃப்ரெண்டு வர வர சரியே இல்ல. என்னன்னு கேளுங்கண்ணா’ன்னு அழாத குறையா சொல்லிட்டு போறா. ஏன் டா வேலை வேலைன்னு குடும்பத்தை விட்டு தள்ளி போற? சின்ன பொண்ணு டா. அழ விடாத. இது என்ன சத்யா புது புது பழக்கம்?”

 

சத்யன் வேதனையை யாரிடம் கூறுவான்? “நம்ம தங்கம் மாதிரி சின்ன பொண்ணு மூர்த்தி, ஒம்பது வயசு முடியல. பேரு நீலம். போப்பால்ல இருந்து வீட்டு வேலைக்குன்னு கூட்டிட்டு வந்திருக்கா ஒருத்தி. ஆனா.. பச்!

 

குழந்தை டா அவ! ஒரு மாசம் அந்த வீட்டுல இருந்தவனுங்க எல்லாம்…

 

எப்படியோ தப்பிச்சு வந்திட்டா மூர்த்தி. என் ஜீப் முன்ன தான் விழுந்தா. பாதி உயிர் இல்ல பொண்ணுக்கு. வைத்தியம் பார்த்து.. அவ வீட்டுக்கு நான் தான் கூட்டிட்டி போனேன். அவ வீட்டுல சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. மானப் பிரச்சினையாம். என்ன மானமோ? எனக்கு புரியல! ஏதேதோ பேசி அவங்களுக்கு புரிய வச்சு ரெண்டு நாள் முன்ன தான் விட்டுட்டு வந்தேன் மூர்த்தி. 

 

இன்னைக்கு அந்த பொண்ணு உடம்பு கிணத்திலன்னு தகவல் வருது. தற்கொலன்னு மனசாட்சியே இல்லாம வீட்டுல இருக்கவங்களே பொய் சொல்லியிருக்காங்க! மனசு ஆறல டா. சின்ன பொண்ணு மூர்த்தி. சொந்த வீட்டிலேயே ஏத்துக்காட்டி அவ எங்க மூர்த்தி போவா?

 

விவரம் தெரியாத குழந்தையை எல்லாருமா சேர்த்து கொன்னுட்டாங்க. பச்!

 

என் மேல தப்பு. இத நான் எதிர்பார்த்திருக்கணும். கொண்டு விட்டிருக்கிறவே கூடாது. ஆனா.. பாசம் காட்டி அரவணைச்சுக்க குடும்பமே ரெடியா இல்லேனா இவங்களுக்கு ஏது எதிர்காலம்?

 

அப்போ தப்பிச்சு வர பொண்ணுங்க எங்க தான் போகும்? போக்கிடம் இல்லேனா தப்பிச்சு என்ன பண்ண? நாங்களே காப்பாத்தினாலும் எங்க கொண்டு விடுவோம்? முடியல மூர்த்தி. எவ்வளவு ஒதுங்கினாலும் இதே விஷயம் ஏன் என்னையே சுத்துதுன்னு தெரியல.”

 

“அனு சேவை செய்யற இடம் என்ன ஆச்சு?”

 

“இருக்கு.. ஆனா போதல. அவங்க வெளி உலகத்துக்கு தயார் ஆகரதுக்குள்ள அனுப்பீடுறாங்க. அவங்க இடம் அவங்க ரூல்ஸ்!”

 

“ம்ம்… அனுவும் இத தானே தினமும் பாக்கறா?  இது என்ன அவளுக்கு ரெண்டாவதா.. மூணாவது மாசமா? ஒரே வாந்தியும் தல சுத்தலும்! இதுக்கும் மேல.. கைல சின்ன குழந்தையை வச்சுகிட்டு அவ்வளவு கஷ்ட படுறா! அனு டென்ஷன் குறைய அவளுக்கு எத்தன க்ளாஸ் ஊத்தி குடுக்கற? எத்தன சிகரட் பிடிக்கிறா?”

 

“டேய்… என்ன டா?”

 

“வேண்டாம் சத்யா. இது உனக்கு வேண்டாம். உனக்கு என்ன குறை? குடும்பம் இல்லையா? குழந்தை இல்லையா? நான் இல்லையா? வேண்டாம் சத்யா. முதல்ல நாம அத இழுப்போம். அப்புறம் அது நம்மள இழுக்கும். உனக்கு இது வேண்டாம்.”

 

“ம்ம்.. நீ ஈசியா சொல்லிட்ட.. என்னை சுத்தி இருக்க பிரச்சினைக்கு சல்யூஷன்?”

 

“துளசிட்ட பேசு சத்யா.”

 

சத்யனுகு சரியாகக் கேட்டதா என்றே புரியவில்லை. “என்ன டா?”

 

“துளசிட்ட இது பத்தி பேசுன்னு சொன்னேன். நீயும் அனுவும் பேசுங்க. அவளுக்கு அவ அப்பா வழி சொத்து கொஞ்சம் நிறையவே வந்திருக்கு. பெரிய கமர்ஷியல் ப்ளேஸ்.. நிறைய வருமானம் வருது. கூடவே அவ தாத்தாவோட நிலத்தில இருந்தும் நிறையவே வருது. எல்லாம் சும்மா தான் பேங்கில இருக்கு.

 

வாழ்கைய அப்படியே வாழ்ந்துட்டு போகாம ஏதாவது திருப்பி கொடுக்கணும்ன்னு அவ விரும்பவே.. அழியாத சொத்தா கல்விய கொடுக்கலாம்ன்னு ஒரு யோசனை. ஊர்ல ஸ்கூல் தொடங்கலாம்ன்னு அவ தான் சொன்னா. நாலஞ்சு வருஷத்துல ஊர் பக்கம் போயிட்டாலும், அவளே ஸ்கூல மேனேஞ் பண்ண ரெடி ஆகிடுவா.

 

ஸ்கூலுக்கு நான் வேற ஏற்பாடு பண்றேன். இதுல துளசி இன்ட்ரெஸ்ட் காட்டினா.. ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்கலாம். ராட்னி சார் கிட்ட பேசி ஃபாரின் ஃபண்ட் கிடைக்க ஏற்பாடு பண்ணுவோம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம குடுத்து பழகினவர். கேட்டா.. கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவார்.

 

அனுவால பார்த்துக்க முடியுமான்னு கேப்போம். ஏந்தாவது பண்ணலாம் சத்யா.. நம்மளால முடியும். டென்ஷன் ஆகாத.”

 

‘நீ விழ.. விழாமல், என் தோள் உன்னைத் தாங்கும்’ என்று சொல்லாமல் தோள் கொடுக்கும் நட்பு கிடைப்பது அரிது. இவர்கள் நட்பும் அரிய வகையை சேர்ந்தது தான்.

 

பேச்சு நீண்டது. வாழ்வில் பல மூலைகளைத் தொட்டு சென்றது. மெஹ்ரா மினிஸ்டர் கேஸ் இன்னும் இழுவையில் இருப்பதாக கூறினான். பெண்ணை கொன்றவர்கள் தலைமறைவானதும்.. அடையாளம் காட்ட வேண்டியவனின் திடீர் மரணமும் கேஸ் முடியமால் மூடப்பட்டதின் காரணம் என்றான். துளசியின் அப்பா உடல் ஓரளவு தேறியுள்ளதாக கூறினான். ரிஷிக்கு மதுவோடு திருமணம் முடிவாகி இருப்பதைக் கூறினான். இன்னும் என்னன்னவோ.. விடிய விடியப் பேச்சு நீண்டது.

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!