Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ38_2 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  – 38_2

 

மறுநாளே பெண்கள் காப்பகத்திற்கு சென்று வந்தனர். அங்கிருந்த பெண்களின் கதை ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய் பாதித்தது. செல்வன் தான் அதில் அதிகம் அடிவாங்கினான். இது எல்லாம் அவன் கேள்வி படாத விடயம். எட்டு வயது பிள்ளைகளை அங்குப் பார்த்தவன் உடைந்தே போனான். அந்த பெண்களுக்குப் போக்கிடம் இல்லை என்பது அவனை வெகுவாய் அசைத்தது. நூல் போல் சேலை. அண்ணன் போல் தம்பி! ஏதேனும் இவர்களுக்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒட்டிக் கொண்டது.

 



Advertisement

சட்டம் கைக்கட்டி நின்றது குறித்து சத்யனுக்கு வருத்தம்.

 

மூர்த்தியின் மனம் அவன் துளசியை சுற்றியே.

Advertisement

 

Advertisement

இரவு, பிள்ளைகள் இருவரும் தூங்கிவிட, அவர்கள் இருவரையும் தனியே படுக்க வைத்து துளசியை கை அணைப்பில் வைத்து கொண்டான். மீண்டும் சுருண்டு விடக்கூடாதே.

 

அணைத்த கரத்தை வயிற்றோடு இறுக்கிக் கொண்டாள். மெலிதான நடுக்கம். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வருத்தம் மட்டுமே. கண்டிப்பாகப் பயமில்லை. கண் மூடி படுத்திருந்தாள். “மூர்த்தி சார்” என்றாள்.

Advertisement

 

அழைப்பிற்காகவே காத்திருந்தவன் போல்.. “சொல்லு துளசி..” என்றான்.

 

மூர்த்தியின் நெஞ்சோடு முதுகை ஒட்டி படுத்திருந்தவள், முகம் பார்க்காமலே.. “என்னை நீங்க துளசியாக்கினீங்க மூர்த்தி சார். உங்கள மாதிரி மூர்த்தி இவங்களுக்கு கிடைக்க மாட்டாங்களே.. இவங்க எல்லாம் யாரா வழுவாங்க? துளசியா பிறந்து கோமலா வலியோடேயே செத்து போயிடுவாங்களா?” என்ற பதில் இல்லாத கேள்வியைக் கேட்டாள்.

 

எத்தகைய வலியிலிருந்து நீ என்னை காத்தாய் என்ற நன்றி அதில் அடக்கம். மூர்த்தி அவள் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் ஓங்கி உயர்ந்து நின்றான். அவன் உயரம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போனது.

 

“துளசி..” என்றான். தலையில் இதழ் பதித்து.

 

“உங்க கண்ணுல பட.. என்ன தவம் செஞ்சேன்னு தெரியல மூர்த்தி சார்..”

 

“என்னைக்காவது இதுக்கெல்லாம் காரணமான யாரவது ஒருத்தனை நேர்ல்ல பார்த்தா.. அவனுக்கு வாழ் நாள் பூரா வலிக்கற மாதிரி ஒரு தண்டனை கொடுக்கணும் மூர்த்தி சார். வாழவும் பிடிக்காம சாகவும் முடியாம இந்த பொண்ணுங்க நித்தம் வலில துடிக்கிற மாதிரி.. அவனும் துடிக்கணும். செஞ்ச பாவம் புரியணும்.” என்றவள் திரும்பி கணவன் நெஞ்சில் முகம் புதைத்து உறங்கிப் போனாள்.

 

ஒரு நீல நிற மகிழுந்தைப் பார்த்து நடுங்கியவள்.. மீண்டும் அதே குள்ள நரி கூட்டத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை பார்த்தபின்னும் பயம் கொள்ளவில்லை. மூர்த்தியின் பாதுகாப்பில் இருக்கும் தைரியமாக கூட இருக்கலாம். நிம்மதியாக கணவன் மார்பில் இளைப்பாறினாள்.

 

எல்லோருக்கும் இந்த நிம்மதி கிட்டுவதில்லையே..

 

அடுத்து வந்த தினங்களிலும் அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. அதே துளசி தான். இது தான் மூர்த்திக்கு வேண்டியிருந்தது. பழைய பயங்கள் முற்றிலும் விடுபடும் நாளுக்காக அவன் ஏங்காத நாளில்லை.

 

அதனால் தானோ இன்று வழக்கத்துக்கு மாறாகத் துள்ளலோடே சுற்றி வந்தான்.

 

வீட்டின் பின் புறம் இடம் காலியாயிருக்க அனுவை தவிர மற்ற அனைவரும் கால்பந்து விளையாட ஆரம்பித்தனர். குட்டிகளும் பெரியவர்களுமாக.. கேலியும் கொண்டாட்டமும். தூரல் ஆரம்பித்த பின்னும் விளையாட்டு முடிவுக்கு வரவில்லை.

 

பாரதி விழுந்து அழவும், பாரதியோடு துளசி விளையாட்டிலிருந்து விலகிக் கொண்டாள். கூடவே “என்ன ஆச்சு.. துளசி? அடி பலமா?” என்று கேட்டுக் கொண்டே பின்னோடு சத்யன் வரவும்.. “இல்லண்ணா சின்னதா சிராய்பு… நீங்க போய் விளையாடுங்கண்ணா..” என்று அனுப்பிவிட்டாள்.

 

பிள்ளையோடு அவளும் மேலை கழுவு, காலில் மருந்திடவும் அனு கொடுத்த ‘ரோஸ் மில்கை’  அருந்திய பாரதி, துளசியில் இடையைச் சுற்றி  காலை வளைத்து தோளில் தலை சாய்த்து கழுத்தைக் கட்டிக் கொண்டு தூங்கிப் போனாள்.

 

கூடாரத்திற்கடியிலிருந்து பேசிக்கொண்டே மைதானத்தில் நடந்து கொண்டிருக்கும் விளையாட்டைப் பார்த்து அமர்ந்திருந்தவர்களோடு, குளித்து வந்த சத்யனும் அமர்ந்துக் கொண்டான்.

 

மூவரும் அவர்கள் ஆரம்பிக்க நினைத்த ட்ரஸ்டை பற்றி சிறிது நேரம் பேசவும், ஆகாஷ் சத்தம் கேட்டு அனு சென்றுவிட, பேச்சும் நின்றது. இருவர் கவனமும் மூர்த்தி மேல்.

 

தம்பியோடும் மூன்று பிள்ளைகளோடும் மழையில் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தான் மூர்த்தி. கால்பந்தை விட அவர்கள் மேல் இருந்த சேர் அதிகம் போல் தெரிந்தது.

 

“கபடி ரொம்ப நல்லா விளையாடுவான். ஸ்கூல்ல காலேஜ்-ல அவன அடிச்சுக்க ஆளே இல்ல. படிப்பும் அப்படி தான்.” என்றான் சத்யன். யாரைப் பற்றின பேச்சு என்று சொல்ல வேண்டியிருக்கவில்லை துளசிக்கு.

 

“நாங்க ஒரே வயத்தில பிறக்கல அவ்வளவு தான். மத்த படி ரெண்டு பேரும் ட்வின்ஸ் மாதிரி ஒண்ணாவே சுத்துவோம். காலேஜ்ல பல ஜூனியர்ஸ்சுக்கு எங்கள்ல யாரு சத்யன், யாரு மூர்த்தினே தெரியாது. சத்யமூர்த்தி பிரதர்ஸ்ன்னு சொல்லுவாங்க. என்ன வரம்ன்னு தெரியல, இன்னைக்கு வரைக்கும் எதுவும், யாருமே எங்க நடுவில வந்தது இல்ல.”

 

“…”

 

“அவனுக்கு வைராக்கியம் அதிகம். நினைச்சத சாதிப்பான். அவனுக்குக் கோபமும் ரொம்ப அதிகம். தப்ப சகிச்சு போக தெரியாது. சட்டுன்னு கை நீட்டிடுவான். ஸ்கூல் படிக்கும் போது ஒரு தகராறு. தப்பு செஞ்ச சீனியர அடிச்சுட்டான். ‘நீ என்ன போலீஸ்சா நியாயம் கேக்க’ன்னு ஹெட் மாஸ்டர் கேட்டார். அன்னைக்கு முடிவு பண்ணினான். ஐ.பி.ஸ் ஆகணும்ன்னு. அவன் கனவு தான் இந்த ஐ.பி.ஸ்!

 

அப்போவே முறையா ஊர்ல சண்டை போட கத்துக்க ஆரம்பிச்சோம். ஒவ்வொரு லீவுக்கும் கேரளா போவோம் களரி கத்துக்க.

 

அசால்ட்டா சண்டை போடுவான். அதுக்காகவே பிறந்த வளர்ந்த மாதிரி.. எல்லாம் அவனுக்கு தானா வந்துது. சிலம்பமாகட்டும், களரி ஆகட்டும் ரத்ததில ஊறிப் போன மாதிரி வந்துது. காலையில எழுந்ததும் பச்ச முட்டையை வாயில ஊத்திட்டு ரெண்டு மணி நேரம் ப்ராக்டீஸ் பண்ணுவோம். லீவ் கிடைச்சா அது தான் எங்க முழு நாள் வேலையா இருக்கும்! காலேஜ் படிக்கும் போது, ஐ.பி.ஸ் எக்ஸாமுக்கு தனியா கோசிங்க கூட போனோம்.

 

பானு அக்கா ஹஸ்பன்ட் தான் இவனோட இன்ஸ்பிரேஷன். அத்தானுக்கு பயம்ன்னா என்னன்னு தெரியாது. தப்ப தட்டி கேக்க போயி நிறைய விரோதத்தை சம்பாரிச்சாங்க. அதுவே அவங்க வாழ்கைய முடிச்சிடுச்சு.

 

கொன்னவன நாங்க ரெண்டு பெரும் தேடினோம். மூர்த்தி கிட்டத் தான் மாட்டினான். மாட்டினவன் ஐ.சி.யூ-ல கிடந்தான். நான் அங்க இல்லேனா… மூர்த்தி அவன கொன்னுருப்பான்.

 

புருஷன் போன துக்கம் ஒரு பக்கம். மகனா வளர்ந்து நின்ன மூத்தவன் போலீஸ் கேஸ்சுன்னு.. அவங்களால தாங்கவே முடியல. அத்தானோட டிப்பார்மென்ட் ஃப்ரெண்ட்ஸ் தான் எங்க மேல கேஸ் விழாம பார்த்துகிட்டாங்க. மூர்த்தியோட கோபம், எங்க அவன அவங்க புருஷன் நிலைக்கு கொண்டு போயிடுமோன்னு அவன் கிட்ட போலீஸ் ஆககூடாதுன்னும்.. எந்த வம்புக்கும் போக கூடாதுன்னும் அவங்க தலை மேல கை வச்சு சத்தியம் வாங்கினாங்க.

 

அவன் எட்டு வருஷ கனவும் உழைப்பும் ஒரே நிமிஷத்துல உடைஞ்சு போச்சு. அக்கா மேல உயிரே வச்சிருந்தான். அவன் கனவ துரந்தது, அவங்க வார்த்தைக்கு கொடுத்த மரியாதை இல்ல.. வயத்தில குழந்தையோட இருந்த  அவங்க நிம்மதிக்கு கொடுத்த விலை.

 

அவன் அக்காக்காக அவன் ஆசையும் கோவத்தையும் மூட்ட கட்டி வச்சிட்டு, கணக்கு புக்கோட மூழ்கி போனான். ‘மூர்த்தியா இது?’ன்னு கேக்கற அளவுக்கு அவன் கிட்ட நிதானம். வயசு பிள்ளைகளுக்குப் பாடம் எடுக்கிறனால கோவம் கூட வரது இல்ல.

 

அவன் தன்மையே மாறி போச்சு. அப்போ கூட அவன் அவனா தான் இருந்தான். அவன் கனவெல்லாம் ஒன்னும் இல்லங்கிற மாதிரி. அவ்வளவு திடம் அவன்ட்ட. எங்க செட்ல எல்லாருக்குமே ஆச்சரியம் தான்.

 

“யாரு போலீஸ் ஆனா என்ன சத்யா? நீ ஆகு டா ஐ.பி.ஸ்-ன்னு சொன்னான்.” சந்தோஷமா தான் இருந்தான்.

 

உன்ன தவற விட்ட பிறகு தான் அவனையே அவன் இழந்து போனான். உனக்காக முதல் தரம் அவங்க அக்கா பேச்ச மீறினான். உனக்காக என்ன வேணும்னாலும் செய்வான்னு தெரிஞ்சது. மூர்த்தி, அடிச்ச மூணு பேரும் இருக்கானுங்களா செத்தானுங்களானு கூட அவன் கேக்கல.. அந்த கதறல், ரத்தம் அது எதுவுமே.. அவன எந்த விதத்துலேயும் பாதிக்கல. அது அபூர்வம். எல்லாராலையும் ஹேண்டில் பண்ண முடியாது.

 

நான் இத்தன வருஷ போலீஸ் வாழ்க்கைல இப்படி ஒருத்தன அடிச்சதும் இல்ல.. ஒருத்தன சாகடிச்சதும் இல்ல. எனக்குள்ள அது இல்லன்னு தோணுது. ஒரு நல்ல தைரியமான.. தட்டி கேக்கர போலீஸ்ச நாடு இழந்து போச்சுன்னு சொல்லுவேன்.

 

ஆனா அவன் அதுக்கெல்லாம் கவலை படல. அவன் செய்யற வேலைய முழு மனசோட செய்றான். உன் கூட ரொம்ப சந்தோஷமா இருக்கான்.

 

என் கல்யாணம் போது அவன பார்த்ததும், உன்ன நினைச்சே வாழ்க்கைய அழிச்சுப்பான்னு நினைச்சேன். உன்ன நினைச்சுகிட்டே ரொம்ப சந்தோஷமா வாழறான்.

 

நீங்க புருஷன் பொண்டாட்டி.. நான் இங்க ஒண்ணும் சொல்லக் கூடாது. இருந்தாலும் என் மூர்த்திய மீட்டுக் கொடுத்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ் துளசி.” என்றான். சொல்ல வேண்டும் என்று எதையுமே சொல்லவில்லை. இன்று மூர்த்தியின் சிரிப்பும்.. துள்ளலும் அவனைப் பேச வைத்தது. இவன் திருமணத்தின் போது இதே வீட்டில் உயிரற்றவன் போல் காட்சியளித்த மூர்த்தி தானா இது என்று தோன்றவே உள்ளுக்குள் இருந்ததைத் துளசியிடம் கொட்டிவிட்டான்.

 

துளசி முகத்தில் புன்னகை.. ‘யார் யாருக்கு வாழ்வு கொடுத்தது?’

 

மழை கொட்டி தீர்த்தது. விளையாட்டு முடிந்து மைதானம் சேரும் சகதியுமாக இருந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் வீட்டுக்குள் சிட்டுக்குருவிகளின் சத்தம் ஆரம்பமானது.

 

தங்கத்தின் தலையைத் துவட்டி விட்டுக்கொண்டே வந்தவன், “போ தங்கம் செல்வன் மாமாட்ட துவட்டிக்கோ…” என்று பாரதியைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டான்.

 

“உள்ள படுக்க வைக்க வேண்டியது தானே… அவ என்ன சின்ன குழந்தையா? தோளும் முதுகும் உனக்கு வலிக்காது?” கூறியவனுக்கு பாரதி பாரமாக இல்லை. அப்படியே அமர்ந்துகொண்டான்.

 

“என்ன டா அண்ணனும் தங்கையும் யார் மண்டையை உருட்டுறீங்க?”

 

பேசிக்கொண்டிருந்தவனையே கண் சிமிட்டாமல் பார்த்திருந்தாள். அவ்வப்போது அவன் முறுக்கிவிட்ட மீசையும், கன்னக்குழியும் இன்றும் அதே கிறக்கத்தைக் கொடுத்தது. முதல் முறை பார்த்து வாய் பிளந்து நின்றாளே.. இன்னும் அதே பிரம்மிப்பு தான், அவன் மேல்.

 

காங்கேயம் காளையாய்.. காவல் தெய்வமாய்.. தாத்தாவாய்.. தோழனாய்.. தகப்பனாய்.. தாயாய்.. காதலனாய்.. கணவனாய்.. மாறிப்போனவன் என்று அவளின் சுவசமாய் மாறிப்போனான்? ‘மூர்த்தி சார்’ மனம் கூப்பாடு போட்டது. அவனுக்குக் கேட்டிருக்குமோ?  மீசையை வருடிக் கொண்டே அவள் புறம் திரும்பிப் புன்னகைத்தான்.

 

கனவு என்றால் என்ன? தேடல் என்றால் என்ன? காதல் என்றால் என்ன? மூர்த்தி என்றால் என்ன? கேள்வியோடு பார்த்து அமர்ந்திருந்தாள்.

 

மற்றவர்களுக்கு எப்படியோ.. துளசியின் கனவு, தேடல், காதல், எல்லாமே மூர்த்தியாகிப் போனான்.

 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!