Skip to content
Post Views: 12,933
அத்தியாயம் 15
காலை ஐந்து மணிக்கே விழிப்பு வந்திட கிளம்ப தயாரானாள் விஷாலினி. அறையில் விளக்கை போட்டதும் ஹாலில் படுத்திருந்த விஷ்ணு எழுந்துவிட்டான்.
“எதுக்கு இந்நேரத்துல எழுந்த?” என்றான்.
“இப்போ கிளம்பிட்டா காலேஜ்க்கு லீவ் போடத் தேவையிருக்காது. அதான்” என்று குளிக்க ஆயத்தமாக, “அப்போ மொபைல் வேணாமா?” என்றான்.
Advertisement
“வேணும். நீங்கதான காலைல வாங்கிக்கலாம்னு சொன்னிங்க”
“சொன்னேன்தான், ஆனா ஒரு குடும்பஸ்த்தனை பர்சனல் வேலைக்காக இந்த நேரத்துக்கு எழுப்ப யோசனையா இருக்கு”
விஷாலினிக்கும் சங்கடமாகிட, “சரி கொஞ்ச நேரம் கழிச்சு வாங்கிக்கலாம்” என்றாள்.
Advertisement
மொபைலை காலையில் வாங்கி வர சொல்லி நேற்றிரவே தனது டிரைவரிடம் சொல்லிவிட்டான் விஷ்ணு. மொபைலை சீக்கிரம் கொடுத்தால் உடனே கிளம்பிடுவாள், படிப்பு கெட்டுவிடக்கூடாதென்று தந்தையும் இவளுக்குத்தான் ஆதரவு அளிப்பார்.
Advertisement
இன்று முக்கிய பணியிருப்பதால் தன்னாலும் இவளோடு செல்ல முடியாது. எனவே எட்டு மணிவரையாவது தங்க வைக்க திட்டமிட்டு, காலை எட்டு மணிக்கு மேல் மொபைலை தன்னிடம் சேர்க்கும்படி டிரைவரிடம் சொல்லியிருந்தான்.
தந்தை எழும்வரை இவளோடு தனித்திருக்க எண்ணி, “போய் ப்ரஸ் பண்ணிட்டு வா, ஏழு மணிக்கு மேல குளிச்சிக்கலாம்” என்றனுப்பினான்.
விஷாலினி பல் தேய்த்து வர, டீயை நீட்டினான். “நீங்க போட்டிங்களா?” என்று ஆச்சர்யத்தோடு ஒரு முழுங்கு குடித்தவள் முகம் சுருங்கியது. இவனும் குடித்தவன், “நல்லாயில்லதான். ஆனா நான் போட்டேன்றதுக்காக குடிக்கவெல்லாம் மாட்டியா?” என்றான்.
Advertisement
“எனக்காக நீங்க டீ போட்டது பெரிய விசயம், அதுக்காக நல்லாயில்லாத டீலாம் என்னால குடிக்க முடியாது. இருங்க நான் போட்டுட்டு வரேன்” என்று இவள் டீ வைத்து வந்தாள்.
இவன் முறைப்போடு வாங்கி குடிக்க, “டீயை என்கரேஜ் பண்ணி இன்னொரு நாளைக்கு சமைக்க ஆரம்பிச்சிட்டா தாங்க முடியாதில்ல? அதான்” என்றாள் பாவமாக.
சிரித்தவன், “குடி” என்றான் இன்முகமாக.
நேற்றிரவு தனது அணைப்பை மறுக்காமல் தன்னுள் கட்டுண்டிருந்தவளை பார்த்தவாறு டீயை பருகிகொண்டிருந்தான். விஷ்ணு பார்வையில் விஷாலினிக்கும் நேற்றிரவு நியாபகம் வர டீயை குடித்துக்கொண்டிருந்தாள் படபடத்த இமைகளோடு.
“நான் உன்னை விரும்புறது தெரிஞ்சிருக்கு. ஆனாலும் ஒரு கால் பண்ணல” என்றான் சிறு கோபத்தோடு.
“பத்து நாளைக்கொருமுறை மெஸேஜ் போடுவேனே”
“என்ன மெஸேஜ்? எனக்கு ஏதும் பிரச்சனையில்ல, நான் நல்லா படிக்கிறேன். இதான?”
இவனின் குரல் சற்று உயர்ந்திருக்க, “மாமாக்கு கேட்டுட போகுது” என்று பதறியவள், “அத்தை மாமாக்கு என்னை பிடிக்கும்தான். ஆனா மருமகளா பிடிக்குமானு தெரியாதே. உங்களை நினைக்கும் போதெல்லாம் அத்தை மாமாக்கு துரோகம் செய்ற மாதிரி ஃபீலாகும்” என்றாள் பெரும் கவலையாக.
“முதல்ல உனக்கு என்னை பிடிக்குமா சொல்லு”
“பிடிக்கும்”
“எப்போயிருந்து?”
“உங்களுக்கு என்னை பிடிக்கும்னு தெரிஞ்சப்புறம்”
“உன்னை பிடிச்சவனையெல்லாம் உனக்கு பிடிச்சிடுச்சா?”
இவள் முறைக்க, “இரண்டு வருசமா பிடிக்கும், ஆனா விஷ்ணுவர்தனை விட, உன் கோபால் மாமா மகனை பிடிக்கும். ஆமாவா?” என்றான்.
“இதென்ன? இரண்டும் நீங்கதான?”
“இரண்டும் நான்தான். ஆனா நைட் நான் கட்டிப்பிடிச்சதை அக்ஸப்ட் பண்ணினதுக்கு காரணம் உன் மாமா மகன் ஏமாந்திடக் கூடாதுன்றதுக்காக. சரியா?”
இவள் பாவமாய் பார்க்க, “இரண்டு வருசம் முன்னாடியிருந்தே எனக்கு உன்னை பிடிக்கும்னு நீ எப்படி உணர்ந்தியோ… அதேபோல உனக்கு என்னை பிடிக்கும்னு நான் உணர வேணாமா?” என்றான்.
அதிர்ந்தவள், “பிடிக்கவும்தானே எனக்கு பிரச்சனைனா உங்களுக்கு கால் பண்றேன்?” என்றாள்.
“ஒரு வெல்விஷரா நினைச்சு பண்ணியிருப்ப. அதுவும் எதாவது பிரச்சனைனா எனக்கு கால் பண்ணுனு சொல்லி நானே நம்பர் கொடுத்ததால பண்ணின”
வாதிட விரும்பாமல், “சரி இனி தினமும் பண்றேன்” என்றாள்.
“தினமும் கால் பண்ணி பேசுறதில்ல காதல். மனசுக்கு பிடிக்கனும். ஆசையா கட்டிப்பிடிச்சவனை ஏன்டா கட்டிப்பிடிச்சோம்னு நினைக்க வைக்க கூடாது”
நேற்றிரவு இவனின் அணைப்பிற்கு சம்மதம் தெரிவித்தது போதவில்லை. பதிலுக்கு தானும் அணைத்திருக்க ஆசைப்பட்டிருக்கிறானோ என்று தற்போதுதான் தோன்ற, “என் காலேஜ் சிலபசை விட இது டஃபா இருக்கு” என்றாள் பாவமாக.
“உனக்கு டஃபா இருக்கா? இதை நான் நம்பனுமா?”
“நானும் எத்தனையோ பேர் லவ் பண்றதை காலேஜ்ல பார்த்திட்டுதான் இருக்கேன், அவங்களை பார்க்கும்போது ஈஸியா தெரிஞ்சது. எனக்கு வாய்ச்ச சிலபஸ்தான் டஃப், போகப்போக புரிஞ்சிப்பேன். நல்லா படிச்சிப்பேன். இப்போ குளிக்க போறேன்” என்று உள்ளே ஓடினாள்.
தனது அணைப்பை சகிக்க முயல்கிறாள் என்று சற்று நேரம் கழித்தே விஷ்ணுவிற்கு புரிய, அணைப்பை தளர்த்தி விஷாலினினியை பார்த்தான். இரு கைகளும், கண்களும் இறுக்கமாய் மூடியிருந்தது. தான் அணைப்பை தளர்த்தியதை கூட அறியாமல் அப்படியே நின்றிருந்தாள்.
தான் படுக்க சொன்னதும் பொம்மைபோல் போய் படுத்தாள் மெத்தையில். இவன்தான் அறையின் விளக்கை அணைத்து, கட்டில் மறையும் அளவிற்கு கதவை சாற்றிவிட்டு ஹாலில் உள்ள சோபாவில் படுத்தான்.
முக்கிய குற்றவாளியை கண்டுபிடித்து, கோர்ட்டில் ஆஜர் படுத்துவதில் இரண்டு நாள்களாய் சரிவர தூங்காமல் இருந்தபோதும், தனது அணைப்பை மறுக்காமலும் சகிக்க முயன்றபடியும் நின்றவளை நினைக்க தூக்கம் வரவில்லை விஷ்ணுவிற்கு.
அவளின் கோபால் மாமனின் மகன் விருப்பத்தை மறுக்க முடியாமல் நின்றிருக்கிறாள். தனித்து என்னை பிடிக்கவில்லயோ என்று நினைத்திருந்தவன் மனம், தற்போது விஷாலினி அளித்த பதிலில் நிம்மதி கொண்டது.
டஃப் சிலபஸாம் நானு. போகப்போக புரிஞ்சிப்பாளாம், படிச்சிப்பாளாம். அதுவும் நல்லா படிச்சிப்பாளாம் என்று இதமாய் நினைத்தவன், “குளிச்சிட்டு எதை போடுவ? இரு உன்னோட டிரஸ் எடுத்துட்டு வரேன்” என்றான் சிரிப்போடு.
அச்சோ சுடிதாருக்குள்ள இன்னர் காயப்போட்டேனே என்று பதறியவள் “வேணாம் நானே எடுத்துக்கிறேன்” என்று மின்னலாய் வெளியேறி உடைகளை எடுத்துக்கொண்டு உள்ளே ஓடினாள்.
கோபாலன் படுத்திருந்த அறையில் வெளிச்சம் தெரிய, “எழுந்தாச்சா ப்பா?” என்றான்.
“ம் விஷ்ணு” என்று குளியலறை சென்று வந்தார். விஷாலினி வைத்த டீயை இவன் சூடேற்றி எடுத்து வர, “நீ டீ போட்டியா?” என்றார் ஆச்சர்யமாக.
“உங்க மருமக போட்டா” என்றவன் தான் டீ வைத்ததையும் அதற்கு அவள் சொன்ன விளக்கத்தையும் சொல்ல, பெரும் குரலெடுத்து சிரித்தார் கோபாலன்
அதன்பின்னே சமையலர் வந்தார். எட்டு மணிபோல் மூவரும் உண்ண அமர்ந்தனர். விஷ்ணு, கோபாலன், மேகலை மூவரும் சம்மந்தம் பேசியது விஷாலினிக்கு தெரியாது ஆதலால், மகள் போல் பாசம் வைத்திருக்கும் மாமாவும் அத்தையும் தன்னை மருமகளா ஏற்பார்களா?
அல்லது காவ்யாக்காவை போல நானும் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டேன் என்று தவறாக நினைப்பாரா என விஷாலினிக்குத்தான் குற்றவுணர்வாக இருந்தது.
“ஏன்டா டல்லா இருக்க? நைட் நல்லா தூங்கலையா?” என்றார் கோபாலன்.
“இல்ல மாமா, நல்லா தூங்கினேன்” என்றாள் தடுமாற்றமாக.
கோபாலன் மகனைப் பார்க்க, “அவங்க பாட்டி நினைப்புல இருப்பாளா இருக்கும், கொஞ்ச நாள்ல சரியாகிடுவா” என்றான்.
விஷாலினி படிப்பு முடிந்த பின்னே திருமணத்தை வைத்துக்கொள்ளலாம், ஆனால் மேகலைக்கு நம்பிக்கை கொடுப்பதற்காக முறையாக பெண் கேட்கவேண்டுமே என்று “நீ எப்போ வர சென்னைக்கு?” என்றார்.
“இன்னும் பத்து நாளைக்கு முடியாது. அதுக்கப்புறம் எப்போ வரமுடியும்னு கால் பண்ணி சொல்றேன்ப்பா” என்றான்.
சற்று நேரத்தில் மூவரும் உண்டு முடிக்கவே, “போய் ரெடியாகு” என்று தந்தையை அழைத்துக் கொண்டு வெளியே வந்தவன், “முதல்ல இவளுக்கு என்னை பிடிக்கனும்ப்பா. அப்புறம் ஆன்ட்டிக்கிட்ட முறைப்படி பேசலாம்” என்றான்.
“அது நான் கார்ல போகும்போதே கேட்டுடறேன் விஷ்ணு, நான் கேட்டு விஷாலினி மறுக்குமா? அதோட என் மகனுக்கு என்ன குறை? வாட்டசாட்டமா, லட்சணமா இருக்க. நல்ல பதவியில இருக்க. எல்லாத்துக்கும் மேல எந்த கெட்ட பழக்கமும் இல்ல. இதெல்லாம் விஷாலினிக்கும் தெரியும்தான? அப்புறம் எதுக்கு மறுக்கப்போவுது?” என்றார் பெரும் நம்பிக்கையோடு.
“ஹம்… வேலைல இருக்கேன், கெட்டபழக்கம் இல்லைன்றதெல்லாம் ஓகேதான். லட்சணமா இருக்கேனா இல்லையானு அவதான சொல்லனும்? நீங்க பெத்தவர், மகனை குறை சொல்லமாட்டிங்க. வரப்போற புருசன் இப்படி இருக்கும்னு அவளுக்கும் எக்ஸ்பட்டேஷன் இருக்கும்ல?” என்றான் சிரிப்போடு.
“விஷாலினிக்கு பிடிக்கலனா விட்டுடுவியா?” என்றார் பொய் முறைப்போடு.
“அதெப்படி முடியும்? இரண்டு வருசமா நினைசிட்டிருக்கேன். லேசுல விட்டுடுவேனா? பிடிக்க வைப்போம்ல?”
“அப்புறம் என்னடா? முறைப்படி பேசி முடிச்சிடலாம்”
“இப்போதைக்கு ஏதும் கேட்காதிங்கப்பா. அவ படிப்பு முடியட்டும்”
“அதுவும் சரிதான். இன்னும் ஒரு வருசம்தானே” என்று ஒப்புக்கொண்டார்.
பிறகு கோபாலனும் விஷாலினியும் கிளம்பினர். டிரைவர் வேண்டாம் என்று தானே கார் ஓட்டினார். இத்தனை நாள் மகளைப் போல நினைத்தவருக்கு, தற்போது மருமகள் என்ற எண்ணம் மனதை இதமாக்க, எதேதோ பேசியபடி உற்சாகமாக காரோட்டினார்.
*** *** *** ***
அன்னை மூலம் விஷ்ணுவின் விருப்பம் அறிந்திருந்தாள் காவ்யா. மனம் கொண்ட சந்தோசத்திற்கு அளவேயில்லை. விஷாலினி இதற்கு சம்மதிப்பாளா என்ற கவலை இருந்தபோதும், நம்ம அப்பா கேட்டா கண்டிப்பா மறுக்கமாட்டா என்ற நம்பிக்கையும் இருந்தது.
விஷ்ணுவின் உறவு இனி இந்த ஜென்மத்தில் கிடைக்காது என்ற ஏக்கத்தில் இருந்தாள். விஷ்ணுவே தன்னை இப்படி ஒதுக்குகையில் அவனுக்கு வரும் மனைவியும் நிச்சயம் தன்னை நிராகரிப்பாள். அவள் செய்யவில்லை என்றாலும் விஷ்ணு செய்ய வைப்பான் என்ற கவலையில் இருந்தாள் காவ்யா.
தற்போது விஷாலினிதான் தனது அண்ணன் மனைவி என்பது அத்தனை நிம்மதியை கொடுத்தது. யார் சொன்னாலும் விஷாலினி தன்னோடான உறவை மறுக்கமாட்டாள், விஷாலினி மூலம் தனது அண்ணன் குழந்தைக்கு அத்தை என்ற உரிமையை கொண்டாடலாம் என்று எதிர்கால எண்ணங்கள் கற்பனையில் மிதந்தது.
இன்று விஷாலினி வருகிறாள் என்பதற்காக கல்லூரிக்கு விடுமுறை எடுத்து அவளுக்காக காத்திருந்தாள் காவ்யா. ம்… நேற்றிரவு தந்தையும் காவ்யாவும் விஷ்ணுவின் குவாட்ரஸில் தங்கியிருந்தார்கள் என்பதால் விஷ்ணு ப்ரப்போஸ் செய்திருப்பானா? அந்த நேரம் விஷாலினி மனநிலை என்னவோ என்றறியும் ஆவலோடு காத்திருந்தாள் காவ்யா.
பதினொரு மணிபோல் கோபாலனோடு வந்தாள் விஷாலினி. தந்தையின் கார் சத்தம் கேட்டதும் வெளியே வந்தவள் “வா விஷாலினி” என்று உற்சாக வரவேற்பளித்தாள் காவ்யா.
மகளின் உற்சாசத்திலேயே மனைவி விசயத்தை சொல்லிவிட்டாள் என்பது புரிய, ஏதும் கேட்கவேண்டாம் என்பதாய் கண்ணசைத்தார் கோபாலன்.
காவ்யா முகம் வாடிட, “காலேஜ் போகலையாக்கா?” என்றாள் விஷாலினி.
“இல்ல போகல, உன்னை பார்க்கத்தான் வெய்ட் பண்ணிட்டிருந்தேன்”
“பாட்டி பத்தி கேட்கவாக்கா?” என்றாள் வருத்தத்தோடு.
“முதல்ல உள்ள போம்மா, அப்புறம் பேசிக்கலாம்” என்றார் கோபாலன்.
“அத்த சாவி” என்று விஷாலினி கத்த, “மேகலையே அங்கயிருக்கு. வீட்டுக்கு போய் என்ன பண்ண போற? இங்கையே இரு” என்றார் வெளியே வந்த பிரபா.
“இல்லத்த, வீட்ல எல்லாம் போட்டது போட்டபடி இருக்கு. பாட்டி விசயம் கேட்டதும் எதையும் செய்யாம கிளம்பிட்டோம். பாத்திரம் தேய்ச்சி, வீட்டை க்ளீன் பண்ணிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, ஹாஸ்டலுக்கு கிளம்பனும். நாளைக்கும் காலேஜ் போகலனா அவ்வளோதான்” என்றாள்.
சாவியை கொடுத்தவர், “வீட்டை சுத்தம் செய், ஆனா ஏதும் சமைக்காத. உனக்கும் சேர்த்துதான் செஞ்சிட்டிருக்கேன்” என்றார். சரியென்பதாய் தலையசைத்து தனது வீட்டிற்கு சென்றாள் விஷாலினி.
விஷாலினி சென்றதும், “இன்னும் விஷாலினிக்கு விசயம் தெரியாது. விஷாலினி படிப்பு முடியட்டும்னு விஷ்ணு சொல்லிட்டான். முறைப்படி பொண்ணு கேட்கும்போது விஷ்ணுவை பிடிக்குமானு கேட்டுக்கோ. இப்போதைக்கு ஏதும் கேட்கவேண்டாம்” என்றார் மகளிடம்.
விஷ்ணு விசயத்தில் தலையிடாதே என்று சொல்லுவார் என பயந்தவளுக்கு தந்தையின் விளக்கம் நிம்மதியை தர, மகிழ்வோடு சம்மதமாய் தலையசைத்தாள் காவ்யா.
error: Content is protected !!