Skip to content
Post Views: 6,885
மது அடுத்து வந்த நாட்களில் ரகுவின் வீட்டிற்குப் போக வில்லை!
ஏன் கேண்டீனுக்கே போக வில்லை.
மானுவுக்கும் மாதுவுக்கும் செமஸ்டர் லீவ் விட்டிருக்க, அவள் வீட்டிலேயே இருந்து கொண்டு, அவர்களைக் கொண்டே வேலைகளைப் பார்த்துக் கொண்டாள். கீதாவின் துணையுடன்!
Advertisement
அவர்களும் மறுப்பேதும் சொல்லாமல், எந்த கேள்வியும் கேட்காமல், அக்கா எதோ ஸ்ட்ரெஸ்ல இருக்கா, அவளாவே சரியாகி வருவா, அதுவரைக்கும் எதுவும் கேட்க வேண்டாம் என்று இருந்து விட்டார்கள்!
ரகுவின் வீட்டிற்கு மானு தான் இப்போது ஸ்நாக்ஸ் கொண்டு போனாள் குழந்தைகளுக்கு.
அவளும் மதுவை மாதிரி நன்றாகவே காபி போடுவாள். எனவே பெரியவர்க்கு மது சொல்லியிருந்தபடி காபி போட்டும் கொடுத்து வந்தாள்.
Advertisement
ஒரு வாரம் சென்று விட்டது.
Advertisement
தன்விக் குட்டி மதுவைத் தேடி அழவே ஆரம்பித்து விட்டது!
சமாளிக்க முடியாமல், வைஷு அவளுக்கு போன் செய்தாள்.
“கேஸ் விஷயமா கொஞ்சம் அலைஞ்சுட்டு இருக்கேன் டாக்டர், அதான் வர முடியல சாரி..”
Advertisement
“ஓ சரி” என்று அப்போது சொன்ன வைஷு அடுத்த நாள் சண்டே ஷாப்பிங் போன போது, எதேச்சையாக ராஜுவை சந்தித்தாள்.
நல விசாரிப்புகளுக்குப் பின், “மதுவும் நீங்களும் கேஸ் விசயமா ரொம்ப பிசி போல?”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல டாக்டர். இது சிவில் கேஸ் தானே, ஹியரிங் வர்றப்போ மது வந்தா போதும், இப்ப வரத் தேவையில்ல!”
“ஓ அப்படியா, உங்க கூட மதுவும் சேர்ந்து கோர்ட்டுக்கு போயிட்டு இருக்கான்னு நினைச்சிட்டேன்!”
“அவ கேஸ் நான் தான் பாலோ பண்றேன். மதுவுக்கு ஒண்ணும் இதிலே வேலையேயில்லை” என்று சொல்லிவிட்டான் அவன் யதார்த்தமாக.
“சோ, மது நம்மகிட்ட பொய் சொல்லி சமாளிச்சு இருக்கா! வேற ஏதோ காரணம் இருக்கு அவ இங்க வராம இருப்பதற்கு!”
“இந்த பார்த்தி ஏதும் பண்ணியிருப்பானா? இல்லையே அவனும் தான் இப்போ ஊரிலேயே இல்லை.
மற்ற பிரண்ட்ஸ் கூட சேர்ந்துட்டு தாய்லாந்து டூர் போயிருக்கான் என்று ரகு கூட சொன்னானே!
நேரே அவள் வீட்டுக்கே போய் என்னன்னு கேட்டுட்டு வரணும்!”
கிளம்பி விட்டாள் அடுத்த நாள் மாலையே.
கூட தன்விக் குட்டியையும் அழைத்துக்கொண்டு.
மதுவின் வீட்டை விசாரித்துக்கொண்டு சென்றாள்.
வீடு எளிமையாய் இருந்தாலும் சுத்தமாக இருந்தது.
வாசலில் சாணம் தெளித்துக் செம்மண் இட்டு கோலம் போடப்பட்டு இருந்தது.
உள்ளே சென்றால், ஹாலில் சமீபத்தில் ஏதோ விசேசத்திற்காக போடப்பட்டிருந்த நெளி நெளியான மாக்கோலம்! அப்படி ஒரு திருத்தமாக!
அவள் சென்றபோது, மதுவின் பாட்டி பட்டு தான் அவளை வரவேற்று, உட்கார வைத்து காபியும் உப்புமா கொழுக்கட்டையும் கொடுத்து உபசரித்தார்!
“மது மாடியில் இருக்கா, இருங்க வர சொல்றேன்” என்று மதுவை அழைத்தார்.
மது வந்தாள்.
நைட்டியில் இருந்தாள். அதிலும் அழகாக தான் இருந்தாள் அவள்!
“வாங்க டாக்டர்”, வைஷுவை சற்றும் எதிர்பாராத கொஞ்சம் அதிர்ச்சியுடன் வரவேற்றாள்.
“மதூ.. “என்று கத்திக் கொண்டு அவளிடம் தொத்திக் கொண்டது தன்விக் குட்டி!
மது அவளைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்தாள்.
பொதுவாக அவள் குடும்பம் பற்றி பட்டுவிடமும் மதுவிடமும் பேசினாள் வைஷு.
தன் குடும்பம் பற்றியும் சொன்னாள்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது வைஷு ஒன்றைக் கவனித்தாள்.
தன்விக் குட்டி, மதுவின் கன்னத்தைத் தடவி தடவி கொஞ்சுவதும், அவள் பேசுவதை ரசிப்பதும், அப்பப்போ அவள் கன்னத்தில் நினைத்து நினைத்து முத்தமிடுவதையும் ஆச்சர்யமாக பார்த்தாள்!
மதுவும் பேச்சோடே, அனிச்சை செயலாகவே, தன்வி தலையைக் கோதுவதும், அவ்வபோது அவள் நெற்றியில் முத்தமிடுவதையும் பார்த்தாள்!
இந்த கொஞ்ச நாள்ல எப்படி இவர்களுக்குள் இப்படி ஒரு பாண்டிங் ஏற்பட்டது?
வைஷு சின்ன வயதில் இருந்து ரகுவின் அம்மா விஜியைப் பார்த்து இருக்கிறாள்.
ரகுவும் இப்படி தான் அவன் அம்மா மடியில் உட்கார்ந்து கொள்வான்!
அவரும் இப்படி தான் ரகுவின் தலையை, கோதி, நெற்றியில் முத்தமிடுவார், வைஷுவின் அன்னையிடம் பேசிக் கொண்டிருக்கும்போது!
இதயே இப்ப இந்த மதுவும் செய்கிறாளே! அவளுக்கு ஒரே ஆச்சர்யம்!
அது தான் இந்த ரகு பக்கி, இவள பார்த்தாவே கொஞ்சம் மந்திரிச்சு விட்ட மாதிரி இருக்கா?
அதான் பர்த்டே பார்ட்டியில நானும் ராகினி அக்காவும் பார்த்தோமே அவன!
அவன் ஏதும் ப்ரபோஸ் பண்ணியிருப்பானோ!
அது மதுவுக்குப் பிடிக்க வில்லையோ! அதான் மது கேண்டீனுக்கும் வீட்டுக்கும் வர மாட்டேங்கிராளா?
என்னவா இருக்கும்?
பேச்சினிடையில் பட்டு பாட்டி, அங்கிருந்து கொஞ்சம் நகர்ந்த நேரம், டக்கென்று, மதுவின் கையைப் பிடித்து தன்வி தலையில் வைத்த வைஷு, “இப்ப சொல்லு மது, நீ ஹாஸ்பிட்டலுக்கும் வீட்டுக்கும் வராம இருக்கிறதுக்கான உண்மையான காரணத்தை!”
“டாக்டர் என்ன இது, இப்படி குழந்தை மேல எல்லாம்?”
“அப்ப சொல்லு ..”
மது கொஞ்சம் தயங்கி விட்டு, பின் ரகு தன்னிடம் சொன்ன அந்த கடும் வார்த்தைகளை சொல்லிவிட்டாள்!
“அடப்பாவி!” அப்படியே ஷாக்கானாள் வைஷு!
“என்னையும் வளைச்சுப் போட்டு கல்யாணம் பண்ண ட்ரை பண்றியான்னு கேட்டானா?”
ரகுவிற்கு இப்படி கூட பேச தெரியுமா?
நிச்சயம் இல்லை! இதில் ஏதோ நடந்து இருக்கு.. யோசித்த அவள் மதுவிடம் சொன்னாள்.
“எனக்கென்னமோ, ரகு மனசார அப்படி சொல்லியிருக்க மாட்டான்னு தோணுது!
இன் பாக்ட், அவனுக்கு அந்த வார்த்தைக்கு முழுசா அர்த்தம் தெரிஞ்சி சொன்னானான்னு கூட எனக்கு டவுட் தான்!”
“ஏன்னா ரகுவின் வீட்டில், யாருமே இப்படி லோக்கலா பேசவே மாட்டாங்க!
அவன் இந்த மாதிரி அவன் சர்க்கிளில் யாரும் பேசி பார்த்தே இருக்க மாட்டான்!”
“இது ஏதோ இந்த பார்த்தியோட கேம் மாதிரி தெரியுது! அவன் தான் இப்படி சீப் ஆன வார்த்தைகள பேசுவான்!”
“அவனை நான் கண்டிக்கிறேன் மது! அவனுக்காக நான் உன்கிட்ட சாரியும் கேட்டுக்கறேன், இனி இப்படி உனக்கு ஏதும் மரியாதைக் குறைவு ஏற்படாம நான் பார்த்துக்குறேன்!
ப்ளீஸ் மது, நீ ஹாஸ்பிட்டலுக்கு வா, வீட்டுக்கும் வராம இருக்காத! பாரு இந்த பிள்ளைய.. அப்படியே ஏங்கிப் போய்ட்டா தெரியுமா? இவளுக்காகவாச்சும் நீ வா மது!” அழுத்தி சொல்லிவிட்டு கிளம்பினாள் வைஷு!
காரில் போகும் போது வைஷு ரொம்பவே யோசித்துக் கொண்டுதான் போனாள்!
இந்த மாதிரி வார்த்தைகளை, நிச்சயம் ரகுவிற்கு பேச தெரியாது!
ரொம்ப நிச்சயமாக இது இரவல் வார்த்தைகள் தான்! சர்வ நிச்சயமாக அது அந்த பார்த்தியோடது தான்!
ஏன் என்றால் டாக்டருக்குப் படிக்கும் போது, பேசன்ட்களிடம் கேஸ் ஹிஸ்டரி கேட்க சொல்வார்கள்!
அப்போது அவர்கள் சொல்லும் பல வார்த்தைகளுக்கு அவனுக்கு அர்த்தம் புரியாது!
வைஷுவும் டாக்டர் என்றாலும், அவள் வீட்டில் அவள் தான் முதல் டாக்டர்!
அவள் தாத்தா பாட்டியெல்லாம் கிராம பின் புலத்தைக் கொண்டவர்கள்.
அதனால் கிராமப் புற பேச்சு வழக்குகளும், இப்படி சில வேண்டாத சொற்களுக்கும் அவளுக்கு நன்றாகவே அர்த்தம் தெரியும்!
ரகு தான் இது போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாது நிற்பான்!
அப்பல்லாம் என்கிட்ட ட்ரான்ஸ்லேசன் கேட்டு படிச்ச பக்கி, இப்ப மதுவ பார்த்து இந்த வார்த்தையை சொல்லியிருக்கு!
மதுவ பார்க்கும்போதெல்லாம், அவளின் செய்கைகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கே விஜி அத்தை நினைவு வருது!
இதையே தான் மாமாவும் பெரிய மாமாவும் கூட பீல் பண்ணியதாக சொன்னார்களே பார்ட்டியின் போது!
அப்ப, சரியான அம்மா பிள்ளையான ரகுவிற்கும் அவன் அம்மாவின் நினைவு தான் வந்திருக்கும் மதுவைப் பார்க்கும்போதெல்லாம்!
அதுவே அவனை அவளிடம் ஈர்க்கவும் செய்து இருக்கு!
இத ஈகோ தலைக்கேறியிருக்கும் அந்த பய புள்ள, அத ஏத்துக்க முடியாம, அவளப் போய் ஹர்ட் பண்ணி பேசியிருக்கு, அதுவும் இரவல் டயலாக் பேசி!
இன்னும் யோசித்த வைஷுவிற்கு சட்டென எல்லாம் புரிபட்டு விட்டது!
அட ஈகோ பிடிச்ச நாயே!, அகம் பிடிச்ச கழுத! நீ அவ கிட்ட தலைக் குப்புற மயங்கி விழுந்துட்டு அவ மேலயே பழிய போடுறீயா?
அவன் இப்படி மதுகிட்ட மயங்கி இருக்கிறது, இந்த பார்த்திக்கும் புரிஞ்சுருக்கு போல!
இத கலைச்சு விட, அவன் தான் ரகுவின் ஈகோவைத் தூண்டி விட்டு இப்படி பேச செய்து இருக்கான் போல!
அவன் செய்யக் கூடிய ஆள் தான்!
என்னையைவே “ராகவனை எப்படி கல்யாணம் செய்றன்னு பார்க்கிறேன்” என்று சவால் விட்டவன் தானே அவன்!
“ரகு என் பாக்கெட்ல, நான் நினைச்சா, உன் கல்யாணத்தையே நிறுத்திட முடியும்!” என்றும் சொன்னானே!
அன்று விஜி அத்தை இருந்தார்! ரகுவும் அவர் கன்ட்ரோல்ல இருந்தான்!
ஆனா, இன்னிக்கு அவர் இல்லை! இவன் காட்டுல மழை!
“இருடா, நானா, நீயான்னு பார்த்துடலாம்!”
வைஷு தீர்மானித்தாள்!
அன்று இரவு உணவு முடித்த பின், ரகுவிடம் பேச வேண்டும் என்று அவள் அறைக்கு வரச்சொல்லி இருந்தாள் வைஷு.
ரகுவும் வந்தான்.
“குட்டீஸ் ரெண்டும் தூங்கிடுச்சுங்க போல?” என்றவாறு அவனும் வந்து அமர்ந்தான்.
“என்னடி பேசப் போறே?” ராகவன் கேட்டான்.
“அது வந்து மதுவுக்கு திடீர்னு கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சு போல, இனி அவளால கேண்டீன் நடத்த முடியுமான்னு தெரியல, ரகு, நீ உன் பார்த்தியவே மறுபடி கூப்பிட்டுக்கோ!
இப்ப உனக்கு சந்தோசம் தானே!”
அவள் எதிர்பார்த்தபடியே அவன் முகம் அதிர்ச்சிக்குள்ளானது! சட்டென அப்செட் ஆனான் ரகு!
நியாயத்திற்கு அவனுக்கு சந்தோசமே ஏற்பட்டு இருக்க வேண்டும்! இவன் ஏன் அப்செட் ஆகுறான்?
“பட்சி சிக்கிடுச்சு!” வைஷு மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்!
“ம்ம். சரி பேசுறேன்” என்று சொல்லிவிட்டு, தொய்வாக எழுந்தான் ரகு!
“ஏய்! நில்லுடா.. “ அவனைப் போக விடாமல் தடுத்த வைஷு, ஓங்கி ஒரு அறை விட்டாள் அவனை!
அவன் அதிர்ந்துப் போய் பார்க்க, ராகவனுக்கும் அதே அதிர்ச்சி தான்!
“ஏய் வைஷு..” என்று ஏதோ திட்ட ஆரம்பித்த ராகவனிடம், அவனையும் ரகுவை அறைய சொல்லி சைகைக் காட்டி பல்லை கடித்துக் கொண்டு முறைத்தாள் வைஷு!
ராகவனும் மனைவி சொல்லே மந்திரம் என்பது போல அறைந்து விட்டு, பின் கேட்டான்!
“ஏண்டி அவன அடிச்ச?”
“என்னையும் ஏண்டி அடிக்க சொன்ன?”
“இவன் என்ன பண்ணி வச்சுருக்கான் தெரியுமா உங்களுக்கு?”
“என்ன பண்ணினான், நீ இவ்வளவு கோபம் படுற அளவுக்கு? நீ தானே அம்மாக்கு அப்புறம் அவனுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுவ? இப்ப என்ன ஆச்சு?”
வைஷு, மதுவிடம் இவன் பேசியதை சொன்னாள்!
“இதைக் கூட மது என்கிட்ட சொல்லவே இல்லை! மறைக்க தான் செய்தாள்! நான் தான் அவளை ஒரு மாதிரி இமொசனல் ப்ளாக்மெயில் பண்ணி தெரிஞ்சுகிட்டேன்!”
“டேய்! நீயாடா இப்படி பேசியிருக்க? ஒரு டாக்டர் மாதிரியா பேசியிருக்க?
எனக்கே ஆச்சர்யமா இருக்கு! வைஷு வ தவிர வேற யார் சொல்லியிருந்தாலும் நான் நம்பியிருக்கவே மாட்டேன்!
ஏண்டா, நம்ம கிட்ட பிசினெஸ் காண்ட்ராக்ட்ல இருக்கிறவங்க கிட்ட இப்படி தான் பேசுவியா?”
“ஏதோ, வைஷு ரிக்வெஸ்ட் பண்ணினதாலே, அந்த பொண்ணு நம் வீட்டுக்கு வந்து போயிட்டு இருக்கு!
கூட பெரியப்பாவுக்கும் அந்த பொண்ணு வர்றது கொஞ்சம் அவர பீஸ்புல்லா வைக்குது! இத தாண்டி அவளுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்! நீ ஏன் இப்படி பேசினே?”
“அது வந்து, நம் வீட்டுல இருக்க எல்லோரும் மது மதுன்னு அவ புராணம் பாடிட்டு இருந்தாங்க அதான்.” ரகு நியாயப்படுத்த முயன்றான்!
“அவங்களுக்கு அவளை பிடிச்சுருக்கு, பாராட்டுறாங்க உனக்கு என்ன ப்ரோப்லம்?”
“அப்படியே என்னையும் அவ பக்கம் இழுக்க ட்ரை பண்ணிட போறான்னு தான்! “
“ஓ.. அப்படி சார அவ எத்தனை தரம் தனியே மீட் பண்ணி பேசியிருக்கா?” டாக்டர் வைஷு இப்ப வக்கீல் வைஷு ஆகி கேள்வி கேட்க தொடங்கினாள்!!
“ஒரு தரம் கூட இல்ல!” ரகு பதிலை விழுங்கினான்!
“உனக்கு பிடிக்கும்னு ஏதாவது சாப்பிட கொடுத்து ஸ்பெஷல் ஆ மேலே விழுந்து கவனிச்சாளா?”
“ம்ஹும்! ஒரு காபி கூட கொடுத்து விட மாட்டா!
ஆரம்பத்துல எல்லோருக்கும் கொடுக்கிற மாதிரி கொடுத்தா, நான் அத தொடவே இல்லை, வேஸ்ட் பண்ணினேன், அதுக்கப்புறம் கொடுத்து விடற நிறுத்திட்டா!”
“ஓகே.. இப்ப, இப்படி கேட்கிறேன் .. அவ ரிவர்ஸ் சைக்காலஜில ஏதாவது ட்ரை பண்ணினாளா? உன்னை வேணும்னே அவாய்ட் பண்றது, இல்ல இன்சல்ட் பண்றது அப்படின்னு..?”
“இல்ல, ஒரு நாள் ரோட்டில் எதேச்சையாக தன்வி குட்டியுடன் போன போது பார்த்தேன்! அப்ப கேசுவலா தான் பேசிட்டு போனா!”
“அப்ப எத வச்சு அவ உன்னை வளைச்சு போட ட்ரை பண்ணின்னான்னு அவ அக்யூஸ் பண்ற?”
“ஒண்ணுமில்ல தான்!”
‘அப்படி வா வழிக்கு! உனக்கு அவளை ரொம்ப பிடிச்சுருக்கு, ஆனா உன் ஈகோ அத ஒத்துக்கல, ரொம்ப ஈசியா அவ பேர்ல பழிய போட்டுட்ட!”
“அப்புறம் அந்த வளைச்சு போடுறது.. இப்படியெல்லாம் உனக்கு பேச தெரியாது! அந்த பார்த்தி பய தான் உனக்கு சொல்லிக் கொடுத்து ஏத்திவிட்டிருக்கணும்! “
“நீ மதுவ லவ் பண்றியா ரகு? உனக்கு அவளை பிடிச்சுருக்கா? எனக்கே அவள பார்க்கும்போது விஜி அத்தை நினைவு வருது!
அப்ப கண்டிப்பா உனக்கும் அந்த மாதிரி தோணி, அதுவே உனக்கு மதுவ பிடிச்சுப் போக காரணமாக இருக்கலாம்!
உண்மையை சொல்லுடா”
சரியாக பாய்ண்டைப் பிடித்து விட்டாள் வைஷு!
ரகு, அவள் கேட்டதுக்கு ஒண்ணுக்கு கூட பதில் சொல்ல முடியாமல், பேய் முழி முழித்துக்கொண்டு இருந்தான்!
“ஏய்.. வைஷு. என்ன நீ பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டு போயிட்டு இருக்க, மது நம் வீட்டுக்கு வந்தா நல்லாதான் இருக்கும்!
ஆனா உன் பிள்ளைங்களுக்காக, உன் கன்வீனியன்சுக்காக, அவனை போர்ஸ் பண்ணாதே! அவ்வளவு செல்பிஸ்ஸா டீ நீ?” ராகவன் அவளைத் திட்டினான்
“ செல்பிஸ்ஸா? நானா? நீங்க எப்படி என்னைய அப்படி நினைக்கலாம்! எனக்கு இவன நாலு வயசுல இருந்து தெரியும்! இவன் எதுக்கு ஆசைப் படுவான், எது பிடிக்காதுன்னு.. “
“அவன் என்னை உங்களோட சேர்த்து வைக்க எவ்வளவு செய்தான்! பதிலுக்கு நான் அவன் ஆசையை நிறைவேத்தணும்னு நினைக்கிறது உங்களுக்கு செல்பிஸ்ஸா தெரியுதா?” வைஷு அழத்தொடங்கி விட்டாள்!
“ஏய்.. அப்படி இல்லடி..” ராகவன் அவளை நெருங்கி வந்தான் சமாதானம் செய்ய!
ரகு அப்படியே மவுனமாகவே வெளியே சென்று அவன் அறைக்குள் நுழைந்து கொண்டு கட்டிலில் படுத்துக் கொண்டு யோசித்தான்!
வைஷுவின் கேள்விகள், அதிலிருந்த நியாயங்கள், அவனை ரொம்ப யோசிக்க வைத்தன!
போனில் இருந்த அவன் அம்மா விஜியின் போட்டோவைப் பார்த்து, மனதுள் கேட்டான்!
“அம்மா, நான் தப்பு பண்ணிட்டேனாம்மா?“
“ஆமாடா நந்து கண்ணா” என்பது போல இருந்தது அவன் அன்னையின் சிரித்த முகம்!
“நான் இருந்திருந்தா, உன்னை என்ன கேட்டு இருப்பேனோ, அத தான் உன் அண்ணி என் ஸ்தானத்தில் இருந்து கேட்டுருக்கா! ஒரு பொண்ண நீ இவ்வளவு காயப் படுத்தி இருக்கக் கூடாதுப்பா! நாளைக்கு அவ கிட்ட முதல்ல போய், உன் ஈகோவெல்லாம் மூட்டைக் கட்டி வச்சுட்டு சாரி கேளு!” அவன் அன்னை அவனிடம் சொல்வது போல உள்ளுணர்வு அவனிடம்!
நாளை, எங்கு அவளை சந்திப்பது? அவள் தான் காண்டீனுக்கும் வருவதில்லை, வீட்டுக்கும் வருவதில்லையே ஒரு வாரமாக!
அவள் வீட்டிற்கே போகலாமா?
அவள் வீடு எங்க இருக்கு? வைஷுவிற்கு தெரியும்! கேட்டால் சொல்வாளா?
யோசித்துக் கொண்டே தூங்கி விட்டான்.
மறுநாள் ஓபி பார்த்துக் கொண்டிருக்கும் போது, எதேச்சையாக CCTV காட்சிகளை அவன் அறை டிவியில் பார்த்த ரகுவிற்கு கொஞ்சம் ஆச்சரியம்!
ஏன் ரிசப்சனில் இருக்கும் ஸ்டாப்கள் எழுந்து நிற்கிறார்கள்?
சில வழக்கமான பேசண்டுகள் கூட எழுந்து நிற்கிறார்கள்?
அப்படி யார் வருவது? அப்பா கூட ஊரில் இல்லையே!
தொடர்ந்து பார்க்க, அங்கே வாக்கிங் ஸ்டிக் சகிதம், டிரைவர் துணையோடு அங்கே உள்ளே நுழைந்து கொண்டிருந்தார் பெரியப்பா ரெங்கநாதன்!
அவரா? இங்கா! பெரும் ஆச்சரியம் அவனிடம்!
பார்த்துக் கொண்டிருந்த நோயாளியிடம் “இதோ வருகிறேன்” என்று சொல்லி விட்டு, அறையை திறந்து கொண்டு அவன் வெளியே வர, அவனைப் போலவே ராகவனும், வைஷுவும் கூட வெளியே வந்து இருந்தனர்!
ஆனால் பெரியப்பாவோ, இவர்கள் யாரையுமே சட்டை செய்யமால், “காண்டீன் எந்த ப்ளோர்?” என்று கேட்டுக் கொண்டு லிப்டை நோக்கி நடந்தார் மதுவைக் காண!
error: Content is protected !!