Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை அச்சம் நாணம்

ஆசை அச்சம் நாணம் 3.2

தன்னை விஷ்ணுவிற்கு பிடிக்காது என்ற காரணத்தால் சாப்பாடு கொடுத்துவிட்டு கிளம்பலாம் என, “ம்மா, அத்தைகிட்ட சாப்பாடை கொடு, காலைலயிருந்து சாப்பிட்டிருக்கமாட்டாங்க” என்றாள்.

“சாப்பாடு எதுக்கு எடுத்து வந்திங்க?” என்று பிரபாவதி கேட்க, “எங்க சாப்பாடு நீங்க சாப்பிடமாட்டிங்கனு அதை எடுத்துட்டு வரலத்த, இது உங்க வீட்டு சாப்பாடுதான். வீட்டை பூட்டும்போது டைனிங்டேபிள்ல இருந்ததை பார்த்தேன், அதைத்தான் எடுத்துட்டு வந்தோம்” என்றாள் சமாதானமாக.

சாப்பிடும் எண்ணமில்லாமல் பிரபாவதி இருக்க, “மாமாக்கு சரியாகிடும்தானேத்த?” என்றாள் கலவரமாக.

“சரியாகிடும் இல்லடா, இப்போவே சரியாகிடுச்சு, அதனாலதான் ஈவ்னிங் கிளம்ப சொல்லிட்டாங்க” என்றார் கோபாலன்.



Advertisement

நம்பிக்கையோடு தலையசைத்தவள், “நாம கிளம்பலாம்மா, அவங்க சாப்பிடட்டும்” என்றாள் அன்னையிடம்.

“நாங்க வெளில இருக்கோம். நீங்க சாப்பிடுங்க” என்று வெளியேற எத்தனித்தார் மேகலை.

“ஹாஸ்பிட்டல்ல இத்தனை பேரை அலவ் பண்ணமாட்டாங்க, நீங்க கிளம்புங்க ஆன்ட்டி” என்றான் விஷ்ணு.

Advertisement

விஷ்ணுவின் பேச்சை மறுக்கக்கூடாதென, “வாம்மா வீட்டுக்கு போலாம். யாருமில்லனா அசுரன் கத்திட்டேயிருப்பான்” என்று விஷ்ணு வீட்டின் நாயை காரணமாக்கினாள்.

Advertisement

பின்னே மேகலையும், விஷாலினியும் கிளம்ப, “தேங்க்ஸ் விஷ்ணு” என்றார் கோபாலன்.

விஷ்ணு புரியாமல் பார்க்க, “நம்ம குடும்ப பிரச்சனையில விஷாலினி மேல கோபத்தை காட்டிடுவியோனு பயந்துட்டேன். ஆனா நீ அவளை ஏதும் சொல்லல” என்றார் பாராட்டுதலாக.

மேகலை அப்படி சட்டென எங்கும் கிளம்ப மாட்டார். தீபாவளி, பொங்கல் போன்ற விஷேசங்களுக்காக மகளுக்கு உடை வாங்க என வருடத்தில் நான்கைந்து நாள் வெளியே செல்வார்கள். மற்றபடி சொந்த பந்தம் என யார் வீட்டிற்கும் சென்றதில்லை என்று விஷ்ணு அறிவான்.

Advertisement

அப்படிபட்டவர் தந்தையை பார்க்க வந்திருப்பதிலேயே தனது தந்தை மீதுள்ள பாசம் புரிந்தது. ஆன்ட்டி கிளம்பும்போதே தானும் மாமாவை பார்த்தாக வேண்டும் என்று பிடிவாதம் செய்திருப்பாள் என நினைத்தபடி விஷ்ணு அமைதியாக நின்றிருக்க, “இரண்டு பேரும் சாப்பிடுங்க” என்றார் கோபாலன்.

கோபாலனுக்கு மருத்துவமணையிலேயே உணவை கொடுத்திருந்தனர். மகன் பசியோடிருக்கிறானே என்று “கை கழுவிட்டு உக்காரு விஷ்ணு” என்றார் பிரபாவதி.

உண்ணும் மனநிலை இல்லை என்றபோதும், தான் உண்ணாவிட்டால் அன்னையும் உண்ணமாட்டார், தந்தையும் கவலைப்படுவார் என, கை கழுவி உண்ண அமர்ந்தான்.

“விஷ்ணுக்கு போட்டுட்டு நீயும் சாப்பிடு பிரபா” என்றார். பிரபாவதிக்கும் உண்ண மனமில்லை என்றபோதும் மறுத்தால் மகனும் உண்ணமாட்டானே என விஷ்ணுவிற்கு பரிமாறி, தனக்கும் போட்டுக்கொண்டவர் “மேகலையும், விஷாலினியும் கூட சாப்பிட்டிருக்கல போல, ரொம்ப சோர்ந்திருந்தாங்க” என்றார் நெகிழ்வோடு.

இருவர் முகத்தின் வேதனையை நினைத்த விஷ்ணு “இப்போ அப்பா நல்லாயிருக்கார்னு தெரிஞ்சிடுச்சில்ல? வீட்டுக்கு போனதும் சாப்பிடுவாங்கம்மா” என்றபடி உணவை உண்டான்.

மாலை ஏழு மணிபோல் வீட்டிற்கு வந்தனர். அசுரனுக்கு உணவளித்திருக்கிறார்கள் என அவனின் தட்டை பார்த்ததும் தெரிந்தது. மேகலை விஷாலினி இருவருக்குமே நாய் என்றால் ஆகாது. அசுரனை இருபது நாள் குழந்தையில் வாங்கி வரும்போதே, இங்கதான் வளர்த்த போறிங்களா? என ஒவ்வாமையோடு கேட்டார் மேகலை.

“உங்க வீட்டுல குடியிருந்துட்டு வேற எங்க வளர்த்துறது ஆன்ட்டி? உங்க பர்மிஷன் இல்லாம வாங்கியிருக்க கூடாதோ?” என விஷ்ணு கேட்க, “ச்சே ச்சே… அப்படி இல்லப்பா. எனக்கு நாய்ன்னா கொஞ்சம் பயம். நீங்க வளர்த்துங்க, கொஞ்சம் கட்டிப்போட்டு வளர்த்துங்க” என்று தன்மையாக கோரிக்கை வைத்தார் மேகலை.

விஷ்ணுவும் வீட்டிற்குள்ளேயேதான் வளர்த்தான். ஐந்து மாதம் ஆனபின்னேதான் வாக்கிங் அழைத்துச்செல்ல ஆரம்பித்தான். பிறகு வந்த நாள்களில் மேகலையும் விஷாலினியும் உண்மையில் நாய்க்கு மிகவும் பயப்படவே, அவர்களுக்கு தொல்லை தாராத வண்ணம் பார்த்துக்கொள்வான்.

நேற்று வரை அசுரன் அருகே கூட சென்றதில்லை இருவரும். ஆனால் தம் சூழல் தெரிந்து இன்று உணவு வைத்திருக்கிறார்கள் என்று நினைத்து “ம்மா போய் சாவி வாங்கிட்டு வா” என்றான்.

கார் சத்தமும் அசுரன் சத்தமும் கேட்கவே மேகலை சாவியோடு வந்தார். கோபாலனிடம் நலம் விசாரித்து, “ரெஸ்ட் எடுங்கண்ணா” என்று தனது வீட்டிற்கு சென்றார் மேகலை.

“ஏண்டா… ஆன்ட்டிதான் சாப்பாடு வச்சிருக்காங்கள்ல? திங்கிறதுக்கென்ன?” என தனது காலை சுற்றி வந்துகொண்டிருந்த நாயைத் திட்டி, தலையை வருடிக்கொடுத்து கதவைத் திறந்தான்.

“இரண்டு பேரும் இங்கையே இருங்க விஷ்ணு” என்று உள்ளே சென்று வந்து கணவனுக்கு திருஷ்டி சுற்றிப்போட்டு வீட்டினுள் அழைத்துச் சென்றார் பிரபாவதி.

உள்ளே வந்ததும் கோபாலனின் பார்வை மகளின் அறையை நோட்டமிட்டது. தந்தையை உணர்ந்தவன், “ப்பா முதல்ல குளிங்க. கொஞ்சம் ஃப்ரஸ்ஸா ஃபீல் ஆகும்” என்றான்.

“ப்ச்” என சலித்தாலும், காலையிலேயே குளிக்காததால் சரியென தலையசைத்து குளியலறை புகுந்தார்.

தானும் குளிக்க தனதறை செல்ல, அந்த நேரம் காவ்யாவின் மொபைலுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்ததற்கான சத்தம் வந்தது.

சுவிட்ச் ஆஃப் செய்திடலாம் என்ற கோபத்தோடு எடுக்க, குறுஞ்செய்தி விஷாலியினிடமிருந்து எனக்காட்டியது.

இவளா என யோசித்தபடி பார்க்க, நிறைய செய்திகள் அவளிடமிருந்து வந்திருந்தது. காலையிலிருந்தே அனுப்பியிருக்கிறாள். செய்தி அனுப்பியது மட்டுமல்லாது பத்து முறை அழைத்தும் இருக்கிறாள்.

காவ்யா மேல் வெட்டிப்போடும் கோபம் இருந்தபோதும், தந்தை அவளை கேட்டால் என்ன செய்வது? இவளின் குறுஞ்செய்தியை பார்த்தால் எங்கிருக்கிறாள் என தகவல் கிடைக்குமோ? மீண்டும் தந்தைக்கு முடியாமல் போனால் காவ்யாவின் வரவு தேவையாகயிருந்தால்? என்ற யோசனையோடு வாட்ஸாப்பிற்குள் சென்றான்.

‘போனை அட்டன் பண்ணுங்கக்கா’ என்ற முதல் செய்திக்குப் பிறகு அரைமணி நேரம் கழித்து, ‘நீங்க எவ்வளோ பெரிய தப்பை செய்திருக்கிங்கனு இப்போ புரியாது. யாரை நம்பி போனிங்களோ அவங்க உங்களை ஹர்ட் பண்ணும்போதுதான் புரியும்’ என்று வாய்ஸ் மெஸேஜ் செய்திருந்தாள்.

இரண்டாவதாக, ‘நான் அன்னைக்கு கேட்டப்போ பி.ஜி முடிச்சபின்ன வீட்டுலதான சொல்லி கல்யாணம் செய்துக்குவேனு சொன்னிங்க? அப்புறம் ஏன்க்கா இப்படி செய்திங்க? இங்க உங்க அண்ணன் நீங்க செய்த துரோகத்தை தாங்கிக்க முடியாம பெல்ட்டால அடிச்சிக்கிட்டார். ரத்தம் வர அளவுக்கு அடிச்சிக்கிட்டார்க்கா” என்று இரண்டாவது குரல்வழி செய்தி கரகரத்த குரலோடும்,

அடுத்து இரண்டு மணிநேரம் கழித்து, ‘மாமாக்கு உடம்பு முடியாம போய்டுச்சுக்கா, ப்ளீஸ் எங்கயிருந்தாலும் வந்திடுங்க, அப்பாம்மாக்கு தெரியாம பொண்ணை கட்டிக்கிறவங்க நல்லவங்களா இருக்கவே முடியாதுக்கா, தயவு செய்து வந்திடுங்க‘ என்ற செய்தியை பெரும் அழுகையோடு அனுப்பிருந்தாள் விஷாலினி.

தற்போது கடைசியாக ‘தயவு செய்து என் மெஸேஜை பாருங்கக்கா, இங்க நிலைமை தெரிஞ்சா கண்டிப்பா நீங்க வந்திடுவிங்க‘  என்று கெஞ்சலாக அனுப்பியிருந்தாள்.

அனைத்து செய்திகளையும் பார்த்ததற்கான அடையாளம் தெரியவே உடனே அழைத்துவிட்டாள் விஷாலினி. அழைப்பை ஏற்றபடி ஹாலுக்கு வர, விஷ்ணு பேசும் முன்னே “அக்கா எங்க இருக்கக்கா? ஏன் போன் அட்டன் பண்ணல? இங்க மாமாக்கு ரொம்ப முடியாம ஆச்சுக்கா” என படபடப்பாய் பேசியவளை, “ப்ச்” என்ற விஷ்ணுவின் குரல் தடுத்து நிறுத்தியது.

எதிர்புறத்திலிருந்து வந்த ஆண் குரல் காவ்யாவின் காதலன் என நினைத்து, “ஹலோ… என் அக்காவை திருட்டுத்தனமா கூட்டிட்டு போயிருக்கிங்களே? அப்பாம்மா ஆசீர்வாதம் இல்லாம நல்லா வாழ முடியுமா உங்களால?” என திட்ட ஆரம்பிக்க, “ஏய் நான் விஷ்ணு” என்றான்.

“என்ன?” என்று அதிர்ந்து விழித்தவள் விஷ்ணு வீட்டின் ஜன்னலை பார்க்க, இவன் உள்ளிருந்து விஷாலினியைப் பார்த்தவாறு, “காவ்யா போனை வீட்டுல வச்சிட்டு போய்ட்டா, இனி இந்த நம்பருக்கு போன் பண்ணாத” என்றான் கட்டளையாக.

வாடிய முகத்தோடு, சரியென்பதாய் தலையை உருட்டி இணைப்பை துண்டித்து விஷ்ணுவின் பார்வையிலிருந்து மறைந்தாள் பெரும் கவலையோடு.

விஷாலினி அவளின் அன்னையைப் போல நல்ல நிறம். தந்தை போல அடர்ந்து நீண்ட புருவம் அவளின் முகத்திற்கு ஏற்றதாக இருக்காது. சிறு வயதிலிருந்து தனது ஆறு வயதுவரை விரல் சப்பும் பழக்கம் இருந்ததால் முன்னிரண்டு பற்களும் சற்றே தூக்கலாய் இருக்கும்.

இரண்டு வருடம் முன்பு வரை கூட அவ்வப்போது கடைவாயில் எச்சில் வழிய கண்டிருக்கிறான் விஷ்ணு. எப்பொழுதும் மடித்துக்கட்டிய இரட்டை ஜடைதான். பள்ளி விடுமுறை நாட்களில் தலைவாருவது அதிசயம்தான். அதற்கு மேகலை திட்டும் சத்தம் விஷ்ணு வீடுவரை கேட்கும்.

பத்தாம் வகுப்பில் அவளின் மதிப்பெண் கேட்டு வியந்துபோனான் விஷ்ணு. இந்த பேக்கு இவ்வளோ நல்ல படிப்பாளியா? என்று தங்கையிடம் சிலாகிக்க, ரேங்க் பட்டியலில் விஷாலினி இதுவரை முதல் இரண்டு இடம் தவிர்த்து வாங்கியதேயில்லை என பெருமையாய் கூறினாள் காவ்யா.

தற்போது பனிரண்டாம் வகுப்பு ஆரம்பித்ததிலிருந்துதான் விஷ்ணு வீட்டினை நோட்டம் விடுவதை சற்று குறைத்திருந்தாள். தவறென்று உணர்ந்தெல்லாம் இல்லை.  விஷ்ணு வீட்டில் அனைவரும் உண்ண வரும் நேரத்திற்குள் இவள் பள்ளிக்கு கிளம்பியாக வேண்டும்.

அதோடு மாலையும் ஏழு மணிக்கு மேல்தான் வீட்டிற்கு வருவாள் ஆதலால் அந்த நேரம் ஹாலில் யாரும் இருக்கமாட்டார்கள். அதன்பிறகு இவள் முகம் கை கழுவி, உண்டு, படிக்க அமர்ந்திடுவாள். இவை அனைத்தும் காவ்யா தந்தையிடம் சொல்லும்போது இவன் கேட்டறிந்தது.

இத்தனை நாள், இங்கிதம் தெரியாத சிறுமி என்றுதான் விஷாலினியை நினைத்திருந்தான். ஆனால் இன்று காவ்யாவிற்கு அவள் அனுப்பிய செய்திகளை பார்த்து, கேட்டறிந்த பின்னே நம் குடும்பத்தைப் பற்றி இவள் யோசிக்கும் அளவு கூட காவ்யா யோசிக்கவில்லையே என்ற சுணக்கத்தோடு குளியலறை புகுந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!