Skip to content
Post Views: 5,712
அத்தியாயம் 13
பானுக்கு அவன் தூக்கியது, கூச்சமாக இருந்தாலும், கீழே விழுந்து விடுவோமோ என பயந்து அவனது டீ சர்ட்டை இறுக பிடித்தவள் ‘’என்ன பண்றீங்க………?’’ என கத்தினாள் பயத்தில்.
Advertisement
‘’கத்தாதடி……. அம்மா ரூம் பக்கத்துல தான் இருக்கு. சத்தம் வெளிய கேட்கப் போகுது’’. குளிரும் மேல படுன்னு சொன்னா கேட்கனும். நீயும் தூங்காம புரண்டுகிட்டே இருக்க. அந்த சத்தத்தில எனக்கும் தூக்கம் போகுது என அவளை கட்டிலில் படுக்க வைத்தான்.
‘’நான் புரண்டு படுக்கறதால உங்க தூக்கம் போகுதா…….?’
பின்ன இல்லையா, ‘’உன் கொலுசு சத்தமும், கண்ணாடி வளையல் சத்தமும் என்னை தூங்க விடாம டிஸ்டர்ப பண்ணுது”.
Advertisement
ஏற்கனவே ”உங்க அம்மா உன் தலை முழுக்க மல்லிகை பூவை வச்சு விட்டு, ரூம் முழுக்க அந்த வாசத்தால என் தூக்கம் போச்சு. போதாததுக்கு நீயும் சல சலன்னு சத்தம் போட்டா…, நான் எப்படி தூங்கறதான் என்று முறைத்தான்’’, அவளை.
Advertisement
அவன் கூறியதும், ‘’பூ வாசம் உங்களுக்கு பிடிக்காதா…? வேணும்னா எடுத்துடட்டுமா’’ என்றாள் எழுந்து அமர்ந்து.
அதெல்லாம் வேண்டாம். நீ படு. ‘’ரொம்ப குளிருதா…..? ஏசியை வேணும்னா, குறைச்சு வைக்கவா…….?’’
ஹம்ம்………
Advertisement
‘’ஏன்டி…., முன்னமே சொல்றதுக்கு என்ன……..? குளிர்னா சொல்லமாட்டியா…….? ஏசியை குறைங்கன்னு’’.
‘’உங்களுக்கு வேணுமேன்னு பேசாமயிருந்தேன்.’’.
‘’ஓரமா படுக்கறேன்னு, உருண்டு விழுந்துடாத, ஒழுங்கா நடுவுல வந்து படு’’.
தூக்கம் வரும்வரை பேசிக்கொண்டிருந்தவர்கள், சிறிது நேரத்தில் உறங்கியிருந்தனர். காலையில் எப்பொழுதும் போல் எழுந்த பானு, குளித்து முடித்து வெளியே சென்றுவிட்டாள்.
நிச்சயதார்த்தத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் சரசுவும் காலையிலேயே எழுந்துவிட்டிருந்தார். காலையிலேயே எல்லோரும் கிளம்பி பானுவின் வீட்டிற்கு வந்திருந்தனர்.
நிச்சயதார்த்தத்தை பூர்ணிமாவின் வீட்டிலேயே வைத்திருந்தனர். அது தனி வீடு. வீடும் பெரியதாக இருந்ததால் அங்கேயே வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்திருந்தனர்.
மேல் மாடியில் பந்தல் போட்டு, அங்கேயே அமர்ந்து சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். மாப்பிள்ளை வீட்டிலிருந்து குறைந்தது இருபது பேராவது வருவோம் என கூறியிருந்தார்கள்.
மாதவியும் தன்னுடைய அம்மா செல்வி, தம்பி பாண்டியன், அவனது மனைவி தேவகி எல்லோரையும் அழைத்திருந்தாள். கூடவே அவர்களது நெருங்கிய உறவினர்களையும் அழைத்திருந்தாள்.
காலையிலேயே மாதவியின் வீடு களைகட்டியிருந்தது. காலை மதியத்திற்கான சாப்பாடு எல்லாம் வெளியே கேட்டரிங் ஆட்களிடம் கூறியிருந்தனர்.
காலை சாப்பாட்டு வேலை மாடியில் நடந்து கொண்டிருந்தது. பத்தரை பனிரெண்டு நல்ல நேரம் என குறித்திருந்தார்கள் நிச்சயத்திற்கு.
இன்னும் கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்து விடுவார்கள், என்று எல்லாவற்றையும் பார்த்து அரக்க பரக்க வேலை செய்து கொண்டிருந்தாள் மாதவி.
செல்வியும் உட்கார்ந்து கொண்டே என்னென்ன செய்ய வேண்டும் என அவளுக்கு ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டிருந்தார். அதன்படி மாதவி எல்லாம் சரியாக இருக்கிறதா என சரிபார்த்து கொண்டிருந்தாள்.
பூர்ணிமாவை தயார் படுத்துவதற்காக அழகு நிலையத்தில் இருந்து பெண்கள் வந்திருந்தனர். சரியாக ஒன்பது மணிக்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து எல்லோரும் வந்து இறங்கினர்.
சங்கரும் பானுவும் அவர்களது குடும்பத்துடன் தனியாக அவர்களது காரில் வந்திருந்தனர். பானு பட்டுப் புடவையில், சர்வ அலங்காரத்துடன் வந்திருந்தாள். சங்கரும் பட்டு வேஷ்டி சட்டையில் வந்திருந்தான். சரசின் உபயம் இது. எப்போதும் போல் பேன்ட் சர்ட்டில் கிளம்பியவனை வற்புறுத்தி பட்டு வேஷ்டி, சட்டை அணிய வைத்திருந்தார்.
பானுவையும் தன்னிடம் இருந்த நகைகளைக் கொடுத்து போடச் சொல்லி அழைத்து வந்திருந்தார். அவளுக்கு என அவர்கள் வீட்டில் போட்டிருந்த நகைகளும் இருந்தது. இருந்தாலும் பானுவின் பட்டுப்புடவைக் கலருக்கு மேட்சாக போட சொல்லி மருமகளுக்கு எடுத்துக் கொடுத்திருந்தார் சரசு.
பானு வாங்க தயங்கிய போது, என்கிட்ட இருக்கறது எல்லாம் யாருக்கு? எல்லாம் உனக்குதான். நான் என்ன பொண்ணா பெத்து வச்சிருக்கேன். இல்ல.., இன்னும் இரண்டு பெத்து வச்சிருக்கேன்னா……? எல்லாம் உனக்குதான்டா…
நீயும் எனக்கு பொண்ணு மாதிரிதான்டா. இனி இதை எல்லாம் உனக்கு போட்டு. சிங்காரிச்சு அழகு பார்க்கறது தான் என் வேலையே, என சிரித்து கொண்டார்.
இருக்கட்டும் அத்தை, என்னோட நகையையே போட்டுக்கறேன் என தயங்கியவளுக்கு, அவரே அவளுக்கு எல்லாவற்றையும் போட்டு அழகு பார்த்து, கூட்டி வந்திருந்தார்.
ராகவனுக்கும் மருமகளைப் பார்த்து மனதிற்கு நிறைவாக இருந்தது. சங்கர் எதிலும் தலையிடவில்லை. அமைதியாக பார்த்திருந்தான்.
ஹாலில் பெரிய ஜமக்காளம் விரிக்கப்பட்டு. அதில் இருவீட்டு பெரியவர்களும் அமர்ந்திருந்தனர். ஜமுனா உறவு பெண்களுடன் சேர்ந்து, சீர் வரிசைத் தட்டுக்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.
மாதவி வந்தவர்களுக்கு எல்லாம் தண்ணீர், ஜூஸ் காப்பி, டீ என யாருக்கு என்ன வேண்டும் என்பதைப் பார்த்து உபசரித்தாள். தேவகியும் அவளுக்கு உதவியாக கூடவே நின்றிருந்தாள்.
முகூர்த்தப் பத்திரிக்கை எழுத ஐயரை வர வைத்திருந்தனர். மாப்பிள்ளை வீட்டின் முறைப்படியே, ஐயரை வைத்து முகூர்த்த ஓலை எழுதி, அதை சபையில் வாசித்து, இருவீட்டாரும் தட்டு மாற்றிக் கொண்டனர்.
பூர்ணிமாவிடம் நிச்சயப் புடவையைக் கொடுத்து அணிந்து வரச் சொல்லி, அவளை உட்கார வைத்து நலங்கு வைத்தார்கள்.
பெண்கள் எல்லோரும் பூர்ணிமாவுக்கு நலங்கு வைத்துக் கொண்டிருந்தனர். ஜமுனா பானுவையும் அழைத்து நலங்கு வைக்க சொன்னார்.
பானு, ம்மா….., ‘’நான் சின்னப் பொண்ணு ம்மா, நான் எதுக்கு….?’’ எனத் தயங்கினாள்.
சரசு, ‘’பொண்ணுக்கு நாத்தி நீ. நீ தான் முக்கியமா வைக்கனும். கூச்சப்பட கூடாது. போய் வைச்சுட்டு வாடா…..’’ என அனுப்பிவைத்தார் மருமகளை.
கூச்சத்துடன் சபையில் எழுந்து பூர்ணிமாவிடம் சென்றவள், அதற்கு முன் வைத்தவர்களைப் பார்த்து, அதே போல இவளும் சந்தன கிண்ணத்திலிருந்து சந்தனத்தை எடுத்து பூர்ணிமாவின் கன்னத்தில், கைகளில் பூசிவிட்டு, குங்குமம் வைத்து, பன்னீர் தெளித்து, அட்சதையை எடுத்து தலையில் தூவிவிட்டு வந்து உட்கார்ந்து கொண்டாள்.
இவளையே பார்த்துக் கொண்டிருந்த சங்கருக்கு மனதில் சஞ்சலம் வந்தமர்ந்தது. அவளும் சின்ன பெண்தானே. பானுவுக்கு இது போல நலங்கு எல்லாம் நடந்திருக்க வேண்டியது.
தங்களது அவசர திருமணத்தில் எந்த சடங்கும் சாங்கியமும் செய்ததாக, அவனுக்கு நினைவில்லை. நடந்த களேபரத்தில் திருமணம் முடிந்தால் போதும் என்று தாலியை மட்டும் கட்ட சொல்லியிருந்தனர்.
ஆதலால் அது குறித்து ஏதும் ஏக்கம், அவள் முகத்தில் தெரிகிறதா…. என அவளையே உற்று பார்த்து கொண்டிருந்தான். பானு சந்தோஷமாகவே இருந்தாள். அவள் முகத்தில் எந்த சுணக்கமும் இல்லை.
அதுவே அவனுக்கு பெரிய ஆசுவாசத்தைக் கொடுத்தது. இனிமேலாவது அவளை நன்றாக வைத்து கொள்ள வேண்டும். அவள் வருத்தப்படுவதுபோல் எதுவும் நடக்காமல் பார்த்துகொள்ள வேண்டும் என மனதில் நினைத்துகொண்டான்.
பூர்ணிமா பெயருக்கு ஏற்றதுபோல, பூர்ண சந்திரனை தேகத்தில் கொண்டு மின்னிக் கொண்டிருந்தாள். ஏற்கனவே நல்ல அழகு. இதில் இன்றைய அலங்காரம், மனத்தின் பூரிப்பு என எல்லாம் சேர்ந்து அவளை ஜொளிக்க வைத்தது.
பூர்ணிமாவுக்கு மதுசூதனனை நிமிர்ந்து பார்க்க வேண்டும் என ஆசை இருந்தாலும்.., கூட்டத்தில் எங்கே அமர்ந்திருக்கிறான் என தெரியாமல் குனிந்திருந்தாள்.
வந்ததும் பானு ஜமுனாவுடன் சென்று பூர்ணிமாவைப் பார்த்து தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு பேசினாள். பானுவின் வெகுளியான பேச்சில் அவளை, பூர்ணிமாக்கு மிகவும் பிடித்துவிட்டது.
பானுவும் பூர்ணிமாவின் அழகைக் கண்டு பிரமித்திருந்தாள். அவளிடமே சொல்லிவிட்டாள். ‘’அண்ணி நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க’’.
‘’அதான் எங்க அண்ணன் உங்கள பார்த்ததும் பிளாட் ஆகிட்டாங்களா……..?’’ என கிண்டலும் கேலியுமாக அவளுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவளது விகல்பமில்லாத பேச்சை பார்த்து, மாதவிக்கு கூட மனம் நிம்மதி அடைந்தது.
நிச்சயம் முடிந்து எல்லோரையும் சாப்பிடுவதற்காக மாடிக்கு அழைத்துச் சென்றனர். மாப்பிள்ளையையும் பொண்ணையும் முதல்ல உட்கார வைங்க என்று அங்கிருந்த பெரியவர் ஒருவர் சொன்னதால், மதுவையும், பூர்ணிமாவையும் ஒன்றாக அமர வைத்தனர்.
அவர்களுக்கு எதிரிலேயே பானுவின் குடும்பத்தினர் அமர்ந்தனர். மதுவின் அருகில் அமர்ந்ததும் தான் பூர்ணிமா மதுவை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தாள்.
ப்பாஹ்……. ‘’அம்மணிக்கு இப்பதான் நான் கண்ணுக்கு தெரியறேனா……?’’
பூர்ணி, ஒரே கூட்டமா இருந்ததால, நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியல…….?
ஹ்ம்ம். ‘’வந்ததுல இருந்து உன்னையேதான் பார்த்துகிட்டிருக்கேன். எங்க நீ என்னை கண்டுக்ககூட இல்ல’’.
‘’கோச்சுகிட்டானோ…..’’ என கலவரமாக பார்த்தாள்.
‘’ஹேய் என்ன….?’’, என்றான் அவளது பார்வையை வைத்து.
ஒன்னும்இல்லை என தலையசைத்தவள், ‘அ..து… எல்லாரும் இருந்தாங்களா….., அதான் நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியாம, உங்களை பார்க்க முடியல…..’
‘’ஹா…. ஹா….. பயந்துட்டியா…., நான் சும்மாதான் கேட்டேன். நிச்சய தார்த்தமே முடிஞ்சுடுச்சு. இந்த கலாட்டாகூட இல்லனா எப்படி..?’’ ம்ம்…, என்றான் புருவத்தை உயர்த்தி இறக்கி…….. சிரித்துகொண்டே.
இவனது கலாட்டாவில் அவளுக்குதான் வெட்கம் வந்து, தலையை குனிந்துகொண்டாள்.
‘’அழகாயிருக்க பூர்ணி. அதுவும் பட்டுப்புடவையில பார்க்க தேவதைமாதிரி இருக்கே…….. என்னமோ இன்னைக்கே நமக்கு கல்யாணம் நடந்தமாதிரி ஒரு பீல் உள்ளுக்குள்ள……..’’ என்றான் நெஞ்சைக் காட்டி. மலர்ச்சியாக
‘’தேங்க்ஸ்…….. என அவனை பார்த்து மலர்ந்து சிரித்தவள், நீங்களும் தான் பட்டு வேட்டி சட்டையில பாக்க ஜம்முன்னு மாப்பிள்ளை மாதிரி இருக்கீங்க…….’’
‘’ஓஹ்…….. அப்ப…. நான் உண்மையிலே மாப்பிள்ளை கிடையாதா…….? இந்த வேட்டி சட்டை போட்டதால தான் மாப்பிள்ளை மாதிரி இருக்கேனா……?’’ என்றான் பாவனையாக.
‘’அச்சோ’’ என நாக்கைக் கடித்தவள், அது ‘’ஒரு பேச்சுவாக்கில……… சொல்லிட்டேன். ஒரு ஃப்லோல வந்திடுச்{……..‘’ என மூக்கைச் சுருக்கி கண்களாலேயே மன்னிப்பு கேட்டாள்.
‘’ஹா….. ஹா……. என மலர்ந்து சிரித்தவன், நல்லவேளை காப்பாத்திட்டே. நான் கூட மாப்பிள்ளை….. நான் இல்லையோன்னு பயந்துட்டேன்’’.. என கேலியாக ராகமிழுத்து, அவளை கலாட்டா செய்து சிரித்தான்.
இவனது சிரிப்பு சத்தத்தில், நிமிர்ந்து பார்த்த சங்கருக்கு ‘’பாருடா…… எப்பவும் உர்ருன்னு முகத்தை வச்சிருப்பான். கல்யாணம்ன உடனேயே என்னா வெளிச்சம் முகத்துல?என்னா சிரிப்பு? என்னா லவ்ஸ்? ஹம்ம்…….. இவன்லாம் சிரிச்சு ரொமான்ஸ் பண்றான்’’, என பொறாமையில் பொசுங்கினான் உள்ளுக்குள்.
பக்கத்தில் இருந்த மனைவியை திரும்பி பார்த்தான். அவள் மும்முரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். சங்கருக்கு கோவமாக வந்தது. ‘’சாப்பாட்டு ராமி, சாப்பிடறதுக்கே பொறந்தது மாதிரி உங்காந்து என்னா வெட்டு வெட்டிட்டு இருக்கா…’’. இங்க பக்கத்துல ‘’ஒருத்தன் உட்கார்ந்து இருக்கானேன்னு ஏதாவது பீலிங்…. இருக்கா….. பக்கி’’.
‘’நேத்து பாத்து, இன்னைக்கு நிச்சயம் பண்ணவன் எல்லாம் என்ஜாய் பண்றான்……, எனக்குந்தான் வாய்ச்சிருக்கே……… தத்தி, தத்தி’’.
‘’சங்கர் உனக்கு கொடுத்துவச்சது அவ்வளவுதான்டா………..’’ என தன்னைத்தானே கேலி செய்து கலாய்த்துகொண்டான்.
ஹ்ம்ம்…… ”ஒரு ஸ்மைல், ஒரு ரொமான்ஸ்………… அட்லீஸ்ட் ஆசையா ஒரு பார்வை…… காலையில இவளுக்காகவே பார்த்து பார்த்து டிரஸ் பண்ணிட்டு வந்தேன்’.
‘’இந்த வேட்டி வேற இப்ப விழுமா…, அப்ப விழுமான்னு…., உயிர வாங்கிட்டிருக்கு. அம்மா வேற சும்மாயிருக்காம வேஷ்டி கட்டுடா, அப்பதான் பார்க்க அழகாயிருப்பேன்னு உசிர எடுத்தாங்க. எங்க பார்க்குறா….?’’
‘’அட்லீஸ்ட், ஒரு வார்த்தைக்காவது நல்லாயிருக்குன்னு சொன்னாளா…….?’’
”கல்லுளிமங்கி. போறவ வரவ எல்லாம் திரும்பி பார்த்துட்டு போறாளுங்க. பக்கத்திலேயே இருக்க என பொண்டாட்டி பார்க்க மாட்டேன்றாள்……..”
கொஞ்சம்கூட பீலிங்ஸேயில்ல. இவள் எல்லாம் ‘என்ன மேக்னே தெரியலையே. பெத்தாங்களா….? செஞ்சாங்களா……..?’
சங்கர் மனதோடு புலம்புவது ‘பானுவின் காதில் விழுந்ததோ என்னவோ…?’
இவனைப் திரும்பிப் பார்த்து என்ன….? என புருவத்தை உயர்த்தினாள்.
அண்ணனின் சிரிப்பு சத்தத்தில் நிமிர்ந்து அவர்களைப் ரசித்து பார்த்தவள், திரும்பி கணவனைப் பார்த்தாள்.
சங்கர் எதிரில் அமரிந்திருந்த மதுவையும் பூர்ணிமாவையும் பார்த்து பெருமூச்சு விடுவதைப் பார்த்தவளுக்கு, ஏதோ புரிவதுபோல் இருந்தது. கணவன் சட்டென திரும்பி தன்னைப் பார்க்கவும் என்ன…?, என புருவ முயர்த்தினாள்.
அவளது காதின்புறம் குனிந்தவன், ‘’உங்கண்ணனை பார்த்தியாடி….., என்னமா ரொமான்ஸ் பண்றான்னு…….’’
அவனது வார்த்தையில் அவனை முறைத்தவள், ‘’தப்பா பேசாதீங்க. அவங்களுக்கு கல்யாணம் ஆகப் போகுது. அவர் கட்டிக்கப் போற பொண்ணுகிட்ட ரொமான்ஸ் பண்றாரு, உங்களுக்கு ஏன் பொறாமை?’’ ஹ்ம்ம்…….
‘’எல்லாம் என் நேரம்டி……. இவனைப் பார்த்துலாம் நான் பொறாமைபட வேண்டியிருக்கு’’.
‘’டீஸன்டா பேசுங்க, யார் காதுலாயாவது விழப் போகுது’’, என முறைத்தாள்.
அவளை திரும்பி முறைத்தவன், ‘’போடி எனக்கு சாப்பாடே வேண்டாம் என எழப் போனவனை அவனது கையைப் பிடித்து தடுத்தவள், உட்கார்ந்து சாப்பிடுங்க’’, என அடிக்குரலில் அதட்டினாள்.
”ஹேய்……… என்ன? எனனையே மிரட்டுற நீ…, பக்கத்தில எங்கம்மா அப்பா இருக்கும் போதே…, என்னமா…. மிரட்டுறே…?”
சரி, எனக்கும் வேணாம். வாங்க என எழப் போனவளை கைப்பிடித்து அமர்த்தியவன், ”உட்காருடி. சும்மா விளையாட்டுக்கு சொன்னா உடனே கோவம் வந்திருமே”, என அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.
சரசும் ராகவனும் பேசிக் கொண்டிருந்ததால் இவர்களைக் கவனிக்கவில்லை.
என்னா கோவம் வருதுடா………. இவளுக்கு, என திரும்பி பானுவைப் பார்த்தான்.
இப்ப என்ன………..? என முறைத்துப் பார்த்தாள் கணவனை பானு.
ஆத்தி…….. இவள் என்ன இந்த முறை முறைக்கிறா……… மனுஷன் பிரியா…. திரும்பி பார்க்க கூட முடியல என நொந்து கொண்டவன், ஒன்னுமில்லை சாப்பிடுடி…… என வாயசைத்தான்.
இவர்களையே பார்த்தவாறு எதிரில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த பெரியவர் ஒருவர், தவறாக புரிந்து கொண்டு, பரிமாறுபவரை அழைத்து, ”ஏம்பா… பார்த்து பரிமாறுறதில்லையா……?”
”அங்க பாரு… மாப்பிள்ளையோட மச்சான் சாப்பிடாம கோச்சுகிட்டு எழுந்துக்கறாரு…..” என்றுவிட்டார் சத்தமாக.
அவ்வளவுதான் எல்லோரது பார்வையும் சங்கரின் மேல் திரும்பியது.
உடனே மாதவி, பாண்டியன், குமார் என எல்லோரும் அங்கே வந்து சங்கரை சூழ்ந்துகொண்டனர்.
ஒருத்தர், வடை வைப்பெதன்ன, இன்னொருத்தர் பாயாசம் கொண்டு வந்து வைப்பதென்ன என்று அவனை எல்லோருமாக சேர்ந்து நின்று உபசரிக்க ஆரம்பித்துவிட்டனர். அவர்களது கவனிப்பில் அவனுக்குதான் முழிபிதுங்கியது.
ஜமுனாவும் கலியமூர்த்தியும்கூட அங்கே வந்து நின்றுவிட்டனர். பின்னே வீட்டு மாப்பிள்ளை அல்லவா…..?
அவன் முழித்ததில் பானுக்குதான் சிரிப்பு வந்தது. இருந்தும் வெளியில் காட்டாமல், குனிந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
தொடரும்.
error: Content is protected !!