“ம்மா, அதான் ஈவ்னிங் பேசுறேனு சொன்னான்ல? சாப்பிடுங்க” என்று அன்னைக்கு தட்டு எடுத்து வைத்தாள்.
பின்னே அனைவரும் உண்டு கடைக்கு கிளம்பினார்கள். தேவராஜிடமிருந்து அழைப்பு வருமா என்று காத்திருந்தாள் நவீனா. மாலை வரை அழைப்பு வரவில்லை.
Advertisement
மீண்டும் போன் செய்தால் என்ன பேசலாம்? அவன் என்ன கேட்பான் என்று பயந்திருந்தபோதும், அழைப்பு வராமல் போனது நவீனாவிற்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
Advertisement
கல்யாணமாகி இரண்டு வருசமா ஏமாத்தினது பத்தாம, இப்போவும் கன்ட்டினிவ் பண்றார் என ஆயாசமாக இருந்தது.
நேற்று கூட கொஞ்சம் இயல்பாக இருந்த நவீனா, இன்று மிகவும் சோர்வாக இருப்பதை கண்டு வருந்தினாள் செந்தமிழ்செல்வி.
முன்பு கணவனை நினைத்து வருந்தும்போதெல்லாம் ‘இப்படி புருஷனுக்காக எதுக்குக்கா வருந்துறிங்க? அவருக்கெல்லாம் நீங்க இல்லைனாதான் உங்க அருமை தெரியும். அவரென்ன டிவோர்ஸ் கேட்குறது, நீங்க அவரை டிவோர்ஸ் பண்ணிட்டு நிம்மதியா இருங்க’ என்பாள்.
Advertisement
ஆனால் பொள்ளாச்சியிலிருந்து வந்த பின்னே இருக்கும் செல்வியிடம் மாற்றம் இருந்தது. நவீனாவின் வருத்தம் கண்டு தானும் வருந்தினாள்.
திருமணம் செய்துகொள்ள பிடிக்காத பொற்செல்வனையே நம்மால் மறக்க முடியவில்லை. நவீனா அக்காவிற்கு தேவா சாரை மிகவும் பிடிக்கும். இரண்டு வருடம் கணவன் எனும் ஸ்தானத்தில் வைத்திருந்தார்கள். தற்போது அந்த ஸ்தானத்தை இழந்திருப்பது பெரும் வேதனை.
தேவா சாரை தவிர்த்து குடும்பத்தினர் அனைவரும் நவீனா அக்கா மீது அக்கறையாகவும் பாசமாகவும் இருப்பார்கள். அத்தனை எளிதாக அனைத்தையும் மறந்துவிட முடியாது என நவீனாவைப் புரிந்திருந்தாள்.
நவீனா கண்கள் கலங்கிவிட, “அவ பேச்செல்லாம் பெருசா நினைக்காத நவீனா. விவாகரத்து சட்டத்துக்குதான், மனசுக்கு இல்ல. அதனாலதான் தேவா தம்பிகிட்டயிருந்து போன் வந்திருக்கு. நீ விருப்பப்பட்ட வாழ்க்கை உன்னை தேடி வரத்தான் போகுது” என்றார் சாம்பவி.
“பொய்யான நம்பிக்கை கொடுக்காதிங்கம்மா” என்றாள்.
“நீ கூடத்தான் பொள்ளாச்சியில இருக்கும்போது இளவரசன் வந்தா பேசக்கூட மாட்ட, ஆனா இப்போ இரண்டு நாளா அண்ணன் எப்போ வரானு கேட்டுக்கிட்டே இருக்கல, அண்ணன் தங்கச்சிக்கு ஒரு நியாயம், புருஷன் பொண்டாட்டிக்கு ஒரு நியாயமா?
எதோ போறாத காலம் பிரிஞ்சிட்டாங்க, டிவோர்ஸ் ஆனது கண்டிப்பா வேதனைதான். ஆனா அந்த வேதனை நிரந்தரம் இல்லைனு நான் ஸ்ட்ராங்கா நம்புறேன். செல்வா தம்பி அப்படிலாம் விட்டுடமாட்டார்” என்றார் பெரும் நம்பிக்கையோடு.
அண்ணன் வந்து என்ன கேட்கப்போகிறானோ என்று இரண்டு நாள்களாக பயந்துகொண்டிருந்தாள் செல்வி. நானா காதல் சொன்னேன்? அவன் சொன்னா நான் என்ன பண்ண முடியும் என்று அண்ணனிடம் பேசிவிடலாம் என்று இன்று காலையிலிருந்ததான் சற்று தைரியத்தை வரவழைத்திருந்தாள்.
“நவீனாவும் செல்வியும் கடையில இருக்கட்டும், நீங்க மட்டும் வாங்க, கொஞ்சம் பேசனும்”
“சரி வரேன்” என்று இணைப்பை துண்டித்து, செல்வியிடம் விசயத்தை சொல்ல, “நாங்களும் வரோம் ஆன்ட்டி, இல்லைனா இன்னொரு முறை டிரைவர் வரனும்” என்றாள் நவீனா.
நவீனா இப்படி சொல்லும்போது எப்படி மறுப்பது? அதிலும் தேவராஜ் அழைப்பு விடுத்ததில் மனவலியில் இருக்கிறாள், தனியே விட வேண்டாம் என்று பணியாள்களை அனுப்பி வைத்து செக்யுரிட்டியிடம் சொல்லி கடையை அடைத்து கிளம்பினார்கள் மூவரும்.
மகளும் நவீனாவும் இல்லாததால், “எதுக்கு என்னை மட்டும் வர சொன்ன? எதாவது பிரச்சனையா?” என்றார் சிறு பதட்டத்தோடு.
“பிரச்சனைன்னாதான் வர சொல்லனுமா? அம்மாகிட்ட பேச வேற எதுவுமே இருக்காதா? இந்த வீட்டுல உங்க பொண்ணு மட்டும் கல்யாண வயசுல இல்ல, நானும்தான். என்னையும் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க” என்றான் இலகுவாக.
மகிழ்வோடு கண்களை அகல விரித்து, “இளவரசு… யாரையாவது லவ் பண்றியாடா?” என்றார்.
“லவ்வெல்லாம் பண்ணல, ஆனா இன்னைக்கு ஒரு பொண்ணை பார்த்தேன், ரொம்ப அழகா இருந்தா. நான் லவ் பண்ணினா உங்களுக்கு ஓகே வா?” என்றான்.
“விவரம் தெரியாத வயசுல பண்ணினா பயம் வந்திருக்கும். இப்போ உனக்கு கல்யாண வயசு வந்துடுச்சு, நல்ல வேலைல இருக்க. இதைவிட வேற என்ன தகுதி வேணும். உனக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருந்தா கண்டிப்பா நல்ல பொண்ணாத்தான் இருக்கும். எனக்கெல்லாம் ஓகேதான்” என்றார்.
“ம் சொல்லிட்டிங்கள்ல? இனி தீவிரமா இறங்கிடறேன்” என்றான் சிரிப்போடு.
பொற்செல்வனைப் பற்றி பேசுவான் என நினைத்திருந்த செல்விக்கு குழப்பமானது. உண்மையில் தன் அண்ணனிடம் சொன்னானா? இல்லை நம்மை பயமுறுத்தினானா? சொல்லியிருந்தால் இளவரசன் இப்படி இயல்பாக இருக்கமாட்டானே என்று நினைத்தபடி வெளியே வந்தாள்.
நவீனாவும் வெளியே வர, “நான் போய் டீ வச்சிட்டு வரேன்” என்று சாம்பவி சென்றார்.
“ம்… வியாபாரம்லாம் எப்படி போகுது?” என்றான் இருவரிடமும்.
“டல்லாத்தான் போகுது, ஒரு நாளைக்கு நாலு, இல்ல அஞ்சு கஸ்டமர்தான் வராங்க” என்றாள் செல்வி.
“இப்போதானே திறந்திருக்கோம், போக போக பிக்கப் ஆகிடும்” என்றவன், “அம்மாப்பாக்கு கால் பண்ணி பேசுனிங்களாம்மா?” என்றான் நவீனாவிடம்.
பேசியதாக தலையசைத்தாள். பிறகு அனைவரும் டீ குடித்தனர். என்ன? இவன் ஏதும் கேட்கமாட்டேங்குறான், இரண்டு பேர்ல யார் ஃப்ராடுனு கண்டுபிடிக்க முடியலையே என்று குழம்பியவள், “எதோ பொண்ணை பார்த்தேன்ன? யாரு?” என்றாள்.
“ரூம்க்குள்ளயிருந்து நாங்க பேசுறதைதான் கேட்டுட்டிருந்தியா? எவ்வளோ கஷ்டப்பட்டு இந்த வேலையை வாங்கினேன், எப்படி படிச்சனு ஒத்த வார்த்தை கேட்டியா? இதை மட்டும் கேட்குற” என்று சிரித்தவன், தனது மொபைலில் இருந்து பள்ளியில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காண்பித்து,
“இவதான் நான் பார்த்த பொண்ணு. நாம படிச்ச ஸ்கூல்லதான் படிச்சா, ரொம்ப வருசம் கழிச்சு இன்னைக்கு ஏர்போர்ட்ல பார்த்தேன். ரொம்ப அழகா இருந்தா, அவதானானு கண்டுபிடிக்கவே ரொம்ப நேரம் அவளை பார்க்க வேண்டியதாகிடுச்சு. நான் பார்த்ததை அவளும் பார்த்தா. தப்பா நினைச்சிட்டாளோ என்னவோ” என்றான்.
“உனக்கு இந்த மாதிரி யாரும் இல்லையா?” என்றான் தங்கையிடம்.
“எ… எனக்கா? இல்… ம்ஹூம்… அப்படி யாரும் இல்ல” என்றாள்.
“லூசு… லவ் பண்ணாமலே எதுக்கு இப்படி திக்குற?” என அதட்டி, “உனக்கு மாப்பிள்ளை பார்க்கும் உரிமை எனக்கு கொடுப்பியா?” என்றான்.
“எதுக்கு இப்படி கேட்குற? என்மேல உரிமையில்லாமத்தான் இங்க கூட்டிட்டு வந்தியா?”
“ம் சரிதான். அப்போ நான் மாப்பிள்ளை பார்க்கவா?”
“இப்போ வேண்டாம், கொஞ்ச நாள் போகட்டும்”
“அவங்களும் இப்போ கல்யாணம் பண்ணலையாம், பையன் அப்ராட்ல இருக்கான். ஒரு வருசம் முன்னாடிதான் மூணு வருசம் அக்ரிமண்ட்ல ஜாயின் பண்ணியிருக்கான். நீ ஓகே சொன்னா வீடியோ கால்ல வருவாங்க. உனக்கு அவனை பிடிச்சிருந்தா மட்டும் அவங்கப்பாம்மா நேர்ல வருவாங்க. கல்யாணம் இரண்டு வருசம் கழிச்சுதான் பண்ணிப்பானாம். உன் கண்டிஷனுக்கு தகுந்த பையன்” என்றான்.
“அப்புறம் என்ன செல்வி? இளவரசன் நல்ல பையனு சொல்றான்னா யோசிக்காம சொல்லமாட்டான்” என்றார் ஆர்வமாக.
செல்வி ஏதும் சொல்லாமல் இருக்க, அனைவரிடமும் பேசியபடி உண்டு, படுக்கச் சென்றான்.
இங்கு செல்விக்குத்தான் தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் காலை வழக்கம்போல் உண்டு, கடைக்கு கிளம்ப தயாராகிக்கொண்டிருந்தனர். ஒன்பது மணிக்கெல்லாம் அழைப்பு வந்துவிட்டது.
“ஹாய் டா, இவங்க என் அம்மா, இவங்க எங்க கெஸ்ட் நவீனா. இவ என் தங்கை செந்தமிழ்செல்வி” என்று தங்கையை காண்பித்தான்.
“ஹாய்” என்று எதிரில் இருந்தவன் சொல்ல, அவனின் பார்வையை சகிக்க முடியாமல் திரையை விட்டு விலகிவிட்டாள் செல்வி.
சற்று நேரம் பேசியிருந்து இணைப்பை துண்டித்தவன், “ஒரு ஹாய் சொன்னா என்னாகிடும்? அவன் என்ன நினைப்பான்?” என்றான் முறைப்பாக.
“எனக்கு அவனை பிடிக்கல”
“ஓ… பிடிக்கலையா? நீ பார்த்தியா அவனை?”
“நேத்து சொல்லி இன்னைக்கே பாருன்னா… எப்படிடா பார்க்குறது? எனக்கு இந்த மைண்ட்செட் இப்போ இல்ல, இனி யாரையும் இப்படி அரேன்ஜ் பண்ணாத” என்றாள் கோபமாக.
ஏதும் பேசாமல் அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து, இரவு பத்து மணிக்கு தங்கை அறைக்கு வந்தான். செல்வியின் அறையில் விளக்கு எரியவில்லை என்றாலும் அவள் உறங்கியிருக்கமாட்டாள் என்று கதவைத் தட்டினான்.
“கதவு திறந்துதான்ம்மா இருக்கு” என்க, இளவரசன் உள்ளே வந்தான்.
“நான் சொன்ன மாப்பிள்ளை இரண்டு வருசம் கழிச்சுதான் கல்யாணம்னு சொன்னான், ஏன் அவனை ரிஜக்ட் பண்ணின?”
“கல்யாணம் மட்டும் ஒரு வருசம் கழிச்சு இல்ல, இந்த பொண்ணு பார்க்குறது, நிச்சயம் பண்றதுனு எல்லாத்தையும் சேர்த்துதான் சொன்னேன்”
“ஆல்ரெடி அம்மாகிட்ட ஒரு வருசம் டைம் கேட்டுருக்க, அதுல ஏழு மாசம் முடிஞ்சிடுச்சு, திரும்ப இப்போவும் ஒரு வருசம் டைம் கேட்டா என்ன அர்த்தம்? ஒரு வருசம் கழிச்சு திரும்ப ஒரு வருசம் டைம் கேட்ப… அப்படித்தான?”