Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 26.1

அத்தியாயம் 26

திருமணத்தன்றே தாமோதரனின் ஆள்கள் புகைப்படம் எடுப்பதை கவனித்துவிட்டான். மண்டபத்தின் மூன்று இடங்களில் வீடியோ ஒளிபரப்பாகிக்கொண்டிருக்க, பகிங்கிரமாக கண்டித்தால் விசயம் செல்விக்கு தெரிந்துவிடும் என்று ராகுலை விட்டு ரகசியமாக கண்டித்து அவர்களை வெளியேற்றினான்.

செல்வியோடே இருப்பதால் தாமோதரனிடம் பேச சூழல் அமையவில்லை. காலை ஒன்பது மணிக்கெல்லாம் பொற்செல்வன் மனைவியோடு மறுவீட்டு விருந்திற்கு வந்துவிட்டான்.



Advertisement

இளவரசன் வந்து அழைத்து போவதாகத்தான் இருந்தது. முக்கிய வேலையாக அவன் கிளம்பியிருக்க, வேறு வழியில்லாமல் மணமக்களை அழைக்க சாம்பவி வந்திருந்தார்.

நேற்று இளவரசன் அழுதது உறுத்திக்கொண்டே இருக்க, “இன்னைக்கு லீவ் போட சொன்னேனே?” என்றான்.

“நான் சொன்னேன் தம்பி, முக்கியமான வேலைனு கிளம்பிட்டான்” என்று சாம்பவி சொல்ல, அதற்கு மேல் மாமியாரையா கடிந்துகொள்ள முடியும்? “அவன் இல்லைனு தெரிஞ்சிருந்தா நாங்களே வந்திருப்போமே ஆன்ட்டி” என்ற பின்னேதான் சாம்பவி முகம் நிம்மதியை காண்பித்தது.

Advertisement

வீட்டிற்கு வந்ததும் செல்வி சாம்பவியிடம் பேசிக்கொண்டிருக்க, இவன் தனியே வந்து தாமோதரனிற்கு அழைத்து பேசினான்.

Advertisement

அன்னை தங்கைக்கும், தந்தைக்கும் இடையே அல்லாடும் இளவரசனை நினைக்க பாவமாக இருந்தது. தன் அண்ணன் தேவராஜ் தவறு செய்த போது தனக்கும் இப்படித்தானே இருந்தது என்று இளவரசனின் மனநிலையை உணரமுடிந்தது.

ஆனால் தன்னால் ஏதும் செய்ய முடியாதே என்று நினைத்திருக்க, வெளியே வந்த சாம்பவி, “மணி பத்தாகப்போகுது, சாப்பிட வாங்க தம்பி” என்றார்.

“ம் வரேன் ஆன்ட்டி” என்று உள்ளே வந்தவன், “எதுக்கு ஆன்ட்டி இவ்வளோ சமைச்சிருக்கிங்க?” என்றான்.

Advertisement

“எல்லாரையும் கூப்பிட்டேன், அமிர்தாம்மாவும் ஐயாவும் வரலைனுட்டாங்க, அவங்களுக்கு கொடுத்தனுப்பிடறேன். தேவேந்திரன் ராஜியும், தேவராஜ் நவீனாவும் பின்னாடியே வரேன்னாங்க, இன்னும் காணோம். நீங்க சாப்பிடுங்க, நான் அவங்களுக்கு கால் பண்றேன்” என்று இருவருக்கும் பரிமாறி நவீனாவிற்கு அழைக்க அவள் அழைப்பை ஏற்கவில்லை.

“அமிர்தாம்மாதான் கால் பண்றாங்க” என்றபடி அழைப்பை ஏற்றவர் முகம் சில நிமிடங்களிலேயே ஜொலிக்க, “சரிங்கம்மா, நான் சொல்றேன்” என்று இணைப்பை துண்டித்து, “செல்வி, நவீனாவால வர முடியாது. நாமதான் நவீனாவைப் பார்க்க போகனும்” என்றார்.

பொற்செல்வனுக்கு புரிந்திடவே “ஆமாவா ஆன்ட்டி?” என்றான் பெரும் மகிழ்வோடு.

“நவீனாக்கா வருவாங்க, நான் கால் பண்றேன்” என்று செல்வி சொல்ல, “நவீனா டையர்டா படுத்திருக்காளாம், நவீனா இல்லாம தேவா தம்பிக்கு வர சங்கடமாயிருக்காம். தேவேந்திரன் ராஜி வந்துட்டிருக்காங்க” என்றார்.

நவீனாக்கா ஏன் வரலை என்று யோசித்திருக்க, “லூசு… ப்ரித்தும்மா அக்கா ஆகப்போறா” என கிசுகிசுத்தான் சிரிப்போடு.

“நாம போய் நவீனாக்காவை பார்த்துட்டு வரலாம்” என்றாள் மகிழ்வோடு.

தேவேந்திரன் ராஜலஷ்மி உண்டபின்னே மீதத்தை எடுத்துக்கொண்டு நவீனாவை பார்க்க கிளம்பினார்கள்.

“நீ ஏன் வந்த செல்வி? நான் நல்லாத்தான் இருக்கேன்” என்றாள் நவீனா.

“அப்புறம் ஏன் விருந்துக்கு வரல?” என செல்வி சிரிக்க, “நீயுமா செல்வி” என்றாள் பாவமாக.

“ஹ ஹா… ராஜிக்கா ரொம்ப கிண்டல் பண்ணினாங்களா? பண்ணிட்டு போறாங்க விடுங்க” என்றாள்.

சற்று நேரத்திற்கு பின்னே, தேவராஜ், அமிர்தவள்ளிக்கு கொண்டு வந்த உணவை பரிமாறினார் சாம்பவி.

ஒரு மணி நேரத்திற்கு பின்னே சாம்பவிக்கு அழைத்த இளவரசன், பின்னே பொற்செல்வனுக்கு அழைக்க, “எங்க இருக்க?” என்றான்.

“வீட்டுக்கு வந்துட்டேன், வீடு பூட்டியிருக்கு, அம்மா கால் அட்டன் பண்ணல”

“எதுக்கு இவ்வளோ பதட்டம்? எல்லாரும் இங்க எங்க வீட்டுல இருக்கோம், சாப்பிட்டியா நீ?”

“என்ன விசயமா அம்மா வந்துருக்காங்க? இங்கதானே இன்னைக்கு விருந்து?”

“சாப்பிட்டியானு கேட்டேன்”

“இல்ல, உங்களோட சாப்பிடலாம்னு”

“மணி பதினொன்னாகுது. லூசாடா நீ? அங்கையே இரு வரேன்” என இணைப்பை துண்டித்தவன், சாம்பவியை தனியே அழைத்து “இளவரசனுக்கு வீட்டில சாப்பிட இருக்கா ஆன்ட்டி?” என்றான்.

“இல்லையே தம்பி, முக்கியமான வேலையா போறேனு சொன்னான், எல்லாம் இங்க எடுத்துட்டு வந்துட்டேன்”

“அவனுக்கு பேக் பண்ணி கொடுங்க”

“எங்க இருக்கான்?”

“வீட்டுக்கு வந்துருக்கான், எனக்கு அவனோட தனியா பேச வேண்டியிருக்கு. நீங்க சாப்பாடு பேக் பண்ணுங்க, நான் போய் சாப்பிட கொடுக்குறேன்”

“எதாவது பிரச்சனையா?”

“பிரச்சனைலாம் இல்லை ஆன்ட்டி, செல்விக்கு நிறைய செய்ய முடியலனு வருத்தத்துல இருந்தான். அது தேவையில்லாததுனு புரிய வச்சிட்டு வரேன்” என்றான்.

மகன் சாப்பிடும் அளவறிந்து எடுத்து வந்தவர், “டிபன் மட்டும்தான் பண்ணினேன், லன்ச் இனிதான் சமைக்கனும், நானும் வரேன்” என்றார்.

“எனக்கு இளவரசனோட தனியா பேசனும் ஆன்ட்டி, நீங்க வந்தா செல்வியும் வரேனு சொல்வா. கொஞ்ச நேரம் இங்கயே இருங்க” என்று வீட்டின் சாவியையும் வாங்கிக்கொண்டு, செல்வியிடம் ‘அண்ணிகிட்ட பேசிட்டிரு, கம்பெனி வரை போய்ட்டு வந்துடறேன்’ என்று உணவை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

“நீங்க ஏன் வந்திங்க? செல்வியும் அம்மாவும் வரல?”

“உனக்கு சாப்பாடு கொடுக்க இத்தனை பேர் வேணுமா?” என்று முறைத்தபடி கதவைத் திறந்து உள்ளே சென்றான்.

“எதுக்கு இவ்வளோ ஹாட்டா இருக்கிங்க?” என இளவரசன் இலகுவாக கேட்க,

“வீட்டுக்கு போனியே… சாப்பிட்டு வரவேண்டியதுதானே?”

“இதான் பிரச்சனையா? இருந்த டென்ஷன்ல எனக்கு பசிக்கவேயில்ல”

“சரி முதல்ல சாப்பிடு” என்று பையை நீட்ட, வாங்கி வைத்தவன், முகம் கை கழுவிக்கொண்டு வந்து உண்டான்.

இளவசரன் உண்டு முடித்ததும், “உன் அப்பா எப்படி இருக்கார்? நான்தான் அங்க பாருனு சொன்னேன்தான? எதுக்கு வந்த?” என்றான்.

“இப்போ நல்லா இருக்கார். அங்க இருந்தா அவரை எதாவது சொல்லிடுவேனு கிளம்பிட்டேன்” என்றவன் முகத்தில் வேதனை இருக்கவே, “அவர் திருந்திட்டார்டா, இனி சரியாகிடுவார். கவலைப்படாத” என்றான்.

“உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றான் ஆச்சர்யமாக.

“உனக்கு கால் பண்ணும் முன்னாடி அவர்கிட்ட பேசினேன்” என்று திருமணத்தில் நடந்ததை விளக்கியவன், “மன அழுத்தத்தோட எட்ஜ்ல இருந்தவ இப்போதான் கொஞ்சம் தேறி வந்துருக்கா. எல்லாமும் தெரிஞ்சும் உன் அப்பா இப்படி பண்ணினதுல கோபம் வந்துடுச்சு. அதான் கத்தி விட்டுட்டேன். மத்தபடி அவரை பழி வாங்குற எண்ணமெல்லாம் எனக்கில்ல” என்றான்.

“இப்போ திருந்தி என்ன ப்ரியோஜனம்? இவர் திருந்தினாலும் அந்த லேடி விடமாட்டாங்க போல” என வருந்தினான் இளவரசன்.

“அப்படியா?” என்றான் அர்த்தமாக.

ஆமாம் என்பதாய் இளவரசன் தலையசைக்க, “கன்ஃபார்மா உன் அப்பா அந்த பொண்ணுகிட்டயிருந்து விலக நினைக்கிறாரா?” என்றான்.

“ஆமாம். அத்தனை மிஸ்டு கால்ஸ் இருந்தது. நான் பேசுறேனு சொன்னதுக்கு, நீயும் இதுல தலையிட்டு என்னை கொல்லாதடா, நானே பார்த்துக்கிறேனு சொன்னார்”

“அப்புறமென்ன? இனி கவலை வேண்டாம்” என்றவன், “உன் தங்கச்சிக்கு செய்ய முடியலைனு நினைக்காத. செல்வி என்னை ஏத்துக்கிட்டதே பெரிய விசயம். நேத்து மாதிரி திரும்ப என்னைக்காவது அழுத… அவ்வளோதான் பார்த்துக்க” என்றான் கட்டளையாக.

“அது சரி… மறுவீட்டு விருந்து இங்கதானே சாப்பிடனும்? எதுக்கு உங்க வீட்டுக்கு போனிங்க?”

செல்வன் விசயத்தை சொல்ல, “ஓஹ்… சூப்பர்” என மகிழ்ந்தான் இளவசரன்.

அன்றிரவு பணிக்கு கிளம்பினான் இளவரசன். ஒரு மாதம் கடந்துவிட்டது. தினமும் தங்கையிடம் பேசுவான். நவீனாவிடம் கூட வாரம் ஒருமுறையாவது பேசுவான். ஆனால் பொற்செல்வனுக்கு அழைத்ததில்லை.

மகனிடம் பேசி அஞ்சு நாளாகுது என்று சாம்பவி புலம்ப, “அண்ணாக்கு வேலையிருக்கும்மா” என்று செல்வி சமாதானம் செய்துகொண்டிருந்தாள்.

பொற்செல்வன் இளவரசனுக்கு அழைக்க, அவன் அழைப்பை ஏற்கவில்லை. அழைப்பை ஏற்காதது தமிழில் ஒலிக்க, இவன் வேலைக்கு செல்லவில்லை. தந்தையோடு இருக்கிறான் என்பதோடு, இங்கிருந்து கொண்டா செல்வியை காண வராமல் இருக்கிறான்? என்று யோசித்தவனுக்கு யோசனைக்கான பதில் கிடைத்தது.

இதில் நாம் தலையிடலாமா என்று யோசித்தான். சுபாஷ்னி போன்ற பெண்கள் எதை செய்யவும் தயங்கமாட்டார்கள். தந்தைக்காக சுபாஷ்னியிடம் மோதி இளவரசன் அவமானப்படும் நிலை வந்தால் தாங்கமாட்டானே என்று, இளவரசனுக்கு அழைத்து “அந்த பொண்ணுக்கு என்ன வேண்டுமாம்?” என்றான்.

“இவர் செய்த காரியத்துக்கு சொத்து வேணும்னா நானே கொடுக்க சொல்லிடுவேன், அவங்களுக்கு சொத்து வேண்டாமாம். என் அப்பாதான் வேணுமாம். இவர் மறுத்தா செத்துடுவேனு மிரட்டுறாங்க” என்றான்.

“நீ இங்க வா, பார்த்துக்கலாம்” என்று இணைப்பை துண்டித்தான்.

அடுத்த நாள் இளவரசன் வர, மதியம் போல் அலுவலகத்திற்கு வர வைத்தான் பொற்செல்வன். தன்னோடு தேவராஜையும் அழைத்து வந்திருந்தான்.

“என்னடா ஒரே மாசத்துல இப்படி இளைச்சிருக்க? உன் அப்பாவை பயமுறுத்த வேண்டி சுபாஷ்னியைப் பத்தி முன்னாடியே விசாரிச்சிருந்தேன். நீயும் உன் அப்பாவும் பயப்படுற அளவுக்கு அந்த லேடி ஒர்த் கிடையாது. நான் அனுப்புற ஃபோட்டோவை அந்த பொண்ணுக்கு அனுப்பிட்டு, கால் பண்ணு” என்று தன்னிடமிருந்த வேறொரு மொபைலை கொடுத்தான்.

“அப்பா என்னை பேச வேண்டாம்னு சொல்லியிருக்கார். ரெக்கார்ட் பண்ணி வச்சு அதையே எவிடன்ஸ் ஆக்கிட்டாங்கனா?”

“இதுக்கு மேலத்தான் எவிடன்ஸ் கலெக்ட் பண்ணனும்னு இல்ல. அதெல்லாம் முன்னாடியே ரெடி பண்ணியிருப்பாங்க. சரி… நீ பேச வேண்டாம்” என்று புகைப்படங்களை அனுப்பி வைத்து,

“அண்ணா நான் சொன்னதெல்லாம் நியாபகம் இருக்குதானே? கால் அட்டன் பண்ணினாங்கனா சரியா பேசிடுங்க” என்று சுபாஷ்னிக்கு அழைத்தான்.

சுபாஷினி அழைப்பை ஏற்க, ஸ்பீக்கரை ஆன் செய்து மொபைலை தேவராஜிடம் கொடுத்தான்.

“தாமோதரன் இல்லைனா செத்துடுவிங்களா? அவர் இனி உங்ககிட்ட பேசமாட்டார், நீங்க என்னைக்கு சாகப்போறிங்க?” என்றான் தேவராஜ்.

“யா… யார் நீங்க? இந்த ஃபோட்டோஸ்லாம் உங்களுக்கு எப்படி கிடைச்சது?”

“ப்ராஸ்டியூஸன் பண்ணினா அதுக்கேத்த பணத்தை வாங்கிக்கிட்டு போய்டனும், அஞ்சு கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா, சொகுசு கார், அப்பப்போ அப்ராட் டூர், உன் பொண்ணு பேர்ல டெபாசிட். இதுவே உன் தகுதிக்கு ரொம்ப ரொம்ப அதிகம்னு தெரியல?”

“யார் நீ?” என்று மீண்டும் கேட்க,

“இப்போ நான் பேசுறதை ரெக்கார்ட் பண்ணிக்கோ, இந்த நம்பர் வச்சு ஸ்டேஷன்ல கம்ளைன்ட் கொடு. நான் யார்னு அவங்க கண்டுபிடிப்பாங்க” என்றவன்,

“நான் யார்னு தெரியறதுக்கு முன்னாடி நீ யார்னு சொல்லட்டுமா? குடும்பத்தோட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியலனு நீ வேலையை விட நினைச்சாலும் உன் திறமைக்கும் நேர்மைக்கும் உன் பாஸ் உன்னை விடவேமாட்டேங்குறார். மாசம் பத்து லட்சம் சம்பளம் கொடுக்குறார். இதான உன் புருஷன்கிட்ட நீ சொல்லிட்டிருக்க கதை.

நம்ம பொண்டாட்டி மாதிரி அறிவாளி யாரும் இல்லனு அந்த மாக்கானும் நம்பிட்டிருக்கான். இந்த ஃபோட்டோஸ்லாம் அவன் நம்பருக்கு அனுப்பி வைக்கட்டுமா?

உன்னோட சேர்ந்து உன் பொண்ணும் தாமோதரன் பத்தி மறைச்சிருக்கானு உன் புருஷனுக்கு தெரிஞ்சா என்ன சொல்வான்? பொண்டாட்டியை விட பொண்ணு அறிவாளி, பதினொரு வயசுலயே அம்மாவோட சேர்ந்து பணம் சம்பாதிச்சிருக்குனு பெருமைப்படுவானா?” என்றான்.

“இல்ல, இது வெளில தெரிஞ்சா அவருக்கும்தான் அசிங்கம்” என்று சமாளிக்கப்பார்த்தாள்.

“ஓ… இதை சொல்லித்தான் தாமோதரனை பயமுறுத்திட்டு இருந்தியா?  அவர் மகனுக்கு இது தெரிஞ்சா என்னாகும் தெரியுமா? இளவரசன் கஸ்டம்ஸ்ல வேலை பார்க்குறான். ஹோட்டல்ல டிரக்ஸ் டிஸ்டிபியூட் பண்ணினேனு உன்னை அரெஸ்ட் பண்ணி சாகும்வரை வெளில வர முடியாத மாதிரி பண்ணிடுவான்”

“அப்படி அப்படி பண்ணிடாதிங்க” என  கெஞ்சினாள்.

“தாமோதரனுக்கு போன் பண்ணி இனி நமக்குள்ள ஏதும் வேண்டாம். நீங்க இதுவரை செஞ்சதே போதும்னு சொல்லி உறவை அத்து விடற. வேலையையும் ரிசைன் பண்ணிடனும். பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி மிரட்டுறாங்கனு தாமோதரன்கிட்ட சொல்லி அனுதாபத்தை உண்டாக்குறதுனு எதாவது ப்ளான் பண்ணின, உன் ஃப்யூச்சரோட சேர்த்து புருசன் புள்ளனு குடும்பத்தையே நாசம் பண்ணிடுவேன். உனக்கு ஒரு மணி நேரம்தான் டைம்” என்று இணைப்பை துண்டித்தான் தேவராஜ்.

“எப்படி இவ்வளோ டீட்டெய்ல் கலெக்ட் பண்ணுனிங்க?” என இளவரசன் வியப்பாக கேட்க, “நீயெல்லாம் எப்படி கஸ்டம்ஸ் ஆஃபீஸர் ஆன?” என முறைத்தான் பொற்செல்வன்.

கடத்தல் கும்பலையே ஒரு கை பார்த்தவனுக்கு இதெல்லாம் ஒரு விசயமா என தம்பியை பெருமையாய் பார்த்திருந்தான் தேவராஜ். பெரிய துன்பத்திலிருந்து விடுதலைப் பெற்ற உணர்வு வந்தது இளவரசனுக்கு.

இளவரசனின் நிம்மதியான முகத்தைப் பார்த்து தானும் நிம்மதியடைந்தவன், “டேய்… இங்க நடந்ததை உன் அப்பாகிட்ட சொல்லிடாத. அந்த லேடி ரெக்கார்ட் பண்ணி உன் அப்பாகிட்ட காட்டினாலும் என் குரலை கண்டு பிடிக்காம இருக்கத்தான் அண்ணாவை பேச சொன்னேன்.

சுபாஷ்னி தன்னால விலகினதாவே உன் அப்பா நினைச்சுக்கட்டும். நான் பண்ணினேனு தெரிய வந்தா உன் அப்பா என்கிட்ட பேச வருவார். இதெல்லாம் என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சது… என்னை மன்னிக்கவே மாட்டா. கல்யாணம் ஆகி ஒரு மாசம்தான் ஆகுது. என்னை வாழாவெட்டி ஆக்கிடாதடா” என்றான்.

“பாப்பாகிட்ட அந்த பயம் இருக்கட்டும்” என்று பெருங்குரலெடுத்து தேவராஜ் சிரிக்க, இளவரசனிற்கும் சிரிப்பு வந்தது.

“நீ வரேனு சொல்லி ஆன்ட்டியை வீட்டுக்கு அனுப்பிட்டேன், போய் நல்லா சாப்பிட்டு, நிம்மதியா கொஞ்ச நேரம் தூங்கு. ஈவ்னிங் செல்வியை அழைச்சிட்டு வீட்டுக்கு வரேன்” என்றான்.

பொற்செல்வனோடு தினமும் செல்வியும் வேலைக்கு வருகிறாள் என்பதால், “செல்வி இன்னைக்கு வேலைக்கு வரலையா?” என்றான்.

“வந்தா, நாம பேசனுன்றதுக்காக அவளை கம்பெனிக்கு போக சொன்னேன், பெரிய பொறுப்பு கொடுத்ததும் பெருமையோட கிளம்பிட்டா” என்றான் சிரிப்போடு.

இளவரசனும் அன்னையை காண கிளம்ப, “நான் இல்லைனா தண்ணி கூட குடிக்கமாட்டேங்குறா, நானும் கிளம்பறேன்டா” என்று தேவராஜ் கிளம்ப, இதமான மனநிலையோடு தனது வேலையின் கவனமானான் பொற்செல்வன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!