Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆதவனின் அனிச்சமலரே

ஆதவனின் அனிச்சமலரே 1(1).

மலர் 1.

வெண்பஞ்சு மேகங்கள் மலைப்பகுதியை போர்வையாய் போர்த்தி இருக்க, மழலையின் கிறுக்களாய் ஆங்காங்கே தெரிந்த கார்மேகக் கூட்டங்கள் பன்னீராய் தூரலை தூவிக்கொண்டிருந்தன. சிலுசிலுவென்ற காற்று உடலை தழுவி சென்று மனதை இதமாக்கும் காலை நேரம். பறவைகளின் சத்தம் சங்கிதமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.

இயற்கையின் வனப்பை ரசிக்காமல், தானாக வழிந்தோடும் கண்ணீரையும் துடைக்க மனமில்லாமல். பனிகள் உறங்கிய புல்வெளித் தரையை ஜன்னலின் வழியே வெறித்துக் கொண்டிருந்தாள் அவள்.

“பாப்பா” என்ற மூர்த்தியின் அழைப்பு குரல் செவிகளை எட்ட, நடப்பிற்கு வந்தவள் வேகமாக கண்ணிரை துடைத்து கொண்டு கூடத்திற்கு வந்தாள்.



Advertisement

நடுத்தரமான உயரம் எண்ணெய் வைத்து வாரினாலும் எம்பி நிற்கும் சுருட்டை முடி, அவள் தாயை போல சற்று நீளமாக வளர்ந்திருந்தது. பார்ப்பதற்கு பளிச்சென்று தெரியும் பால் நிறமில்லை என்றாலும், கோதுமையின் மங்கலான நிறம். சிரித்து பேசினாள் அழகை மெருக்கேற்றும் கன்னங்கள். ஆனால், சில நாட்களாகவே சிரிப்பை தாரைவார்த்து விட்டதை போன்ற வாடி வற்றிய முகம். தற்சமயம் தனிமையின் ரசிகையாகி போனாள்.

நந்தனம் எஸ்டேட்டிற்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில்
மேற்பார்வையாளராக பணிபுரிகிறார் மூர்த்தி. மகள் பிறந்த சில நாட்களிலேயே அவரின் மனைவி தேவகி உடல்நிலை சரியில்லாது இறந்துவிட, மூர்த்தியின் தந்தை ராஜதுரை வற்புறுத்தியும் மறுமணம் புரியாமல் மகளை வளர்க்கும் பொறுப்பை தன் வாழ்நாளின் கடமையாக ஏற்று கொண்டார். இன்றுவரை அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதில்லை. மகளின் முகம் கண்டே மாற்றத்தை உரைத்து விடுவார் மூர்த்தி.

ராஜதுறை இறந்தபிறகு மகளின் இயல்பான குணங்கள் மறைந்துவிட்டதை போல உணர்ந்தவர் சில நாட்கள் சென்றால் சரியாகிவிடும் என்று எண்ணியிருக்க, சில மாதங்கள் கடந்தும் அவளிடம் தெளிவில்லாததை உணர்ந்து, அவளின் நடவடிக்கைகளை புருவ நெறிப்புடன் கவனித்து வந்தவருக்கு மகளின் நிலை சற்று பயத்தை அளித்தது.

Advertisement

மனதில் வைத்து மருகுவதற்கு பதிலாக மகளிடமே கேட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் அழைத்தவர் மகளை அருகில் இருத்தி கொண்டு அவளிடத்தில் தீட்சண்யமான பார்வையை செலுத்தினார்.

Advertisement

“என்னப்பா விஷயம் எதுக்கு கூப்பிட்டீங்க?”.

” நானும் கொஞ்ச நாளா உன்ன கவனிச்சுட்டு தான் இருக்கேன் என்னாச்சு ம்மா உனக்கு. எப்பவும் துறுதுறுன்னு இருப்ப இப்பெல்லாம் கூப்ட்டு வச்சு பேச வேண்டியதா இருக்கு. உன்னோட முகமே சரியில்ல எதையோ இழந்த மாதிரி சோகமா முகத்தை வச்சுக்கிட்டு இருக்க. ஏதாவது பிரச்சனையா ம்மா அப்பாகிட்ட சொல்லுடா” என்று ஆதுரமாய் மூர்த்தி கேட்க,

சொல்லிவிட வேண்டும் என்று துடித்த நாவை அடக்கி, எச்சிலை கூட்டி விழுங்கியவள்”என்னப்பா நீங்க. நா எப்பவும் போல தான் இருக்கேன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல அப்டியே இருந்தாலும் உங்ககிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவேன்” என்று முடிந்த வரை அகத்தை காட்டாது முகத்தை இயல்பாக வைத்து கொண்டே பேசினாள்.

Advertisement

மகளின் முகவாட்டத்தை ஆராய்ந்தவர் “இல்லையேம்மா எதையோ யோசனை பண்ணிட்டு இருக்குற மாதிரியே எனக்கு தோணுது என்னோட பொண்ண பத்தி எனக்கு தெரியாதா” என்றார் மூர்த்தி பரிவாக மகளின் தலையை வருடியபடி.

கண்ணீர் அணை கட்டி நிற்பதை மறைக்க தலை குனிந்து கொண்டாள் அவள். தன் நிலையை சொல்லி ஆறுதல் தேட துடித்த மனம் மறுநிமிடமே ‘வேண்டாம் வயதான காலத்தில் தன்னால் தன்னை நினைத்து ஒவ்வொரு நிமிடங்களையும் வேதனையுடன் கழிக்க வேண்டாம். தெரியும் போது தெரியட்டும் அதுவரை அமைதியை கையாள்வோம்’ என்று சமாதானம் செய்ய,

மௌனம் காத்த மகளை கண்டு பேச்சை தொடர்ந்தார் “தாத்தா போனதுல இருந்தே நீ இப்படி தான் இருக்க மீரா. எப்பவும் வாய் ஓயாம பேசுவியே அந்த பேச்செல்லாம் எங்க போச்சு ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்க பிடிக்காம ஏதாவது ஒன்னு பண்ணிக்கிட்டே இருப்ப. அது எதுவும் இப்போ உன்கிட்ட இல்ல எதுவா இருந்தாலும் ஏங்கிட்ட சொல்லும்மா நா உனக்கு தீர்வு சொல்றேன் எதையுமே சொல்லாம நீ இப்டி அமைதியா இருக்கறத பாக்குறாப்போ எனக்கு பயமா இருக்கு” என்றவரின் முகத்தில் கவலையின் ரேகைகள் படர்ந்தன.

“அப்பா! நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல. என்ன நினைச்சு நீங்க பயப்பட தேவையும் இல்ல, நா எப்பவும் போல தா இருக்கேன் தாத்தா நம்மள விட்டு போனது  மனசுக்கு என்னவோ போல இருக்குப்பா. இந்தவீட்டுல ஒரு ஆள் இல்லன்னு நினைக்கிறப்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு அவ்ளோ தான்” என்று சிறு புன்னகையை ஏந்தி கூறியவள்,

பேச்சின் போக்கை மற்ற”ப்பா நாளைக்கு நாம கோயிலுக்கு போலாமா நீங்களும் நானும் சேந்து கோயிலுக்கு போய் எவ்ளோ நாள் ஆச்சு போயிட்டு வரலாமா?” என்று புருவத்தை உயர்த்தி தலையை ஆட்டி, ஆவலோடு அவள் கேட்ட விதம் மூர்த்திக்கு புன்னகையை வரவழைத்தது.

“நல்லாவே பேச்சை மாத்துறம்மா”என்று மூர்த்தி சிரிக்க,

” ப்ச் நாளைக்கு கோயிலுக்கு வர்றிங்களா… இல்லையா.?” அழுத்தமாய் கேட்டாள் மீரா.

“ம் போலாம்மா நீ கேட்டு நா எதையாவது மறுத்துருக்கேனா” என்றதும் மீராவின் வதனத்தில் புன்னகை மலர்ந்தது.

அதே புன்னகையுடன் “உங்களுக்கு பிடிச்ச ரவா இட்லியும் தேங்கா சட்னியும் பண்ணிருக்கேன் வந்து சாப்பிடுங்க” என கூறி எழுந்து கொண்டவள் உணவு பாத்திரங்களை எடுத்து வைத்து பரிமாற,

“நீயும் உக்காரும்மா தனியா சாப்ட எப்டியோ இருக்கு” என்று தன்னுடன் அமர்ந்து உண்ணும்படி கூறவும், மறுப்பு சொல்லாமல் பேருக்கு சில இட்லிகளை வயிற்றுக்குள் இறக்கினாள் மீரா.

சற்று நிமிடத்தில் உணவை முடித்து கொண்டு மூர்த்தி பணிக்கு கிளம்பி சென்று விட, கதவை தாளிட்டு விட்டு நாற்காலியில் அமர்ந்தவள் தன் நிலையை எண்ணி மீண்டும் தன்னை சோகத்தில் அமிழ்த்தி கொண்டாள்.

முடிவில்லாத பயணம் என்று எண்ணி வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் அனுபவித்து மகிழ்ந்தவள் முற்று புள்ளியாய் வந்து அமைந்த விதியை எண்ணி ஒவ்வொரு நாளும் வேதனையில் நொந்து போக தொடங்கினாள் .

‘பிருந்தாவனம்’ என்று நுழைவாயில் சுவரில் பொறிக்கப்பட்டிருந்த பெயருக்கு, ஏற்றார் போல வீட்டின் வெளிப்புற அமைப்பு பார்க்கவே நந்தவனமாக காட்சியளித்தது. கண்களை கவரும் வண்ண மலர்கள் பசுமை மாறாத மரங்கள் பனிகளை தாங்கிய புல்வெளி தரைகள் என பார்க்கவே கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாய் இருந்தது அந்த இல்லம்.

உறுதியுடன் பேசும் கணவருக்கும், பிடிவாதமாக மறுத்து பேசும் மகனுக்கும். இடையே சாமாதனம் செய்யும் வழி தெரியாது தள்ளாடி தவித்து கொண்டிருந்தார் பூங்கோதை.

“டேய் விஷ்வா நீயாவது நா சொல்றத கேளுடா அப்பா உன்னோட நல்லதுக்கு தானே சொல்றாரு”.

“நீங்க சும்மா இருங்கம்மா” என்று எடுத்த எடுப்பிலேயே உக்கிரத்தை காட்டியவன் “உங்களுக்கு ஒன்னும் தெரியாது நீங்க அவர்  பேச்சை தான் கேட்க சொல்லுவீங்க எனக்கு தெரியாதா?, எது நல்லது கெட்டதுன்னு அவரு இஷ்டத்துக்கு பேசுவாறு நானும் பணிஞ்சு போகனுமா என்னால முடியாது என்னோட முடிவுல கொஞ்சமும் மாற்றம் இல்ல. கொஞ்ச நேரம் என்ன தனியா இருக்கவிடுங்க எதையாவது சொல்லி இரீடேட் பண்ணாதீங்க” என்று எரிச்சலை காட்டினான் விஷ்வாமித்ரன்.

கோபத்தில் தன்னை வெல்ல அகிலத்தில் மானிடர் உண்டோ என்னும் அளவிற்கு கோபத்தில் கொக்கரித்தான்.

கோபம் இயல்பானது ஆனால் ஆசைகள் அடிபடும் போது எல்லையில்லாமல் எம்பி குதித்து கன்னாபின்னவென, என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் சில நேரங்களில் மனதை வருத்தும் படி பேச வைத்து விடும். அவனின் ஆசைகள் மறுக்கப்பட்டதனால் உண்டான கோபத்தில் வெடுக்கென பேசிவிட, மகனின் கோபத்தில் முகம் வாடிய பூங்கோதை ‘அவன் கோபம் தணிந்ததும் பேசிக்கொள்ளலாம்’ என்று எழுந்து அவர் அறைக்கு சென்றுவிட்டார்.

“நாளையில இருந்து ஆபிஸ் வர பாரு விஷ்வா.வேலைய கத்துகிட்டா தான் எம்டி சீட்ல உக்கார முடியும் சும்மா தூக்கி கொடுக்க முடியாது” என்ற தணிகாசலத்தின் கண்டிப்பு நிறைந்த வார்த்தைகளை எண்ணி பார்த்தவனுக்கு கட்டுக்கடங்காத கோபம் தலைக்கேறியது. என்ன செய்வதென தெரியாமல் குறுக்கும் நெடுக்குமாக நடக்க தொடங்கினான் விஷ்வாமித்திரன்.

முப்பதை தொடாத பருவம் கருமைக்கும் வெண்மைக்கும் இடையேயான நிறம். வெளிநாட்டில் படித்து சில வருடங்கள் அங்கேயே தங்கி வேலை பார்த்ததினால் அதுவே நிரந்தரமாக வேண்டும் என்ற ஆசை உண்டாக,

தன் எண்ணத்தை வெளிப்படுத்திய நிமிடம். தணிகாசலம் மறுத்து பேசி அலுவலக வேலைகளை கற்று கொள்ளுமாறு சொல்லவும். முடியாது என்று கோபமாக எதிர் வாதம் செய்துவிட்டு வேகமாக அறைக்கு சென்றுவிட்டான் விஷ்வா.அவன் கோபத்தை தணிக்க பின்னோடு சென்ற பூங்கோதை சமாதானம் செய்ய முடியாமல் சுவரில் அடிபட்ட பந்தாய் திரும்பிவிட்டார்.

வாடிய முகத்துடன் அறைக்குள் நுழைந்த மனைவியை கண்டு “என்ன சொல்றான் உன்னோட மகன் நா சொன்னதுக்கு ஒத்துகிட்டானா இல்லையா?”, கேள்விக்கேட்டு நிறுத்தினார் தணிகாசலம்.

suganya mahesh

House wife

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!