Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்தபைரவி

ஆனந்தம் – 14.1

தேவாவின் ஸ்கார்பியோ அந்த பெரிய வீட்டின் முன்னால் வந்து நிற்கவும் முதல் ஆளாக கீழே இறங்கியது நிரஞ்சன் தான். இறங்கியவன் அமைதியாக இருந்தானா? பைரவி இறங்க ஏதுவாக அவள் பக்க கதவை திறக்க எத்தனிக்க தேவா அதனை லாக் செய்துவிட்டான்.

“ப்ரோ கதவை திறக்க முடியல ப்ரோ, அன்லாக் பண்ணுங்க” என்றான்.

“ராம் உங்க ரிப்போர்ட்டர்கிட்ட சொல்லி வச்சுக்கோங்க, உசுரோட ஊர் போய் சேரமாட்டான்”

தேவாவின் எச்சரிக்கையை கேட்டு பைரவி அவன் கையை பற்றிக்கொண்டாள், “ஆனந்த் இது என்ன சின்ன புள்ள தனமா?” சிரிப்போடு கேட்ட மனைவியை முறைத்தான்.



Advertisement

“என்னமோ பல வருஷம் பழக்கம் மாதிரி சிரிச்சு பேசுற அவன்கிட்ட. என்கிட்டே என்னைக்காவது அப்டி பேசிருக்கியா? போடி” பொறாமை வேரூன்றி இருந்தது அவன் குரலில்.

பின்னால் இருந்த ராம் தன்னுடைய உடமைகளை எடுத்து கீழே இறங்கி நண்பன் நிரஞ்சனை அவ்விடம் விட்டு அப்புறப்படுத்தினான்.

“அவர் போய்ட்டார் ஆனந்த்” தேவா இன்னும் கதவை திறக்கும் வாய்ப்பை மனைவிக்கு கொடுக்கவில்லை.

Advertisement

“அவர் பார்வைல சுத்தமா தப்பு இல்லங்க. ஏதோ அவர் இயல்பு போல இது” என்றாள்.

Advertisement

‘டக்’ என்ற சத்தத்தோடு அவள் கீழே இறங்க அனுமதி தேவாவிடமிருந்து வர இந்த முறை பெண்ணவள் இறங்கவில்லை. மனைவியை திரும்பி முறைத்தவன்,

“போடி சக்கர” என கோவமாக கூறி கீழே இறங்க கதவில் கை வைக்க தன்னுடைய இருக்கையிலிருந்து தேவாவின் கதவின் ஓரம் சென்று அவனை வெளியில் செல்லவிடாமல் அவன் உடலோடு உரசி தடுத்தாள் பைரவி.

மனைவி செயல் அதிர்ச்சியை கொடுக்க சற்று நகர்ந்தாலும் அவள் உடலை அதிகம் உரசும் தன் உடலை மூச்சு கூட விடாமல் பிடித்து வைத்திருந்தான் தேவா.

Advertisement

“ஆனந்த் உங்களுக்கு பொறாமை தான?” கேலி சிரிப்போடு அவனை பைரவி ஏறிட, முதலில் அவளுக்கு பதில் கூறவேனும் மூச்சை விட வேண்டுமென உணர்ந்து அவள் கையை விளக்கி அமர்த்தினான்.

“ஒரு ஆமையும் இல்ல” மீண்டும் மனைவி தன்னை முற்றுகையிடும் முன்பு வேகமாக கீழே இறங்கி, “பேக் எதையும் எடுக்காத, உள்ளையே இருக்கட்டும்” என்றான்.

“ஆனந்த்” மனைவியின் என்ற திருப்தியற்ற அழைப்பில் திரும்பி, “ஏய் அவிங்க இருக்காய்ங்கனு நான் சொல்லலடி. நமக்கு வேற வீடு ஏற்கனவே பாத்து வச்சிருக்கேன், அங்க தான் போறோம். காரணம் இப்ப எதிர் பாக்காத” என்றான் முடிவாய்.

சரி என்றவள் வீட்டினுள் சென்று இளங்கோவன், கடற்கரைதாயம்மாளிடம் சென்று ஆசீர் பெற்று காலை உணவை உண்ண, உடன் தேவாவே ராம் மற்றும் நிரஞ்சனை அழைத்தான்.

“அந்த புள்ள அப்பயே சாப்ட்டானே, என்ன தம்பி உனக்கு இன்னும் பசிக்கிதாய்யா?” என தேவாவின் பாட்டியே கேட்கும்படி இருந்தது அவன் செயல்.

“இல்ல அப்போ எனக்காக சாப்பிட்டேன். இப்போ ஆசையா என்ன கூப்பிட்ட உங்க பேரனுக்காக சாப்புடுறேன் பாட்டி, இன்னொரு ஆப்பம் வச்சாலும் குறை சொல்லாம சாப்புடுவேன்” ஏப்பம் ஒன்றை விட்டு அவன் கேட்டதும் பைரவி சத்தமாக சிரிக்க அவனுக்கு வைக்கப் போன உணவை தான் பிடுங்கி உண்டான்.

“உங்க பேரனுக்கு பசிக்கிது போல, சரி எனக்கு ரெண்டா வந்து குடுத்துடுங்க. அப்டியே முடிஞ்சா நாட்டுக்கோழி முட்டை உடைச்சு ஊத்தி முட்டை ஆப்பம்” நிரஞ்சன் கேட்டதில் கட்டுப்படைந்த தேவா அருகில் அமர்ந்திருந்த ராமை தலையில் ஒரு அடி வைத்தான்.

“உங்கள எல்லாம் வீட்டுக்குள்ள விட்டதே தப்புடா. ஒழுங்கா மதியம் சாப்பிட்டு ஊரு பாத்து கிளம்புங்க”

உரிமை தானாகவே தேவா எடுத்துக்கொள்ள ராமும் சரி நிரஞ்சனும் சரி எந்த விதமான தடையும் விதிக்கவில்லை. அவர்களுக்கே உரிய தொழிலின் பழக்கம் பார்ப்பவரை எல்லாம் சில நொடிகளில் சொந்தமாக்கிக் கொண்டனர்.

அதற்கு ஏதுவாக கடற்கரைதாயம்மாளின் பாசமும், இளங்கோவனின் அரவணைப்பும் கிடைக்க மேலும் பழக எளிதான பாதையாக போனது.

“ராமு வாடா ஒரு தூக்கம் போட்டு மதியம் போல வேலைய பாக்கலாம்” நண்பனை அழைத்தான் நிரஞ்சன்.

“யய்யா, முட்ட ஆப்பம் கேட்ட?” சமயலறையிலுருந்து குரல் வந்தது.

“இங்க தீய சக்தி அதிகமா இருக்கு பாட்டி, நான் அங்க வந்து வாங்கிக்கிறேன்” இலையை மடித்து அப்படியே தூக்கி சென்றவனை எழுந்து நின்று தலையில் கொட்டினான் தேவா.

“வெண்ணை இலைய வச்சிட்டு அங்க போய் தட்டுல எடுத்து சாப்பிடுடா” தேவா மிரட்டவும், “போடா டேய்” என திட்டிக்கொண்டே சமயலறைக்குள் ஓடி பதுங்கிவிட்டான் நிரஞ்சன்.

சின்ன சிரிப்போடு உணவை மனைவி முடிப்பதை பார்த்தவன், “குளம் வர போய்ட்டு வர்றேன்” பெயருக்காக கூறி செல்ல அவனிடம் தலை அசைத்து அனுமதி கொடுத்தாள் தேவானந்தின் சக்கரை.

தேவா சென்றதும் அவன் ஆச்சி இருந்த சமையலறை சென்ற பைரவி அங்கு நின்று ஆப்பம் ஊற்றும் நிரஞ்சனை பார்த்து கடற்கரைதாயம்மாளிடம் திரும்பினாள்.

“அவங்க எங்களுக்கு தனியா வீடு பாத்துருக்குறதா சொன்னாங்க ஆச்சி உங்ககிட்ட எதுவும் சொன்னாங்களா?” என கேள்வி கேட்டாள்.

“தெரியும் ம்மா, என் பேராண்டிக்கு இங்கன இருக்கவே பிடிக்காது. ஒருவேளை இங்க தங்குற சூழ்நிலை வந்தாலும் வாசல்லயே கட்டில்ல படுத்து எந்திரிச்சிட்டு கெளம்பிடுவான்” வேதனையோடு முடித்தார்.

“ஓ வாட்ச்மேன் வேலை கூட பாப்பாரா உங்க பேரன்?” வெற்றிகரமாக ஆபத்தை பியித்துவிடாமல் எடுத்த துள்ளலில் நா பரபரத்து கேட்டுவிட்டான். பைரவி அவனை முறைக்க அவன் பேசியதை கேட்டு ஆச்சிக்கு மேலும் தான் வருத்தம்.

“நீ சொல்ற மாதிரி தான் ய்யா இந்த வீட்டுல உள்ளவிங்க பேசுனாய்ங்க. கொஞ்சம் நஞ்சமாவா பேச்சு வந்துச்சு என் பேரனை பத்தி” ஏதோ பெரிதாக நடந்திருக்குமோ என்ற பய உணர்வு பைரவிக்கு வந்தது.

“அவரை யார் ஆச்சி இப்டி எல்லாம் பேசிருப்பாங்க?” என்றாள் தயக்கமாக. அவனை பைரவி தெரிந்தவரை எவர் பேச்சையும் அதிகம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டான்.

அதிகம் அவனை ஒதுக்கிவைக்கும் அவன் தந்தையின் வார்த்தையை கூட மூளைக்கு எடுத்துச் சென்று கோவத்தை காட்டுபவன் அதை ஒருபொழுதும் மனதிற்கு எடுத்து சென்றதில்லை.

இப்பொழுது கூட மாளிகை போல் இருக்கும் இந்த வீட்டில் குறைந்தது பத்து குடும்பம் தாராளமாக தங்கலாம் தான். ஆனால் இன்று இங்கு ஒரு நாள் கூட தங்க வேண்டாம் என வேறு இல்லம் பார்த்திருப்பவன் மனதின் காயத்தின் ஆழத்தை புரிந்துகொள்ள முடிந்தது.

“வேற யாரு ம்மா நான் பெத்த மவராசன் தான்” என்றார்.

“கதை நல்லா இருக்கே” ஆர்வமாக கதை கேட்க துவங்கினான் நிரஞ்சன்.

“குசும்புக்காரா” ஆச்சி செல்லமாக அவனை அடித்து பேத்தியிடம் திரும்பினார்.

“என் மவன் நல்லவன் தான் தாயி. மறுமவனே-னு அவன் உருகுறதும் மாமா-னு இவன் உருகுறதும் பாக்கவே அப்டி கண்ணு குளுந்து போகும். தேவாவை தோள் மேல தூக்கி வச்சு ஊரையே சுத்துவான். அந்த அளவு பிரியம் அவனுக்கு தங்கச்சி மவன் மேல.

என் மவனுக்கு மண்ணு சகதி, வெயில் எதுவும் ஆகாது. சரின்னு மருதல ஒரு மல்லிகை கடை வச்சு கொடுத்தோம். நல்ல யாவாரம் ஆச்சு. கையோட கல்யாணத்தை பண்ணி வச்சிட்டோம். மருமக குணமும் தங்கம்னும் சொல்ல முடியாது, ஒண்டாத பண்டாரம்னும் சொல்ல முடியாது. இங்க வந்தா அனுசரிச்சு தான் போவா.

கிடுகிடுன்னு தேவா வளந்தான். வளர வளர மாமன் வருவான்னு இங்க வந்து கிடையா கிடப்பான். தாத்தா கஷ்டப்படுறத பாத்து கூட மாட எல்லா வேலையும் இழுத்து ஒட்டு செய்வான்.

என் மகன் கத்துக்காதத என் பேரன் பதினெட்டு இருவது வயசுலயே கத்துக்கிட்டு மீசையை முறுக்கி நினைப்போ என் அய்யாவை பாத்தா மாதிரி அம்புட்டு கம்பீரம் அவன்கிட்ட” பேரனை பற்றி பேச பேச பூரிப்பு அவர் முகத்தில் பூத்து மகிழ்ச்சி தாண்டவமாடியது.

“அவன் தாத்தன பத்தி ஒருத்தர பேச விட மாட்டான். சண்டியனாட்டம் முறுக்கிக்கிட்டு நிப்பான். அவனோட அந்த அழகை பாத்தே நான் அவனுக்கு அந்த தங்க காப்பு வாங்கி தந்தேன். அவன் தாத்தா என்ன வசவு வஞ்சே கொன்னுடுவார்.

அவன் கோவத்தை குறைக்க பாக்காம இது என்ன ஏத்தி விடுற-னு . இதுல மருமகன்புள்ள வேற நாயகிக்கிட்ட திட்டுவார் போல. படிச்சவன் மாதிரி இல்லாம மாட வளக்குறது தென்னை ஏறுறதுன்னு” சிரித்தார் முகம் உடனே வாடியது.

“எல்லாத்துக்கும் கண்ணு வச்ச மாதிரி கொஞ்சம் கொஞ்சமா வீட்டுல பஞ்சாயத்து வர ஆரமிச்சது. தேவாவை அவன் தாத்தா இப்டியே வேலைய பாத்துக்கோ-னு கொஞ்சம் கொஞ்சமா அவன் பொறுப்புள்ள விட ஆரமிச்சார்.

என் மவன்க்கு ரெட்டை பொம்பள புள்ளைங்க. அதுல ஒருத்தி தேவாவை விட நாலு வயசு இளையவ. இந்த பயன் ஊருல எல்லா புள்ளைங்ககிட்டையும் ரவுச காட்டுற மாதிரி அவகிட்டையும் பேசிருக்கான்.

அத என் பேத்தி பெருசா எடுத்துக்காட்டு அவ அப்பன்காரன்கிட்ட சொல்லி அழுக, மருமக அவனை ஏவிவிட்டு வீட்டுல ஒரே சலசலப்பு. ‘அனாதையா நின்ன உன் அம்மையையும் அப்பனையும் வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்து விட்டதுக்கு என் பொண்ண வளச்சு போட்டு சொத்தை அமுக்கலாம்னு பாக்குறியா’னு நாக்குல நரம்பே இல்லாம பேசுனான்” புடவை முந்தானையை எடுத்து கண்ணீரை துடைத்தார் அந்த முதியவர்.

பைரவியால் ஓரளவு யூகிக்க முடிந்தது அதன் பிறகு பிள்ளைகளுக்கு இடையேயான உறவு எந்த வகையில் இருந்திருக்கும் என. தங்கள் திருமணத்திற்கு கூட அவன் தாய்மாமா மட்டும் தான் வந்தார், அதுவும் மூன்றாம் நபரை போல நேரத்திற்கு வந்து பெற்றோர், தங்கையிடம் கூட பெரிதாக பேசவில்லை. ஒதுக்கம் காட்டி சென்றுவிட்டார்.

“அதோட நிறுத்துனானா அந்த பாவிப்பயே, என் பேரனை அடிச்சு முகம் எல்லாம் ரத்தம் வழிய நின்னும் வெறி அடங்காம போலீஸ் வர கூட்டிட்டு போனான். அதுக்கு மேல இவரால் பொறுத்துக்க முடியல.

‘வருசத்துக்கு ஒரு நாள் வந்து நாங்க உசுரோட இருக்கோமா என்னனு பாத்துட்டு போற நீ எங்களுக்கு வேணாம், உன்னோட பங்க இன்னைக்கே உனக்கு ரூவாயா தர்றேன் இனி இந்த பக்கமே வர கூடாது’ னு சொல்லிட்டார்.

ஊர் பஞ்சாயத்தை கூட்டி மகளுக்கும் மகனுக்கும் சரி சமமா பங்கு குடுத்தார். தேவாக்கு விவசாயம் தான் விருப்பமனு தெரிஞ்சு அவன் பேர்ல தோட்டம் நிலைத்த வச்சு அதுக்கான தொகையை என் மவன் கிட்ட கொடுத்தோம்.

‘கடைசில உழைக்காம பெரிய சொத்தையே களவாடிட்டு போறான் பாரு-னு’ அந்த நேரத்துலையும் என் மருமக சொல்ல நாயகி கைல இருந்த மொத்த பத்தரத்தையும் எங்க கைல குடுத்தான்.

‘இந்த இடம் எனக்கு வேணும், ஆனா அதுக்கான பணத்தை வட்டியும் முதலுமா உங்க கைல குடுத்துட்டு தான் அதுல முழு உரிமை கொண்டாடுவேன்’-னு ஊர் முன்னாடி வச்சு சத்தியம் பண்ணான்.

அதுக்காக இன்னைக்கு வர என் பேரன் மாடா ராத்திரி பகல் பாக்காம உழைச்சுபணத்தை கட்டிக்கிட்டு இருக்கான். இப்போ கூட இந்த வீட்டுக்கு அவன் வர ஒரே காரணம் எங்க மேல இருக்க பாசத்தால் தான் தவற, உரிமை எடுத்து வந்ததில்லை. ஒரு நாள் கூட வாய தொறந்து பசிக்கிது-னு கேக்க மாட்டான்.

இப்போ அவன் கூட்டிட்டு வந்தானே இந்த பசங்க, இவங்களுக்கான சாப்பாடு செலவு கூட அவன் இதோ இங்க வச்சிருப்பான்” அஞ்சறைப்பெட்டியை எடுத்து காட்டினார். இரண்டாயிரம் தாள் ஒன்று காற்றில் ஆடி நின்றது.

“ஆனா எனக்கு என் பேரன் செஞ்சது இப்ப வர பெருமையா தான் இருக்கும். அவன் மனசுக்கு மவராசனா தான் வாழுவான்” என்றார் ஆத்மார்த்தமான வாழ்த்தோடு.

குடும்பம் இரண்டாக போனதது வருத்தமாக இருந்தாலும் கணவனின் செயல் மனைவிக்கு கர்வத்தை கொடுத்தது. கொண்டவன் நல்லவனாக இருந்தால் கூரை மேல் ஏறி நின்று கூட கூவலாம் என்பதை போல் சுயம்புவாய் நிற்கும் தன்னவன் உழைப்பின் மீது கர்வம் அவளுக்கு.

“நோட் பன்ரா… நோட் பன்ரா நிரஞ்சா… ‘மாமன் மகள் கண்ணீரில், அத்தை மகன் இளநீரில்’-னு ஒரு ஆர்டிகிளே விடலாம் போலயே”

தனக்கு தானே பேசிய நிரஞ்சன் திடீர் தாக்குதலை கேட்டு பைரவி வயிற்றை பிடித்து சிரிக்க துவங்கியவள் இரண்டு நிமிடம் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தாள்.

கைபேசியில் ஒரு முக்கியமான அழைப்பு வந்திருக்க குளத்திற்கு செல்லாமல் வெளியில் இருந்த தேவாவிற்கு மனைவி சிரிப்பொலி கேட்டு ஜன்னல் வழியாக உள்ளே பார்க்க, அடுப்படி திண்ணையை பிடித்து இன்னும் சிரித்துக்கொண்டிருந்தவள் கண்களில் ஓரம் கண்ணீர் துளி. மேலும் வெறுப்பேற்றியது அவன் ஆச்சியின் சிரிப்பும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!