Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்தபைரவி

ஆனந்தம் – 2.1

“அண்ணாச்சி, பொருள் எல்லாம் கட்டிவச்சுட்டீங்களா?” கேள்வி கேட்டபடியே நான்கு படிகளை ஏறி வந்தவர் தன்னுடைய வெள்ளை வேஷ்டி சட்டையில் கரை எதுவும் பட்டுவிட கூடாதென்பதில் கவனமாக இருந்தார்.

அதே நேரம் அந்த கடையை அவர் கண்கள் ஒரு வட்டமிட்டது. காலை மணி எட்டை கூட தாண்டியிருக்கவில்லை ஆனாலும் இந்த நேரத்திலே ஐந்தாறு மனிதர்கள் கையில் பையோடு நின்றனர்.

“எல்லாம் எடுத்து வச்சாச்சு ய்யா, டேய் சீனிமுத்து சிட்டைய எடுத்துட்டு வா” என வேலையாளை ஏவினார் அந்த பெரியவர்.

பெயர் அர்ஜுனன். எழுபத்தி ஐந்து வயதில் இன்னும் அவர் கம்பீரம் அனைவரையும் ஆட்டி வைக்கும். பெயருக்கு ஏற்றார் போல் கம்பீரமும், ஊர் மொத்தமும் நற்பெயரை கொண்டவர்.



Advertisement

விருதுநகர் சந்தையில் முக்கிய பகுதியில் பல தலைமுறைகளாக பார்க்கும் மொத்த வியாபார மல்லிகை கடை ஒன்றை இப்பொழுதும் நிறுவி லாபகரமாக மகனோடு இணைந்து நடத்திவருகிறார்.

அவர் மூத்த மகன் பிரதாப், தந்தையின் உதவியோடு பருப்பு ஆலையை ஒன்று பத்து ஆண்டுகள் முன்பு துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றார்.

விருதுநகர் மக்கள் மட்டுமல்லாது, அருகில் இருக்கும் கிராமங்கள், சிவகாசி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, சாத்தூர் என பல சீறூர்களில் இருக்கும் மொத்த வியாபார கடைகள் கூட வியாபாரத்திற்கு இவர்கள் இடையிலிருந்து தான் பொருட்களை வாங்குவர்.

Advertisement

பொருளின் தரத்தை பார்த்தே இவர்களை விட்டு வேறு எங்கும் சென்றிட மனம் வராது எவருக்கும்.

Advertisement

“அண்ணாச்சி பொருள் நல்லா தானே இருக்கும்?” சந்தேகமாய் அவர் கேட்க, சிரித்த அர்ஜுனன் அமைதியாக இருந்தார்.

அவருக்கு பதில் அங்கு பொருள் வாங்க வந்த ஒருவர், “என்ன அண்ணாச்சி இந்த கடைக்கு இப்ப தான் முதல் முதல ஜாமான் வாங்க வந்துருக்கீங்களோ?” என்றார் கேள்வியாக.

அவரும் ஆமாம் என்க, “அதால தான் இந்த கேள்வி வருது, நம்ம அய்யா கடைல நயமான பொருள் மட்டும் தான் இருக்கும்”

Advertisement

இந்த ஒரு பெயருக்காக தானே ஒவ்வொரு பொருளை தேர்வு செய்யும் பொழுதும் அர்ஜுனன் வீட்டிலிருந்து ஒருவர் நிச்சயம் சென்று பார்த்து பிடித்தால் மட்டுமே சரக்கை வண்டியில் ஏற்ற அனுமதிப்பர்.

“அத கேட்டு தான் அண்ணாச்சி வந்தேன், ஆனா போன தடவ உங்க பங்காளி கடைல வாங்குனேன், கொஞ்சம் நட்டமாகிடுச்சு அதான் உறுதிப்படுத்திக்க கேக்குறேன்”

அவர் பங்காளி என்றது அர்ஜுனன் சித்தப்பாவின் மகன் கடையை. நல்ல உறவு இருந்தது, சித்தப்பாவின் குடும்பத்தோடு. காலப்போக்கில் ஒரு திருமணத்தின் பொழுது வார்த்தை தகராறு வந்து அன்றோடு இரு குடும்பத்திற்கும் ஆகாமல் போனது.

“அவரா? அந்த கடைல சில நேரம் நல்லா இருக்கும், சில நேரம் இப்டி தாங்க” வாடிக்கையாளர் ஒருவர் கூற, பேச்சை வளர்க்க விரும்பாமல்,

“மத்தவங்கள பத்தி எனக்கு தெரியாது ய்யா, என் சரக்கு நல்லா இருக்கும்” என முடித்துக்கொண்டார் பெரியவர்.

இதுவே அவரின் குணம், எவரையும் கெடுக்கும் எண்ணமே இருக்காது, எண்ணம் போல் வாழ்க்கை என்பதில் உறுதியாய் இருப்பவர். பிள்ளைகளும் தந்தைக்கு அவ்வளவு மரியாதை கொடுப்பார்கள். அதே சமயம் அதிகம் கண்டிப்புடையவர்.

“வண்டிய பின் பக்கம் வழியா நிறுத்து தம்பி, அப்டியே ஏத்திடலாம்” அவரே ஒரு வேலையாள் துணைக்கு அனுப்பிவிட்டு பாதையை காட்ட சொன்னார்.

காசியும் அவருக்கு இருக்கும் பெயரை கேட்டவுடன் விலையை பேரம் பேசும் எண்ணத்தை விட்டு ஒரு வணக்கத்தை வைத்து சென்றுவிட்டார்.

அடுத்து வந்த நபர் பெரிய பட்டியலை நீட்டினார், அதை பார்த்த அர்ஜுனன், “என்ன தம்பி பையனுக்கு கல்யாணம் போல” என்றார் சிரிப்போடு.

“ஆமாங்க அய்யா, நல்ல விசேஷம், நாளைக்கு பூ வைக்க போறோம். நம்ம கடை தானே ராசியான கடை, அதான் உங்ககிட்ட இருந்து வேலைய ஆரமிக்க போறேன்” என்றார் முகம் எல்லாம் சந்தோசமாக.

“சந்தோசம் ப்பா, சீனிமுத்து முதல உப்பு, மஞ்சள் எடுத்து வச்சிட்டு அடுத்த சாமானை போடுங்க” என பட்டியலை அவனிடம் ஒப்படைத்தார். இது போன்ற மக்களின் மனதினை அறிந்து செய்யும் சிறிய சிறிய பேச்சுகளே அவர்களுடைய நிரந்தர வியாபாரத்திற்கான யுக்தியும் கூட.

“அப்றம் அய்யா வீட்டுல எப்ப கல்யாண சாப்பாடு எதிர் பாக்கலாம்?” என்ற கேள்வி அவரிடமிருந்து தொக்கி நிற்க, பெரியவரின் முகம் மொத்தமாய் வாடி போனது.

பெரியவருக்கு வார்த்தைகள் உருவாகாமல் தவிக்க சரியாக அந்த நேரம் அங்கே வந்த அவர் மகன் பிரதாப், “அண்ணே வாங்க, டீ எதுவும் சொல்லவா?” என்றார் தந்தையின் முகத்தை சரி செய்ய நேரம் கொடுத்து.

“இருக்கட்டும் தம்பி, பையனுக்கு கல்யாணம். அதான் ஜாமான் எல்லாத்தையும் வாங்கி போட்டுடலாம்னு வந்தேன். வீட்டுல எல்லாரும் சொகமா?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க ண்ணே” என்றவர் தந்தையிடம், “ப்பா குடவுன்ல சாப்பாடு வந்து வச்சிருக்கேன், போய் சாப்புடுங்க” தந்தையை நாசுக்காக அனுப்பிவைத்தார் மகன்.

“வர்றேன் ப்பா” அந்த வாடிக்கையாளரிடம் இறங்கிய குரலில் மொழிந்து சென்ற தந்தையின் மன வேதனையை தாங்க இயலாது தவித்தார் பிரதாப்.

பாரமான மனதை திடப்படுத்தி வேலையில் மூழ்கிப்போக, அர்ஜுனன் தளர்வான நடையோடு கடையை விட்டு இரண்டடி எடுத்து வைத்த நேரம், அவர் முன்னே தன்னுடைய இரு சக்கர வாகனத்தை வந்து நிறுத்தினான் சந்தோஷ்.

அர்ஜுனன் மகள் வழி பேரன். நன்கு படித்தவன், ஆனால் தந்தையை பின்பற்றி அவருக்கு துணையாக நிற்கிறேன் என கிடைத்த வேலையை விட்டு தந்தையோடு இணைந்து பருப்பு வியாபாரமும், பருப்பு மில்லுக்கு பயன்படும் கல் உற்பத்தி செய்வதென்று நின்றுகொண்டான்.

அதில் வருமானமும் அதிகம் வர, படித்த படிப்பு வீணாவதில் அவனுக்கு பெரிய வருத்தம் எல்லாம் இல்லை. அவன் அன்னைக்கும் கணவனுக்கு ஒத்தாசையாக இருக்கும் மகனை தடுக்க மனம் வரவில்லை.

“ஏறுங்க தாத்தா, குடவுன்க்கு தானே போகணும்?”

“ஆமா ய்யா”

அவரின் வாடிய முகத்தை பற்றி கேள்வி கேட்கவில்லை பேரன். பதில் தான் அவனுக்கே தெரியுமே.

குடவுன் வரை வந்தவனால் அதோடு அவரை விட்டு செல்ல மனம் வராமல் வண்டியை நிறுத்தி பெரியவரை பின் தொடர்ந்தான்.

“நீ எங்கடா வர்ற? வேலைய கவனி”

“இருக்கட்டும் வாங்க” என அவரை முந்தி சென்றவன், அவர்கள் குடும்பத்திற்கென இருந்த சிறிய ஆபீஸ் ரூம் கதவை திறந்து, மேஜையில் இருந்த கேரியரை திறந்து, கூடையிலிருந்த தட்டில் இட்லி வைத்து சாம்பார், சட்னி வைத்தான்.

அமைதியாக தனக்கு உதவும் பேரனின் முகம் பார்த்தவர் மனம் இன்னும் நொறுங்கியது.

“என்ன சந்தோஷ் ஏதாவது பிரச்சனையா?” தாத்தாவின் கேள்விக்கு உடனே அவனால் பதில் சொல்ல முடியவில்லை பேரனால்.

நிமிடம் சில எடுத்துக்கொண்டவன் அவர் உண்ணும் வரை பொறுத்திருந்து, “புரோக்கர் பேசுனார்” என்றதோடு வார்த்தை அடைக்க அமைதியாகிவிட்டான்.

அவன் அமைதியே நல்ல செய்து எதுவுமில்லை என்க அதற்கு மேல் கேள்வி கேட்டு அவன் மனதை கசக்க விரும்பவில்லை பெரியவர்.

“வெளியூர்ல பாக்கலாமா தாத்தா?” யோசித்துப்பார்த்தார், அதுவும் பயத்தை தான் கொடுத்தது, “வேணாம் ய்யா, உளூர்ல பாக்கலாம், அப்ப தான் மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்” அடுத்த இட்லி ஒன்றை பேரன் வைக்க மறுத்துவிட்டு எழுந்தார்.

“கொஞ்சம் சிரமத்தை பாக்காம என்ன வீடு வரைக்கும் விட்டுட்டு போறியா சந்தோஷ்?” சரி என்றவன் அவரை வீட்டில் விட்டு கடைக்கு சென்றுவிட்டான்.

நகரின் மத்திய பகுதில் அமைந்திருந்த இருந்தது அவர் வீடு. பெரிய மதில்சுவர்களை கொண்ட வீடு. வெளியில் இருந்து பார்க்கவே பிரமாண்டமாக இருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் நூற்றி நான்கு ஆண்டுகள் அசராமல் இருந்த அவர்கள் வீட்டில் அதிகம் வேலை வர, இதற்கு மேல் பராமரிப்பு வேலை அதிகம் இழுக்கும் என வீட்டை இடித்து முன்பு இருந்ததை விட பெரிதாக, இன்னும் பிரமாண்டமாக கட்டினர். மொத்தம் மூன்று தளங்கள்.

வீட்டிற்குள் நுழைந்ததும் மூன்று கார் நிற்கும் அளவிற்கு அகண்ட பாதை வாயிலின் ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் தோட்டத்திற்காகவே ஒதுக்கியது போல் இருந்தது. அத்தனை செடிகள், சில தென்னை மரங்கள். ஒரு எலுமிச்சை மரம், ஒரு மாதுளை மரம் என சிறிதாய் அழகாக இருக்கும்.

தரை தளத்தில் பெரிய முற்றம் மூன்று தளத்திற்கும் இணைந்தது போல் வீட்டிற்குள் வானத்தின் மொத்த வெளிச்சத்தையும் இறக்கியது.

அந்த முற்றத்தை சுற்றி மொத்தமும் மரத்தினால் ஆன மேஜைகள், சோபா செட் மூன்று, அவர்கள் பரம்பரை வசதிபடைத்தவர்கள் என காட்டிவிடும்.

பனிரெண்டு பேர் அமரக்கூடிய பெரிய உணவு மேஜை, அதை ஒட்டியே தடுப்பு இல்லாத பெரிய சமையலறை. சமையலறையிலிருந்து பின்கட்டு ஒன்று, வெளி புழக்கத்திற்காக.

அதே தளத்தில் மனைவி பார்வதி வேண்டி கேட்டதால் பழமை மாறாமல் தங்களுக்கென பழைய அறையை போலவே இப்பொழுதும் கட்ட கூறிருந்தார் அர்ஜுனன்.

வீடே மாறியிருந்தாலும் அவர்கள் அறைக்குள் வந்தால் தங்கள் முன்னோர்களின் வீட்டிற்குள் வந்தது போன்ற சுவாசம் தரும் பெரியவர்களின் அறை. அதில் மொத்த குடும்பத்திற்கும் சந்தோசமே.

அவர்கள் அரையையொட்டி ஒரு விருந்தினர் அறை இருக்கும். முதல் தளத்தில் மகனுடைய குடும்பத்திற்கு நான்கு அறைகள், அதற்கு மேல் தளத்தில் இரண்டு அறைகள் தடுப்பு இல்லாமல் நீண்ட அறையை போல் இருக்க பழைய மரத்தினால் ஆன பொருட்கள் மொத்தமும் அங்கு தான் வைத்திருந்தனர்.

“ஏங்க இந்நேரம் வீட்டுக்கு வந்துருக்கீங்க?” கணவரை வாயிலில் பார்த்ததும் வாசல் அருகில் நாற்காலியில் அமர்ந்திருந்த பார்வதி எழுந்து வந்தார்.

மனைவியின் முகத்தை பார்த்து அதிலிருந்த பதட்டத்தை தனிக்கவே தன்னுடைய உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தார். வீட்டினரிடம் அர்ஜுனன் கடினமாக இருந்தாலும், மனைவியிடம் அவரால் முகத்தை சிறிதும் காட்ட முடியாது.

அர்ஜுனன் தாய்மாமன் மகள் தான் பார்வதி. சிறு வயதிலிருந்தே மாமன் வீட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம் பார்வதியை பார்த்து காதலித்து மணமுடித்தார். அதனால் தான் என்னவோ பார்வதியிடம் மட்டும் தான் அவர் அடங்கி போவது.

அர்ஜுனனுக்கு நேர் எதிர் பார்வதி. அன்பின், அமைதியின் திருவுருவம். மொத்த குடும்பத்தை, உறவுகளை அன்பால் கட்டி வைத்திருப்பவர். அர்ஜுனனை சரிசெய்ய சில சமயம் சிரியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை பார்வதியிடம் தான் நிற்கவேண்டி வரும்.

கணவனிடம் அவரும் சூசகமாக பேசி வேண்டியத்தை முடித்துவிடுவார். இதுவே அவரிடம் செல்ல உரிமையும், பாசமும் இளசுகள் வைத்திருப்பதன் காரணமாகியது. பார்வதி முகத்தில் சந்தோசம் இருந்தால் அந்த குடும்பமே சந்தோசமாக இருக்கும்.

“மாத்திரையை வீட்டுல வச்சிட்டு போய்ட்டேன் ம்மா, அதான் வந்தேன்” மாமனாரின் குரலை கேட்டு வெளியில் வந்த மூத்த மகன் பிரதாபனின் மனைவி காயத்திரி ஒரு நாற்காலியை எடுத்து போட, “கொஞ்சம் தண்ணி கொண்டாமா” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!