Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மீண்டும் ஒருமுறை -3

மீண்டும் ஒருமுறை -3

ஒரு வருடத்திற்கு பிறகு……..

“பாட்டிக்கு சாமி கும்பிட போறோம் அண்ணே. அதுக்கு தான்”

“அதுக்கு ஒரு நாள் லீவ் போதாதா எதுக்கு ரெண்டு நாள்?”



Advertisement

சட்டென்று ஒரு படப்படப்பை முகத்தில் காட்டியவள், “ராமேஸ்வரம் போய் திதி குடுக்க போறோம் அண்ணே அதுக்கு தான்” என்றாள்.

உடனே அந்த அண்ணன் நிமிர்ந்து அவளை பார்த்து விட்டு, “சரி போய்ட்டு வா” என்றதோடு முடித்துக் கொண்டார்.

அந்த அறையில் இருந்து வெளி வந்த உடனே, தன் நெஞ்சில் கைவைத்து பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டாள், நம் வேலினி.

Advertisement

அவள் அந்த துணிக் கடையில் தான் இன்றும் பணியில் இருக்கிறாள். பாட்டி இழப்பை மறந்து அவள் அடுத்த பணி தேடும் முயற்சியில் ஈடுப்படவே மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.

Advertisement

ஆரம்பித்தவுடன் முன்பு போல் நேர்காணலில் சரியாக பதிலளிக்க முடியாமல் போனது. அப்படி நான்கு மாதத்தில் பத்து இடங்களுக்கு சென்று வந்து விட்டாள். பணி இடத்திலும் அதிக விடுமுறை கிடைக்காமல் மிகவும் அவளுக்கு கடினமாக இருந்தது.

சூழ்நிலை இப்படி இருக்க, ஜானவியுடன் அவ்வப்போது பேசும் வழக்கத்தில் ஒருநாள் அவளிடம் அனைத்தையும் புலம்பி கொண்டிருந்தாள்.

 

Advertisement

அதற்கு ஜானவி, அவள் வேலைக்கு போகும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் நேர்காணல்களுக்கு என்று பயிற்சிகள் அளிக்கும் பயிற்சி மையங்ளை தேடி படிக்கலாமே என்று ஒரு யோசனை கூறினாள்.

ஜானவி சொல்வது சரியாக இருந்தாலும் அதனை செய்து முடிப்பது ஒன்றும் அத்தனை எளிய காரியம் அல்ல. வேலினி பொதுவாக வீடு திரும்பவே இரவு மணி ஒன்பதை நெருங்கி விடும். ஞாயிறு மட்டுமே விடுமுறை.

அதுவும் பகுதி நேரமாக வேலை செய்யும் ஒரு பெண் அந்த நாள் முழுக்க பணி புரிவதால் மட்டுமே இவளுக்கு விடுமுறை கிடைக்கிறது. ஒருவேளை அந்த பெண் விடுமுறை கூறினாள் என்றால் அந்த ஞாயிறும் வேலினி தான் வேலை பார்க்க வேண்டி இருக்கும்.

இத்தனை சிக்கலுக்கு இடையில் அவளால் நிச்சயமாக ஒரு இடத்தில் படிக்க சேர்ந்து முழுதாக ஈடுபாட்டுடன் படித்து முடிக்க இயலாது‌.   இணையவழியே படித்தாலும் கூட, பத்து மணிக்கு பாடம் நடத்துபவர்கள் நிச்சயம் குறைவுதான். அதனால் என்ன செய்யலாம் என்று தீவிரமாகவே யோசித்துக் கொண்டிருந்தாள்.

அந்த சமயத்தில் தான் வேலினிக்கு புலனத்தில் ஒரு செய்தி வந்து சேர்ந்தது. கல்லூரியில் இவளுடன் படித்த வகுப்பினர் அனைவரும் ஒன்றாக இணையத்தில் ஒரு குழுவை உருவாக்கி இருந்தனர்.

 

அந்த குழுவில் சில செய்திகள் எப்போதும் பகிர்ந்த வண்ணம் இருப்பர். அப்படி வந்த செய்தி தான் அவளுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

அது ஒரு பயிற்சி மையத்தின் விளம்பரமாகும். தற்போது தான் தொடங்கப்பட்டிருந்த அந்த பயிற்சி மையத்தில் இருந்து நேர்காணலுக்கு பங்குபெறும் பட்டதாரிகளை மெருகேற்றும் விதமாக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

 

மலிவான கட்டணத்திலேயே அதனை அவர்கள் அந்த பயிற்சியை வழங்குகின்றனர். அதுவே மற்றவர்களுக்கு அதை பொருட்டாக எண்ணாமல் கடக்க காரணமாக அமைந்தது.

அந்த பயிற்சி மையத்துக்கு “Shiva Training Institute” என்ற பெயர் வைத்திருந்தனர். அது பொறியியல் படித்து இப்போது நல்ல வேலையில் இருக்கும் ஒரு நண்பர்கள் குழு தொடங்கியிருக்கும் பயிற்சி மையம் என்று அங்கிருக்கும் நபர்கள் முதல் நாள் அவள் போய் விசாரிக்கும் போது தெரிவித்திருந்தனர்.

முதலீடு போட்ட நபரின் பெயரையே அதற்கு சூட்டியிருக்க, அதனை சிறப்புடன் நடத்த வேண்டி அதில் தங்களின் முழு உழைப்பையும் தர முன் வந்திருந்தனர் மற்ற நண்பர்கள்.

 

வாரம் முழுதும் இணையவழியில் நேரலையில் பாடத்தை நடத்தி அதனை கவனிக்க முடியாமல் இருக்கும் நபர்களுக்கு அதன் பதிவினையும் வழங்குகின்றனர்.

கூடவே ஞாயிறு அன்று மட்டும் நேரடியாக பயிற்சிகளும் நடக்கப்படுகிறது. பதிவுகளை கண்டு பாடம் கற்பவர்கள், தங்கள்  சந்தேகங்களை ஞாயிறு அன்று நேரடியாக வந்து தீர்த்துக் கொள்ளலாம்.

வேலினிக்கு தான் கேட்ட தகவல்கள் அனைத்தும் மிகப்பெரிய வாய்ப்பாக தோன்றிட, உடனே அதற்கு பதிவு செய்திருந்தாள். அதற்கு அடுத்து கிட்டத்தட்ட ஒன்றை மாதங்கள் முழுதாக தன்னை பயிற்சியில் ஈடுபடுத்தி கொண்டாள்.

மறுபுறம் அவள் பணியும் சிறப்புடனே நடந்து கொண்டிருந்தது. ஒன்றரை மாதத்திற்கு பிறகு ஒரு நிறுவனத்திற்கு நேர்காணல் செல்ல தயாரனாள்.

அந்த நேர்காணலில் நன்றாகவே தன் திறமையை வெளிக்காட்டி இருக்க, ஆனாலும் நடுவில் அவள் படித்துவிட்டு தன் துறையில் பணியில் இல்லாமல் இருந்த அந்த இடைவெளி அவர்களுக்கு நெருடலை கொடுக்க, அனுபவம் அதிகம் இருந்த ஒருவருக்கு அந்த பணி சென்று விட்டது.

இப்படியே காலம் செல்ல அவளுக்கு நேர்காணல் செல்வதும் கூட சில சமயங்களில் தடையாக இருந்தது. சில சமயங்களில் விடுமுறை கிடைக்காமல் போனது.

 

இப்படி பல காரணங்களால் அடுத்த நான்கைந்து மாதங்களாக வேலை வாங்குவது என்பது தள்ளிக் கொண்டே சென்றிருக்க, இதோ பாட்டி இறந்து ஒரு வருடம் நிறைவில் மீண்டும் ஒரு நேர்காணலுக்கு செல்ல விருக்கிறாள்.

பாட்டிக்கு திதி கொடுத்துவிட்டு மறுநாளே அந்த நேர்காணல் செல்ல இரண்டு நாள் விடுமுறை கேட்டு தயாராகிக் கொண்டிருக்கிறாள்.

கிட்டத்தட்ட ஆறு மாத காலமாக அவள் போட்ட உழைப்பின் பலனாக அந்த வேலை அவளுக்கு கிடைத்திருந்தது. மாத சம்பளம் 35 ஆயிரம் தர அவர்கள் தயாராக இருந்தனர்.

இரண்டு வருட இடைவேளை, அது போக திறனை வளர்க்கும் பயிற்சிகள் எதுவும் சிறப்பாக பயின்று முடித்திருக்கவில்லை என்பதால் தான், இந்த சம்பளம் அவளுக்கு.

 

ஒரு வேளை அனைத்தும் இருந்திருந்தால் அறை லட்சத்திற்கும் அதிகமாகவே சம்பளம் கிடைத்திருக்கும்.

இதை அவள் உணர்ந்தே இருந்தாள். எனினும் இதுவே அவளுக்கு மகிழ்ச்சி அளித்தது. துணிக்கடையில் வாங்கும் மிக குறைவான சம்பளத்திற்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணிக்கொண்டாள்.

இரண்டு வாரத்திற்கு பிறகு வந்து பணியில் சேருமாறு அவர்கள் கூறியிருக்க, அதற்குள் என்னென்ன வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்று மனதில் திட்டமிட்டவாறு வீடு திரும்பி கொண்டு இருந்தாள்.

எப்போதும் வேலினிக்கு மகிழ்ச்சியை தரும் விஷயமாக ஒன்று நடந்தால், அவளை மொத்தமாக சாய்த்து விடும் பெரிய நிகழ்வும் கூடவே வந்துவிடுவது தானே அவள் வாழ்க்கையின் இயல்பே. அது அன்றும் நிகழ்ந்தது.

வீடு வந்து சேர்ந்ததும் குடும்பத்தினர் அனைவரிடமும் தனக்கு வேலை கிடைத்த செய்தியை கூறி மகிழ்ச்சி அடைந்த வேலினி. அடுத்தடுத்து மாத சம்பளம் வாங்கவும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்ட ஆரம்பித்திருந்தாள்.

அவளுடன் குழலினியும் ஒத்து ஊதி பேசிக் கொண்டிருக்க, அவர்கள் தாய்தான் “கற்பனையில் கோட்டை கட்டாதே”, என்று அவள் தலையில் செல்லமாக தட்டி அவளை அடக்கி வைத்தார்.

 

இருந்தும் தன் மகளின் மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக இனிப்பு செய்ய தயாரான தாய் மயங்கி கீழே விழும் வரை தான் அவர்கள் மகிழ்ச்சி அங்கு நிறைந்திருந்தது.

தண்ணீரை தெளித்து எழுப்பி பார்க்க தாய் எழுந்து கொள்ளாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணி நேரங்களாக பரிசோதித்தும் எந்த தகவலும் தராமலே இருந்தனர்.

தந்தை மகள்கள் என மூவருக்கும் அந்த நொடிகள் நரகமாக நகர்ந்து கொண்டிருந்தது. அப்படி இப்படி என்று வெளியே வந்த மருத்துவர்கள், இப்போது எதுவும் சொல்ல முடியாத நிலை.

எங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது அதனை தீர்த்துக் கொள்ள நாளை வரை காத்திருக்குமாறு கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மூவரும் பயத்தின் உச்சயில் இருந்தனர். கட்டணத்தை செலுத்துமாறு ஒரு செவிலி வந்து நிற்க வேலினி சென்று சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கட்டினாள்.

 

தாய் இன்னும் கண் விழிக்காமல் இருக்க, தந்தை மகள்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவர் மட்டும் அன்று இரவு தங்கிக் கொண்டார்.

விடியலுக்கு முன்பே மகள்கள் இருவரும் வந்து சேர்ந்திருந்தனர். சற்று நேரத்திற்கு பின் வந்த மருத்துவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் தாய்க்கு தேவையான மருத்துவ பரிசோதனைக்கு தயார் செய்தனர்.

 

அன்று மாலைக்கு மேல் தான் பரிசோதனையின் அறிக்கை வெளிவந்தது, அதில் தெய்வானைக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உறுதியாகி இருக்க, மூவரும் இடிந்து போயினர்.

இவர்கள் ஸ்தம்பித்து நின்ற போதும் காலமும் மற்ற மனிதர்களும் அங்கேயே தங்கிவிடவில்லை. அனைவரும் தங்கள் ஓட்டத்தை ஓடி தானே ஆக வேண்டும்.

 

இவர்களும் அவர்களுடன் போட்டி போட்டு ஓட வேண்டிய கட்டாயம் இருந்தது. தாயின் பரிசோதனை இன்னும் பலப்படுத்தப்பட்டது.

எந்த அளவுக்கு ஆழமாக புற்றுநோய் பரவி இருக்கிறது, எந்த கட்டத்தில் இருக்கிறது போன்ற பரிசோதனைகள் அடுத்தடுத்த வாரங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதற்கிடையில் வேலினி தான் துணி கடைக்கு சொல்ல வேண்டும் என்பதை சுத்தமாக மறந்து போயிருந்தாள்.

தெரிந்த எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு, “நான் இப்போது வேலையாக இருக்கிறேன். அப்புறம் பேசுகிறேன்”, என்று கூறி வைத்துவிடுவாள்.

 

தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை அவள் ஏற்பதே இல்லை.

இரண்டு வாரம் கடந்து பணியில் சேர வேண்டிய நாளும் கடந்து போயிருந்தது. மொத்தமாக தாயின் உடல்நிலை மட்டுமே அந்த மூவர் எண்ணத்திலும் இருந்தது. தாயும் எழுந்து தனக்கு இருக்கும் நோய் குறித்து அறிந்ததும் தன் பெண் பிள்ளைகள் என்ன செய்வார்கள் என்ற கவலையிலேயே மற்ற அனைத்தையும் மறந்து போயிருந்தார்.

இப்படி மூவரும் வேலினி பணி பற்றி மறந்து போயிருக்க, நினைவு வந்தபோது அவள் வேலைக்கு சேரும் நாள் கடந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. ஞாபகம் வந்த அன்றும் போக முடியாமல், மறுநாள் அந்த அலுவலகம் வாசல் முன்பாக போய் நின்றாள்.

ஆனால் அவர்கள் அந்த இடத்திற்கு வேற ஒரு ஆளை பணியமற்றி விட்டதாக கூறி அவளை விரட்டாவதாக குறையாக அங்கிருந்து அனுப்பி வைத்துவிட்டனர்.

தாயின் முதல் கட்ட சிகிச்சைக்கே நகைகளை அடமானம் வைத்து புரட்டிய பணம் தீர்ந்து போயிருக்க, வேலையும் இல்லாமல் தான் என்ன செய்யப் போகிறோம் என்று உலன்று கொண்டிருந்தாள் வேலினி. அடுத்ததாக தான் பணிபுரிந்த துணிக்கடையை நோக்கி சென்றாள்.

அங்கு அவளுக்கு விடுமுறை கொடுத்த அந்த மேலாளர் அண்ணன் இவளை பார்த்ததும் வெறுப்பாக ஒரு பார்வையை தான் வீசினார்.

 

“உனக்கெல்லாம் கொஞ்சம் கூட வெட்கமாவே இல்லையா? மூணு வாரம் கழிச்சு என் முன்னாடி வந்து எவ்வளவு தைரியமா நிக்கிற”, என்று கேட்ட கேள்வி அவளை நிச்சயம் மிகவும் பாதித்தது.

என்ன தான் தனக்கு நல்ல வேலை கிடைத்த போதும், இங்கு முன்கூட்டியே சொல்லிட்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவளுக்கு அவர் பேச்சு கஷ்டமாக இருந்தது.

அவமானமாக இருந்த போதும் தாய்க்கு நடந்த விஷயத்தை முழுதாக அவளிடம் கூறினாள். ஆனால் கேட்கத்தான் அவர் தயாராக இல்லை.

வேலினிக்கு தருவதை விட குறைவான சம்பளத்தில் வேறொரு பெண்ணை வேலைக்கு அமர்த்திவிட்ட அவருக்கு வேலினிக்கு கொடுக்கப் போகும் சம்பளம் தண்டமாக தெரிய, இனி அவளை வேலைக்கு எடுக்க அவர் தயாராக இல்லை.

ஆனால் வேலினிக்கு அப்படி இல்லையே, இரண்டு நாட்களுக்கு முன்பாக மருத்துவர்கள், அவளிடம் ஐந்து லட்சம் பணம் கட்டினால் அவள் தாய்க்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யலாம்.

 

அதன்மூலம் தாயை குறைந்தபட்சம் ஐந்தில் இருந்து ஆறு வருடங்கள் உயிருடன் பார்க்க முடியும் என்று தெரிவித்திருந்தனர்.

அந்த ஒரு விஷயத்தை மட்டுமே இரண்டு நாளாக தலையில் ஓட்டிக்கொண்டிருக்க, எப்படியோ அலுவலகத்திற்கு சென்று முன்கூட்டியே ஏதாவது கடன் வாங்க முடியுமா என்று பார்க்கலாம் என்று எண்ணி இருந்தாள்.

அங்கு பணி உனக்கு இல்லை என்று விரட்டி அடித்த பின் துணிக்கடையில் இரண்டு வருடங்கள் தொடர்ந்து வேலை செய்பவர்களுக்கும் இரண்டிலிருந்து மூன்று லட்சம் வரை கடன் கொடுக்கும் பழக்கம் இருந்தது அதையாவது பெற்றுவிடலாம் என்று எண்ணத்தில் வந்தாள்.

ஆனால் தனக்கு அங்கேயும் வேலை இல்லை என்று விரட்டும் அந்த மேலாளர் அண்ணனிடம் எப்படி தன் நிலையை புரிய வைக்க என்று தெரியாமல் இருக்க, அவரோ அங்கிருந்த சில பெண்களை அழைத்து அவளை கையை பிடித்து இழுத்து வெளியே அனுப்பி விட்டுத்தான் மறுவேலை பார்க்க சென்றார்.

துணிக்கடையின் வெளியே கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்த வேலினிக்கு அருகில் இருந்த ஒரு தள்ளுவண்டி கடையில் வடை சுட்டுக் கொண்டிருந்த காட்சி தெரிந்தது.

அதில் சிறிதாக எரிந்து கொண்டிருந்த நெருப்பு அவள் கண்களில் பட, நெருப்பில் அன்று சிக்கிக்கொண்ட நாள் நினைவு வந்தது. அது தொடர்ந்து அவள் வாழ்நாளில் நடந்த அத்தனை நிகழ்வுகளும் வந்து போகின.

பொதுவாகவே வேலினி தன்னை சுற்றி இருக்கும் அனைத்தையும் கவனமாக கவனிக்கும் இயல்பு கொண்டவள். அப்படிப்பட்ட அவள் இந்த ஆறு வருடங்களாக அனைத்தையும் கவனிக்க தவறி வாழ்வையே தொலைத்து விட்டதாக ஒரு எண்ணம் ஊற்றெடுத்தது.

எத்தனை மறுத்தாலும் தன்னுடைய செயல்கள்தான் இன்றைய தன் நிலைக்கு காரணம், தன் குடும்பத்தின் நிலைக்கும் காரணம் என்பதை அவள் மனம் முழுதாக நம்பியது

எப்படி, தான் இப்படி மாறிப்போனோம் என்று எண்ணத்தில் சுற்றம் மறந்து, இப்போதும் அதே கவனக்குறைவுடன் நடந்து வந்த வேலினியை, சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த பெரிய கார் ஒன்று இடித்து கீழே தள்ளி இருந்தது.

மூச்சுக்கு ஏங்கிய அந்த நொடிகளில் அவள் மனம் அவளுக்குள் உருப்போட்டது அவள் குடும்பத்தை மட்டும் தான்.

பிள்ளைகளை நல்ல நிலையில் பார்க்க வேண்டும், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணியது தவற, வேறு எந்த பிழையும் செய்திடாத தன் பெற்றவர்களுக்கு தான் பயனில்லாத, உபத்திரமான பிள்ளை என்பதை மட்டுமே அவள் மனம் சுற்றி வந்தது.

சுற்றி இருந்த மக்கள் கூட்டம் அவளை நெருங்கிக் கொண்டிருக்க அவள் உடலில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்த ரத்த துளிகள் அவளை விட்டு ஓடிக்கொண்டிருந்தது.

ஓடும் அவை தன் உயிர் பிரியப்போகும் செய்தியை அவளுக்கு உணர்த்திக் கொண்டு இருக்க, “முருகா, எல்லாத்தையும் சரி பண்ண மீண்டும் ஒருமுறை ஒ………..” என்று ஆழமாக ஒரு குரல் அவளுக்குள் ஓங்கி ஒலிக்க,

அதற்கும் மேல் அவள் எதுவும் எண்ணும் முன்பாக அவள் கருவிழிகளை இமைகள் மூடிக்கொண்டது. இருட்டு மட்டும் அவள் பார்வைக்கு இப்போது காணக்கிட்டியது.

 

மூர்ச்சையாகிப் போயிருந்தவளுக்கு யாரோ எங்கோ தன்னை பாப்பா என்று அழைக்கும் குரல் கேட்க, கடினப் பட்டு இமைகளை பிரித்த போது அவள் முன்,

“பாப்பா நான் எழுப்பி கிட்டே இருக்கேன். நீ என்ன எந்திரிக்கவே மாட்டீங்கிற. இன்னைக்கி இரண்டாவது வருஷம் காலேஜ் முத நாள் கிளம்பலையா?” என்று கேட்டு நின்று இருந்தார் அவள் தாய் தெய்வானை.

சிகிச்சையின் பலனாக உருகிப் போய் படுக்கையிலே கிடந்த தாய் இப்போது நலமுடன் தன் முன்னே நின்றிருக்கும் காட்சி மட்டும் அவள் கண்களுக்கு பிரதானமாக தெரிய, மற்ற அனைத்தும் மறந்து போய் தன் தாயை மட்டும் நிலை குத்திய பார்வையுடன் பார்த்து கொண்டிருந்தாள் வேலினி.

வருவாள்……….❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!