Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய்

இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் 5

நேற்றிரவு கிளம்பி, இன்று விடியற்காலையில் சென்னைக்கு வந்து சேர்ந்திருந்தனர்.

சங்கர் திருமணத்திற்கு முன்பிருந்தே  வாடகைக்கு பிளாட் எடுத்து தனியாகத்தான் தங்கியிருந்தான்.  அதனால் அங்கேயே குடிவைத்து விடலாம் என முடிவெடுத்து கிளம்பி வந்திருந்தனர்.

பானுவுக்கு சங்கருடன் தனியாக இருக்கப் போகிறோம் என்ற நினைவே நெஞ்சு முழுக்க பயத்தை உருவாக்கியிருந்தது.  காலையில் வந்ததிலிருந்து சங்கரின் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை அவள்.  அது இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய லக்ஸரி அப்பார்ட்மென்ட்.

இருபக்க உறவினர்களுடன்… எல்லோரும் ஒன்றாக வேன் எடுத்து வந்திருந்தனர்.  பானுக்கான சீர் வரிசைகளை எல்லாம், மதுசூதனன் தனியாக வண்டியமர்த்தி எடுத்து வந்திருந்தான்.



Advertisement

காலையில் வந்தவர்கள் குளித்து முடித்து முதலில் பூஜைக்கு தயார் செய்தனர்.  ஹாலில் இருந்த பூஜை அலமாரியில் வாங்கி வந்திருந்த சாமிப் படங்களை எல்லாம் எடுத்து வைத்து, பூஜைப் பாத்திரங்களுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, பூப்போட்டு, பானுவை விட்டு விளக்கேற்ற சொன்னார்கள்.

பின்பு கிட்சனுக்கு சென்று புதுப்பாத்திரத்தில் பானுவையே பால் காச்ச சொல்லி, கூட கொஞ்சம் சர்க்கரைப் பொங்கலையும் செய்து வைத்து சாமிக்குப் படைத்தார்கள்.

வீட்டிலிருந்தே ஜமுனா இட்லிக்கு மாவு அரைத்து கொண்டு வந்திருந்தார்.  ஆதலால் காலை டிஃபனுக்கு இட்லி, பொங்கல், சட்னி சாம்பார் என செய்திருந்தார்.  எல்லோரும் பயணக் களைப்பில் இருந்ததால் காலையில் நேரமே உண்டு கிடைத்த இடத்தில் ஆளாளுக்கு படுத்துவிட்டனர்.

Advertisement

சரசு கூட இராத்திரி முழுக்க உட்கார்ந்து கொண்டே வந்த களைப்பில் ஜமுனாவிடம் சொல்லிவிட்டு சென்று படுத்துவிட்டார்.  சரசு படுக்கப் போகும் போது நீங்களும் போய் படுங்க அண்ணி, கொஞ்ச நேரம் படுத்து எழுந்து மதிய சமையல் செய்யலாம் என் சொல்லிவிட்டுதான் சென்றிருந்தார்.

Advertisement

”ஆனால் ஜமுனாவுக்கு உறக்கமே வரவில்லை.  அவருக்கு இப்போது எனர்ஜி ட்ரிங்க் குடித்தது போல உடலும் மனமும் அத்தனை உற்சாகமாயிருந்தது.”

இருக்காதா பின்னே, திருமணமாகி இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் மருமகன் வந்து மகளை பார்க்கக் கூட வரவில்லை என மனதிலே குமைந்து கொண்டிருந்தார்.  ‘’மகனும், மகளும் தன்னை ஏசியது போல், தான் தான் அவசரப்பட்டு மகளின் வாழ்க்கையை வீணாக்கி விட்டோமோ…, என மகளை எண்ணி அனுதினமும் வேதனையில் உழன்றவருக்கு மகளுக்கான தனிக்குடுத்தனம் அவருக்கு உற்சாகத்தைக் கொடுத்திருந்தது.

இங்கு வந்ததில்,  இனி மகள் வாழ்க்கை சரியாகிவிடும் என்ற நம்பிக்கை வந்திருந்தது அவருக்கு.  இங்கு வந்து இந்த லக்ஸரி அப்பார்ட்மென்டை பார்த்தபிறகு அவருக்கு பெருமை பிடிபடவில்லை.  ‘’தாயே கருமாரி எல்லாம் நல்லபடியா சரியாகி…, என் பொண்ணும் மாப்பிள்ளையும் சந்தோஷமா வாழ்ந்தா…, உனக்கு பொங்கல் வைக்கறேன் தாயே, என மனதிற்குள்ளேயே வேண்டுதலையும் வைத்திருந்தார்.’’

Advertisement

அவர் மட்டும் கிட்சனில் உழன்று கொண்டிருப்பதைப் பார்த்த மதுசூதனனும், பானுவும்  கிட்சனிற்கு வந்து அவரின் இரு புறமும் நின்றனர்.

மதுவைப் பார்த்து நீயும் போய் கொஞ்ச நேரம் படுக்கறதுதான என்று கேட்டார் கரிசனமாக.

பகலெல்லாம் கடையில் வேலை செய்துவிட்டு, சீர்வரிசை சாமான்களுடன் வண்டியில் இராத்திரி முழுவதும் கண்முழித்து வந்திருந்தது அவனுக்கு களைப்பாக இருக்கும் என எண்ணிதான், அவனை படுத்து ரெஸ்ட் எடுக்க சொன்னார்.

அங்க படுத்து இருக்கவங்களுக்கே இடத்தைக் காணோம்மா……. எல்லாம் ஆளுக்கு ஒரு பக்கம்னு சுருண்டிருக்காங்க, இதுல நான் எங்க படுக்க.  நீ.. இங்க தனியா…. நின்னு…. என்ன பண்ற… என்றான்?

புது வீடு இல்லையா, பாத்திரங்களை எல்லாம் அந்தந்த இடத்தில அடுக்கிட்டிருக்கேன்….

மதுசூதனன் வந்ததிலிருந்து இப்பொழுதுதான் கிட்சனுக்குள் வந்திருந்தான்.  திரும்பி சுற்றி கிட்சனைப் பார்த்தான்.  அது மாடுலர் கிட்சன்.  எல்லாமே லேட்டஸ்டாக இருந்தது.

மது, ம்மா……., நம்ம வீடு மாதிரி இல்ல.  ” எல்லாமே புதுசா இருக்கு.   நீ பாட்டுக்கும் எதையாவது குண்டக்க மண்டக்க பண்ணி வைக்காத.  அவங்ககிட்ட கேட்டு செய் என்றான் கிண்டலாக சிரித்துக் கொண்டே.  அவனுக்கும் நெடுநாள் கழித்து, இறுக்கம் தளர்ந்து முகத்திலே மலர்ச்சி வந்திருந்தது.”

இத்தனை நாட்கள் தங்கையின் வாழ்வை எண்ணி வாடியிருந்தவனுக்கு, இங்கு வந்ததிலிருந்து ஏனோ அவளது வாழ்வு சரியாகிடும் எனும் நம்பிக்கை எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.

அவனது கிண்டல் பேச்சைக் கேட்டு ஜமுனா அவனை முறைத்தார்.  ஏண்டா எனக்குத் தெரியாதா…..? ” இடம் புதுசா இருந்தாலும் ஆக்கறது… அரிக்கறது… எல்லாம் எங்க செஞ்சாலும் ஒன்னுதானடா…… என வியாக்கியானம் பேசினார்” அவனிடம்.

அதை தான் நானும் சொல்றேன்.  ”இங்க இருக்க கேஸ் ஸ்டவ்வைப் பார்த்தாலே கண்ணாடி கணக்கா பளபளக்குது, நம்ம வீட்டுல இப்படியா இருக்கு”, என கேலி பேசினான்.

அது லேட்டஸ்ட் மாடல் ஆட்டோமேட்டிக் கேஸ் ஸ்டவ்.  காலையில் வந்ததும் ஜமுனாவும் அதில் தடுமாறினார் செய்வதற்கு.  அவர் வீட்டில் இருப்பது பழங்காலத்து மாடலில் இரண்டு அடுப்பு கொண்ட கேஸ் ஸ்டவ்.  அதில் லைட்டரை வைத்து பத்த வைத்தவருக்கு, அதே பழக்கம் தான் வந்தது இங்கேயும்.

அதை மகனிடம் காட்டிக் கொள்ளாமல், எல்லாம் எனக்குத் தெரியும் என வசனம் பேசினார்.  மகளுக்காக பண்ட பாத்திரங்களை சிறுக சிறுக என நீண்ட வருடங்களாகவே சேர்த்து வைத்திருந்தார்.  அதைதான் இங்கு கொண்டு வந்து துடைத்து அடுக்கிக் கொண்டிருந்தார்.

மளிகைப் பொருட்கள் கொட்டுவதற்கு என வாங்கி வைத்திருந்த எவர்சில்வர் டப்பாக்களில் எல்லாம், மளிகை சாமான்களை பிரித்து பார்த்து அந்தந்த டப்பாவில் கொட்டி அடுக்கி வைத்தார்.

அவருடன் சேர்ந்து மதுசூதனனும் பேசிக் கொண்டே ஜமுனாவுக்கு உதவிக் கொண்டிருந்தான்.  பானுவும் அவர்களுடனே நின்றிருந்தாள்.  ஒவ்வொன்றையும் அவளிடம் சொல்லி, எங்கு என்ன பொருள் வைக்கிறார் என காட்டி வைத்தார்.  அவர் சொல்வதற்கு எல்லாம் தலையை  ஆட்டிக் கொண்டு நின்றிருந்தாள் பானு.

பொருட்களை எல்லாம் அடுக்கி முடித்ததும், மதிய சமையலுக்கு காய்கறிகளை எடுத்து கழுவி நறுக்க ஆரம்பித்தார்.

மது, ம்மா….. இங்க குடு நான் நறுக்கி தரேன் என வாங்கி காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தான்.  பால் காச்சி சாமி கும்பிடும் வரை இருந்த சங்கர், அதன் பிறகு ஆபிஸ்கு கிளம்பி சென்று விட்டான்.  இவர்களை எல்லாம் கூட்டமாகப் பார்த்ததும் அவனுக்கு தலையே சுற்றியது, விட்டால் போதும் என ஒடிவிட்டான்.

பின்னே இத்தனை நாள் அவனது அம்மா அவனை போனிலே அட்வைஸ் பண்ணி அழ வைத்துக் கொண்டிருந்தார்.  இன்று நேரில் பார்த்ததும் எங்கே எல்லோர் எதிரிலும் ஏதாவது சொல்லி விடுவாரோ என பயந்து சென்று விட்டான்.

சரசு மேல் அவனுக்கு பாசம் அதிகம்.  ஒரே மகன், தவமிருந்து பெற்றது போல அவருக்கு கல்யாணம் ஆகி நீண்ட வருடங்கள் கழித்து பிறந்தவன்.  அதனால் மகனின் மீது அன்பைக் கொட்டி வளர்த்தார்.

அவனது தந்தை ராகவனுக்கும் அப்படிதான்.  அவனது சொந்தத்தில் யாரும் இவனைக் கல்யாணம் செய்யும் வயதில் இல்லை.  எல்லாம் இவனை விட வயதில் மூத்தவர்கள்,  எல்லாருக்கும் திருமணமும் முடிந்திருந்தது.  அதனால் தான் வெளியில் பெண் தேடினர்.

அவனுக்கு திருமணத்திற்கு பெண் பார்க்க ஆரம்பிப்பதற்கு முன் அவனிடம்,  அவனுடைய விருப்பத்தைக் கேட்டே ஆரம்பித்தனர் பெற்றவர்கள்.  அவனைப் பற்றியும் நன்கு தெரியும் ஆதலால், அவனுக்கு சரிசமமாக படித்து வேலையில் இருப்பது போலவே பெண் பார்த்தனர்.

சங்கரும் பொலிவான சருமம், வாலிப்பான தேகம் என்று பார்ப்பதற்கு ஹேன்டசம்மாக இருப்பான்.  படிக்கும் காலத்திலிருந்தே நண்பர்களை கூட அவர்களுடைய அந்தஸ்து பார்த்து…, பிடித்திருந்தால் மட்டுமே அவர்களுடன் நட்பு வைத்துகொள்வான்.   இக்காலத்திற்கு ஏற்றது போல நவநாகரிகமாக இருக்க வேண்டும், வாழ வேண்டும் என விரும்புபவன், வாழ்ந்து கொண்டும் இருப்பவன்.

உண்பதிலிருந்து உடுப்பது வரை நாசுக்கு பார்ப்பவன்.  எனவே பெற்றவர்கள் தனக்கான இணையை தேடும் போது தன் விருப்பத்தை சொல்லி, அவர்கள் காட்டிய பெண்களிலிருந்து பார்க்க அழகாகவும், தனக்கு சமமாக படித்து வேலை, வசதிகளில் இணையாக உள்ள பெண்ணைத் தான் தேர்ந்தெடுத்திருந்தான்.

ஆனால் இப்படி எல்லாம் தலைகீழாக மாறும் என அவன் கனவா கண்டான்.  திருமணம் முடிந்து இங்கு வந்தவன், திரும்ப ஊருக்கு வரவேயில்லை.  அவனுக்கு தனது மனைவியாக பானுவை மனதில் நினைத்துப் பார்க்க கூட பிடிக்கவில்லை.

திருமணம் நின்ற அந்த நேரத்தில் இருந்த குழப்பமான, அதிர்ச்சியான மனநிலையில் அன்னையின் பேச்சுக்கு கட்டுப்பட்டு அவள் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டானே தவிர, அவனால் அவளை மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

திருமணம் ஆன தினத்திலிருந்து தன் செய்கையால் தன்னையே நொந்தபடி இருந்து கொண்டிருக்கிறான்.  அம்மா சொன்னாங்கன்னா எனக்கு எங்க போச்சு புத்தி?  கொஞ்சமாவது யோசிச்சிருக்க வேண்டாமா……?

அந்த நேர பிரச்சினையிலிருந்து தப்பிக்க நினைச்சி, என்ன காரியம் பண்ணியிருக்கேன்?  அப்பவே பேசி நிலைமையை சமாளிக்காம, என் வாழ்க்கைய முழுசும் அடமானம் வச்சது போல, எனக்கு சமமேயில்லாத பெண்ணை கல்யாணம் பண்ணியிருக்கேனே என மனதில் அனுதினமும் நொந்து கொண்டிருந்தான்.

மாமனார் என்ன வேலை செய்கிறார், மச்சினன் என்ன பண்றார்னு யாராவது கேட்டால்………,  எங்க ஊருல டீக்கடை வச்சிருக்காருன்னா சொல்ல முடியும் என உள்ளுக்குள்ளேயே அசிங்கப்பட்டான்.

இதுல இந்த அம்மா வேற ஊருக்கு வரல, பொண்டாட்டிய பார்க்கல, சேர்ந்து குடும்பம் நடத்தலன்னு டெய்லி லெக்சரர் வேற என எரிச்சல் அடைந்தான்.  இந்த மாதிரியான பிடித்தமின்மைகள் மனதில் இருந்தாலும் எதையும் வெளியில் இன்னும் அம்மாவிடம் கூட காட்டிக் கொள்ளவில்லை.  அப்புறம் எங்கே மற்றவர்களுக்கு தெரிய வரும்.

காலையில் வந்தவர்களை வரவேற்று, சாப்பிடும் வரை இருந்தவன் தனக்கு இன்று முக்கயமான வேலை இருப்பதாகக் கூறி அலுவலகத்துக்கு சென்றிருந்தான்.

மதுசூதனன் வந்ததிலிருந்து சங்கரைத்தான் பார்த்திருந்தான்.  அவர்கள் ஓரே ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எந்த நெருக்கமும் இல்லை அவர்களிடத்தில்.  இருவரது வீடும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.  இரு குடும்பமும் சரசுவின் மாமனார் காலத்திலிருந்து நட்பாக இருக்கின்றனர்.

சங்கரது தாத்தா காலத்துக்கு பிறகு, அடுத்த தலைமுறையான அவனது அப்பா ராகவனுக்கும் கலியமூர்த்திக்கும் ஒட்டுதல் இல்லை.  ஆனால் அவனது பாட்டிக்குப் பிறகு சங்கரது அம்மா சரசு, ஜமுனாவுடன் நெருக்கமாக பழக்கத்தில் இருந்தார்.

ஆண்கள் ஒதுங்கினாலும் பெண்கள் பழைய நட்பை உடைய விடாமல் காத்து நின்றனர்.  அந்த பழக்கத்தில் அவர்களுக்குள் யார் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் தள்ளாமல் மதித்து குடும்பத்துடன் வந்து செல்வர்.  அப்படிதான் ஜமுனாவும் கலியமுர்த்தியும், பானுவுடன் சங்கரின் திருமணத்திற்கு கடலூருக்கு வந்திருந்தது.

வந்த இடத்தில் தான் எதிர்பாராத திருப்பங்கள் எல்லாம் நடந்திருந்தது.  சரசுவும் ஜமுனாவும் நெருக்கம் என்பதால் சரசுவின் வேதனை, அழுகை, ஏமாற்றம் எல்லாம் ஜமுனவையும் பாதித்திருந்தது.  அதனால் தான் சரசு சங்கருக்கு பானுவைக் கட்டித்தர கைகூப்பி கேட்டபோது ஜமுனாவால் மறுத்து ஒன்றும் கூற முடியவில்லை.  இதுவே தன் பிள்ளைக்கு ஊர் நிறைந்த சபையில்,  இப்படி ஒரு அவமானம் நடந்திருந்தால் என யோசித்து சங்கருக்கு பானுவைக் கல்யாணம் செய்துதர சம்மதித்திருந்தார்.

அந்த நேர மனநிலையில் சரசு குடும்பத்தை இந்த அவமானத்தில் இருந்து காத்துவிட வேண்டும் என்ற வேகம் இருந்ததே தவிர எதைப் பற்றியும் அவருக்கு சிந்திக்கும் திறன் இல்லை.

அவர்களது வசதியைப் பற்றியோ, மாப்பிள்ளையின் படிப்பு, வேலை, வருமானத்தை பற்றியோ சிந்திருந்தால் நிச்சயம் இந்த திருமணத்தை நடக்க விட்டிருக்க மாட்டார்.  காலநேரம் அவரைக் கட்டிப் போட்டிருந்தது எதையும் சிந்திக்கவிடாமல் எனதான் சொல்ல வேண்டும்.

அதையும் தாண்டி மகனிடம் சொன்னால் அவன் நிச்சயமாக திருணத்திற்கு ஒத்துக் கொள்ளமாட்டான் என அவனிடம் சொல்ல வேண்டாம் என சரசு கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீருடன் கெஞ்சும் போது, அவரது இளகிய மனம் சரசுக்கு சாதமாகியிருந்தது.

சங்கரது வீட்டில் சரசு தனி ரகம்.  பணம் காசு படைத்த வீட்டில் வாக்கப்பட்டு வந்திருந்தாலும் திமிர் எல்லாம் இருக்காது.  மனிதர்களின் குணத்தையும், மனதையும் பார்த்து பழகுவார்.

ஜமுனாவுக்கு சரசுவின் விகல்பமில்லாத நட்பு பிடித்திருந்ததால் தான் இத்தனை காலம் அவர்களிடையே நட்பு சிதையாமல் இருந்தது.  அது இன்று உறவாகவும் மாறியிருந்தது.

ஜமுனா எடுத்துக் கொடுத்த காய்கறிகளை எல்லாம் நறுக்கிக் கொடுத்தவன், ‘’ ம்மா தலையை நோகுது, கொஞ்சம் ஸ்டராங்கா டீ போடு குடிக்க’’ என்றான்.

அவருக்கும் அந்த நேரத்துக்கு டீ தேவைப்பட்டதால் அவர்கள் மூவருக்கும் மட்டும் இஞ்சி தட்டிப் போட்டு டீ வைத்தார்.  கைபாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்தாலும்… மகனுடன் பேசிக்கொண்டே, மகளையும் சின்ன சின்ன வேலைகள் சொல்லி செய்ய வைத்துக் கொண்டிருந்தார்.

எப்போதும் சொல்வது போல பானுவுக்கு… பொறுப்பா நடந்துக்கனும், வீட்டு வேலையெல்லாம் நீதான் செய்யனும், துணி தோய்க்க மிஷின் கூட இருக்கு, அந்த ரூமுல.  நம்ம வீடு போல கையால தோய்க்கனும்னு இல்ல.  பார்த்து சங்கருக்கு பிடிச்சது போல நடந்துக்கோடா…, என திரும்ப திரும்ப சொன்னதையே கூறிக் கொண்டிருந்தார்.

மது, ம்மா….., ”அவளுக்கு எல்லாம் தெரியும்.  அவள் வாழ்க்கை ம்மா. அவள் பார்த்துப்பாள்.  அவள் என்ன சின்ன குழந்தையா….?  பி.இ. முடிச்சிருக்கா…..  சும்மா அவளை போட்டு தொண தொணக்காத என ஜமுனாவை முறைத்தான்”.

ஜமுனா, ”டேய் நல்லது சொன்னா முறைப்பியா…..?  இதுவே எல்லாம் நல்ல படியா நடந்து முடிஞ்சிருந்தா…..? நான் ஏன்டா இப்படி புலம்பப் போறேன்…..?” என ஆதங்கப்பட்டார்.

ஹ்ம்ம்……. ”இப்ப புலம்பு, கல்யாணம் பண்ணும் போது இதையெல்லாம் யோசிக்காம பண்ணி முடிச்சிட்டு, இப்ப புலம்புனா எல்லாம் சரியா போயிடுமா……?” என்றான்.

அவன் சொல்லுவதும் நியாயம்தானே, என வாயை மூடிக்கொண்டார்.  அவருக்கு மகளது வாழ்க்கை சரியாகிட வேண்டும் என்ற அவாவில் பேசியிருந்தார்.

இருந்தாலும் மகனிடம், ”எப்ப எது சொன்னாலும் இதை சொல்லியே வாயை அடைச்சிடுடா……….  என தன்னை விட்டுக்கொடுக்க மனமில்லாமல்  செல்லமாக முறுக்கிக் கொண்டார்.”

”இவ்வளவு பானுவை பேசற நீ, உன் மாப்பிள்ளை கிட்ட போய் பேச வேண்டியது தான.  கல்யாணம்தான் அவசரகதில முடிஞ்சிருந்தது.  கல்யாணம் முடிஞ்சு இங்க வந்தவர்….., எத்தனை முறை கட்டின பொண்டாட்டிய பார்க்க வந்தாராம்….?  இல்ல போன்லயாவது பேசினாரா….?”

இவளை மட்டும் பிடிச்சு இப்படியிருக்கனும், அப்படியிருக்கனும்னு வாட்டி எடுக்கற? என முறைத்தான்.

அவருக்கும் அடி நெஞ்சில் அந்த வருத்தம், ஆதங்கம் இருக்கிறது.  அது எல்லாம் தெரியாமலா இருக்கும் அவருக்கு.  இருந்தும் அதையெல்லாம் வெளிப்படையாக பேசினால் தன் மக்களுக்கு இந்த திருமணத்தின்மீதான பிடிப்பு குறைந்து விடுமோ என பயந்து தன் ஆதங்கத்தைக் கூட வெளியில் சொல்லாமல் மனதிலேயே வைத்து பூட்டியிருந்தார்.

மது ஜமுனாவைப் பேசியதும்,  முன்னதை நினைத்து பெரு மூச்சை இழுத்து விட்டு தன்னை சமன் படுத்தியவர், மதுவைப் பார்த்து, ”சும்மா பெரியவங்க பேசும் போது வாயடிக்காம, இந்த டீயைக் குடி”,  என டீயை வடிகட்டி அவனிடமும் பானுவிடமும் கொடுத்தார்.

அவரது செய்கையில் மதுவுக்கு சிரிப்பு வந்தது.  ஒரு கையால் டீயை எடுத்தான்.   மறு கையால் அன்னையின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு, ம்மா…… சும்மா சொல்லக் கூடாது.   கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலன்னு சொல்லுவாங்களே, அது மாதிரி நல்லா சமாளிக்க கத்து வச்சிருக்க……, என்று கேலி செய்து வாய்விட்டு சிரித்தான் கல… கலவென….

”அவனது செய்கையில் பானுவுக்கும் முகத்தில் சிரிப்பு மலர்ந்திருந்தது.   ஜமுனாவுக்கும் மகனது பேச்சில் சிரிப்பு பொங்கியது.”

ஜமுனா, ”டேய்….. சத்தம் போடாதடா….. தூங்கறவங்க எல்லாம் முழுச்சிக்கப் போறாங்க…… என அதட்டினார்.  உங்கப்பா எங்கடா…….?”

அவர் இங்க இருக்க கூட்டத்தை பார்த்து வேன்லயே போய் டிரைவரோட பேசிட்டு அங்கேயே படுத்திட்டாரு……

ஹ்ம்ம்….. உங்கப்பாக்கு பேசறதுக்கு ஆள் கிடைச்சா போறுமே…….. சுத்தி நடக்கறகெல்லாம் மறந்திடுவாரு என நொடித்தார்.

அவர் பாட்டுக்கு எங்கயோ சிவனேன்னு இருக்காரு.  அவரை ஏன் ம்மா….. இழுக்கற……? என்றான்.

அவரும் இருந்தா டீக் குடுக்கலாமேன்னு கேட்டேன்.. என்றார் இழுவையாக.

”புருஷன் மேல பாசம்…….. ஹம்ம்……., அதை நேரடியா சொல்ல வேண்டியதுதான கொண்டு போய் குடுடான்னு” என கிண்டல் செய்தான்.

ஜமுனா, போடா……. அவரும் இந்த நேரத்தில டீ குடிப்பாரேன்னு கேட்டேன் என்றார் முகத்தைச் சுருக்கி வெட்கத்துடன்.

மது, சரி சரி….. ரொம்ப வெட்கபடாதீங்க குடுங்க நான் போய் குடுத்திட்டு வரேன்.

அங்க ட்ரைவர் இருப்பாரே அவருக்கும் வேணுமா……?

ஹம்ம்…. இரண்டு பேருக்குமே சேர்த்து குடுங்க என எடுத்துச் சென்றான்.

ஜமுனா மதிய சாப்பாட்டுக்கு சாம்பார், மோர் குழம்பு ரசம், சேப்பங் கிழங்கு வறுவல், உருளை மசியல், முட்டைக் கோஸ் பச்ச பட்டாணி பொரியல் என  ஒரு விருந்தையே செய்து முடித்திருந்தார்.  அரிசியை வடிக்காமல் குக்கரில் வைத்ததால் அந்த விசில் சத்தத்தில் எல்லோரும் ஒருத்தர் ஒருத்தராக முழிக்க ஆரம்பித்தனர்.

அவர்கள் விழித்து பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டு , அவர்களுக்காக டீ வைத்து பானுவிடம் கொடுத்தனுப்பினார்.

பானு, ம்மா…. ”எனக்கு சங்கோஜமாயிருக்கு, நீயே கொண்டு போய் குடேன் எனத் தயங்கினாள்.    இது எல்லா பொண்ணுங்களுக்கும் கல்யாணம் ஆன புதுசுல வரத் தயக்கம்,  கூச்சம்தான்டா…… இதெல்லாம் பார்த்தா வேலையாகுமா…..?”

இன்னும் எவ்வளவு காலம் இப்படி ஒதுங்கி நிக்க முடியும்.  அதுவுமில்லாம ”இது உன் வீடு இல்லையா……?  உன் வீட்டுக்கு வந்தவங்களை நீ தான பார்த்து கவனிக்கனும் கூச்சப்படாம போடா….. என மகளின் தலையை வாஞ்சையாக தடவிக் கொடுத்தார்.

தாயின் அன்பில் கரைந்துருகியவள் அவரது பேச்சுக்கு கட்டுப்பட்டு…., ஜமுனா பெரிய தட்டில் அடுக்கி கொடுத்த டீ டம்பளரை எல்லாம் எடுத்துக் கொண்டு சென்று மாமனார் மாமியார் என அங்கு  வந்திருந்த எல்லா உறவினருக்கும் கொடுத்து வந்தாள்.

சரசுக்கு மருமகள் தான் சொல்லாமலேயே டீ எடுத்து வந்து உறவினருக்குக் கொடுத்து உபசரித்தது சந்தோஷத்தைக் கொடுத்தது.  ஜமுனாவுடன் பழக்கம் இருந்தாலும் அவரது பிள்ளைகளை எல்லாம் அவ்வளவாக பழக்கம் கிடையாது.  ஏதாவது விசேஷ வீடுகளில் பார்ப்பதோடு சரி.

மகனுக்கு பானுவைத் திருமணம் செய்திருந்தாலும் எப்படிப்பட்ட பெண்ணோ என மனதில் நெருடல் இருந்துகொண்டே இருந்தது.  அவளது இந்த செய்கை அவரது நெஞ்சின் அச்சத்தை களைந்து, மருமகளின் மீது பிடித்தத்தை உருவாக்கியது.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!