Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயம் எழுதும் கவிதை நீ

இதயம் எழுதும் கவிதை நீ 8

அத்தியாயம் 8

பிரியாவின் கண்களில் அந்த ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்…பட்ட மறுநொடியே…
அவளது முகம் கோபத்தில் சிவந்தது.

கையில் இருந்த மொபைலை தரையில் வீசப் போனவள், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு,”அப்பா…!”
என்று கதறியபடி கந்தசாமியிடம் வேகமாக ஓடினாள்.

“என்னம்மா… என்னாச்சு?”என்று பதறியபடி எழுந்தார் கந்தசாமி.



Advertisement

மொபைலை அவரது கையில் திணித்தவள், “பாருங்கப்பா… இவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா குலதெய்வ கோவிலுக்கு போயிருக்காங்க…
‘ஆர் ஆர் பர்ஸ்ட் பொங்கல்னு’ஸ்டேட்டஸ் வச்சிருக்காங்க…

நான் மட்டும் இங்க அவனே நினைச்சிட்டு உயிரோட செத்துட்டு இருக்கேன்… ஆனா அவன் அவளோட சந்தோசமா வாழ ஆரம்பிச்சுட்டான்” என மார்பில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அதைப் பார்த்த சரோஜாவும்,
“இவ்வளவு சீக்கிரமா இவங்க சந்தோஷமா வாழ ஆரம்பிச்சுட்டாங்களா…?” என பல்லைக் கடித்தபடி ஆத்திரத்தில் கொதித்தாள்.

Advertisement

கந்தசாமியின் முகமும் மாறியது.
“வாங்க…”என இருவரையும் ராமமூர்த்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

Advertisement

அன்றிரவு…ராமமூர்த்தி வீட்டில்…

கோவிலுக்கு சென்று வந்த களைப்பில் ராம மூர்த்தி வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார்.
அவர் வீட்டில் வாடகைக்கு
குடி இருக்கும் வீட்டு சிறுவர்கள் கண்ணாம்பூச்சி விளையாடிக் கொண்டிருக்க…
அதைப் பார்த்தவருக்கு பேரன் பேத்தி ஆசை வந்து விட்டது.

உள்ளே அம்பிகா டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருக்க…
ரஞ்சிதா இன்னமும் பைக் பயண சிலிர்ப்பில் இருந்து வெளியே வரவில்லை. திருமணம் ஆன நாளிலிருந்து ஏதாவது சாதாரணமாக கேட்டால் கூட எறிந்து விழும் கணவன் இன்று,”ஆமா..இல்ல..சரி..வேணா…”என ஒரிரு வார்த்தைகள் பேச எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணத்தோடு தோசை வார்த்துக் கொண்டிருந்தாள் ராஜீவனுக்காக….

Advertisement

அவனோ தான் கட்டப்போகும் புதிய ப்ராஜெக்ட்டிற்கு படம் வரைந்து கொண்டிருந்தான்.
ரஞ்சிதாவின் கொளுசு சத்தம் கேட்க…அவள் வருவதை உணர்ந்தவன் அதிதீவிரமாக வேலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவன் போல காட்டிக் கொண்டான்.

அறையின் உள்ளே வந்தவள்…என்னங்க சாப்பிட எடுத்து வைக்கவா?என கேட்க…

மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறின போக்காக…எதுவும் பேசாது கர்ம சிரத்தையாக படம் வரைந்து கொண்டிருந்தான்.

ரஞ்சிதாவிற்கு நிற்பதா?போவதா?மீண்டும் கேட்பதா?எதுவுமே புரியவில்லை… அவன் கட்டீலின் மீது அமர்ந்து படம் வரைந்து கொண்டிருக்க…
இவள் அமைதியாக கீழே அமர்ந்து கொண்டாள்..

ஏன் இவர் என்னை தவிர்க்கிறார்?என்ற கேள்வி…அந்த யோசனையோடு அவனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

அப்போது… கந்தசாமி, சரோஜா, பிரியா மூவரும் ராம மூர்த்தி வீட்டு முன்பு வந்து நின்றனர்.

வாசலில் அமர்ந்திருந்த ராமமூர்த்தி, இவர்களைப் பார்த்ததும்
“வாங்க…என்ன இந்த நேரத்துல…?”என்று கேட்கும் முன்பே… சரோஜா கதற ஆரம்பித்தாள்.

சத்தம் கேட்டு அம்பிகா,ராஜீவன், ரஞ்சிதா மூவரும் வெளியே வந்தனர்.

“உங்க பையன் என் பொண்ணு மனசுல ஆசை வளர்த்து விட்டுட்டு… அவளுக்கு வாழ்க்கை தர்றேன்னு நம்பிக்கை கொடுத்து, இப்போ வேற பொண்ணை கல்யாணம் பண்ணி சந்தோசமா இருக்கான்…ஆனா எம் பொண்ணு உங்க பையனவே நினைச்சு கொஞ்சம் கொஞ்சமா செத்துட்டு இருக்கா… என் பொண்ணு வாழ்க்கைக்கு ஒரு நியாயம் வேணும்…” என்று மார்பில் அடித்துக் கொண்டு அழுதாள்.

அவளது சத்தம் தெரு முழுவதும் எதிரொலித்தது.சில நிமிடங்களிலேயே…ராஜ சேகர் குடும்பம் வந்து விட்டனர். கூடவே அக்கம் பக்கத்தினரும் வாசலில் கூட ஆரம்பித்தனர்.

திடீரென்று…கந்தசாமி…அம்பிகாவின் காலில் விழுந்தான்.

“அக்கா…என்னை மன்னிச்சிடு…
என் பொண்ணுக்காகத்தான்…என் மகளோட வாழ்க்கையே காப்பாத்தணும்னா எனக்கு வேற வழி தெரியலே…”என்று அழுதபடி நாடகமாடினான்.

அம்பிகா…தம்பியின் நாடகத்தை அறியாது அவன் மகளின் நிலையை நினைத்து கண்ணீர் வடித்தாள்.

ராம மூர்த்தி,” உன் நாடகத்தை எல்லாம் உன் வீட்டுல வெச்சிக்க…இங்க எல்லார் முன்னாடியும் எங்கள அசிங்க படுத்த வந்துட்டு அழுது நடிக்கறையா?”என ஆவேசமாக கேட்டார்.

அப்போது…சரோஜா ஆவேசமாக முன்னே வந்தாள்.கூடி இருந்த அனைவரையும் பார்த்து… “உங்க எல்லாருக்கும் ஒரு உண்மை சொல்றே …
இதோ இங்க நிக்கறானே ராம மூர்த்தி மகன் ராஜீவன்….இவனும்,
என் மகளும்… உயிருக்கு உயிரா காதலிச்சாங்க…என் மகளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு இவன் என் மக மனசுல ஆசை வளர்த்துனா..

கடைசில எங்கள விட அதிக வரதட்சணை கொடுக்கறாங்கனு எங்க பொண்ணை ஏமாத்திட்டு வேற எடத்துல பொண்ணு எடுத்துட்டாங்க. இது நியாயமா?என் பொண்ணு வாழ்க்கைக்கு ஒரு நீதி வேணும். நீங்க எல்லாரு எங்களுக்கு துணையா நின்னு இதுக்கு ஒரு முடிவு சொல்லுங்க”என கூடியிருந்த அனைவரும் கேட்கும் வகையில் உரக்கக் கூறினாள்.

சரோஜா கூறிய  வார்த்தைகள்… ரஞ்சிதாவின் காதுகளில் விழுந்த நொடி…அவளுக்கு உலகமே நின்று போனது போல இருந்தது.

அவள் மெதுவாக ராஜீவனைப் பார்த்தாள்.இல்லை…இது பொய்யாக இருக்க வேண்டும்… அவர் மறுப்பார்…
என்று மனதிற்குள் ஏங்கினாள்.

ஆனால்…ராஜீவன்…
தலையை குனிந்தபடி நின்றான்.ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அவனது அந்த அமைதியே…சரோஜா சொன்ன அனைத்தும் உண்மை என்பதை உறுதிப்படுத்தியது.
ரஞ்சிதாவின் கைகள் நடுங்க ஆரம்பித்தன.

கழுத்தில் இருந்த தாலி திடீரென்று கனத்துப் போனது. “அதனாலதான்…
அவர் என்னிடம் பேசவே இல்லையா…?
அதனாலதான்…என் முகத்தைக் கூட பார்க்கலையா…?அதனாலதான்…
முதல் இரவே குடித்துவிட்டு வந்தாரா…?”
என்று ஒவ்வொரு உண்மையும் அவள் மனதில் மின்னல் போல பாய…
அப்படியே  சிலையாக நின்றாள்.

அப்போது…சரோஜா ராஜீவனை வெறுப்போடு பார்த்து,”நீ நல்லாவே இருக்க மாட்டே…என் பொண்ணு கண்ணீருக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்…நீயெல்லா நிம்மதியாவே வாழ மாட்டே…”என்று  கண்ணீரோடு சாபமிட்டாள்.

அந்த வார்த்தையைக் கேட்ட ராமமூர்த்தி… கோபத்தில் “ஏய்…!”
என்று கர்ஜித்தபடி சுவரில் மாட்டியிருந்த அரிவாளை உருவிக் கொண்டு வந்தார்.
கண்கள் இரண்டும் சிவந்து…மூச்சு வேகமாக ஏறி இறங்கியது.

“என் வீட்டுக்கு வந்து…என் குடும்ப மானத்தையே  ஊரார் முன்னாடி நாசம் பண்ணிட்டு…இப்போ என் மகனையே சாபம் விடுறியா…?இன்னைக்கு உங்களை உயிரோட விட மாட்டேன்…!”
என்று அரிவாளை உயர்த்திக் கொண்டு கந்தசாமியை நோக்கி பாய்ந்தார்.

“மூர்த்தி… வேண்டாம்…!”என்று ராஜசேகரும், ஜெகனும், நவீனும் ஓடிவந்து அவரை பின்னால் இருந்து இறுக்கமாகப் பிடித்தனர்.

“விடுங்க…! இன்னைக்கு அவனை வெட்டிட்டு நான் ஜெயிலுக்கு போறேன்…!”என்று திமிறியபடி கத்தினார் ராமமூர்த்தி.

அந்த குரலில்… வாசலில் நின்றிருந்த பெண்களும் குழந்தைகளும் கூட நடுங்கிப் போனார்கள்.அக்கம் பக்கத்தினர் அனைவரும் சேர்ந்து அவரை சமாதானப்படுத்த முயன்றனர்.
ஆனால்…அவரது கோபம் மட்டும்…
அடங்க மறுத்தது.

அனைவரும் செய்வதறியாது திகைத்து நிற்க… ரஞ்சிதா ராம மூர்த்தியை நோக்கி, “மாமா… என்னாலதானே இவ்வளவு பிரச்சனை, நான் விலகிடுறேன். அவருக்கு பிடிச்சவங்க கூடவே அவரே சேர்த்து வைங்க…” என்றாள்

அவள் கூறிய வார்த்தைகள் அந்த வீட்டையே அமைதிக்குள் தள்ளியது.
அவள் கூறிய வார்த்தைகள்…தன் வாழ்க்கையைப் பற்றி அல்ல…தன் கணவனின் விருப்பத்தைப் பற்றி.
அதுதான் அங்கிருந்த ஒவ்வொருவரையும் உலுக்கிவிட்டது.

ராமமூர்த்தி கையில் இருந்த அரிவாள் மெதுவாக தரையில் விழுந்தது.

“என்னம்மா சொல்ற…?”என்று உடைந்த குரலில் கேட்டார்.

கண்களில் கண்ணீரோடு நின்ற ரஞ்சிதா,”அவருக்கு பிடிக்காம என்கூட வாழ்றத விட… அவருக்கு பிடிச்சவங்களோட வாழ்றதுதான் நல்லது மாமா…என்னால யாரும் நிம்மதி இல்லாம இருக்க வேண்டாம்..இரண்டு குடும்பங்களும் நிம்மதியா இருக்கணும்னா… நான் விலகறதுதான்  சரி…அதுனால நானே விலகிடுறேன்…”
என்றாள்.

அதை கேட்ட அம்பிகா கூட அதிர்ச்சியடைந்து அவளைப் பார்த்தாள்.
இப்படி ஒரு பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை.

அப்போதுதான் ராஜீவன் அவளை நோக்கித் திரும்பினான்.
இதுவரை அவள் முகத்தை கூட பார்க்காதவன்,
அந்த நொடியில்… முதல் முறையாக அவளது முகத்தை நேராகப் பார்த்தான்.

அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
ஆனால்…அந்தக் கண்ணீரில் அவன் மீது வெறுப்பில்லை… கணவனை விட்டுக்கொடுக்கத் தயாரான ஒரு பெண்ணின் அமைதிதான் இருந்தது.
அந்த அமைதி… ஏனோ…அவனது மனதை ஒரு நொடி அசைத்தது.

அடுத்த நொடி… ராமமூர்த்தி ரஞ்சிதாவை பார்த்து “இன்னொரு தடவை… இந்த மாதிரி பேசாதம்மா…”என்று அவளது தலையில் கை வைத்தார்.

“இந்த வீட்டுக்கு நீதான் மருமக.இந்த வீட்டுல இருந்து வெளியே போற எண்ணத்தை இதோடு விட்டுறு. நீ  என் மருமக இல்லம்மா… என் பொண்ணு” என்று அழுத்தமாகச் சொன்னார்.

அந்த வார்த்தைகளை கேட்ட ரஞ்சிதாவின் கண்களில் இருந்த கண்ணீர்…இப்போது கட்டுப்பாட்டை மீறி வழிந்தது.

பிறகு…ராஜீவனை நோக்கித் திரும்பி,
“கேட்டியா…?என் மருமக சொல்றதே.. உனக்கு நான் அமைச்சு கொடுத்த வாழ்க்கை… உன்னை விட்டுக்கொடுக்க தயாரா இருக்கு… உனக்கு நீ அமைக்க விரும்பின வாழ்க்கை உன்னை ஊரார் முன்னாடி தலை குனிய வெச்சிருக்கு” என்றார்.

ராஜீவனின் கண்கள் ஒருமுறை சுற்றத்தை பார்த்தது…சுற்றி இருந்தவர்களின் கண்களில், “ஏன் இப்படி?இவனை இத்தனை நாட்களாக நல்லவன் என்று நினைத்தோமே… இவ்வளவு கேடு கெட்டவனா இவன்” என்ற முக பாவங்களை கொண்டிருப்பது போன்ற தோற்றம் ஏற்பட மீண்டும் தலையை குனிந்து நின்று கொண்டான்.

ராம மூரத்தி மகனையும் மருமகளையும் நோக்கி, ஆனா… ஒன்னு மட்டும் தெளிவா சொல்றே, “நீங்க ரெண்டு பேரும் பிரியணும்னு நினைச்சீங்கனா அது நான் உயிரோட இருக்குற வரைக்கும் நடக்காது” என்றார்

இந்த சம்பவங்களை பார்த்த சரோஜா ஏளனமாகச் சிரித்தாள்.
அவ்வளவுதான்…
ராமமூர்த்தி மீண்டும் ஆவேசமாக முன்னேற, ராஜசேகரும் ஜெகனும் அவரை இறுக்கமாகப் பிடித்தனர்.

“மூர்த்தி…வேண்டாம்…ஊர்க்காரங்க முன்னாடி இன்னும் பெரிய பிரச்சனை ஆகிடும்…”என்று ராஜசேகர் தடுத்தார்.

இதற்கு மேல் தன் நாடகம் பலிக்காது… இன்று இந்த அவமானமே இவர்களுக்கு போதும் என கந்தசாமியும், மனைவி மகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

போகும்போதும்…
பிரியாவின் பார்வை மட்டும் ராஜீவனை விட்டு விலகவில்லை.
“நீ என்னை ஏமாத்திட்ட…”என்ற குற்றச்சாட்டு அவள் கண்களில் மட்டும் எரிந்து கொண்டே இருந்தது.

சில நிமிடங்களில்… வீட்டு வாசலில் கூடியிருந்த கூட்டமும் ஒவ்வொருவராக கிசுகிசுத்தபடியே கலைந்து சென்றனர். “இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கா… பாவம் ரஞ்சிதா…”என்ற பேச்சுகள் காதில் விழுந்தாலும்…யாருக்கும் பதில் சொல்லும் நிலையில் அந்த குடும்பம் இல்லை.

சிறிது நேரத்தில் சத்தம் அடங்கியது. ராஜ சேகர் குடும்பத்தினர் சமாதானம் கூறி உறங்க சென்றனர்

ஆனால்…அந்த வீட்டில் இருந்த நான்கு பேரின் மனதிலும் அடித்த பெரிய புயல் மட்டும் அடங்கவில்லை.
ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவில்லை.வீடு முழுவதும் மயான அமைதி நிலவியது. ரஞ்சிதா தயாரித்த இரவு உணவு அப்படியே மேசையில் குளிர்ந்தது.

ராஜீவன்…அறையில் சுவற்றை வெறித்தபடி படுத்திருந்தான்.
அன்று முதல் முறையாக…” என்னால இன்னொரு உயிரும் கஷ்டப்படுது…”என்ற குற்றவுணர்ச்சி…
அவன் மனதில் சிறிய விதையாக முளைக்க ஆரம்பித்தது.

ரஞ்சிதா பூஜை அறை வாசலில் அமர்ந்து சாமி படங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அம்பிகா அமைதியாக படுக்கையில் அமர்ந்து அழுதார்.

ராமமூர்த்தி சோர்ந்து போய் சோபாவில்  சாய்ந்து கண்களை மூடியிருந்தார்.
ஆனால்…அவரது மனம் மட்டும் ஓயவில்லை.”நான் செய்தது சரிதானா…?இரண்டு பிள்ளைகளோட வாழ்க்கையையும் நானே சீரழிச்சிட்டேனா…?”
என்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் அவரை வாட்டின.

அந்த நேரம்… திடீரென்று அவரது இடது மார்பில் ஒரு கடுமையான வலி எழுந்தது.
“ஸ்… ஆ…”என்று மார்பைப் பிடித்தபடி எழுந்து நிற்க முயன்றார். ஆனால்… கால்கள் தள்ளாடின. வலி தோள்பட்டை வழியாக இடது கைக்குப் பரவியது. நெற்றி முழுவதும் வியர்வை அரும்பியது.மூச்சு விடவே சிரமப்பட்டார்.

“அ… அம்பிகா…”என்று அழைக்க முயன்றார். குரல் சரியாக வரவில்லை.
அடுத்த நொடியே… சோஃபாவிலேயே சாய்ந்து விழுந்தார்.

“மாமா…!”என்று முதலில் அலறியது ரஞ்சிதாதான்.

அவளது அலறல் கேட்டு…அம்பிகா, ராஜீவன் இருவரும் பதறியபடி ஓடி வந்தனர்.

ராமமூர்த்தி மார்பைப் பிடித்தபடி மூச்சு விடத் திணறிக் கொண்டிருப்பதைப் பார்த்த ராஜீவனின் முகம் வெளிறிப்போனது.

“அப்பா…!”என்று அவரைத் தாங்கிப் பிடித்தான்.அந்த ஒரு நொடியில்… தந்தையை இழந்து விடுவோமோ என்ற பயம்… அவனது இதயத்தையே உலுக்கியது.

–கவிதை எழுதும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!