Skip to content
Post Views: 7,439
இரும்பில் ஓர் இதயம்….10
அன்று திவ்யா நாயகிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அவருடன் சென்றிருக்க மிருதுளா தன் வேலைகளை வேகமாக முடித்துக் கொண்டிருந்தாள் அவளின் மனது ஏனோ இன்று ஒருவித படபடப்புடன் தான் இருந்தது.திவ்யா இருந்திருந்தாள் அவளிடம் சற்று பேசி தனது மனதின் படபடப்பை குறைத்திருப்பாள் ஆனால் இன்று அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது.
வேலைகளை முடித்துவிட்டு திரும்பும் வேளை ஏதோ நினைவில் தன் வீடு வரை வந்துவிட பின் தன் தலையில் தட்டிக் கொண்டு,
“அச்சோ எப்படி மறந்தேன்….”என்று கூறிவிட்டு வேகமாக அந்த குடுசைகள் இருந்த பகுதிக்கு சென்றாள்.பரிமளத்தின் வீட்டின் வாசலில் எப்போதும் போல் தூரத்தில் இருந்து பார்த்தவள் அங்கிருக்கும் அந்த டீக்கடையில் விசாரித்துவிட்டு எப்போதும் போல் ஓய்ந்த மனதுடன் வந்துவிட்டாள்.திவ்யா இன்று வருவதற்கு நேரமாகும் என்று தெரியுமாதலால் தனது வீட்டுக்கு சென்று கதவடைத்துக் கொண்டாள்.
Advertisement
எப்போதும் அவள் தூங்க ஆரம்பிக்கும் நேரத்திற்கு தான் திவ்யா அவளை படுக்க விடுவாள் அதுவரை அவளிடம் ஏதாவது பேசியபடி தான் இருப்பாள்.ஆனால் முன்பே வந்துவிட்டதால் அவளிற்கு மனதில் ஏற்பட்ட அலைக்கழிப்பு மேலும் கூடிதான் போனது.ஏதோ அவளை அழுத்துவது போல் ஒரு பிரம்மை மனது அலைகடல் போல அலைக்கழிய ஒரு கட்டத்திற்கு மேல் வீட்டில் இருக்க முடியாமல் சற்று வெளியில் நடந்து வரலாம் என்று வந்துவிட்டாள்.
கால் வலிக்கும் வரை பக்கத்தில் இருக்கும் இடங்களுக்கு சென்றுவிட்டு வரும் வழியில் குடுசை பகுதியை கடக்கும் போது ஏனோ மனது வேகமாக அடிக்க தொடங்கியது.மனதை கட்டுப்படுத்த முடிந்தாலும் முடியாமல் போக எப்போதும் போல் பரிமளத்தின் வீட்டை பார்த்தவளுக்கு தன் கண்களையே நம்ப முடியாமல் போனது.கண்கள் இரண்டும் குளமாக விழியில் நீர் திரையிட அவனின் பிம்பம் மங்கலாக தெரிந்தது தனது விழி நீரை துடைத்துவிட்டவள் வேகமாக அவனிடம் விரைந்தாள்.
அந்த வீட்டின் வாசலில் சுருண்டு படுத்திருந்தான் இளம்பரிதி.கண்கள் மூடியபடி தான் இருந்தது ஆனால் அவன் உறங்கவில்லை.வேகமாக அவனிடம் வந்த மிருதுளா முதலில் அவனை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்தாள்.கிழிந்த உடை உடலில் ஆங்காங்கே காயம் அதுவும் சரியாக ஆராமல் சீழ் பிடித்தது போல் இருந்தது.முகத்தில் அளவுக்கு மீறிய முடி வளர்ந்து அவனின் முகமே அந்த முடியினுள் தெரியவில்லை.
Advertisement
மிருதுளாவிற்கு அவனின் நிலை பயத்தை கொடுத்தது.தான் நினைத்தது போல் அவனிற்கு பெரியதாக ஏதோ நிகழ்ந்துள்ளது என்று நினைத்தவள் மெல்ல அவனின் அருகே நெருங்க,அவளின் வரவை முன்பே அறிந்து கொண்டவனின் கண்கள் அவளை விட்டு அகலவில்லை ஆனால் மிருதுளா அதை எல்லாம் உணரவில்லை.மெல்ல அவனிடம் நெருங்கி,
Advertisement
“ப்ப்ப்…..பரிதி…..”என்று அழைக்க அவன் அசையவில்லை என்றதும் அவனது தோள்களில் அவள் கை வைக்கவும் வேகமாக அவன் எழுந்து அமர,மிருதுளா பயத்தில் இரண்டடி பின் நகர்ந்தாள்.பரிதியோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.அவன் கத்துவான் அடிப்பான் என்று பயந்தவள் அவன் தன்னை விடாமல் பார்த்துக் கொண்டு இருக்கவும்,
“எங்…..எங்க போனீங்க….நா….நான் உங்களை…..”என்று எதுவும் பேசமுடியாமல் தடுமாறி கொண்டிருக்க,
“ப்ச்……”என்றவன் முகத்தை திருப்ப,
Advertisement
“வாங்க….நம்ம வீட்டுக்கு போகலாம்….அப்புறம் பேசிக்கலாம்….”என்றவள் அவனின் கையை பற்றி அழைக்க,அவனோ அந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்க,
“சொன்னா கேளுங்க…..வாங்க போகலாம்…..”என்றவள் அவனை எழுப்ப பார்க்க அவனோ அடமாக உட்கார்ந்திருக்க மிருதுளா என்ன செய்வது என்று புரியாமல் நின்று சுற்றி முற்றும் பார்க்க,
“வா வான்னா எப்படி வரது….என்னால நடக்கமுடியாது….”என்று கர்ஜனை போல ஒலித்தது பரிதியின் குரல்,மிருதுளா அவனின் பதிலில் பயந்து அவனின் காலை ஆராய,
“என்ன கால் இருக்கானு பார்க்குறீயா….”என்று மீண்டும் அதே குரலில் கேட்க,
“இல்ல….இல்ல….”என்று வேகமாக கூறியவள்,
“என்ன இல்ல இல்ல….ஆங்….”என்றவன் முகத்தில் கோபத்தையும் தான்டிய வலி தென்பட,
“நீங்க இங்கேயே இருங்க….நான் ஆட்டோ கூட்டிட்டு வரேன்….”என்றுவிட்டு முன்னே நடக்க போனவள் பின் வேகமாக அவனின் அருகில் வந்து,
“இங்க தான் இருக்கனும்….எங்கேயும் போக கூடாது….”என்று அவனின் முன்னே ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தாள்.அவளை பார்த்து நக்கலாக சிரித்தவன்,
“போடீ….”என்றுவிட்டு படுத்துக் கொள்ள,மிருதுளா அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.அவள் திரும்பி வரும் போது ஒரு ஆட்டோவுடன் வர அந்த ஆட்டோ டிரைவர் இறங்கி வந்து பரிதிக்கு எழ உதவினார்.அவரின் உதவியுடன் ஆட்டோவில் ஏறியவுடன் மிருதுளா அவனின் பக்கத்தில் உட்கார்ந்து,
“ண்ணா…..போகலாம்….”என்று கூற வண்டி கிளம்பியது.பரிதி ஆட்டோவில் ஏறியவுடன் சீட்டில் தலையை சாய்த்து படுத்துவிட மிருதுளாவோ அவனை தான் பார்த்தபடி இருந்தாள்.மனது அவ்வளவு கனத்து போனது என்னவாயிருக்கும் எங்கு சென்றிருப்பான் எப்படி இவ்வளவு அடிப்பட்டது என்று அவனை பார்த்து கொண்டே வந்தாள்.
“என் மூஞ்சில என்ன இருக்கு….”என்று கண்களை மூடிக் கொண்டே கேட்க,இவருக்கு எப்படி தெரிந்தது என்றவள் அவனின் முன்னே கையை ஆட்டி பார்க்க அவளின் கையை வேகமாக பிடித்தவன் கண்களை திறக்க,
“என்ன நக்கலா…..கொன்னுடுவேன்….”என்றுவிட்டு அவளின் கையை உதறினான்.மிருதுளா அவன் கையை உதறியதில் கையே கழண்டு வந்தது போல் உணர்ந்தாள்.
“ப்பா….கை போச்சு….”என்றவள் தனது கைகளை பிடித்துக் கொடுக்க,ஆட்டோ நின்றது.பரிதி ஆட்டோ நிற்கவும் கண்களை திறந்தவன் முகத்தை சுழித்தான்.
“இங்க எதுக்குடீ….”என்றான் கோபமாக,
“ப்ச்….கீழ இறங்குங்க உடம்பெல்லாம் அடி பட்டிருக்கு இப்படியே உங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியாது வாங்க…முதல்ல டாக்டர் கிட்ட காட்டிட்டு போகலாம்….”என்றவள் இறங்கி அவனிடம் கை நீட்டி கூப்பிட,
“ஏய் முடியாது….உன்கூட வந்தேன் பாரு….”என்றவன் எழ முயல,மிருதுளா சுற்றி முற்றி பார்த்தவள் பக்கத்தில் யாரும் இல்லை என்று தெரியவும் அவனின் அருகே குனிந்து,
“யோவ்….ஒழுங்கா உள்ள வர இல்ல….”என்று எச்சரிக்க,
“ஓய்….என்னாடீ….பேச்செல்லாம் ஒருமாதிரி இருக்கு….”என்றவன் அவளை தள்ளிவிட்டு ஆட்டோவில் இருந்து வெளிவந்து நடக்க பார்க்க மிருதுளா வேகமாக அவனை பின்னிருந்து கட்டிக் கொண்டவள்,
“அண்ணா கொஞ்சம் வாங்களேன்….இவருக்கு ஆஸ்பத்திரினா பயம்…..கொஞ்சம் வாங்க….”என்று அவள் கத்தவும் அந்த ஆட்டோ டிரைவர் ஓடி வர,
“அடியே மரியாதையா விடு…….விடு….விடுடீ…..”என்று பரிதி அவளின் பிடியில் இருந்து திமறி கொண்டிருக்க,அதற்குள் அந்த ஆட்டோ டிரைவர் அவனை பிடிக்க,
“யோவ் என்னையவே பிடிக்கிறியா….”என்று பரிதி எத்துன எத்தில் தூர போய் விழுந்தார்.
“அச்சோ யாராவது வாங்களேன்…..”என்று மிருது போட்ட சத்ததில் அங்கே கூட்டம் கூடிவிட பரிதியை மருத்துவமனை உள்ளே நான்கு ஐந்து பேர் சேர்ந்து தூக்கி கொண்டு தான் வந்தனர்.இந்த அலப்பறைகளிலும் மிருதுளா அவனின் கையை விடவில்லை பிடித்தபடி தான் வந்தாள்.
அந்த கட்டிலில் படுத்திருந்தவனின் முகத்தில் அத்தனை கோபம்,இயலாமை ஒருபக்க கையில் சலைன் ஏறிக் கொண்டிருக்க,மற்றொரு கையை அசைக்க கூட விடாமல் கட்டியிருந்தார்கள்.பின்னே அவன் செய்த அலப்பறைகள் அவ்வாறு இருந்தது.
உள்ளே வரும் போது சத்தமிட்டு தூக்கி வந்தவர்களை அடித்து என்று ரணகளபடுத்திவிட்டான்.மருத்துவர்கள் அவனிற்கு மருத்துவம் பார்க்க வந்தால் அவர்களை கால்களால் எத்த அவர்களோ இந்த காட்டு மிராண்டிக்கு மருத்துவம் பார்க்கமாட்டேன் என்றுவிட்டார்கள்.அவர்களிடம் மிருதுளா காலில் விழாத குறையாக கெஞ்சி தான் மருத்துவம் பாரக்க வைத்தாள்.
அதிலும் அவர்கள் கையில் போட்ட சலைனை பிய்த்து பிய்த்து எரிய ஒருகட்டத்தில் மிருதுளா அவனின் கையை கட்டி வைத்துவிட்டாள்.
“அடியேய் நீ என்கிட்ட மிதி வாங்கியே சாக போற…..”என்றவன் இன்னும் சில கெட்ட வார்த்தைகளை போட்டு மிருதுளாவை திட்ட மொத்த ஆஸ்பத்திரியும் அவளை பாவமாக தான் பார்த்து வைத்தது.
“அய்யோ ஏன் இப்படி கத்துறீங்க….உங்களுக்கு உடம்பு நல்லாயில்லை…..இப்படி இருக்கும் போது ஏன் கத்தி ஆவியை வீணாக்குறீங்க…”என்றவள் அவனின் பக்கத்தில் உட்கார்ந்து அவனின் தலையை கோத,
“கையை எடுடீ….கையை எடுடீ……”என்றவனின் கத்தல் எதையும் அவள் காதில் வாங்கவில்லை அவள் பாட்டிற்கு தலையை கோத மெல்ல மெல்ல பரிதியின் குரல் தேய்ந்து உறக்கத்திற்கு சென்றிருந்தான்.
“ப்பா தூங்கிட்டான் அய்யோ இப்பவே கண்ணை கட்டுதே…..”என்று மிருதுளா தான் துவண்டுவிட்டாள்.அவனின் கையில் உடம்பில் உள்ள புண்ணிகளில் சீழ் பிடித்திருக்க அதோடு தொடையில் ஏதோ கீறியிருந்தது அதுவும் சீழ் பிடிக்கம் நிலைக்கு சென்றிருக்க மருத்துவர்கள் அவனை ஒருவாரம் மருத்துவமனையில் அனுமதித்து தான் பார்க்க வேண்டும் என்றுவிட்டனர்.
அவன் தூங்கியவுடன் அந்த பொது வார்டில் இருந்து வெளிவந்தவள் திவ்யாவிற்கு தான் அழைத்தாள்.மிருதுளா அழைப்பு விடுக்கும் போது தான் திவ்யா நாயகியை அழைத்துக் கொண்டு வீட்டிற்க்கு வந்து கொண்டிருந்தாள் மிருதுளாவின் அழைப்பை எடுத்தவுடன்,
“ஹலோ மிருது….வந்துட்டியா…..சாப்பிட்டியாடீ…..”என்று வரிசையாக கேள்விகளை தொடுக்க,
“ஏய் திவி கொஞ்சம் மூச்சு விடுடீ….”
“ப்ச்….சொல்லுடீ…..”
“முதல்ல அம்மாக்கு எப்படி இருக்கு…..டாக்டர் என்ன சொன்னார்…..”என்று மிருதுளா கேட்க,
“அவரு என்ன சொல்லுராரு….அம்மாக்கு வயசாகிடுச்சு கால் நல்லா ஆனாலும் நடை கொஞ்சம் இழுத்து இழுத்து தான் நடப்பாங்க….மத்தபடி வேற எந்த பிரச்சனையும் இல்லை……”என்று திவ்யா கூற,
“ம்ம்ம்….”என்றவளின் குரலும் உள்ளே சென்றிருந்தது.இருவரும் நாயகியை நினைத்து தான் கவலை கொண்டனர் எப்போதும் சுயமாக இருப்பவர் இப்போது அடுத்தவரின் உதவியை நாட வேண்டும் என்றால் கஷ்டம் தானே என்று நினைத்த மிருதுளா அமைதியாக இருக்க,
“ஏய்….மிருது….ஏய்….”என்ற திவியின் குரலில் நிகழ்வுக்கு வந்தவள்,
“ஆங்….சொல்லு திவி….”
“ஏய் மிருது….என்ன ஒரே சத்தமா இருக்கு….நீ எங்க இருக்க….”என்று பேசியில் கேட்ட சத்தத்தை வைத்து திவி கேட்க,மிருதுளாவிற்கு அப்போது தான் எதுக்கு ஆழைத்தோம் என்பதே நியாபகத்திற்கு வந்தது.ஆனால் இப்போது அவள் இருக்கும் நிலையில் தனது பாரத்தையும் திணிக்க விரும்பாமல்,
“அது….திவி…நான்…..”என்று மென்றுவிழுங்கி கொண்டிருக்க அதற்குள் பேசியில் திவியின் சத்தம்,
“ஏய் இப்ப நீ எங்க இருக்கனு சொல்ல போறீயா இல்லையா…..”என்றவள் அதட்டலும் நாயகி அவளை அதட்டுவதும் கேட்டது.
“திவி…..பரிதி வந்துட்டார்….”என்று கூற சிறு மௌனத்திற்கு பின்,
“என்….என்ன சொன்ன நீ….ஆங்….”என்று திவி கேட்க,மிருதுளா பரிதி கண்டது முதல் இப்போது மருத்துவமனையில் இருப்பது வரை கூற,
“அடிப்பாவீ….எந்த ஆஸ்பத்திரியில இருக்க…..”
“வேற எங்கடீ பக்கத்துல இருக்க பெரியாஸ்பத்திரி தான்…..”என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே,
“இந்தாமா பொண்ணு….உன் புருஷன் எந்திரிக்க பார்க்குறான் போம்மா போ….இல்லை கத்துவான் இப்ப பெரிய டாக்டர் வேற வருவாரு…அவரு பார்த்தாரு உன்னை வெளில அனுப்பிடுவார்…..”என்று ஒரு நர்ஸ் வந்து கூற,
“ஏய் அவரு முழிச்சிட்டாருடீ……நீ வீட்டுக்கு போ நான் நாளைக்கு வந்து மத்தது எல்லாம் சொல்லுறேன்….”என்று விட்டு போனை வைத்த மிருதுளா பரிதியிடம் விரைந்தாள்.இவள் உள்ளே போவதற்குள் கட்டிலை உலுக்கி பிலாஸ்திரி எல்லாம் பிய்திருக்க,
“அய்யோ பாவி மனுஷா…ஏன்யா என் உயிரை எடுக்குற…..அய்யோ ரத்தம் வருதே…..”என்றவள் அவனின் கையை பிடித்துக் கொண்டு,
“க்கா கொஞ்சம் சரி பண்ணிவிடுங்க க்கா….”என்று கூற,
“அட என்னமா நீ நான் பக்கத்துல போனாலே கையை கையை ஓங்குறான்….நான் என்ன செய்யட்டும்….”என்றவர் அவனின் அருகே நெருங்கவே பயந்தார்.
“ஏன்டீ ராட்சசி….உன்னை கொல்லாம விடமாட்டேன்டீ……”என்றவன் அவளை தள்ள பார்க்க,இரு தோள்களோடு அவனை இறுக்கி அணைத்துக் கொண்டவள்,
“நீங்க வாங்கக்கா…..போட்டு விடுங்க….அப்படியே இந்த கையையும் கட்டிட்டு போங்க…..போனா போகுதுனு அவுத்துவிட்டேன் பாருங்க என்னை சொல்லனும்…..”என்று மிருதுளா கூற அந்த நர்ஸ் பயந்தபடி தான் அவனின் கிட்டே வந்தார் அதுவும் திமிறலை நிறுத்தியிருந்ததால்.ஆம் மிருதுளா அவனை அணைத்து பிடிக்கவும் அவனது மனதில் எரிந்து கொண்டிருந்த ஏதோ தீ சற்று மட்டுப்பட்டது போல் உணர்ந்தான்.அந்த இடைவெளியில் நர்ஸ் மிருதுளா கூறியதை போல் செய்துவிட்டு சென்றுவிட மிருதுளாவின் பிடி சற்று தளர்ந்தது.
“ப்பா…..முடியலை….”என்றவாரே அவனின் அருகே அமர்ந்தவள்,
“நீங்க தான் தூங்கினீங்களே அப்புறம் ஏன் திடீர்னு எந்திரிச்சீங்க….”என்று மூச்சு வாங்க கேட்க,
“நீ எங்க போன….என்னை பார்த்துக்காம…..”என்று அவன் எதிர் கேள்வி கேட்க மிருதுளா திருதிருவென முழித்தாள்.பரிதியோ அவள் பார்ப்பதை எல்லாம் பொருட் படுத்தாமல் அவளின் கையை பிடித்து அவனின் தலையில் வைக்க அப்போதும் மிருதுளா முழிக்க,
“நான் தூங்கனும்….”என்றவன் அவளின் கையால் தனது தலை கோத சொல்ல,மிருதுளா கோத தொடங்கினாள்.மெல்ல அவனின் கண்கள் உறக்கத்திற்கு செல்ல,மிருதுளா அவளின் கையை எடுத்துவிட்டு சற்று சாய்ந்து அமர,அவளின் தோள்களில் ஒரு கரம் விழுவும் திடுக்கிட்டு திரும்ப அங்கு திவியும்,நாயகியும் நின்றனர்.திவ்யா மிருதுளா கூறியவுடன் நேராக மருத்துவமனைக்கு வந்துவிட்டாள்.
“ஏய் நான் உன்னை வீட்டுக்கு போக சொன்னேன் தான எதுக்கு இங்க வந்த….அதவும் அம்மாவவை கூட்டிக்கிட்டு ஏன் வந்த….”என்று மிருதுளா கேட்க,
“நாம அப்புறம் பேசலாம் நீ அவரை முதல்ல தூங்க வை….”என்று திவி கூற,மிருதுளா என்ன என்று திரும்ப பரிதி அவளை கொல்லும் வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீ…..நீங்க தூங்கல….”என்றவளை அவனின் அருகே இழுத்தவன் மீண்டும் அவளின் கைகளால் தலை கோத சொல்லிவிட்டு,
“எங்காயாவது போன அப்புறம் இருக்கு….”என்று அவளிற்கு மிரட்டல் விட,மிருதுளா பாவமாக திரும்பி திவ்யாவை பார்த்தாள்.
“நீ முதல்ல உன் மகாராஜாவை பருடீயம்மா….நான் அப்புறம் வரேன்….”என்றவிட்டு நகர போனவள்,
“ப்ச்….மறந்தே போயிட்டேன் பாரு….இந்தா இதை வச்சுக்க…”என்று கூறிக் கொண்டே அவளின் கையில் கொஞ்சம் பணத்தை திணிக்க,
“அய்யோ இதெல்லாம் வேண்டாம்டீ….”என்று மறுத்தவளை,
“இதோ பாரு ஏற்கனவே உன் மகாராஜா உன்னை மிதிக்கிறது பத்தானு என்னையும் மிதிக்க வச்சிடாத….ஒழுங்கா வாங்கு…இல்லை உன் ராஜாவை எழுப்பிவிட்டுட்டு தான் போவேன் பராவாயில்லையா….”என்றவள் பரிதியின் அருகே நெருங்க,
“அடியே உனக்கு புண்ணியமா போகும்….எழுப்பாதடீ….உடம்புல வலு இல்லை….”என்றவிட்டு திவ்யா கொடுத்த பணத்தை வாங்கிவிட்டாள்.
“ம்ம்ம் அது…நான் காலையில வரேன்….பார்த்துக்க….”என்றுவிட்டு கிளம்ப,மிருதுளாவின் அருகே வந்த நாயகி,
“பார்த்துக்கமா….நான் சாப்பாடு கொடுத்துவிடுறேன்…”என்றுவிட்டு சென்றார்.மிருதுளாவிற்கு தான நெஞ்சம் கனத்தது அவர்களின் அன்பில் என்ன செய்துவிட்டேன் நான் இவர்களுக்கு என்று நினைத்தவளின் கண்களில் கரகரவென்று கண்ணீர் இறங்கியது.வாழ்வில் பல அடிகளை பட்டுவிட்டவளுக்கு கடவுள் பணத்தை அள்ளி கொடுக்கவில்லை தான் ஆனால் தோள்கொடுக்க,கரைசேர்க்க நல்ல உள்ளங்களை கொடுத்துவிட்டார் அதில் மிருதுளா கொடுத்து வைத்தவள் தான்.
இத்தகைய உள்ளங்களை விடவுமா தன்னை ஒரு இக்கட்டில் விட்டு சென்ற இவன் பெரிதாகிவிட்டான் என்று யோசித்தவளுக்கு எந்த விடையும் இல்லை ஆனால் அவனிடம் தானே தன் மனம் செல்கிறது என்ன செய்வது என்று நினைத்தவள் முகத்தில் ஒருவித இதமும்,அதே சமயம் கோபமும் ஒருங்கே இருந்தது.அந்த கோபத்தை அவள் காட்டும் நேரத்திற்காக அல்லவா காத்திருக்கிறாள்.இதோ இப்போது வரை அவளின் கைகள் அவனின் தலை கோதிக் கொண்டு தான் இருந்தது.அவளின் தலை கோதலில் ராஜா போல தூங்கி கொண்டிருப்பவனுக்கு தெரியவில்லை இதே கரங்கள் தான் இன்னும் ஒரு வாரத்தில் அவனை அடித்து வெளுக்க போகிறது என்று.
error: Content is protected !!