Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

92. பவித்ரா புருஷோத்தமன் - இருளில் தொலைத்தேன் ஒளியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை-19

     சுபமுகூர்த்த நாள் என்பதால் மக்களின் கூட்டமானது மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் அலைக்கடலென ஆர்ப்பரித்து கொண்டிருந்தது.

     அன்னை பார்வதி தேவி, சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காகத் தவமிருந்த தலமே மாங்காடு. கயிலை மலையில் இருந்தபோது, அன்னை பார்வதி தேவி சிவபெருமானின் கண்ணைப் பொத்த, உலகமே இருண்டது. கோபமடைந்த சிவன், பார்வதி‌ தேவியை சபித்து, தவம் செய்து மீண்டு வருமாறு கூறினார். அவரது ஆணையை ஏற்று மாங்காட்டிற்கு வந்த பார்வதி தேவி, ஒற்றைக் காலில் அக்னியின் நடுவே நின்று கடும் தவம் புரிந்தார். அந்த தவத்தின் பலனாக காஞ்சியில் சிவபெருமானும் பார்வதி தேவியும் ஏகாம்பரேசுவரர்-காமாட்சி அம்மனாக திருக்கல்யாணம் செய்து கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன.



Advertisement

     அப்பேர்ப்பட்ட பிரசித்தி பெற்ற தலத்தில் தான் விஜய சிவமாறன் மற்றும் ஆழினியின் திருமண வைபோகமானது நடைப்பெற்று கொண்டிருக்கிறது.

     பிக்கல் பிடுங்கள் என்று நச்சரிக்கும் உறவுகள் இல்லாமல் மணமக்களை மனநிறைவுடன் வாழ்த்த விஜய சிவமாறனின் உறவென பருவதம்மா, செல்வி அக்கா, செல்வி அக்காவின் கணவர் கோபாலன் மற்றும் விஜய ராஜவேலுவும் அவரது துணைவியார் ஜானகியும் வருகைப்புரிந்திருக்க, ஆழினியின் உறவென இன்பன், நீலவேணி, ஆறுமுகம் மற்றும் ராணி என நால்வரும் மகிழ்ச்சியில் திலைத்திருந்தனர்.

Advertisement

Advertisement

     இவர்களில் ஆதவ் கிருஷ்ணன் மட்டும்‌ திருமணத்தில் இடம்பெறவில்லை. அதற்கு முழுமுதற்காரணம் விஜய சிவமாறன் தான். தனக்கும் ஆழினிக்கும் நடக்கும் திருமணத்தை கண்டு சிறியவனின் மனதில் அக்காட்சி பதிந்து பிற்காலத்தில் தன் பிறப்பின் வரலாறு தெரிய வந்தால் மனமுடைய நேருமோ என்று எண்ணம் கொண்டு ஆதவ் கிருஷ்ணனை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு தன் சொந்தங்களுடன் நேராக கோயிலுக்கு வந்துவிட்டான் விஜய சிவமாறன்.

     இத்தனை நாட்களாய் தவமிருந்து காத்திருந்த தன் தமக்கையின் திருமணமானது சற்றுநேரத்தில் நிகழப்போவதை எண்ணிய இன்பனின் மனமும் கண்களும் நெகிழ்ச்சியில் கலங்கியிருக்க, அவனருகில் மணமகனின் தங்கையாய் கைகளில் காமாட்சி அம்மன் விளக்கினை பிடித்து கொண்டிருந்த நீலவேணியோ தன்னவனை கண்களின் மொழியினால் சமாதனம் செய்து கொண்டிருந்தாள்.

Advertisement

     வெள்ளை நிற பட்டு சட்டை மற்றும் பட்டு வேட்டி அணிந்து ஐயர் கூறும் மந்திரங்களை பிழையில்லாமல் கூறிய விஜய சிவமாறனின் அருகில் குங்கும நிற‌ பட்டு புடவையில் உணர்ச்சி துடைத்த முகத்துடன் அமைதியின் திருவுருவமாய் தேவதையாக அமர்ந்திருந்தாள் ஆழினி.

     இரண்டு நாட்களில் தனக்கு  திருமணமானமாகிவிடும் என்று எவரேனும் கூறியிருந்தாள் சத்தியமாக பெண்ணவள் நம்பியிருக்கமாட்டாள். இவ்வளவு ஏன், விஜய சிவமாறனே அவளிடம் ‘இரு நாட்களில் நிச்சயமாக நமக்கு திருமணம் நடைபெறும்’ என்று‌ உறுதியாக கூறியவனின் கூற்றை கூட தூசு போல் தட்டிவிட்டு ‘தான் உண்டு தன் வேலை உண்டு’ என்றிருந்தவளின் வாழ்வானது இரண்டு நாட்களில் முற்றிலுமாய் மாறிவிட்டது.

     ஆழினியின் இந்நிலைக்கு ஆரம்ப புள்ளியிட்டு எதுவும் அறியாதவன் போல் அமர்ந்திருந்த விஜய சிவமாறனை பார்க்க பார்க்க அக்னி குண்டத்தில் எரியும் நெருப்பைவிட அவளது கோபம்‌ தான் அனல் தெரிக்க கொழுந்துவிட்டு எரிந்தது. குறிப்பாக, விஜய சிவமாறனின்‌ ஆரம்ப புள்ளியை தொடர்வதற்கு அவனுடன் இணைந்த இன்பன் மீதும் ஆழினியின் கோபமானது குடிக்கொண்டிருந்தது. ஆனால் முடிவில் ஒன்று மட்டும் உறுதி, இத்திருமணமானது ஆழினியின் முழு சம்மத்ததுடன் தான் நடைப்பெற்று கொண்டிருக்கிறது.

     தன்னை சுற்றி நடக்கும் தன் திருமண நிகழ்வுகளை சிறிதளவும் கருத்தில் ஏற்றாது பொம்மை போல் அமர்ந்திருந்த ஆழினியின் செவிகளில்

     “கெட்டி மேளம்‌ கெட்டி மேளம்‌….” என்று ஐயர் கூறியதை கேட்டவள்‌ அப்பொழுது தான் நிகழ்காலத்திற்கு திரும்பியிருந்தாள்.

     தான் கேட்டது கனவாக இருக்கவேண்டும் என்று ஆழினியின் மனம் எங்கோ ஓர் மூலையில் சிறிதாக நப்பாசை கொண்டிருக்க, இது நிஜம் தான் என்று‌ கூறுவது போல் அவளது கழுத்தில் மஞ்சள்‌ நாணினை அணிவித்திருந்தான் விஜய சிவமாறன்.

     தன்‌ கழுத்தில் குடியேறி கொண்டிருக்கும் மஞ்சள் நாணினை கண்டதும் ஆழினியின் கண்கள் கலங்க தொடங்கியிருந்தது.

     “நம்ம நிலத்துல சொந்தமா வீடு கட்டி அங்க உன்னோட கல்யாணமும் இன்பனோட கல்யாணமும் நடத்தனும் ஆழினிம்மா…. என் ஆசை, கனவு எல்லாமே அது தான்….” என்று சந்தான கிருஷ்ணனின் குரலும்

     “உனக்கும் இன்பனுக்கும் கல்யாணத்தை பண்ணிட்டு என் பேரன் பேத்தியை பார்த்துட்டாலே போதும் ஆழினிம்மா, வேறெந்த ஆசையும் எனக்கு இல்ல….” என்று ஆதிலட்சுமியின் குரலும் ஆழினியின் காதோரத்தில் ஒலிப்பது போல் உணர்ந்தவளின் கண்கள் மட்டுமல்லாது தன் தாய் தந்தையின் நினைவிலும் ஆழினி திருமணத்தை கண்ட இன்பத்திலும் இன்பனின் கண்கள் மடைத்திறந்த வெள்ளம்‌ போல் கண்ணீரை சிந்த தொடங்கிவிட்டது.

     இன்பனை போலவே நீலவேணியும் அவளது பெற்றோர்களும் ஆழினியின் திருமணத்தை கண்ட நெகிழ்ச்சியில் கலங்கி நிற்க, தன்‌ மகனின் வாழ்வானது நன்முறையாய் அமைந்துவிட்டது என்று நினைத்த பருவதம்மாவின் கண்களும் மகிழ்ச்சியில் கலங்க தொடங்கியிருந்தது.

     தன் கழுத்தில் மஞ்சள் நாணினை அணிவித்தவனை அப்பொழுது தான் நிமிர்ந்து பார்த்தவளின் மனக்கண்ணில்

     “நடக்கும்…. உனக்கும் எனக்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்கும் அதுவும் உன் சம்மதத்தோட…. சொல்ல மறந்துட்டேன், இன்னும் ரெண்டு நாள்ல நமக்கு கல்யாணம் ரெடியா இரு….” என்று தீர்க்கமாக கூறிய விஜய சிவமாறனிடம்

     “நீ நினைக்கிறது கனவுல கூட நடக்காது….” என்று உறுதியாக கூறியவாறு அவனை கண்டு ஏளனமாக சிரித்து வைத்தவளிடம்‌ அன்று அவன் கூறியது போலவே அவளின் முழு சம்மதத்துடன் தன்னவளின் கழுத்தில் மஞ்சள் நாணினை அணிவித்து முன்று முடிச்சுகளையும் அவனே முடிச்சிட்டு அவளவனாய் மாறியிருந்தான் ஆழினியின் விஜய சிவமாறன்.

     அந்நொடி விஜய சிவமாறன் மற்றும் ஆழினியின் கண்கள் ஒன்றையொன்று கலந்திருக்க, இருவரது கண்களும் கலங்கியிருப்பதை இருவரும் உணர்ந்திருந்தனர். சற்று நேர்த்திலேயே தன்னை மீட்டெடுத்தவன் தன் வலது கரத்தினால் ஆழினியின் நெற்றியில் குங்குமமிட, அந்நிகழ்வானது தன்னவன் என்ற உணர்வினை ஆழினியின் மனதில் அவள் அறியாமலேயே விதைத்துவிட்டது.

     திருமண சடங்குகள் அனைத்தையும் முடித்துவிட்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று, கல்யாண விருந்தை ஓர் உணவகத்தில் உண்டு முடித்த அனைவரும் விஜய சிவமாறனின் இல்லத்திற்கு வருகை புரிந்திருந்தனர்.

     ராணி, செல்வி அக்கா மற்றும் ஜானகி மூவரும் மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து இல்லத்திற்குள் வரவேற்க, கொலுசுகள் சரசரக்க மெட்டியொலி இசையுடன் தன் வலது காலை அடியெடுத்து வைத்து விஜய சிவமாறனின் மனைவி ஆழினி விஜய சிவமாறானாய் இல்லத்திற்குள் நுழைந்திருந்தாள் பெண்ணவள். பூஜை அறையில் விளக்கெற்றியவள் தன் கரங்களை கூப்பி கண்களை மூடியவாறு

     “இன்னும் என்னென்ன சோதனை தான் எனக்கு வச்சிருக்க?” என்று தன் மனதில் எழுந்த கேள்விகளை கடவுளிடம் இயலாமையுடன் வினவிய ஆழினியின் கேள்விக்கு விடையாய்

     “அவ்வளவு தான் முடிச்சிடுங்க, இதுக்கு அப்புறம் அதை பத்தி கேட்காதீங்க…. அதான் நான் இருக்கேன்ல? நான் பார்த்துக்குறேன்….” என்று தன் அலைபேசியில் யாருடனோ உரையாடி கொண்டிருந்த விஜய சிவமாறனின் பதில் ஆழினியின் செவிகளில் விழுந்ததும்

     “ப்ச்ச், நிம்மதியா சாமி கூட கும்பிட விடமாட்டான்….” என்று தனக்குள் புலம்பியவாறு இல்லத்திலிருந்த கூடத்தை நோக்கி செல்லும் ஆழினியை கண்டு பூஜை அறையில் வீற்றிருந்த அனைத்து கடவுள்களும் அழகாக சிரித்து கொண்டிருந்தனர்.

     இல்லத்தின் கூடத்திலிருக்கும் நீள்சாய்விருக்கையில் அமர்ந்திருந்த ஆழினியின் அருகில் விஜய ராஜவேலுவும் அவரின் துணைவியார் ஜானகியும் வர, அவர்களை கண்டதும் எழுந்த ஆழினியை தன்னருகில் அமர்த்தி கொண்டார் ஜானகி.

     தன்னருகில் அமர்ந்திருந்த ஆழினியின் கைகளை மென்மையாக பற்றியவர்

     “சிவா ரொம்ப நல்லவன் ம்மா அவனை பத்திரமா பார்த்துக்கோ…. திருநாவுக்கரசு மாமா போனதிலிருந்து சிவாவுக்கும் பருவதம் அக்காவுக்கும் மறந்துக்கூட சிரிப்புன்னு ஒன்னு இல்லாம யோடுச்சு, இப்போ நீயும் உன் பையனும் தான் அவங்களுக்கு எல்லாமே…. திருநாவுக்கரசு மாமா மட்டும் இந்நேரம் இருந்திருந்தா கண்டிப்பா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க….” என்று ஜானகி கூறி கண்கலங்க, அவரது தோள்களை ஆதரவாக பற்றியவர்

     “ஜானகி, நல்ல நாள் அதுவுமா ஏன் அழுதுட்டு இருக்க? இனிமேல் எல்லாம் நல்லதாவே நடக்கும்…. ஆழினி, நீயும் சிவாவும் உங்க பையனோட நம்ம வீட்டுக்கு கண்டிப்பா விருந்துக்கு வரணும்…. என் பையனுக்கும் பொண்ணுக்கும் எக்ஸாம்ஸ் நடக்குறதுனால கல்யாணத்துக்கு கூட்டிட்டு‌‌ வர முடியல இன்னொரு நாள் கண்டிப்பா வரோம்…. நாங்க கிளம்புறோம் ஆழினி…. மறக்காம நம்ம வீட்டு விருந்துக்கு வந்துடுங்க…. ….” என்று ராஜவேல் கூறியதை கேட்டு தலையசைத்து மெலிதாக சிரித்தவள்

     “கண்டிப்பா சார்….” என்று கூறிய ஆழினியிடம்

     “சார் இல்ல…. மாமான்னு கூப்பிடும்மா…. உங்க ராஜவேல் சார் இப்போ உனக்கு மாமா, நான் உனக்கு அத்தை….” என்று கூறிய ஜானகியை கண்டு சரியென்பதை தலையசைத்தவளிடமும் மற்ற‌ அனைவரிடமுமிருந்து விஜய ராஜவேலுவும் ஜானகியும் விடைப்பெற்று சென்றனர்.

     இல்லத்தலிருந்த கூடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தவளை

     “அம்மா….” என்று சத்தமாக அழைத்தவாறு அவளருகில் ஒடிவரும் ஆதவ் கிருஷ்ணனை கண்டதும் இத்தனை நேரம் மறைந்திருந்த ஆழினியின் மகிழ்ச்சியானது வெளிவந்துவிட்டது.

     தன் மகனின் அருகில் வேகமாக சென்று தனது கரங்களில் ஏந்தியவள் அவனது கன்னக்குழி சிரிப்பில் அழுத்தமாக முத்தம் வைத்து

     “ஆது கண்ணா, இன்னிக்கு ஸ்கூல் எப்படி போச்சு? மதியம் லன்ச் ஃபுல்லா சாப்பிட்டியா? ஆமா, யார் உன்னை கூட்டிட்டு வந்தா?” என்று ஆழினி வினவ

     “பன்னு மாமா தான் கூட்டிட்டு வந்தாங்க….” என்று கூறியவன் தன் அன்னையின் கன்னங்களை தனது பிஞ்சு கரங்களில் ஏந்தியவாறு

     “அம்மா, இன்னிக்கு நீ ரொம்ப அழகாயிருக்கம்மா…. பிரின்செஸ் மாதிரி இருக்க தெரியுமா? தினமும் இதேமாதிரி ட்ரெஸ் பண்ணும்மா….” என்று ஆதவ் கிருஷ்ணன் கெஞ்சலாகவும் கொஞ்சலாகவும் கூற, அவன் கூறியதை கேட்டு ஒருநொடி பிரமித்தவள் அப்பொழுது தான் தன் பிம்பத்தை கூடத்திலிருந்த கண்ணாடியில் சரியாக கவனித்தாள்.

     குங்கும நிறத்தில் தங்க நிற பாடர் வைத்த பட்டு புடவை அவளது நிறத்திற்கு பாந்தமாய் பொருந்தியிருக்க, நீலவேணியின் கைவண்ணத்தில் ஆழினியின் முகத்திலிருந்த அளவான ஒப்பனையானது அவளின் அழகை மறைக்கவில்லை, மாறாக அதனை இன்னும் அழகாக வெளிக்கொண்டு வந்திருந்தது. அவளது காதில் அசைந்தாடும் ஊஞ்சலாய் ஜிமிக்கியும், கைகள் இரண்டிலும் கண்ணாடி வளையல்களும், தலைநிறைய மல்லிகை சரத்தையும் சூடி, கழுத்தில் சிறிய அளவிலான அட்டிகையும் அதற்கு அடுத்து ஆரமும்‌, இரண்டுக்கும் மத்தியில் விஜய சிவமாறன் அணிவித்த மஞ்சள் கயிற்றிலான தாலியும் அழகாக ஜொலித்து கொண்டிருந்தது.

     தன் பிம்பத்தை கண்டவளின் கண்கள் இரண்டும் அவளை அவள் அறியாமலேயே இரசிக்க தொடங்கிவிட்டது. சிறு வயதிலிருந்தே அழகு சாதனப் பொருட்கள் மீது அவ்வளவு நாட்டமில்லாத ஆழினிக்கு கை நிறைய கண்ணாடி வளையல்களும், தலை நிறைய மல்லிகை சரங்களும் சூடி கண்களை உறுத்தாதவாறு புடவை அணிந்து தன்னை தானே கண்ணாடியில் கண்டு அதில் தெரியும் தன் பிம்பத்தை இரசிப்பதில் அலாதி ஆசையுண்டு. அவளது அன்னை மற்றும் தந்தையின் இழப்பிற்கு பிறகு அவ்வாசைகளை சிறிது கைவிட்டவள் ஆதவ் கிருஷ்ணன் பிறந்தவுடன் அதை முற்றிலுமாய் கைவிட்டிருந்தாள். காரணம், திருமணம் என்னும் எண்ணத்தையே தன் வாழ்விலிருந்து ஒதுக்கி, மகனுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவள், சமூகத்தின் பார்வையில் தன்னை கணவனை இழந்த கைம்பெண்ணாகவே காட்டிக்கொண்டாள்.

     அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கும் விதமாய் விஜய சிவமாறனின் வருகையானது ஆழினியின் வாழ்வில் பல ஆண்டுகள் கழித்து தோன்றும் வானவில்லின் வண்ணங்களாய் மாற தொடங்கியிருந்தது. அதை அறியாத பேதை பெண்ணவளோ தன்னவன் மீது கோபம் கொண்டு அவனை பார்வையால் தள்ளி நிறுத்திவிட்டு இப்பொழுது கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தை இமைக்க மறந்து இரசிக்கும் ஆழினியை அவளறியாமல் இரசித்து கொண்டிருந்தான் விஜய சிவமாறன்.

ஒளி வீசும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!