Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறப்பதில்லை மதி முகம்

மறப்பதில்லை மதிமுகம்-7

அத்தியாயம் 7

நிகழ்காலம் :

நேரம் போவதே தெரியாமல் மதி தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாள். இரவு எட்டு மணி அளவில் வேலையை முடித்தவள், ரிப்போர்ட்டைக் காட்டச் சென்றபோது ஆதி ஒரு கிளையண்ட் மீட்டிங்கில் இருப்பது தெரிந்தது.



Advertisement

தன் இடத்திற்கே திரும்பியவள், அவனது வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள். நேரம் செல்லச் செல்ல போரடிக்கவே, அமர்ந்த நிலையிலேயே அப்படியே உறங்கிப் போனாள்.

அமெரிக்க வாடிக்கையாளர்களுடனான சந்திப்பை முடித்துவிட்டுத் தன் கேபினுக்குத் திரும்பிக் கொண்டிருந்த ஆதி, மதி உக்கார்ந்த  இடத்திலே தூங்குவதைக் கண்டான். இவ்வளவு நேரம் ஒரு பெண் அலுவலகத்தில் தனியாக, அதுவும் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அருகில் சென்று, அமைதியாக உறங்கி கொண்டிருந்த அவளது பால் போன்ற மென்மையான முகத்தைப் பார்த்தான். முதல்முறையாக அவளைச் கவனித்து உற்றுப் பார்த்தான். தூங்கும் போது அவள் கள்ளம்

Advertisement

கபடம் இல்லாத குழந்தைப்போல் தெரிந்தாள். அவளது துருதுருவென்று அலைபாயும் குறும்புக்காரக் கண்கள் மூடியிருக்க, எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் அந்த வாய் தூக்கத்திலும் லேசாகத் திறந்திருந்தது. அதைப் பார்த்ததும் அவனுக்குள் ஒரு புன்னகை அரும்பியது.

Advertisement

“அழகுடன் கூடிய அறிவு (Beauty with brain) என்பது இவளுக்குத் தான் பொருந்தும்” என்று அவனது மனது கூவியது.

சேரில் உக்கார்ந்தபடியே சுருண்டு படுத்துத் தூங்கிய அவளைப் பார்த்தபோது அவனது இதயம் உருகிப்போனது. அவளது தலைமுடியை வாஞ்சையாக வருடிவிட வேண்டும் போல் தோன்றிய கணம், அவன் எண்ணங்களுக்குச் செயல் வடிவம் கொடுப்பது போல, தானாகவே அவன் கை உயர்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். பாதியிலேயே கையை மடக்கிக் கொண்டு, அவளது பெயரைச் சொல்லி அழைத்தான்.

“தண்மதி..” என்று சற்று உரக்க அழைத்தான்.

Advertisement

தூக்கக் கலக்கத்தோடு கண்களைப் பாதி திறந்து பார்த்தவள், எதிரே ஆதித்யாவை பார்த்ததும், விழுந்தடித்துக்கொண்டு  எழுந்து நின்றாள்.

“சார்..!”

“இன்னும் வீட்டுக்குப் போகாம இங்க என்ன பண்ற? தூங்குறதுக்கு இது  இடம் கிடையாது. அதுக்குதான் ‘வீடு’ன்னு ஒன்னு இருக்கு..”

“அது… வந்து சார், ரிப்போர்ட் காட்டுறதுக்காக உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.”

அவன் தன் நெற்றியில் அடித்துக் கொண்டான். மற்ற வேலைகளில் மூழ்கிப் போனதில், மதிக்கு கொடுத்த வேலையை அவன் முற்றிலும் மறந்துவிட்டான்.

“ஓ.. சாரி, நான் மீட்டிங்ல மாட்டிகிட்டேன்.. ஆனா அதுக்காக இவ்வளவு லேட்டா நீ இங்க இருக்கனுமா.. மெயில் பண்ண வேண்டியதுதானே?” என்று சற்று அதட்டலாகக் கேட்க.

அப்போதுதான் மதி நேரத்தைப் பார்த்தாள். “ஐயோ.. மணி பத்தரை ஆகுதே..!” என்று அதிர்ச்சியில் கைகளால் வாயை மூடிக்கொண்டாள்.

அவளது அந்த மிகையான ரியாக்ஷனைப் பார்த்து மனதில் சலித்துக்கொண்டு, “டோண்ட் வொர்ரி..  நான் உனக்கு கேப் (Cab) அரேஞ்ச் பண்றேன்..” என்று அவளைச் சமாதானப்படுத்த முயன்றான்.

ஆனால் அவள் சமாதானமடைவதாகத் தெரியவில்லை. சில நொடிகளிலேயே பலவிதமான முகபாவனைகளைக் காட்டித் தனக்குள்ளேயே ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள். “டிராமா குயீன்..” என்று அவன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

“தண்மதி..” என்று அழைத்து அவளது கவனத்தைத் தன்னிடம் திருப்பினான். திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவளை.

“ஆர் யூ ஓகே?” என்று கேட்காமல் இருக்க  முடியவில்லை,

“நிச்சயமா இல்லை..” என்று அவள் மனதிற்குள் நினைத்தாலும் வெளியே சொல்லவில்லை.

“சார்.. நான் இன்னைக்கு ஆபீஸ்லயே தங்கிக்கவா ப்ளீஸ்..?”

“என்ன ஆச்சு? நான் தான் உனக்கு ட்ராப் அரேஞ்ச் பண்றேன்னு சொல்றேன்ல..”

“அதனால ஒரு புண்ணியமும் இல்லை சார்.. ராத்திரி முழுக்க நான் ரோட்டுல தான் நிக்கணும்.”

“என்ன சொல்ற?” என்று குழப்பத்துடன் புருவத்தைச் சுருக்கினான்.

“நான் தங்கி இருக்குற வீட்டு ஓனர் அம்மா பத்து மணிக்கே கேட்டை பூட்டிடுவாங்க, அதுக்குமேல போனா திறக்க மாட்டாங்க. அது அவங்களோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. ரூல்ஸை மீறினா வீட்டை காலி பண்ணசொல்லிடுவாங்க..”

“அதெப்படி நடு ராத்திரியில ஒரு பொண்ணை வெளில நிறுத்துவாங்க? அதெல்லாம் ஒரு லேடியா?”  என்று ஆதி கோபமாகக் கேட்டான்.

“இந்த டவுட் எனக்கும் இருக்கு சார்..” என்று அவள் எதார்த்தமாகச் சொல்ல, அவளது பதிலைக் கேட்டு அவன் பக்கென்று சிரித்துவிட்டான்.

“இப்போ என்ன பண்ணப் போற?” என்று அந்தச் சிரிப்புக்கு இடையிலேயே கேட்டான்.

“இங்க ஆபீஸ்லயே…”

அவளை முடிக்க விடாமல், “நோ.. சரியான காரணம் இல்லாம இங்க தங்க அனுமதி கிடையாது..” என்று கறாராகச் சொன்னான்.

“என்னோடதும் சரியான காரணம் தான் சார்.” என்றாள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு

“சரி என்னோட வா.. நான் அந்த லேடிகிட்ட பேசுறேன்.”

“ஐயோ.. வேற வினையே வேண்டாம் சார்! உடனே என்னைத் ரூமை காலி பண்ணச் சொல்லிடும்  அந்த ‘சொர்ணக்கா’.. முக்கியமா பசங்க யாரும் என்னைப் பார்க்க வரக் கூடாதுங்கிறதுதான் அவங்களோட ஃபர்ஸ்ட் கண்டிஷனே..!”

“ரூல்ஸ் அவ்வளவு தானா.. இல்ல இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா?மியூட்டுவல் பண்ட்ஸ்ல கூட இவ்ளோ டர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் இருக்காது போல” என்று கிண்டலாக சொல்ல, அவள் பரிதாபமான முகத்தை வைத்தாள்.

“உன்னோட ஃப்ரண்ட்ஸ்.. ரிலேட்டிவ்ஸ்.. யாராவது பக்கத்துல இருக்காங்களா?” என்று யோசனையாக கேட்டான்.

அவள் ‘இல்லை’ என்று தலையசைத்தாள்.

“சரி ஓகே.. நீ என்னோட வீட்டுக்கு வந்து தங்கு.. நாளைக்குக் காலையில உன்னோட ரூமுக்குப் போகலாம்.”

அவளது கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

“கண்ணை அப்படி உருட்டாத… என்னோட வீட்டுல என் பேரண்ட்ஸும் இருக்காங்க.” அவளது கற்பனை எங்கோ ஓடுவதற்கு முன்னால் அவன் அவசரமாக விளக்கினான்.

“உங்க பேரண்ட்ஸ் உங்களைத் தப்பா நினைக்க மாட்டாங்களா சார்..?”

“அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க. உனக்கு ஓகே தானே..?”

“எனக்கு வேற வழி இருக்கா என்ன..?” என்று முணுமுணுத்தாள் மதி.

“என்னது?”

“ஓகே தான் சார்…!”

ஆதித்யாவின் பைக்கின் பின்னால் அமர்ந்து அவனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தாள் மதி.

“சார்.. உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?” மதி தயக்கத்துடன் ஆரம்பித்தாள்.

‘ஆஆஆ… இந்த பொண்ணு கொஞ்சநேரம் கூட வாயை மூடிட்டு சும்மா இருக்க மாட்டாளா?’ என்று சலித்துக்கொண்டான் ஆதி,. அவன் பதில் சொல்லாவிட்டாலும் அவள் தொடர்ந்தாள்.

“சார், நீங்க இவ்வளவு பெரிய ஆஃபீஸர்.. கார் வச்சுக்காம ஏன் பைக்ல வர்றீங்க?”

“அது உனக்குத் தேவையில்லாத விஷயம்,” என்றான் அவன் இறுகிய குரலில்,

மதி இதழ்களைச் சுருக்கிக்கொண்டு அமைதியானாள்.

‘இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இவ்வளவு கோபப்படுறாரு?’

சுமார் 20 நிமிடப் பயணத்திற்குப் பிறகு, ஒரு நடுத்தர அளவிலான அழகான வீட்டின் முன் பைக் நின்றது. கேட்டைத்  திறந்து ஆதி பைக்கை உள்ளே போர்ட்டிக்கோவில் இருந்த காருக்குப் பக்கத்தில் நிறுத்தினான். தண்மதி சுற்றிலும் கண்களை ஓட்டினாள்.

கார்ப்பார்க்கிங்கின் வலதுபுறம் இருந்த காலி இடத்தில் சிறு கிணறு ஒன்று கம்பி வலைப்போட்டு மூடியிருந்தது,

பக்கதிலேயே மாமரம், முருங்கை, வாழை மரங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருக்க,அதன் கீழே சிறிய பாத்தியில் துளசி, கற்பூரவல்லி,கற்றாழை போன்ற மூலிகைச் செடிகள் இருந்தன.செம்பருத்தி, மல்லிகை கொடிக்கூட இருந்தது. ஆனால்  ஒரு ரோஜாச் செடிக்கூட இல்லையே என்று அவள் மனம் தன் போக்கில் நினைத்துக்கொண்டிருக்க.

அவன் தன்வசமிருந்த சாவியால் கதவைத் திறந்தான். அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிவதைக்கண்டு

“அப்பாவும் அம்மாவும் மாத்திரைப்போட்டுட்டு தூங்குறவங்க, அவங்க தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு எக்ஸ்ட்ரா சாவி வச்சிருப்பேன்,” என்றான் அவள் மனதைப் படித்தவன்போல,

‘மனசுல நினைக்கிறது அவ்ளோ அப்பட்டமாவா முகத்துல தெரியுது?’ என்று மதி வியந்தாள்.

உள்ளே சென்றதும் கிச்சனுக்கு அருகில் இருந்த விருந்தினர் அறையைக் காட்டி

“இந்த ரூமை யூஸ் பண்ணிக்கோ” என்றுவிட்டு எதிரிலிருந்த அறையைகாட்டி,

“அது என்னோட பேரண்ட்ஸ் ரூம், தூங்கியிருப்பாங்க. இப்ப டிஸ்டர்ப் பண்ணவேண்டாம் காலையில பார்க்கலாம்” என்றவன்,

“சரி ஃபிரெஷ் அப் ஆகிக்கோ.. தூங்கிடாத, ரெண்டு நிமிஷத்துல வரேன்,” என்று ஆர்டர் போட்டுவிட்டு, வளைந்து திரும்பிய படிகளில் ஏறி மேலே சென்றான்.

அவன் சொன்னது போலவே சீக்கிரம் திரும்பி வந்தவன்,. டி-ஷர்ட் மற்றும் ட்ராக் பாண்ட்டிக்கு மாறியிருந்தான்.வழக்கமான விரைப்பான ஆஃபீசர் தோரணையில்லாமல் பக்கத்துவீட்டுப் பையன் போல இயல்பாக இருந்தான். வயது குறைந்து இளைமையாகவும் தெரிந்தான்.

மதி அவனைப்பார்த்து வாய்பிளந்து நின்றாள். அவளது பழைய ஆதி சாரைப் பார்ப்பது போலவே இருந்தது.

அவள் மலைத்து நிற்பதைப்பார்த்து முகத்துக்கு முன் விரல் சொட்டுக்கினான், அவள் சட்டென்று தன்னுணர்வு பெற்றாள்.

“மதி.. வா சாப்பிடலாம்,”

‘சாப்பாடு’ என்ற வார்த்தை குயிலின் கீதமாக அவள் காதுகளில் ஒலித்தது. அதன் பிறகுதான்  தான்  எவ்வளவு பசித்திருக்கிறோம்  என்பதே மதிக்குத் உறைத்தது.

“இவரோட இருந்தா எனக்கு பசிக்கூட மறந்துடும் போல” என்று அதிசயத்தாள்.

அவளை அமரவைத்து உணவு பரிமாறியவன்

“சாரி ஸ்பெஷலா ஒன்னும் பண்ணல..”

“பரவால்ல சார், உங்களுக்கு மட்டும் வச்சிருப்பாங்க ஆனா இப்போ என்னோட ஷேர் பண்றமாதிரி ஆகிடுச்சி..”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல, அம்மாக்கள பத்தி தெரியாத.. எப்பவுமே நம்ம கெப்பாசிட்டிய விட அதிகமாத்தான் வைச்சிருப்பாங்க..” என்று தன் பளீரிடும் பற்களைக்காட்டி சிரித்தான்.

இந்த சிடுமூஞ்சிக்கு சிரிக்ககூட தெரியுமா? என்று வியந்தாள்.

டைனிங் டேபிளில் சாதம், சாம்பார் மற்றும் வெண்டைக்காய் பொரியல் இருந்தது. பொரியலைப் பார்த்ததும் மதியின் முகம் சுருங்கியது.

அவள் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் போயும் போயும் வெண்டைக்காய்தான் இருக்க வேண்டுமா என்று முகம் சுளித்தாள்.

ஆனால் ஆச்சரியதக்கவிதமாக ஆதி அவளுக்கு வெண்டைக்காய் வைக்காமல்,வேறொரு டப்பாவிலிருந்து சிப்ஸ் எடுத்து வைத்தான்.

“உனக்கு வெண்டைக்காய் பிடிக்காதுல்ல,” என்று அவன் சாதாரணம்போல் சொல்ல, மதி அதிர்ச்சியில் உறைந்தாள்.

‘எனக்கு வெண்டைக்காய் பிடிக்காதுங்கற வரைக்கும் ஞாபகம் இருக்கு, அப்புறம் என்னை மட்டும் தெரியாத மாதிரி ஏன் நடிக்கனும்?‘ என்று வியந்தாள்.

அவள் திகைத்த முகத்தைப் பார்த்தவனின் புருவங்கள் சுருங்கியது.

“நான் அப்படி என்ன சொல்லிட்டேன்? ஏதோ உலக அதிசயத்த பார்க்கிற மாதிரி பார்க்கிற?”

“இல்லை… நீங்க இப்ப சொன்னீங்கல்ல, எனக்கு வெண்டைக்காய் பிடிக்காதுன்னு…”

“ஆமா அதுக்கென்ன ..?”

“அது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

அவளுடைய பார்வை அவன் முகத்திலேயே நிலைத்திருந்தது.

“இதைக்கண்டுபிடிக்க சி.பி.ஐ-யா வருவாங்க? நீ முகத்தைச் சுளிச்சதைப் பார்த்தாலே போதுமே… பேசிக் காமன் சென்ஸ் இருக்கிற யாருமே இதைக் கண்டுபிடிச்சிருப்பாங்க,” என்றான் ஏதோ ஒரு முட்டாளுக்கு விளக்குவதைப் போன்ற தொனியில்,

அவளுடைய முகம் ஏமாற்றத்தில் வாடியது. உதட்டைப் பிதுக்கி

‘உண்மையை ஒத்துக்கிறதுல அப்படி என்ன கௌரவக் குறைச்சல் இவருக்கு?’ என்று  மனதிற்குள் அவனைப் சாடினாள்.

இருவரும் அமைதியாகச் சாப்பிட்டனர். ஆனால் ஆதியின் மனதுக்குள் ஒரு பெரிய போரே நடந்து கொண்டிருந்தது.

‘அவளோட விருப்பு வெறுப்புகள் எனக்கு எப்படித் தெரியுது? அவள் கண்களைப் பார்த்தாலே மனசைப்படிக்க முடியுதே.. அவளோட குரல், முகம் எல்லாம் ஏன் இவ்வளவு பரிச்சயமா இருக்கு?’ என்று யோசிக்க யோசிக்க அவனுக்குத் தலைவலிக்கத் தொடங்கியது,

மண்டையைப் பிளப்பது போன்ற வலியில் அவன் தலையைப் பிடித்துக்கொண்டு சுருண்டுவிழுந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!