Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

47. Ashoka - உன்னாலே உனதாகிறேன்

09 அசோகாவின் உன்னாலே உனதாகிறேன் !

உன்னாலே உனதாகிறேன்! 9

இருளின் ஆதிக்கம் குறைந்து கிழக்கே சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தது. பொன்னொளி படரும் சூழல் மாற்றத்தில் தூக்கம் கலைந்தவன் கண்களைக் கசக்கிப் பார்த்தான். அவன் அறையின் அன்று சூழலும் முற்றிலும் மாறி இருந்தது.



Advertisement

தனது அறை என்று அவன் சொன்னது இப்போது அவர்களது அறையாகி இருந்தது. மெல்ல விழித்தெழுந்தவன் கண்கள் கண்டது அவன் கட்டிலில் மகனும் மனைவியும் உறங்கும் அழகைத்தான்.

‘அடேய் குமரா, இதுக்குப் பேருதான் ஜாக்பாட் போல. அவனவன் கல்யாணம் குழந்தைன்னு ஒரு குடும்பமா மாற, நூறு குட்டிக் கர்ணம் அடிக்கிறாங்க. அத காப்பாத்த அதுக்கு மேல நாக்குதள்ளிப் போறாங்க. உனக்கு மட்டும் எல்லாம் மாஜிக் பண்ண மாதிரி நடந்துடுச்சு.’ என அவனுக்கே ஒரு முறை மகிழ்வாய் சொல்லிக் கொண்டான்.

Advertisement

Advertisement

பல குழப்பங்கள் கடந்து இன்று குடும்பமாய் இவர்கள் இருப்பது இவனது நாட்களுக்கு இன்னுமே இனிமை சேர்த்தது. வாரம் ஒன்று கடந்த பின்னும் இன்னும் அவனுக்கு ஆச்சர்யம் தான். அவன் உலகமே அவர்களால் வானவில் வண்ணங்களாய் மாறிப் போயிருந்தது. அது இவனுக்கு இதத்தையும் மகிழ்வையும் தாராளமாய்த் தந்தது.

‘மகிழா’, ‘பூவினி’ எனும் சத்தம் அடிக்கடி குமரனின் காதுகளில் எதிரொலிக்க அதுவே அவனுக்குள் குறுகுறுத்தது. அவனின் தினசரிகளில் அவர்களின் பங்கு சிறிதேனும் இருந்தது. சிறுசிறு செய்கைகள் என்றாலும் அவன் முகம் சிறு புன்னகை பூக்கும்.

Advertisement

இரவில் பலமுறை அவன் தூக்கத்தைக் குழந்தையின் அழுகுரல் கலைக்கும். முதலில் இதிலெல்லாம் தடுமாறினாலும் இப்போதெல்லாம் பழகிக் கொண்டான்.

பூவினி மகிழனுக்குப் பாலூட்டி உறங்க வைத்து அவளும் உறங்கிப் போவாள். ஆனால் குமரனுக்கோ அவர்களின் சத்தம் ஒய்ந்த பின்னும் மீண்டும் அவன் உறங்க அடுத்த ஒரு மணி நேரம் ஆகும்.

சற்றே அவன் உறங்கியது போல் உணரும் முன்னே மீண்டும் அழுகுரலால் அவனை எழுப்பிவிடுவான் மகிழன்.

நேற்றிரவும் இப்படித்தான். நள்ளிரவில் மகிழன் முழித்து அழத் தொடங்க இவனும் இவனது மர பெஞ்சிலிருந்து எழுந்து கொண்டான். தூக்கம் கலையாத கண்களுடன் இவன் பார்க்க பூவினி நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் காதுகளை மகிழனின் சத்தம் சென்றடையவில்லை. குமரன் எழுந்து கட்டிலின் அருகில் சென்று முதலில் மகிழனை எட்டிப் பார்த்தான்.

பூவினியை விட்டுத் தள்ளிப் படுத்திருந்தவனை மெல்ல அருகே அமர்ந்து தட்டிக் கொடுத்தான். ஆனாலும் அவன் அழுகை குறைந்தபாடில்லை.

பசிக்கு அழும் குழந்தை எங்கு இவனது இதமான தட்டுக்கு உறங்குவது? இன்னும் மகிழனின் அழுகை கூட அவனைத் தூக்கிக் கொண்டான் குமரன்.

கடந்த ஒருவாரமாகக் குமரன் பார்த்ததெல்லாம் இவனின் சிறு சிணுங்களுக்கே எழுந்து அமரும் பூவினியைத்தான். இன்று ஏனோ அவளிடம் சிறு அசைவு கூட இல்லை.

“மகிழா, அச்சோ அழாதடா. அப்பாவுக்குப் பாடவெல்லாம் வராது. பாடும் தெரியாது. அப்பத்தாவத்தே கேக்கணும் பாட்டுக்கு. நீ அப்பா தட்ட தட்ட தூங்குடா.” என அவனுடன் பேசிக் கொண்டே சில அடிகள் நடந்தான்.

மகிழனின் பசிக்கு இதெல்லாம் ஈடாகாமல் போக, குமரன் கட்டிலின் மறுபுறம் பூவினியின் அருகில் வந்தான்.

அவளோ மகன் குரல் கேட்டும் விழிக்காமல் தூக்கத்தில் ஆழ்ந்திருக்க, “பூவினி, பூ…வினி” எனக் குரல் கொடுக்க அவளுக்கு இவன் குரலும் எட்டவில்லை.

“வினி” என மெல்ல அவளின் கைகளில் தட்ட, அடுத்த நொடி எழுந்து அமர்ந்திருந்தாள்.

“ஹ்ம்ம், அத்தான் என்ன? என்னாச்சு?” எனப் பதறி எழுந்தவளின் முகத்தில் கலவரம். “ஒண்ணுமில்ல பூவினி. தம்பி அழுதான். அவ்ளோதான். பசிக்குது போல.” என இவன் மெதுவாய் சொன்னாலும் அவளின் உப்பிடல் நடுக்கமும் பதட்டமும் குமரனுக்குப் பார்க்கப் பார்க்க பாவமாக இருந்தது.

இந்நேரம் அவளுக்கு ஆறுதல் தேவை என்றாலும் மகிழனின் பசிக்கு அவனின் அம்மா அவசியம் என்பதால் அவனை அவளின் மடியில் கிடத்தினான். இனி அவள் பார்த்துக் கொள்வாள் என மீண்டும் அவனின் படுக்கைக்கு வந்து மறுபுறம் திரும்பி படுத்துக் கொண்டான்.

இதுதானே இவனது நடைமுறை. அவள் பாலூட்டும் நேரம் எல்லாம் இவன் அறையில் இருந்தாலும் அவனாகவே ஒதுங்கி கொள்வான்.

திருமணம் முடிந்த அன்றிலிருந்தே இருவரும் ஒரே அறையில் இருக்க, அவளைக் குமரன் ஒருநாளும் சங்கடப் படுத்தாமல் இருந்து கொள்வான். இருவரின் இயல்பான மாற்றத்திற்காக இவனும் பொறுமையாக எல்லாவற்றையும் கையாண்டான்.

மகிழனுக்கு அதிகமாகப் பசித்திருக்கும் போல ஏனோ இன்று அவனின் அழுகை சற்றே அதிகமாக் கேட்டது.

“மகிழா, அழாத டா. இந்தா, இந்தா அம்மா வந்துட்டேன். மகிழன் அம்மா மடிக்கு வந்துட்டானா. அம்மாவும் இப்ப ரெடி. அச்சோ அழாத டா.” சிறு குரலில் பூவினி பேசியதெல்லாம் இவன் காதுகளில் விழுந்தாலும் அவர்களின் எந்தப் பேச்சுக்கும் அசையாமல், தலையைக் கூட அசையாமல் படுத்திருந்தான்.

குமரனின் சிறு அசைவும் அவளின் கவனத்தில் பதிந்து அவர்களின் தனிப்பட்ட நேரத்தில் இடையூறு செய்யும் என்பதால் திருமணமான நாளிலிருந்தே அவன் அந்த அறையில் ஓரமாக ஒதுங்கியே இருக்கப் பழகிக் கொண்டான்.

அடுத்து இந்து நிமிடமும் சிறு அழுகையும் சிணுங்கலுமாக மகிழன் இருக்கப் பூவினி மென் குரலில் தாலாட்டு பயாடிக் கொண்டிருந்தாள்.

அவள் பாடுவது கேட்கவும் குமரன் காதுகளைத் தீட்டிக் கேட்க அவளோ “முல்லைப்பூ புன்னகையில் முற்றும் எனைத் தொலைத்தேனே. தொல்லையது தாராது கண்மணியே கண்ணுறங்கு. எச்சிலான முத்தமது கோடான கோடி பெரும். இச்சகமாழப் பிறந்தவனே கண்ணே நீ கண்ணுறங்கு. ஆராரோ ஆரிராரோ என் கைவிளக்கே கண்ணுறங்கு.” எனப் பாட, அவனுக்கு அந்த உணர்வை கையாளவே முடியவில்லை.

இதுபோலத் தாலாட்டேல்லாம் அவன் அருகிருந்து கேட்டதில்லை. வள்ளியம்மாள் சரவணன் அன்னை பிள்ளைகள் அனுஷா மற்றும் அரவிந்தனுக்குப் பல பாடல்கள் பாடுவதுண்டு.

கண்ணால் பார்ப்பதாலோ ஏனோ அவன் அதைப் பலமுறை கடந்து விட்டான். அனால் இன்று அருகிலே அவன் மனைவி மகனுக்குப் பாட இவன் மீண்டாம் மனிதன் போல ஒதுங்கியே இருக்கும் நிலை.

தாய் தந்தையை இழந்து அப்பத்தா ஐயாவிடம் வளத்தவனுக்கு இப்போது அந்தப் பாடலும் மடியும் தாலாட்டும் அவனுக்கும் வேண்டும் போலிருக்கக் கண்களை இருக்க மூடி உணர்வுகளை மறைத்து உறங்க முயன்றான்.

ஆனாலும் பாடல் பலமணி நேரமாய் இவன் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருக்க எப்போதோ அவனறியாமல் உறங்கிப் போனான்.

உறங்கி விழித்து மீண்டும் உறங்கி எனக் குமரன் நன்கு தூங்கி ஓய்வெடுக்கும் முன்னே காலை சேவலின் கூவலில் அந்த நாளின் ஓட்டத்தைத் தொடங்கி விடுவான்.

இதெல்லாமே குமரனுக்குப் புதிது. ‘எப்படி இவளால முழிச்சு முழிச்சு தூங்க முடியுது?’ எனும் கேள்வியே அவன் முன் பெரிதாக நின்றது. மாற்றங்கள் எல்லாமே புதிதாகப் பழகிக் கொண்டான்.

திருமணத்திற்கு என எடுத்த விடுமுறை முடிந்து இன்றிலிருந்து மீண்டும் கல்லூரி செல்ல வேண்டும். அது தந்த புத்துணர்வோடு சில்லென்ற விடியலையம் சில நொடிகள் ஆழ்ந்து அனுபவித்தான்.

பூவினியும் மகிழனும் நல்ல உறக்கத்தில் இருக்கக் குமரன் எழுந்து ஓசை எழுப்பாமல் கதவை சாற்றிவிட்டு மெல்ல வெளியில் வந்தான். முருகய்யா அறையில் விளக்கு எரிந்து கொண்டிருக்கக் குமரனோ எட்டி உள்ளே பார்த்தான்.

வள்ளியம்மாள் கணவரின் முட்டிக்கு மருந்து தேய்த்துக் கொண்டிருக்கப் பார்த்தவன் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து கொல்லை புறம் நோக்கி நடந்தான்.

காலைக் கடன்களை முடித்து அவனின் தோட்டத்திற்குத் தண்ணீர் திறந்து விட்டு உள்ளே வந்தவனைக் காபி வாசமே வரவேற்றது. கடந்த சில ஆண்டுகளாகக் காலை காபி கலக்குவது குமரனது வேலை தான்.

சமையலறை வாசலுக்கு வந்தவன் எட்டிப் பார்க்க பூவினி எதோ சமைப்பது தெரிந்தது. உள்ளே நுழைந்தவன் எட்டிப் பார்க்க, அவள் ஏதோ சமையலுக்குத் தயார் செய்து கொண்டிருந்தாள்.

“நா வந்து காபி போட்டிருப்பேயில்ல. நீ போய்த் தூங்கு. நேத்தும் ஒழுங்கா தூங்கலதானே.”

“இந்தாங்க.” என அவன் கைகளில் காபியைக் கொடுத்தவள் அவன் கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்லவும் இல்லை, அவனைக் கண்டு கொள்ளவும் இல்லை.

குமரன் காபியுடன் வெளியில் வர அப்போது தான் வள்ளியம்மாளும் அவர் அறையிலிருந்து முற்றத்திற்கு வந்தார்.

“என்ன அப்பத்தா உனக்குக் காப்பிக் குடுக்கலயா? எடுத்தாரவா?”

“பேத்தி கொண்டாருவா. நீங் குடிடா.” என்றவர் குரலில் இழையோடிய சந்தோசம் அவர் முகத்திலும் மிளிர்ந்தது.

“என்னத்தா பேச்செல்லாம் ஒரேடியா பொங்குதே. இம்புட்டு நாளும் நாங் குடுத்த காப்பிதே குடிச்ச. ஹ்ம்ம், நெனவிருகட்டும்.” என்றவன் முகத்தைத் திருப்ப,

“ஆமா குடுத்த, கழனித் தண்ணியாட்டம் ஒரு காப்பி. எங் கெரகம் அப்ப அதையும் குடுச்சேன்.” என வள்ளியம்மாள் சொல்ல, அந்நேரம் அவருக்கான காபி கோப்பையுடன் வந்தாள் பூவினி.

கோப்பையைக் கையில் வாங்கியவர் நாசியின் அருகே கொண்டு சென்று இழுத்து பெரு மூச்சோடு அதன் வாசத்தை நுகரப் பூவினியும் குமரனும் அவரையே பார்த்தபடி நின்றனர்.

“அடேய், இப்புடி மணக்கணும் காபின்னா. குடிச்சா அந்தக் கசப்பு நாக்குல நிக்கணும். சும்மா பொடியப்போட்டு இனிப்பக் கொட்டி தண்ணிய ஊத்தி தூக்கியாருவியே அது மாதிரி இல்ல, எம் பேத்தி போட்டார காப்பி.”

“இதெல்லாம் அநியாயம் த்தா. கர்ணாண்னே இருக்கப்ப, …” என்றவன் வார்த்தை அப்படியே அந்தரத்தில் நிற்க, சட்டெனப் பூவினியின் பக்கம் பார்வையைத் திருப்பினான்.

“அடேய் காபி ஆறமுன்ன குடிச்சுட்டு எந்துருச்சு காலேசுக்கு கெளம்புற வழியப் பாரு. காலையிலே வெட்டிக் கத பேசிகிட்டு.” என்றவரின் வார்த்தைகளில் சற்றே கவனத்தைச் சிதறியவன் மீண்டும் அவளைப் பார்க்க, பூவினி உள்ளே சென்றிருந்தாள்.

“நானும் நல்லாத்தே போடுவேன்னு சொல்ல வந்தே. ஹ்ம்ம் எம் பெரும உனக்கு எங்க தெரியப் போகுதுத்தா.” குமரன் பேசியபடியே தலையைத் திருப்பி எட்டிப் பார்க்க பூவினி கண்களைத் துடைத்தபடி நிற்பது தெரிந்தது.

தான் கருணாவின் பெயரை சொல்லாமல் தவிர்த்திருக்கலாம் என்று குமரன் இப்போது நினைத்தாலும் சிந்திய வார்த்தைகள் எல்லாம் கைவிட்டு சிதறியவைதானே.

பின்னிருந்து பார்க்கத் தெரியாவிட்டாலும் பூவினி அழுகிறாள் என்பது தெரிய,

“இருத்தா செத்த. இந்தா வாரேன்.” என்றவன் காப்பிக் கோப்பையுடன் உள்ளெழுந்து அவளை நோக்கிப் போனான்.

குமாரனைக் கண்டதும் பூவினி சற்றே சுதாரிக்க, இவனும் எதுவும் தெரியாதவன் போலப் பேசத் தொடங்கினான்.

“என்ன செய்யிறீங்க? நான் என்னமும் காய் நறுக்கித் தரவா? சாம்பாரா வைக்கிறிங்க?” என அவள் பதில் சொல்ல அவகாசம் கொடுக்காமல் கேள்விகளை அடிக்கினான்.

“இல்ல, நான் செஞ்சுருவேன்.” என்றவள் வேறுதுவும் பேசாமல் தன் வேலையைச் செய்யத் தொடங்கினாள்.

பூவினி என்றும் வாயாடி இல்லைதான். ஆனாலும் குமரனுக்குத் தெரிந்து அவள் கலகல பேர்வழிதான். ஆனால் இப்போதோ கேட்கும் கேள்விக்குக் கூட அவளின் பதில்கள் ஒற்றை வார்த்தையில் மட்டுமே.

அவளின் நிலை தெரிந்தவன் என்பதால் அவளுக்கான நேரத்தைக் கொடுத்து ஒதுங்கி கொண்டான்.

வாலிப வயதின் சிக்கல்களையும் கலக்கங்களையும் கல்லூரியில் தினம் சந்திக்கும் குமாரனால் பூவினியின் மனநிலையை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் அவனாகவே அவளுக்கான நேரத்தைக் கொடுத்து ஒதுங்கி நின்று கொண்டான்.

சில நேரங்களின் அன்பின் மிகுதி கூட நம்மை அழவைத்துக் கவலையில் ஆழ்த்திவிடும். அப்படி முழ்கடிக்கும் அன்பை விட, ஒருவருக்குச் சுதந்திரம் தரும் தைரியம் என்றுமே சிறப்பானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!