Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மிளகாய் பழுத்தது

மிளகாய் : 3

மிளகாய் : 3

“என்ன டி இது? பெரிய லக்கேஜ் ஆ இருக்கு”

“ஆமா, எங்க மூணு பேரோட டிரஸ் எடுத்து வெச்சுருக்கேன் “

“எதுக்கு எடுத்து வெச்சுருக்க?, என்ன அயர்ன் பண்ணனுமா?”



Advertisement

“இல்ல, நாங்க மூணு பேரும் ஊருக்கு போறோம் “

“என்ன சொன்ன?”

“நான் சொன்னது உங்க காதுல சரியா தான் விழுந்துச்சு நாங்க மூணு பேரும் ஊருக்கு போறோம்ன்னு சொன்னேன்”

Advertisement

“ஊருக்கு போறியா?” நான் தான் வேணாம்ன்னு சொன்னேனே “

Advertisement

“நீங்க வேணாம்ன்னு சொன்னா நான் ஏங்க போகாம இருக்கனும் “

“அப்போ என்னை எதிர்த்துட்டு போலாம்னு இருக்க, அப்படி தான?”

“ஆமாங்க, நானும் எத்தனை வருஷம் இங்கயே அடைஞ்சு கிடைக்கறது, எங்க அப்பா அம்மாவ பாக்கணும்ன்னு ஆசையா இருக்காதா? நீங்க உங்க அம்மா அப்பா வருஷம் ஒரு தடவை போய் பாத்துட்டு வரிங்க தான நான் ஏதாச்சும் சொல்றேன்னா, ஆனா நான் ஊருக்கு போகணும்ன்னு சொன்னா மட்டும் ஏன் விடவே மாட்டேங்கறீங்க? அதான் இந்த தடவை நான் ஊருக்கு போக தயார் ஆகிட்டேன் “

Advertisement

“அப்போ எனக்கு இன்னிக்கு சாப்பாடு?”

“அதுக்கு எல்லாம் கவலை படாதீங்க, செஞ்சு ஹாட்பாக்ஸ்ல வெச்சுருக்கேன் “

“இன்னிக்கு இருக்கு நாளைக்கு “

“பத்து வகையா தொக்கு பண்ணி வெச்சுருக்கேன், ரைஸ் மட்டும் வெச்சுக்கோங்க “

“காலைல டிபன்?”

“ஹோட்டல் கடை இருக்குல்ல “

“ஓஹோ, எத்தனை நாள் இருக்க போறீங்க “

“தெரியல”

“ஊருக்கு எப்படி போவீங்க “

“ட்ரெயின் ல”

“நான் வந்து ட்ரெயின் ஏத்தி விட மாட்டேன்”

“பரவால்ல நான் பாத்து ஏறிக்கறேன் “

“நான் வந்து ஸ்டேஷன்ல கூட விட மாட்டேன்”

“பரவால்ல ஆட்டோ சொல்லிருக்கேன் வந்துரும் “

“ஆட்டோக்கு காசு?”

“எங்கிட்ட இருக்கு”

“நான் வீட்டு செலவுக்கு குடுப்பேனே அதுல மிச்சம் பிடிச்சதா?”

“இல்ல, எங்க அம்மா மூணு வருஷம் முன்னாடி என்னை பாக்க வந்தாங்களே அப்போ குடுத்துட்டு போன காசு இருக்கு, நீங்க குடுத்த காசுல மிச்சம் பிடிச்சது எல்லாம் அஞ்சரை பெட்டி பக்கத்தில ஒரு டப்பா உள்ள வெச்சுருக்கேன் வேணும்ன்னா எடுத்துக்கோங்க, ஆட்டோ வந்துருச்சு நான் கிளம்பறேன், ஹரி, ஆராதனா சீக்கிரம் வாங்க ” என அவர்களை அழைத்து கொண்டு ஆட்டோவில் ஏறினார் உமா. உமாவைத் தொடர்ந்து ரெண்டு வாண்டுகளும்,

“பாய்ப்பா..”என்று சொல்லிக்கொண்டே சென்றது.

“டேய் ஹரி, நீயுமா போற அப்பா மேல பாசம் இல்லையா?”

சங்கரின் காதின் அருகில் வந்த ஹரி,

“அப்பா உங்க மேல பாசம் எல்லாம் இருக்கு, ஆனா எனக்கு என்ன வேணுமோ அத செஞ்சு தானப்பா ஆகணும், நீங்க அன்னிக்கு சொன்னிங்களே நமக்கு வேணுங்கறத தான் நம்ம செய்யணும்ன்னு, அத தான்ப்பா இப்போ பண்றேன் ” என ஓடிச்சென்று ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொள்ள ஆட்டோ மின்னல் வேகத்தில் அந்த இடத்தை விட்டு மறைந்தது. சங்கர் நடு ஹாலில் அனாதை போல் நின்று கொண்டு இருந்தார். வெளியில் இருந்து பார்க்க பாவமாக தான் இருந்தது, ஆனால் இன்னும் உமாவின் மீதுள்ள கோவம் தீரவே இல்லை. உமாவை மனதின் உள்ளேயே திட்டி தீர்த்தார்.

‘என்ன திமிர் இருக்கனும் அவளுக்கு, நான் வேணாம்ன்னு சொல்லியும் கிளம்பி போறா, இவ இல்லாம என்னால வாழ முடியாதுன்னு நினைச்சிட்டாளா, பொம்பள துணை இல்லாம ஒரு ஆம்பளை இந்த உலகத்துல இருக்க முடியும், ஆனா ஒரு ஆம்பள துணை இல்லாம தான் இந்த பொம்பளைங்களால உலகத்துல வாழ முடியாது, போனா போய்ட்டு போறா திருப்பி இங்க தான வரணும், அப்போ வெச்சுக்கறேன் ‘ என வேகமாக தன் ஆபீஸ் பேக்கை எடுத்து கொண்டு பைக்கை ஸ்டார்ட் செய்தார். ஸ்டார்ட் செய்த பிறகு தான் வீட்டை பூட்ட மறந்தது நினைவுக்கு வந்தது. எப்போதும் உமா வீட்டில் இருப்பார் வீடு பூட்ட வேண்டிய அவசியமில்லை ஆனால் இனி தினம் சங்கருக்கு இதே நிலைமை தான். பத்து நாள் சங்கருக்கு திண்டாட்டம் உமாவிற்கு கொண்டாட்டம். வேகமாக இறங்கி ஓடிச்சென்று பூட்டிவிட்டு ஆபீஸ் கிளம்பினார் சங்கர்.

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் தன் சொந்த ஊரான ஈரோடு செல்வதற்கான ட்ரெயினை எதிர்பார்த்து உமாவும் குழந்தைகளும் காத்திருந்தனர். அரை மணி நேரம் ட்ரெயின் தாமதம் என அறிவிப்பு வந்தது.

“அம்மா என்னம்மா ட்ரெயின் லேட்ன்னு சொல்றாங்க ” என ஹரி கேட்க

“நானும் உன் கூட தான ஹரி இருக்கேன், லேட்ன்னா லேட் தான்”

” அது வரைக்கும் என்னம்மா பண்றது”

“எனக்கும் தெரிலயே, இங்க ஓடி புடிச்சா விளையாட முடியும், அப்படியே உக்காந்திருக்க வேண்டியது தான், அரை மணி நேரம் தான சீக்கிரம் போயிரும் “

“அரை மணி நேரம் தானா? அர்ர்ர்ரை மணிஈஈஈ நேரம்மா “

“சரி டா ஹரி, நீயே சொல்லு என்ன பண்ணலாம் “

சிறிது நேரம் யோசித்தவன்,

“ஐடியா, அம்மா தண்டவாளத்தை தாண்டி தாண்டி விளையாடலாமா?”

“அப்படியே ஒன்னு முதுகுல வெச்சேன் வெய், விளையாட்டா இது”

“இதுல என்னம்மா இருக்கு”

“இதுல என்ன இருக்கா, ட்ரெயின் வர தண்டவாளம் டா, என்ன நக்கலா?”

“அதான், ட்ரெயின் அரை மணி நேரம் வராதுன்னு சொல்லிட்டாங்களே அப்றம் என்னம்மா?”

“அடப்பாவி டேய், ட்ரெயின் லேட்ன்னு தான் சொல்லிருக்காங்க”

“சரி விடு, நீ வரலைன்னா பரவால்ல, பாப்பாவை கூட்டிட்டு போறேன் விளையாட” என ஆராதனாவின் கையை இழுத்தவனின் கைகளை உமா கெட்டியாக பிடித்து கொண்டார்.

“டேய்.. டேய்.. டேய்..பாப்பா கையை விடு” என கைகளை பிரித்து விட்டார் உமா.

“கொஞ்ச நேரம் அமைதியா இரு டா, உன்ன கூட்டிட்டு வந்தது தப்பா போச்சு, உங்க அப்பா பேச்ச கேட்டுட்டு வீட்லயே இருந்துருக்கலாம் கம்முன்னு, உன்ன கூட்டிட்டு ஊருக்கு போயிட்டு வந்து சேர்றதுக்குள்ள என் ஜீவன் போய்டுமே “என தலையில் அடித்து கொண்டார்.

ஹரி இங்குட்டும் அங்குட்டும் நடந்து கொண்டே தான் இருந்தான். அவனை கண்காணிப்பதே உமாவிற்கு பெரிய வெளியாக போய் விட்டது. ஆராதனா அமைதியின் திருவுருவமாய் அமர்ந்து அண்ணனின் ஷேஷ்ட்டைகளை பார்த்து கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்தில் பொறுமை தாங்க முடியாமல் உமா அவன் காதை திருகி,

“இப்போ இங்க அமைதியா உக்காற போறியா, இல்லை அப்பாக்கு போன் பண்ணி வந்து உன்ன மட்டும் கூட்டிட்டு போக சொல்லட்டுமா ” என முறைத்தார்.

“இல்லம்மா, நானும் ஊருக்கு வரேன் “

“அப்போ அமைதியா உக்காரு, இல்லன்னா உன்ன மட்டும் இங்கயே விட்டுட்டு நானும் ஆராதனா மட்டும் ஊருக்கு போய் அம்மாயி தாத்தாவோட ஜாலியா இருப்போம்” என அவனை அமர வைத்தார் உமா.

ஐந்து நிமிடம் அமைதியைக் கடைபிடித்தவன், மீண்டும் மெல்ல மெல்ல சேட்டை செய்ய ஆரம்பித்தான்.

‘ஐயோ, இவன் தொல்லை வேற தாங்க முடியலையே, இவனை என்ன சொல்லி அமைதி ஆக்கறது ‘ என சில வினாடிகள் யோசித்தவர், உடனே தன் போனை எடுத்து நம்பரை அழுதுவது போல் அவன் முன் பாவனை செய்துவிட்டு காதில் வைத்தார்.

ஹரியும் யாருக்கு தான் அம்மா பேச போகிறார் என ஆர்வமாய் காத்திருந்தான். ஹரி கவனிக்கறானா என்பதை உறுதி செய்துவிட்டு,

“ஹான், ஹெலோ ” என பேச தொடங்கினார் உமா.

“நான் உமா தாங்க பேசறேன், ட்ரெயின் அரை மணி நேரம் லேட், நாங்க மூணு பேரும் உக்காந்துட்டு தான் இருக்கோம், பாப்பா அமைதியா தா இருக்கா, ஆனா இந்த ஹரி தா சேட்டை பண்ணிட்டு இருக்கான் ” என சங்கரிடம் சொல்லுவது போல் பாவனை செய்து விட்டு ஓரக்கண்ணில் ஹரியைப் பார்க்க அவன் பாவமாக முகத்தை வைத்து கொண்டு இருந்தான்.

“எது?வரிங்களா? எதுக்கு?, இல்லை இல்லை வேணாம், ஹரி பாவங்க “

“அம்மா,அப்பா என்னம்மா சொல்றாரு “

“உன்ன மட்டும் கூட்டிட்டு போறேன்னு சொல்றாரு டா “

“அம்மா வேணாம்மா ப்ளீஸ் மா “

“சேட்டை பண்ணாம இருப்பியா?”

“ஹான் இனி சேட்டை பண்ண மாட்டேன் மா ” என அவன் சற்று அழுகும் தோரணையில் கூற விட்டுவிடலாம் என்று தான் உமா யோசித்தார். இருந்தாலும் இவன் சங்கர் பையன் ஆயிற்றே அதான் உமாவும் விடவில்லை இன்னும் இரண்டு பிட்டை சேர்த்தி போட்டார்.

“என்னங்க ஹரி அமைதியா இருக்கேன்னு சொல்லிட்டாங்க, என்னது கிளம்பிட்டிங்களா? வேணாம் வேணாம் ஹரி சமத்தா உக்காந்துட்டு தான் இருக்கான், ஆமாங்க பொய் இல்லை, உண்மைய தான் சொல்றேன், அப்பா உன்ன நம்பல, கிளம்பி வந்து கூட்டிட்டு போறாராமா ஹரி “

“அம்மா போன் எங்கிட்ட குடுங்க நான் அப்பாட்ட சொல்றேன் ” போனை அவன் கையில் ஒப்படைக்க போன உமா ‘ஐயோ, இது பாவனை தானே’ என்று ஒரு நிமிடம் சுதாரித்து கொண்டார்,

“இல்ல, இல்ல நானே பேசிக்கறேன் ” என சில வினாடிகளில் போனை வைத்து விட்டார்.

“அப்பா என்னம்மா சொன்னாரு”

“ஹரி அடம் பண்ணா போன் பண்ணு உடனே கிளம்பி வரேன்னு சொன்னாரு”

“சரிம்மா, நான் இனி அடம் பண்ணல “

“சரி “

ஹரி கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டான். பத்து நிமிடம் எந்த கூச்சலும், அலப்பறையும் இல்லாமல் உமாவிற்கு சற்று நிம்மதியாக இருந்தது.

சில நிமிடங்கள் கழித்து, ஹரி உமாவிடம் வந்து,

“அம்மா என்னை எதுக்கும்மா ஏமாத்துன ” என கோவமாக கேட்டான்.

“என்னடா உளறுற, நான் எங்க ஏமாத்துனேன் “

“எங்கிட்ட என்ன சொன்ன, அமைதியா இருந்தா அப்பாவை கூப்பிட மாட்டேன்னு தான சொன்ன?”

“ஆமா “

“நானும் அமைதியா தான இருந்தேன்”

“ஆமா ஆமா இப்போ இந்த பத்து நிமிஷம் தான் நிம்மதியா இருக்கு “

“அப்றம் எதுக்கு அப்பாக்கு போன் பண்ண?”

“நான் அப்பாக்கு எங்கடா போன் பண்ணேன், பகல் கனவு கண்டயா?”

“நீ போன் பண்ணாம எப்படி அப்பா ஸ்டேஷனுக்கு வருவாரு?”

“என்னடா சொல்ற?”

“அங்க பாரு அப்பா வந்துட்டு இருக்காரு”

திரும்பி பார்த்தவளின் கண்களை நம்ப முடியவில்லை, சங்கர் தான் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!