Skip to content
Post Views: 16,747
இலக்கணம் பெண்மையே!
அத்தியாயம் 4
சாலா நகரவே இல்லை. வேற வழி இல்லாமல் பிரகாஷ் தான் கதவை திறந்தது. கண்ணை காட்டி ஜாக்கிரதை என்று சொல்லும் முன்,
மாமா… கூவி கொண்டே தாவி அனைத்து கொண்டாள். மெரூன் நிற சிலிவ்லஸ் பிளவ்ஸ் போட்டு இருந்தாள். அவளின் தேகத்துக்கு தூக்கி காட்டியது.
Advertisement
“ஷாலினி…” என்று அதட்டியது பிரகாஷ் தான். அவனுக்கு நெஞ்செல்லாம் ஒரே படபடப்பு.
“உங்க அமெரிக்க பழக்கம் எல்லாம் விட்டுடுன்னு எத்தனை தடவை சொல்றது. சாலாக்கு நம்மளை தெரியும், ஊருக்கு பதில் சொல்ல முடியுமா…”என்று கண்ணை காட்ட. டிவி சீரியல் பார்ப்பது போல தான் சாலா பார்த்தாள்.
“ஆமா, ஷாலினி… உங்க மாமா சொல்றது சரிதான். அவருக்கு நீ எப்பவும் சின்ன பொண்ணுன்னு நினைப்பு தான். சும்மாவா, உங்க அம்மா, அப்பாகிட்ட, ஷாலு நான் தூக்கி வளர்த்த பொண்ணு, அவ பாதுகாப்பு என் பொறுப்புன்னு சொல்லி இருக்கார். நீ அவருக்கு குழந்தை மாதிரி, இல்லீங்க…” என்று அழுத்தி கேட்க.
Advertisement
முகம் கறுத்து போனான் பிரகாஷ். இப்படி தானே அத்தையிடம் வாக்கு கொடுத்தான். எல்லோருக்கும் தெரிந்தால் என்ன ஆகும். திரும்ப முடியாத பாதையில் சிக்கி கொண்ட பயம் அவனிடம்…
Advertisement
இருவரையும் அழுத்தமாக பார்த்த சாலா, வெளியேறி பக்கத்தில் இருக்கும் தோழி சுதா வீட்டுக்கு சென்று விட்டாள்.
திகைத்து நின்ற ஷாலினி, மெல்ல அவன் அருகில் வர, “நீ வீட்டுக்கு கிளம்பு ஷாலு…”
“ஏன் மாமா. அக்கா வெளிய போய்டாங்க தான. நாம எவ்வளவு பிளான் போட்டோம். இப்போ என்னை துரத்துறீங்க…” முகத்தை தூக்கி வைத்தாள்.
Advertisement
“பிளீஸ் ஷாலு… நீ மொத கிளம்பு. எனக்கு என்னவோ மாதிரி இருக்கு… நான் கொஞ்சம் தனியா இருக்கனும்…” என்ற பிரகாஷை புரியாமல் பார்த்தவள், முறுக்கி கொண்டு கிளம்பி விட்டாள்.
அவன் செய்வது தவறு என்று அவனுக்கு நன்றாக தெரியும். மனைவியை பார்க்கும் போது, வீட்டு ஆட்கள் நினைவு வரும் போது எல்லாம் குற்ற உணர்ச்சியில் குமைந்து போவான்.
சுதா வீடு வந்த சாலா எதையும் மறைக்க வில்லை. ஒன்று விடாமல் எல்லாவற்றையும் சொல்லி விட்டாள். எல்லா சூழ்நிலையிலும் அரவணைத்து செல்லும் நல்ல நட்பு இவர்களுடையது, மறைக்க தேவையும் இல்லை. அத்தோடு இவளுக்கு நல்ல மனதோடு உதவும் ஆள் இவர்கள் மட்டும் தான்.
சுதாவும், அவள் கணவன் வாசு தேவனும் அதிர்ச்சி குறையாமல் அமர்ந்து இருந்தார்கள். ஜெய பிரகாஷ் ஒரு ஜெண்டில் மேன். அவனின் பின் இப்படி ஒரு முகமா!…
“என்ன பண்ண போற சாலா?…” கலக்கமாக கேட்டாள் சுதா.
“வாசுண்ணா, நீங்க ஒரு வக்கீல். நீங்க தான் சொல்லணும் போலீஸ்ல புகார் கொடுக்கலாமா?…” சாலா கேட்க.
ஒரு நிமிடம் யோசித்தான். பின் “எந்த நல்லதும் நடக்காது சாலாம்மா…” என்றான் தெளிவாக.
“ஏன் அண்ணா. என் வாழ்க்கையே போச்சு. நம்பிக்கை துரோகம் பண்ணி இருக்கார். அவரை சும்மா விட சொல்றீங்களா?…” அழுகை வந்தது சாலாக்கு
“உன் மன காயத்துக்கு தீர்வு சட்டத்துல கிடையாது சாலா…”
“என்னங்க இப்படி சொல்றீங்க. குத்து கல்லு மாதிரி பொண்டாட்டி இருக்க, அத்தை மக கூட கூத்தடிக்கிற அவரை சும்மா விட சொல்றீங்களா?…” ஆவேசம் சுதாக்கு.
“சாலா, இவரை விடு. வா நாம போய் புகார் கொடுப்போம். புகார் எடுக்க மாட்டாங்களா என்ன?…”
“புகார் எல்லாம் எடுப்பாங்க. ஆனா, அதுக்கப்புறம் கேஸ் திசை மாறி போயிடும். நீங்க எதிர்பார்க்கிற நியாயம் கிடைக்காது…” வாசு தேவன் எடுத்து சொல்ல.
“கொஞ்சம் விலாவாரியாக சொல்லுங்க. ரெண்டு பொம்பளைங்க முழுச்சுட்டு நிக்கிறோம்…” சுதா எறிந்து விழுந்தாள்.
“ சாலா, அண்ணன் சொல்றத கொஞ்சம் நிதானமா கேளு. நீ கேஸ் குடுத்தா கேஸ் எடுப்பாங்க. உன் புருசனை, அந்த பொண்ணை விசாரிப்பாங்க. கொஞ்சம் அவமானமும், அசிங்கம் மட்டும் தான். வேற ஒன்னும் நடக்காது. அட்வைஸ் பண்ணி உன் புருசனை உன் கூட சேர்த்து வச்சு அனுப்பிடுவாங்க. இது கோர்ட் வரை கூட போகாது. சில குடும்ப சண்டைகள் போலீஸ் பார்த்துப்பாங்க. இந்த மாதிரி தான் இப்போ நிறைய நடக்குது. அப்படி இல்லையா நீ தான் விவாகரத்து குடுத்து ஒதுங்கணும்…”
சாலா ஒன்றும் புரியாமல் வாசுவை பார்க்க… சுதாவும் முழித்தாள். இவர்கள் பார்த்த சினிமாவில் அப்படி கிடையாதே…
“பெண்களுக்கான பாதுகாப்பு சட்டம் நம்ம ஊர்ல நிறைய இருக்கு. ஆனா, அது எல்லாம் உண்மையா பாதிக்கப்பட்டு இருக்கணும். வரதட்சணை கொடுமை, உடல் ரீதியாக துன்புறுத்துவது, அடிச்சு கொடுமை படுத்துறதுண்ணு நிறைய இருக்கு. அப்படி நீ எந்த வகையிலும் பாதிக்கபடலை சாலா. சென்னைல முக்கிய இடத்துல பெரிய அபார்ட்மெண்ட்ல தான் இருக்கீங்க. பிள்ளைகளும் பெரிய ஸ்கூல்ல தான் படிக்கிறாங்க. பிரகாஷ், உன்னை எந்த வகையிலும் கொடுமைபடுத்தல. அவரோட முறை இல்லாத உறவு உங்களை எந்த வகையில் பாதிச்சது…” என்று வாசு கேட்க.
“என்னங்க இப்படி பேசுறீங்க. அவர் செஞ்சத நியாயபடுத்துவீங்க போல…” குறையாக சுதா சொல்ல.
“சட்டம் முன்னாடி எடுபடாதுன்னு சொல்றேன் சுதா. நாம கேஸ் போட்டு போராடி கோர்ட் வரை கொண்டு போனாலும், தனி மனித சுதந்திரம்ன்னு ஒரே வார்த்தையில முடிக்கவும் முடியும். இது மாதிரி நிறைய கேஸ் இப்போ வருது. ஒரு பொண்ணும், ஒரு ஆணும் தனியா இருக்குற ஒரு நிகழ்வ, குற்றம்ன்னு கேஸ் எடுத்து கொண்டு போக முடியாது. பெண்கள் அப்படின்னா அது சாலா மட்டும் கிடையாது. ஷாலினியும் தான். அவங்க பக்க நியாயமும் விசாரிக்க படும். தப்பு சாலா பக்கமும் திரும்பும். பிள்ளைகளும் இழு படுபாங்க…” பொறுமையாக எடுத்து சொன்னான் வாசு.
“அப்ப என்னதாங்க பண்றது?…” சலிப்பாக சுதா கேட்க.
“மொத பிரகாஷ் எந்தளவு இறங்கி இருக்கார்ன்னு பார்க்கணும். அதாவது என்ன சொல்றது … அவரை சரி செய்ய முடியுமான்னு பார்க்கணும். அவங்க ரெண்டு பேர் உறவு எந்த கட்டத்துல இருக்குன்னு தெரிஞ்சுக்கணும். மீளா கூடியதா இருந்தா, உன் புருசனை மீட்டு எடுத்துடு சாலா. நியாயம் இல்ல தான். ஆனா பிள்ளைக எதிர்காலத்தை தான் நாம யோசிக்கணும். அந்த பொண்ணும் உங்களுக்கு சொந்தம்ன்னு போது உறவுகளுக்குள்ள பெரிய சிக்கல் வர வாய்ப்பு இருக்கு. அத்தோடு…” கொஞ்சம் தயங்கினான் வாசு. தங்கையாக பழகிய பெண்ணிடம் எவ்வாறு சொல்ல,
“எதுவா இருந்தாலும் உடைச்சு பேசுங்கண்ணே…” தன்னை திடப்படுத்தி கொண்டு சாலா கேட்க.
“உன் கணவரோட மனநிலை என்னன்னு நமக்கு தெரியலை சாலா…” என்று தயங்கியவன், ஒரு பெருமூச்சு விட்டு,
“அந்த பொண்ணும் கணவன் இல்லாமல் தனியாக இருக்கும் பொண்ணு. உன் கணவருக்கும் விருப்பம் போல தான் தெரியுது. இவங்களோட உறவை கடைசி வரை கொண்டு போற முடிவுல இருந்தா?… சண்டை போட்டாலும், அடிதடி வரை போனாலும் பயன் இல்லை. எல்லாத்துக்கும் மன ரீதியாக நீ தான் தயார் ஆகணும். நாம ஒரு டிடெக்டிவ் கிட்ட இவங்களை பத்தி தகவலை சேகரிப்போம். இவங்களோட உறவின் நிலை தெரிஞ்ச பின்னாடி முடிவு எடுப்போம்…” வாசு புரிய வைக்க. சரி என்றாள் சாலா.
அவளின் நிலை உளவியலில் ஒரு வார்த்தை வருமே மன திகைப்பு என்று… அந்த நிலையில் தான் இருந்தாள். தன் கணவன் தனக்கு துரோகம் செய்தான் என்பதே பெரிய வலி. நெஞ்சில் தீ பிடித்தது போல் இருக்க, அதற்கும் மேல் முழுதாக தன்னை ஒதுக்கி விட்டான் என்பதை ஏற்று கொண்டு, அடுத்து என்ன என்ற நிலைக்கு சாலா வரவே இல்லை.
பிரகாஷ் மனைவியையே சுற்றி வந்தான். அவள் நடவடிக்கையில் ஏதோ ஒரு பெரிய மாறுதல் தெரிய, தன் மேல் தப்பு இல்லை என்று புரிய வைக்க, அவள் கூடவே இருந்தான். நிறைய பேசினான், அவளை சிரிக்க வைக்க முயன்றான், பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடினான், சமையலுக்கு உதவினான், பார்வையால் அழைப்பு விடுத்தான். ஆனால், சாலா எதுக்கும் அசைய வில்லை. அவள் இன்னும் இறுகி கொண்டாள்.
மாலையில் வெளியில் சென்றவன், வரும் போது மல்லிகை பூவோடு தான் வந்தான். அவள் கிச்சனில் இருக்க, ஏதோ ஒரு பாட்டை பாடி கொண்டே பின்னாடி வந்து கட்டி பிடித்தான்.
“சாலா செல்லம், இந்த மஞ்சள் கலர் சேலை சூப்பரா இருக்கு …” கலகலவென்று சிரித்தான்.
எப்படி இருக்கும் பெண்ணுக்கு, உடல் எல்லாம் நெருப்பாக கொதித்தது. தாம்பத்தியம் கூட மனைவியை சமாதானம் செய்யும் உக்தியா?… மல்லிகை பூவும், சின்ன கொஞ்சலும், அன்றைய இரவின் நெருக்கமும், என்னை சரி கட்டி விடும் என்றா நினைத்தான். சாலா இறுக்கம் தளர்த்த வில்லை.
பிள்ளைகள் இருக்க மேற்கொண்டு நெருங்க முடியாமல் தவித்தான். அஞ்சு உறங்கிய பின், ஒரு புன்னகையோடு சாலாவை நெருங்கினான். சில நேரம் அஜுவும் இவர்கள் அறையில் உறங்க வருவதால், இவர்களின் பிறத்யோக நேரத்திற்கென்று தனியாக குட்டி பெட் வைத்திருப்பார்கள்.
இன்று அவற்றை கையில் எடுத்தான் பிரகாஷ். சிறிதும் சலனம் இன்றி அவனை நேர் கொண்டு பார்த்தாள் சாலா. அந்த பார்வையில் அவன் தான் தடுமாறினான். அவளை மாதிரி நிமிர்ந்து நேராக பார்க்க முடியவில்லை. முன்பெல்லாம் பிரகாஷ் அந்த குட்டி பெட்டை கையில் எடுத்தாளே தலை குனிந்து, முகம் சிவந்து விடுவாள்.
அந்த வெட்கத்தையும், சிரிப்பையும் எதிர்பார்த்து நின்றவனுக்கு, மனைவியின் அழுத்தமான பார்வை மட்டுமே பதிலாக கிடைத்தது. அந்த பார்வையின் பதில் என்ன… எங்கே என்னை நெருங்கு பார்க்கலாம் என்று பார்வையிலேயே அறை கூவல் விடுக்க, பின் வாங்கி விட்டான்.
பிரகாஷ் உள் மனது சொன்னது மனைவி கண்டு கொண்டாள் என்று… அதை ஆராயாமல், தன் மனதிடமே தப்பும் எண்ணத்தில்,
“எனக்கு புரியுது சாலா. தேவி மதினி இறந்து கொஞ்ச நாள் தான் ஆச்சு. உன் மனசு வேதனை என்னால உணர முடியுது. எனக்கு தான் உன்னை விட்டு தள்ளி நிக்க முடியலை. என்னவோ நீ தள்ளி போன உணர்வு. பரவாயில்லை, உனக்கும் நேரம் எடுக்கும் தான். நீ தூங்கு…” அவள் தலையை அன்பாக தடவி கொடுத்தவன்,
“ சாலா, ஐ லவ் யூ. நீ எப்பவும் இதை நம்பணும்…” என்றான்.
இவனை நார்நாராக கிழித்தால் என்ன… எவ்வளவு அழகாக சமாளிக்கிறான். எனக்காக அவன் தேவையை விட்டு கொடுக்கிறானாம். நான் அப்படியே பூரித்து விடுவேன் என்று நம்பிக்கை.
ஒரு காலத்தில் பூரித்து அவன் காலடியில் கிடந்தாள் தான். சாலாவின் இடுப்பு பகுதியில் ஆபரேசன் செய்த பொழுது, இவ்வாறு தான் நடந்து கொள்வான். எந்த விதத்திலும் கட்டாய படுத்தாமல் மனசு அறிந்து நடந்து கொள்ளும் கணவனை கடவுளுக்கு இணையாக அல்லவா வைத்து இருந்தாள். தனக்காக, தன் உடல் நிலைக்காக, கணவன் ஆசையை அடக்கி தன்னை தாங்குகிறான் என்று எவ்வளவு உயர்வாக நினைத்தாள். உயிரோடு உடலில் தீ வைத்தால் கூட இவ்வளவு வலிக்காது.
கண் மூடி மனதை அமைதி படுத்த முயற்சிக்க, தொடர்ந்து போன் வைப்ரேட் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது. ஷாலினி தான், இன்னொருத்தியின் கணவனை தான் எடுத்து கொண்டோம் என்ற நினைவில்லாமல். கோபித்து கொண்டு வந்த தன்னை சமாதானம் செய்யாமல், நாள் சென்று பார்க்கும் மனைவியுடன் கூடுகிறானோ என்ற எண்ணம், அவளை தொடர்ந்து போன் செய்ய தூண்டியது.
பிரகாஷ்க்கு பதட்டம் உச்சியை திட்டது. புரியாமல் நடந்து கொள்ளும் மனைவியை எண்ணி அவன் டென்ஷனில் இருக்க, ஷாலினி தன் பங்குக்கு அவனுக்கு ஏற்றி விட்டாள்.
சாலா உறங்காமல் முழித்து கிடக்க, போனை தூக்கி கொண்டு பால்கனி பக்கம் ஒதுங்கி கொண்டான். சிறிது நேரம் கழித்து வந்தவன், “முக்கியமான ஆபீஸ் கால் சாலா. நான் போயே ஆகணும். நீ கதவை அடைச்சுக்கோ. நான் வர லேட் ஆகும்…”
கதவை அடைக்க சாலா எழுந்து கொள்ள, விசித்திரமாக மனைவியை பார்த்தான் பிரகாஷ். இந்த நேரத்திற்கு நூறு கேள்வி அவளிடம் இருந்து பறந்து வரும். இன்று அமைதியாக நிற்கிறாள். மனதில் பயம் முரசு கொட்டியது. ஆனாலும், ஷாலினி… அவளை விட முடியாது.
சாலாக்கு உள்ளே புயல் அடித்தாலும், வெளியே அமைதியாக காட்டி கொண்டாள். முழுதாக நனைந்த ஒருவனை பிடித்து வைத்து என்ன ஆக போகுது. இதற்கு முன் எத்தனை இரவுகளோ!… முன்னாடி எல்லாம் நடு இரவுகளில் ஆபீஸ் கால் வருவதும், இவன் அலறி அடித்து கொண்டு ஓடுவதும் நினைவு வர, அதன் காரணமும் விளங்கியது.
சொந்த குடும்பத்தை, உயிராக இருந்த மனைவியை ஏமாற்றுகிறோம் என்று துளி வருத்தம் கூட அவன் முகத்தில் இல்லை. மனைவியை சமாளித்து வெளியேறும் எண்ணம் தான் மிகுந்து இருந்தது.
முதலில் நீ முடிவு எடு சாலா , அதன் பின் அவனுக்கான தண்டனையை முடிவு செய். இவர்களை பற்றிய தகவல் வரட்டும் என்று காத்து கிடந்தாள்.
error: Content is protected !!