Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இ.பி.கோ. 55

இ.பி.கோ. 55 – அத்தியாயம் 19

அத்தியாயம் – 19

காரின் பின்னிருக்கையில் சாய்ந்தமர்ந்தவள் பார்வை மொத்தமும் இருக்கரங்களை ஆக்கிரமித்திருக்கும் வளையல்களில் அச்சு போல் பதிந்துகொண்டது. கொஞ்சம் விட்டிருந்தால் அவனே கையில் போட்டுவிட்டிருப்பான். இவள் சுதாரிப்பாய் அதிகாரத் தோரணையோடு பார்வையால் அவனை தள்ளி நிறுத்த, அவனால் நெருங்க முடியவில்லை. விழா முடித்து அவளுக்காக என தனியாக செய்ய சொல்லியிருந்த உணவை உண்டு காரில் ஏறும் வரையிலும் அவள் வளையலை பையிலிருந்து எடுக்கவில்லை. கார் நகரவும்தான் கையிலிருந்த காப்பை கழற்றிவிட்டு வளையல்களை அடுக்கிக்கொண்டாள். அதில் அவனுக்கு ஏமாற்றம்தான் எனினும் உடனே தன் மனதை வெளிக்காட்டி அவனை திசைதிருப்ப விரும்பவில்லை அவள். கொஞ்ச நாள் போகட்டும் என்ற எண்ணம். 

விரல்கள் வளையலை வருட, இதழ்கள் சிரித்துக்கொண்டது. சரியான அளவில் வாங்கி இருக்கிறான். எத்தனை கவனித்திருப்பான் தன்னை என்று எண்ணுகையில் இதழ்கள் தாராளமாக விரிந்தது. அவனது முதல் பரிசு. அவளது உடை வண்ணத்துக்கு ஏற்ப தேடிச் சென்று வாங்கியிருக்க வேண்டும். பளிச்சென்று கண்ணை பறிக்கும் லேவண்டர் இன்றி பேஸ்டல் வகையைச் சார்ந்த கண்ணை உறுத்தாத உடையின் நிறத்திற்கு அவன் தேடிப்பிடித்து வாங்கியிருக்கிறான் என்றதும் மனதிற்கு நெருக்கமாகிவிட்டது. 

வேலையில் சேர்ந்து முதல் மாத ஊதியம் வாங்கியபின் எதற்கும் யாரையும் எதிர்பார்த்ததே இல்லை அவள். விஷு அவளை எதிர்பார்க்க விட்டதுமில்லை. பண்டிகை, பிறந்தநாள் அனைத்திற்கும் அவனே உடை எடுத்துக்கொடுத்து விடுவான். அவ்வப்போது எங்கிருக்கிறாளோ அங்கு வந்து பார்த்துக் கொள்வான். அக்கறையாக இருப்பான். அதிகாரம் செலுத்தமாட்டான். அவள் விருப்புக்கு செவி மடுப்பான். அவள் செயல்களுக்கு இசைந்து செல்வான். குறை என்று ஒன்றும் சொல்ல முடியாது. ஆனாலும் அவனிடம் தோன்றாத ஒரு உணர்வு தனது படிப்புக்கு பதவிக்கு நேர்மைக்கு குணத்துக்கு என்று எதற்குமே ஒத்துப்போகாத ஒருவனிடம் வருவதுதான் அவளுக்கு விசித்திரமாய் இருந்தது. 



Advertisement

விஷுவிடம் இல்லாத எது இவனிடம் இருக்கிறது என்று அவளுக்கும் புரியவில்லை. ஏன் பிடித்தம் வந்தது என்று பிடிபடவும் இல்லை. ஏட்டிக்கு போட்டியாய் அவளை சூடேற்றுவதை மட்டுமே வேலையாய் பார்த்துக் கொண்டிருந்தவன் அவளுக்குள் இப்படியொரு மாற்றம் நிகழ்த்த காரிய காரணங்கள் என்னவோ என்று யோசித்து தன்னை வருத்திக்கொள்ளவில்லை. இனி ஆகப்போவதை நேர்வழிப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே. அதற்கு அவனும் இசைவு கொடுத்து தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிகள் எடுக்க, ஒருவரை ஒருவர் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், பட்டும் படாமலும் கண்ணாம்பூச்சி ஆட்டத்தை தொடர விழைந்தது மனம். 

அவனது நினைவில் இதமாய் மூழ்கியிருந்தவளை அலைபேசி ஓசையெழுப்பி கவனத்தை திருப்ப, பரிதி அழைத்திருந்தான்.

“என்ன பரிதி?”

Advertisement

“மான்சி அப்பா வந்து பிரச்சனை பண்ணிட்டு இருக்காரு மேடம்.”

Advertisement

“எதுக்கு?”

“என் பொண்ணை கொலை பண்ணவனை கண்டுபுடிக்க சொன்னா எங்க ஆளையே தூக்கிட்டு வந்து வச்சிருக்கீங்க. வெளிய விடுங்கனு வக்கீலோட வந்திருக்கார்.” என்றதும் அதிராவின் புருவங்கள் யோசனையில் சுருங்கியது.

“அவர் பொண்ணு ஃபார்ம்ல வேலை பாக்குற மேனேஜருக்காக அவரே நேர்ல வந்திருக்காருன்னா சம்திங் ஃபிஷ்ஷியா இல்லை.”

Advertisement

“மேனேஜரும் அவரும் ஒரே கட்சி போல மேம். அதனால அழுத்தம் கொடுக்குற மாதிரி தெரியுது.”

“மேனேஜர் எதுவும் வாயை திறந்தாரா?”

“மான்சியோட அப்பாதான் உரம், பூச்சிமருந்து சம்மந்தமானது எல்லாம் பாத்துக்குறதா சொல்றாரு. பேரு, புகழ், விளைச்சல் அதிகம் வரணும்னு மான்சி அப்பா இந்த வேலை பார்த்திருக்காருங்குற மாதிரி சொல்றாரு.”

“மான்சிக்கு இந்த விஷயம் தெரியுமா?”

“அதை தெளிவா சொல்லல. ஆனா தெரிஞ்சிருக்க வாய்ப்பு அதிகம் மேம். ஏன்னா மான்சியோட மேற்பார்வைல தான் எல்லாம் நடக்கும்னு மேனேஜர் சொல்றாரு.”

“அதை ஸ்டேட்மென்ட்டா வாங்கிட்டு அவரை அனுப்பிடுங்க. நான் ஈவினிங் வந்துடுவேன் அடுத்து என்ன பண்ணலாம்னு பாக்கலாம்.” என்று அழைப்பை துண்டித்தவள் ஐ.ஜிக்கு அழைத்து இந்த விஷயத்தை பகிர்ந்துகொள்ள,

“டெஸ்ட் பண்ண சாம்பிள்ஸ் அன்ட் ரிசல்ட் எல்லாத்தையும் அக்ரி டிபார்ட்மென்டுக்கு அனுப்பிடுங்க. அவங்க மூலமா இதை ப்ரொசீட் பண்ணிக்கலாம். அவருக்கு இருக்கிற செல்வாக்குக்கு நாம அரெஸ்ட் எல்லாம் பண்ண முடியாது, பண்ணாலும் பிரயோஜனம் இல்லை. கேஸ் ஸ்டார்ங் இல்லை, நான் இதை மேனேஜ் பண்ணலைன்னு ஏதாவது காரணத்தை உருவாக்கி தப்பிச்சி வெளில வந்துடுவார். அக்ரி டிபார்ட்மென்டுக்கு போனா அட்லீஸ்ட் அவங்க ஃபார்முக்கு நோட்டீஸ் போகும். இனிமேயாவது இதெல்லாம் யூஸ் பண்ணாம தடுக்கலாம்.”

“பாதி கேஸுல தப்புனு தெரிஞ்சும் லீகலா எதுவுமே பண்ண முடியறது இல்லை சார்.” என்று அதிரா வருந்தினாள்.

“நாம ஜஸ்ட் கவர்மெண்ட் எம்ப்ளாயீஸ். சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடந்துதான் ஆகணும். ஆனா இப்போ இந்த சோஷியல் மீடியா வந்ததுக்கு அப்புறம் சில நன்மைகளும் இருக்கு. யூஸ் பண்ணிக்கோங்க அதிரா.” என்று அவர் வைத்துவிட, அதிராவுக்கு புரிந்துபோனது.

பரிதிக்கு அழைத்து சேகரித்த ஆவணங்களை தனக்கு அனுப்புமாறு சொன்னவள் மாலை அலுவலகம் கிளம்பி செல்வதற்குள் உரங்களை சோதனை செய்து அதில் வேதிப்பொருள் அதிகம் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை வலைதளங்களில் பிரபலமாகும்படி தெரிந்தவர்கள் கொண்டு செய்துவிட்டாள். இனி மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று விரக்தியாய் எண்ணிக்கொள்ள மட்டுமே முடிந்தது. சட்டத்தை காக்கும் உத்தியோகத்தில் இருந்தாலும் சில விஷயங்களில் இவர்கள் கைகளும் கட்டப்பட்டு தான் இருக்கிறது. என்ன செய்ய, ஆட்சி அதிகாரம், பணத்திற்கு தான் மதிப்பு இந்த கலியுகத்தில்.

“லீவுதான மேம், ரெஸ்ட் எடுத்திருக்கலாமே.” மாலை அலுவலகம் வந்தவளைப் பார்த்துக் கேட்டான் பரிதி.

“அந்த மேனேஜர்கிட்ட வாங்குன வாக்குமூலத்தை ஒருமுறை காமிங்க…” 

“ரிட்டர்ன்னா கொடுக்க முடியாதுனு நின்னாரு மேம். ஆடியோ ரெக்கார்ட் பண்ணிட்டோம்னு சொல்லி பயமுறுத்தவும் சைன் போட்டுட்டுட்டாரு. அவர் மேல தப்பிருக்கும்னு தோணல மேம்.” என்ற பரிதியை பார்த்தவள்,

“இப்படி உரத்துல வேதிப்பொருள் அதிகம் இருக்குனு தெரிஞ்சே அமைதியா இருந்தது தப்புதானே பரிதி? மான்சி கேஸ் பத்தி நாம விசாரிக்க ஆரம்பிச்ச அப்புறமாவது சொல்லியிருக்கனும்.” 

“சிக்காத வரைக்கும் நல்லவன் வேஷம் போடலாம்னு பாத்திருப்பான். இப்போ அவங்க ஃபார்ம் தான் ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கு. யாராவது கேஸ் கொடுக்குறாங்களா இல்லை டிபார்ட்மென்ட் தானா ஆக்ஷன் எடுக்குறாங்களானு பாப்போம் மேம்.”

“அதுக்கும் மான்சி கொலைக்கும் தொடர்பு இருக்குமா இல்லையானு எதுவுமே கெஸ் பண்ண முடியல பரிதி. எந்த பக்கம் போனாலும் ஏதோ இடத்துல முட்டிகிட்டு நிக்குது. எப்படி ப்ரொசீட் பண்ணப்போறோம்னு தெரியல.” நெற்றியை தேய்த்துக்கொண்டாள் அதிரா. 

“நீங்களே இப்படி சொன்னா நாங்களாம் என்ன ஆகுறது மேம்?” கலக்கமாய் பார்த்தான் பரிதி.

“மான்சி வீட்லேந்து கூட அவ்ளோ பிரெஷர் இல்லை இப்போ. பாக்கலாம்.”

“ஏன் அவங்க சைட் அமைதியாகிட்டாங்க மேம்? யாருனு கண்டுபுடிச்சிட்டாங்களா?”

“அவங்களுமே ப்ரைவேட்டா ஏஜென்சி மூலமா தேடிட்டு இருக்காங்க. நம்மள மாதிரிதான் எந்த பக்கமும் போக முடியாம இப்போ கிடைச்சிருக்குற ஸ்கெலிடன் கேஸையும் விசாரிச்சிட்டு இருக்காங்க. அங்கேயும் ஒரு ஆள் போட்டு வச்சிருக்கேன். நமக்கு தெரியாதது அவங்களுக்கு தெரியுதான்னு பாப்போம்.” 

“மேம் ஒருவேளை பேய், பிசாசு, அமானுஷ்யம் இந்த மாதிரி ஏதாவது இருக்குமோ?” என்ற பரிதியை பார்த்து சட்டென சிரித்த அதிரா, 

“இந்த காலத்துல என்ன பேசுறீங்க நீங்க. கொலையாளி ஸ்மார்ட்டா தடயம் இல்லாம செஞ்சி முடிச்சிவிட்டு போயிருக்கான். நம்மாள ஒன்னும் புடுங்க முடியலைங்குறதுக்காக பேய் பிசாசு மேல பழியை தூக்கிப் போடலாம்னு பாக்குறீங்களா. போய் வேலையைப் பாருங்க பரிதி.” என்றவளிடம் மெலிதாக தலையசைத்து விடைபெற்றான் பரிதி.

அவன் சென்று சிறிது நேரம் கழித்து குறுஞ்செய்தி வந்ததாக அவளது அலைபேசி அதிர்ந்தது. அது அவளது அலுவலக எண்ணிற்கு வந்திருக்க பரபரப்பாக திறந்து பார்த்தாள். 

உதவி கோரி ஒரு முகவரி அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தலையும் இல்லாது வாலும் இல்லாது வெறும் உதவி என்று வந்திருக்க அந்த எண்ணிற்கு அழைத்து விசாரிக்க ஈவ்டீஸிங் கேஸ் அது. நானே நேரில் வந்து பார்க்கிறேன் என்றவள் நேரம் கடத்தாது அந்த இடத்திற்கு சென்று பகடி பேசியவர்களை வெளுத்து வாங்கி அந்த பிரச்சனையை தீர்த்து வைக்கையில் அந்த நாள் முடிந்திருந்தது. 

மறுநாள் காலை வழக்கம் போல் சரியான நேரத்திற்கு வந்து நின்றான் அகிலன். 

“இன்னைக்கு வரமாட்டேன்னு நினைச்சேன்.” அதிர்ந்து அவனை உள்ளே வரவேற்க, துள்ளலுடன் வந்தவன் அவளிடம் பெரிய பையொன்றை நீட்டினான்.

புருவ முடிச்சுடன் அதை வாங்கிப் பார்க்க, பை முழுதும் பழங்கள் நிறைந்திருந்தது.

“எதுக்கு இதெல்லாம்?”

“நம்ம சாப்பிடத்தான்.” என்றானே பார்க்கலாம் அதிரா அதிர்ந்து பக்கவாட்டில் திரும்பிக்கொண்டாள்.

“அம்மா பலகார பைதான் கொடுத்துச்சு. ரெண்டு பேருமே டயட்ல இருக்கோம்னு நான்தான் இருந்த பழத்தை எடுத்துட்டு வந்தேன்.”

“அடப்பாவி, தங்கச்சிக்கு வந்ததை இங்க தூக்கிட்டு வந்துட்டியா. உன்னைவிட அவங்கதான் முக்கியமா சாப்பிடணும்.” என்று அதிரா கண்டிக்க, உதட்டை சுழித்தவன், “நான் ஒன்னும் ஒட்ட வழிச்சு எடுத்துட்டு வரல. அவளுக்கு கொஞ்சம் எடுத்து வச்சிட்டுதான் வந்தேன்.” என்றவனை என்ன செய்தால் தகும் என்று பார்த்தாள். 

“அவங்களுக்கு இன்னும் வேற என்ன வேணும்னு கேட்டு வாங்கி கொடுத்துட்டு வரதை விட்டு இங்க எடுத்து வந்திருக்கிறதை பாரு.”

“அதெல்லாம் அம்மா பாத்துப்பாங்க.” என்றான் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல்.

“என்ன கேட்டாலும் இதே தான் பதில். பாத்தாலே இன்னசெண்ட்டா இருக்காங்க, அவங்களை என்ன பாடுபடுத்துறியோ தெரில.” அவன் குணம் அறிந்து அவள் யூகித்து சொல்ல,

“ஆமா நாந்தான் எல்லாரையும் படுத்துறேன், நீங்க வந்து பாத்தீங்க.” என்று முகம் தூக்கி வைத்துக்கொண்டான் அகிலன்.

“பொசுக்குன்னு கோபம் வந்துடுமே. நானும் பாத்தேன் உன்கிட்ட பேசவே யோசிச்சு யோசிச்சு வராங்க உன் அம்மாவும் தங்கச்சியும். இது தப்பு அகிலன். நீதான் கேர் எடுத்து பாத்துக்கணும்.”  

அவன் அமைதியாய் இருக்க, அவனை ஊடுருவும் பார்வை பார்த்தவள், “ஏதாவது சொல்லு. நான் என்ன இந்த சோபா, செவுருகிட்டயா பேசிட்டு இருக்கேன்?”

“மாத்திக்குறேன்.” என்ற அவனது ஒற்றை வார்த்தை பதிலில் யோசனையாகிப் போனாள் அதிரா.

“அவ்வளவு நல்லவனா நீ? இப்படி சரண்டர் ஆகுற. நம்ப முடியலையே.” 

“சிலது கிடைக்கணும்னா சிலதை அட்ஜஸ்ட் பண்ணி மாத்திக்க தான வேணும்.”

“என்ன?”

“எல்லாருக்கும் புடிச்ச மாதிரி இல்லைனாலும் நெருங்குனவங்களுக்கு புடிச்ச மாதிரி இருந்தா பிரச்சனை வராது பாருங்க.”

“தத்துவம் எல்லாம் நல்லாத்தான் பேசுற. இதை எத்தனை நாள் பாலோ பண்ணுவேன்னு தான் தெரியல.”

“மனசு வச்சா எல்லாம் முடியும்னு நீங்கதான் சொன்னீங்க. இப்போ சந்தேகமா பாக்குறீங்க.”

அவனின் பேச்சுக்களில் யோசனையாய் அவளது புருவங்கள் ஏறி இறங்கியது. அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை அவள். உள்ளே சென்று அவன் நேற்று கொடுத்த பையை எடுத்துவந்து அவனிடம் நீட்டினாள்.

நெற்றி சுருங்கி கோடுகள் விழ நிமிர்ந்து பார்த்தவன் என்ன என்பது போல் புருவம் உயர்த்தினான்.

“ஜூஸ் வாங்கிட்டு வந்தப்போ நேத்தி என்கிட்ட கொடுத்தியே… திரும்ப கொடுக்காம மறந்து எடுத்துட்டு வந்துட்டேன்.” என்று அவள் சிரிக்காது சொல்ல, பட்டென எழுந்துகொண்டான் அகிலன்.

“கொடுத்ததை திரும்ப வாங்குற பழக்கம் இல்லை. அதோட நேத்திக்கு வந்தவங்களுக்கு வெத்திலை பாக்கோட வளையலும் கொடுத்தோம். இந்த வளையலை நீங்களே வச்சிக்கோங்க.” என்று கிளம்பிவிட்டான். செல்லும் அவனையே கேலிச் சிரிப்போடு பார்த்து நின்றாள் அதிரா. 

அன்றும் அவளை சந்திக்க வந்த பரிதி, “நாம ஏன் இந்த கலப்பட உரம் டீடீடி அப்புறம் க்ளோரோபைரோஸ் இது பக்கம் எல்லாம் கவனத்தை திருப்ப கூடாது?” 

“ஏன் அப்படி சொல்றீங்க பரிதி?”

“இப்போதைக்கு ஆதாரத்தோட நமக்கு கிடைச்சிருக்குற ஒரே லீட் இதுமட்டும்தான். இதுல டீப்பா போனா மான்சி கொலைக்கான காரணத்தை கண்டுபுடிக்கலாம்னு தோணுது மேம்.”

தீவிர சிந்தனையுடன் இருக்கையில் நன்றாக சாய்ந்தமர்ந்தவள் ஏதோ முடிவெடுத்தவளாய், “ப்ரொசீட் பண்ணுங்க பரிதி. நீங்க சொன்னமாதிரி வீ ஹாவ் நோ அதர் சாய்ஸ்.”

நன்றி தெரிவித்துவிட்டு அவன் கிளம்பிட, மான்சி உடலில் இருக்கும் வேதிப்பொருள் பற்றி விளக்கிக்கூறிய ஆராய்ச்சியாளருக்கு அழைத்தாள்.

“தொடர்ச்சியா அந்த டீடீடியை சுவாசிக்குறதுனால வேற என்னென்ன பிரச்சனைகள் வரும்?” அன்று அவர் சொல்லியிருந்தாலும் இன்று மீண்டும் விசாரித்தாள்.

“அறிகுறின்னு பாத்தா வாந்தி, மயக்கம், தலை சுத்தல், தலைவலி, சோர்வு எல்லாம் இருக்கும். அதிகமா அதை சுவாசிக்கும் போது நாட்பட்ட வியாதியான கேன்சர், டயபெடீஸ், நரம்பு பிரச்சனைகள் எல்லாம் வர வாய்ப்பிருக்கு.”

“மான்சிக்கு கேன்சர் இருக்க வாய்ப்பிருக்குனு அடோப்சில சொல்லியிருக்கு. அவங்க உடம்புல இருந்த பூச்சிகொல்லினால மான்சிக்கு கேன்சர் வந்திருக்க வாய்ப்பிருக்கா?”

“அக்யூட் பாய்சன் அதாவது குறுகிய காலகட்டத்துல ஒரே நேரத்துலேயோ இல்லை கொஞ்ச கொஞ்சமா ஒருமுறைக்கு பலமுறை அதை சுவாசிக்கும் போது லேடீஸ்கு குறை பிரசவம், அபார்ஷன், ஆண்களின் இனப்பெருக்க சுரப்பிகள்ல மாற்றம் வரும். அன்னைக்கு சொன்ன மாதிரி இந்த கெமிக்களால இறந்தவங்கனு இதுவரைக்கும் ரெகார்ட் இல்லை. பட், மத்த கேமிக்கல்ஸோட ரியாகட் ஆக வாய்ப்பிருக்கு. அப்போ அசம்பாவிதம் நடக்கலாம்.” என்று அவர் சொல்ல, அதிராவுக்கு வழக்கில் எதுவோ பிடிபடுவது போலிருந்தது. உடனே தன் சந்தேகத்தை முன்னிறுத்தி வழக்கை கொண்டு போக வேண்டாம். இன்னும் வலுவான ஆதாரம் சிக்கட்டும் என்று காத்திருக்க முடிவு செய்தாள்.

அன்று இரவு அகிலன் இயல்பாய் வீட்டினுள் விசிலடித்தபடி வந்தவன், “இன்னைக்கு என்ன சாப்பாடு? சப்பாத்தியா, சாலட்டா, போஹாவா?” என்று கேட்டுக்கொண்டே உணவு மேசை நெருங்கி அங்கிருந்த பாத்திரங்களை திறந்து பார்த்து, “என்ன இன்னைக்கு சாலட் எல்லாம் டிசைன் டிசைனா வள்ளி வச்சிட்டு போயிருக்காங்க?” என்று கேட்டபடி பக்கத்தில் இருந்த ஃபோர்க்கால் ஒரு துண்டை குத்தி வாயில் வைத்து ருசித்து, “இன்னைக்கு வித்தியாசமா இருக்கே. ஆனா நல்லாயிருக்கு.” என்றபடியே  திரும்ப, அங்கு கைகட்டி அவனையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான் விஷு.

அவனைக் கண்டதும் அகிலன் முகம் இருண்டது. விஷு பின்னே பார்வையை செலுத்தியவன் அதிராவைக் காணாது பெயருக்கு சிரித்து வைத்தான். விஷுவின் முகத்தில் மருந்துக்கும் அந்த சிரிப்பு இல்லை. 

அதிரா எந்தளவுக்கு இவனிடம் பழகி இருந்தால் இவன் இப்படி உரிமையாய் உணவு மேசை வரை வந்து நிற்பான் என்று கனன்றது விஷுவின் மனம். 

விஷுவை தவிர்க்க முடியாது என்று அகிலனுக்கு புரிந்து, “மேடம் இல்லையா?” என்று கேட்க, விஷுவின் தலை ஆமென்று அசைந்தது. 

சங்கடமாய் பார்த்த அகிலன் அமைதியாய் சோபாவில் சென்று அமர்ந்துகொண்டான். விஷுவிற்கு அகிலன் இருக்கும் இடத்தில் நிற்கவே கொதித்தது. இருந்தாலும் தன் உரிமையை விட்டுக்கொடுக்க விரும்பாதவனாய் அகிலனுக்கு எதிரே சென்று அமர்ந்தான்.

இருவரும் கவனமாக ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்த்தனர். பத்து நிமிடங்கள் கழித்து யாருடனோ அலைபேசியில் பேசியபடி உள்ளே வந்த அதிரா இருவரையும் அவர்கள் அமர்ந்திருக்கும் விதத்தையும் கண்டு அப்படியே நின்றுவிட்டாள்.

அலைபேசியில் முடிக்க வேண்டிய பேச்சை முடித்துக்கொண்டு இருவரையும் பொதுவாக பார்த்து சிரித்தவள், “எப்போ வந்தீங்க?” என்று கேட்க,

“ஈவ்னிங்… பத்து நிமிஷம் முன்னாடி.” என்று இரு பதில்கள் ஒரே நேரத்தில் வந்தது.

அகிலனும் விஷுவும் ஒருவரை ஒருவரை முறைத்துவிட்டு அதிராவிடம் பார்வையை செலுத்த, அவள் இவர்களை யோசனையுடன் பார்த்தாள். 

ஐந்து நிமிடங்கள் என்று விரல்களால் சைகை காட்டிவிட்டு அவள் உள்ளே புகுந்து கொள்ள, அவள் உடைமாற்றி வரும்வரையிலுமே அப்படியே இருந்தனர்.

அவர்களை சட்டை செய்யாதவளாய், “சாப்பிடலாமா?” என்று கேட்டுக்கொண்டே மேசை நோக்கி செல்ல, இருவரும் எழுந்துகொண்டனர்.

‘நீ எங்கே வருகிறாய்?’ என்பது போல் விஷு அகிலனைப் பார்க்க,

“அகிலன் சாப்பிட்டு சீக்கிரம் கிளம்பு.” என்று அதிரா அழைக்கவும் விஷுவைப் பார்த்து இதழ் வளைத்து சென்றான் அகிலன்.

மதியம் போல் அதிராவுக்கு அழைத்து தான் வேலை விஷயமாக இங்கு வருகிறேன் என்று விஷு சொல்லி இருக்க, அவன் சமைக்கிறேன் என்ற போதே மூவருக்கு உணவு செய்துவிடு என்றிருந்தாள் அதிரா. யார் அந்த மூன்றாவது ஆள் என்ற சந்தேகம் இருந்தாலும் இருவரும் பிணக்கில் இருந்ததால் அதிகம் கேட்டுக்கொள்ளவில்லை விஷு.

இப்போது அகிலன் உரிமையாய் உண்ணவும் அந்த மூணாவது இவன்தானா என்று வெறுப்பாய் பார்த்தான் விஷு. 

இவன் இருப்பது அவனுக்கு பிடிக்காதிருக்க, அவன் இருப்பது இவனுக்கு பிடிக்காதிருக்க இருவருமே வாய் திறக்கவில்லை. விஷுவிடம் பேச வேண்டிய கட்டாயம் உணர்ந்து அகிலன் கிளம்ப காத்திருந்தாள் அதிரா.

அகிலன் விடுவேனா என்று, “இன்னைக்கு எஸ்.ஐ கிட்ட விசாரிச்சேன். டிபார்ட்மென்ட் எக்ஸாம் எழுதி ப்ரமோஷன் வாங்கலாம். அடுத்த மாசம் அதுக்கான அப்ளிகேஷன் வந்துரும்னு சொன்னாரு. ஆனா அதுல வேகன்ஸி கம்மியா இருக்குமாம், ரெகமெண்டேஷன் இருக்குறவங்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பாங்கனு சொல்றாரு. என்ன பண்ணலாம்?” என்று பேச்சை வளர்த்து அதிரா முகம் பார்க்க, அவள் நெற்றி யோசனையில் சுருங்கியது.

“அப்படியில்லைனா நேரடியா பரீட்சை வச்சி எடுக்குற எக்ஸாமுக்கு அப்ளை பண்ணி உள்ள வர சொல்றாரு.” என்று அடுத்ததையும் பகிர்ந்து கொண்டான்.

“அது எப்போ?”

“அது அடுத்த ஜனவரி இல்லை பிப்ரவரில வரும்னு சொல்றாங்க.”

“முதல்ல டிபார்ட்மென்ட் எக்ஸாம் எழுது. அதுல க்ளிக் ஆகலைன்னா பொது தேர்வுல முயற்சி பண்ணிக்கலாம்.” என்று யோசனை சொன்னாள் அதிரா.

“நீங்க ரெகமெண்ட் பண்ணா பர்ஸ்ட் அட்டெம்ப்ட்லேயே க்ளியர் ஆகிடும்.” 

“முதல்ல அதுக்கு தீவிரமா படிச்சி நீங்க பாஸ் ஆகணும் சார்.” கேலியாக இதழ் வளைத்தாள் அதிரா.

“ஏன் படிக்க நீங்க ஹெல்ப் பண்ண மாட்டிங்களா?” என்று உரிமையாக கேட்டான் அகிலன். 

“ஆசைதான். நீ கிளம்பு.” சிரிக்கத் துடிக்கும் அதரங்களை அடக்கிக்கொண்டு சொன்னாள் அதிரா.

இதழ் வளைக்கவில்லை என்றாலும் மின்னிய அவளது கன்னக்கதுப்புகள் அவளது சிரிப்பை காட்டிக்கொடுத்துவிட, புன்னகையுடன் புறப்பட்டான் அகிலன். அவன் நகர்ந்ததும் அடுத்தது விஷு பிடித்துக்கொண்டான்.

“என்ன நடக்குது இங்க?”

அவனை ஆயாசமாய் பார்த்த அதிரா, “முன்னாடி நீ இப்படியில்லையே விஷு.”

“நீயும்தான் இப்படியில்லை. யாரை எங்க வைக்கணும்னு தெரிஞ்ச விவரமானவன்னு நினைச்சேன்.” என்றான் சற்றும் குறையாத ஆதங்கத்துடன்.

“உனக்கு என் முடிவு மேல நம்பிக்கை இருந்தா இப்படி பேச மாட்ட விஷு.” புரிந்துகொள்ளாமல் நேரடியாய் குத்திக்காட்டுவது போல் பேசுகிறானே என்ற ஆதங்கம் அவளுக்கும்.

“சரியா இருக்குற பட்சத்துல உன்னோட எந்த முடிவையும் நான் விமர்சிச்சது இல்லை அதி.”

“அப்போ இதுவும் சரியா இருக்கும்னு நம்பு.”

“அதெப்படி சரியா வரும்? அவன் பொசிஷன் என்ன உன் பொசிஷன் என்ன? உன் படிப்புக்கும் அறிவுக்கும் கால் தூசிக்கு வருவானா அவன்?”

“இங்க என்ன காம்படீட்டிவ் எக்ஸாமா நடக்குது எல்லா கேட்டகிரியும் சரியா இருக்கானு செக் பண்ணி டிக் பண்ண?”

“நீ நினைச்சிருந்தா அவனை எப்போவோ தடுத்து தவிர்த்திருக்கலாம் ஆனா நீ தவிர்க்க விரும்பல. இவ்ளோ தூரம் வளர விட்டிருக்க.” மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டுபவனை என்ன செய்ய என்று பார்த்தாள் அதிரா. 

“அங்கிள் நிச்சயம் இதுக்கு ஒத்துக்க மாட்டார் அதி.”

“நான் டெல்லிக்கு படிக்க வர்ற வரைக்கும்தான் எனக்கு அவரோட பெர்மிஷன் தேவைப்பட்டது.” என்றாள் அதிரா இறுகிய முகத்துடன்.

“அப்போ நாங்க யாரும் வேணாம் உனக்கு.” கோபம், ஆதங்கம், ஏமாற்றம் அனைத்தும் கலந்துகட்டி வெளிப்பட்டது விஷுவிடமிருந்து.

“உனக்கு அவன் வேண்டாம்னு என்னையும் வேண்டாம்னு சொல்ல சொல்ற விஷு.”

“உனக்கு பேசவா சொல்லித்தரனும். ஒரே டிபார்ட்மென்டல உனக்கு கீழ வேலை பாக்குறவனை கட்டிக்கிட்டு ஒரு பங்ஷன் அட்டென்ட் பண்ண முடியுமா உன்னால? அவசரப்படுறியோனு தோணுது.”

“நிறைய யோசிச்சிட்டேன் விஷு. எங்களை பாத்து வெளில காசிப் பேசுவாங்கங்குறதுக்காக எனக்காக மாற ரெடியா இருக்குற ஒருத்தனை ஒதுக்க வேணாம்னு தோணுது.”

“எப்படியிருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணி உன் வேலைக்கு தகுந்த மாதிரி நான் மாறிக்குறேனு சொன்னப்போ நீ கண்டுக்கவே இல்லை அதி. இப்போ அவன் உன் பேச்சை கேக்குறான்னு அவனை உன் இஷ்டத்துக்கு வளைக்க தயாராகிட்ட…” என்று விஷு கோபத்தில் வார்த்தை விட, அதிராவுக்கு சுருக்கென்றது.

தன்னை பற்றி நன்றாக தெரிந்தவனே இப்படி தன்னை கீழாக நினைக்கிறான் என்பதை ஏற்கவே முடியவில்லை. மனதெல்லாம் பாரமாகிப் போனது.

“உன் மேல நிறைய மரியாதை வச்சிருக்கேன் விஷு. இப்படி பேசி உன்னை நீயே தாழ்த்திக்காத. நம்ம ரெண்டு பேருக்கும் செட் ஆகாதுன்னு அகிலனை பாக்குறதுக்கு முன்னாடியே நான் உன்கிட்ட சொல்லியிருக்கேன் விஷு. நீ ஏன் அதை சீரியஸா எடுக்கலைனு எனக்கு புரியல.”

“போக போக எனக்கு ஓகே சொல்லிடுவேன்னு நினைச்சேன் அதி.” மனதில் இருந்தவற்றை அப்படியே வெளிக்காட்டிவிட, சங்கடமாய் பார்த்த அதிரா,

“நிஜமாவே உன்கிட்ட அந்த பீல் வரலைடா. அவன்கிட்ட வந்துச்சான்னு கேட்டா அதுக்கும் என்கிட்ட பதில் இல்லை. அவன் கூட இருக்கிறப்போ இதுவரைக்கும் உணராத ஒரு பீல் வருது. அவன் கூட வாய்க்கு வாய் வாயாட சுவாரசியமா இருக்கு. நான் முறைச்சா அவனும் பதிலுக்கு முறைச்சிட்டு இறங்கி வர்றது புடிச்சிருக்கு. எனக்கு ஒன்னுன்னா அவன் பதறுறது இதமா இருக்கு. இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேக்காத.” என்றவள் சோபாவில் தலைசாய்த்து கண்மூடினாள்.

மனதில் இருப்பதை இன்னும் அகிலனிடம் கூட பகிர்ந்துகொள்ளவில்லை இருப்பினும் விஷுவிடம் சொல்லியாக வேண்டிய கட்டாயம் உணர்ந்து முதல் முறை மனம் திறந்தவளால் மகிழ முடியவில்லை. விஷு சொல்வதில் ஒரு உண்மை இருப்பது புரிந்தது. என்னதான் பிடித்தம் வந்திருந்தாலும் உரிமை எடுத்து நெருங்கவோ, அவனை தன் கூட்டிற்குள் சேர்த்துக்கொண்டு மனதை திறந்து அவன் தோல் சாயவோ தயங்கியது மனது. ஒரு ஒதுக்கம் இருவருக்கிடையிலும் இருக்கிறது. ஒருவேளை அவர்களின் பதவி குறுக்கே நிற்கிறதோ. அவனது மேலதிகாரி என்ற கர்வத்தை விட்டு அவளால் வெளிவர முடியவில்லையோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!