நாணல் – 17.3
மகன் ஒரு புறமென்றால் இந்த பூச்செண்டு கைகளும், குட்டி பாதங்களும் இல்லாமல் இந்த வீட்டின் நிலையை யோசிக்க யோசிக்க அவரால் தன்னை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
அவரை மேலும் சோதனைப்படுத்தவே அவர் காதில் கிசுகிசுப்பாக, “பாட்டி மம்மம் வேது” பூர்வி கேட்டுவிட சிதறி தான் போனார் வித்யா.
வீட்டில் ஏனையவரும் ஸ்தம்பித்து போக உடனே குழந்தையை கையில் எடுத்தவர் சமையலறை நோக்கி செல்ல, “நாங்க வெளிய சாப்டுக்குறோம்” என்றான் பார்த்திபன்.
அவரோ நிற்க கூட இல்லை. பேத்தி கேட்கவும் உடனே தோசை ஒன்றை வார்த்து சமையல் மேடையில் வைத்து கண்ணீரோடு ஊட்டிவிட, இன்று ஏனோ சேட்டை செய்யாமல் பாட்டியின் வேதனையை உணர்ந்து அமைதியாக உண்டாள் பார்த்திபன் மகள்.
Advertisement
குழந்தையை சுற்றி வீட்டினர் அனைவரும் கூடிவிட்டனர். துருவ் எப்பொழுதும் போல் சகோதரியோடு பேசி சிரிக்க, கமலவல்லி பூர்வியின் சிகையை சரி செய்து அவள் விரும்படியான தலை அலங்காரத்தையும் வைத்துவிட்டாள்.
ஏனோ யாருக்கும் ஒரு வார்த்தை கூட பேச வரவில்லை. மிகவும் கனமான சூழல். குழந்தைகள் இருவரின் பேச்சு குரலும் வித்யாவின் விசும்பல் சத்தமும் தான் அவ்வீட்டையே ஆக்கிரமித்திருந்தது.
உண்டு முடித்த குழந்தை முகத்தை தன்னுடைய புடவை முந்தானையால் வித்யா துடைக்க பற்கள் தெரிய சிரித்து அவரை மேலும் அழுக வைத்தாள் பார்த்திபன் மகள்.
Advertisement
அன்னையின் வாட்டம் தாளாமல், “பூர்வி” என மகளை பார்த்திபன் அழைக்க வேகமாக கிரி மூலம் டைனிங் மேஜையிலிருந்து கீழே இறங்கியவள் அனைவரிடமும் விடைப்பெற்று சித்தப்பனிடம் செல்ல வீட்டினர் அனைவர் உடலும் இறுகியது.
Advertisement
“பூர்வி வாடா அப்பா கூப்பிடுறாங்க பாரு” கிரிக்கே சிறியவள் தம்பியிடம் செல்வது பிடிக்கவில்லை.
செய்யாதே என கூறியதை செய்தே பழக்கம் கொண்ட அந்த வாண்டு வேகமாக சித்தப்பனை நோக்கி ஓடி அவன் கால்களை கட்டிக்கொண்டாள். வசந்தின் முகம் சட்டென நிர்மலமானது.
“சிப்பா தூக்கு…” அவன் முகம் பார்த்து குழந்தை கேட்க யோசிக்கவே இல்லை, உடனே தூக்கிக்கொண்டான்.
Advertisement
குழந்தையோ சிரிப்போடு அவன் கன்னத்தில் எச்சில் பட முத்தம் வைத்தவள், “பாய்” என கூறி முடிக்கவில்லை கிரிதரன் பிள்ளையை வேகமாக வாங்கியிருந்தான்.
வசந்துக்கோ மனம் பெரிதாக அடி வாங்கிய உணர்வு. அவனுக்கு பார்த்திபன் ஆகாதவன் தான், பிடிக்காதவன் தான். ஆனால் ஆரபி, பூர்வி மேல் அவனுக்கு எந்த விதமான கோவமும் இல்லை.
சொல்லப்போனால் பூர்வி மேல் அவனுக்கு அளவில்லாத பாசம். வீட்டில் அவன் அதிகம் நேரம் செலவிடும் நபரும் அவள் தான். தனக்கே பிறந்த பெண் போல் அவள் பிறந்ததிலிருந்து அடிக்கடி கையில் ஏந்தி அவள் சிரிப்பது பேசுவது என அனைத்தையும் அப்படி ரசிப்பான்.
பூர்வியும் வசந்த்திடமிருந்து அவ்வளவு எளிதில் தந்தையிடம் கூட வருவதில்லை. பார்த்திபனே சில நேரம் மனைவியிடம் குறைபாடுவான், “என் பொண்ண என்கிட்ட விட மாட்டிக்கிறான்டி இவன்” என்று.
அவனுக்கும் தெரியும் மகள் தான் சித்தப்பனை விட்டு அகலாமல் அடம் பிடிப்பாள் என்பது.
அத்தனை பிணைப்பு இருவரிடமும். அத்தகைய அழகிய உறவில் விழுந்த இந்த விரிசல் தன்னால் தான் என நினைக்கும் பொழுது தான் பார்த்திபனை கருத்திலே எடுத்திருக்காமல் விட்டிருக்கலாம் என தோன்றியது.
கைக்கு வந்த குழந்தையை கொஞ்ச கூட நேரம் கொடுக்காமல் வாங்கி சென்றது ஏதோ உயிரையே பறிப்பது போல் வலித்தது.
சண்டையிட்டு பிள்ளையை வாங்கவும் தயக்கமாக இருந்தது. செய்த தவறின் வீரியம் அவ்வாறு. தன்னுடைய மனதினில் தான் மருகிக்கொண்டிருக்க வித்யா ராஜேந்திரன் பார்த்திபன் கையை பிடித்து விட மாட்டேன் என கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தனர்.
“தர்மசங்கடமான நிலைமைல விடாதீங்க ப்பா. தள்ளி நிக்கிறது தான் என்னைக்கும் நமக்கு நல்லது”
“என்ன ப்பா மூணாவது மனுசங்க கிட்ட சொல்ற மாதிரி சொல்ற, நீ என் புள்ளடா”
மகன் முகத்தை கையில் தாங்கி. இவன் யாரோ போல் பேசுவது அவருக்கு குற்றவுணர்ச்சி தன்னையே தின்பது போல் இருந்தது. பதில் பேசவில்லை, அவன் பதில் கொடுத்தால் அவரால் தாங்க இயலாது அல்லவா, கிளம்புவதாக கூறினான்.
“பார்த்திபா கொஞ்சம் யோசிடா” சிரித்தே சமாளித்த பார்த்திபன் தன்னுடைய இருசக்கர வாகனத்தின் சாவியை அங்கிருந்த டீ பாயில் வைத்தான்.
“இதை ஏன் ப்பா இங்க வக்கிர?” என்றார் ராஜேந்திரன்.
“இங்கையே இருக்கட்டும் ப்பா” தான் வாங்கி கொடுத்த வாகனம் கூட எடுத்து செல்ல மகன் விரும்பவில்லை என்னும் பொழுது எந்த தந்தையின் உள்ளம் தான் கசங்காது?
மகனின் கையை பிடிக்க, அவர் முகம் பார்க்காமல் அவரிடமிருந்து பிரிந்தான்.
“கிளம்பலாம் ஆரபி” அவள் தலை அசைத்து ட்ராளியை எடுக்க வர அதை தான் வாங்கிக்கொண்டான். மற்ற இரண்டை விஷ்ணுவை எடுக்குமாறு கண் காட்டினான். தந்தை இரண்டு கைகளிலும் பொதியை வைத்திருக்க அன்னையிடம் தாவினாள் குழந்தை.
அதனை கவனித்த பார்த்திபன் குழந்தையிடம், “பூர்வி நடந்து வாடா. நீ தான் அப்பாவோட ஸ்ட்ராங் கேர்ள் ஆச்சே” அவளும் உடனே தலை அசைத்து அன்னை கைபிடித்து நடந்தாள்.
இதனை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வித்யா ஆக்ரோஷமாய் மகனிடம் விரைந்து வந்து அவன் மார்பிலே அடித்தார், “என்னடா பண்ணி வச்சிருக்க, பாரு உன்னால ராத்திரி நேரத்துல வயித்துல புள்ளையோட என் மருமக போறா. மாசமா இருக்க பொண்ண இப்டி மனசு நோகடிச்சு அழுக வச்சிட்டியேடா. எங்க போய் இந்த பாவத்தை எல்லாம் கழுவ போற?”
என்ன அதட்டி, திட்டியும் அவன் செயலின் விளைவை அவரால் தாங்கவே முடியவில்லை. வித்யா கூறிய செய்தியை கேட்டபிறகு இன்னும் நொடிந்தது அந்த குடும்பம்.
வித்யாவின் வார்த்தைகளும் அவரின் அனுமானங்களையும் கேட்ட ஆரபி பார்த்திபன் கை பிடித்து கண்ணீர் சிந்த, “நமக்கான வீடு இது இல்ல போல ஆராம்மா” எவ்வளவு வேதனையை வார்த்தையில் அடக்கி அவன் பேசவும் மனைவியின் அழுகை விசும்பலாய் மாறியது.
அவளுக்காக அவளது காம்போர்ட் பாதிக்கப்பட்டதால் வருத்தமில்லை, அவள் எண்ணம் மொத்தமும் பார்த்திபன்.
“நீ எதுக்கு ம்மா அழகுற? உங்களுக்கு நான் இருக்கேன். டேய் வீட்டுக்கு வண்டி எடுத்துட்டு வா. நாளைக்கு பேசிக்கலாம். ஆரபி சாப்பிடணும்” என்றான் விஷ்ணு.
“இல்ல விஷ்ணு நாங்க ஏதாவது ஹோட்டல் பாத்துக்குறோம்”
“பைத்தியம் மாதிரி பேச கூடாது, குழந்தையை வச்சிட்டு எவ்ளோ நாள் ஹோட்டல்ல தங்க முடியும்? ஒன்னு என் கூட வா, இல்ல பழசை எல்லாம் மறந்து ஆரபி வீட்டுக்கு போ. மனுஷன் அந்த நேரத்துல நாலு வார்த்தை பேசியிருந்தாலும் உன் தம்பி மாதிரி விஷம் இல்ல அவர்”
சில நொடிகள் யோசித்தவன் ஆரபியை மனதில் வைத்து, “நான் ஆரபி வீட்டுக்கு போறேன். வேகமா ஒரு வீடு பாத்துடலாம்” என்றான்.
விஷ்ணுவும் சரி என கூறவும் பார்த்திபனின் வாகனம் ஆரபி வீட்டிற்கு சென்றது. பெட்டிகளோடு வந்து நிற்கும் பிள்ளைகளை பார்த்ததும் ராஜ் கோபால் சில நொடிகள் அதிர்ந்தாலும் உடனே ஸ்ரீனி மூலம் பெட்டிகளை ஆரபி அறைக்கு கடத்தியிருந்தார்.
என்ன எது என ஒரு வார்த்தை கேட்கவில்லை க்ரிஷ்ணாம்பாலும் ராஜ் கோபாலும். மருமகன் வீட்டிற்கு ந்து தங்குவதே அரிதாக இருக்க, அவனை மேலும் சங்கடப்படுத்தாமல் இரவு உணவை உன்ன வைத்து பொதுப்படையான பேச்சுக்களை பேச துவங்கினார் ராஜ்கோபால்.
குழந்தையை உறங்க வைக்க சென்ற ஆரபி மன சோர்வில் தன்னையும் மறந்து உறங்கிவிட்டாள். தன்னுடைய மகளிர் இருவரும் உறங்கவும் உறக்கம் வராமல் அமைதியாக மாடிக்கு சென்ற பார்த்திபனை பார்த்த ராஜ் கோபாலும் உடன் மாடிக்கு சென்றார்.
பூர்விகாக அவள் தாத்தா செய்த ஊஞ்சல் அது. முதலில் ஒருவர் மட்டுமே அமர்ந்து ஆட கூடிய வகையில் தான் வாங்கியது, பயத்தில் குழந்தை அன்னையையும் தேடி அழ, அவர்கள் அடுத்த முறை வரும் பொழுது மூவர் அமரும்படி சற்று பெரியதாகவே செய்துவிட்டார் ராஜ் கோபால்.
மருமகனையும் மனதில் நினைத்து செய்ததோ என்னவோ. ஆரபி கூற தான் இத ஊஞ்சல் பற்றி கேள்வியுற்றது, வரவேற்பறை செல்வான் அதிகப்படியாக ஆரபி அறைக்கு செல்வான், இங்கு மாடிக்கு வந்தது அவர்கள் திருமணம் ஆன புதிதில் தான், அதன் பிறகு இப்பொழுது தான் வந்தது.
இப்பொழுது மேலே வந்தவன் கண்கள் அந்த அழகிய வேலைப்பாடு நிறைந்த மர ஊஞ்சலை சுவாரஸ்யமே இல்லாமல் அவதானித்தான்.
மிகவும் அழகாக இருந்தது, குழந்தை எவ்விதத்திலும் அடிபட்டு விட கூடாதென்பதை கருத்தில் கொண்டு எங்கும் கூர்மையாக இல்லாதபடி மழுங்கி விடப்பட்டிருந்தது அந்த மரத்தினால் இழையோடிய மலர்களும் கொடிகளும்.
ராஜ் கோபால் நல்ல தந்தை மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. மாமனாரை மெச்சி அதில் அமர்ந்தான். அவனை தொடர்ந்து அவர் வரவும் இடைவேளை விட்டு அமர, அவர் மற்றொரு ஓரத்தை தனதாக்கினார். நீண்ட நெடிய மௌனம்.
“வீட்டுல பணம் கேட்டேன், எதிர்பார்த்த மாதிரி இல்லாம பணம் கிடைக்கல. அதோட வசந்த் கொஞ்சம் அதிகமா பேசிட்டான்” சகோதரன் தனக்கு செய்த விஷயங்களை மட்டுமே கூறினான்.
அவன் கூறுவதை அமைதியாக கேட்ட ராஜ் கோபால், “நீங்க அவர் கூட பிறந்தவர் இல்லனு கோவமோ?”
பார்த்திபன் தலை அசைத்தான். ஆரபியிடம் தன்னை பற்றி கூறியிராதவன் தங்கள் திருமண பேச்சினை ராஜ் கோபால் எடுத்த பொழுதே தன்னுடைய பெற்றோர், வித்யா ராஜேந்திரன் பற்றி எல்லாம் கூறிவிட்டான்.
பிற்காலத்தில் இதனை மறைத்தாய் என மாமனார் தன்னை குற்றம் சுமத்தும் விழியோடு பார்க்க கூடாது என தான் சொன்னது, அவருக்கு மகள் விருப்பம் மட்டுமே பெரிதாய்ப்பட பெரிதாய் அதை பற்றி பேசியதில்லை.
இத்தனை வருடங்களில் இல்லாமல் இன்று எதற்கு இந்த பேச்சு வரவேண்டும் அதுவும் வசந்தால்? என்கிற ஒரு சலிப்பு அவரிடம். மருமகனின் நிம்மதியில் சார்ந்திருக்கும் மகள் பேத்தி நிம்மதியும் குலைக்கிறது அல்லவா.
“சின்ன வயசுல நான் அவங்க வீட்டுக்கு போக கொஞ்சம் லேட்டா ஆனாலும் வாசல்ல கேட் புடிச்சிட்டு நின்னுடுவான். நான் போனதும் அவ்ளோ சந்தோசப்படுவான். நான்னா அவ்ளோ இஷ்டம் அவனுக்கு.
அவங்க வீட்டுக்கு போனதும் ஆரம்பத்துல அவ்ளோ சந்தோசமா சுத்துனவன் போக போக சரியா பேசல. சரி கூடவே இருக்கதால இப்டி இருக்கானானு நினைச்சு விட்டேன்.
ஆனா அதுக்கு பின்னாடி இவ்ளோ வெறுப்பு இருக்கும்னு எதிர் பாக்கல” மனைவியோடு கூட பகிராத வேதனையை மாமனாரிடம் கூறினான்.
கிரிதரன் மேல் பாசம் இருக்கும், அதே போல் வசந்த் என்றால் அவனுக்கு ஒரு படி மேல் தான். சிறிய வயதில் எந்நேரமும் பார்த்திபன் அண்ணா என தன்னை வால் பிடித்தே சுற்றியவன் அல்லவா, ஒரு தனி அக்கறை அவன் மேல்.
“அதுனால தான் அவன் ஒரு இடத்துல தேங்கி நின்னாலும் மனசு கேக்காம ஏதாவது பண்ணிடுவேன். இப்போ தோணுது அவன் தப்பு பண்றதே என்னால தான்னு”
“அப்டி நினைக்காதீங்க. சுயமா நிக்கனும்னு நினைக்கிறவங்களோட எண்ணங்களை ஊடுருவி ஒரு ஒளி வந்தாலும் அது அவங்களுக்கு ஒரு தடையா தான் இருக்கும். அது மாதிரி உங்க தம்பி எதையாவது சாதிச்சு உங்க முன்னாடி பெருமையா வந்து நிக்கனும்னு ஆசைப்படுறார்”
அந்த தடை தான் தானா என்கிற எண்ணம் உருவாக, “அதுக்காக உங்கள எந்த விதத்துலையும் நீங்க குறைச்சு நினைக்க வேணாம். உலகத்துல நடக்குற எல்லா நிகழ்வுக்கும் நாம ஏதோ ஒரு வகைல சம்மந்தபட்ருப்போம். அதுக்குன்னு நடக்குற எல்லாத்துக்கும் நாம பொறுப்பேத்துக்க முடியாதுல?”
“என் பொண்ணு தப்பு பண்ணா அதுக்கு நான் தானே பொறுப்பு? அவனும் எனக்கு அது மாதிரி தான். ஒதுங்கி நிக்க முடியல” என்றான் எங்கோ பார்த்து. மருமகனை உன்னிப்பாக கவனித்த ராஜ் கோபாலுக்கு மருமகன் மேல் அத்தனை பெருமிதம் கண்ணில்.
ராஜ் கோபாலுக்கு பார்த்திபன் மேல் ஆரம்ப காலத்தில் பெரிதாக அபிப்ராயம் இல்லை. மகள் விருப்பம் என்று தான் சுற்றி திரிந்தார்.
என்று அவன் சுயமாய் நிற்கும் முடிவோடு அனுமதி கிடைத்தும் திருமணத்தை செய்யாமல் தொழிலில் முன்னேறி பிறகு வந்து தன் முன் வந்து நின்றானோ அன்று பிடித்தது.
பிடித்தது என்பதை தாண்டி, நெஞ்சை நிமிர்த்தி முழு ஆண்மகனாக வந்தனை பார்த்து ஒரு சிலிர்ப்பு உடலில். அதே ஆச்சிரியம் மெல்ல மரியாதையாய் மாறியது.
பார்த்திபன் செய்தால் சரியாக இருக்கும், அவனிடம் எதற்கும் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைக்கும் அளவிற்கு அவன் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை.
அந்த நம்பிக்கையை கொடுத்தது அவனது வார்த்தை தவறாத நாணயமும், எதனையும் துணிந்து நிதானமாய் செய்யும் புத்தி கூர்மையும் தான். அசத்திவிட்டான் மாமனாரோடு அதிகம் உரையாடாமலே.
இதோ இப்பொழுது தனக்கு துரோகம் செய்தும் சகோதரன் பிள்ளை போல் தான் என கூறும் இவன் மேல் மரியாதை பன்மடங்கு கூடியது. வேறு யாராக இருந்தால் முட்டாள் என பார்த்திபனை திட்டினால் கூட அதிசயிக்க தேவையில்லை.
வெளி உலகை பார்த்த ராஜ் கோபாலுக்கு இந்த அன்பு தான் வாழ்க்கையில் அச்சாணி என தெரிந்திருக்க அத்தனை பெருமிதம் மகளின் வாழ்க்கை துணை தேர்வில்.
“இந்த அன்பை அவனுக்கு எப்போவாவது புரிய வச்சிருக்கீங்களா?”
அவனிடம் பதில் இல்லை. பல வருடங்கள் ஆகியது சகோதரனிடம் மனம் விட்டு பேசி. குடும்பமாக அமரும் பொழுது ஏதேனும் ஓரிரு கிண்டல் வார்த்தைகளை தவிர வேறு இல்லை. ஏதோ இடைவெளி உருவாகி ஆளுக்கு ஒரு திசையில் பயணித்தனர்.
“சில விஷயங்கள் சொல்லி தான் புரிய வைக்க முடியும். சில விஷயங்கள் சொல்லாமலே புரியும். இதுல அன்பு ரெண்டுக்கும் நடுல விழும். கொஞ்சம் பேசணும் நிறையா செயல்ல காட்டணும். உங்க கணிப்பு தப்பா போனது அங்க தான்.
சொல்லாமலே எல்லாம் புரிஞ்சுக்குவான்னு விட்டீங்க, அந்த பையன் சின்னவன் தானே, புரிய நேரமாகுது. உங்க அன்பை புரிஞ்சு அவன் வர்ற நாளும் தூரம் இல்ல”
“என்னால பழைய மாதிரி இருக்க முடியாது” வசந்த் செய்த துரோகம் முன்னே வர பாசம் எல்லாம் ஒரு படி பின்னே சென்றது.
“உங்க மனசு போலவே வாழ்க்கை அமையும். காலம் தான் நமக்கு மருந்து. தூங்குங்க மாப்பிள்ளை. முழிச்சே இருந்தா வேண்டாதது எல்லாம் யோசிக்க தோணும்”
Hi Comments please..
