Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இ.பி.கோ. 55

இ.பி.கோ. 55 – இறுதி அத்தியாயம் 1

அத்தியாயம் – 22

“அந்த குப்பைக் கிடங்குல ஏதோ மர்மம் இருக்கு பரிதி.”

‘இதை சொல்லவா கூப்பிட்டாங்க?’ என்று பார்த்தான் பரிதி.

“அங்க ஏதாவது ஹார்ம்புல் திங்ஸ் ஆர் கெமிக்கல்ஸ் இருக்கானு செக் பண்ணனும். எனக்கென்னவோ மான்சி மாதிரியே தான் மத்த மூணு பேரும் இறந்திருப்பாங்கனு தோணுது.”



Advertisement

“குப்பை மலையே இருக்குற இடத்துல ஹார்ம்புல் திங்ஸ் இல்லைனாதான் அதிசயம் மேடம். கெமிக்கல்ஸ் கண்டிப்பா இருக்க வாய்ப்பிருக்கு, ஏன்னா பாக்டரி கழிவு, மெடிக்கல் கழிவு எல்லாம் அங்கதான் டிஸ்போஸ் பண்றாங்க.”

“கழிவுகளை முறையா அப்புறப்படுத்தாத வரை அது பாதுகாப்பு இல்லைல பரிதி.”

“நம்ம என்ன மேம் செய்ய முடியும்? நம்மகிட்ட அதிகாரம் இருந்தா ஏதாவது செய்யலாம். உங்களோட பவர் யூஸ் பண்ணி கொஞ்ச நாள் அங்க குப்பைகளை கொட்ட விடாம தடுத்தோம். கவர்மெண்ட் டெண்டர் விட்டிருக்காங்க, இவ்ளோ தானே முடியும்?” என்று பார்த்தான் பரிதி. 

Advertisement

“மான்சியாகட்டும் மாணிக்கமாகட்டும் சந்தேக வலையத்துக்குள்ள இருக்குற எல்லாருமே அந்த குப்பை கிடங்கு வழியா தினம் வேலைக்கு போயிட்டு வர வாய்ப்பு அதிகமிருக்கு. அவங்க அந்த இடத்தை க்ராஸ் பண்ணும்போது ஏதோ நடந்திருக்கும்னு தோணுது பரிதி. இல்லைனா ஒரே இடத்துல எப்படி இப்படி இறப்புகள் நடந்திருக்கும்.”

Advertisement

“வேறெங்கேயோ கொலை பண்ணிட்டு சந்தேகம் வராம இருக்க பாடியை இங்க கொண்டுவந்து போட்டிருக்கலாம்ல?”

“அப்படினா கொலைகாரன் கண்டிப்பா ஏதாவது க்ளூவை விட்டிட்டு போயிருப்பான் பரிதி. மான்சி விஷயத்துல கூட சந்தேகப்படும்படியான வேறெந்த வெஹிகளும் வரல. அன்ட் நாம நோட் பண்ண வேண்டிய இன்னொரு விஷயம் அந்த ஆட்டோ. நம்பர் மாத்தி ஆட்டோ ஓட்டியிருந்தாலும் ஆட்டோவோட அடையாளங்களை வச்சி கூட நம்மாள ட்ரேஸ் பண்ண முடியல. இந்த கொலைகள் இப்ப சமீபமா நடக்குறது இல்லை. அந்த மூணு எலும்புக்கூடுல ஒருத்தர் இறந்து ஒன்றரை வருஷம் இருக்கலாம்னு ரிப்போர்ட்ல இருக்கு. அப்போ இதெல்லாம் தொடர்ச்சியா நடக்குற சீரியல் கில்லிங் பரிதி. ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி கூட இது மாதிரி கொலைகள் நடந்திருக்கலாம். அந்த குப்பை மேட்ல இன்னும் கூட எலும்புக்கூடுகள் புதைஞ்சி கிடைக்கலாம்ங்குறது என் யூகம்.”

“இன்னுமா?” என்று அதிர்ந்து பார்த்தான் பரிதி.

Advertisement

“அந்த இடத்தை புல்லா க்ளியர் பண்ணா நம்ம கேள்விக்கான விடை கிடைக்கும்னு தோணுது.”

“ஆனா மேம், இப்போ மழையில அந்த இடம் இன்னுமே நாறி போயிடுச்சு. திரும்ப லாரி லாரியா குப்பை கொட்ட ஆரம்பிச்சிட்டாங்க. நாம முதல்லேந்து அதை க்ளியர் பண்ண எபோர்ட் எடுக்கணும், பர்மிஷன் கிடைக்கணும்.” என்று சொல்லும் போதே மலைப்பு வந்தது பரிதிக்கு. அதிரா சுலபமாக இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்று எல்லாம் சொல்லிவிடுகிறாள், அனைத்திற்கும் அலைவது இவனாகிற்றே. அவளும் இதுபோல் கீழ்மட்டத்திலிருந்து விவரங்கள் சேகரித்து வழக்குகளை முடிக்க உழைத்துதான் இந்த இடத்திற்கு முன்னேறி இருக்கிறாள் என்பதை மறந்துபோனவனாய் சுணக்கம் கொண்டான். 

“நான் பேசி பெர்மிஷன் வாங்கித்தரேன். நீங்க கொஞ்சம் பீல்டுல இருந்து எவிடென்ஸ் கிடைக்குதான்னு பாத்துக்கோங்க.” என்று அவனை அனுப்பிவைத்தவள் ஐ.ஜிக்கு அழைத்து இதுபற்றி பேச, உரிய மந்திரியிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்றவர் தான் அதன்பின் வெகுநாட்கள் இதுகுறித்து தொடர்பிலேயே இல்லை.

அந்த குப்பைகளை அப்புறப்படுத்த வேறு இடம் தற்சமயம் இல்லை என்பதாலும், குப்பைகளை சேகரித்து அங்கு வந்து கொட்ட காண்ட்ராக்ட் எடுத்திருக்கும் கட்டர் பிரபா ஆளுங்கட்சி என்பதால் அவன் வருமானத்திற்கு பங்கம் விளைவிக்க விரும்பாது அந்த குப்பைக் கிடங்கில் கைவைக்க யோசித்து கிடப்பில் போட்டது மாநில அரசு. அரசின் ஒத்துழைப்பு இன்றி இந்த வழக்குகளும் பின் சென்று தேங்கிவிட்டது. அதில் அதிராவுக்கு சோர்வுதான். 

மாதங்கள் ஓட, அந்த மார்கழி மாத குளிரில் காதுக்கு ஹூட்டீ போட்டு வாசலில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தான் அகிலன். வேலை முடித்து சோர்வாக வந்தவள் அப்படியே அவனருகில் அமர்ந்துகொள்ள, புத்தகத்தை மூடிவைத்தவன் அவளை நெருங்கி தோளில் கையிட்டு அவளை தன் மீது சாய்த்துக்கொண்டான்.

“என்னாச்சு மேடமுக்கு? கொஞ்ச நாளா டல்லா இருக்கீங்க?”

பதில் சொல்லாது அவனை நெருங்கி அவன் தோளில் முகத்தை தேய்க்க,

“ஸ்ட்ரெஸ் எல்லாம் மேடமுக்கு தூசு மாதிரில, ஈஸியா தட்டிவிட்டு போவீங்க. இப்போ என்னாச்சு?” என்று அவனும் அவன் தலை மீது தன் தலைசாய்த்து அவளை கட்டிக்கொண்டான். 

“ஏ.எஸ்.பிலேந்து எஸ்.பியா ப்ரோமோஷன் ஆகி இங்க வந்ததுக்கு அப்புறம் எடுத்த முதல் கேஸே குற்றவாளியை கண்டுபுடிக்க முடியாம இருக்கு அகிலன்.” என்றதும் அவளை தன்னிலிருந்து பிரித்தவன்,

“இப்போ தான் பிரமோஷன் ஆகி இங்க வந்திருக்கீங்களா?”

“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன கேக்குற?” என்று அவள் முறைக்க, அவன் விழிகள் மின்னியது.

“அப்போ குறைஞ்சது ரெண்டு மூணு வருஷத்துக்கு இங்கதான் இருப்பீங்கல்ல? இப்போதைக்கு ட்ரான்ஸ்பர் கிடையாதுல்ல…” என்று அவன் மகிழ்வாய் கேட்க, எதற்கு இவன் இத்தனை மகிழ்வாக இருக்கிறான் என்று புரியாது சோர்வாய் பார்த்தாள் அதிரா. 

“நம்ம ரெண்டு பேருக்கும் மாத்தி மாத்தி ட்ரான்ஸ்பர் போட்டா எப்படிடா குடும்பம் நடத்தி புள்ளகுட்டி பெத்துக்கிட்டு அதுங்களை மேய்க்குறதுனு பயந்தேன். இப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.” என்று அவன் சொல்லவும் சோர்வு விலகி மலர்ந்துவிட்டாள் அதிரா.

செல்லமாக அவன் தோளில் அடித்தவள், “எப்போதும் இதே நினைப்புதான் உனக்கு.” என்று சிரிக்க,

“பின்ன உங்களை மாதிரி எப்போதும் சட்டம், துப்பாக்கின்னு புடிச்சிட்டு அதையே நினைச்சிட்டு திரிஞ்சா குடும்பத்தை யார் பாக்குறதாம்.” என்று சலுகையாக தன் தோளால் அவள் தோளை இடித்தான்.

“சரிதான்…” என்று கழுத்தை வெட்டியவள் அவன் மூடி வைத்த புத்தகத்தை எடுத்துக்கொடுத்து, “முதல்ல இந்த பெருக்கலை போடுங்க அப்புறம் குடும்பத்தை பெருக்குறதை பத்தி பாக்கலாம்…” என்று அவள் எழுந்து செல்ல தலையில் அடித்துக்கொண்டான் ‘திருத்தவே முடியாது.’ எனும்விதமாய்.

“உள்ள வந்து படி. சாரல்ல சளி புடிச்சிடும்.” என்று உள்ளிருந்து அவள் குரல் கொடுக்க, அவளது அக்கறையில் பூரிப்புடன் எழுந்து உள்ளே சென்றான்.

அன்று ஆங்கில வருடப்பிறப்பு. நகரின் முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமிருக்க, கண்காணிப்பு அதிகமாகியது. அதிரா நேரத்தை பார்த்தாள் இரவு பத்தரை. வருடப்பிறப்பை இருவரும் ஒன்றாக வெளியே சென்று கொண்டாடவேண்டும் என்று கெஞ்சி கொஞ்சி மிரட்டி அவளை சம்மதிக்க வைத்திருந்தான். ஏதாவது அவசரம் என்றால் அழைக்கும்படி அலுவலகத்தில் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள் அதிரா. செல்லும் வழியிலேயே அவனது அழைப்பு வந்தது.

“வந்துட்டே இருக்கேன். பத்து நிமிஷம்.” என்று இவள் எடுத்ததும் சொல்ல,

“வேணிக்கு வலி வந்துடுச்சாம். ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க. நான் போய்ட்டு வந்துறேன்.” என்றிருந்தான் அவன். 

எங்கிருக்கிறான் என்று கேட்டுக்கொண்டு பேருந்து நிலையத்திற்கே சென்றுவிட்டாள் அதிரா. தனக்காக வந்திருக்கிறாள் என்றதில் அவன் மனம் உருகியது என்றால் அவள் பர்ஸிலிருந்து அவள் கார்டை எடுத்து நீட்டவும் கட்டிக்கொள்ள துடித்தது அவனுள்ளம். அவன் எண்ணம் புரிந்தது போல் இரண்டடி பின்னெடுத்து வைத்தவள் கண்களால் சுற்றத்தை காட்டி, “அவசரத்துக்கு கார்டை வச்சிக்கோ. என்னனாலும் எனக்கு உடனே கால் பண்ணு.” என்று வழியனுப்பி வைத்தவளுக்கு விடியற்காலையில் மருமகள் பிறந்திருக்கிறாள் என்ற செய்தி செவியை எட்டியது. 

அலைபேசி வாயிலாக வேணியிடம் வாழ்த்து சொல்லி விசாரித்தவள் உடனே சென்று பார்க்க முடியாத காரணத்தால் பெயர் சூட்டும் விழாவுக்கு சென்றாள். 

வீட்டிலே எளிதாக ஏற்பாடு செய்திருந்தனர். அதிரா ஒரு ஓரமாக நின்றுகொள்ள, பிள்ளைக்கு காப்பு போட்டு பெயர் சூட்டுவது முடிந்து பரிசளிக்கும் விழா நடைபெற்றது. அத்தனை நேரம் ஓடியாடி திரிந்த அகிலன் உள்ளே சென்று பையெடுத்து வந்து அவள் கையில் திணித்தான்.

யோசனையுடன் அவள் பிரித்துப் பார்க்க, அதில் சிறிய நகை பெட்டி இருந்தது. பார்த்ததும் குழந்தைக்கு வாங்கியிருக்கும் சங்கிலி என்று புரிந்தது. இவளிடம் யோசனை கேட்டுத்தான் அம்மாவுடன் சென்று முந்திய தினம் வாங்கியிருந்தான். இதை எதற்கு என்னிடம் கொடுத்தாய் என்று பார்க்க,

“நீங்கதான் போட்டுவிடனும்.” என்று அதிராமல் சொல்லி அவளை அதிர வைத்தான். 

“லூசு, ஆன்டியை போட சொல்லு.” என்று அவன் கையிலே திணிக்க, விழிகளால் அன்னையை தேடினான் அகிலன். அதற்காகவே காத்திருந்தவர் போல் வந்தவர், “அத்தை நீதான் போடணும்மா. வா.” என்று கையை பிடித்துவிட, அகிலனை நன்றாக முறைத்தவள் அனைவரின் பார்வையும் இவர்கள் மீது திரும்பிவிட்டது புரிந்து ஒன்றும் சொல்லமுடியாமல் குழந்தைக்கு சங்கிலி அணிவித்து கன்னம் கிள்ளி முத்தம் வைத்தாள்.

“நல்லா படிக்க வைக்கணும் வேணி.” என்று சொல்லி நகர்ந்துவிட, அவளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கண்டு கிசுகிசுப்புகள் எழுந்தது.

எதையும் கண்டுகொள்ளாதவனாய் அகிலன் விழாவில் வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய, அதிராவை வேணி தன்னுடன் அறையில் அமரவைத்துக்கொண்டாள்.

“உங்ககிட்ட வந்ததுக்கு அப்புறம் அண்ணன் நிறைய மாறிடுச்சு அண்ணி.” குதூகலமாக சொன்னவள் குழந்தையை அதிரா மடியில் கிடத்த, வாஞ்சையாய் குழந்தையின் கன்னம் கிள்ளி கொஞ்சி தொட்டுப்பார்த்தாள் அதிரா.

“எப்படியிருக்கா உங்க மருமக? ஒன்னுமே சொல்ல மாட்டேங்குறீங்க?” வேணி உரிமையாய் அவளருகில் அமர்ந்துகொள்ள, நிமிர்ந்து பார்த்த அதிரா,

“எப்படி இருந்தாலும் நம்ம வீட்டு பொண்ணு வேணி. நல்லா தைரியமா வளக்கணும், நல்லா படிக்க வச்சி அவளை சுயமா சிந்திச்சு செயல்படுறவளா ஆக்கணும். நீ வேற எதையும் ஏத்திக்காத.” என்று சொல்லிக்கொண்டிருக்க, அதிராவை பார்வையால் அளந்தவண்ணம் உள்ளே வந்தார் அவள் மாமியார்.

“பேத்தி என்ன செய்யுறா?” என்று அதிரா கையிலிருந்து குழந்தையை வாங்கியவர் குழந்தையின் கன்னத்தை லேசாக சுண்டிவிட்டு, “நிறம் கம்மியா இருக்கா, குங்குமப்பூ கலந்து பால்குடினா ஒழுங்கா குடிச்சியா… இப்போ பாரு… நான் மாவு ரெடி பண்ணி குடுத்துவிடுறேன். அதை போட்டு குளிக்க ஊத்தினா என் பேத்தி செவசெவன்னு வந்துடுவா.” என்று சொல்ல வேணியிடம் மறுப்பாக தலையசைத்தாள் அதிரா. அவளது மாமியார் குணத்தை முன்பே கணித்ததால்தான் வேணியிடம் தற்காப்பு மற்றும் படிப்பின் அவசியத்தை சொல்லியிருந்தாள். 

“ஆமா இந்த பொண்ணு யாரு? உங்க சொந்தமா?” என்று மருமகளைப் பார்க்க,

“ஆமா அத்தை. நம்ம குட்டிக்கு அத்தை முறையாக்கும். போலீஸ்.” என்ற நொடி அறையிலிருந்து மெல்ல நழுவிவிட்டார் அவர்.

“போலீஸ்னு சொன்னதும் இப்படி பம்முறாங்க?”

“அண்ணனை கல்யாணத்துக்கு ரொம்ப போர்ஸ் பண்ணாங்க. அண்ணன் கோபத்துல தூக்கி உள்ள வச்சிடுவேன்னு கத்திட்டு போயிடுச்சு அதான் பயந்துட்டாங்க.”

“அப்போ என்ன யூஸ் பண்ணியிருக்க நீ?” என்று சிரித்த அதிரா குழந்தையை தூக்கி மடியில் வைத்துக்கொள்ள, உறவுகள் கிளம்பியதும் அதிராவுக்கு உணவு எடுத்துவந்தான் அகிலன். இவன் வரவும் வேணி வெளியே சென்றுவிட, அவன் கன்னத்திலே குத்து விடுவது போல் கையை கொண்டுவந்தாள் அதிரா.

“எல்லார் முன்னாடியும் வச்சி என்னை செயின் போட்டுவிட சொல்ற. எல்லாரும் என்ன வச்சி காசிப் பேசிட்டு இருப்பாங்க இப்போ.”

“எல்லாருக்கும் தெரியட்டும்தான் அப்படி சொன்னேன். உங்களுக்கு இல்லாத உரிமை யாருக்கு இருக்கு.”

“டேய்… லூசு மாதிரி பேசாத. உங்க குடும்பத்துக்கு தெரியனுமா வேண்டாமான்னு நீ மட்டும் முடிவு பண்ணா போதுமா… எனக்கு ஓகேவான்னு கேக்காம அப்படியே செயினை எடுத்துவந்து நீட்டுற.” 

“என்ன கேக்கணும்? லேட்டா கல்யாணம் பண்ணிக்கலாம்னு நாம முடிவு பண்ணியாச்சு. அதுக்காக உங்களுக்கு உரிமையில்லைனு ஆகிடுமா. அப்படியெல்லாம் என்னால உங்களை ஒதுக்கிட்டு செய்ய முடியாது. வேலை விஷயத்துல மத்த விஷயத்துல எல்லாம் உங்க பேச்சை கேக்குறேன்ல. இதுல நீங்க என் பேச்சை கேளுங்க. எனக்கு எங்கெல்லாம் உரிமை இருக்கோ அங்கெல்லாம் உங்களைத்தான் முன்ன நிறுத்துவேன். அதை கூடாதுனு நீங்களே சொல்ல முடியாது.” என்று அன்புத்தொல்லை செய்பவனை அதற்கு மேல் கடிந்துகொள்ள முடியவில்லை அவளால். உரிமை இல்லாத வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்றவளுக்கு உரிமையான ஒரு குடும்பத்தை உருவாக்கிட வேண்டும் என்று அவன் மெனக்கெடுவது புரிந்தது.

அன்றிலிருந்து பொங்கல் விழாவாகட்டும் விடுமுறை நாளாகட்டும் அனைத்திற்கும் அவளை ஊருக்கு அழைத்து செல்வதை வாடிக்கையாகிவிட்டான் அகிலன். ஊருக்கு செல்லும் நாட்களில் இதமான இரயில் பயணங்கள் அவர்கள் காதல் பக்கங்களை அழகாக நிரப்பின.

மேலும் இரு மாதங்கள் கழித்தே அவனுக்கு தேர்வுகள் நடக்க, தீவிரமாக படித்து எழுதியவன் தேர்ச்சியாகிவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தான். அதிராவுக்குத்தான் சந்தேகமாக இருந்தது. துறையில் நடக்கும் உட்கட்சி விவகாரங்களும் அரசியலும் அவளுக்கு நன்றாக தெரியுமே. அதனால் சந்தேகத்துடன் இருந்தவளுக்கு அவனது தேர்ச்சி அத்தனை உற்சாகத்தை கொடுத்தது.

தேர்வு முடிவுகள் வந்த பின் நேராக அவளை வந்து கட்டிக்கொண்டவனோ, “கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டிருக்க, முழுதாக குணமாகிவிட்ட கைகளை மாலையாக அவன் கழுத்திலிட்டு சம்மதம் சொல்லியிருக்க, அவனது பயிற்சி காலங்கள் முடிந்து இதோ அந்த நாள் வந்துவிட்டது. 

சுற்றி நின்றிருந்தவர்களின் மனநிலை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருந்தது. அகிலன் குடும்பத்தினருக்கு கட்டுக்கடங்காத மகிழ்வு என்றால் அதிரா குடும்பத்தினருக்கு அத்தனை விருப்பம் இருப்பது போல் இல்லை. அவளின் தேர்வில் அதிருப்தி இருந்தாலும் காட்டிக்கொள்ள முடியாத இடத்தில் கடமைக்கு நின்றார் அவள் தந்தை. உடன் அவர் மனைவி, அதிராவின் சித்தி தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்றை ஒப்படைக்க வந்திருந்தார். விஷுவும் அவன் குடும்பமும் அதிராவுக்காக முகத்தில் மகிழ்வை காட்டி நின்றனர். மகனின் ஆசையை இவள் ஏற்கவில்லையே என்ற ஏக்கம் விஷு பெற்றோரிடம் இருக்கவே செய்தது. 

இது எதுவும் கருத்தில் கொள்ளாது புதுமண தம்பதியராய் மனையில் அமர்ந்திருந்தனர் அகிலனும் அதிராவும். திருச்சியில் ஒரு பிரபல கோவில் மண்டபத்தில்தான் திருமணம். காத்திருந்து, சூளுரைத்த குறிக்கோளை அடைந்து, வெற்றிக்கனியை உண்ட பின் நிறைவான ஒரு இல்லறத்தில் அடியெடுத்து வைக்க இருந்தனர். 

அரக்கில் உடலை அடைத்தபடி தங்க நிற மாங்காயும் அதே நிற சரிகையும் கொண்ட பட்டுடுத்தி, கண்ணை உறுத்தாத வண்ணம் அலங்கரித்து, தோதான அணிகலன்கள் அணிந்த அதிரடிப்பதுமை அழகுப்பதுமையாய் அமர்ந்திருந்தாள். அருகில் அவளை உரசிக்கொண்டு பட்டு வேஷ்டி சகிதம் புன்னகை முகமாய் இருந்த அகிலன் ஐயர் சொல்பவற்றை செய்துகொண்டிருந்தான். மந்திரங்கள் ஓதி தெய்வங்களின் ஆசியுடன் மங்கலநாண் அவன் கைக்கு வர, பக்கவாட்டில் திரும்பி அவளை ஒருமுறை பார்த்தவன் நிறைவான புன்னகையுடன் மூன்று முடிச்சிட்டு பந்தத்தை உறுதி செய்தான். பின் தோள் சுற்றி குங்குமமிட்டு, பாதம் பிடித்து மெட்டி அணிவித்து அனைத்து சடங்குகளையும் முறையாக செய்து முடித்தான்.

சுவாமி தரிசனம் முடித்து அகிலன் வீடு கிளம்பும் வேளையில் அவளை நெருங்கிய சித்தி ஒரு நகைப்பெட்டியை அவளிடம் கொடுத்து, “உனக்காக என்னால இதைத்தான் கொடுக்க முடியும். என்ன மன்னிச்சுடு. இது உன் அம்மாவோடது.” என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்துகொண்டார்.

திறந்துபார்த்தவள் அதிலிருக்கும் தன் தாயின் காசு மாலையை கைகளால் வருடி அதை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.

“அதை போட்டு விடவா?” என்று அகிலன் கேட்க, அழுகையும் சிரிப்புமாக தலையசைத்தவள் கழுத்தில் மறுநிமிடம் காசு மாலை பாந்தமாக பொருந்தியது. கோவிலிலிருந்து அகிலன் வீடு வரை வந்த பெற்றவர் உடனே கிளம்பிவிட, விஷு குடும்பத்தினர் மட்டும் மனது கேளாமல் சற்று நேரம் உடன் இருந்தனர்.

இரவு சடங்குக்கு வேணி மட்டுமே தங்கிக்கொண்டாள். மற்ற உறவுகள் கிளம்பிவிட ஆசுவாசமாக உணர்ந்த அதிரா குர்தி மாற்றி வந்து வேணியின் ஒரு வயது குழந்தையை தூக்கி மடியில் வைத்துக்கொண்டாள். வேணி குழந்தைக்கு ஊட்டிவிட, அதிராவின் பார்வை மாமியாரிடம் சென்றது.

“எங்களோடவே வந்துடுங்களேன் அத்தை.”

“இருக்கட்டும்மா… உங்க ரெண்டு பேருக்குமே நேரம்கெட்ட நேரத்துல வேலை விஷயமா அலையுற மாதிரி இருக்கும். இதுல நான் வேற வந்து உக்காந்துட்டா உங்களுக்குதான் சிரமம்.”

“பொண்ணை விட்டு வர மனசில்லைனு சொல்லு.” என்று வந்தமர்ந்தான் அகிலன்.

லேசாக சிரித்த பார்வதி, “வேணி புள்ளையை கொஞ்சம் வளத்து விட்டுட்டு வரேன்பா…”

“அதுக்குள்ள நீங்க ரெடி பண்ணுங்க நான் வளக்க வரேன்னு சொல்றாங்க. கோட் வோர்ட் புரிஞ்சிதா?” என்று வேணி கண்ணடிக்க, அவள் தலையிலேயே நங்கென்று கொட்டிய அகிலன், “சேர்க்கை சரியில்லை அதான் வாய் கூடிப்போச்சு.” என்று அதிராவை ஓரக்கண்ணால் பார்த்தான்.

அவளைத்தான் சொல்கிறான் என்று புரிந்துகொண்டு அதிரா கண்டும் காணாதது போல் இருந்துகொண்டாள். சிறிது நேரம் சென்று வேணி புது சேலை ஒன்றை எடுத்துவந்து அதிராவிடம் நீட்ட, “கண்டிப்பா கட்டணுமா வேணி. இப்போ போட்டிருக்குறதே ஓகே தான்.” என்றவளிடம்,

“அண்ணன்தான் கொடுத்துவிட்டுச்சு அண்ணி.” என்று சொல்லி வாயடைத்துவிட்டாள்.

வேணி உதவியுடன் அந்த சேலையை கட்டியவள் அகிலனின் பார்வையில் அவஸ்தையுடன் இரவு உணவு உண்டு முடித்தாள். அகிலன் சற்று நேரம் நடந்துவிட்டு அறைக்கு சென்றுவிட, இவள் கையில் ஒரு சொம்பை கொடுத்தாள் வேணி.

“நீங்க குடிக்கமாட்டீங்கன்னு தெரியும் ஆனாலும் சம்பிரதாயம்னு ஒரு டம்ளர் மட்டும் காய்ச்சி வச்சிருக்கேன் பாத்துக்கோங்க அண்ணி.” என்க, அத்தனை சங்கடமாக உணர்ந்தாள் அதிரா.

இதெல்லாம் தேவையா… அதுவும் தன்னைவிட இளையவள் இப்படி செய்வது எல்லாம் ஒருமாதிரி இருக்க, வேகமாக அறைக்கு வந்துவிட்டாள் அதிரா. அங்கு அவளுக்காக காத்திருந்தவன் கதவடைத்து மையலாக அவளை மேலிருந்து கீழ் பார்த்துக்கொண்டே சட்டை பொத்தான்களை ஒவ்வொன்றாய் கழற்றினான்.

“என்ன பண்ற நீ?” சங்கடமாக கேட்டுக்கொண்டே அவள் மெத்தையில் அமரச் செல்ல, அங்கோ வகைவகையான பூக்கள் அவளை வரவேற்றது. ஐயோ என்று சொம்பை அங்கிருந்த ஸ்டூலில் வைத்துவிட்டு திரும்பியவள், “இங்க பாரு அகிலன்…இதெல்லாம் ஒருமாதிரி…” அவன் நின்ற கோலம் கண்டவள் தொண்டையில் வார்த்தைகள் சிக்கிக்கொண்டது.

மேல்சட்டையின்றி அவளை நெருங்கியவன் அவள் வலக்கை எடுத்து படிக்கட்டு வருவதற்கு அறிகுறியாக லேசாக தெரிந்த அந்த வரிகளில் அவள் விரல்களை கொண்டு கோடிழுக்க, கூசி சிலிர்த்தவள் அவனை நெருங்கி வந்தாள். 

வயிற்றில் இருந்த கொழுப்புகள் ஒருவாறு கரைந்திருக்க, இன்னும் கொஞ்சமே கொஞ்சம் தொந்தி வெளியே தெரிந்தது. அதையும் சரிக்கட்டி விடுவேன் என்று தீவிரமாய் இருந்தவன் அவள் இடையில் கைவிட்டு அருகே இழுத்து, “இப்போ ஓகேவா?” என்று முகம் பார்க்க, அவன் வேற்றுத் தோளில் கைவைத்து அழுத்தியவள், “இதெல்லாம் பாத்துதான் உனக்கு ஓகே சொன்னேனா நானு.”

“இல்லைதான்… ஆனா இதுலையாவது மேட்ச் பண்ணலாம்னு பாத்தேன்.” என்று செவியருகே கிசுகிசுக்க, கண்களை இறுக மூடித்திறந்தவள் அவன் கன்னத்தை இருக்கைகளில் தாங்கி லேசாக எம்பி நெற்றியில் இதழ் பதிக்க, “அதி…” சுகமான முனகல் வெளிப்பட்டது அவனிடம்.

ஆச்சர்யத்தில் தலையை பின்னிழுத்து அவனைப் பார்த்தவள் அவன் கன்னத்தை லேசாக கடித்து, “இப்படி என் பேர் சொல்ல ஒரு வருஷமா உனக்கு?” 

கன்னத்தை தேய்த்துவிட்டபடி, “இப்படி உரிமையா முத்தம் கொடுக்க இத்தனை நாளா உனக்கு?” என்று அவளை தன்னோடு இன்னும் இறுக்கிக்கொண்டான். 

“கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு முத்தம் எல்லாம் வேணுமாக்கும்.”

“இத்தனை நாள் அதை கணக்கில்லாம வாங்கும் போது வேண்டாம்னு சொல்லியிருக்க வேண்டியதுதானே?” என்று கேட்டுக்கொண்டே அவள் செவிமடலில் சிறு சிறு முத்தங்கள் வைத்தான்.

அதற்கே உருகி குழைந்தவள் அவன் இடையில் கரம் சுற்றிப்போட்டு தன்னை நிதானித்துக்கொள்ள முயல, விடவேண்டுமே அவன்.

அவளை அப்படியே திருப்பி பின்னிருந்து அணைத்தவன், “ஒருநாளாச்சும் புடவை கட்ட தோணியிருக்கா உனக்கு. விட்டா இன்னைக்கும் சட்டை பேண்ட்டை மாட்டிட்டு வந்திருப்ப…” புடவை இடைவெளியில் தெரியும் அவள் இடையில் கை நுழைத்து கோடிழுக்க, கிளர்ந்தெழும் உணர்வுகளை அடக்க அரும்பாடுபட்டாள் அதிரா.

அவளின் அவஸ்தையை மேலும் கூட்டும் வண்ணம் கால்கள் உரசி, கரத்துக்கு மேலேறும் வேலை கொடுக்க, அவன் கையை பிடித்தவள், “என்னை கண்ட்ரோல்ல இருக்க விடு அகி…” என்று கெஞ்ச, 

“கொஞ்ச நேரம் எல்லாத்தையும் மறந்துட்டு இந்த காதலை அனுபவி அதி. தப்பில்லை.” என்றதும் எச்சரிக்கை உணர்வை தளர்த்தியவளாய் அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

“உனக்கு பிடிக்காதது எதுவுனா சொல்லு.” என்று நல்லபிள்ளையாய் சொன்னவன் அவளை அப்படியே கைகளில் ஏந்தி மெத்தையில் சரிக்க, கைவிரித்து அவனை தனக்குள் அணைத்துக்கொண்டாள் அதிரா.

அவள் கழுத்தில் முகம் புரட்டி நிமிர்ந்தவன், “ஓகேவா அதி?” என்று சம்மதம் கேட்க, அவள் கரங்கள் சம்மதமாய் சேலை ஊக்கை தளர்த்தியிருந்தது.

பச்சை விளக்கு போடப்பட்டபின் சிவப்புக்கான மதிப்பு கொடுப்பானா என்ன? காதலின் அடுத்த களத்தில் அவளையும் சேர்த்து இழுத்துக்கொண்டு குதித்துவிட்டான். கூச்சங்களுக்கு இடையே விடுபட்ட ஆடை திரும்ப மேனியை தழுவிய பொழுது கூச்சங்கள் அனைத்தும் பழகியிருந்தது. தெரியாத அனைத்தும் கற்றுத் தேர்ந்திருந்தது. செல்ல சிணுங்கல்கள் அனைத்தும் இனிமையான ஸ்வரமாக மெல்ல ஒலித்துக்கொண்டே இருந்தது. 

மருதாணி இட்ட அவளது கரங்களை அத்தனை பிடித்தது என்றால் புதுத்தாலியுடன் இருக்கும் அவள் கழுத்து அவனது உரிமையை சொல்லாமல் சொல்ல, அவளை விடாமல் தன் அணைப்பிலேயே வைத்திருந்தான் அகிலன்.

அந்த ஒருநாள் மட்டுமே இனிமையாய் பரபரப்பின்றி சென்றது. மறுநாள் எப்போது விடியும் என்று காத்திருந்து அழைத்துவிட்டான் பரிதி. குளித்து தலைமுடியை உலர வைத்துக்கொண்டிருந்தவள் அவன் சொன்ன செய்தி கேட்டதும் பெருமூச்சு விட்டாள்.

“நான் சீக்கிரமே வரேன், நீங்க பிரோசிஜர் எல்லாம் பண்ணிடுங்க.” அழைப்பை துண்டித்தவள் அகிலனை பார்க்க, அறையிலேயே உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவன் என்னவென்று பார்த்தான்.

“சீக்கிரம் கிளம்பணும் அகி. கேஸ்ல இன்னொரு திருப்பம் வந்திருக்கு. இதை வச்சாவது காரியம் சாதிச்சி கேஸை முடிக்கணும்.” என்று உசுப்ப,

‘இன்னைக்கு குலதெய்வ கோவிலுக்கு போய்ட்டு கிளம்பலாமா?” என்றதும் சம்மதித்து அன்று மாலையே ஊருக்கு கிளம்பிவிட்டனர்.

புது மனைவி, புது வீடு என்று வீடு வந்ததும் கிடைத்த தனிமையில் தடுமாறியது அகிலனின் மனம். ஆனால் அதற்கு அவள் வீட்டில் இருக்க வேண்டுமே. வந்ததும் கிளம்பி சென்றுவிட்டாள். இவன்தான் வீட்டை ஒழுங்கு செய்துகொண்டிருந்தான். அவனுக்கு பதவி உயர்வுடன் அதே மாவட்டத்தில் போஸ்டிங் கிடைத்ததால் இருவரும் வேலைக்கு சென்றுவர ஏதுவாக ஊருக்கு மையப்பகுதியில் வீட்டை மாற்றிக்கொண்டனர்.

இன்னும் சிறிது நாட்களில் தேர்தல் வரவிருப்பதால் குப்பைக் கிடங்கை அப்புறப்படுத்தி அந்த இடத்தை தூய்மைப்படுத்தும் பணி மும்மரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. எதுவும் செய்ய முடியாத கைகட்டப்பட்ட நிலையில்தான் அந்த பகுதி மக்களை வைத்தே குப்பை கிடங்கை சீர்செய்ய சொல்லி மனு கொடுக்க வைத்தாள் அதிரா. ஓட்டுக்காக அதிகாரத்தில் இருக்கும் ஆளுங்கட்சியும் இறங்கி வேலை செய்ததில் மீண்டுமொரு எலும்புக்கூடு கிடைத்திருப்பதாய் பரிதி அழைத்திருந்தான். 

“இங்க ஒரு மெடிக்கல் கேம்ப் நடத்தணும் பரிதி. இங்க சுத்தம் பண்ற வேலையில இருக்குறவங்களுக்கு ஏதாவது அபெக்ட் ஆகியிருக்கானு பாக்கணும்.” என்று சொல்ல, அனுமதி உடனே கிடைத்தது. 

மருத்துவ முகாம் போட்டு கழிவுகளை அப்புறப்படுத்தும் வெளிமாநில தொழிளாலர்களில் பாதி பேருக்கு மேல் இருமல், சோர்வு போன்ற சுவாச கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டு அதிராவின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.  

நேரம் வந்தால் தன்னால் நடக்கும் என்பது போல் உண்மை வெளியே வர அனைத்து வேலைகளும் தானாக நடந்தது.

குப்பைக்கிடங்கை அப்புறப்படுத்தும் பணி ஒருபுறம் நடக்க, அங்கிருக்கும் வேதியியல் மாற்றங்களை ஆய்வு செய்ய ஒரு குழுவு வந்திறங்கியது.

“வேலை ரொம்ப அதிகமோ?” என்று அன்றிரவு அவள் பாதங்களை பிடித்துவிட்டு முத்தம் வைத்தபடி கேட்டான் அகிலன்.

“அந்த கேஸ் இப்போதான் சூடுபுடிச்சிருக்கு அகி.” என்று அவள் விவரங்களை பகிர்ந்துகொள்ள, “அந்த இடம் குப்பை கிடங்கா மாறுறதுக்கு முன்னாடி என்னவா இருந்துச்சுனு செக் பண்ணீங்களா?”

“செக் பண்ண சொன்னேன் அகி. இருபது வருஷமா இப்படியே தான் இருக்குன்னு ரெகார்டஸ்ல இருக்கு.”

“அதுக்கு முன்ன?” என்று கேட்டதிற்கு அவள் புருவம் சுருங்கி விரிந்தது. எதுவோ நினைவு வர பட்டென எழப்போனவளை கண்களை உருட்டி அவன் நிறுத்த, வெட்கச் சிரிப்போடு தன்னை போர்வைக்குள் மறைத்துக்கொண்டவள், “அந்த ட்ராயர்ல கேஸ் பைல் இருக்கு அகி. எடுத்துட்டு வந்து கொடு.” என்று மேசையை காட்ட, விஷமமாய் சிரித்தவன், “அப்போ ஒன்னு பண்ணணுமே…”

“என்ன?” என்று சிணுங்கலாய் கேட்டுக்கொண்டே அவனை தன்புறம் இழுத்தவள் அவனிதழலில் துரித முத்தமொன்றை வைத்து, “என்ன சொன்னாலும் அப்புறம் செய்யுறேன். இப்போ எடுத்து கொடு.” என்று ஐஸ் வைக்க, பைலோடு அவள் உடையையும் எடுத்து கொடுத்துவிட்டு குளிக்கச் சென்றான் அகிலன். 

வேகவேகமாக பைலை விரித்துப் படித்தவள் இருபது வருடத்திற்கு முன் அங்கு என்ன இருந்தது என்று கொஞ்சம் கடினப்பட்டே கண்டுபிடித்தாள். கண்டுபிடித்த நொடி மொத்த வழக்கும் பிடிபடுவது போல் இருந்தாலும் ஒன்று மட்டும் புரியவேயில்லை. அது அந்த ஆட்டோ எங்கிருந்து வந்தது, இறந்த குறிப்பிட்ட ஏனையோருக்கும் அந்த இடத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதே… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!